சிறுகதைகள்


சங்கமம்

கூடல்.காம்
அதிகாலைக் குளிர்காற்று முகத்தில் சில்லிப்பாய் அறைகிற சுகத்தை அனுபவித்தபடி சைக்கிளை மிதித்தபோது.... கடந்த பதினைந்து நாட்களாக மனசை அழுத்திக் கொண்டிருந்த கனம், சற்றே குறைவது போலத் தோன்றியது சுப்பையாவுக்கு! தூரத்திலிருந்து மிதந்து வந்த பள்ளிவாசலின் "பாங்" கோசையும், மறுமூலையிலிருந்த பெருமாள் கோயிலிலிருந்து தவழ்ந்து வந்த சுப்ரபாதநாதமும்.... ஒருங்கிணைந்து... ஒரே ஓசையாய்ச் செவியை நிறைத்தபோது, அவரையும் அறியாமல் அவரது உதடுகள்.... "ஈசுவர அல்லா தேரே நாம்! சப்கோ சன்மதி தே பகவான்!" என்று முணுமுணுத்துக் கொண்டன. கடவுளை அடையும் மார்க்கத்துக்கு "மதம்" என்று பெயரைச் சூட்டியதுதான் யார்? கொழுக்கட்டையையும், பிரியாணியையும்..., "கேக்"கையும் சீடையையும் ஒருவருக்கொருவர் ஆதுரமாய்ப் பரிமாறிக் கொண்டு ஒருதாய்ப் பிள்ளைகளாய் வாழ்ந்துவந்த அந்தச் சிறிய நகரத்தின் நிம்மதியைக் கட்டறுத்துப் பாய்ந்து வந்த "மத" யானைதான் எப்படிக் கோரமாய் குலைத்துப் போட்டு விட்டது....?

தாயைப் பிரிந்த சேய்கள்.... சகோதரர்களைப் பறிகொடுத்த உடன்பிறப்புகள், புதல்வரைப் பிரிந்த பெற்றோர்கள் என்று, அவர் பணியாற்றும் அந்த உயர்நிலைப்பள்ளியின் சின்ன வட்டத்திலேதான் எத்தனைபேர்? இழப்புக்களை இன்னமும் சந்திக்காத மற்றவர்களிடமும் கூடத் திடீரென்று நேரிட்டிருக்கிற மாற்றங்கள்தான் எத்தனை? பள்ளியிலே காலெடுத்து வைத்ததும், புன்சிரிப்போடு சிலுவைக்குறியிட்டுக் காலை வணக்கம் சொல்லும் சாமுவேல்சார், இப்போதெல்லாம் இருண்ட முகத்தோடு விலகிச் செல்வதைக் காணுகையில் இதயத்தைப் பிசைகிறது. எந்த மூலையிலிருந்தாலும் ஓடிவந்து "சலாம் அலைக்கும் சார்!" என்று கூறும் ஏழாம் வகுப்பு மாணவன் சலீமின் கண்களில், இப்படி ஒரு அந்நியமான விரோதப் பார்வை எப்போது வந்து புகுந்து கொண்டது?

மீண்டும் மனது வலிக்கத் தொடங்கியபோது, அனிச்சையாக அவர்வீட்டு வாயிலில் வந்து சைக்கிளை நிறுத்திவிட்டிருப்பதை உணர்ந்தார்.

என்ன...? சத்தியாவைப் பத்திரமா ஏத்தி விட்டாச்சா? என்று பதறியபடி அவரை எதிர்கொண்டாள் சரசுவதி.

"உம்.....உம்.... அவனுக்கென்ன? வழக்கமான பஸ்! தெரிஞ்ச டிரைவர் கண்டக்டர்தானே... ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை!"

"உங்களுக்கென்ன சுலபமாய்ச் சொல்லிடுவீங்க..! ஊர்.... இங்கே பத்தி எரிஞ்சுக்கிட்டிருக்கு! இத்தனை கலவரத்திலே அவனை இப்போ அனுப்பாட்டிதான் என்ன? நாளைக்கு சனி ஞாயிறு லீவுதானே?"

"இதோ பாரும்மா....! திங்கட்கிழமையும் இதே மனுஷங்களோட இங்கேதான் வாழப்போறோம்! மனுஷங்களோட நல்லது மேலேயும் கொஞ்சம் நம்பிக்கை வைம்மா! அவன்தான் ஏதோ டெஸ்ட்டுக்குப் படிக்கணும்.... அங்கே போய்ப் பசங்களோட சேர்ந்துதான் படிக்கணும்னு பறக்கிறானே?"

"அவன் சொல்றதுக்கென்ன...? பெரியவங்க நீங்கதானே தடுத்திருக்கணும்....! கருவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பையன்...! ஊரை விட்டு ஊரனுப்பி டாக்டருக்குப் படிக்க வைக்கிறோம்னு ஏகப்பட்ட கண்ணேறு வேற....!"

சரசுவதியின் புலம்பலுக்கு எதிர்ப்பேச்சுப் பேசிக் கொண்டிருக்க மனமோ, நேரமோ அற்றவராய்ப் பணிக்குக் கிளம்ப அவசரமாய்த் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார் சுப்பையா.

நெடிதுயர்ந்து கம்பீரமாய் நின்ற அந்தப் பள்ளிக்குள் நுழைகிற தருணங்களிலெல்லாம்... அதன் முகட்டில் பளீரெனப் பொறிக்கப்பட்டிருகிற மூன்றுமத ஒருமைப்பாட்டுச் சின்னத்தைப் பார்க்க நேருகிற ஒவ்வொரு கணத்திலும், தனக்குள் உணர்வாகிற அமைதியையும், சாந்தியையும் அன்றைக்கும் அனுபவித்தவராய், ஆசிரியர் அறைக்குச் சென்று, தன் இருக்கையில் அமர்ந்தார் சுப்பையா. 40 ஆண்டுகளுக்கு முன்பாக முஸ்லீம் பெரியவர் ஒருவரால் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி, ஒரு சிறுபான்மையினர் நிறுவனம் என்ற உணர்வை, எவருக்கும்...எப்போதுமே ஏற்படுத்தியதில்லை. காரணம்.... ஜமாலுதீன் பாய்! நாட்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னையே கரைத்துக்கொண்டு... அண்ணல் காந்தியின் அணுக்கத் தொண்டராய் அவரது காலடியே சரணமெனக் கிடந்தவர் ஜமாலுதீன்! சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட சில விரக்திகளால் மனம் சலித்தாலும் காந்தியின் கனவான சமய நல்லிணக்கத்தையாவது சமுதாயத்திற்கு எடுத்துச் சென்றே ஆகவேண்டுமென்ற பிடிவாதத்தோடு... இப்படி ஒரு பள்ளிக்கு அஸ்திவாரமிட்டார் அவர். எந்த நிர்ப்பந்தத்திற்கும் பணியாமல் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாமல்..., திறமையின் அடிப்படையில் மதபேதமில்லாமல் வாய்ப்பை வழங்கும் நிறுவனம் என்ற பெருமையை அந்தப்பள்ளி பெற்றிருப்பதே ஜமாலுதீனின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தந்துவிட்டதாகச் சுப்பையாவுக்குப்பட்டது.

அவரது சிந்தனை ஓட்டத்தைத் துண்டிப்பது போல எதிரே வந்து நின்றான் பியூன் வடிவேலு.

"ஐயா..! ஹெட்மாஸ்டருக்கு இன்னிக்கு சி.இ.ஓ. ஆபீஸிலே அவசரமா ஒரு கூட்டத்துக்குப் போகவேண்டியிருக்காம். உங்களைக் கொஞ்சம் பிரேயரை நடத்தச் சொன்னாங்க!"

நாள்தவறாமல் சர்வசமயப் பிரார்த்தனைப் பாடல்களை மாணவர்கள் மனமுருகிப் பாடியபின், காந்தீயச் சிந்தனை ஒன்றை ஒரு ஆசிரியர் வாசிப்பதும், விளக்குவதும்... தொடங்கிய நாள் தொட்டு அந்தப் பள்ளியின் மரபு! அதன்படியே... அன்றைக்குப் பாடல்கள் முடிந்ததும், காந்தியின் பொன்மொழி ஒன்றைப் படிக்க ஆரம்பித்தார்... சுப்பையா.

"மதங்கள் என்பவை ஒரே இலக்கை நோக்கி, நம்மை நடத்திக் கொண்டு போகிற வெவ்வேறு வழிகள் மட்டுமே!

இலக்கு ஒன்றான போது... வழிகள் வேறுபடுவதால்..."

....

வரிகள் அரைகுறையாய் நிற்கத் தொடர்ந்து வாசிக்கமுடியாமல் அழுத்தமான கரம் ஒன்று அவரது இடதுகையை உறுதியாகப் பற்றியது! ஆங்கில ஆசிரியர் தேவசகாயம்!

"கொஞ்சம் உடனே வெளியே போயாகணும்... கிளம்புங்க சுப்பையா!"

"பிரேயரை இப்படிப் பாதியிலே விட்டுட்டா...."

அதெல்லாம் பையங்க பார்த்துக்குவாங்க! மாணவர் தலைவனை அழைத்துத் தொடர்ந்து கூட்டத்தை நடத்துமாறு பணித்துவிட்டுக் கிட்டத்தட்ட சுப்பையாவைப் பிடித்து இழுத்தவாறு விரைந்தார் தேவசகாயம். பள்ளியின் நுழைவாயிலில் தயாராய் நின்றுகொண்டிருந்த டாக்ஸியில் அவரைத் திணித்துவிட்டுத் தானும் நுழைந்து கொண்டார்.

"என்ன தேவசகாயம்....? யாருக்கு என்ன ஆயிடிச்சு? எங்கே இப்படி அவசரமாய்ப் போறோம்...?"

சற்றே நிதானித்து மௌனம் காத்த தேவசகாயம், மென்மையான குரலில்

"மனசைத் திடப்படுத்திக்குங்க சார்..." என்றார்.

"உங்க பையன் சத்தியமூர்த்தி ஏறின பஸ்... போகிற வழியிலே ஒரு வெடிகுண்டு விபத்திலே மாட்டிக் கிட்டதாகத் தகவல் கிடைச்சிருக்கு! இப்ப இருக்கிற கலவரச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கிட்டுச் சில தீவிரவாதிகள் செஞ்ச சதியா.. இல்லே... மதவாதிகள் காரணமான்னு தெரியலை! உயிர் பிழைச்சவங்களை ஆஸ்பத்திரியிலே சேர்த்துத் தீவிர சிகிச்சை கொடுத்துக்கிட்டிருக்காங்க! நம்ம பையன், எந்தப் பட்டியல்லே இருக்கான்னு தெரியலை!"

மேலே பேச வேண்டாமென்பது போலச் சைகை காட்டிவிட்டுக் கண்களை மூடியவராய்... ஆழ்ந்த அமைதிக்குள் சுப்பையா உறைந்து போனார்.

தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும்.... நாட்களின் மணிகளும், நிமிடங்களும், வினாடிகளும், எவர் துயரையும் கண்டு கொள்ளாமல் இயந்திரகதியாய் நகர்ந்து செல்லத் தலைக்காயம் பட்டுத் தன் நினைவில்லாமல் கிடந்தான் சத்தியமூர்த்தி. கதறித் தவிக்கும் தாயின் பாசப் புலம்பலோ., பேச்சே இல்லாத தந்தையின் அன்பான வருடலோ... எதுவுமே எட்டாத தொலைவில்... தனக்குள்ளாக... அவன் மெள்ள மெள்ள அமிழ்ந்து கொண்டிருந்தான்.

"தலையிலே அடிபட்டதாலே" "பிரெயி"னுமே சேதமாயிடுச்சாம்! இப்ப இருக்கிற "கோமா" நிலையிலேயிருந்து அவன் மீண்டு வர்றதுக்கு வாய்ப்பிருக்கான்னு தெரியலை!"

- சுப்பையாவுக்கு ஆறுதல் சொல்லத் திரண்டு வந்த ஆசிரியர், மாணவர் கூட்டத்திற்குச் சலிக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் தேவசகாயம்.

மருத்துவமனையின் வரவேற்பறையே அமைதியானதொரு சோகத்திற்கு ஆட்பட்டுப் போயிருந்த அந்த நேரத்தில், அதனைக் கலைப்பதுபோல் ஒரு நர்ஸின் குரல் திடீரென ஒலித்தது.

"இங்கே... மிஸ்டர் சுப்பையாங்கிறது யாரு...? சீஃப் டாக்டர் உடனே பார்க்கணுமாம்!"

மெய் சோர்ந்து, நடைதளர்ந்து... தொய்வடைந்த நிலையிலும்... உடன்வர எத்தனித்த ஆசிரிய நண்பர்களைத் தவிர்த்துவிட்டுத் தனியாகவே தலைமை மருத்துவரின் அறைக்குள் சுப்பையா நுழைந்தார்.

"வாங்க மிஸ்டர் சுப்பையா...! இப்படி உட்காருங்க!... ஐ ஆம் வெரி சாரி! உங்க பையனை எப்படியாவது காப்பாத்திடணும்னு இந்த ரெண்டு நாளா எவ்வளவோ முயற்சி எடுத்துக்கிட்டோம்!... சின்ன வயசு...! இன்னும் வாழ்க்கையிலே பார்க்க வேண்டியது... சாதிக்க வேண்டியது... எவ்வளவோ இருக்கு...!

- தொடர்ந்து டாக்டர் தரப்போகிற அதிர்ச்சியை எதிர் கொள்ளத் தயாரானவராய்.. மேசை விளிம்பைத் தன் விரல்களால், சுப்பையா கெட்டியாகப் பற்றிக் கொண்டார்.

இதைச் சொல்ல நேர்ந்ததுக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன்! மருத்துவ ரீதியா... உங்க பையன்.. நிமிஷத்துக்கு நிமிஷம் மரணத்தை நோக்கிப் போய்க்கிட்டே இருக்கான்.. ஆனாலும் அவனை வாழவைக்க ஒரு வழி இருக்கு.

ஒளி மங்கிக் கொண்டு வந்த சுப்பையாவின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு

"ஆமாம் மிஸ்டர் சுப்பையா! அவனுடைய மூளை.. முழுவதுமா "டாமேஜ்" ஆயிட்டதாலே, இனிமேலும் அவனுடைய சாவைத் தடுக்கக் கூடிய சக்தி, எங்களுக்கு இல்லை! ஆனா... இன்னமும் கூட ஆரோக்கியமா இயங்கிக்கிட்டிருக்கிற அவனுடைய உறுப்புக்களைத் தானமாய்க் கொடுக்க..., அவனுடைய மூச்சு அடங்கறதுக்கு முன்னாடியே நீங்க சம்மதிச்சா... அந்த உறுப்புக்கள் இல்லாம... இதே ஆஸ்பத்திரியிலே செத்துக்கிட்டிருக்கிற ரெண்டு நோயாளிகளைப் பிழைக்க வச்சு, அவங்களோட வடிவத்திலே உங்க மகனை உங்களாலே வாழவைக்க முடியும்!"

-தொடர்ந்து பேசிக்கொண்டு போன டாக்டர், முடிவாக "நீங்க நல்லா யோசிச்சே முடிவெடுங்க! நான் வேண்டாம்னு சொல்லலை! ஆனா... இரண்டு, மூணு மணி நேரத்துக்கும் மேலே தாமதிச்சா... அப்புறம் சத்தியா.... யாருக்குமே பயனில்லாமப் போயிடுவான்...! அதை மட்டும் நினைவிலே வச்சுக்கங்க! என்றபடி விடை தந்தார்.

மருத்துவர் அறையிலிருந்து வெளிப்பட்ட தன்னைச் சூழ்ந்து கொண்ட கூட்டத்தை நாசூக்காய்த் தவிர்த்த சுப்பையா, சரசுவதியை மட்டும்... ஒதுக்குப்புறமான ஒரு மூலைக்குத் தனியே அழைத்துச் சென்றார். அரைமணி நேரம் கழித்து... இருவருமாய் டாக்டரின் அறைக்குள் நுழைந்தபோது, அவர்களின் கண்கள் கலங்கியிருந்தாலும்... முகங்களில் தெளிவும், பொலிவும் கூடியிருப்பதைச் சுற்றியிருந்தவர்களால் உணர முடிந்தது.

"எங்கள் புதல்வன் சத்தியா என்ற சத்தியமூர்த்தியின் கண்களை அனாதைச் சிறுவன் அப்துல்லாவுக்குப் பொருத்தவும், அவனது இதயத்தைப் பெரியவர் டானியலின் மாற்று இதய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தவும் நாங்கள் இருவரும் முழு மனதோடு ஒப்புதலளிக்கிறோம்.

- என்று கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது...., காலடியிலுள்ள பூமியே நழுவுவதான பிரமையில் இதயம் வலித்தாலும்... மதங்களுக்கு நடுவே ஊடுருவிச் சங்கமித்து.. அவற்றையெல்லாம் கடந்த உன்னத மானுடனாய்த் தன் மகன் விஸ்வரூபமெடுக்கப் போகிற நினைப்பில் சுப்பையாவின் நெஞ்சு... பெருமிதத்தால் பூரித்தது.

நன்றி: தடை ஓட்டங்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link