சிறுகதைகள்


அம்மாவின் கனவு

கூடல்.காம்
இன்னும் அரைமணி நேரத்தில் விமானம் தரையை தொட்டுவிடும். அம்மாவை பார்க்கப் போகிறேன். மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்து இருக்கிறது. அவளை வாழ்த்துவதற்காக பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொண்டு லண்டனிலிருந்து சென்னை வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல சிங்கப்பூரிலிருந்து என் தம்பியும் பாம்பேயிலிருந்து அண்ணா தன் குடும்பத்தோடும் சென்னை வருகிறார்கள். அக்காவும் நாளை கலிபோர்னியாவிலிருந்து வருவாள்.

ஆனால் நாங்கள் வருவது அம்மாவிற்கு தெரியாது எல்லோருமாய் சித்தி வீட்டில் போய் இறங்குகிறோம்.

பூஜை அறையில் அம்மன் முகத்தில் இருக்குமே

அந்த சிரிப்பும் கண்களில் கனிவும் எங்கள் அம்மாவின் முகத்தில் எப்போதும் பார்க்கலாம். அவள் எடுத்துச் செய்யும் எந்த காரியத்திலும் மற்றவரை விட இருமடங்கு உழைப்பும் ஈடுபாடும் இருக்கும். யார் எப்போது எந்த நேரத்தில் வந்தாலும் சிரிப்பு மாறாது வரவேற்பதும், பசி அறிந்து விருந்தோம்புதலிலும் எங்கள் அம்மாவுக்கு நிகர் அவள் மட்டும்தான். எல்லா விதத்திலும் எங்களுக்கு மட்டும் அல்ல, எங்களை சுற்றியுள்ளவர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய், வழி காட்டியாய் இருப்பவள்.

எந்த ஒரு செயலும் நேரம் காலம் அறிந்து செய்தால் மிக சிறப்பாக செய்ய முடியும் என்று சொல்லுவாள்.

அதை செய்தும் காட்டிவிட்டாளே!!

அந்த காலத்தில் தனக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டதாலேயே, பாதியில் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து விட்டார்கள் என்பது அம்மாவின் பெரும் குறை. தன்னால் படிக்க முடியாமல் போனதாலோ என்னவோ எங்கள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்தாள். நல்ல மாணவர்களாக இருக்க எங்களை ஊக்குவித்தாள். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் மேலாக தானே தன் ஐம்பத்தெட்டு வயதில் சென்னை பல்கலை கழகத்தில் m.phill முதல் வகுப்பில் முடித்து இருக்கிறாள்.

அம்மாவை என்ன என்று சொல்ல!

சித்தி வீட்டில் எல்லோரும் குழுமியிருக்கிறோம். அம்மா வந்துவிடுவாள். சித்திக்கு பலகாரம் செய்ய துணைக்கு தான் வருவதாக அவள் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.

"கனகம்..." என்று சித்தியின் பெயரை அழைத்தபடியே உள்ளே வருகிறாள். அம்மா.

எங்களை எல்லாம் பார்த்தவுடன் அவள் முகத்தில் மலைப்பு, திகைப்பு, ஆனந்தம்

"டேய் குட்டிகளா" தன்னை நோக்கி வந்த அண்ணன் பிள்ளைகளை வாரி அணைக்கிறாள்.

மெல்ல வந்து நிற்கும் அப்பாவிடம் "என்னிடம் சொல்லவே இல்லையே" என்று கேட்கிறாள்

அண்ணி அம்மாவை அழைத்துப் போய் சோபாவில் உட்கார வைத்து விட்டு" எவ்வளவு பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள், உங்களை அதற்கு தகுந்த மாதிரி நாங்கள் பாராட்ட வேண்டாமா?", "அதனால்தான்" என்றாள்.

"இதில் சாதனை எங்கே இருக்கிறது?" "என் கணவர் துணையால் என் கனவை நிஜமாக்கி கொண்டேன். அவ்வளவுதான். இப்போதெல்லாம் எத்தனை பேர் படிக்கிறார்கள்."

"நீ கூட சொல்வாயே யு.எஸ்ஸில் எத்தனையோ பேர் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு படிக்க போவதாக" என்றாள் அக்காவை பார்த்து

"நீ படித்தது மட்டும் என்றால் அது இந்த காலத்தில் சாதாரணமான விஷயம்தான். ஆனால் படிக்கவேண்டும் என்ற உன் ஆசையை அக்னி குஞ்சாய் இத்தனை வருடம் காப்பாற்றி வந்தாயே அது தான் அம்மா உன் சாதனை" என்றான் தம்பி

"பாட்டி நானும் உன்னை மாதிரி நிறைய படிக்கப்போகிறேன் என்றாள் அண்ணன் மகள்" அம்மா அவளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

"நீ படித்தது பெரிசில்லை அணு, ஆனால் குழந்தைகள் வளர்ந்து செட்டிலாகும் வரை காத்திருந்து பின் குறிக்கோளை மறவாமல் கருமமே கண்ணாய் படித்து முதல் வகுப்பில் தேறினாய் பார் அதில் தான் எனக்கு பெருமை" இது அப்பா.

"என்னவோ பெரிதாய் படித்து விட்டேன் என்று சொல்கிறீர்களே இனி அதை வைத்து நான் என்ன கோட்டையா பிடிக்கப் போகிறேன்? அம்மா கேட்டாள்

"இல்லை அம்மா இனிமேல் தான் நீ நிறைய செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நீ கதை எழுது. எங்களுக்கெல்லாம் சின்ன வயதில் சொல்வாயே அது போல, அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையும் ஊக்கமும் தருவது போல நீ எழுது. எங்கள் வாழ்க்கையை வளமாக்கியது போல இன்னும் பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு நீ வழி காட்டியாய் இரு" என்றேன் நான் அவள் முன் மண்டியிட்டபடி

"நீயே ஒரு குழந்தைகளுக்காய் பத்திரிக்கை நிறுவனம் நடத்த வேண்டிய முதலீட்டை நாங்கள் எல்லோரும் சேர்ந்து போடப் போகிறோம். அதுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து உனக்கு தரும் பரிசு, எங்கள் தெய்வமாகிய உனக்கு எங்களின் சிறு காணிக்கை" என்றான் அண்ணன்.

"அம்மா எங்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்திருக்கிறாய். உன்னை பார்த்து தான் நாங்களும் தாய்மை என்ற பதவிக்கு பெருமை சேர்க்கிறோம். நீ இவ்வளவு ஆர்வத்தோடு படித்து பட்டம் பெற்றிருக்கிறாய் என்று நினைக்கும்போது எவ்வளவு பெருமையாய் இருக்கிறது. தெரியுமா? உன்னுடைய கனவுகளில் பங்கெடுத்துக் கொள்ள எங்களுக்கும் ஆசையாய் உள்ளது" என்றேன் நான்

அம்மா கண்களில் கண்ணீருடன் கனவும் மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

"எனக்கும் நமது தேச தலைவர்கள், விஞ்ஞானிகளின் குழந்தை பருவம் வாழ்க்கை வரலாறு பற்றி சிறுவர்களுக்கு ஏற்றார் போல் கதையாக எழுத வேண்டும் என்று ஆசைதான் அதை வேண்டுமானால் முதலில் செய்யலாம்" என்று சொன்னாள்

கனவுகளை நிஜமாக்குவதில் அம்மாவிற்கு நிகர் யாரும் இல்லை!

நன்றி: நிலாச்சாரல்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link