சிறுகதைகள்


பிழை திருத்தம்

கூடல்.காம்
வெளியே குளிர்காற்று சலசலவென்றிருந்தது. சில்லென்று காற்று முகத்தைத் தாக்கிக் கூந்தலைக் கலைத்தது. ஆட்டோ வேகமாகக் கடைகளையும் சிறு சாலைச் சந்திப்புகளையும் கடந்த போது, ராதிகா ஆட்டோ டிரைவரை மெதுவாக அழைத்து "கொஞ்சம் மெதுவாகப் போங்க..." என்றாள். டிரைவரின் காதில் விழுந்ததோ என்னவோ, வேகம் குறைந்தாற் போல் தெரிந்தாலும் சில நிமிடங்களிலேயே மறுபடியும் அதே போல் பறந்தது. ராதிகா துப்பட்டாவை இழுத்து இரு தோள்களையும் சுற்றி, குளிருக்கு இதமாக மூடிக் கொண்டாள்.

இனி அடுத்து என்ன? பயிற்சிக்குப் போக வேண்டிய தேதி இன்னும் தெரியவில்லை. எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் போக வேண்டியிருக்கும். உடைகள், பொருட்கள் எடுத்து வைக்க வேண்டும்... செலவுக்கு நிச்சயம் பணம் வேண்டும். அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.

சட்... நினைப்பு பூரா இரண்டு மாத இடைவெளியில் இருக்கிற பிரச்சினையில் இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் சந்திக்கப் போகிற பிரச்சினைக்கு என்ன செய்வது?

பிரச்சினை என்ன பிரச்சினை? கொஞ்சம் கண்ணீரும், கொஞ்சம் பணமும் இருந்தால் இதை சுலபமாகச் சமாளித்து விடலாம்.

கைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். இப்போதைய செலவுக்குப் பணம் இருந்தது. சமாளித்து விடலாம். ஆனால் கண்ணீர்? என்ன முயன்றாலும் அதை வரவழைக்க முடியாது. அழுகை மறந்து போயிருந்தது. இனி அழவே கூடாது என்ற தீர்மானத்தில் கண்கள் இறுகிப் போயிருந்தன.

கடைசியாக அழுத பெரிய அழுகை நினைவுக்கு வர முயன்று நெற்றிக்கு உள்ளேயே நின்று கொண்டது. மிகக் கசப்பான சம்பவங்களை மீண்டும் நினைக்கப் பிடிப்பதில்லை. சிறிய அழுகை சட்டென்று நினைவுக்கு வந்தது. இப்போது அந்தக் காட்சியை நினைத்தால் எரிச்சல் வந்தது. அப்படி எரிச்சலையும் அழுகையையும் அளவில்லாமல் கொடுத்தவர்களுக்காக இப்போது கண்ணீர் விட வேண்டுமென்றால் எப்படி முடியும்? வேண்டுமானால் முகத்தை இறுக்கமாக வைத்துச் சமாளிக்கலாம். இப்போதைக்கு அதுதான் முடியும்.

ஆட்டோ பெரிய தெரு திரும்பியது. டிரைவர் பின்னால் திரும்பி, "எந்தப் பக்கம்மா?" என்றார். ராதிகாவுக்குத் தெரியவில்லை. இது வரை இந்த வீட்டிற்கு வந்ததில்லை. விலாசத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தாயிற்று. "பதினெட்டாம் நம்பர் வீடு" என்றாள். டிரைவர் அலுத்துக் கொண்டு, "அது ரோட்டுக்கு அந்தப் பக்கம்மா.... இங்க எல்லாம் அம்பதில ஆரம்பிக்குது" என்றபடியே ஆட்டோவைத் திருப்பினார்.

அங்கு போய்ச் சேர்ந்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. எல்லோர் பார்வையும் தன் மேல்தான் விழும் என்பது தீர்மானமாகத் தெரிந்தது. "வீட்டை விட்டுப் போன பொண்ணு வந்திருக்கா" என்று இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள். "ரொம்பத் திமிர் பிடிச்சவ. ஆனாலும் ஒரு பொண்ணுக்கு இத்தனை நெஞ்சழுத்தம் கூடாதுப்பா..." என்று நொடிப்பார்கள். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? வேறு என்ன செய்வாள்? ஓவென்று அழுது கொண்டிருப்பாள்.... அல்லது இத்தனை வருஷங்களில் தன்னைப் போலவே அழுகையை நிறுத்திக் கொண்டிருப்பாளோ?

ப்ச்.... அப்படிப்பட்டவளாயிருந்தால் இத்தனை தூரத்திற்குப் பட்டிருக்க வேண்டாமே! எதற்கெடுத்தாலும் அழ வேண்டியது.... ஓரளவிற்கு மேல் அதை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டாமோ... "ச்சீ போ" என்று உதறித் தள்ளிவிட்டு வந்திருக்க வேண்டாமோ... அழுது கொண்டும் அடி வாங்கிக் கொண்டும் அப்பா காலுக்கடியிலேயே விழுந்து கிடக்க வேண்டுமா? அப்படியென்ன அந்த மனிதரிடம் கண்டாள்? மாமா சொல்வார் "உங்கம்மா சின்னதில இருந்தே ஒரு விசித்திரப் பிறவிதான்... இப்படியுமா ஒரு பொம்பளை... கூடப் பிறந்து வளர்ந்த எனக்கே ஆச்சர்யமா இருக்கு...."

அந்த மாமாவுக்கு இவளைப் பார்த்து அதைவிட ஆச்சரியம். "சாந்தாவுக்கு இப்படி ஒரு பொண்ணு, நல்ல காலத்துக்கு வேற எங்கியும் போகாம நேரா இங்க வந்து சேர்ந்தியே...."

ஆனால் அவர் சொன்னது போல ராதிகா நேராக அங்கு போய்ச் சேரவில்லை. அடுத்த நாள் ப்ளஸ் டூ பொதுத்தேர்வை வைத்துக் கொண்டு, இரவோடிரவாக கையில் நாலணா காசு கூட இல்லாமல் சேலத்திலிருந்து கோவைக்குப் போவது சாத்தியமா என்ன? அரை மணி நேரம் பேய்த்தனமாய் நடந்து கவிதா வீட்டுக்குத்தான் போனாள். இரவு பத்து மணிக்கு சிநேகிதி வீட்டில் யாரும் அவளை எதிர்ப்பார்க்கவில்லை. ஏதாவது பாடம் புரியவில்லை என்று பள்ளித் தோழிகள்தான் ராதிகா வீட்டிற்குப் போய்ப் பழக்கம். வாழ்க்கையையே நிர்ணயிக்கப்போகும் பரீட்சையை அடுத்த நாள் வைத்துக் கொண்டு வாடிப் போய் கண்கள் பொங்க வந்து நின்றவளைக் கண்டு அனைவரும் என்னவோ ஏதோ என்று பதறிப் போனார்கள்.

குடிக்காகவும், சீட்டாட்டத்திற்காகவும் எதையும் விற்க, செய்யத் துணிந்த அப்பா அன்று செய்த காரியம்தான் அம்மாவைப் போலவே பொறுமையாகப் போய்க் கொண்டிருந்த ராதிகாவை நிமிரச் செய்தது. தெருக்கோடியில் இருந்த கடையில் போய் பேனா, மை, புது ஸ்கேல், கலர் பென்சில் வாங்கிக் கொண்டு திரும்பியவளின் அலமாரியிலும், மேசையிலும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் ஒன்று கூடக்காணோம். வருடம் பூரா எடுத்துப் படித்தாலும் எப்போதும் பிரவுன் நிற அட்டையோடு ஓரங்கள் கூடக் கிழியாமல் அழகாகக் காட்சி தருகிற புத்தகங்கள், எந்த கலெக்டர் உத்யோகத்திற்காகக் கனவு கண்டு வீட்டு சோகங்களை மறைத்துக் கொண்டு படிப்பே உலகமாக வைத்திருந்தாளோ அந்தப் புத்தகங்கள்... அடுத்த நாள் முதல் பரீட்சைக்கான தமிழ் இலக்கணப் புத்தகம் - மேசை மேல் வைத்திருந்தது உட்பட - எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போயிருந்தார் கனகதுரை. பழைய புத்தகக் கடையில் போட்டால் எப்படியும் இரண்டு நாள் சீட்டாட்டத்திற்குப் பயன்படுமே!

"அம்மா...." என்று வீறிட்டு அலறி விழுந்தவள் தான்.... பிரம்மை தெளிய ஒரு மணி நேரமாயிற்று.

அந்த ராத்திரி நேரத்தில் எங்கு போய் பொதுத் தேர்வுக்கான புத்தகத்தை வாங்குவது? நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ரிவைஸ் செய்து முடிக்க இன்னும் பாதிக்கு மேல் இருக்கிறது. எல்லாவற்றையும் விட, அதிர்ச்சியில் பேச்சடைத்துப் போய்க் கிடந்தாள்.

ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்த கனகதுரையை அம்மா ஏசினாள், என்ன ஏசி என்ன அழுது என்ன பிரயோஜனம்? போன புத்தகங்கள் திரும்பி வருமா?

ஆங்காரமாக எழுந்து போதையிலிருந்த தந்தையின் சட்டைக் காலரைப் பிடித்த ராதிகா, "நீயெல்லாம் ஒரு அப்பனாடா நாயே" என்று உலுக்கிய போது, சற்றே சுய நினைவுக்கு வந்தவர் "ஏய், என்னடி காலரைப் பிடிக்கறே, மரியாதை கெட்ட மூதேவி" என்று குழறிய போது, அம்மாவும்
"ஐயோ, பாவிப்பெண்ணே, உங்கப்பா சட்டையைப் பிடிக்கிற அளவுக்கு கேடு கெட்டுப் போயிட்டியாடி?" என்று "சேம்சைடு கோல்" போட்ட போது, வயிற்றில் கபகபவென்று பற்றியெறிந்த ஆத்திரம் வாயில் கங்குகளாக வெடித்து வந்தது. அப்பாவை உதறி விட்டு அம்மா பக்கம் உக்கிரமாகத் திரும்பியவள், "இவனெல்லாம் ஒரு புருஷன்னு கூட இருந்திருக்கியே, நீதான் கேடு கெட்டவ" என்று சொல்லிய கையோடு அப்படியே பிடித்துத் தள்ளிவிட்டு விடுவிடு வென்று தெருவில் இறங்கி நடந்தாள்.

அவள் ஆவேசத்திற்கு அந்த நடையும் ஊரின் இன்னொரு கோடியிலிருந்த கவிதா வீட்டு தூரமும் தேவையாயிருந்தது. நடக்க நடக்க, கன்னங்களில் வழிந்த நீரோடு மனசுக்குள் வெண்பா, வஞ்சிப்பா, இலக்கணமும், மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையும் வந்து வந்து போனது.

நடந்ததைச் சொன்ன போது கவிதா, அவள் அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் திகைத்துப் போனார்கள். "நாளைக்கு நான் பரீட்சை எழுத முடியாது அங்கிள்" என்று கதறிக் கதறி அழுதாள். அதுதான் அவள் அழுத கடைசி பெரிய அழுகை....

"ஏன் முடியாது?" என்று தட்டிக் கொடுத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்து, சற்றுப் பொறுத்து இரவு சாப்பாட்டை சூடு செய்து கொடுத்த கவிதாவின் அம்மாதான் இன்றளவும் ராதிகாவுக்கு மானசீக அம்மா....

கவிதாவும் இவளும் ஒரே வகுப்பு. கவிதா படித்து முடித்து உறங்கிய பிறகு, ஷிப்ட் போல இரவு ஒரு மணிக்கு மேலே மீதிப் பாடத்தை ரிவைஸ் செய்தாள். விடிகாலை மீண்டும் புத்தகம் கவிதா கைக்குப் போனது. அவள் குளித்து டிபன் சாப்பிடச் சென்ற நேரத்தில் புத்தகம் ராதிகா கையில்... பரீட்சைக்குக் கிளம்பும் போது கவிதாவின் யூனிபார்ம், அவள் தங்கை சுமிதாவின் பேனா, ஸ்கேல் எல்லாம் இவளுக்கு....

மனசிலிருந்த அத்தனை ஆவேசத்தையும் அன்று பரீட்சையில் காட்டினாள். அன்று அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, ப்ளஸ்டூ புத்தகங்கள் அத்தனையும் ஒரு செட் எங்கிருந்தோ வாங்கிக் கொண்டு வந்து விட்டார் கவிதாவின் அப்பா. அத்தனைப் பரீட்சைகளையும் அங்கிருந்தேதான் எழுதி முடித்தாள். அடுத்த நாள் இவளைத் தேடிக் கொண்டு வந்த அம்மாவிடம் "படிக்க நிறைய இருக்கு.... யாரையும் பார்க்க நேரமில்லைன்னு சொல்லு" என்று கவிதா வீட்டுப் பணிப் பெண்ணிடம் சொல்லித் திருப்பியனுப்பினாள்.

மாநிலத்தில் முதலாவதாகத் தேறிய சங்கதியை கவிதாவின் பெற்றோருக்குத்தான் முதலில் தெரிவித்தாள். பத்திரிக்கைகளில், "நான் முதலிடம் பெறக் காரணமாயிருந்தவர்கள்" என்று பேட்டியோடு வெளி வந்தது கவிதாவும், அவள் பெற்றோர்களும் தான்.

கலெக்டராக வேண்டும் என்று மனசுக்குள் கிடந்த இலட்சியத்தை, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று அன்றைய தினம்தான் மாற்றிக் கொண்டாள். பேட்டியாளர் "ஏன் இந்த மாற்றம்?" என்று கேட்டதற்கு "அப்போதான் குடிப்பவர்களையும், சூதாடுபவர்களையும் தூக்கிப் போட்டு மிதிக்க முடியும்" என்றாள்.

அந்தப் பரீட்சைக்குப் பிறகுதான் கோவையில் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். மாமா மேலே படிக்க வைத்தார். படிக்கிற நேரம் போக மீதி நேரம் ட்யூஷன் எடுத்தாள். முழு பாரமும் மாமா மேல் விழாமல் பார்த்துக் கொண்டாள். மேல் படிப்பு படிக்கிற போது பார்க்க வந்த அம்மாவை அதே தீக்கண்களால்தான் எரித்தாள்.

அம்மா தோற்றம் மாறிப் போயிருந்தது. வெகுவாக மெலிந்து போயிருந்தாள். கையில் கழுத்தில் எல்லாம் பித்தளை. பிழியப் பிழிய அழுதாள். "அப்பா திருந்திட்டு வர்றார்டி.... இருந்த எல்லாம் போனப்புறம் கொஞ்சம் புத்தி வந்திருக்கு... வேலை மட்டும்தான் மிச்சம்... நீ திரும்பி வந்திட்டன்னா திருத்திடலாம்" என்று கெஞ்சிய போது, புழுவைப் பார்க்கிற மாதிரி பார்த்தாள். "எனக்கு நிறைய வேலை இருக்கு.... படிக்கணும், ட்யூஷன் எடுக்கப் போகணும், அத்தைக்கு காய்கறி நறுக்கித் தரணும், மாமாவை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போகணும்... தயவு செய்து என் முன்னால நிண்ணு அழுது மூட் அவுட் ஆக்காதே" எனறு வெற்றுக் குரலில் சொல்லி விட்டு உள்ளறைக்குப் போய்விட்டாள்.

அத்தை, அம்மாவோடு பேசி விட்டு அம்மா கிளம்பிப் போவதை ஜன்னல் வழியாகப் பார்த்த போது ஏனோ துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. அப்பா, அம்மா இருந்தும் இன்னொருவர் தயவில், இளமைக் காலம் முழுவதையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி படிப்பு, வேலை என்று செலவிட்டதில் வந்த சுய இரக்கம்...

"அம்மா.... எனக்கு மனசு பாரமாயிருக்கு" என்று சொல்லி வாய்விட்டு யார் மடியிலும் விழுந்து அழ முடியாத சோகம்... விம்மல் வெடித்து வர அழுதாள். பெரிய அழுகையல்ல.. சில நிமிடங்களே நீடித்த சிறிய அழுகை. அதுதான் கடைசியாக அழுத சிறிய அழுகை...

அதன் பிறகு பழையபடி கண்கள் சவமாகிப் போயின. எப்போதாவது கண் கலங்க நேர்ந்தாலும் கண்ணீர் ஒரு சொட்டு கூட உதிராது... "சபாஷ், போலீஸ்காரிக்கு இதுதான் நல்ல தகுதி" எனறு தனக்குத்தானே பாராட்டு. தன் கல்மனசுக்குத் தானே சான்றிதழ்! கூடப் படித்த ஆனந்த் அவளை ஜேசீஸ் சங்கத்தில் வற்புறுத்திச் சேர்த்து அவர்கள் ஏற்பாடு செய்த விழியிழந்தோர் பள்ளி விழாவுக்கு அழைத்துச் சென்ற போதுதான் தன் கல்மனசு தன்னைப் பார்த்து, "என்ன சேதி?" என்று கேட்டதை உணர்ந்தாள்.

சின்னச் சின்னக் குழந்தைகள்... எல்லாம் பத்து வயதிற்குள்... "ஒளிபடைத்த கண்ணினாய் வாவா" என்று குரலெடுத்துப் பாடிய போது, எங்கே அந்த ஒளிபடைத்த கண்கள் என்று தேடினாள். பாடிய அத்தனைக் குரல்களுக்குரியவர்களிடமும் சலனமற்ற நேர்ப்பார்வைதான் இருந்தது. ஒளி இல்லை. இருட்டு. கல்மனம் கரைந்தது.

மனசில் இருள், கண்ணில் இருள் - எது பெரிய இருள் என்று அலைந்தது. அவர்களுக்கும் தனக்கும் ஏதோ பெரிய ஒற்றுமை இருப்பது போல் பட்டது.

விழாவிற்குத் தலைமை தாங்கிய மருத்துவர், கண்தானம் பற்றிப் பேசினார். "தானத்தில் சிறந்தது கண்தானம்" என்றார். "கண்தானம் என்றால் என்னவோ ஒட்டுமொத்தமாகக் கண் கொளத்தையே பெயர்த்து எடுத்துப் பொருத்துவது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு... பெரும்பாலானவர்களுக்கு விழிக்கோளத்தின் மேலுள்ள கார்னியா என்கிற படலம் தான் தேவை" என்று கூறியது புதிய செய்தியாக இருந்தது.

அன்றைக்கு மேடையில் கண்தானம் செய்கிற தாளில் கையெழுத்திட்ட முதல் ஆள் ராதிகாதான். கையெழுத்திடுகிற போது கண்கலங்கியது. ஆனால் கண்ணீர் வரவில்லை. ஆனந்த், "என்ன கண்சிவந்திருக்கு? தானம் பண்றவங்க அழுதுகிட்டேவா பண்ணுவாங்க?" என்றதற்கு, "இல்லை.... ஏதோ ஒரு இருட்டு என்னை விட்டு விலகற மாதிரி இருக்கு... என்னை இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்ஸ் ஆனந்த்..." என்றாள்.

அதற்கப்புறம் ஐ.பி.எஸ். பரீட்சை ஒருபுறமிருக்க, தீவிர ஜேசீஸ் சேவகியாகி கண்தானம் பற்றிய முகாம்களை நடத்திய போதும், கையெழுத்துக்களை வாங்கிக் குவித்த போதும் மனசின் இருட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கியது புரிந்தது.

அம்மா மேல் இருந்த எரிச்சல் கொஞ்சம் தணிந்து பேச முடிந்தது.

அம்மா சென்ற முறை தேடிவந்து, "அப்பா மாறிட்டார்டி... திருந்திட்டார்னுதான் சொல்லணும். உன்னைப் பார்க்கணும்ங்கறார்" என்ற போது எரிந்து விழவில்லை. லேசாகச் சிரித்து விட்டுப்போய் விட்டாள்.... "திருத்த முடியாத ஜென்மங்கள்" என்ற மானசீகப் பட்டியலில் முதலில் இருப்பது அப்பாவாயிற்றே!

ஆட்டோ, விசாரிக்க அவசியமின்றி கும்பல் கூடியிருந்த வீட்டுமுன் நின்றதும் இறங்கி பணத்தைக் கொடுத்துவிட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். உள்ளேயிருந்து லேசான அழுகுரல்.... அப்பாவின் தங்கை மணப்பாறை அத்தை ஓடி வந்து, "ராதிம்மா.... நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டார்டி... பார்க்க வரமாட்டேன்னு சொன்னியாமே.... இப்ப வர வச்சுட்டாரேடி..." என்று கைகளைப் பற்றி அழுதபோது, மெதுவாக விலக்கிவிட்டு உள்ளே நடந்தாள். அம்மா இவளைப் பார்த்ததும், "ஐயோ ராதி... நம்மை அனாதையா விட்டுட்டுப் போயிட்டாரேடி.... உங்கப்பா என் பூவையும், பொட்டையும் சேர்த்துகிட்டுப் போயிட்டாரேடி" என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதபோது, அடங்கியிருந்த எரிச்சல் பொசுக்கென்று மேலுக்கு வந்தது.

எங்கேயிருந்துதான் அம்மாவுக்கு இத்தனை அழுகையோ? கண்ணீரைக் கடல் கணக்கிற்கு ஸ்டாக் வைத்திருக்கிறாளே! குடித்து விட்டு அடித்துத் துன்புறுத்திய போதும், வீட்டு சாமான்களை அடகு வைத்து விட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்த போதும் அழுதாள் சரி, அப்பேர்ப்பட்ட புருஷன் செத்துப் போனதற்கு ஏன் அழுகிறாள்?

திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது.... இவள் அப்பாவிற்காக அழவில்லை... தன் பூவுக்காகவும் பொட்டுக்காகவும் அழுகிறாள். இருந்த வரை உயிரை வாங்கியவன், இப்போது தான் மட்டும் சுகமாகப் போய்ச் சேர்ந்தான் என்று அழுகிறாள். வாழ்க்கையில் தான் இழந்த அத்தனை சுகங்களுக்காகவும் அழுகிறாள்...

பதிலே பேசாது, பிணத்தை நேராகப் பாராது கடமையே போல் இரண்டு வினாடி கண்மூடி காலடியில் நின்றாள். "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா..." கோரஸாய்க் கிளம்பிய பாட்டு உடலைச் சிலர்க்க வைத்தது. அன்றைய ஜேசீஸ் தினத்திற்குப் பிறகு இப்படித்தான் எந்த வீட்டில் சாவு நடந்தாலும் சாவில் சூழ்நிலை உறைக்காது இறந்தவர் கண்களைப் பெற அந்த சாவு வீட்டில் யாரை அணுக வேண்டும் என்று புத்தி தேடும்... சற்றுத் தயங்கினாலும் பாட்டு துரத்தும்.. போ போ விசாரி என்று தள்ளும்.....

சட்டென்று கண்களைத் திறந்து அப்பா முகத்தைப் பார்த்தாள். மாலைகளுக்கு நடுவே கிடந்தது. சலனமின்றி கண்களை மூடி, தூங்குவது போல.... கடைசியாக ப்ளஸ்டூ பரீட்சைக்கு முன் தினம் பார்த்தது... நிறைய மாறியிருப்பார் போல் தெரிந்தது.

விலகி உள்ளே போனாள். "ராதி.. என்ன பேசவே மாட்டேங்கறே? செத்துக் கிடக்கிறது உங்கப்பாடி... கல்லு மாதிரி நிக்கறியே... உன்னைப் பார்க்கணும்ணு சொன்னப்ப வர மாட்டேன்னியேடி... இப்ப மொத்தமா போயிட்டாரேடி.." என்று மேலே விழுந்து கட்டியணைக்க வந்தவளை இடது கையாலேயே தள்ளி தூர நிறுத்தினாள்.

"அம்மா, சும்மா புலம்பாதே... என்னவோ அவரு பெரிய தரும மகாராஜா மாதிரியும் உன்னை அப்படியே ஊரு மெச்ச வாழ வைச்ச மாதிரியும் அழுகிறயே... வெட்கமாயில்லை?" என்று சன்னக் குரலில் கடிந்தாள்.

"அவரு எப்படியிருந்தாலும் என்னைத் தொட்டுத் தாலிகட்டின புருஷன்.... அதுக்காவது மரியாதை கொடுக்க வேணாமா? அதுவுமில்லாம சாகறப்ப முழுசா வேற மனுஷனாச் செத்தார். சொன்னா நீதான் நம்ப மாட்டேங்கறியே.... உன் பேரைத்தான் கடைசியா சொன்னாரு...." ஓவென்ற அழுகை...

"ஆமா... வாழற வரைக்கும் அடுத்தவங்க உயிரை அணுஅணுவா வாங்க வேண்டியது. சாகறப்ப ஒரு பேரைச் சொல்லிட்டு செத்துட வேண்டியது. ஒரு ஆயுசுக்குப் பண்ணின கொடுமையை ஒரு செகன்ட்ல வெறும் பேரை உச்சரிக்கறதால மாத்திர வேண்டியது... போ போ.. ஏதோ செய்தி கிடச்சது. நொந்து போயிருப்பியேன்னு வந்தேன்...." என்றாள் ராதிகா பல்லைக் கடித்துக் கொண்டு...

"சரி, நீ நம்ப மாட்ட... பரவாயில்ல. ஏதோ பெரிய போலீஸ் பரீட்சையில ஜெயிச்சிருக்கயாமா.. அதையும் சொல்லிக்கிட்டே இருந்தாரு...."

"இப்ப சொல்லி என்ன பிரயோசனம்? அதிருக்கட்டும். செத்து ரொம்ப நேரமாயிருக்குமில்லை?" என்று மெதுவாகத் தன் பணிக்கு வந்தாள். ஆகியிருக்கும் என்று தெரிந்தேதான் கேட்டாள். இவள் புறப்பட்டு வந்து சேரவே நான்கு மணி நேரமாகிவிட்டது...

"ஆமா காலையில.... காப்பி கேட்டாரு.. கொண்டாறதுக்குள்ள போயிட்டாரு...."

"அப்ப ஆறு, ஏழு மனி நேரமாயிருக்கும்... ப்ச்.... பிரயோஜனமில்லை" என்றாள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு....

"என்ன பிரயோஜனமில்லை?"

"இல்லை... செத்தது செத்தார்.... கொஞ்சம் உடனே தகவல் தெரிஞ்சிருந்தா கண்ணையாவது எடுத்து ஐ பாங்குக்குக் கொடுத்திருக்கலாம் பண்ணின பாவத்துக்கு..." என்றாள்.

"அதுதான் அப்பவே கொடுத்தாச்சே" என்று அம்மா விசும்பிக் கொண்டே சொன்னதும் அதிர்ச்சியில் தூக்கிப் போட்டது. அனிச்சையாக அப்படியே எழுந்து நின்று விட்டாள்.

"என்ன.... என்னம்மா சொல்றே.. அப்பாவா.... கண்ணா.... நிஜமாவா....?" நம்ப முடியாமல் தட்டுத் தடுமாறி வெளிவந்தன வார்த்தைகள்...

"ஆமாம்.... உங்க மாமா இங்க வந்தப்ப ஒருநாள் அப்பாகிட்ட சொன்னாரு. நீ ஏதோ கண்தானத்துக்கு நிறைய முயற்சி பண்றேன்னு.... அப்பவே ஒரு ஃபாரம் வாங்கி எழுதி வைச்சிட்டாரு. இறந்த கொஞ்ச நேரத்திலேயே பக்கத்து வீட்டு ரமணி போன்ல சொல்லி செங்காளியப்பன் ஆஸ்பத்திரியில இருந்து டாக்டர் வந்து கண்ணை எடுத்துட்டு, மூடி வச்சிட்டுப் போயிட்டாரு... இப்பவும் நம்பலைன்னா அந்த ஆஸ்பத்திரியில போயி கேளு.... உங்க அப்பா கையெழுத்துப் போட்ட ஃபாரம் கிடைக்கும்" என்றாள் அம்மா.

"அம்...மா.." என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் முதல் முறையாக.

இங்கிருந்தபடியே எட்டிப் பார்த்தாள். அப்ப கண்மூடிக் கிடப்பது தெரிந்தது. பட்டியலில் பெயர் அடிபட்டது. மனசின் இருட்டு விலகியது. தானத்தில் சிறந்தது கண்தானம்... அப்பா கடைசி நிமிடத்தில் மாறி விட்டாயே.... நிஜமா? உனக்கு அடுத்தவரிடமிருந்து பிடுங்கித்தானே பழக்கம்? எதையுமே கொடுத்தது இல்லையே... பிடுங்கிய அத்தனைக்கும் சேர்த்து இப்போது கொடுத்திருக்கிறாயே ஒரு தானம்... எப்பேர்ப்பட்டது தெரியுமா? உன் கண்கள் யாரோ ஒருவரின் இருட்டு உலகத்திற்கு ஒரு கற்றை ஒளியை வாரிக் கொடுக்கப் போகிறது... தெரியுமா உனக்கு? நீ செய்த காரியத்தில் திகைத்துப் போய் நிற்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதா?

"உனக்காக நான் துக்கத்தில் அழவில்லை, ஒளி பெறப்போகும் ஒரு உயிரை நினைத்து சந்தோஷத்தில் அழுகிறேன்..."

பூட்ஸ் காலோடும் காக்கிச் சீருடையோடும் மானசீகத் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டாள் ராதிகா. கண் ஓரத்தில் ஒரே ஒரு சொட்டு நீர் திரண்டு நின்றது.

நன்றி: சந்திரக் கற்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link