சிறுகதைகள்


நாணயம்

கூடல்.காம்

ரொம்பவும் பவ்யமாகவும், அன்பின் நெகிழ்ச்சியோடும் ஒலித்த இந்த வார்த்தையில் ஒரு கணம் தன்னை இழந்துபோனான் கணேசன்.

வார்த்தைகள்தான் எவ்வளவு ஜீவிதமாய் உணரப்படுகின்றன? மெய்சிலிர்த்தது இவனுக்கு.

உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவமாய், பிரதிபிம்பமாய் ஒலித்த குரலில் ஏற்பட்ட குழைவு, அதன் சாட்சியாய் வெளிப்பட்ட நம்பிக்கையின்பாலான மரியாதை. அந்தக் கண்களின் யதார்த்தமான பார்வையும், மென்மையான உதட்டோரப் புன்னகையும், ஒட்டுமொத்த ஆதாரமாய்க் காசு வாங்க நீண்ட கையும் எல்லாமும் கண நேரம் புத்தியில் மோதி எகிறின.

ஒரு இருபது ரூபாய் நோட்டு, ஒரு இரண்டு ரூபாய் சில்லறை மற்றும் ஒரு ஐம்பது காசு.

"இருபத்திரெண்டு ஐம்பது... சரிதானா?" என்ற இவனுடைய கூட்டல் கணக்கிற்கு வந்த பதில்தான் அது.

பெயருக்குக் கூடத் தானும் கூட்டிப் பார்க்காமல் அப்படியென்ன ஒரு நம்பிக்கை? துணுக்குற்றுப்போனான் கணேசன்.

வாங்கிய கைகள் பணத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டன. முன்னே பரப்பப்பட்டிருந்த காய்கறிகளின் பக்கமாய் வட்டமாய் ஒரு சுற்று. அடியில் விரித்திருந்த சாக்கின் கீழே போனது காசு. அதுதான் கல்லாப் பெட்டி.

அந்த நியமத்தின் வியப்பிலிருந்து மீளாமலேயே நகர்ந்தான். நகர மறுத்தது மனசு.

சந்தைக்குள் நுழைந்ததும் முதல் கடை. வேறு எங்கும் பார்வையைக்கூட ஓட விடாமல் எடுத்த எடுப்பில் அங்கே போய் நின்றது, பேரம் எதுவும் பேசாமல் சொன்ன விலைக்கு வாங்கியது, அது சொத்தை இது சொள்ளை என்று சொல்லாமல் பொறுக்கி எடுத்துத் தராசில் போட்டதை நம்பிக்கையோடு ஏற்று பையில் வாங்கிக்கொண்டது, இவை போக பளீரென்ற வேட்டி; கசங்காத வெள்ளைச் சட்டை; படிய வாரிவிடப்பட்ட தலை; இந்த உருவ அமைப்பு கண்ணியத்தின் அடையாளமாய், நன்னடத்தையின் சான்றாய்...

எதுவோ ஒன்று ஆதாரம்! அதை அறுதியிட முடியவில்லைதான். ஆனாலும் எல்லாமும் அந்த "சரிங்கய்யா" என்ற ஒரு வார்த்தையில் அடங்கிப்போனது.

வயது, தோற்றம், வாங்கிய முறைமை, கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது இவனுக்கு.

ஆனாலும் பலமான அஸ்திவாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இதைச் செய்யலாமா? இப்படிச் செய்யலாமா?

சட்டென்று மனது ஏன் இந்தக் கள்ளத்தனத்திற்குள் புகுந்துகொண்டது. எதிராளியின் நம்பிக்கை தனக்கு பலமாகிப்போனது! அதுதானே? அப்படியானால் நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? படித்தவன், பண்புள்ளவனாகக் கருதப்படுபவன் இவைகளுக்கு ஆதாரமான தோற்றத்தையும் மிடுக்கையும் பலமாகக் கொண்டு தவறிழைக்கலாமா? அது களை. அதனை வெட்டி வீழ்த்துவதுதானே முறை!

முந்தா நாள் இரவு குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்குப் போய் அதையும் இதையுமாக மாற்றிச் சொல்லி, இருந்த கூட்டத்தில் என்னென்ன கொடுத்தோம் என்று சர்வர் மறந்துபோய், ஒரு உணவுப் பொருளுக்கான காசைச் சேர்க்காமல் பில் கொடுக்க, அதைக் கையில் வாங்கிய கணமே சட்டென்று ஒரு கள்ளத்தனம் வந்து புகுந்துகொண்டு "சொல்லாதே" என்றதே! அதுதானோ இது?

வெளியில் வந்து மனைவியிடமும் பையனிடமும் சொல்ல "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்காமல் விழுந்து விழுந்து சிரித்தார்களே! அந்த நிகழ்வு தந்த மெத்தனமோ?

ஒரு தவறு இன்னொரு தவறுக்குத் தூண்டுகிறது. "நீண்ட கை நிற்காது" என்பார்களே! சரிதானோ அது!

மனதிற்குள் கூட்டிப்பார்த்து "இருபத்திரெண்டு ஐம்பது" என்று சொல்ல அது கேட்டு "இதோ வந்துட்டான்யா..." என்றவாறே வேறொரு ஆளுக்குக் கால் நிறுத்துப் போட்டுக் கொண்டிருந்த அந்தக் கணத்தில்தானே சரியான கூட்டுத்தொகை "இருபத்திநாலு ஐம்பது" என்று தெரியவந்தது?

"படிச்சவுக, தப்பாவா சொல்லப் போறாக?" என்ற எண்ணத்தோடு "படிச்சவுக தப்புப் பண்ணமாட்டாக..." என்ற நம்பிக்கையும்தானே "சரிங்கய்யா" என்ற அந்த ஒரே வார்த்தையின் அடையாளம்.

ரூபாய் என்னவோ வெறும் இரண்டுதான். ஆனால் நாணயம்? அது லாபத்தின் அடையாளமல்லவா அவனுக்கு? சிந்திய வியர்வையின் பலனல்லவா? அதை மறைத்தால் துரோகமில்லையா?

தன் வயதுக்கு, தன் அனுபவத்திற்கு வாங்கும் கொள்ளை சம்பளத்திற்கு இது அழகா? வெளியே தெரிந்தால் எவ்வளவு கேவலம்? இது என்ன சில்லரைப் புத்தி? ஈனப்புத்தியல்லவா இது?

எல்லா மனிதனுக்குள்ளும் இப்படி ஏதேனும் ஒரு பலவீனம் இருக்குமோ? எல்லா மனிதர்களையும் ஏன் இழுக்கிறாய் இதற்கு? இது உனக்குண்டான பலவீனம். அல்ப பலவீனம்! அதை முதலில் அகற்று. உதறி எறி.

சே! எவ்வளவு சிந்தனைகளைக் கிளறிவிட்டுவிட்டது இந்த இரண்டு ரூபாய்? எப்படி மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது?

மனிதன் முதலில் தன்னை உணரவேண்டும். தன் இயல்பு அறிய வேண்டும். தன் அசல் தன்மையை எக்கணத்திலும் இழுக்கவே கூடாது.

எனக்கு முற்றிலும் பொருந்தாத இதை ஏன் நான் செய்தேன்? எது தூண்டியது என்னை? அல்ப சந்தோஷமா? அதுதான் நான் இது நாள் வரை அறியாத பலவீனமா?

சே! என்ன ஒரு கேவலம்? பெருத்த தவறு செய்துவிட்டேனே! என் இயல்பு இதுவல்லவே! கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான்.

மீண்டும் அந்தக் கடையை நோக்கித் திரும்பினான். அவளிடமிருக்கும் இன்னும் சில காய்களை வாங்க வேண்டும். அறியாததுபோல் கூடுதலாக இந்த விட்டுப்போன காசையும் சேர்த்துத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் சரி. குறைந்தபட்சம் மனசாட்சி அப்பொழுதுதான் நிம்மதியடையும் என்று நினைத்துக்கொண்டே கூட்டத்தை விலக்கி நடந்தான்.

நுழைவாயிலுக்கு அருகே முதலாவது கடை நோக்கி எட்டு வைத்தான். கடையை நெருங்கினான்.

"வாங்கய்யா...வாங்க" அந்தப் பெண்ணின் குரல் வரவேற்றது. "திரும்பிப் போகையிலே இந்த வழியாத்தான் வருவீங்கன்னு எடுத்து வச்சிருந்தேன். இந்த எலுமிச்சம் பழத்தை விட்டுட்டீங்களே? இந்தாங்க பிடிங்க" என்று சொல்லியவாறே எட்டி இவன் பைக்குள் பழத்தைப் போட்டுவிட்டுத் திரும்பி வேறொரு வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கினாள் அவள்.

குற்றமுள்ள நெஞ்சோடு மேலும் காய்களை வாங்கி, கணக்குத் தீர்க்க ஜடமாய் நின்றுகொண்டிருந்தான் கணேசன்!

நன்றி: கதிர்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link