சிறுகதைகள்


தாத்தா

கூடல்.காம்

மனசு வெறுத்துப் போயித்தான் ஒண்ணுக்கு முக்காலா அஞ்சு ஆடுகளையும் வித்துக் காசாக்கினார் தாத்தா. எப்படியும் இந்த வருசம் போயிட்டு வந்திறணும் என்று முடிவு செய்தார். போஸ்ட்மேன் மலைச்சாமியிடம் டிக்கட் எடுத்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டார். இந்தத் தடவயும் போகாம விட்டுட்டோம்னா அப்புறம் உள்ளுர்ப் பய மக்களுக்கு பதில் சொல்ல முடியாது என முடிவெடுத்துக் கொண்டார். நினைவுகள் முன்னுக்கும் பின்னுக்கும் இழுக்க கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் தாத்தா.

"தாத்தா... தாத்தா எந்திரிங்க... அம்மா சாப்பாடு கொண்டு வரவான்னு கேட்டுச்சு" - பக்கத்து வீட்டு மருதாயி மகன் மச்சக்காளை வந்து உசுப்பினான். மச்சக்காளை உள்ளுர்ப் பள்ளிக் கூடத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். மருதாயி ஒருவகையில் தாத்தாவுக்குத் தூரத்துச் சொந்தம். ஏதோ கையில் கண்ட பணத்தை மருதாயியிடம் கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறார். மகன் மூக்கையா அனுப்புகிற பணத்தையும் அப்படியே கொடுத்து விடுவார். பெரும்பாலும் தாத்தாவுக்கு ராத்திரி சாப்பாடு மட்டும்தான். மற்ற நேரங்களில் நீராகாரம் குடித்து வெற்றிலை பாக்குப் போட்டு முடித்துக் கொள்வார்.

மச்சக்காளை தொடர்ந்து தட்டி உசுப்பினான். மெதுவாக எழுந்து உட்கார்ந்தார் தாத்தா. தாத்தா நான் சாப்பாடு வாங்கியாறேன்..." என்று சத்தம் போட்டபடியே அவன் வீட்டிற்குள் ஓடினான். சோறு போட்டு குழம்பு ஊற்றிய தட்டிற்குள் வெஞ்சனக் கிண்ணத்தையும் சேர்த்து வைத்து அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக கவனமாக நடந்து வந்து தாத்தாவிடம் கொடுத்தான் மச்சக்காளை.

"ஏலே.... வாய்யா.... வா.... வா... காள... வாய்யா தாத்தாவுக்கு சோறு கொண்டாந்தியாக்கும் வா... ராசா... வா ம்பா... பா என்று ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் அவனை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். மொர மொரத்த கையின் பிடியும், நாள் முழுக்க வெயிலில் ஒத்தைக்காலில் நின்று ஆடு மேய்ப்பதால் சூடேறி... வடுவாகிப் போய்க் கிடந்த உடம்பும், பிசிறெடுத்த நார்க்கற்றைகளாய் வளர்ந்து பரவிக்கிடந்த ரோமங்களும், அன்பின் பாதுகாப்பின் நெருக்கத்தை உணர்த்தின. உணர்வின் இறுக்கத்தில் நெகிழ்ந்து நெளிந்தபடி நின்றான் மச்சக்காளை குட்டி ஆடு போல.

திடீரென்று, "அய்யோ தாத்தா... விடு தாத்தா தண்ணி எடுத்துட்டு வர மறந்துட்டேன். எடுத்துட்டு வந்திர்றேன்..." தாத்தாவின் பொய்ப்பிடியிலிருந்து விலகி ஓடினான்.

எப்பொழுதுமே அவன்தான் தாத்தாவுக்கு ராத்திரி சாப்பாடு கொண்டு வந்து தருவான். சாப்பிட்டு விட்டு வெத்தலை போட்டு முடிக்கும் நேரத்திற்குள் கதை, விடுகதை, பாட்டு எனப் பல விசயங்களையும் சொல்வார் தாத்தா. தினமும் இப்படிக் கேட்டு விட்டுப் போனால்தான் மச்சக் காளைக்குத் தூக்கம் வரும். பலமுறை மருதாயி வந்து அதட்டி "போதும் வா நேரமாச்சு தூங்கணும் காலையில பள்ளிக்கூடம் போகணும்ல" என்று அடித்து இழுத்துக் கொண்டு போகும் வரை பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண் மண் தெரியாமல் கோபம் வர திட்டி விடுவார் தாத்தா. மருதாயிதான் கொஞ்சலாக சமாதானம் சொல்லி விட்டுப் போவாள்.

இந்த மச்சக்காளையின் வயது இருக்கும் காலம் முதற்கொண்டு, படித்து முடித்து வேலைக்குச் செல்கிற வரை தன் மகன் மூக்கையாவை வளர்க்க தாத்தா பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மூத்தவன் மூக்கையாவையும் ரெண்டாவதாக காளியம்மாளையும் பெற்றுப் போட்டு விட்டு போய்ச் சேர்ந்து விட்டாள் பெற்றவள். ரெண்டு பிள்ளைகளையும் வளர்க்க ரொம்பத்தான் சிரமப்பட்டார். இன்றைக்கு இருந்திருந்தால் காளியம்மாளுக்கு பக்கத்து வீட்டு மருதாயி வயசு இருக்கும் ஆனா அஞ்சாறு வயசு இருக்கிறப்பவே அம்மை போட்டு இறந்து போய்விட்டாள். தாயில்லாப் பிள்ளையான மூக்கையாவை வளர்க்க தாத்தா ரெம்பத்தான் கஷ்டப்பட்டுட்டார்.

இப்பொழுது மூக்கையா மும்பைல இருக்கிற ஒரு பெரிய நிறுவனத்துல அதிகாரியா வேலை பார்க்கிறான். "பையன் ரொம்பவே சூட்டிக்கா இருக்கான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுகிட்டு பாக்குறான். அவன் இருந்தா ஒத்தாசையா இருக்கும்னு சொல்லி, வேலைய நிரந்தரமாக்கி கூடவே வச்சுக்கிட்டாங்கன்னு ஒரு தடவை கடிதம் எழுதியிருந்தான் மூக்கையா. வருசத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்துட்டுப் போவான். கடைசியாக அவன் ஊருக்கு வந்துவிட்டுச் சென்று நான்கைந்து வருசங்களுக்கு மேலாகியிருந்தது. ஒருமுறை, அப்பா இங்க நான் நல்லா இருக்கேன். ரெம்ப நாளா கடிதம் எழுதலியேன்னு மனசு வருத்தமா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு வேலை அப்படி ஒவ்வொரு நாளும் நான் உங்கள நெனச்சுக் கிட்டுத்தான் இருக்கேன்.

எத்தனையோ தடவ எங்கூடவே வந்திருங்கன்னு நான் கூப்பிட்டும். நீங்கதான் பிடிவாதமா மறுத்துட்டீங்க. நான் உங்க செலவுக்காக அனுப்புற பணம் கெடைக்கும்னு நெனைக்கிறேன் போஸ்ட்மேன் மலைச்சாமிய வச்சு நீங்க எழுதுன கடிதத்துல சொல்லியிருந்த விசயத்தையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். அது சம்பந்தமா பேசனும்னு நெனச்சுத்தான் இப்ப கடிதம் எழுதுறேன். அப்பா என்னய மன்னிச்சிருங்க... இந்த ஒரு விசயத்துல உங்க ஆசைய நிறைவேத்த முடியல இங்க என் கூடவே வேலை பாக்குற பெண்ண கல்யாணம் செய்துக்கிட்டேன். எனக்கும் விருப்பம்தான். சூழ்நில அப்படி, அதான் சொல்ல முடியல. நீங்க மன்னிச்சு ஏத்துக்குவீங்கன்னு நம்புறேன். நம்ம குலசாமிக்கு கிடாவெட்டி பொங்க வச்சு திருநீரு அனுப்புங்கன்னு கேட்டிருந்தேனே இன்னும் சாமி கும்பிடலியா. ஏன் என்னாச்சு. எல்லா விசயத்துக்கும் கடிதம் எழுதுங்க என்று எழுதியிருந்தான் மூக்கையா.

"நேரடியாப் போய்ப் பார்த்துட்டு வந்திடனும்னு பல தடவை முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டது. இப்படியே நாலு வருசம் ஓடிப் போய்விட்டது. உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் என்று மூக்கையா எழுதிய கடிதம் கிடைத்து ஏழெட்டு வருசங்களுக்கு அப்புறமா இன்று போய்விட்டு வர முடிவு செய்து புறப்பட்டுவிட்டார் தாத்தா.

போஸ்ட்மேன் மலைச்சாமி கீழே சன்னல் ஓரமாய் நின்று பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் இறங்கி மீண்டும் ஏற வேண்டிய வண்டியின் பெயர், முப்பையில் இறங்கிப் போக வேண்டிய இடம் என எல்லாக் குறிப்புகளையும் முகவரியையும் இரண்டு வெள்ளைத்தாள்களில் எழுதி ஒன்றை அவர் பையிலும் மற்றொன்றை கையிலும் கொடுத்தான். வண்டி கிளம்பத் தயாரானது. பேரனைக் காணப் போகும் மகிழ்ச்சியில் தாத்தான்னு அவன் கூப்பிடப் போகும் அழகையும் நினைத்து, மனம் லயித்தவராய் கிளம்பிச் செல்லும் வண்டிக்குள் இருந்து கையசைத்தபடி நிற்கும் மலைச்சாமியைப்பார்த்துக் கொண்டே சென்றார் தாத்தா.

நேரடியாக மும்பாய் போற ரயிலில் இவர் இருக்கிற பெட்டியில தமிழ்ப் பேசுபவர்கள் இருவர் இருந்தனர். அவர்களோடு பேசிக்கொண்டு சென்றதில் ஒரு நாள் வேறு ஊர் என்ற உணர்வின்றி கழிந்தது. அவர்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேரிடத்தில் இறங்கிக் கொள்ள, பொழுது போக்குவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டார் தாத்தா.

கடைசியாக வண்டி நின்ற இடத்தில் இறங்கினார். தெற்கு வடக்குத் தெரியாமல் இறங்கிச் செல்லும் ஆட்களோடு சேர்ந்து தட்டுத்தடுமாறி மாடிப் படியேறி செல்கையில், வாங்கப்பா... வாங்க.. வாங்க... என்று ஆவலாய் ஓடிவந்து பிடித்துக் கொண்டான் மூக்கையா. இருவரும் காரில் ஏறிச் சென்றார்கள். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மூக்கையா பேச்சைத் தொடர்ந்தான்.

"ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா? மழை தண்ணி பேஞ்சதா... ஆட்டுக்குட்டிகள வித்துட்டீங்களா இல்ல இன்னும் நிக்கிதா...? மருதாயி எப்படி இருக்கு. அது வீட்டுக்காரர் வேலை பாக்குற கம்பெனில ஏதோ பிரச்சினை வேலை இல்லைன்னு கேள்விப்பட்டேன். இப்ப சரியாயிருச்சா. பேசாம குடும்பத்தக் கூட்டிக்கிட்டு இங்க வந்துருன்னு சொன்னேன் கேட்கல. மலைச்சாமி அண்ணே எப்படி இருக்கார். புரமோசன் வரணும்னு சொன்னாரே வந்துருச்சா.

"என்னமோ அவுகவுக அதது பொழப்பப் பார்த்துக்கிட்டு நாளக் கடத்திக்கிட்டு இருக்குதுக.. என்று பேச்சை முடித்துக் கொண்டார் தாத்தா.

"அப்புறம்.. எனக்கு அந்த மாதிரி சூழ்நில அமைஞ்சிருச்சு. உடனே முடிக்க வேண்டிய கட்டாயமா போச்சு... அதான் கல்யாணம் முடிச்சேன். அவுகளும் நம்ம ஊரு பக்கம்தான். இங்க ரொம்ப முன்னாடியே வந்துட்டாங்க... என இழுத்துப் பேசினான் மூக்கையா. நேரடியாக மன்னிப்புக் கேட்கும் தோரணையாக அவன் பேச்சு இருந்தது.

கார் அந்த கூட்டுக் குடியிருப்பு சுற்றுச் சுவரின் பெரிய வாசல் கதவருகே வந்து நின்றது. இருவரும் இறங்கி வீட்டினுள் சென்றனர். வாங்க மாமா வாங்க.. வாங்க.. ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா வாய் நிறைய சொல்லி வரவேற்றாள் மூக்கையாவின் மனைவி. முதன் முதலாக மருமகளைப் பார்த்து "தீர்க்காயுசா இரும்மா" என்று வாழ்த்தினார் தாத்தா.

தாத்தாவின் கண்கள் வீட்டிற்குள் தேடின. என்ன பேரப் புள்ளயத் தேடுறீங்களா. அவன் டியூசன் போயிருக்கான். லஞ்ச்சுக்குத்தான் வருவான். நீங்க இருங்க என்ற மூக்கையா, அப்பா நான் மார்க்கெட் வரைக்கும் போயி காய்கறி வாங்கிட்டு வந்திர்றேன் எனக் கிளம்பி விட்டான்.

"இந்தாங்க மாமா... இந்தக் காப்பியக் குடிங்க ஆவி பறக்க கொண்டு வந்து வைத்தாள் மருமகள். நல்ல லட்சணமா பழக்க வழக்கமுள்ள புள்ளயாத்தான் இருக்கு என நினைத்துக்கொண்டார் தாத்தா. காப்பியைக் குடித்து விட்டு மாடி வராண்டாவில் கிடந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே வெளியே பார்த்தார். கீழே காம்பவுண்ட் வாசல் அருகே உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான் வாட்ச்மேன். ஐந்தாறு இளவயதுச் சிறுவர்கள் காம்பவுண்டுக்குள்ளே ஓரமாய்க் கிடந்த சிறுபொட்டலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் யாரையுமே காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கட்டிடங்கள் தான். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரிய மரங்கள் நின்று கொண்டிருந்தான. சற்று தூரத்தில் ஆலைகளிலிருந்து புகை கிளம்பி மேலே போய்க் கொண்டிருந்தது. ஒரு மாதிரியான வெக்கையான காற்று வீசியது. பயணம் செய்து வந்த அசதி அப்படியே தூங்கி விட்டார் தாத்தா.

மூக்கையாதான் தட்டி உசுப்பினான். அப்பா எழுந்திருங்க குளிச்சிட்டு சாப்புடுங்க...

இல்லப்பா... எங்கப்பா புள்ளய காணாம்...

வந்திடுவான்... ஆயா கூட்டிட்டு வருவாள்...

இருக்கட்டும்ப்பா... நான் குளிச்சுக்கிறேன். எம் பேரன் வந்ததும் ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன் - தாத்தா எழுத்திருக்கவில்லை.

"மம்மி... என்று கத்திக்கொண்டே நுழைந்தவனைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு... கோகுல் யுவர் கிராண்ட் ஃபாதர் இஸ் கம்மிங்... யூ கோ டு ஸ்பீக் வித் கிம் என்றாள்.

வேர் இஸ் கி.....

தேர்... என்று கையைக் காட்டினாள்.

கண்ணை மூடி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த தாத்தாவின் பக்கத்தில் போய் நின்று அவரைத் தொட்டு கும்பிட்டபடி ஹலோ... ஹெவ் ஆர் யூ... ஐ யாம் கோகுல்.... என்றான். தாத்தா பதில் பேசவில்லை. தாதாஜிகோ புரனாம் கரோ என்றான். கும்பிட்டபடி நிற்கும் பேரனை வாரி அள்ளி எடுத்து முத்தமிட்டுக் கொஞ்சினார் தாத்தா. ம்ஹீம்... லீவ் மீ... லீவ் மீ... என்று சொல்லி பயந்து அழுது விடுவித்துக் கொண்டு ஓடிவந்து விட்டான்.

"இன்னும் பழகலையில அதான் இப்படி" என்றபடி வந்த மூக்கையா சமாதானப்படுத்தினான்.

சாயங்காலமா வீட்டிற்கு வெளியே காம்பவுண்ட்டுக்குள் கிடந்த பொட்டலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மாடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா. லேசாகத் தூறல் விழுந்தது. கதவருவே நின்றிருந்த வாட்ச்மேன், ஹே... ஹர்கே அந்தர் ஜாக்கே கேலோ... என்று கையைத் தூக்கியபடி கத்தினான். குழந்தைகள் பயந்து விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டார்கள்.

ராத்திரி வீட்டுப் பாடம் எழுதுவதற்காக உட்கார்ந்து விட்ட பேரனை.. வாய்யா.... வா... தாத்தா கதை சொல்றேன்... விடுகதை சொல்றேன்... பாட்டு பாடுறேன் என்று கூப்பிட்டார் தாத்தா ஒன்றும் புரியாமல் விழித்தான் கோகுல்... வரமாட்டேன் என்பது போல் தலையாட்டிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டான்.

கோகுல்... கோ.. ஹி டெல் லவ்லி ஸ்டோரி டு யூ... தாங்கஸ் என்றாள் மருமகள். நோ மம்மி ஐ கேவ் மெனி ஒர்க்ஸ் என்று மறுத்துவிட்டு எழுதத் தொடங்கிவிட்டான். மூக்கையா அறைக்குள் உட்கார்ந்து பைல்களைப்புரட்டி ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். ஒரு விதமான வெறுமை தாத்தாவின் மனசுக்குள் குடியேறியது. ஊரின் ஞாபகம் வந்தது. தூக்கம் வரவில்லை. நீண்ட நேரம் தூங்காமல் விழித்துக் கொண்டே படுத்திருந்தார்.

காலையில் மூக்கையாதான் தொட்டு உசுப்பினான். அப்பா நீங்க குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு இருங்க... நான் வேலைக்கு கௌம்புறேன்... அவ பையன ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே வேலைக்கு போயிருவா. சாயந்தரம் திரும்புறப்ப ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்திருவேன். இந்தாங்க எதாவது தேவைன்னா... பக்கத்துல கடை இருக்கு வாங்கிக்கங்க. கையில் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான் மூக்கையா. தான் அனாதையாக இருப்பதைப் போல் உணர்ந்தார் தாத்தா.

இரண்டு நாட்கள் இப்படி அவரால் முழுசாகக் கடத்த முடியவில்லை. "யப்பா.. நான் ஊருக்கு கௌம்புறேம்ப்பா.. முடிஞ்சா நீ பொண்டாட்டி புள்ளய கூட்டிட்டு ஊருக்கு வா.. என்றார் தாத்தா.

இந்த ஊரும் பொழப்பும் இப்படித்தாம்ப்பா என்று மூக்கையா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் தாத்தா கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்துவிட்டார். சாமியக் கும்பிட்டு மடியிலிருந்த திருநீறை எடுத்துக் காகிதத்தில் வைத்து மடித்துக் கொடுத்தார். மூக்கையா கிளம்பிவிட்டான். தாத்தாவும் தான்.

வெயில் தாழ்ந்த நேரமாகப் பார்த்து தாத்தா, காம்பவுண்ட் சுவர் வாசலைக் கடந்த போது, வாட்ச்மேன், அவுர் தஸ்தின் டகர்க்கர் ஜாயியே - என்றான் தாத்தா பதில் சொல்லவில்லை. கியா பேட்டே கே ஸாத் லெகடா ஹை என்றான். தாத்தா பதில் பேசவில்லை. பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் இன்னும் பத்து நாளைக்கு இருந்துட்டுப் போகலாம்ல என்ன உங்க மகன் கூட சண்டையா என்று கேட்பதாக அதை மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான். அதற்குள் ரெம்பதூரம் நடந்துவிட்டார் தாத்தா.

ஊருக்குத் திரும்பியதிலிருந்து தாத்தாவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மனசுக்குள்ள ஒரு ஆவல். மருதாயி கொண்டு வந்து கொடுத்த நீராகாரத்தைக் குடித்துவிட்டு, எங்க மச்சக்காளைய காணாம் என்றார். வெளையாடப் போயிருக்கான் வந்திருவான் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாத்தா... எப்ப வந்தீங்க எனச் சத்தம் போட்டு கூப்பிட்டபடி ஓடிவந்து தாத்தாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். மச்சக்காளை அவனை வாரித்தூக்கி அனைத்துக்கட்டி முத்தமிட்டுக் கொஞ்சி உச்சிமுகர்ந்தார் தாத்தா. தாத்தா... தாத்தா என்ற சொல்லில் மனமுருகிக் கரைந்து கட்டின்றி கண்ணீர் மல்கி நிமிர்ந்து உட்கார்ந்து மச்சக்காளையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார் தாத்தா.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link