சிறுகதைகள்


கருவறைக் கடன்

கூடல்.காம்
அம்மாவுடன் பேசி இரண்டு மாதங்களுக்கு மேலாயிற்று. ஏனோ அம்மாவின் நினைவு ஒரு மாதமாய் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நினைத்தவுடன் பட்டனைத் தட்டிப் பேசுகிற நிலை இருந்திருந்தால் நன்றாகத்தானிருந்திருக்கும். அமெரிக்காவில் கிடைக்கிற வசதிகளை நத்தம்பட்டியில் எதிர்பார்கக முடியாதுதான். ஆனாலும் அம்மாவுக்குத் தொலைபேசி இணைப்புக்கூட அமைத்துக் கொடுக்காததில் மனசு குறுகுறுக்கத்தான் செய்கிறது.

எத்தனை பணம் இருந்து என்ன! அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவில் ஒரு காரியம் ஆகவேண்டுமென்றால் எவ்வளவு மெனக்கெட வேண்டிஇருக்கிறது! எப்படியாவது என் சித்தப்பா மகன் பவுண்ராஜிடம் பேசி ஃபோனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று நூறாவது முறையாக நினைத்துக்கொண்டேன்.

அம்மா பாவம்தான். என் சின்ன வயசிலேயே இடி விழுந்து அப்பா இறந்து போக, அம்மா என்னை இட்லி விற்றுத்தான் படிக்க வைத்தாள். அவளுக்கு வாழ்க்கையிலிருக்கிற பிடிப்பு நான் மட்டும்தான். சிறு வயதிலிருந்தே நான் என்ன தவறு செய்தாலும் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.

மேற்படிப்புக்கு அமெரிக்கா செல்வதாய்ச் சொன்னபோது, "திரும்பி வந்துரணும்பா" என்று மட்டும் கேட்டுக் கொண்டாள். அதைச் செய்யாமல் போனதில் அம்மாவுக்கு வருத்தமா தெரியவில்லை. ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் தீபாவுடனும் ஒரு வயது கீர்த்தனாவுடனும் போய் நின்றபோது உடைந்துதான் போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதும் அம்மா என்னிடம் கோபத்தைக் காட்டவில்லைதான்.

ஒரு பேச்சுக்கு "அமெரிக்கா வந்துவிடேம்மா" என்று நான் அழைத்தபோது கூட நாசூக்காய் மறுத்துவிட்டாள். இரண்டு மூன்று வருடங்களுக்கொருமுறை சென்று பார்த்துவிட்டு வருவேன். சென்றமுறை சென்றிருந்தபோது "அடிக்கடி ஃபோன் செய்ப்பா" என்றபடியே வழியனுப்பி வைத்தாள். எங்கே முடிகிறது!

இன்று சனிக்கிழமை, இந்தியாவில் ஞாயிறு அதிகாலை என்று நினைவுக்குவர உடனே பவுண்ராஜிடம் பேசி அம்மாவுக்கு தொலைபேசி இணைப்புக்கு ஏற்பாடு செய்யும் உத்வேகத்தில் அவன் தொலைபேசி எண்ணைத் தேடலானேன்.

இரண்டாவது மகள் பாவனா ஸ்விம்மிங் க்ளாஸூக்கு நேரமாகிவிட்டதாகச் சிணுங்கி என் தேடலைக் கெடுத்தாள். அவளை விட்டுவிட்டுத் திரும்பி வந்து தேடலைத் தொடர்கையில் உடைக்காத அந்தக் கடிதம் கண்ணில் பட்டது. ஒரு மாதத்துக்கு முந்தைய முத்திரையுடன் கிறுக்கலாய் அம்மாவின் கையெழுத்து.

உச்சிக்கேறிய கோபத்தில் உச்சஸ்தாயியில் "ஏன் சொல்லலை?" என்றேன் தீபாவின் முகத்தின் முன் கடிதத்தை நீட்டி.

"உங்க டேபிள் மேலதான் வைத்தேன். நீங்க பார்க்கலைன்னா நான் பொறுப்பில்லை" என்றாள் சாவகாசமாய்.

குற்ற உணர்வோடு அம்மாவின் கடிதத்தைப் பிரித்தேன். இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தாள்: தம்பி,

ஆசீர்வாதம்.

உன்னையும் பிள்ளைகளையும் பார்க்கணும் போலிருக்கு. ஒரு முறை கடைசியாய் வந்துவிட்டுப் போனால் நன்றாக இருக்கும். போன் பண்ணு. சங்கர் வீட்டுல சொல்லி வச்சுருக்கேன். நம்பர் 83087.

அம்மா

"கடைசியாய்" என்கிற வார்த்தை கலங்கடித்தது. பொட்டிலறைந்தாற்போல் அம்மாவுக்கு வயசு எண்பதாகப் போவது உறைத்தது. உறைந்து நின்றேன்.

எட்டிப் பார்த்த மகன் பவன், "mom, dad is not ready yet" என்று அம்மாவிடம் புகார் செய்தான்.

"நீங்க போயிட்டு வாங்களேன். நான் வரலை" என்றேன்.

"ஏன்? ஹோம் சிக்காக்கும்?" என்றாள் தீபா கேலியாய்.

நான் பதில் சொல்லாமல் முறைத்தேன்.

"பவன், அவருக்கு அவர் அம்மாதான் முக்கியம். வா நாம போலாம்" என்று கொம்பு சீவினாள்.

விரைப்பாய் என் முன்னால் வந்து நின்று, "நான் செய்யற first clarinet performance உங்களுக்கு important இல்லையாப்பா? இல்லைன்னா நான் போகலை" என்றான். தீபாவின் வாரிசாயிற்றே!

"நீங்க முன்னால போங்க. பாட்டிக்கு ஃபோன் பண்ணிட்டுப் பின்னால வர்றேன்" என்ற என் கெஞ்சல் அவனின் முரட்டுப் பிடிவாதத்துக்கு முன் தோற்றுப்போனது.

மறுநாள் ஞாயிற்றுகிழமை கண்டிப்பாக அம்மாவை அழைக்கவேண்டும் என்ற வைராக்கியத்துடன் அரைமனதாய்க் கிளம்பினேன்.

நேர வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு மறுநாள் ஏழரைக்கே எழுந்து சங்கர் வீட்டை அழைத்தேன்.

"இட்லி பாட்டிக்கு நடக்க முடியல.. எப்படியும் மெது மெதுவா நடந்து கால்மணி நேரத்தில வந்துரும். நீங்க ஒரு அரைமணி நேரம் கழிச்சு கூப்பிடுறீங்களா?" எதிர்முனைச் செய்தியில் கண்கள் பனித்துப் போயின.

"Dad could u drop me at dance school?" மகள் பாவனா கேட்க, விட்டுவிட்டு வர 20 நிமிடம்தான் ஆகும் என்கிற தைரியத்தில் கிளம்பினேன். இறங்கும்போது, தயங்காமல் என் செல்போனைக் கையோடு எடுத்துக்கொண்டு போனாள் பாவனா.

"இதென்ன traffic இத்தனை மெதுவாய் நகர்கிறது" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே முற்றிலுமாய் நின்று போனது. யாரை சபிப்பது என்று தெரியாமல் அவஸ்தையாய்க் காத்திருந்தேன்.

"என்னத்துக்கு இந்த அமெரிக்க வாழ்க்கை! பெற்றவளை மூன்று வருடங்களாய்ப் பார்க்கக் கூடமுடியாமல், சரியாய் பேசக்கூட இயலாமல்..."

கல்லூரியில் படிக்கும் மூத்த மகள், பள்ளியில் படிக்கும் இரண்டு பிள்ளைகள், வேலைக்குப் போகும் மனைவி என்று திக்குக்கு ஒரு சுவராய் நின்று என்னைத் தனிமைப்படுத்தி விட்டதாய் ஒரு பிரமை. ஒருவேளை இந்த பிரமை கூட என் சுயநலத்தை மறைப்பதற்கோ என்கிற எண்ணமும் கூடவே எழுகிறது.

என்னைக் குத்திக் கிழிக்கும் இந்த எண்ணங்களிலிருந்து விடுபட எண்ணி சி.டி.யில் வழியும் புல்லாங்குழலில் மனசை இலயிக்க வைக்கப் பாடுபட்டேன்.

ஒருவழியாய் எல்லாம் சரியாகி வீட்டுக்கு வர ஒன்றரை மணி நேரமாகிப் போனது.

"அம்மா இருப்பாளா... கோபித்துக் கொண்டு திரும்பி இருப்பாளோ"

அவசரமாய் வீட்டுக்குள் சென்று கைத்தொலைபேசியைத் தேடினேன். கண்டு பிடிக்க முடியாததால்,

"பவன், ஃபோன் எங்கே?" என்றேன்.

"அம்மா" என்றான் ஒற்றை வார்த்தையில். தீபாவைக் கண்ணில் காணாததால்,

"எங்கடா" என்றேன்.

"பாத்ரூம்"

"பாத்ரூமா?"

"அம்மா குளிக்கப் போனப்போ கீர்த்தி அக்கா ஃபோன் பண்ணினா. ஏதோ அவசரமாம்"

5 நிமிடம் காத்திருந்த பின்னும் தீபா வெளியே வராததால் மெலிதாய் பாத்ரூம் கதவைத் தட்டி, "தீபா ஃபோன் வேணும்" என்றேன்.

"பேசிட்டிருக்கேன்" என்றாள் உள்ளிருந்தபடியே

இன்னும் 5 நிமிடங்கள் கழித்து திரும்பவும் தட்டினேன். தலையை வெளியே நீட்டி, "something important, OK?" என்றாள் கடுகடுப்பாய்.

நான் பொறுமையில்லாமல் உலவிக் கொண்டிருந்தேன். ஒருவழியாய் ஃபோன் கையில் கிடைக்கையில் மொத்தமாய் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.

"இட்லிப் பாடடி இவ்வளவு நேரம் இருந்துச்சி. நாங்க இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போறோம் அதான் போகச் சொல்லிட்டோம்" எனக்குச் சுளீரென வலித்தது.

என் மௌனத்தின் கனத்தை உணர்ந்து "நீங்க கொஞ்சம் சீக்கிரம் கூப்பிட்டிருக்கலாம்ல?" என்றது அந்தப் பெண். நான் பதில் சொல்லுமுன், "பாட்டி பாவம் அண்ணாச்சி. இந்நேரத்துக்கு நாய் தொந்தரவு அதிகமா இருக்கும். நீங்க இனிமே பகல்ல கூப்பிடுங்க"

"சரிம்மா" என்று ஃபோனை வைத்தேன். அவளுக்கிருக்கும் அக்கறைகூட எனக்கில்லையோ. என்னையறியாமல் கன்னத்தில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

"அம்மா மன்னிப்பாளா?"

தீபா என் மன ஓட்டத்தைப் படித்த மாதிரி, "உங்கம்மா உங்களை ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாங்க, கவலைப்படாதீங்க. கடவுளுக்கே உங்கள் மேல் கோபம் வந்தா கூட உங்கம்மாவுக்குக் கோபம் வராது" என்றாள்.

எனக்குத் தனிமை தேவையாய் இருந்தது. என் அறைக் கதவைச் சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

யாராவது என்னை நான்கு அறை அறைந்தால் தேவலாம் போலிருந்தது.

"என் பிள்ளைகளும் மனைவியும் அம்மாவைக் கவனிக்கவேண்டாம் என்று என்னைக் கட்டியா வைத்திருக்கிறார்கள்? எல்லாம் நானே ஏற்படுத்திக் கொண்ட நொண்டிச்சாக்குகள். "சூழ்நிலைக் கைதி" என்று இலகுவான ஒரு முத்திரை பதித்துக் கொண்டு அம்மாவை மிகவும் உதாசீனப்படுத்திவிட்டேன்" என்ற உண்மை பளீரென உறைத்தது.

மனசு ஆறுமட்டும் அழுதுவிட்டு அம்மாவைச் சென்று பார்ப்பதென முடிவெடுத்தேன். உலகமே இடிந்து விழுந்தாலும் அம்மாவுடன் ஒரு மாதமாவது இருந்து அவளை ஒரு நல்ல வசதியான முதியோர் இல்லமாய்ப் பார்த்து சேர்த்து விட்டு வரவேண்டும் என்று எண்ணியபடியே கண்ணயர்ந்தேன்.

அலுவலகத்தில் ஒருமாத விடுமுறை கண்டிப்பாய்த் தேவை அதுவும் அடுத்த மாதமே தேவை என்று அடம் பிடித்து அனுமதி பெற்று மற்ற ஆயத்தங்களைச் செய்யலானேன்.

புதன் கிழமை. மணி அதிகாலை இரண்டு. தொலைபேசி அழைத்தது. எரிச்சலாய் எடுத்து "ஹலோ" என்றேன்.

"அண்ணாச்சி, பவுண்ராஜ் பேசுறேன்" அவன் குரலைக் கேட்டதுமே எனக்குள் பதட்டம் வந்தது.

"என்னடா, அம்மாவுக்கு ஏதாவது?"

"பெத்தம்மை போயிருச்சு அண்ணாச்சி" என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

எனக்குத் தலையில் இடி இறங்கினாற்போலிருந்தது.

"ரெண்டு மூணு நாள் ஆயிருக்கும் போலிருக்கு அண்ணாச்சி. வாடை வர ஆரம்பிச்சிருச்சி. இப்பவே எடுத்தாத்தான் சரியா இருக்கும்"

"இதோ கிளம்பி வரேண்டா"

"நீங்க வர ரெண்டு நாளாவது ஆகும்ல அண்ணாச்சி? அது வரைக்கும் வச்சிருக்க முடியாதுல்ல".

"கொஞ்சம்..." என்று நான் ஆரம்பிக்குமுன் பவுண் வெடித்தான்.

"உசிரோட இருக்கும்போதே வந்து பார்க்கலை. செத்த பிறகா வரப்போறான்னு உறவுமுறையெல்லாம் சொல்றாக. அதுவும்சரிதான்.... அததுக்கு நெறைய சோலி வேற இருக்கு அண்ணாச்சி. நீங்க வருவீங்கன்னு நம்பி யாரும் உக்கார்ந்திருக்க முடியாது பாருங்க..."

"உங்க நம்பரைப் பிடிக்கறதுக்கே அரை நாள் ஆயிப்போச்சு. பெத்தம்மை சுருக்குப் பையில ஒரு ரெண்டாயிரம் கிட்ட வச்சிருந்துச்சு. அதை வச்சு ஒப்பேத்திருவேன். சரி அண்ணாச்சி, பில்லு ஏறுது. நான் வச்சுர்றேன்".

பதிலுக்குக் கூடக் காத்திராமல் பவுண் இணைப்பைத் துண்டித்தான்.

நான் உறைந்து நின்றேன். அழக்கூட முடியாமல் நெஞ்சு மிகப் பாரமாய் இருந்தது. இந்த பாரம் இந்த ஜென்மத்தில் குறையுமென்று தோன்றவில்லை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link