சிறுகதைகள்


நனைந்த நதி

கூடல்.காம்
தெளிந்த எனக்குள்ளிருந்த மீன்களும் கற்களும் அடிப்பரப்பும் தெரிய ஓடிக்கொண்டிருந்தேன். எனக்குள் எத்தனை வேர்கள் தாங்கள் புதைந்த கதை பேசிப் புலம்பிக் கொண்டிருக்க, மீனழுத கண்ணீர் மட்டுமல்லாது வேர்கள் அழுத கண்ணீரும் என்னுள். இலைகளும் பூக்களும் சங்கடங்கள் அறியாது சலசலத்தபடி பேரோசையாக என்காதுகளினுள். சலிக்காது ஓடி வந்த நான் அவர்கள் நின்ற இடத்தில் மடங்கி, திரும்பி, பள்ளத்துள் வீழ்ந்து, நுரை நுரைக்க ஓடிக்கொண்டிருக்க,

சில்லிட்ட நீருக்குள் கால் வைக்க யோசனையுடன் கைகளிலிருந்த துணிமணிகளை ஈரம் படாத பாறைதனில் வைத்து விட்டு நீருக்குள் எத்தனை ஆடினாலும் துளிகள் தெளித்து நனையாது இடமென்று வைத்தாள் ஒருத்தி.

உயர்ந்திருந்த மலைகள் மறைப்புச் சுவராய் இருக்க,

"இன்றைக்கு வாரநாள் அதனால் ஆள் யாருமில்லை, ஞாயிறுன்னா ஒரு ஆள் குளிச்ச தண்ணியிலதான் அடுத்த ஆள் குளிக்கணும்"

பேசியபடி என்னுள் தன் கால்கள் நனைய ஆமர்ந்தாள். காப்பி மணம் வீசும் மண். நீரில் மெல்லக் கலந்து கால் வெளீரிட ஆரம்பிக்க சூரியன் வந்து மெல்ல எட்டிப் பார்த்தான். சூரிய ஒளியில் வெள்ளிக் கொலுசை மிஞ்சி அவள் கால்கள் மின்ன, கண்கள் கூசி சூரியன் மறைந்தான் மேகத்திற்குள்.

இரண்டு பேரின் சிந்தனையும் என்னிலும் வேகமாய்ச் சுழித்து ஓடிக் கொண்டிருக்க, அவர்கள் குளிக்க வரவில்லை என்னில் குளிக்கச் சாக்கிட்டு வந்திருக்கிறார்கள். புரிய என் காதுகள் கூர்மையானது. அவர்களின் சிந்தனையின் உரத்த சப்தம் என் நீரோட்டத்தின் சப்தத்தையும் மிஞ்சிவிட,

"விறு விறுன்னு இறங்கிட்டோம். திரும்பப் போகையிலே ஏத்தத்திலே ஏறிடுவோமா?" கேட்ட அவள் பார்வை மலையுச்சி சென்று நின்றது

முகத்தில் ஒவ்வொரு வியர்வைத் துளியும் சிரிப்பதாய் கூடவே கொஞ்சம் வெட்கமும் பட்டதாய் தெரிய... இருக்கும்

இவள் பேச்சை ஆரம்பிப்பதே போகிற வழியைப் பற்றிய சிந்தனையாய் இல்லை. அதுக்குள்ள போளிக்குள்ள வைச்ச பூரணமா அவ மனசில ஏதோ ஒரு விசயம் தித்துச்சுகிட்டே இருக்கிறது நல்லாத் தெரிஞ்சது.

என் கரையில் எத்தனை இரகசியங்கள் அரங்கேற்றக் கேட்டிருக்கேன். தனிமை நாடி வந்து என்னுள்ளே அழுது மனப்பாரம் விட்டுப் போகிறவர்கள்.

தனிமை தேடி வந்து தோழன் அல்லது தோழியரிடையே தனிமை தொலைத்து, மனப்பாரம் ஆளுக்குக் கொஞ்சமாய் சுமந்து போகிற இவர்கள் இரண்டாம் ரகம்.

பெரிய கதை அரங்கேறப் போவது நிஜமென்று தண்ணீரில் கோலம் எழுதிய அவள் கால் விரல்கள் சொல்ல படபடக்கும் நெஞ்சோடு நான் நெருங்க, என் சலசலப்பு எனக்கே எரிச்சலாய்...

கெண்டங்கால் நனைத்த நீர் இப்போது முழங்கால் வரை ஏறிவிட்டிருந்தது. உடைகள் மாற்றும் எண்ணம் மறந்து சேலையோடு இறங்கியிருந்தாள்.

இன்னொருத்தி அவளிடமிருந்து ஏதோ எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, தூரத்துப் பறவைகள் ஒலி அவள் மனதைக் கலைத்திருக்க வேண்டும். வெறுப்போடு நிமிர்ந்து எதிர்த்திருந்தவளின் முகம் பார்க்கவும் மீண்டும் எனக்குள் புதைத்தாள் பார்வையை

"ஏத்தமா இருந்தாலும் வீடு போய்ச் சேரணும்ல காட்டுக்குள்ள நிக்கவா முடியும் உன்னை மாதிரி?"

இடைநிறுத்தி அவள் முகபாவனைகளில் தனை ஊன்றினாள். மௌன இடைவெளி.

தொடர்ந்து அடுத்த கேள்வி.

"சொல்ல வந்ததை சொல்லு தீபா! ஏன் ஹாஸ்டல்ல எழுதி வைத்திருந்த எல்லாக் கவிதையையும் கிழிச்சுப் போட்டே?"

அங்கேயே கேக்கணும்னு நினைப்பு. நீ தான் எல்லார் முன்னாலயும் மனசைத் திறக்க மாட்டியேன்னு காத்திருந்தேன். "சமயம் கிடைக்கட்டு முன்னு". சொல்லி விட்டு அவள் முகம் பார்க்க அவள் மனக்கதவு எந்நேரமும் திறக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில்,

"அந்தக் கவிதைகள் உனக்கு பிடிச்சிருந்ததா செல்வி?"

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டு இவளும் திருப்பி ஒரு கேள்வி கேட்கிறாளே? வித்தியாசமா இருந்தது.

அவளது முக பாவங்கள் உணர்வுகளை ஒளித்துக் கொள்ள பிரயத்தனம் செய்யறாள்னு பட்டது.

"பிடிச்சிருந்ததே, ரொம்ப! ஏன் உனக்குப்பிடிக்கலையா?"

சிரித்துக்கொண்டேன். இரண்டு பேரில் யாராவது ஒருத்தராவது பதில் சொல்லுவாங்களான்னு தெரிய ஆர்வம் பிறந்தது. அவர்கள் அருகில் நெருங்கி ஓடத் துவங்கினேன்.

இரண்டு பேரும் கேள்விக்குக் கேள்வியையே கேட்கிறாங்களா? இல்லை அதில்தான் விடை இருக்கா? பெண்களே புதிர்தானா? ஆனால் அவர்களுக்கிடையில் புதிர்கள் இல்லாமல் இருப்பதே ஒரு புதிராய்..

இப்போ இருவர் மனமும் நெருங்கியிருக்க வேண்டும்.

"பிடிக்கலை"

நல்ல வேலை முதல் முறையா பதில் வந்ததே,

"தெரியலை"

தொடர்ந்து வந்த பதிலில் நான் நிலை குலைந்தேன்.

"அப்போ யாரைப்பிடிச்சிருக்கு?"

- இது இன்னுமொரு கேள்வி.

பொட்டில் அடித்த கேள்வியில் அவள் விதிர்த்து நிற்க,

"சொல்லு தீபா, ஏதோ நடந்திருக்கு? கேள்வியின் சூட்டில் அவள் மனம் உருகிக் கரைந்து நீரோட்டத்திற்குப் போட்டியாக ஓட ஆரம்பித்தது.

முகிழ்ந்த பூக்கள் கிளையிலிருந்து அவிழ்ந்து விழுதலாய்க் கொட்ட, அவள் தோழியோடு நானும் அந்த உணர்வுகளில் சொட்டச்சொட்ட அடித்துக் கொட்டிய பூமியில் நிற்காதோடி கடைசித் துளிகள் விழுதலை உறிஞ்சும் மண்ணாய் நடந்த நிகழ்வுகளை விட அவள் உணர்ந்ததை உள்வாங்க முயற்சித்த தோழியின் இதழில் புன்னகை,

"சரி அதற்கு ஏன் நீ எழுதியவற்றைக் கிழிச்சே"

பதில் சொல்லுவதற்கு முன் எனக்குள் முழுக்குப் போட்டாள். காதல் உணர்வில் நனைந்த அவள் என்னுள் நனைந்தது எனக்கு இனித்தது.

இப்போ கருநதிகள் சில நெளிந்து கொண்டிருக்கின்றன. எனக்குப் போட்டியாக, அவள் முகத்தில் வீழ்ந்த முடிகளை ஒதுக்கியபடி, எனக்குள் ஓடும் மீன்களைப் பிடிக்க முயற்சித்தலாய் பாவனை காட்டியபடி,

"இதுவரை இருந்த கவிதைகளில் இருந்த காதல் பொய்யாத் தோணிச்சு செல்வி. எதையோ அதிகப்படியா இல்லை சரியான விதத்துல சொல்லலியோன்னு கூடத் தோணுச்சு"

"சரி பொய்யை கிழிச்சுட்ட நிஜத்தை என்ன செய்யப் போற?"

மெல்லத் தன் நினைப்பு உதறி யதார்த்தத்திற்கு வந்தாள்.

"ஆமாம். நிஜத்தை என்னுள் பொத்தி வைக்கப் போகிறேன் பொக்கிசமா. அது நிச்சயம் எனக்குள் புதைந்து வைரமாய் ஒரு நாள் வெளி வரும்"

"வைரம் உன்னை அறுத்து விடாதா?"

"இல்லை செல்வி. அறுக்காது. எந்த வைரம் மண்ணை அறுத்திருக்கு?"

"வீட்டில் உன் மனசு பற்றி பேசணுமே"

"எதுக்குப் பேசணும் செல்வி.

என் உணர்வு மனசு சம்பந்தப்பட்டது திருமணம் ஒரு படி கூடுதலாய் உடலும் சம்பந்தப்பட்டது. காதலை என்னால் மனசு சம்பந்தப்பட்ட விசயமா மட்டுந்தான் பார்க்க முடியுது. திருமணம் பலமனங்கள் சந்தோசப்பட வேண்டிய நிகழ்வும் கூட. என் மனசை கூறி எல்லாரையும் எப்படி நான் கரைக்க செல்வி?"

"அப்போ மறந்திடப் போறியா?"

அழுத்தத்தில் என்னுள் மறுபடி மூழ்கினாள்.

தெளிவு அவள் முகத்தில் மட்டுமல்லாது அவள் மனதிலும் அழுத்தமாக, நான்தான் குழம்பியபடி அவள் மூழ்கியதாலா, பேசியதாலா என்று புரியாது...

"எதுக்காக மறக்கணும்? எனக்குள் இது புதுவிதமான உணர்வு செல்வி அவ்வளவே!

அந்த உணர்வுகளுக்காக என் உடலும் அவனிடமே பகிர்ந்துகிடனும்கிற எண்ணம்.

ம்ம்ஹூம் அப்படி எண்ணமே வரலை. இதுதான் காதலா? தெரியாது.

இதுவரை நான் பார்த்த ஆண்கள் யாரும் என்னுள் செய்யாத மாற்றம் இவன் செய்தான். பெரியவளாகும் போது உடலில் ஏற்பட்ட இயற்கையான மாற்றம் போல இது மனதில் ஏற்பட்ட புது எதிர்பாராத, யாரும் வலியச் செய்யாத மாற்றம். அந்த மாற்றங்களின் சந்தோசங்களை, நிஜங்களை அனுபவிக்கிறேன். அந்த சந்தோசம் தந்த அவன் மேல் ஒரு கூடுதல் பாசம், வெட்கம் எல்லாம் வருகிறது.

திருமணத்திற்கான விசயத்தில் அதனால் எனக்கான எண்ணம் என் பெற்றோரின் எண்ணத்திலும் குறுக்கிட விரும்பவில்லை"

சொன்ன விசயத்தில் செல்வி தெளிந்தாளா? அல்லது குழம்பினாளா? தெரியாது. எனக்கு புரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சதா புரியலையாங்கிற நினைப்பை விட இனம் புரியா சந்தோசம் என்னையும் நனைத்துக் கொண்டிருக்கிறது.

"கல்யாணத்திற்குப் பிறகு குற்ற உணர்வு வராதா?"

"எப்படி வரும் செல்வி? இயல்பின் யதார்த்தத்தில் யார் கையும் மிதித்துவிடாமல் நகர்ந்து கொண்டிருக்கிறேன் இந்த நதி போல் உலகம் மொத்தமும் நேசிக்கவும் நான் தயார்"

"அப்ப உன் வாழ்வில் காதலன் வேறு, கணவன் வேறு முரண்பாடு வராதா தீபா?"

"இல்லை செல்வி"

ஒரு பெண்ணின் வாழ்வின் பல விதமான ஆண்கள் கடந்து செல்கிறார்கள் நம்மை நேசிப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கன், ஆனால், நாமும் அப்பா, அண்ணன், மாணவர்கன், ஆசிரியர்கள் என்று எத்தனை ஆண்களை சந்தித்திருப்போம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று.

காரணகாரியம் ஏதுமில்லாது நமக்குள் ஓர் உணர்வு பிரவாகமெடுக்க வைக்கும், நட்பும் நேசமும் கொண்டு வந்து சேர்க்கும் முதல் நபர். நேசிப்பவர்கள், நேசிக்கப்படுபவர்கள் வரையறையிலிருந்து தனித்து நிற்பர்.

யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தையும், அழுத்தமும் தந்து போகிறவராகவும், அந்த நேசம், நதிக்குள் மிதந்து வரும் நந்தியாவட்டை மலராய், கால வெள்ளத்தில் கடந்து போனாலும் நகராமல் மனதில் நிற்கும் அந்த நேசமிகு வாசம் எல்லா நேசங்களையும் நேசிக்க, மதிக்க வைக்கும்"

"நிறைய பேசிட்டேனா செல்வி?"

"இல்லை தீபா நிறைய நேசிக்க ஆரம்பிச்சுட்ட"

முதலில் இருந்த குளிர் விட்டிருந்தது. நனையப் பழகிய உடல் அதிலேயே மூழ்கிக் கிடந்தது. எழும்ப மனமின்றி நான் உறைந்து போய் நீண்ட நேரமாயிருந்தது. தென்றல் வந்து வீச, காடு கொலுசும் வளையலுமணிந்த பெண்ணாய் மெல்லப் புரண்டு படுத்தது.

என் அமைதியை செல்வியும் சேர்ந்து கலைத்தாள்.

"அப்ப நீ சந்தோசப்படுறியா? கவலைப்படுறியா? கவிதைகளைக் கிழித்தாய் அது வருத்தத்தால் தானே?"

"இருக்கலாம். ஒரு வருத்தம் இருக்கு. இந்த சந்தோச உணர்வு தந்தவனிடம் அதை இயல்பாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம். அந்நிய ஆண்களிடம் பேசுவதே அநர்த்தமாய் நினைக்கும் அம்மா முன்னால் என் உணர்வுகள் பற்றி விவாதம் செய்து... நிச்சயம் முடியாது"

நீண்ட பெருமூச்சுடன் உதிர்த்தாள்.

காடு முழுவதும் கலையாது சிலையாய் நிற்க, என்னோடு சேர்ந்து மேகமும் மனம் கனக்க, இவள் சிந்தனைகளின் பாரம் தாங்காது மரங்களில் மோதி ஆனந்த நீர்த்துளிகள் சிந்த ஆரம்பிக்க,

"சரி கிளம்புவோம் செல்வி. காணோம்ன்னு தேடுவாங்க அம்மா"

"இரு! கடைசி வருடம் விடுமுறை முடிஞ்சி கல்லூரி தொடங்கியாச்சுன்னா வாழ்வு நம்மை நகர்த்திக் கொண்டே போகும் உணர்வுகளை சமுதாயத்தின் பழக்க வழக்கங்களோடு முரண்பட விடாது நகல்வோம் நாமும்"

முரண்பாடுகளின்றி அவ்வளவு எளிதாக நகன்று விட முடியுமா?

எனக்குள் எழுந்த கேள்வி அவர்களுக்குள்ளும் நிச்சயம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து எழுந்த அமைதியின் அழுத்தம் அதைச் சொல்லியது.

சொல்லி முடித்து மர மறைவுகளுக்கிடையே உடை மாற்றி, நனைந்த உருப்படிகளுடன் எனை விட்டு நகர, விழ ஆரம்பித்த தூறலிலும் அவளின் காதல் நினைவுகளிலும் நனைய என் பயணம் தொடர்ந்தேன்.

நனைந்திருந்த எனக்கும் குளிர் விட்டிருந்தது. மிதந்து வரும் நந்தியாவட்டையை நகர்த்தியபடி வாசத்தில் நனைந்தபடி போகிறது என் பயணம்.....

நன்றி: நனைந்த நதி

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link