சிறுகதைகள்


மகள்

கூடல்.காம்
சுமாவின் பள்ளி வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை போல இன்னும் சில பெண்மணிகளும் நின்று கொண்டிருந்தனர். இன்னும் பத்து நிமிடங்களில் வாசலில் உள்ள கூர்க்கா கேட்டை திறந்து விடுவான் நாங்கள் உள்ளே போய் அவரவர் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதான். மதுரை வெயில் மண்டையை பிளக்கிறது. வீட்டிலிருந்து நடந்த வேகத்தில் வேர்வை கசகசக்கிறது. புடவை முந்தானையை எடுத்து முகத்தை துடைத்தபடி பார்வையை சுற்ற விடுகிறேன். பிள்ளைகளை கூட்டிச் செல்லும் ஆட்டோகாரர்களும் ரிக்ஷாகாரர்களும் பள்ளி வாசலில் கூட்டம் போட துவங்கிவிட்டனர். சில பணக்கார குழந்தைகளின் கார்களும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டன.

அடுத்த வாரத்தில் துவங்க இருக்கும் அரையாண்டு தேர்வு பற்றி பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், ரிக்ஷாகாரர்களும் ஆட்டோகாரர்களும் வரப்போகும் அரசியல் கட்சியின் ஊர்வலத்தால் பாதை மாற்றப்பட்டதை பற்றி பேசிக் கொண்டிருக்க ஒரு சின்ன மாருதி மெதுவாய் வந்து பள்ளியின் முன்னே வந்து நின்றது. இதுவரை பார்த்திராத காராய் இருந்ததாலோ என்னவோ எல்லோருடைய பார்வையும் அதன் மேல் விழுந்தது. காரில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு இருபத்து நான்கு இல்லை இருபத்தைந்து வயதுதான் இருக்கும். அழகாய் சிரித்தபடி என் பக்கத்தில் வந்து நின்றாள். கச்சிதமாய் உடை அணிந்து இருந்தாள். நானும் ஒரு அறிமுகப் புன்னகையை உதிர்த்தேன். இது யாருடைய தாய்? என மனதுக்குள் நானே விடைதேடுகிறேன்.

"உங்கள் பெண் எந்த வகுப்பில் படிக்கிறாள்?"

ஒரு வினாடி குழப்பத்தோடு பார்த்தவள் முகம் மலர, "என் சின்ன குட்டி kindergarten படிக்கிறாள். தலை முடி சுருட்டையாய் இருக்கும். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். சிரித்தால் கூட அவளுடைய குண்டு கன்னத்தில் அழகாய் குழிவிழுமே", என்று அடையாளம் சொன்னாள்.

எத்தனை குழந்தைகளை நான் தினம் பார்க்கிறேன். என் மகள் சுமாவை தவிர மற்ற குழந்தைகளை நான் அப்படி கவனித்து பார்த்ததில்லை. என் மகளும் kindergarten தான் ஆனால் இந்த பெண்ணையோ அவளது குழந்தையையோ எனக்கு ஞாபகம் வரவில்லை.

"என் பெண் கூட kindergarten தான் படிக்கிறாள். உங்கள் பெண்ணின் பெயர் என்ன? சுமாவிற்கு தெரிந்து இருக்கும்," என்று நான் தொடர்ந்தேன்.

"எங்கள் சின்ன குட்டி பெயர் ப்ரிதி. எங்கள் ப்ரிதி ரொம்ப கலகலப்பாக பேசுவாள். அதனால் ப்ரிதி என்றால் எல்லாருக்கும் நன்றாக தெரியும். அவ்வளவு அழகாக abc எழுதுவாள். ப்ரிதி எப்போதும் என் கழுத்தை கட்டிகொண்டுதான் தூங்குவாள். ப்ரிதி ரைம்ஸ் சொல்ல கேட்பது என்றால் அவள் பாட்டிக்கு ரொம்ப பிடிக்கும். ப்ரிதி சொன்னாள் என்று அவள் அப்பா கூட சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டார்", என்று புன்னகை மாறாமல் தன் மகள் ப்ரிதியின் பெருமையை தொடர, நான் அந்த பெண்ணை எடை போட ஆரம்பித்தேன்.

என்னைவிட இரண்டு வயது சின்னவளாக இருப்பாள் போல, ஆனாலும் தன் குழந்தையை பற்றி எவ்வளவு பெருமை. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான் போலும். இவள் ஒன்றும் காக்கை போல தெரியவில்லைதான். எத்தனை நேர்த்தியாய் புடவை கட்டியிருக்கிறாள். இதே காபி கொட்டை கலரில் பிங்க் பார்டர் காட்டன் புடவை நான் கட்டியிருந்தால் வேர்வையில் கசங்கி சுருங்கி போய் இருக்கும். எவ்வளவு எளிமையாக ஒரு முத்துமாலை அவள் புன்னகைக்கு துணை போகிறது. இவ்வளவு அழகாய் காரை தானே ஓட்டி வந்து விட்டாள் நானும்தான் என்னுடைய ஸ்கூட்டியை ஓட்டாமல் பயந்து கொண்டு நடந்து வருகிறேன் பைத்தியக்காரி மாதிரி, என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.

பக்கத்தில் நிற்கும் பெண்களின் பார்வையில் ஏதோ வித்தியாசம் என்னை நெருட கவனத்தை அந்த பெண்மேல் திருப்புகிறேன்.

"உங்கள் பெயர் என்ன?"

"என் பெயர் தருணா".

"உங்களை இதற்கு முன் பார்த்ததில்லையே?

"ப்ரிதியை அழைக்க டிரைவரை அனுப்புவீர்களோ". என்று கேட்கிறேன்.

"நீங்களே வந்திருப்பதை பார்த்தால் ப்ரிதிக்கு இன்று சந்தோஷம் தான்" அவளை பேச தூண்டுகிறேன். அவள் எதுவும் பேசாமல் தொலைவில் பார்க்கிறாள். கூர்க்கா பள்ளியின் கேட்டை திறக்க வருவது தெரிய அனைவரும் கேட்டை நோக்கி நகருகிறோம்.

"சுமியிடம் சொல்கிறேன், நீங்கள் ப்ரிதியை எங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்", என்று தருணாவின் கவனத்தை கவர முற்படுகிறேன். அவள் பார்வையோ தூரத்திலேயே நின்றது.

தோளை தொட்டு அவள் கவனத்தை கலைக்க முயன்றேன், வாருங்கள் தருணா கதவு திறந்து விட்டார்கள். நம் குழந்தைகளை கூப்பிட போவோம். அவள் பொம்மை போல நகர்ந்தாள். நான் வேகமாக உள்ளே நடந்தேன்.

நான் சுமியை கூட்டி கொண்டு வெளியே வர அந்த தருணா, நான் விட்டு சென்ற இடத்திலேயே புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தாள். அத்தனை பெருமை பேசிய தன் ப்ரிதியை அழைக்க பள்ளியின் உள்ளே கூட போகாமல் இருப்பது ஏன்?

இன்னொரு கார் வேகமாக வந்து எங்கள் பக்கத்தில் நின்றது. பரபரப்பாக இறங்கினான் ஒரு இளைஞன். தருணாவின் கணவன் போல, அலுவலகத்திலிருந்து நேராக வந்திருக்கிறான் என்று அவன் உடையை பார்த்தவுடன் தெரிந்தது. தருணா என்று அழைத்தபடி அவளை நெருங்கினான்.

"உன்னை எங்கே எல்லாம் தேடுவது", என்று கோபத்தோடு அவளிடம் வர, அவளும் அவனிடம் திரும்பி, "நம்முடைய ப்ரிதி ஸ்கூல் முடிந்துவிட்டது. ஆனால் அவளை காணவில்லையே", என்று ஏக்கத்தோடு சொன்னாள்.

அவனுடைய கோபம் சட்டென்று குறைய "ப்ரிதி வீட்டில் இருக்கிறாள் தருணா", என்றான் அவன்.

அது எப்படி சாத்தியம் பெண்கள் இருவரும் குழப்பத்தோடு அவனை பார்க்கிறோம், "அம்மா அவளை கோவிலுக்கு கூட்டி கொண்டு போய் விட்டு அவளே வீட்டுக்கும் அழைத்து வந்துவிட்டாள்". என்றபடி அவளை அணைத்தபடி தன் காரில் ஏற்றிகொண்டு அவனது டிரைவரை விட்டு அவளது காரை எடுத்து வர சொன்னான். பணக்கார குடும்பம் போல. இத்தனை நாள் டிரைவர் வந்து குழைந்தையை கூட்டி சென்றதனால் நான் இந்த பெண்ணை பார்த்ததில்லை. என் கேள்விக்கு நானே விடை கண்டுபிடிக்கிறேன்.

"Thank you verymuch", என்று என்னிடம் வந்து சொன்ன அவள் கணவன் காரில் ஏறி சென்று விட்டான். ஒருவித திகைப்போடு நான் சுற்றிலும் பார்க்கிறேன். பள்ளிக்கு வெளியே இருந்த கூட்டம் கரைந்துவிட்டது. பள்ளியின் கூர்க்கா மட்டும் அருகில் வருகிறான்.

"அந்த பொண்ணுக்கு புத்தி பேதலிச்சு போயிடுச்சு அம்மா போன வருஷம் நம்ம ஸ்கூலிலே குழந்தையை சேர்கிறதுக்கு வரும்போது ஆக்சிடெண்ட் ஆகிப் போச்சு. குழந்தை அப்பவே........ என் முகத்தை பார்த்து விட்டு சொல்ல வந்ததை முடிக்காமல் இந்த பொண்ணு தான் வண்டி ஓட்டுச்சு. போனவருஷம் பூரா அடிக்கடி இப்படி வந்து நிக்கும் பாவம்". என்றான்.

மனம் கனக்க சுமியின் கைகளை இறுக்க பிடித்தபடி நான் வீடு நோக்கி நடக்கிறேன்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link