சிறுகதைகள்


தொண உசுரு

கூடல்.காம்
கிழக்கு மேற்காய் ஓடும் மதுரை-ராமேஸ்வரம் தார் ரோடு, பஸ்ஸிலிருந்து இறங்கினால் தார் ரோட்டை இரண்டாய்ப் பிரித்தபடி செல்லும் மாட்டு வண்டிப்பாதை. வண்டிப்பாதையில் வடக்கே நடந்தால் சிறிது தூரத்தில் வைகை ஆறு. தெற்கே நடந்தால் பிள்ளையார் கோயில் வரும். எதிரே பெரிய அரசமரம். கோயிலை ஒட்டி தென்புறமாய் ரயில் ரோடு, ரயில் ரோட்டில் ஏறி இறங்கினால் ஊர். ஊரில் முதல் வீடு அம்பலம் பிள்ளையினுடையது

பொழுது விடிவதற்குமுன் அந்த வீட்டின் முன் நின்று ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அம்பலத்திற்கு தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டு இருந்தது.

ஊரில் கிராமத்துக் கூட்டம் எது நடந்தாலும் அம்பலம் தான் வீடு வீடாக சென்று "ஊர்" சொல்லிவிட்டு வருவார். யார்வீட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அங்கே அவர் தவறாமல் இருப்பார்.

ஆனால், இப்ப அவருக்கே "ஊர்" சொல்ல வேண்டிய வேலை. ஊரு சொல்லுவதினாலேயும், கிராமத்து விசயங்களுக்காக எப்பவுமே "நான்னு" முதலில் நிற்பதினாலேயும் முத்தையா என்ற அவர் பெயரை விட்டுவிட்டு, அம்பலம்னு கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்னாளில் அதுவே அவர் பெயராக நிலைத்துவிட்டது.

பெரும்பாலும் வீட்டுத்திண்ணை அல்லது பிள்ளையார் கோவிலில் அவரைப் பார்க்கலாம் ஊருக்குள் புதிதாக யார் வந்தாலும் முதலில் வரவேற்று விசாரித்து அனுப்புவார் அவரிடம், பேசி முடித்துப் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இதனாலேயே சுற்றி, ரயில் ரோட்டில் மேற்கே நடந்து, சுற்றுப் பாதையில் இறங்கி ஊருக்குள் வருவார்கள்.

பெரும்பாலும் அவர் யாரிடத்திலாவது பேசிக்கொண்டுதான் இருப்பார். இளவட்டங்களிடம் அதிகம் பேசுவார். அவர் பேச்சில், மற்றவர்களுக்கு நிறைய சொல்லுவார். "அப்பவெல்லாம் பாத்தா இப்படியா என்று பேச ஆரம்பிப்பார்.

"மான மரியாதைக்கு பயந்து நடக்கணும். நம்மால ஒருத்தருக்கு கஷ்டம் வரக்கூடாது. போறப்ப எதக்கொண்டு போகப்போறோம். இருக்கிற வரைக்கும் எல்லாரும் நல்லபடியா சந்தோசமா இருந்தா போதும். அதவிட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு, ஊரச் சுத்திக்கிட்டு திரியக்கூடாது.... இப்படித்தான் பேச்சு இருக்கும்.

தனக்கு மகன் இல்லாததால் மகபுள்ள, பேரன் செல்லத்துரையை கூட்டி வந்து வளர்த்தார். அவனுக்கு ஒன்பது வயசிருக்கும். மற்றவர்களுக்கு சொல்லுகிற அறிவுரையை விசயங்களையே அவனுக்குத் தகுந்த மாதிரி சொல்லி வளர்த்தார். விடுகதைகள் சொல்லுவார். அவனோடு சேர்ந்து சின்னப்புள்ளை மாதிரி விளையாடுவார். செல்லத்துரை, அவரை "அய்யா" என்று தான்.

எழுபத்தைந்து என்பது வயது வரைக்கும் இந்த பேசுகிற குணத்தை மட்டும் அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. இதனாலேயே ஊரில் அவரை நிறையப்பேருக்கு பிடிப்பதில்லை. "பெருசு"க்கு வேற வேலை இல்ல" என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனாலும் அவர் பேசினால் யாரும் எதிர்த்துப் பேச மாட்டார்கள். எல்லவற்றிற்கும் விளக்கம் சொல்லியே ஆளை மடக்கிவிடுவார்.

இந்த அம்பலத்தைத்தான் இப்பொழுது ஊரே வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பேசவில்லை. ஆனால் அவரைப்பற்றி அவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு முழுதும் இழுத்துக்கொண்டே கிடந்து.... கோழிகூப்புட செத்துப் போய்விட்டார்.

"முன்பெல்லாம் அய்யாவைப்பற்றி எவ்வளவு கேலியும் கிண்டலும் செய்து அசிங்கமாய்ப் பேசியவர்கள் இன்று பாவம்யா நல்லமனுசன்... இனி இப்படி ஒரு மனுசன் பொறக்கவா போறாரு என்றெல்லாம் அவர்கள் பேசுவதைக் கவனித்தான் செல்லத்துரை. அவர்கள் முகங்களில் எல்லாம் ஒருவித சந்தோசம் தெரிந்தது. அவனுக்கு எதுவும் விளங்காமல் என்னவோ மாதிரி இருந்தது. அங்கு நடப்பது எல்லாம் அவனுக்குத் திருவிழாவைப் போல் தெரிந்தது.

"சின்னப்பயல அங்கிட்டு போகச் சொல்லுங்க" என்று தன்னைத் தடுத்தும், அவர்களுக்கே அந்நியமாய், மாறி.... மாற்றிக் கொண்டிருக்கும் அவர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டு ஊடவே திரிந்தார்ன்.

நன்றாய் விடிந்துவிட்டது. கோழிக்கூட்டைத் திறந்து விடப்போனாள் பக்கத்து வீட்டுச் செண்பகம்.

"ஏய்... எல்லாத்தையும் தொறந்து விட்டுறாதடி... அந்த பொட்டக் குஞ்ச புடிச்சு கவித்திப்போடு" என்றாள் சுப்பம்மாள் கிழவி.

"எதுக்கு" என்ற செண்பகத்திடம், "இன்னக்கி சனிக் கெழமடி.. பொணத்துக்கு தொண உசிரு போட்டு பொதைக்கணும்ல" சுப்பம்மாள் கிழவி சொன்னதும், அந்த பொட்டைக் குஞ்சைப்பிடித்து நார்ப்பெட்டிக்குள் கவுத்திப் போட்டாள் செண்பகம்.

கழுத்துப்பகுதியில் வெள்ளைக்கோடு விழுந்த கறுப்புக் குஞ்சை செல்லத்துரைக்கு ரொம்பவும் பிடிக்கும். அவன் சாப்பிடும் பொழுதெல்லாம் கூப்பிட்டு சோத்தை அள்ளிப் போட்டுக் கொண்டே சாப்பிடுவான்.

அவனோட கோழிக் குஞ்சை அடைத்துப் போட்டுவிட்டதில் அவனுக்கு ரொம்பவும் வருத்தம். மனசு சங்கடமாயிருந்தது. "அய்யா செத்ததுக்கும் சனிக்கெழமைக்கும் என்னா சம்பந்தம், அதுக்கு குஞ்ச ஏன் போட்டு பொதைக்கணும்", என்று நினைத்து புரியாமல் கலங்கினான்.

திரும்பத் திரும்பக் கவுத்திப்போட்டிருந்த கோழிக்குஞ்சைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் நீர்மாலை எடுக்கப்புறப்பட்டார்கள். "நான் வரலை" என்று மறுத்த செல்லத்துரையை "நீ தானப்பா காரியஞ்செய்யனும் வா" என்று கூட்டிப் போனார்கள். குஞ்சின் நியாபகம் சங்கடத்தோடு கூடப்போனான்.

வைகை ஆற்றுக் கரை ஓரத்தில் இருந்த அடி பைப்பில் ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் அடித்து உதவி செய்ய, நீர் மாலைப் பானைகள் தயாராயின.

செல்லத்துரை தலையில் ஊற்றி இடுப்பில் பெரிய புதுத்துண்டைக் கட்டி, நெற்றியில்.... உடலில்... விபூதிப் பட்டை அடித்து, பூனூல் போட்டு விட்டார்கள். தலையில் நீர்மாலை€த் தூக்கிவைத்தார்கள்.

அவன் ஞாபகம் முழுவதும் அவனோட கோழிக்குஞ்சு மேலேயே இருந்தது. அங்கு நடக்கிற எதுலேயும் அவன் மனசு செல்லவில்லை. அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றும் வெறும் சடங்காகத் தெரிந்தது

எட்டு முழ வேட்டியை விரித்துப்பிடித்து.... அதன் நான்கு முனைகளிலும் நீளக்குச்சியை வைத்துச் சுற்றி, நால்வர் பிடித்துக் கொண்டு நிழல் தரும்படி நடக்க, அதற்குள் நடந்தான் செல்லத்துரை. மற்றவர்கள் பின்னே நடந்தார்கள்.

"எல்லாத்தையும் தொறந்து விட்டுறாதடி... அந்த பொட்டக் குஞ்ச புடிச்சு கவுத்திப்போடு... இன்னக்கி சனிக்கெழம... பொணத்துக்கு கூடப்போட்டு பொதைக்கனும். இந்த வார்த்தைகள் அவன் மனசுக்குள் திரும்பத் திரும்ப வந்து மொதின. அதையே நினைத்துக் கொண்டு நடந்தான்.

எப்ப சாப்புட உட்கார்ந்தாலும், லேசா வலஞ்சு இருக்கிற ஒரு காலத் தாங்கித் தாங்கி நடந்துகிட்டு சுத்திச் சுத்தி வருமே... அத எதுக்கு குழியில போடணும்... போடுறதுனால என்னாகும். யோசித்துக் கொண்டே அமைதியா நடந்து வந்தான். யாராவது தொறந்து விட்டுற மாட்டாங்களா என்று நினைத்தான். அவனுக்கு ஏக்கமாக இருந்தது. யாராவது திறந்து விட்டுவிட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வந்தபோது மேளம் அடிப்பதை நிறுத்தினார்கள். எல்லாரும் அமைதியாக நடந்தார்கள். சாமிக்கு கேதம் தெரியக் கூடாதாம்.

சடாரென்றுமேலே குறுக்காக மைனா ஒன்று பறந்து போனது. "செல்லத்தொர... பாத்து... பாத்து... என்றபடி பக்கத்தில் வந்தவர் பானையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

அந்த மைனா மாதிரி குஞ்சும் பறந்துபோய்விடாதா என்று நினைத்தான். அவன் மனசு கெடந்து பறந்து தவித்தது.

பந்தலுக்குள் நீர்மாலைப் பானைகளை இறக்கி வைத்தார்கள் வீட்டோர கோடியில் குழிதோண்டி, அதன் குறுக்காக நீளமான பெஞ்ச் ஒன்றை போட்டு, அதில் அம்பலத்தை வைத்து குளிப்பாட்டினார்கள்.

செல்லத்தொரையை முதலில், "தலைத்தண்ணி" ஊற்றுவதற்கு வரச் சொன்னார்கள். "அய்யா குஞ்சத் தொறந்து விடச் சொல்லுங்கய்யா. பாவமாக இருக்குய்யா", வாய்க்குள் சொல்லிக்கொண்டே பக்கத்தில் போய் நின்றான்.

"ம்...ம்.. நிக்காம சட்டுன்னு ஊத்து" என்று அவன் கையை இழுத்துப் பிடித்து தண்ணீர் ஊற்ற வைத்து அவனை விலக்கிவிட்டபடி, அடுத்தடுத்து எல்லோரும் மளமளன்னு ஊத்துங்கப்பா என்று மேல வீட்டுச் சுப்பையா சொன்னதும் மற்றவர்கள் தண்ணீர் ஊற்றினார்கள்.

அவர்கள் அய்யாவைச் சோடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார்கள்.

கவுத்திக்கிடந்த கோழிக்குஞ்சை நோக்கி ஓடினான் செல்லத்துரை. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். நார்ப்பெட்டியை மெதுவாகத் தூக்கினான்.

"டேய்... குஞ்ச தொறந்து கிறந்து விட்டுறாதடா... வாடா... இங்கிட்டு....", அதட்டினார் மேல வீட்டுச் சுப்பையா. பயந்து நடுங்கிப் போனான். ரொம்ப நேரமா வாசல்படியிலேயே நின்றான்.

"அய்யாவை கல்யாண அம்பலத்தை வாசலுக்குத் தூக்கி வந்து வைத்துச் சீதேவி வாங்கினார்கள். கொட்டகைக்கு வெளியே பூக்களால் சோடிச்சிருந்த பாடையைக் கொண்டு வந்து வைத்தார்கள்.

கோழிக்குஞ்சைப் பார்த்தான் செல்லத்துரை. றெக்கையை அடித்து. பறக்கத் துடித்து... மூடிக்கிடக்கும் பெட்டியோடு நகர்ந்து போய் கொண்டிருந்தது.

கனவில், ஓடினாலும்... பறந்தாலும்.. ஒருவித கனம் அழுத்துமே.. அதைவிட கனமாய், தான் இழுக்கப்படுவது போல... அமுக்கப்படுவது போல உணர்ந்தான். குஞ்சைதிறந்துவிட அவன் கைகள் பரபரத்தன. மனசு துடியாய்த் துடித்தது.

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக அவசரமாகவும் சடங்குக்காகவும் அம்பலத்தைச் சுற்றி வந்து மாரடித்தார்கள் பெண்கள்.

கோழிக்குஞ்சைப் பார்த்தான் செல்லத்துரை. றெக்கையை அடித்து... பெட்டியோடு நகர்ந்து கொண்டிருந்தது. "திறந்து விட்டு விடவேண்டும்" ஒருவேகம் அவனை உந்தித் தள்ள, பெட்டியை நோக்கி சென்றான். "இதுவேற.... சும்மா கெடக்காம" என்றபடி நகன்று போய் கொண்டிருக்கும் நார்ப்பெட்டியின் மேல் ஒரு செங்கல் கல்லைத் தூக்கி வைத்துவிட்டுப் போகும் செண்பகத்தை பார்த்ததும் நின்றுவிட்டான்.

படபடவென்று றெக்கையை அடிக்கும் சத்தம் கேட்டது. தான் துடிப்பதாய் உண்ர்ந்தான். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருக்க, அதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

"போதும்த்தா நிறுத்துங்க... ஏய்.. புடிங்கப்பா. புடிங்க... புடிங்க என்று மேலவீட்டுச் சுப்பையா சொன்னதுதான் தாமதம், படாரென்று நாலைந்து இளவட்டங்கள் மாரடித்தவர்களை விலக்கிவிட்டபடி அய்யாவை தூக்கிப் போய் பாடையில் வைத்தார்கள்.

எல்லாரும் ஒரே பரபரப்பாக இருந்தார்கள்.

வாசல்படியில் நின்று கொண்டிருந்த செல்லத்துரை ஓடிப்போய் கவுத்திக் கிடந்த நார்ப்பெட்டியைப் பார்த்தான். செங்கல் கீழே விழுந்து கிடந்தது. பெட்டியைத் திறந்தான். கோழிக்குஞ்சு இல்லை. அவனுக்கு தலைகால் புரியாத சந்தோசம். "எப்படியோ தப்பிச்சு போயிருச்சு இல்ல இந்த ஆளுங்க குழியில போட்டு கொன்டிருப்பாங்க.... நினைத்துக் கொண்டே நின்றவனை, "செல்லத்துரை என்ன இங்க நிக்கிற வாப்பா, வா,வா" என்று யாரோ கையை பிடித்து வேகமாய் இழுத்துக்கொண்டு போய் பாடையின் முன் நிறுத்திவிட்டார்கள்.

இளவட்டங்கள் பாடையைத் தூக்கி கொண்டு நடக்க, செல்லத்துரையும் சிலரும் முன்னே நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னுமாகச் சேர்ந்து நடந்தார்கள்.

யதார்த்தமாய்த் திரும்பினான் செல்லத்துரை. ஒரு நிமிடம் அவனுக்கு உயிர் போய்விட்டு வந்தது. தலை அறுபட்ட சேவலைப்போல் அவன் மனசு துடித்தது. அவனோட அந்த கோழிக்குஞ்சை பாடையில் ஒரு மூலையில் கட்டியிருந்தார்கள். பாடையின் அசைவுக்குத் தகுந்த மாதிரி குஞ்சும் கம்பில் முட்டி மோதி அலைந்து ஆடிக்கொண்டே வந்தது.

கோயிலைத் தாண்டி வந்து, நின்றபடியே பாடையை வலது பக்கமாய் திருப்பித்திருப்பி மூன்று முறை சுற்றினார்கள். கொள்ளிக்குடம் உடைத்தார்கள். பிணத்தின் முகம் வடக்குப் பார்த்து இருப்பது மாதிரி திருப்பிக் கொண்டு அப்படியே நடந்து போனார்கள். பிணம் திரும்பி வீடு பார்க்கக்கூடாது என்பார்கள். குலவை போடுகின்ற பெண்கள் தவிர மற்றபெண்கள் அந்த இடத்தோடு வீட்டிற்கு திரும்பிப் போனார்கள்.

பாடையைத் திருப்பித் திருப்பிச் சுற்றியதில், குஞ்சும் பாடைக்கம்பில் முட்டி மோதிக் கத்தியது. தான் சுக்குநூறாய் வெடித்துச் சிதறுவது மாதிரி நினைத்தான் செல்லத்துரை. அவனுக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது.

"சே... என்னது கொடுமையா இருக்கு இது... அய்யா இவுங்களுக்கு என்னெல்லாம் சொன்னரு... ஆனா.. இவுங்களப் பார்த்தா..." அவனுக்குள் என்னவோ செய்தது.

அவனால் நடக்க முடியவில்லை. "இங்க இருக்கிறவுங்கள விட நாம பெரிய ஆளா இருந்தா எல்லாரையும் அடிச்சு விழுத்தாட்டிட்டு குஞ்சக் காப்பாத்திறலாம்".. என்று நினைத்துக் கொண்டே நடந்தான். "டேய்... நடநட எட்டி நட, என்று பின்னால் வருபவர் சொல்லிக் கொண்டே வந்தார்.

பாடைக்கம்பைப் பிடித்து உலுப்பி, வழி நெடுகிலும் பூக்களை உதிர்த்து விட்டுக் கொண்டே நடந்தார்கள். நவதானியமும் காசும் சேர்த்து சூறை போட்டார்கள். பயறு பச்சைகள் சிதறி மண்ணில் விழுந்தன. குஞ்சு கம்பில் மோதி றெக்கையை விரித்துப் படபடவென்று அடித்துக் கதறி கொண்டே வந்தது.

அவர்கள் வண்டிப்பாதை வளைவு தாண்டித் திரும்பி, தார் ரோட்டில் ஏறி நடந்தார்கள். புதை குழிக்கும் இன்னும் தூரம் போகவேண்டும். அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள்.

செல்லத்துரையின் மனசு திக்கென்று ஆனது. குஞ்சின் சத்தம் கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தான். கண்களை மூடி... றெக்கையை விரித்து... தலைகீழாய் தொங்கியபடி ஆடிக்கொண்டு வந்தது.

அவர்கள் எல்லாரும் குழி தோண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

பாடையை உடனே இறக்கி கீழே வைத்து விடாமல், குழிக்கு நேரே கொண்டு போவதும் எடுப்பதுமாக "ஏமாத்து" சடங்கை மூன்று முறை செய்துவிட்டு, பாடையை இறக்கி கீழே வைத்தார்கள். ஏமாத்துவதால் தன்னைப் புதைக்க வரவில்லை என "பிணம்" நினைக்குமாம்.

செல்லத்துரைக்கு மொட்டை அடித்து கூட்டி வந்து வாய்க்கரிசி போடச் சொன்னார்கள். பாடையின் பக்கத்தில் வந்தான். குஞ்சின் றெக்கை நுனியை பாடைக்கம்பு அழுத்திக் கொண்டிருந்தது. அது கண்களை மூடி.... வாய் லேசாய் திறந்திருக்க.. தொண்டைக் குழி ஏறி இறங்கிக் கொண்டிருக்க... கீச்...கீச்... மெதுவான சத்தம் போட்டபடி கிடந்தது.

செல்லத்துரைக்கு தன்னை யாரோ ரம்பத்தால அறுக்கிற மாதிரி உணர்ந்தான். அவன் "கடனாய்" வாய்க்கரிசி போட்டுவிட்டுத் தள்ளி வந்தான். மற்றவர்களும் வாய்க்கரிசி போட்டார்கள். "அஞ்சுக்காசு பத்துக்காசு போடாம சும்மா நோட்டாப் போடுங்க பரவாயில்லை... என்று வழக்கம் போல் சொல்லிக் கொண்டிருந்தான். மாத்து விரித்தவன். அங்கு நடக்கிற எதையும் பார்க்க முடியாமல்... பிடிக்காமல் நின்றான் செல்லத்துரை.

பெரிய வேட்டியை விரித்து நீளவாக்கில் சுருட்டி அம்பலத்தின் இடுப்பிற்கு கீழே தாங்கலாகக் கொடுத்து குழிக்குள் இறக்கினார்கள். ஒருவர் குழிக்கு உள்ளே இறங்கி அம்பலத்தின் முகம் வடக்குப் பார்த்து இருப்பது மாதிரி வைத்து விட்டு மேலே ஏறினார்.

அவர்கள் சொன்னதும் மன் அள்ளிப்போட்டான் செல்லத்துரை. மற்றவர்களும் அழுதபடியே வந்து மண் அள்ளிப் போட்டார்கள். முன்பு அய்யாவைப் பற்றி எப்படியெல்லாம் அசிங்கமாய்ப் பேசியவர்கள். இப்பொழுது அழுதுகொண்டு மண் அள்ளிப் போடுவதை ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் பார்த்தான்.

அவர்கள் மண் தள்ளி குழியை மூடுவதில் மும்முரமாய் இருந்தார்கள்.

பாடையின் ஓரம் சென்றான் செல்லத்துரை. அவனுக்குள் ஒரு வேகம் பாடைக் கம்பின் கீழ் மாட்டியிருந்த றெக்கையை எடுத்துவிட்டு குஞ்சைத் அவுத்துத் தூக்கினான். சத்தம் போட்டது. இடுப்பில் கட்டியிருந்த துண்டிற்குள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து சத்தம் போடவிடாமல் இறுக்கி பிடித்துக் கொண்டான்.

"எங்கப்பா தொண உசிரு.. அந்தக் குஞ்ச அவுத்து குழியில போடுங்கப்பா.. மேலவீட்டுச் சுப்பையா சொன்னதும், பதட்டத்துடன் "குஞ்சக் காணாங்கய்யா" என்றான் குழிதோண்டியவர்களின் ஒருத்தன்.

"க்காளி... ஈனப்பயலுக இந்தக் குஞ்சக் கொண்டு போயி பெரிய்ய சீமானா ஆக போறாங்களாக்கும்... திருட்டுத்.... வாய்க்குள் அசிங்கமாய்ச் சொல்லித் திட்டினார். மேலவீட்டுச் சுப்பையா.

"என்னய்யா இது எதுல வெளையாடுறதுன்னு வேணாம்... காரியம் எப்படிக்காரியம் நடக்குது. சின்னச்சாதிப் பயலுக அவுத்துக்கிட்டு போனலும் போயிருக்கும் அங்கிட்டு பாருங்கப்பா" கொதித்தார் ஒருத்தர். இரண்டு இளவட்டங்கள் கருவைக்காட்டுப்பக்கம் ஓடிச் சென்று பார்த்துவிட்டு திரும்பி வந்து, "காணாம்ப்பா" என்று கடுப்போடு சொல்லித்திட்ட ஆரம்பித்தார்கள்.

ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார்கள். குழி தோண்டியவர்கள் மண் தள்ளி மூடுவதை நிறுத்தியிருந்தார்கள். குழிக்குள் பிணம் சும்மா கிடந்தது.

இன்னும் ஒவ்வொருவரும் சத்தம் போட்டு அசிங்கமாகவும் அருவருப்பாகவும் பேசப்பேச, துண்டிற்குள் இருக்கும் குஞ்சைச் சத்தம் பாடவிடாமல் மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான் செல்லத்துரை.

"பெரிய குஞ்சா இருந்தாலும் காய்ச்சிக் குடிக்கலாம்... பச்சக்குஞ்ச என்னய்யா பண்ணப் போறாங்கெ.... தரித்திரியம் புடிச்ச பயலுக... சரிங்கய்யா நேரமாகுது.. கெழவங்குடுத்து வச்சது அவ்வளவுதான்... மணணத் தள்ளுங்கப்பா பொழுது போகுது. - கண்ணாடிக்காரர் சத்தம் போட்டதும் மண் தள்ளி மூடினார்கள்.

குழியை மூடி, மேலே பாடைப் பூக்குடையை எடுத்து நட்டு வைத்து, தேங்காய் பழம் உடைத்துச் சாமி கும்பிட்டு விட்டு, அவர்கள் திரும்பி பார்க்காமல் நடந்தார்கள். மூடிய குழியைத் தரும்பி பார்க்கக் கூடாதாம்.

சிறிது தூரம் தள்ளி நடந்து வந்து, ஓரிடத்தில் மாத்து விரித்தவனை ஒரு போர்வையை விரிக்கச் சொல்லி, அதன் மீது அவர்கள் எல்லாரும் உட்கார்ந்தார்கள். மேளக்காரர்கள், குழி வெட்டியவர்கள்... பாடைக்கட்டியவர்கள். குலவை போட்டவர்கள், மாத்துவிரித்தவன் என்று ஒவ்வொருவருக்கும் கூலியைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தான் செல்லத்துரை. "கூலிகூட சேத்துகுடுங்கய்யா" என்று குழி தோண்டியவன் கேட்க, "செஞ்ச வேலைக்கு இது போதும் புடி புடி. இந்தா என்று அவர்கள் கொடுக்க, அவன் வாங்க மறுக்க... அங்கு காசுக்காக சண்டை நடந்து கொண்டிருந்தது.

காப்பாற்றி விட்ட சந்தோசத்தில் கொஞ்சம் தள்ளிப்போய் ஒன்றுக்கு இருக்கிற பாவணையில் உட்கார்ந்து குஞ்சைப் பிடித்திருந்த கையில் இறுக்கத்தை தளர்த்தி, வெளியில் எடுத்துப் பார்த்தான். தலை கொணக் கென்று விழுந்தது. பதட்டத்தில் பயந்து குஞ்சை கீழே பொத்தென்று போட்டான். அவன் உடம்பெல்லாம் நடுங்கியது.

எல்லாரும் கோபமா அசிங்கமா திட்டவும்... தெரிஞ்சிடுமேன்னு சத்தம் போடவிடாம இறுக்கி பிடிச்சு.... மூச்சு முட்டி... அடப்பாவிகளா... கொன்னுட்டிங்களே... மனசுக்குள் திட்டினான் அய்யோ...னு சத்தம் போட்டு அழுதான். வாய் குளறி ஏதேதோ சொல்ப் புலம்பினான். கைகளை உதறி, காலைத் தூக்கித் தரையில் மிதித்துக் குதித்துக் கதறினான். அப்படியே குஞ்சின் பக்கத்திலேயே உட்கார்ந்தான். அவன் கண்ணீர் முன்னே கிடந்த குஞ்சின் தலையை நனைத்தது.

அவர்கள் எல்லாருக்கும், ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அவன் அழுவதைப் பார்த்தார்கள்.

"என்னடா இது செத்ததுல இருந்து பொதைக்கிற வரைக்கும் கூடத்தான் கல்லுளி மங்காம் மாதிரி திரிஞ்சான். இப்ப என்னடான்னா மூடுன குழியில உட்கார்ந்து இந்த அழு அழுகுறான். என்றார் மேலவீட்டு சுப்பையா.

"பாவம் பச்சப்பயதானப்பா அவனுக்கு என்னா வௌரம் தெரியும்....

அய்யாவ போட்டு மூடிட்டு போறாங்கன்னு நெனச்சிருக்கான்.... அழுகுறான். வௌரந் தெரிஞ்சவுங்களே கொஞ்ச நேரத்துக்கு முன்னால செஞ்சதத்தான் பாத்தமுல, என்றான் கோபமாய் கருவைக் காட்டுக்குள் குஞ்சைத் தேடிப் போனவர்களின் ஒருவன். சின்னதாய்ச் சலசலவென்று ஒரு பேச்சு நடந்தது.

"அட என்னப்பா பச்சப்பய இன்னும் கட்டத்தலத்துலேயே நின்று அழுதுகிட்டிருக்கான்... நீங்க ஆளாளுக்கு பேசிக்கிட்டிருக்கீங்க.... யாராவது போயி அவன கூட்டிட்டு வாங்கய்யா.... - கண்ணாடிக்ககாரர் சத்தம் போட்டதும், ஒருத்தர் அவனை கூப்பட சோம்பலாய் எழுந்தார்.

எல்லாரும் எழுந்து திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

மூடிய குழிக்கு ஓரமாக பக்கத்தில், கைகளால் அவசரமாய்த் தனியாய் ஒரு குழி பறித்தான் செல்லத்துரை. அதில் குஞ்சைப்போட்டு மூடினான். பக்கத்தில் கிடந்த ஒரு பூவை எடுத்து சொருகி வைத்தான். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. தன்னைக் கூப்பிட வருபவர் பக்கத்தில் வருவதற்குள் எழுந்துபோய் அவர்களோடு சேர்ந்துகொண்டான்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு பேச்சுக்களை, பேசிக்கொண்டே நடந்து போனார்கள். அவனோ, தார் ரோட்டை விட்டிறங்கி ஊருக்குள் நுழைகிற வளைவு வரையிலும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்து போனான்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link