சிறுகதைகள்


சின்னச் சின்ன வீடுகட்டி

கூடல்.காம்
மெயின் ரோட்டுல இறங்கி, மண் ரோட்டுல கொஞ்சதூரம் நடந்து, ஒத்தையடிப்பாதைக்குள் தாவி எங்க ஊருக்குப் போகணும்.

ரோட்டுக்கு வடக்குப் பக்கம் ரெங்கசாமி நாயுடுவோட பெரிய தென்னந்தோப்பு, அதுல தேங்காய் கிட்டி பொறுக்கி தேர் செஞ்சு விளையாடுவோம்.

ரெண்டு பக்கமும் கருவைக்காடு மண்டிப்போயி இருக்கும். ஊடால ஒத்தையடிப்பாதை போகும், இந்த இடத்தில் கத்திரித் தோட்டம் போட்டு நிறைய்யா புடுங்குனதா தாத்தா சொல்லியிருக்கார்.

கொஞ்ச தூரம் நடந்ததும் வலது பக்கம் பார்த்தா வேலு பூசாரியோட நந்தவனம் தெரியும். வேலி ஓரத்துல செம்பருத்திப் பூ வெளிய தலையை நீட்டிப்பார்த்துக் கிட்டிருக்கும். திங்கட்கிழமை பள்ளிக் கூடத்துல, தேசியக்கொடியில வச்சுக் கட்டுறதுக்கு இந்தப் பூவ, தெரியாம வந்து புடுங்கிட்டுப் போவோம். ரெங்கசாமி நாயுடுவோட, தோப்புல அடிக்கிற காத்து இங்க வரைக்கும் குளிர்ச்சியா வீசும்.

எடது பக்கம் கருவை மரத்துக்கு ஊடால பள்ளிக்கூடத்துக்கட்டடம் தெரியும். மழை பெய்யிறப்ப தண்ணியோட முள்ளும் சேர்ந்து வந்து கிரவுண்டுல பதிஞ்சுக்கிரும். விளையாட்டுப் பீரியடுல, பல நாள் முள்ளு பொறக்கிக்கிட்டு இருந்திருக்கிறோம்.

இன்னும் நடந்து போனா சின்னப் பாலம் வரும். பெரிய வாய்க்கால் பாலம்னு சொல்லுவாங்க. கிழக்கு வயக்காட்டுப் பக்கமா போற அந்த வாய்க்கால்ல எப்பவாவது தண்ணி வரும்.

கால்வாய்க்குத் தெற்குப் பக்கத்துல வடக்குப் பார்த்து வரிசையா வீடுகள் இருக்கும். வீட்டுக்கும் கால்வா கரைக்கும் இடையில கிடக்கிற இடத்துல, அந்தந்த இடத்துக்கு நேரா இருக்கிற வீட்டுக்காரங்க மறைசல் கட்டியிருப்பாங்க. அதுக்கு அடுத்து விறகுகளைக் கட்டுக்கட்டா சேர்த்து அடைசலா போட்டிருப்பாங்க. அதுக்குப் பக்கத்துலயே குப்பையும் கொட்டி வச்சிருப்பாங்க. பாத்திரங் கழுவுற தண்ணியெல்லாம் அந்த அடைச்சல் தேங்கி நாத்தம் அடிச்சிக்கிட்டு கிடக்கும். ராத்திரியானா பயங்கரமா கொசுக்கடிக்கும். வெளிய வரவே பயமா இருக்கும்.

தனித் தனியா ஒவ்வொரு வீட்டுக்கும் நேரா வேலியெல்லாம் கிடையாது. கிழக்கு கோடி வீட்டுல இருந்து, மேற்க கடைசி வீடுவரைக்கும் ஒரே அடைசலா இருக்கும். இந்த மறைசலுக்கும், அடைசலுக்கும் ஊடாலதான் நாங்க "சும்மாக்காச்சுக்கும்" கூட்டாஞ்சோறாக்கி விளையாடுவோம். பொழுது போன நேரம் பொம்பளைங்க மறைசலுக்கு நேரா பெரிய வாய்க்கா கரைப்பக்கம் ஒதுங்குவாங்க.

மழை பெய்யிர நேரத்துல, இன்னதுதான்னு சொல்லமுடியாத ஒரு வாசம், வயித்தைக் குமட்டிக்கிட்டு வர்ற மாதிரி அடிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்னால கதவு இடுக்கு, தண்ணி போற ஓட்டை... இது மாதிரி இடத்துல எல்லாம் துணிய வச்சு அடைச்சிட்டுத்தான் படுப்போம். அந்த அளவுக்கு பூச்சி பூரானோட தொந்தரவு நிறையா இருக்கும்.

எங்க பக்கத்து வீட்ல போலீஸ் மாமா வாட்டசாட்டமா இருப்பார். லெட்சுமி அவரோட மகள். என்னோட ஃபிரண்ட். நாலாம் வகுப்பு படிச்சாள்.

தினம் ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுவோம். எல்லாப்பசங்களும் வந்த பின்னால, பெரிய வாய்க்கால் உள்ள இறங்கி, தொட்டுப் புடிச்சி, கண்கட்டி, கல்லா மண்ணா, இப்படி நிறையா விளையாடுவோம்.

ஒரு நாள் நானும் லெட்சுமியும் வீடுகட்டி, விளையாடிக்கிட்டிருந்தோம். விறகுக் கட்டு அடுக்குன இடத்துக்கிட்ட கிடந்த குப்பைகளை எல்லாம், தள்ளித் தள்ளிப் பண்ணி, மண்ணைக் குமிச்சு வீடு கட்டினோம்.

உட்கார்ந்து பேசிக்கிட்டே சுத்தம் பண்ணுனதுனால, ரெண்டு மூணு வீட்டு, விறகுக் கட்டு கிடந்த மறைசலையும் தாண்டிப் போயிட்டோம்.

"ஏ..... ஏ.... முருகேசா வீடு ரெம்பப் பெரிசா இருக்கு."

"இருக்கட்டும் புள்ள.... சின்னச் சின்ன வீடாத்தடுத்துக் கட்டுனம்னா ஈஸியா கூட்டித் தள்ளலாம்."

"ம்....................."

"பார்க்க வர்றவுங்க உட்கார்றதுக்கு..... சமைக்கிறதுக்கு... சாப்புடுறதுக்கு... சாமிகும்புடுறதுக்கு, தூங்குறதுக்கு எல்லாத்துக்கும் தனித்தனியா இருக்கட்டும்."

"அப்புறம்"

"வீட்டுக்குப் பின்னால மரம் வளர்க்கணும்... தோட்டம் போடணும்... பயிர்க்குழி போடணும்......"

"ம்..........அப்படீன்னா பெரிய வாய்க்காகுள்ள நிறையா புளியங்கண்டு மொளச்சிருக்கு அதுல ஒண்ணு புடுங்கிட்டு வந்து ஊண்டுவோமா....."

அவள் சொல்லிச் சிரிச்சாள் நானும் சிரிச்சேன்.

கொஞ்சம் கொஞ்சமா மண்ணக் குமிச்சு வச்சாள். பொடிப் பொடிக் கல்லாப் பொறுக்கினாள். கருவை மரத்துல இருந்து இலை, பூ, காய், எல்லாம் புடுங்கிட்டு வந்தாள். சோறு, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம்னு, மண்ணு, தண்ணி, இலை, பூ, காய் எல்லாத்தையும் தேங்கா கொட்டாச்சியில வச்சு வரிசையா அடுக்கினாள்.

நான் எலை அறுத்துட்டு வரவான்னு கேட்டுக்கிட்டே பள்ளிக் கூடத்துப்பக்கம் ஓடி, பூவரச மரத்துல இருந்து கொஞ்சம் இலையைப் புடுங்கிட்டு வந்து கொடுத்தேன்.

"சீக்கிரமா காலு கை கழுவிட்டுச் சாப்புடவா நேரமாச்சு" பூவரச இலையை விரிச்சாள்.

"இந்தா சோறு... இந்தா இது சாம்பாரு.... இந்தா இது கூட்டு... என்று ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி, மண்ணுல இருந்து எல்லாத்தையும் பரிமாறினாள்.

சோத்தை உருட்டி வாய்க்குள்ள தினிச்சு, "உப் உப்னு" சாப்புடுகிற மாதிரி பாவலா செஞ்சேன்.

"இந்தா இந்தா அப்பளம் கடிச்சுக்க".... எடுத்து வச்சாள். காய்ஞ்சு போன பூவரச இலையை நொறுக்கினேன்.

சாப்பிட்டு முடிச்சு ஏப்பம் விட்டேன். நாலஞ்சு பச்சைப் பூவரச இலையையும், ரெண்டு பொடிக் கல்லையும் கொடுத்து "வெத்தல பாக்கு" போடச் சொன்னாள். போட்டேன்.

"நாக்கு செவந்திருக்கா பாரு"

"ம்... ம்ஹீம். இன்னும் நல்லா மெல்லு"

வெறும் வாயை மெல்லு மெல்லுன்னு மென்று கீழ் உதட்டைப் பிதுக்கிக் காட்டினேன்.

"இப்பப் பாரு"

"ம்.... இப்பத்தான் நல்லாச் செவந்திருக்கு....

சரி சரி நேரமாச்சு வேலைக்கு கௌம்பு"

"அப்ப நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன். திரும்பி வர்றப்ப நானே புளியங்கண்டு புடுங்கிட்டு வந்துர்றேன். கதவச் சாத்திக்க" - சொல்லிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

"ஏ... முருகேசா நில்லு! நில்லு!

"என்ன...."

"ஆமா ஆம்பளதானா வேலைக்குப் போகணும்"

"ஆமா"

"அப்படீன்னா ஒனக்கு மீசை"

மேலுதட்டைத் தடவினேன். மீசை இல்லை. அவளைப் பார்த்து ஏமாந்து நின்னேன். அசடு வழிய சிரிச்சேன்.

மீசையுள்ள ஆம்பளையாய் நான் இருக்கணும்னு அவள் ஆசைப்பட்டாள். கரித்துண்டை எடுத்து, கல்லில் எச்சியைத் துப்பி, அதில் உரசி, விரலால தொட்டு எடுத்து, மீசை போடுறதுக்கு வந்தாள்.

அவள் கையைத் தட்டி விட்டுவிட்டு, சிரிச்சுக் கிட்டே ஓடிட்டேன்.

காலையில எங்க வீட்டு மறைசல்கிட்ட "ஒண்ணுக்குப்" போய்க் கிட்டிருந்த என்னைய அவசரமா கூப்பிட்டாள் லெட்சுமி.

நான் கூடப்போனேன்.

ரெண்டு பேரும் பெரிய வாய்க்காகுள்ள இறங்கினோம். ஒரு ஓரத்துல கருவை முள்ளு குவிஞ்சு கிடந்துச்சு. அதுக்குள்ள புளியங்கண்டு மொளச்சிருந்துச்சு. ரோஸ்கலர்ல நல்லா கொழுந்துவிட்டு பார்க்க அழகா இருந்துச்சு.

கையை நீட்டி எட்டிப் புடுங்கிறலாம்னு பார்த்தேன். முடியலை சின்னக் கம்ப எடுத்து முள்ளைப்புரட்டி எறிஞ்சிட்டு புடுங்கலாம்னு பார்த்தா, முள்ளு நல்லாப் பதிஞ்சிருந்துச்சு, புரட்ட முடியல.

"நல்லா நின்னுக்கன்னு சொல்லி லெட்சுமியோட கையைப் புடிச்சுக்கிட்டே, புளியங்கண்டை எட்டிப் புடுங்கப் பார்த்தேன். அப்பவும் முடியலை.

"கொஞ்சம் இரு இந்தா வாறேனுட்டு என்று சொல்லி உடைஞ்சு கிடந்த ரெண்டு செங்கலை எடுத்து வந்து கொடுத்தாள்.

கல்லைத் தூக்கி முள்ளுமேலே போட்டேன். அதுல ஒரு காலை வச்சு ஏறி நின்னேன். இன்னொரு கல்லையும் கொஞ்சம் தள்ளி வச்சு அதுல அடுத்த காலை எடுத்து வச்சேன். கல்லு ஆடவும், நான் தடுமாறிட்டேன்.

"ஏய்.... ஏய் பாத்து.... பாத்து... கீழ நெறிஞ்சி முள்ளு கெடக்கு" லெட்சுமி பதறினாள்.

தடுமாறி புளியங்கண்டு மேலே ஒரு கையையும், முள்ளுல ஒரு கையையும் ஊண்டிட்டேன். பெரிசாப் பார்த்து ஒரு கண்டைப் புடுங்கினேன்.

கண்டைகொண்டுக்கிட்டு வந்து குழி தோண்டி ஊண்டிக்கிட்டு இருந்தோம்.

குப்பையை கொட்ட வந்த லெட்சுமியோட அம்மா பார்த்துட்டாங்க.

"திருட்டு நாய்களா நேத்துத்தான் சொல்லியிருக்கேன். என்ன கொழுப்பு இருந்தா காலங்காத்தால மறுபடியும் ரெண்டு பேரும் குப்பையக் கௌறிக்கிட்டு இருப்பீங்க."

"புளியங்கண்டு நடுறோம்மா" லெட்சுமி சொன்னாள். "எவன் எடத்துல எவண்டி நடுறது.... கொஞ்சமாவது சூடு சொரண இருந்தா... புள்ளையக் கண்டிக்கனும்... காலங்காத்தால அவுத்து விட்டுட்டா..."

இதக்கேட்டுட்டு, "ஏண்டி... ஏன்... ஏன் நடக்கூடாதுங்கிற ஏதோ போனாப் போகுதுன்னு இந்த மனுசன் எடம் வாங்குறப்ப சொல்லி சேர்த்து வாங்கிக் குடுத்தாரு. இல்லைன்னா பொழப்பு நாறியிருக்கும். பெரிய இவ மாதிரி பேசுற விடிஞ்சும் விடியாமையும் ஆரம்பிச்சுட்டியே. என்னடி நெனச்சுக்கிட்டிருக்க ஓம் மனசுல" - அம்மாவும் திட்டுனாங்க.

பேச்சு வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு.

ரெண்டு பேரும் வெளக்கு மாறால அடிச்சுக்கிற அளவுக்கு சண்டை பெரிசாயிடுச்சு.

நானும், லெட்சுமியும் அழுதுக்கிட்டே நின்னுக்கிட்டிருந்தோம்.

பக்கத்து வீட்டுக்காரவுங்க வந்து, சண்டைய விலக்கி சமாதானப்படுத்தியும் பேச்சு முடியல.

லெட்சுமிய அவுங்க அம்மா, அடிச்சு இழுத்துக்கிட்டுப் போனாங்க.

ரெம்ப நேரம் முழிச்சுக்கிட்டே படுத்திருந்தேன்.

"இனி இவன இங்க வச்சிருந்தா சரிப்படமாட்டான். மேலமேல பிரச்சன வளர்ந்துக்கிட்டுத்தான் இருக்கும். பேசாம இவன அவம்மாமங்கிட்ட அனுப்பு... அங்கயே இருந்து படிக்கட்டும். ஏதோ வெளையிறதுல இத்தினி அரிசி தவசியக் குடுத்து விடுவோம்... என்ன சொல்ற"... அப்பா கேட்டார்.

ரெம்ப நேரமா மாட்டேனுட்டு, அப்பாவோட சமாதானத்துல அரை மனசோட அம்மா சரின்னு ஒத்துக்கிட்டாங்க.

புளியங்கண்டுக்கு நானும் லெட்சுமியும் தினத்தினம் தண்ணி ஊத்துவோம். நல்லா இலை விட்டு வளர்ந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் ராத்திரி, நாளைக்கு காலையில மொத பஸ்சுக்கே கிளம்பி ஊருக்குப்போறோம்"னு அப்பா சொன்னார்.

ராத்திரி ரெம்ப நேரம் வரையிலும் தூங்காமலேயே படுத்திருந்தேன்.

காலையில் அம்மா அவசரமா உசுப்புனாங்க. எந்திரிச்சு முகத்தக் கழுவிட்டு தயாராயிட்டேன். அப்பாவும் ரெடியானதும் கிளம்பினோம்.

"ஒன்னுக்கிருந்துட்டு வாரேன்"னு சொல்லிட்டு ஓடிப்போய் புளியங்கண்டப் பார்த்தேன். கொழுந்து விட்டு தெளிச்சியா இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் மண்ணைச் சேர்த்து அணையைப் பெரிசாக்கினேன்.

"தினமும் கண்டுக்குத் தண்ணி ஊத்துவோம்..."

"இனி யாரு ஊத்துறது - நெனச்சு பார்க்கவே மனசு சங்கடமாயிருந்துச்சு.

"லெட்சுமி இருக்காள்ல அவ பார்த்துக்குவா" நிம்மதியோட திரும்பினேன்.

லெட்சுமியப் பார்த்து சொல்லிட்டுப் போகணும்னு ஆசையா இருந்துச்சு.

லெட்சுமியோட அம்மா சட்டியில தண்ணி கொண்டு வந்து, கொல்லையில ஊத்திட்டுத் திரும்பிப் போனாங்க.

லெட்சுமி வெளிய வரவேயில்லை. அவளைப் பார்த்துச் சொல்லிட்டுப் போக முடியலை.

நானும் அப்பாவும் பஸ் ஏறுனோம்.

கல்யாணம் முடிஞ்சு குழந்தைகள்னு ஆனதுக்கப்புறம் நான் ரெம்பவும், என்னவெல்லாமோ இழந்துட்டா மாதிரி இருந்துச்சு. பழைய சந்தோசமான சின்ன வயசு வாழ்க்கை நினைச்சுப் பார்க்கக் கூட நேரமில்லை.

அப்பா இறந்த ரெண்டாவது வருசமே அம்மாவும் திடீர்னு ரத்தக் கொதிப்புல இறந்து போகவும், எனக்கு, ஊருக்குப் போற ஆசையே வரலை.

டைரியை மூடினேன். வண்டி இன்னும் புறப்படல.

"சார் இந்த விசிட் உங்க மனசை அதிகமாப் பாதிச்சிருச்சுன்னு நினைக்கிறேன். அதான் இப்பவே லீவ் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா சார்" - பிரபாகர் கேட்டான்.

நான் அவனை அமைதியாய்ப் பார்த்தேன். பிரபாகர் நான் துணை ஆசிரியர் வேலை செய்யிற பத்திரிக்கையில் சீனியர் ரிப்போர்ட்ரா இருக்கான் பெரிய கலவரம்ங்கிறதுனால நானே நேரடியா ஸ்பாட்விசிட் வரவேண்டியதாப்போச்சு.

ரொம்பவும் முக்கியமான நிகழ்ச்சியா இருந்தா, தான் எதிர் பார்க்கிற மாதிரி ஒரு விசயம் முடியனும்னா எடிட்டர் என்னையைக் கண்டிப்பா அனுப்புவார். அந்த சோடாப்புட்டி கண்ணாடிய கூட்டுட்டுப் போங்கன்னு அவர் சொல்றதுல இருந்தே இதைப் புரிஞ்சுக்கிறலாம்.

"சார் எதுவும் வாங்கணுமா சார்.., சார் தண்ணி புடிச்சிட்டு வரவா சார்.... சார்"

"இல்ல... இல்ல... பரவாயில்ல இருக்கட்டும் பிரபாகர் என்று திரும்பிப் பதில் சொன்னேன்.

வண்டி புறப்பட்டுச்சு.

"சார் எவ்வளவு அழகான, அமைதியான பகுதியா இருக்கு சார்.. இங்கல்லாம் எப்படிசார் சண்டைவருது ஆனா ஒன்னு சார் நம்ம கடைசிக் காலத்துலயாவது... இந்தப் பக்கம் இருக்கிற ஏதாவது ஒரு ஊர்ல வந்து இருந்து கொஞ்ச நாள் வாழ்ந்துட்டுச் சாகணும் போல இருக்கு சார்." பிரபாகர் சொன்னான்.

அவனைப் பார்த்து சிரிச்சேன்.

இங்கே இருந்து மேற்கால போனா ரெண்டு கிலோ மீட்டர்ல நம்ம ஊரு வந்துரும்.... மனசுக்குள் சொல்லிக்கிட்டேன்.

மனைவி உடன் இருக்கையிலேயே, பிரயாணத்தின் போது நாம போற பஸ்ஸிலேயே, பழைய காதலியைப் பார்த்துட்ட ஒருத்தன் படுற அவஸ்தையை நான் படுற மாதிரி இருந்துச்சு.

என்னையும் அறியாமலேயே அந்தத் திசையைத் திரும்பித் திரும்பப் பார்த்துக்கிட்டிருந்தேன்.

வண்டி இன்னும் வேகமாய்போக ஆரம்பிச்சிச்சு.

ஆபிஸ் போனதும் எடிட்டர் கிட்ட சொல்லி, லீவு போட்டுட்டு ஊருக்கு வந்துட்டுப் போகணும். முடிவு செஞ்சேன்.

"நாளைக்கு ஊருக்குப் போகணும் சுசிலா, ரெடியா இரு" மனைவிகிட்ட சொன்னேன்."

சாயங்காலாமா நான், மூணாவது படிக்கிற என் பையன், சுசீலா மூணு பேரும் ஊருக்கு கிளம்பினோம்.

காலையில மூணுபேரும் பஸ்ஸைவிட்டு எங்கள் ஊர் விலக்கில் இறங்கினோம். ரோட்டின் இரண்டு பக்கமும் நிழல்குடை கட்டியிருந்தாங்க.

ரோட்டுக்கு பக்கமா இருந்த ரெங்கசாமி நாயுடுவோட பெரிய தோப்பு அழிஞ்சு போயிருந்துச்சு. செங்கல் களவாசல் வச்சு ஆட்கள் வேலை செய்துக்கிட்டிருந்தாங்க.

விலக்குப் பாதையில நடந்தோம். ரெண்டு பக்கமும் இருந்த கருவைகளை வெட்டியிருந்தாங்க.

நடந்துக்கிட்டே வலது பக்கம் பார்த்தேன். வேலு பூசாரியோட பூந்தோட்டம் காய்ஞ்சு போய் கிடந்துச்சு. புல் பூண்டு கூட இல்ல. செம்பருத்தி தலைக்காட்டுன வேலி சாய்ஞ்சு கிடந்துச்சு.

இன்னும் நடந்ததும் இடது பக்கமா திரும்பினேன். பள்ளிக்கூடம் நல்லா தெரிஞ்சிச்சு. கிரவுண்டுல பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க.

நான் முள்ளுப்பொறுக்குன, தட்டான் புடிச்ச... காலையில பிரேயர் அப்ப கடவுள் வாழ்த்துத் திருக்குறள் சொன்ன... திங்கள் கிழமை கொடியேத்துனக்கபுறம் சிந்திக்கிடக்கும் பன்னீர் பூ பொறுக்குன கிரௌண்ட் ஞாபகம் வந்துச்சு.

பெரிய வாய்க்கால் பாலத்து மேட்டுல ஏறுனோம். வாய்க்கால் சுத்தமா இருந்துச்சு, கிழக்க தூரத்துல வடக்கே போற தண்டவாளரோடு தெரிஞ்சிச்சு.

எங்க வீட்டப்பக்கம் திரும்பிப் பார்த்தேன். நான் சுத்தம் பண்ணி விளையாடிய இடத்துல புளியமரம் வீடு தெரியாத அளவுக்கு அகலமா நிழல் விரிச்சு நின்னுச்சு.

மரத்தடியில பெரிசுகள் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க. இளவட்டங்கள் தாயம் உருட்டிக்கிட்டிருந்தாங்க. சிலர் நிழல்ல உட்கார்ந்துகிட்டே பக்கத்துல மேயுற மாட்டை அதட்டிக்கிட்ருந்தாங்க. எருமை மாடுகள் நிழலுக்காக மரத்தடியில ஒதுங்கி நின்னுக்கிட்டிருந்துச்சு.

வீட்டுக்கு பக்கத்துல போனோம்.

புளியமரத்தோட பாதி நிழல் என் வீட்டு கொல்லையில் விழுந்து கிடந்துச்சு. புழங்குற தண்ணி தேங்கிறாம பெரிய வாய்க்கால்ல போயி சேர்ற மாதிரி சின்னதா வாய்க்கால் வெட்டி விட்டிருந்தாங்க.

வீட்டுக்குள்ள பெட்டி சாமானையெல்லாம் வச்சிட்டு, வெளியில கிடந்த கட்டில்ல வந்து உட்கார்ந்தேன்.

பஸ்சுல வந்து இறங்குனதுல இருந்து நான் பார்த்தது.... நினைச்சது எல்லாத்தையும் டைரியில எழுதினேன்.

"இதுக்கு வேற வேல கெடையாது எப்பப்பாரு டைரி டைரி தெரிஞ்ச பொழப்புதான இது" ன்ற மாதிரி பார்த்துட்டு மற்ற வேலைகளைப் பார்த்தாள் சுசீலா.

என் வீட்டுக்கு மேற்கே கடைசியா இருக்கிற சில வீடுகள்ல இன்னும் மறைசல்.... விறகுகட்டு... குப்பைன்னு அடைசலா இருந்துச்சு. சாயங்காலமா பெரிய வாய்க்கால் கிழக்குப் பக்கம் நடந்து போனேன். கரைப்பக்கம் யாரும் "ஒதுங்கல" பொம்பளைங்க ரயில் ரோட்டைத்தாண்டி தரிசப்பக்கம் போயிட்டு வந்தாங்க.

ராத்திரி சாப்பாட்டை முடிச்சிட்டு, டைரி எழுதினேன். கொல்லையிலேயே பெஞ்சைப் போட்டுப் படுத்தேன்.

நல்ல காத்து அடிச்சது. அடைசல்ல இருந்து வயித்தக் குமட்டுற வாசம் வருமே அது இப்ப இல்ல. கொசுக்கடி இல்ல. காத்துக்காக எம்பையனும், சுசீலாவும் கொல்லைக்கதவைத் திறந்து போட்டுட்டு படுத்திருந்தாங்க. பூச்சி பொட்டை பயமில்லாமல் படுத்திருந்தேன்.

புளிய மரத்து அடியில நாலைஞ்சு பேர் கட்டிலைப்போட்டு படுக்கிறது தெரிஞ்சது. மரக்கிளைக்கு ஊடால பிறைநிலா பார்த்து சிரிச்சது. படுத்திருந்தேன். தூக்கம் வரலை. எழுந்திருச்சு உட்கார்ந்தேன். மறுபடியும் படுத்தேன். கண்ணை மூடிப்பார்த்தேன். தூக்கம் வரலை.

மறுபடியும்... மறுபடியும்... பழசெல்லாம் ஞாபகம் வந்துக்கிட்டே இருந்துச்சு... "லெட்சுமி.. புளியங்கன்று... அப்படியே தூங்கிட்டேன்.

"ஸாரி சுசி... யோசிச்சுக்கிட்டே படுத்திருந்தனா அப்படியே தூங்கிட்டேன்" தொட்டு உசுப்பவும் எழுந்து உட்கார்ந்தேன். நல்லா விடிஞ்சிருந்துச்சு.

"இது என்ன புதுசா" என்பது மாதிரி பார்த்துட்டு காப்பியைக் கொடுத்துட்டுப் போனாள்.

பக்கத்தில் கிடந்த டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன்.

"எனக்கும் ஒரு பத்துப்பனிரெண்டு வயசிருக்கும்னு ஆரம்பிச்சு.... பெஞ்சுல படுத்தேன்ற வரைக்கும் எழுதியிருந்தேன். டைரியை விரிச்சு வச்சுக்கிட்டே அமைதியா உட்கார்ந்திருந்தேன்.

என்னால எழுதாமயிருக்க முடியல...

இது பிரசவ வலியைக் காட்டிலும் கொடுமை.

கவிதை எழுதினேன்.

உதிர்ந்து கிடந்ததைப்
பொறுக்காமல்...
நான் எறிந்து பறித்து
நாம் பகிர்ந்து கொண்ட
இனிப்பு புளியமரம்
இன்னமும் நிற்கிறது

கல் எடுத்துக் கொடுக்கத்தான்
நீ இல்லை
கல் எறிய மனசின்றி
உதிர்ந்து கிடந்ததில்
ஒன்றை எடுத்து
நாக்கில் வைக்கிறேன்

சே!
இனிப்பு புளி
இப்பொழுதெல்லாம்
இனிப்பாகக் காய்ப்பதில்லை.

கவிதையை எழுதிட்டு நிமிர்ந்தேன்.

எனக்கு மனசுக்குள் பளிச்சின்னு சந்தோசம். உலகமே மாறிப் புரண்டது மாதிரி இருந்துச்சு. நினைச்சதை ஜெயிச்சிட்டோம்ங்கிற சந்தோசக் சாரல் மனசுக்குள் விழுந்துச்சு. நாக்குல தீப்பட்டது மாதிரி சுதாரிச்சேன்.

பெரிய கவர் ஒண்ணுல, நான் எழுதுன கவிதையைக் கிழிச்சு எடுத்து உள்ள வச்சேன்.

"அழுது அடிச்சு சண்டை போடுவா, போடட்டும், சுசீலாவை அப்புறமா சமாதானப்படுத்திக்கிறலாம்..."

நம்பிக்கையோட என் ராஜினாமாக் கடிதத்தையும் சேர்த்து உள்ளே வச்சு ஒட்டி, என் பத்திரிக்கை முகவரி எழுதிட்டு மேற்கே பார்த்தேன். குழந்தைகள் மறைசல் ஓரத்தில் வீடுகட்டி விளையாடுறதுக்கு எல்லை சுத்தம் செய்ய ஆரம்பிச்சாங்க. என் மகனும் புளியங்கண்டை ஊண்டி எல்லாரோடயும் சேர்ந்து விளையாடிக்கிட்டிருந்தான்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link