சிறுகதைகள்


பிதா குரு!

கூடல்.காம்
அப்பாவின் கோபமே அலாதிதான். ரொம்பச் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம் வரும் அவருக்கு. மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வார். நான்கைந்து நாட்கள் அந்தக் கோபம் நீடிக்கும். யாரிடமும் பேச மாட்டார். யாரேனும் ஒருவரோடு சண்டை என்றால் வீட்டில் யாரிடமும் வாயைத் திறக்க மாட்டார். எங்களுக்கே அது ஆச்சரியமாயிருக்கும். என்னோடு சண்டை என்றால் அம்மாவோடு ஏன் பேசாமல் இருக்கிறார்? அம்மா சட்டென்று புரிந்து கொள்வாள். அவளுக்குத் தெரியும், அன்றிலிருந்து சில வெளிக்காரியங்கள்கூடத் தானேதான் கவனிக்க வேண்டியிருக்கும் என்று. அம்மாதிரி நேரங்களில், அப்பாவிடம் எதுவும் சொல்லாமல் தானே கிளம்பிச் சென்றுவிடுவாள். வாயை மூடிக்கொண்டு காரியம் பார்த்துவிடுவாள். ஒரு அமானுஷ்யமான அமைதி நிலவும் வீட்டில்.

அது அப்பாவின்பாற்பட்ட மரியாதை நிமித்தம் தோன்றிய அமைதி. அதன் இறுக்கம் ரொம்பவும் கடுமை.

அடிக்கடி கோபித்துக் கொண்டோ என்னவோ அப்பாவின் மூஞ்சி எப்பொழுதும் சிடுசிடுவென்று இருப்பது போலவே தோன்றும்.

அப்பாவோடு பேச விழையும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கோபமாக இருக்கிறாரோ என்றே சந்தேகம் தோன்றும். அந்தக் கோபம் எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. எதற்காக வரும் என்றும் கணிக்க முடியாது. சட்டென்று மூக்கு நுனியில் முணுமுணுவென்று நிற்கும்.

ஒன்று மட்டும் உண்மை. பெரும்பாலும் நல்ல விஷயத்திற்காகத்தான் அப்பா கோபிப்பார். அவர் சொல்வதை உடனே செய்துவிட வேண்டும். இல்லையென்றால் கோபம்தான்.

நிறைய அட்வைஸ் தருவார் அப்பா.

"சும்மா அவனை நய்நய்ங்காதீங்கோ. எல்லாமும் அந்தந்த வயசுல சரியாப் போகும். தானே சரியாயிடும்" என்பாள் அம்மா.

"என்னைக்குச் சரியாகுது... நான் மண்டையைப் போட்ட பிறகா?" என்பார் அப்பா.

இல்லையென்றால், "நீ வாயை மூடு" என்று அம்மா வாயை அடைப்பார்.

கோபத்தில் சுளீர் சுளீர் என்றுதான் வார்த்தைகள் வந்து விழும். அது அப்பாவின் இயல்பு. எங்கு அப்படிப் பேசக் கற்றாரோ? அல்லது யாரைப் பார்த்து அப்படிப் பழகிக் கொண்டாரோ?

அவர் சொல்வதையெல்லாம் சகித்துக்கொண்டு செய்து முடிப்பது மகா கஷ்டம். இம்மி பிசகக்கூடாது அப்பாவுக்கு.

"இவ்வளவு சொல்றேளே? நீங்க சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேளா?" என்று அம்மா கேட்டுவிட்டாள் ஒரு நாள்.

எப்படித்தான் கேட்டாளோ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம். அவ்வளவுதான். பிடிபிடியென்று பிடித்துக் கொண்டுவிட்டார் அப்பா.

"முதல்ல அவனை வச்சிண்டு நீ இந்தக் கேள்வி கேட்கலாமா? அது தெரிஞ்சிதா உனக்கு? அந்த நுணுக்கம் தெரிய வேண்டாம்? இன்றைக்கு ஆபீஸ்லேயும், வீட்லயும் நிறைய விஷயங்கள்ல நான் தடுமார்றேன்.... அந்த நிலைமை அவனுக்கும் வரணுமா? அதுக்கு நாம விடலாமா? அது நியாயமாகுமா? ஒரு நல்ல தகப்பனுக்கு அது அடையாளமா? நீயே சொல்லு.... வாய் கிழியக் கேட்டியே, இதுக்குப் பதில் சொல்லு பார்ப்போம்?"

அம்மா அப்படியே இறுகிப் போனாள். "இந்த மனுஷன்டப் போய் ஏன் பேசிண்டு" என்று.

என்னவோ சொல்லித் தானே ஓயட்டும் என்று விட்டுவிடுவாள். அம்மாவும் கேட்கட்டும் என்றுதான் அப்பா சொல்வார். மாட்டிக்கொண்டு முழிப்பது நான்தானே?

"இந்தா பார் ரகு... உனக்குன்னு எத்தனை ஹேங்கர் வாங்கிக் கொடுத்திருக்கேன்? சட்டை பேன்ட்களை இதிலே மாட்டாமே, குடுகுடுப்பைக்காரன் தொங்கவிட்டிண்டு வர்ற மாதிரி, கொடியிலே தூக்கிப் போட்டிருக்கியே? இது நல்லாயிருக்கா? என்ன இப்படிக் கெடக்கு? எதுவுமே சொல்லிக் கொடுக்க மாட்டாங்களோன்னு எங்களைப் பற்றித் தவறா நினைக்கமாட்டாங்களா?"

"புத்தகங்களைக் கண்ட இடத்திலே போடாதே. அதுக்குன்னு ஷெல்ப் இருக்கு. அதிலே கொண்டு வை. புத்தகம் தனி; நோட்டு தனின்னு பிரிச்சு அடுக்கு. பிறகு எதை எங்கே வச்சோம்னு தெரியாமே உனக்கே தடுமாறும். இன்ன இடத்துலேதான் இன்ன பொருள் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு. கண்டபடியாவா போட்டு வைக்கிறது? நல்லதுக்குப் பழகிக்க வேண்டாமா? எந்த வேலை செய்தாலும் அதிலே ஒரு சிஸ்டம், முறைமை இருக்கணும்...."

அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுவார். அப்பொழுதுதான் அவர் மனம் ஆறும்.

பிடிக்கிறதோ இல்லையோ - சகித்துக்கொண்டு கேட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் ஒன்று. நம்மையறியாமல் அப்பாவின் பேச்சில் ஒரு லயிப்பு ஏற்பட்டுவிடும் நமக்கு. காரணம், அவரின் கட்டையான, அழுத்தம் திருத்தமான, ஏற்ற இறக்கத்தோடு கூடிய உச்சரிப்பு. கையசைவும் பார்வையும் உடல் மொழியும் நம்மையறியாமல் ஓர் ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கிவிடும்.

வெறும் அட்வைஸோடு நிற்பவரில்லை அப்பா. "செயல்... செயல்.. அது ஒன்றே நமது வெற்றி" என்பார் அடிக்கடி.

"போதும் சினிமா வசனம்" எனபாள் அம்மா. சமயங்களில் அதற்குப் பெரிதாகச் சிரித்துக் கொள்வார் அப்பா.

சொல்லுவார். சொல்லிக்கொண்டே செய்யவும் செய்வார். ஒவ்வொன்றையும் சலிக்காமல் சொல்லி, சளைக்காமல் செய்வார்.

அவரைப் போல், பாங்காக, பொருத்தமாக எந்தக் காரியத்தையும் அம்மாவால்கூடச் செய்ய முடியாது.

ஆபீஸிலும் வீட்டிலேயும், தான் சமயங்களில் தடுமாறுவதாய்க் கூறியதெல்லாம் சும்மா - அப்பாவின் ஈடுபாட்டிற்கு, தவறு, விடுதல், சேர்ப்பு என்பது வருவதற்கு வாய்ப்பேயில்லை.

"தோட்டி வேஷம் போட்டா தோட்டியாகவே மாறிடணும். நேற்று வரைக்கும் அந்த வேலையிலே இருந்தவன் செய்ததைவிட ஒரு படி அதிகமா, நிறைவா செய்திடணும். மனசு ஒண்ணு போதும்டா. அந்த சாட்சிய ஏமாத்தாம நாம நடந்துக்கணும். அவ்வளவுதான்" என்பார்.

காலையில் நான் பள்ளி கிளம்புமுன் என் யூனிபார்ம், ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், பெல்ட், ஐடென்டிட்டி கார்டு, ஷூ, சாக்ஸ் என்று ஒன்றுவிடாமல் முதல்நாள் இரவே எடுத்துத் தரையில் ஒரு செய்தித்தாளை விரித்து வரிசையாக அடுக்கிவிடுவார். அப்படிப் பிரித்து வரிசைப்படுத்தினால்தான் எது விடுதல் என்பது பார்வைக்கும் புரியும் என்பார். அவரின் கவனத்தில் எதுவும் விடுபடாதுதான்.

எப்படியோ ஒரு நாள் ஐடென்டிட்டி கார்டு விடுபட்டுவிட்டது. அதுகூட என் தவறுதான். முதல் நாள் போட்ட "கிளாஸ்ரூம்" வாசலில் அப்பா வியர்க்க விறுவிறுக்க வந்து நின்றபோது - டீச்சர் பார்த்த முதல் பார்வையில் - அப்பாவைக் கைக்கூப்பி அழைத்தது கண்முன்னே நிற்கிறது. அப்பாவின் தேஜஸ் அப்படி! முகத்திலே அப்படியொரு அறிவொளி தீட்சண்யம்..

"இதுக்காகவா வந்தீங்க ஐயா?" - போதுமா! அந்த "ஐயா" என்ற வார்த்தை அப்பாவை எங்கே நிறுத்தியிருக்கிறது என்று நாம்தான் உணர்ந்து கொள்ளவேண்டும்.

நான் காலேஜ் செல்லும்வரை என் படிப்பு சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முன்னின்று கவனித்துக் கொண்டவர் அப்பாதான்.

பாடம் மட்டும் அப்பாவால் சொல்லிக் கொடுக்க முடியாது. அது அம்மாதான். அப்பா வெறும் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மீடியத்தில் படித்தவர். ஆனாலும் அந்தக் காலப் பள்ளியிறுதித் தேர்வுக்கு தனி மதிப்பு உண்டுதான்.

அம்மா பட்டப் படிப்புத் தகுதி. ஆகையால் ஏதேனும் சந்தேகங்கள் எனில், அம்மாவிடம்தான் நான் கேட்க வேண்டிவரும். அதில் அப்பாவுக்குச் சற்று வருத்தம்தான்.

ஆனால், நான் பாடங்களை ஒப்பிக்கும் போதெல்லாம், "எங்கிட்ட கொண்டா... நான் சரி பார்க்கிறேன்" என்று கிளம்பிவிடுவார். ஒரு பாயிண்ட் விட்டாலும் பிடித்துக் கொள்வார்.

அப்பாவின் உச்சரிப்புகள் தெளிவாய் இருக்கும். "பேசாம நீங்க டி.வி.யில செய்தி வாசிக்கப் போகலாம்" என்பாள் அம்மா.

அப்பாவுக்கு அதில் அசாத்தியப் பெருமை. என் பாட சம்பந்தமான அம்மாவின் கவனிப்பில் அப்பா பூரித்துப் போவார்.

"நீ பேசாம அவனைக் கவனி. மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்பார்.

சொன்னால் போதாதா? விட்டது அலுப்பு என்று அம்மாவும் அமர்ந்துவிடுவாள்.

பால் காய்ச்ச, காபி போட என்று கிளம்பிவிடுவார் அப்பா. சமயங்களில் அன்றைய சமையல் வேலைகளைக் கூட முடித்துவிடுவார் அப்பா. ஏதோ வெகுநாட்கள் சமைத்துப் பழக்கப்பட்டவர் போல சீக்கிரமே முடித்துவிடுவார். அம்மாவுக்கு மௌனமான ஆச்சரியம்! அப்பாவின் சமையல் உப்பு, புளி, காரம் சற்றுத் தூக்கல்தான். அதன் ருசி தனிதான். "நளபாகம்"னு சொல்லி வச்சிருக்கான்? என்பார் அப்பா.

"எல்லாத்துக்குமே ஈடுபாடுதாண்டா காரணம். சிவாஜி கணேசன் மாதிரின்னு வச்சிக்கயேன். கடைசி வரைக்கும் நடிப்புல இருந்த ஆர்வம் அவனுக்குக் குறையலை பார்த்தியா? ஒரு கட்டபொம்மனும், வ.உ.சியும், பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரும் அழியாம நிக்கிறதுக்கு அவனோட டெடிகேஷன்தான் காரணம். அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தானே அவனை முதல் ஆளா நிக்க வச்சிது?"

"அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். எளிமையான, பொருத்தமான உதாரணங்கள் மனதை ஈர்த்து ஒரு நிலைப்படுத்தும் கேட்பவர்களுக்கு.

பலர் சொல்லக் கேட்கும் ஈகோ, அது, இது என்பதெல்லாம் கிடையாது அப்பாவுக்கு. தான் நினைக்கும் நல்ல விஷயங்களைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த நினைப்பார் அப்பா. அதற்கான கண்டிப்புப் பேச்சு "தன் முனைப்பு" போலத் தோன்றும்.

ஆனாலும் ஒன்று - அப்பா சொல்வதையெல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே கடைப்பிடிப்பது என்பது சுத்தமாக முடியாததுதான்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்து, வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துப் பழகு என்பதிலிருந்து, ராத்திரி படுக்கையில் அமர்ந்து அஞ்சு நிமிஷம் தியாணம் பண்ணிட்டுப் படு என்பது வரை ஒரே அட்வைஸ் மயம்தான்.

"உன்னைச் செதுக்கிச் செதுக்கி ஒரு நல்ல சிலையா வடிக்க வேண்டியது என் கடமை. அதைச் சரியாச் செய்யலேன்னா என் மனசாட்சி என்னைக் கொன்னுடும். நீ நல்லாப் படிக்கணும். இந்த நாட்டுக்கு ஒரு நல்ல பிரஜையா உருவாகணும். அதுதான் என் ஆத்மார்த்த விருப்பம். டிராக்குல வண்டி சரியாப் போயிட்டிருக்குன்னு என்றைக்கு நான் உறுதி பண்றேனோ அன்றைக்குத்தான் உன்னை விடுவேன். நீ பொறுமையோடும் பொறுப்போடும் என் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் ஆகணும். இன்றைய பரபரப்பான உலகத்துலே மனுஷனைக் கெடுக்கிற சக்திகள்தான் அதிகம். அதையெல்லாம் புறந்தள்ளிட்டு நீ மேலே வரணும்."

வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக வரும் அப்பாவிடமிருந்து. இந்த இடத்தில் இன்ன சொற்கள்தான் பொருந்தும் என்பது போல் சொல்வார்.

சமயங்களில் அது எதிராளிகள் மனதைக் கஷ்டப்படுத்தும். அதுதான் சங்கடம். ஆனால் அந்த நுணுக்கத்தையும் அறிந்தவர் போல சொல்வார் அப்பா.

நல்ல விஷயங்கள் எப்பவுமே வேகமாகவும் கடுமையாகவும்தான் வரும். அப்பத்தான் அது மனசிலே பதியும். நான் உனக்குப் பிதா மட்டுமில்லே..... குருவும்கூட. குருன்னா என்ன அர்த்தம் தெரியுமில்லையோ? சொல்றதைக் கடைப்பிடிக்கிறவர். அதே மாதிரி நடந்து காண்பிக்கிறவர். அவாளுக்குத்தான் அந்த உயர்ந்த ஸ்தானம் உண்டு."

அப்பா கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் தோன்றும் எனக்கு.

பார்வை மாறாமல் கண் சிமிட்டாமல் கேட்டுக் கொள்வேன் நான்.

"நான் சொல்றதெல்லாம் உள் வாங்கிக்கிறியான்னு எனக்குச் சந்தேகம் வருது... இதெல்லாம் உன் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் அதாவது நீ பார்க்கப்போகிற வேலைக்கும் எந்த விதத்துல சம்பந்தப்படும்னு உனக்குத் தோணலாம். இதுதான் பேஸிக். அடிப்படை. அஸ்திவாரம். வெறும் கல்வியறிவுல மட்டும் பலமா இருந்து புண்ணியமில்லை. ஒரு மனிதனோட நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளும் அதற்குச் சமமா நிற்கணும்.

இந்த அடிப்படை விஷயங்கள் நாளை நீ பார்க்கப் போகிற வேலைகளைப் பொறுப்பா செய்து முடிக்கிற திறனை உனக்கு உண்டாக்கும். நிதானமாகவும் ஸ்டெடியாகவும் ஒரு விஷயத்தை அணுகக்கூடிய மனோபலத்தைக் கொடுக்கும். மற்ற எல்லாரையும் விட உன்னுடைய பணித்திறன் மேம்பட்டு இருக்கிறதை அடையாளப்படுத்தும்".

அப்பப்பா? அப்பாவின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், யாருக்கு வரும்? பிரமித்துப் போற்றத் தகுந்தவை அவை.

இப்பொழுதெல்லாம் அப்பா ரொம்பவும் அமைதியாகிவிட்டார். அட்வைஸெல்லாம் கிடையாது இப்போது. அறவே நின்று போனது எல்லாம்.

நான் முழுமையடைந்துவிட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ?

"போதுண்டா, இனிமே உன்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார் ஒரு நாள்

பெருத்த வரவேற்போடும் எதிர்பார்ப்போடும் ஒரு நிறுவனத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்த நேரம் அது.

கண்களிலே ஒளி! முகத்திலே பிரகாசம்! நிஷ்களங்கமான மெல்லிய உதட்டோரப் புன்னகை. அப்பா முற்றிலுமாக மாறிவிட்டிருந்தார்.

அமைதியும் சாந்தமும் முன்னிறுத்தின அவரை.

அன்பர்கள், நண்பர்கள், பகைவர்கள், அசட்டையாக இருப்பவர்கள், நடுநிலையாக இருப்பவர்கள், தன்னைத் துவேஷிப்பவர்கள், பந்துக்கள், சாதுக்கள், பாவிகள் ஆகிய எல்லோரிடமும் சமநோக்குடன் இருப்பவன் உயர்ந்தவன்!

எவனொருவன் கரும "பலனில்" பற்றில்லாமல், செய்ய வேண்டிய கருமங்களைச் செய்கிறானோ அவனே சந்நியாசி! அவனே யோகி!

ஆத்மாவை வசப்படுத்தி, அமைதியின் சொரூபமாய், யோக நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் அப்பா. அப்பாவின் பெயர் இப்போது யோகேஸ்வரனல்ல! யோகீஸ்வரன்!

நன்றி: தினமணி கதிர்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link