சிறுகதைகள்


வேலை

கூடல்.காம்
"பாஸ்! நீங்க கோவிச்சுக்கலேன்னா, ஒரு யோசனை சொல்லலாம்னு நினைக்கிறேன்...." என்று பணிவோடு மெல்லப் பேச்சைத் தொடங்கினார் அலுவலக மேனேஜர் சுந்தரம். பிரசாந்த் நிமிர்ந்து அவருடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தான்.

"பாஸ்! ஒரு பதவிக்கு, படிப்பும், பட்டமும் முக்கியமில்லே. அறிவும் உழைப்பும் தான் வேணும்.

அவர் என்ன சொல்ல நினைத்துச் சொல்லாமல் நிறுத்திக் கொண்டுவிட்டார் என்பதை யூகித்துக் கொண்டான் முதலாளி பிரசாந்த்.

"உங்கள் பரம்பரையிலே, உங்கள் அப்பா ரொம்பப் பட்டப் படிப்பா படித்திருந்தார்? ஒரு வொர்க்-ஷாப்பிலே சாதாரண "மெக்கானிக்"காகச் சேர்ந்து உழைத்து முன்னேறி, இன்றைக்கு இவ்வளவு பெரிய "பிரசாந்த் மெஷின் டூல்ஸ்" தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறாரே? தான் படிக்க முடியவில்லை என்ற குறையைத் தீர்த்துக் கொள்வதற்குத் தானே, உங்களை அமெரிக்கா வரைக்கும் அனுப்பி, எம்.பி.ஏ. படிக்க வைத்து, இதற்கு "பாஸ்" ஆக்கியிருக்கிறார்?" என்று அலுவலக மேனேஜர் சொல்லாமலே நிறுத்திக் கொண்டுவிட்டார்.

"ஓ.கே.... உங்க யோசனையைச் சொல்லுங்க ஸார்!" என்றான் எம்.பி.ஏ. மெல்லச் சிரித்தபடி....

"நம்ம வொர்க்-ஷாப், கவர்ன்மென்ட் ஆபீஸ் இல்லே. கவர்ன்மென்ட் வேலைன்னாத்தான் பேஸிக் க்வாலிஃபிகேஷன்ஸ் பட்டம், ஜாதி, ஓசி, பி.சி எல்லாம் பார்க்கணும். நமக்கு அப்படியில்லே. நாம் தகுதியானவர்னு நினைக்கிற யாரையும் அப்பாயின்ட் பண்ணலாம்..."

"தகுதியானவங்க யாருமே கிடைக்கலியே ஸார்" என்று உதட்டைச் சுழித்தான் பிரசாந்த்..

அன்று காலையில்தான் "இன்டர்வியூ" நடத்தியிருந்தார்கள். பி.இ. பட்டமும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. அவற்றில் இருபது விண்ணப்பங்களை மட்டுமே மேனேஜர் தேர்தெடுத்து இன்டர்வியூவுக்கு அழைத்திருந்தார்.

முதலாளியும், மேனேஜரும் விண்ணப்பதாரர்களைத் தனித்தனியே கூப்பிட்டு நேர்கண்டர்கள். கிட்டத்தட்ட எல்லா விண்ணப்பதாரர்களுமே பி.இ பட்டம் வாங்கி குறைந்தபட்சம் மூன்று, நான்கு ஆண்டுகளாகியிருந்தன. ஒருத்தருக்குமே வொர்க்-ஷாப்பில் வேலை செய்த அனுபவம் இல்லை. வொர்க் - ஷாப்களில் வேலை தேடி அலைந்த அனுபவம்தான் இருந்தது! இப்படி வேலை தேடி அல்லாடிய காலத்திலே அவர்கள் படித்திருந்த படிப்பும் மறந்திருக்கும். மெஷின்ஸ் பற்றிய ப்ராக்டிக்கல் அறிவும் மறந்திருக்கும்போல் தோன்றியது.

"ஏம்ப்பா! இத்தனை வருஷத்திலே ஏதாவது ஒரு வேலை - சாதாரண வேலையாவது பார்த்திருக்கக்கூடாதா?"

"மனசு வரலே ஸார்!" என்னோட படிச்ச ஃபரண்ட்ஸ் என்ஜினீயர்களாக பத்தாயிரம், பதினஞ்சாயிரம் ரூபாய்னு சம்பளம் வாங்கிக்கிட்டிருக்கிறப்போ, நான் மட்டும் அதுக்குக் குறைஞ்ச சம்பளத்திலே சாதாரண வொர்க்கர் வேலை பார்க்க மனசு இடம் கொடுக்கலே ஸார்.

"வொயிட் காலர் ஜாப் மோகம். எந்த அளவுக்கு இந்த இளைய தலைமுறையைப் பீடித்திருக்கிறது. என்பதை நினைத்து நொந்துபோனான் அவன். சரி.... இப்படியே வேலை தேடிக்கிட்டிருந்தா, வருஷா வருஷம் புதுசு புதுசா பி.இ. படிச்சவங்க - டு பி ஃப்ரான்க் வித் யூ - நெறைய நெறைய புத்திசாலிகள் வந்துக்கிட்டிருக்கிற நெருக்கடியிலே உங்களுக்கு எப்போதாவது வேலை கிடைக்கும் என்கிற உத்திரவாதம் - "கியாரண்டி" இருக்கா?" இன்டர்வியூவுக்கு வந்தவர்களில் யாருமே தகுதியுள்ளவராக பிரசாந்துக்குத் தோன்றவில்லை. அப்போதுதான் மேனேஜர் சுந்தரத்துக்கு அந்த யோசனை தோன்றியது.

"பாஸ்! நம்ம வொர்க்ஷாப்பிலே ஒரு வருஷமாய் ராமுனு ஒருத்தன் வேலை பார்த்துக்கிட்டிருக்கிறான். வேலையிலே ரொம்ப சின்ஸியராய் - பொறுப்பாக இருக்கிறான். வேலை நேரம் முடிஞ்சு "பெல்" அடிச்சதும், எல்லோரும் செஞ்சுகிட்டிருக்கிற வேலையை அப்படியப்படியே போட்டுட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க. ஆனா இவன் மட்டும், பார்த்துக்கிட்டிருந்த வேலையை ஒழுங்காய்ச் சரிபண்ணி வச்சிட்டுத்தான் கிளம்புவான். கால் மணி நேரம், அரை மணி நேரம் அதிகமானாலும் அந்த "ஜாபை" முடிச்சிட்டுத்தான் போவான். நான் ஒரு நாள் அவன்கிட்டே கேட்டேன் "ஏம்ப்பா பெல் அடிச்ச உடனே நீயும் அப்படியே "ஜாப் - வொர்க்"கை விட்டுட்டுப் போயிடலாமே"னு கேட்டேன் "இல்லே ஸார்! அப்படியே போட்டுட்டுப் போனா, அடுத்த நாள் அதை மறுபடியும் ஸெட் பண்ண நேரமாயிடும் அதனாலே இன்னிக்கே ஒரு ஸ்டேஜ் வரை சரிபண்ணிவச்சிட்டுப் போனோம்னா, நாளைக்கி வந்து வேலையைத் தொடர ஈஸியாயிருக்கும்"னு சொன்னான். அவ்வளவு பொறுப்புணர்ச்சியோட, வேலை பார்க்கிறவன் அவன்."

"அப்படியா? அவன் பெயர் என்ன, ராமுவா?".

"எஸ், பாஸ்! சிவப்பா உயரமாய் இருப்பான். எப்போதும் சிரிச்ச முகத்தோட இருப்பான்."

"சிவப்பாய், உயரமாய் சிரிச்ச முகத்தோட இருக்கிறவனுக்கு சினிமாவிலே சான்ஸ் கொடுக்கலாம்."

"அது மட்டுமில்லே பாஸ்! இவன் மாதிரி சின்ஸியரான வொர்க்கர்களுக்கு ப்ரமோஷன் கொடுத்தோம்னா, மற்ற வொர்க்கர்களுக்கும் ஒரு என்கரேஜ்மென்ட் - உற்சாகம் ஏற்படும் இல்லியா?" என்று தன் யோசனைக்கு இன்னொரு "பாயிண்ட்" சேர்த்து வலிமை ஏற்றினார் சுந்தரம். மேனேஜர் சொன்ன யோசனையை உடனே ஏற்றுக் கொண்டு விடவில்லை அந்த எம்.பி.ஏ இரண்டு, மூன்று நாட்கள் அவனே, திடீர் திடீர் என்று எதிர்பாராத நேரங்களில் "வொர்க் ஷாப்"புக்குள் நுழைந்து, நேரடியாகவும், மறைந்து நின்றும், ராமு வேலை செய்வதைக் கவனித்தான்.

கடைசியில், "ஒ.கே. மேனேஜர் ஸார்! நீங்க சொன்ன யோசனைப்படியே செஞ்சிடுவோம்... நாளைக்கி அவனோட ஸெர்ட்டிஃபிகேட்ஸை எடுத்துக்கிட்டு என்னை ஆபீஸிலே வந்து பார்க்கச் சொல்லுங்க" என்றான் பிரசாந்த்.

"ஸெர்ட்டிஃபிகேட்ஸா?..... போன வருஷம் அவன் வேலை கேட்டு வந்தப்போ அவன் என்ன படிச்சிருக்கான்னு ஸெர்ட்டிஃபிகேட்ஸை நான் கேட்கலே."

"இந்தக் காலத்துப் பையனாச்சே ஸார்! எப்படியும் ஏழாவது, எட்டாவது படிச்சிருப்பான். அந்த ஸெர்ட்டிஃபிகேட்ஸை கொண்டு வரச் சொல்லுங்க. வொர்க்ஸ் மேனேஜராய் அப்பாயின்ட் பண்ணிடறேன்."

தன்னுடைய யோசனையை முதலாளி ஏற்றுக்கொண்டுவிட்டதில் மேனேஜருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி "பாஸ்! யூ ஆர் ரியலி கிரேட்... தொழிலாளியின் உழைப்பை மதிக்கிற உங்களோட பெருங்குணம், உண்மையிலே மிகப் பெரிய விஷயம்."

உழைப்பால் உயர்ந்து, தன்னையும் உயரச் செய்த தந்தையின் நினைவு, மகனின் விழிகளில் ஈரமாகக் கசிந்தது.

மறுநாள் ராமு முதலாளியின் அறைக்குள் நுழைந்தான்.

"வாப்பா ராமு! மானேஜர் ஸார் எல்லா விஷயமும் சொன்னாரா? டேக் யுவர் ஸ“ட்... உட்கார்!" என்று வரவேற்றான் பிரசாந்த். அவனுடைய பி.ஏ. ஸ்டெல்லா கையில் பைல்களை ஏந்தியபடி பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

"என்ன படிச்சிருக்கே...? உன் ஸெர்ட்டிஃபிகேட்ஸைக் காட்டு..."

தன் கையிலிருந்த ஃபைலை முதலாளியிடம் பணிவுடன் நீட்டினான் ராமு. அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தான் பிரசாந்த். முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல். பிளஸ் டூ மதிப்பெண்கள். பிறகு பி.இ. பட்டம் - எல்லாவற்றிலும் முதல் வகுப்பு மதிப்பெண்கள்! திடுக்கிட்டுப் போனான் எம்.பி.ஏ.

"வாட்! இதெல்லாம் உன்னோட ஸெர்ட்டிஃபிகேட்ஸ்தானா?"

"எஸ் ஸார்!"

"இஸிட்? பி.இ. பட்டம் வாங்கிய பிறகு, எப்படி ஒரு வொர்க்-ஷாப்பிலே தொழிலாளியாக வேலை செய்ய நினைச்சே?"

"இராமன் இருக்கும் இடம்தான் அயோத்தினு சீதை சொன்னா இல்லியா? அது சீதைக்கு மட்டுமில்லே, பட்டதாரிகளுக்கும் பொருந்தும், ஸார்! ஒரு பி.இ. பட்டதாரி இருக்க வேண்டிய இடம் வொர்க் ஷாப்தான். அங்கே என்ஜினியரா, வொர்க்கரா என்கிறது முக்கியமில்லே..."

"என்ஜினியராக இருக்க வேண்டிய வயசிலே எப்படி ஒரு வொர்க்கராய் சிரிச்ச முகத்தோட வேலை செஞ்சே?"

சந்தோஷம் என்கிறது நாம் விரும்பும் தொழிலைச் செய்வது மட்டுமில்லே. நாம் செய்யும் தொழிலை விரும்புறதும் தான் ஸார்!... "உன் கை எந்த வேலையைச் செய்கிறதோ அதை உன் முழு வலிமையுடன் செய்" என்கிறார் காந்திஜி.

சட்டென்று முதலாளி தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று வலது கையை நீட்டினான். "மிஸ்டர் ராமு! யூ ஆர் அப்பாயின்டட் ஆஸ்வொர்க்ஸ் மேனேஜர் ஃப்ரம் டுடே... விஷ் யு ஆல் த பெஸ்ட்.." என்று அந்த பி.இ.யின் கையைப் பிடித்துக் குலுக்கினான் எம்.பி.ஏ.

நன்றி: குங்குமம்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link