சிறுகதைகள்


மாற்றங்கள்

கூடல்.காம்
சாலை ஓரத்தில் வரிசையாக நடப்பட்டிருந்த பேரீட்சை மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள்... பெரிய பெரிய வேப்பங்காய்கள் போல... பச்சை நிறத்தில்... ஒன்றிரண்டு இளஞ்சிவப்பாய்... ஆசை ஆசையாய் கடித்தால்.... வ்வே... துவர்ப்பைப் போன்ற ஏதோ ஒரு சுவை. நாக்கெல்லாம் நமநமப்பது போல.... பிடிக்கவே இல்லை. வெயில் "சுள்"ளென்று கொளுத்திக்கொண்டிருந்தது. கண்ணாடி மட்டும் இல்லையென்றால் கண்ணை திறக்கவே முடியாது போல... ஹூம்.... நம்ம ஊருன்னா இப்படி இருக்குமா? நிம்மதியா வேலைக்குப் போனோமா வந்தோமான்னு இல்லாம.... என்ன வாழ்க்கை இது? நினைக்கவே ரொம்பவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது - வேலைக்காக இந்தியாவை விட்டு வரவேக்கூடாது என்று ஒரு காலத்தில் இருந்தவன், இங்கே வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது....?! யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல்...!

முதல் விடுமுறையின் போது, ஊருக்கு ஆவலுடன் சென்ற போது, மகன் ஓட்டமாய் ஓடி வந்து "அப்பா‘‘‘........" என்று ஆசையுடன் காலைக் கட்டிக்கொண்டது இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. முதன் முறையாக அவனைப் பிரிந்து இரண்டு மாதங்கள் அவனைக் காணாமல்... எத்தனைத் துன்பம் அது.

வருடக்கணக்கில் நாட்டுக்குப் போகாமல், போக வழியில்லாமல் வாடும் எத்தனையோ ஜீவன்களைக் கண்டு மனம் என்னவோ செய்கிறது. மறுபுறம் அவர்களை எல்லாம் பார்க்கையில் "நம்முடைய நிலைமை எவ்வளவோ மேல்" என்ற எண்ணமும் வரத்தான் செய்கிறது.

"அப்பா... அம்மா அடிக்கடி என்ன அடிக்கிறாப்பா...." "நான் வந்துட்டேன்ல குட்டி.... இனிமே நான் பாத்துக்கிறேன். அவள... இனி உன்னத் தொட்டா அவளுக்குத்தான் அடி... சரியா..?"

அழகான பூ... கண்களை விரித்து சிரிப்பது போல அவன் சிரிப்பதைப் பார்த்ததும்... அடடா... நாம் இனிமேல் இவனைப் பிரிந்து போகக்கூடாது.... என்ன நடந்தாலும் சரி.... மனதில் ஒரு போலி வைராக்கியம்.

"அப்பா... அப்பா... இனிமே நீதான் என்னை ஸ்கூல்லேயிருந்து கூட்டிட்டு வரணும்" "ஏண்டா.... பஸ்லேதானே வரே...?". "போப்பா..." செல்லமாய் அவன் சிணுங்கும் அந்த அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் கூட போதாது போல....

"பஸ்ஸீ எல்லா இடத்துலயும் நின்னு நின்னு வருதுப்பா... வீட்டுக்கு வர்றதுக்கே ரொம்ம்ம்ப நேரமாயிருதுப்பா...."

ஆரம்பப்பள்ளியில் படிக்கும் அவனது கஷ்டம் நன்றாகவே புலனாகிறது. முதலில் பணி செய்த இடத்தில் இருந்த பள்ளியில் நன்றாக படித்து வந்தான். அவனுக்கு அந்தப் பள்ளியை விட்டு வரவே விருப்பம் இல்லை. இங்கே வந்து சேர்ந்த பிறகு இந்தப் பள்ளிதான் சிறந்தது என்று ஆட்களைப் பிடித்து, சிபாரிசு செய்துதான் சேர்க்க வேண்டியிருந்தது. பள்ளி விட்டு, பேருந்தில் வந்து இறங்கிவீட்டுக்கு வரவே மாலை ஐந்து மணிக்கு மேலேயே ஆகிவிடுகிறது. சிற்றுண்டிக்குப் பின் வீட்டுப்பாடத்தைத் தொடங்கினால் இரவு உணவு நேரத்துக்குத்தான் ஓரளவுக்கு முடித்திருப்பான். சில நாட்கள் அடுத்த நாள் காலை மீண்டும் அந்த வேலை தொடரும். சாப்பிடும் போதே அவனுக்கு கண்கள் சொக்கி விடும்.

அப்படியே தூக்கம். காலை எழுந்ததும் காபி, பல்விளக்கி, குளித்து மீண்டும் படிப்பு, காலைச்சிற்றுண்டி, அவசரமாய் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க ஓட்டம், மதிய உணவும் பள்ளியிலேதான்...!

இந்தக் கல்விச்சுமையை கண்டால் ஒரு புறம் எரிச்சல்... மறுபுறம் பிற்காலத்தில் அவனுக்குத்தானே நல்லது என்கிற சமாதானம். சில நாட்கள் கழித்து பள்ளி இடைத்தேர்வு மதிப்பெண் பட்டியலைக் கொண்டு காண்பித்தான் - சில பாடங்களில் திருப்தி இல்லாத மதிப்பெண்கள்.

எரிச்சலும் கோபமும் ஒன்றாக கிளர்ந்தெழ...

"என்னடா இது?"

பதில் பேசாமல் பாவம் போல நின்றான்.

"கேக்குறேன் இல்ல.. பதில் சொல்றா.."

"........"

"இப்ப பதில் சொல்லப் போறியா.. இல்லயா?"

தான் கேட்பதையும் மதிக்காமல் பதில் சொல்லாமல் இருப்பதைப் போல தோன்றியது.... கோபம் தலைக்கேற

"ராஸ்கல்.... என்னடா படிக்கிற..? இதுதான் படிக்கிற லட்சணமா...?

"...................."

"ப்ப்பளா‘‘‘‘ர்...."

அறை வாங்கிய அவன் பயந்து நடுங்கும் கோழிக்குஞ்சாய்.....

வேலைக்கு வந்து சேர்ந்த ஓரிரு நாட்கள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. வேலைக்கு சேர்ந்த பிரிவில் தமிழ் ஆட்கள் யாரும் இல்லை. மலையாளிகள், சோமாலியர்கள், பிலிப்பைன்ஸ் ஆட்கள், உள்ளூர் அராபியர்கள், பாலஸ்தீனியர்கள்.... இன்னும் ஓரிரு பாகிஸ்தானியர்கள், எகிப்தியர்கள் என்று கலர்கலராய்.... ஒரு குட்டி உலகமாய்... கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

மலையாளம், ஹிந்தி, அராபிக், ஆங்கிலம், சோமாலி என்று எல்லாம் கலந்த ஒரு கலவை மொழியாய்.... பேசுவதை சரியாக புரிந்து கொள்ளவே ஒரு சில நாட்கள் ஆனது.

சாப்பிடும் இடம் கூட சந்தைக்கடை போல... கசகசவென்று ஒரே கூட்டம்... அங்கே மட்டும் சில தமிழர்களுடன் பேசுவதில் கொஞ்சம் நிம்மதியும் ஆனந்தமும். ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு, நாட்களை எண்ணிக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்து... சில நாட்கள் கழித்து....

ஒரு இடத்தில் வேலை, ஒரு பாலஸ்தீனியருடன் வேலை செய்ய வேண்டி இருந்தது. அவருடன் வேலை பார்க்க எல்லோரும் மிகவும் பயப்படுவார்கள். என்ன காரணம் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடன் பலமுறை வேலை பார்த்திருந்தாலும் எப்போதும் வார்த்தைகளை நெருப்பாக கக்குவதுதான் அவர் வழக்கம்.

"எப்போதும் "சேப்டி பெர்மிட்"டில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்... இங்கே யாரும் உன்னைக் காப்பாற்ற நினைக்க மாட்டார்கள். பாதுகாப்புதான் முக்கியம். ஏதாவது தப்பு நடந்தால் நீதான் பொறுப்பு. சிறிய தவறு நடந்தால் கூட உடனேயே ஊருக்கு திரும்ப வேண்டியதுதான்... நீ வேண்டுமென்றால் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக்கூடும். ஆனால் நான் சொல்லும் வரை எதையும் செய்யக்கூடாது..." என்றெல்லம் உடைந்த ஆங்கிலத்தில், பலவிதமாக அறிவுரைகள் - பயமுறுத்தல்கள்.

திருப்பி பேச வேண்டும் என்று உடனே தோன்றியது... இருப்பினும் இன்னும் கொஞ்ச நாட்களாவது ஒப்பேற்ற வேண்டும் என்பதால் வாய் தானே வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டது. நேரம் வரும் - பார்த்துக்கொள்ளலாம் என்று உள்மனது அறிவுறுத்தியது.

அந்த நபருக்கு எப்போதும் கர்வம் அதிகம். எப்போதும் தப்பே செய்ததில்லை என்ற பெருமையுடன் கூடிய ஆணவப்பேச்சு. காது அந்த நேரத்தில் ரொம்பவும் கூசிப்போகும். பல வருடங்கள் அங்கே வேலை பார்த்திருந்தாலும், சோதனை செய்ய வேண்டிய அந்த இயந்திரத்தை தேடித்தான் கண்டுபிடித்தார் அவர். புதிய இடத்தில் இயந்திரங்களை கண்டுபிடிப்பது இன்னும் சரியாக வரவில்லை.

சீக்கிரமே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அந்த ஆள் முகத்தில் கரியை பூச வேண்டும் போல இருந்தது - வேலையை எவ்வளவு திறமையாகவும், சரியாகவும் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதான - குத்தலான வார்த்தைகள் மனதை குடைந்தது.

பாதி வேலை முடிந்த பின் தேநீர் இடைவேளை நேரம் - நிம்மதியே இல்லை. "போய்யா... நீயும் உன் வேலயும்" என்று தூக்கிப் போட்டுவிட்டு போய்விடலாம் போல ஒரு துடிப்பு மனதில். பொறுமையை பார்த்து பொறாமையோ என்னவோ..." உன் மனதில் ஏதேனும் அழுத்தம் இருந்தால் சொல்லிவிடு" - அவர் வற்புறுத்தியும் எதுவும் சொல்லவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

மறுபடி வேலைக்கு போனபோதுதான் அந்த பெரியத் தவறு கண்ணில்பட்டது. சோதனை செய்ய வேண்டிய இயந்திரம் அதுவல்ல என்பதையும், அதுவரை பார்த்துக்கொண்டிருந்த இயந்திரத்தில் மின்சாரத்தை தடை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதும், பதறிக் கலங்கினார் அவர்.

அவ்வளவு நேரம் கர்வத்தில் இருந்த அவரா இது.... நம்பவே முடியவில்லை. "என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் இப்படி நடந்ததே இல்லை...." என்று ஆரம்பித்து, அடுத்த இரண்டு மணி நேரமும் புலம்பித்தள்ளி - அந்த நிகழ்ச்சியை யாரிடமும் சொல்லி விட வேண்டாம் என்பதை நேரிடையாக கூற முடியாமல் - கூனிக் குறுகி - ஆணவக்காரராக அதுவரை பார்த்த ஆளா....?! ரொம்பவும் வியப்பு.

அடுத்த சில நாட்களில் அவர் மேலும் ஒரு முறை செய்த தவறு அவரது நிலைமையை மேலும் மோசமாக்கியது. அந்த நேரத்தில் மனிதாபிமானம் காரணமாக செய்தது என்னமோ மிகவும் சிறிய உதவிதான்.

ஒரு வகையாக இக்கட்டில் இருந்து அவர் தப்பித்தார். ஒரு வகையில் அந்த நிகழ்ச்சிகளால் ஒரு நன்மையும் விளைந்தது. அவரது நடவடிக்கையில் ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்றங்கள். எப்போதும் யாருடனும் சொல்லி விட்டுப் போகாதவர் - "நான் ஊருக்குப் போய் வருகிறேன். இதுவரை நான் செய்தது ஏதேனும் உன் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடு. உன்னுடன் பணி செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி." கையை குலுக்கிக் கொண்டு, பேச நினைப்பதை எல்லாம் பேச முடியாமல், வார்த்தைகள் கிடைக்காமல் திணறினார்.

உணர்ச்சி வேகத்தில் அடித்தாலும், அன்றிரவு தூங்கவே முடியவில்லை... "மனிதனா நீ... பச்சை மண்ணைப் போட்டு அடித்துவிட்டாயே..." தன் மேலேயே மிகுந்த வெறுப்பு.... ஒரு புறத்தில் ரொம்பவும் வெட்கமாக இருந்தது. அடித்த பின்பு அதன் வலியை கைகளில் உணர முடிந்தது.

"பாவம் அந்த பிஞ்சுப் பூ... எத்தனை துடித்திருக்கும்? நம்மை விட கேவலமானவன் எவனும் இல்லை.... சே...! என்ன காரியம் செய்திருக்கிறோம்?"

மெதுவாக உறங்கிக் கொண்டிருந்த அவன் அருகில் சென்று பார்த்த போது, அந்த இருட்டிலும் தெரிந்த மெல்லிய வெளிச்சத்தில் கன்னத்தில் லேசாக விரல்களின் தடமும், கண்ணீர் ஓடிய ரேகையும்...

அய்யோ.... இந்த பூவையா அப்படி செய்திருக்கிறோம்...? நினைக்க நினைக்க தாங்க முடியவில்லை. தானாகவே கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. எப்போது உறக்கம் வந்தது என்றே தெரியவில்லை.

"அப்ப்ப்பா‘‘‘..." குயில் குழல் வாசித்தது போன்ற அந்த மழலைச் சத்தம்தான் எழுப்பியது. ஒன்றுமே நடக்காதது போல, அப்போதுதான் புதிதாய் பூத்த மலராய்... மார்பின் மீது அவன்... அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாயைத் திறந்தபோது...

"அப்பா... நான் அடுத்த பரீட்சையில் நல்லா மார்க் எடுக்குறேன்பா.."

மனதில் எதுவோ உடைந்தது.

"அய்யோ... என்னப்பா....? கண்ணல்லாம் செவப்பா இருக்கு? தூசி விழுந்திருச்சா...? ப்பூ... ஊதட்டுமா...?"

அவன் முன்னர் அழ முடியாதே.... எப்படியோ கட்டுப்படுத்த முடிந்தது.

மறுபடி வேலைக்கு வந்த போது விமானத்தில் அருகில் இருந்தவர் சொல்லிக் கொண்டே வந்தார்... "இன்னும் ஒரு மாதம் போனால் போதும். இந்த வெயில் எல்லாம் சுத்தமா போய் கிளைமேட் மாறிடும்.. சூப்பரா இருக்கும்..."

அறைக்கு மீண்டும் திரும்பும் போது பார்வை தானாக சாலை ஓரத்தில் இருந்த பேரீட்சை மரங்களின் மீது திரும்பியது. இப்போதும் கொத்துக்கொத்தாய்..... ஆனால் பழுப்பு நிறங்களில் பேரீட்சை.... பழைய அனுபவம் பயமுறுத்தியது... இருந்தாலும் ஒன்றை மட்டும் பறித்து லேசாக துடைத்து வாயில் வைத்து கடித்து சுவைத்தால்... அப்பப்பா... என்ன சுவை...! தேன் போல... இப்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது போல் இருக்கிறது.

நன்றி: துவக்கு.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link