சிறுகதைகள்


வீராயி

கூடல்.காம்
அகத்தானுக்கு விழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்தான். லேசான வாடையிலும் முகத்திலும் முதுகிலும் வியர்த்திருந்தது. தாழ்வாரத்திண்ணையின் ஓரத்திற்கு வந்து காலைத் தொங்கப் போட்டபடி உட்கார்நது குனிந்து கிழக்கே பார்த்தான். வெறிச்சோடிக் கிடந்தது வீதி. அன்னாந்தபடியே மேற்கே பார்த்தார். நிலவு மங்கலாய்த் தெரிந்தது. எங்கும் நிசப்தம். தூரத்தில் நாய் கத்தும் சத்தம் கேட்டது. கருவேல மரத்தின் சில்வண்டு ஓசை மாறிமாறித் தாள லயமாகக் கேட்டது. அவர் மனசுக்குள் யாரோ சத்தமாய்ப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவதுபோல் இருந்தது. திரும்பி தலைமாட்டிடத்தில் கிடந்த தீப்பெட்டியை எடுத்தார். பாதி குடித்துவிட்டு தாழ்வாரத்தில் சொருகி வைத்திருந்த பீடியை எடுத்து வாயில் வைத்துப் பற்றவைத்தார். நன்றாக இழுத்து, புகையை விட்டார். பெருமூச்சு விடுவதற்குள் யோசனை கனக்க இருமல் வந்தது அடக்கிக் கொள்ளவேண்டும் என நினைத்தார் முடியவில்லை. இருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. பெருஞ்சத்தமாகக் கேட்டபொழுது வீட்டினுள் இருந்து கதவை உள்ளிழுத்து திறந்தபடி வந்த வீராயி.

ஏன் என்னாச்சு... இப்டி இருமிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க... தூக்கம் வரலையாக்கும்.. என்னத்தையாவது நெனச்சுக்கிட்டு படுத்திருப்ப. என்றாள்.

அவர் பதில் சொல்லாமல் இருமிக் கொண்டே இருந்தார்.

"ஒனக்கு என்னத்த சொன்னாலும் கேட்க மாட்ட. என்றபடி முனகிக்கொண்டே, பக்கத்தில் கிடந்த விளக்குமாற்றை எடுத்து வாசலைக் கூட்டத் தொடங்கினாள். சற்று தள்ளிப்போய் சாணி எடுத்து வந்தாள் அடிகுழாயில் தண்ணீர் அடித்து, சட்டியில் தூக்கி வந்தாள். தண்ணீரில் சாணியைப் போட்டுக் கரைத்து வாசல் மற்றும் திண்ணை ஓரங்களில் தெளித்துவிட்டாள். இவ்வளவு வேலைகளும் செய்து கொண்டு அவ்வப்போது அகத்தானையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

அவர் பீடியை இழுத்தபடி அதே பார்வையில் இருந்தார்.

"இந்தா.... உன்னயத்தான்... என்ன பொல்லாத சீமையத் திருப்ப போறியாக்கும்.. அப்டி என்னத்தத்தான் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க".

அவர் பேசவில்லை.

பேசிக்கொண்டே நடந்து சென்று, பக்கத்து திண்ணையில் கட்டிப் போட்டிருந்த ஆடுகளையும் குட்டிகளையும், அவிழ்த்துக்கொண்டுபோய் வீட்டிற்கு எதிரே நிற்கும் வேப்ப மரத்தூரில் கட்டிப் போட்டாள்.

"நானும் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டேன்... கேட்டாத்தானே... மனுசெ(ன்) சொல்றத இத்தினியாவது கேக்கணும்.. வைக்கணும்.. ஒண்ணுமில்ல... மண்ணுமில்லைன்னு இருந்தா.. நா(ன்) என்ன பண்றது... என்னமோ அந்தப்புள்ள தலையில எழுதியிருக்கு.... கட்டிக்குடுத்தாச்சு... புள்ள குட்டின்னு ஆயிருச்சு.. நாந்தான்.. சரி.. அண்ணெ மக்க தம்பி மக்கன்னு பண்ணச் சொன்னே(ன்)... புள்ள வளர்ப்பு சரியில்லாம இருந்திருக்கு..."

பேசிக்கொண்டே வந்தவள் கோழிக்கூட்டைத் திறந்து விட்டாள். இப்பவோ அப்பவோன்னு நின்ன கோழிகள் றெக்கையை அடிச்சு கத்திக்கிட்டு ஆளுக்கொரு பக்கமா பறந்து விழுந்தது. சேவல் ஒண்ணு அகத்தான் தோளில் போய் விழுந்து நின்று றெக்கையால ரெண்டு அடி அடித்துப் பறந்தது.

"யே...ய்...க்காலி... நாசப்பய கோழி.. சே...சே...போ அங்கிட்டு - துண்டால் அடிச்சு விரட்டினார்.

"இந்தாம்மா கொஞ்ச நேரங்கழிச்சு தொறந்து விடக்கூடாதா? விடிஞ்சும் விடியாம தொறந்து விட்டுட்ட "அது எவ விட்டுலயாவது போயி நிக்கும்.. காலங்காத்தால அவளுக தெண்டு கிடாவட்டும் - கோபமாய் சத்தம் போட்டபடியே திண்ணையை விட்டு இறங்கி, வேப்ப மரத்தடியில் கிடந்த பட்டியக்கல்லில் போய் உட்கார்ந்தார்.

"அவளுக சண்டைக்கு வந்தா வரட்டும்.... அத நா(ன்) பாத்துக்கிறேன். நீ போனியே... பாரு இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாக்குறேன்னுட்டு அது என்னாச்சு.

என்னத்த ஆகுறது... அவென் மொறை தர இல்லாம பேசுறான் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு நீ வந்துட்ட.... நானும் அந்த மாதிரி விட்ற முடியுமா.. நம்ம வெள்ளப் பாண்டிய கூட்டிட்டுப் போயி கேட்டேன்.

என்ன சொன்னான்...?

"என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.. சபையில சொன்ன மொறைக்கு இன்னும் ரெண்டரை பவுனு போடவேண்டியிருக்கு போட்டுருன்னுட்டான்.."

] "என்னத்த வச்சுப் போடுறதுன்னு கேக்குறா(ன்) ஏற்கனவே.. பொண்டாட்டிக்கு நோவு படுத்த படுக்கையா கெடக்கானு வந்து நின்னப்ப காதுல மூக்குல கெடந்தத கழட்டிக் குடுத்துட்டு முழியா நிக்கிறேன்".. எரிச்சலடைந்தவளாய்ச் சொன்னாள் வீராயி.

"கழட்டிக் குடுத்தையே.. அக்கான்னு ஒன்னய இப்ப வச்சுப் பாக்குறானா..?

"எனக்கு பாக்கவேணாம்" குடுக்கவேணாம்... எடுக்க வேணாம்.. செய்ய வேணாம்.. இருக்கிற புள்ளகுட்டிகளாவது நல்லா இருக்கட்டுமேன்னுதான் எம்புள்ளய குடுத்தேன் - என்று நீட்டி இழுத்து சொல்லி தலையில் கையை வைத்து அடித்துக் கொண்டாள்.

"சும்மா கஞ்சிய குடிச்சுக்கிட்டு திரிஞ்சாலும் பரவாயில்ல.. வெட்டி ஊர் வம்ப... இழுத்துக்கிட்டு திரியிறானாம்... குடும்பத்துலயும் ஒழுங்கா இல்லைன்றாங்கெ... நல்ல மருமகன்டா மருமகெ(ன்)..."

"அதுதான் ஏற்கனவே தெரிஞ்சதுதான... அதையே திரும்பத்திரும்ப சொல்லி என்ன ஆகப்போகுது... அவ தலையெழுத்துப்படி நடக்கட்டும்..."

"ம்க்கும் இத ஒன்னச் சொல்லிருவ... செந்திரு... ஆம்பளப்பய சொல்றத கேட்கணும்... கேட்டாத்தான் வீடு உருப்பட்டிருக்கும்ல..

"இந்தா... அப்புறம் எனக்கு திண்டுக்கு முண்டா வந்துரும்.. கூடப்பொறந்து தொலைச்சுட்டான். அதுனால பொண்ணக் குடுத்தேன்... நானா போயி எம்பொண்ணக் கட்டிக்கண்ணு காலப்புடிச்சுக்கிட்டு கெடந்தேன்... பையனப்பெத்த மொறையில அவனும் வந்து கேட்டுட்டான். நானும்.. சரி சமஞ்சு ரெண்டு வருசம் ஆகப்போகுதேன்னுட்டு.... பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த புள்ளையையும் நிப்பாட்டி... முடிச்சு வச்சுட்டேன்... ஒரு கடமை முடிஞ்சிருச்சேன்னு நெனச்சேன்.. அதுக்காக எதுக்கெடுத்தாலும் நீதான் நீதான்னு எம் மண்டையைப் போட்டே உருட்டுற... தொலைஞ்சு போட்டுமேனு விட்டுத்தான் தொலைவே... ஏ....ஏ..."அகத்தான் முகத்துக்கு நேரே கையைக்காட்டி பேசிவிட்டு, வாசல்படியில் போய் உட்கார்ந்து, முந்தானைத் துணியை வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

வீராயி போட்ட சத்தத்தைக் கேட்டு, "ஏ....ஏய்... மச்சான் பொறுப்பா... பொறு... என்ன இது..." என்றபடி ஓடிவந்தார் எதிர்த்தவீட்டு சித்திரன்..

"ஒண்ணுமில்ல மாப்ள... இந்த ரெண்டாவது புள்ள இருக்கே.. அழகுசோதி.... அவென் வீட்டுல பாக்கி நகையக் கேட்டு விட்டிருக்கா(ன்)... அதப்பத்தி பேச்சு ஆரம்பிச்சுச்சு... நீதான பண்ணிவச்சேன்னு சொல்லிப்புட்டனாம்.. அதுக்கு இந்தக் கத்து கத்தறா..."

"சரி விடு மச்சான் நீயும் பதிலுக்குப் பதலு பேசிக்கிட்டிருந்தையினா... எப்டி... பேசாம இரு. யக்கா... இந்தா பாருக்கா.. நீ வேற வேல இருந்தாப் பாரு..." என்று இருவரையும் அதட்டி சமாதானப்படுத்தினான் சித்திரன்..

மூன்று பேரும் சற்று நேரம் அமைதியாக நின்றனர். சித்திரன்தான் பேச்சை ஆரம்பித்தார்.

"நான் ராத்திரியே பாத்து பேசுவோம்ணு நினைச்சேன்... ரொம்ப லேட்டாயிருச்சு... காளங்கண்டுக்கு கோடி பார்க்கப் போயிருந்தேன்... சரியா அமையல.... இழுத்திருச்சு... கடைசியா வெள்ளப் பாண்டிய பார்த்தேன்...அப்புறம் நானும் அவனுமாத்தான்.. கரிசல் பட்டியில ஒன்ன பாத்து முடிச்சோம்... காலையில போயி பத்திட்டு வரனும்..."

"மத்தியானம் போனவெ(ன்) சொல்லியிருந்தையினா நானும் வந்திருப்பேன்..."

சட்டென்று விழித்துக் கொண்டவர் போல்

"இங்கபாரு... என்னமோ சொல்ல வந்துட்டு... என்னமோ பேசுறேன்.... மச்சான்.. பாண்டி எங்கிட்ட நெறைய சொன்னா(ன்)"

அழுது கொண்டிருந்த வீராயி சித்திரன் சொன்னதும் ஏறிட்டுப் பார்த்தாள். மூக்குச் சளியைச் சிந்தி எறிந்துவிட்டு, விரல்களைத் திண்ணையில் துடைத்தாள். இது, "நீ வேற சொல்லனுமாக்கும் உங்கிட்டியும் சொல்லிட்டாங்களா" என்று பார்ப்பது மாதிரி இருந்தது. பிறகு தரையில் கையை வைத்துத் தடவி கற்களைப் பொறுக்கிக்கொண்டு அமைதியாய் தரையினை பார்த்தபடி இருந்தாள்.

"அத ஏன் மச்சான் பாக்குற... இங்க கேளு...." என்று அகத்தான் வீராயியைப் பார்த்தால் சண்டைவரும் என்பதைத் தடுப்பதற்காக இடையே புகுந்து சமாளித்துப் பேசினார் சித்திரன்.

"இதுதாங்கண்ணே..... அவ எதுக்கு.. அவளுக்கு என்ன தெரியும்.. ஆ... ஊன்னுதான் கத்தத் தெரியும்... நல்லாச் சொல்லுங்கண்ணே... ஒறைக்கிற மாதிரி..." என்று சொல்லிக்கொண்டே, கைகளைப் பின்புறமாகக் கொண்டு போய் தலைமுடியை வாரிக்கட்டி அள்ளி முடிந்தாள். சடக்கென்று எழுந்து முந்தானைத் துணியை ஒரு சுற்றுச் சுற்றி இடுப்பில் சொருகிக் கொண்டாள். வீட்டிற்குள் சென்று கருக்கருவாளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். திண்ணையில் கிடந்த நார்ப்பெட்டியை எடுத்து இடுப்பில் வைத்து கருக்கருவாளை அதனுள் போட்டுக் கொண்டாள்.

"யண்ணே... பேசிக்கிட்டிருங்க... வெயிலுக்கு முன்னாடி... குட்டிகளுக்கு ரெண்டு எலகொல அறுத்திட்டு வந்திர்றேன்..." என்றபடி சென்றாள் வீராயி.

"சரி மசசான் இப்ப என்ன செய்யலாம்னு நெனைக்கிறே" - சித்திரன் பேச்சைத் தொடர்ந்தார்.

"என்ன மாப்ள செய்யிறது போனவருசம்... கூட... கூட நாலஞ்சு முட கண்டுருந்தா கழுத வித்துட்டாவது செஞ்சிருக்கலாம்.. மழைய நம்பி நட்டுப்போட்டு... நாசமாப்போச்சு தண்ணி விடப்போறாக அந்தா வருது தண்ணி... இந்தா வருது தண்ணின்னு கடைசியில ஏமாத்திப்புட்டாங்கெ.... பாதி சாவி அறுத்ததுதான் மிச்சம்.

"சரி அதவிடு.... இந்த வருசம் வர்றத வச்சு அதோட கடன ஒடன வாங்கிப் போட்டு செய்முறைய கழிச்சிரு... சொல்லிட்டேன்... ஏன்னா அந்த அளவுக்கு பாண்டிகிட்ட உன் மச்சினன் பேசியிருக்கான்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் அகத்தான். சித்திரன் தொடர்ந்து.

"அது மட்டுமில்ல... இந்த ஒருவருசம் ஒன்றரை வருசமா நீங்க அங்கிட்டு போயி வராததுனால ரெம்பத்தான் நடந்திருக்கு... மூணாவதும் பொம்பளப்புள்ளையாத்தான் இருக்கும்... பேசாம கழிச்சிறது நல்லது. அப்டி இப்டின்னு சொல்லியிருக்காக... உம் மக பயந்து போச்சாம்..."

"புள்ள என்ன புள்ள பொறக்கும்ங்கறது நம்ம கையிலயா இருக்கு... ம்... என்ன இப்டி பண்றாங்கெ".. கோபத்துடன் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டார் அகத்தான்.

"டாக்டர்கிட்ட டவுனுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்கெ... புள்ள பெக்க வந்திருக்கவளே பச்சப்புள்ளயா இருக்கா... சும்மா வெளையாடிகிட்டு திரிஞ்ச புள்ளையை புடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சிருக்கீங்க...

ஏன்யா ஒரு பொண்ணு வயசுக்கு வந்து அது ஒரு கொழந்தைய பெத்து எடுக்கணும்னா இருபது வயசுக்கு மேலே ஆகணும்... அப்பத்தான் கர்பப்பை முழுசா வளர்ந்திருக்கும்... கர்ப்பத்த தாங்குற அளவுக்கு இடுப்பெலும்பும் வளர்ந்திருக்கும்... அதுவும் கல்யாணம் செஞ்ச நாலு வருசத்துக்குள்ள மூணு புள்ள.. இப்ப வேணாம் அது இதுன்றிங்க.. ஆட்டோவுல பஸ்சுல எழுதிப் போட்டிருக்காங்களே அத பாக்குறதில்லையா... ரேடியோ டிவியில சொல்றாங்களே அத கேக்கிறதில்லையா... ஏன்யா இந்தக் காலத்துல இன்னமும் இப்டி இருக்கீங்க?"! அப்டீன்னு ரெம்ப திட்டிப்போட்டிருச்சாம் டாக்டரம்மா...

"அப்புறம் என்ன செஞ்சாங்களாம்...?

"என்ன செய்யிறது பேசாம வீட்டுக்கு வந்துட்டாங்கெ போல... ஆனா புருசங்காரென் கழிக்கிறதுக்கு ஏதோ மருந்து மாத்திரைன்னு வாங்கிக் குடுத்துப் பார்த்துருக்கான்... ஒண்ணும் செய்ய முடியலையாம்... அழகுசோதியும் அப்பன் ஆத்தா கஷ்டப்படுறாங்களேன்னு சரி சரின்னுட்டுப் போய்க்கிட்டிருக்கேன்னு சொல்லுச்சாம்..."

அகத்தானுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மேற்கொண்டு, அவரால் எதுவும் பேசமுடியவில்லை.

மாப்ள.. நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இருக்கிறது நல்லதில்ல... சாப்ட்டுட்டு கௌம்பு போயிட்டு வந்துருவோம்.. என்றபடி வேப்பமரத்தின் கிளையைப் பிடித்து இழுத்து ஒருக்குச்சியை ஒடித்து பல்விளக்க ஆரம்பித்தார் அகத்தான். நேரம் ஓடியது.

அகத்தானும் சித்திரனும் பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்கள்.

"ஏண்ணே பஸ்... உள்ள போயிருச்சா" என்று கேட்டார் சித்திரன்.

"ம்..போயிருக்கு போயிருக்கு... ஆமா மச்சினனும் மச்சினனும் எங்கிட்டு கௌம்பிட்டீக... விசேமா" டீக்கடைக்காரர் கேட்டார். அவர்கள் பதில் சொல்வதற்குள் உங்கபேரச் சொல்லி இருக்காரன்னு யாரோ கேட்டாக. .. இருந்தாரேன்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.." என்றார்..

"அப்டியா சரி மாப்ள... இங்கயே இரு நான் வீடு வரைக்கு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்துர்றேன் - என்று ஓட்டமும் நடையுமாக திரும்பி வீட்டை நோக்கி குறுக்குப் பாதையில் நடந்தார் அகத்தான்.

வீட்டிற்கு நெருங்க வருகிறபொழுது, வீட்டுக்குப் பக்கத்தில் கைக் குழந்தையுடன், ரெண்டு குழந்தைகள் ஆளுக்கொரு திசையில் அலைந்து நடக்க அவர்களின் முதுகுப்புறமாய் ஒருகையை வைத்துத் தள்ளியபடி ஒரு பெண் நடந்து போவது தெரிந்தது.

நடையை எட்டிப் போட்டார் அகத்தான். அந்தப் பெண் வீட்டுத் திண்ணையை அடையவும் இவர் சேரவும் சரியாய் இருந்தது.

"யாருத்தா வேணும்..." முகத்தைக் கவனிக்காதவராய்க் கேட்டார். கன்னங்கள் குழி விழுந்து... பற்கள் கறை ஏறிப்போயிருக்க... பலநாள் பட்டினி கிடந்தது மாதிரியான ஈனக் குரலில் அந்தப் பெண்

"யப்பா... என்னயத் தெரியலியா... நான் சோதிப்பா.. யப்பா ஆத்தா எங்க... எம்புள்ளைகளையும் பாருப்பா.. என்று சத்தமாய் கதறி அழுதாள். கையிலிருந்த புள்ளைய கீழே இறக்கி விட்டாள். அது சவளைப் பிள்ளையாக, கையை ஊன்றி கால்களிரண்டையும் இழுத்து இழுத்து... கையாலேயே நடந்தது.

"யாத்தாடி என்னப் பெத்த ஆத்தா.. நீ யாத்தா. என்னத்தா இது கோலம்.. நான் என்ன செய்யிவேன்.. இப்டிச் செஞ்சுட்டாங்களே... பச்சப்புள்ளைகளை இப்டி குத்துயிரும், கொலையுயிருமா அனுப்பிட்டாங்களே.. கடவுளே... ஓவென்று அலறி சத்தம் போட்டு அகத்தான் அழுததைக் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மரண ஒலத்தைக் கேட்டவர்கள் போல் ஓடிவந்து கூடினர். எல்லாரும் எங்க வீராயி... வீராயி என்று கேட்டார்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link