சிறுகதைகள்


அஸ்திவாரம்

கூடல்.காம்
கத்திரி வெயிலில், தலையில் நெருப்புச் சட்டி, கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தி, கூடவே கால்களைக் கட்டிக் கொண்டு தீ மிதிப்பவன் போல, மனமெல்லாம் பொசுங்கி நின்று கொண்டிருந்தான் பாலு....

நாயே... நீயெல்லாம் உருப்படுவியா? உன்னப் பெத்ததுக்கு ஒரு கல்லப் பெத்திருக்கலாம்! இரு...இரு... இன்னைக்கு உங்கப்பா வந்து, உன்னக்கொன்னே போட்டாலும் நான் ஏன்னு கேக்கமாட்டேன்! எப்படிப்பட்ட சுடுசொற்களாலும், அம்மாவின் கோபத்தை அவனால் தாங்கிக்கொள்ள இயலும்... ஆனால், அப்பாவின் கோபம்? அடிக்க ஆரம்பித்தார் என்றால், கைரேகை இடம் பெயரும் அளவிற்கு அடித்துப்போட்டு விடுவார்.

அ(ப்ப)டிப்பட்ட நேரங்களில் அம்மா அவனுக்குக் கேடயமாக இடையில் புகுந்து பாதி அடிகளை வாங்கி, அப்பாவின் கோபத்திற்கு அணைபோட முயன்று கொண்டிருப்பாள். ஆனால்... இன்று...? அம்மாவே ஆளுயர எரிமலையாகப் பொங்கிக் கொண்டிருக்கும்போது... அப்பாவின் கோபம் எப்படிப்பட்டதாக இருக்கும்..? அவனது நண்பர்கள்... சொந்தக்காரர்கள்... அக்கம் பக்கத்தவர்கள்.... என்று பலரிடமும் ஏகத்துக்கும் இனி அசிங்கப்படப்போவதை வேறு மனம் அவ்வப்போது ஞாபகப்படுத்தி அவனை மேலும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது!

இன்று, அப்பாவின் தாக்குதலில் இருந்து தப்புவது என்பது நடக்காத காரியம் என உறுதியாய் தெரிந்ததும், அவசர அவசரமாக ஒரு புதிய முடிவை எடுத்தான். அப்பாவின் சில நிமிட கோபத்தைத் தாங்கிக்கொள்ள பயந்து தூக்கு மாட்டிக் கொள்ளத் தயாரானான்! அதற்கு ஒரே சிறந்த சாதனம் அம்மாவின் புடவைதான் என அவனுக்குத் தோன்றியதால், புடவையைத் தேடி அம்மாவின் அறைக்குச் சென்றான். அங்கு யாரும் இல்லாதது கண்டு கணநேர நிம்மதியுற்று தனக்கு அம்மாவிடம் மிகவும் பிடித்தமான நீலக்கலர் புடவையைத் தேடி எடுத்துக் கொண்டு தனதறைக்கு வந்தான்.

உத்திரத்தைப் பார்த்தான். புடவையை ஊஞ்சலுக்காகப் பொருத்தப்பட்டுள்ள கொக்கியில் கட்ட முடிவுசெய்து, கட்டிலை அதற்கு நேராக இழுத்துப் போட்டுக் கொண்டு அதன் மீது ஏறினான். கட்டிலின் உயரமும், அவனது உயரமும் சேர்ந்தும் கூட கொக்கியின் உயரத்தை எட்ட முடியவில்லை, கட்டிலின் உயரமான பகுதியில் கால்வைத்து, எக்கி எக்கி முயற்சித்து தோல்வியடைந்து கொண்டிருந்தான். உடனே மூலையில் இருந்த முக்காலி பார்வையில்பட்டது.

அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி ஒலித்த கொலுசொலி அவனது தங்கை ரேவதி அங்கே வந்து கொண்டிருப்பதை முன்னறிவிப்புச் செய்தது. கதவைத் தாழ்ப்பாள் போட மறந்துவிட்டதை சட்டென்று உணர்ந்து மறுவினாடி புடவையோடு கட்டிலைவிட்டு இறங்கினான். புடவைச் சுருட்டி தலையணைக்கடியில் மூடிமறைக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில் ரேவதி கதவைத் திறந்து உள்ளே வந்தே விட்டாள்...

என்ன தூங்கி எழுந்தாச்சா? உனக்கென்ன ஒரு கவலையும் இல்லாம நீ நிம்மதியா இங்க தூங்கிட்டிருக்க... ஆனா அம்மா உன்ன நெனைச்சு நெனைச்சு அழுதுட்டு இருக்காங்க... சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பாவின் புல்லட் சத்தம் கேட்டு... அய்யோ...அப்பா வந்துட்டாரு! என்று அவனை தனிமையில் விட்டு விட்டு வெளியே ஓடினாள் ரேவதி.

கால்கள் அவனையும் கேளாமல் விரைவாக ஓடத் தொடங்கின. மூன்று நான்கு படிகளில்தான் கால் பதிந்து இருக்கும். அதற்குள் மொட்டை மாடிக்கு வந்து விட்டான். கீழே எட்டிப் பார்த்தான்.. அங்கே அவனது அப்பா, புல்லட்டை விட்டு இறங்கி அதை நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தார்.

பாலுவின் மூளை பரபரத்தது... மொட்டைமாடியில் இருந்து குதித்து உயிரை விடலாமா? சே... உயரம் பத்தாது... கைகால் மட்டும் உடைந்து இருக்கிற கேவலம் போதாதென்று ஆஸ்பத்திரியில் வேறு அசிங்கப்பட வேண்டுமா? முடிவை மாற்றினான்.. தண்ணீர் தொட்டியைக் கண்டதும், அதில் இறங்கி ஜலசமாதி ஆகிடலாம் என்று அதன்மேல் ஏறி எட்டிப் பார்த்தான், ஏமாற்றமே மிஞ்சியது. தண்ணீர் அதில் கால்வாசிதான் இருந்தது!

மணி ஆறறைக்கு மேல் ஆகியிருக்கும்... பொழுது இருட்டிக்கொண்டிருந்தது....

பேசாமல் கைப்பிடிச் சுவற்றின் மூலைக்குச் சென்றான். மூலையோடு மூலையாக ஐக்கியமாகி உட்கார்ந்து முழங்கால்களை மடித்து கைகளால் கட்டிக் கொண்டான். அப்பா வந்து உதைக்க ஆரம்பித்தால், ஒரே உதையில் உயிர் போகிற பாக்கியமாவது வேண்டும்! கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக இறங்கிக் கொண்டிருந்தது.

அப்பா நடந்து வந்து அவனது அருகில் நெருங்கி விட்டதை உணர்ந்தான். நிசப்தமாக இருந்தது. அப்போது பாலுவின் தோள் மீது விழுந்த இரு துளி நீர், அவனது சட்டையை ஊடுருவி உடம்பில் தொட்டது. என்ன ஈரம் இது?! கண்களைத் திறந்து நிமிர்ந்து பார்த்தான்.... குளித்து தலைதுவட்டாமல், வேட்டியும், மேலே துண்டும் போட்டபடி அப்பா ஈரத்தோடு நிற்பது தெரிந்தது. அவர் உடம்பிலிருந்து மேலும் சில துளிகள் அவன் மீது தெளித்தன...

அப்பா மவுனமாக இருப்பது ப்ளஸ்-2 பரீட்சையில் பெயிலான, அப்பாவின் சிநேகிதருடைய ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டதால்தான்! அந்த சாவுக்குச் சென்று வந்திருந்த அவர், மௌனத்தைக் கலைத்துவிட்டு மகனிடம் பேச ஆரம்பித்தார். வாழ்ந்து காட்டணும்னு வெறி இருந்தா தோல்வி ஒரு தூசு மாதிரி! அதை தட்டிவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்... படிச்ச படிப்புக்குதானே பரீட்சை வச்சாங்க...! வாழணுமா வாழக்கூடாதான்னா உயிருக்கா பரீட்சை வச்சாங்க?

உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தா படிக்காமலே மேதையாக முடியும்ன்னு பலர் நம்ம நாட்டுல நிரூபிச்சுக் காட்டியிருக்கும்போது, படிச்சும் கிடைச்ச தோல்வியை ஒரு பாடமா, இருக்கணும்?

பல வெற்றிக் கோட்டைகளுக்கு அஸ்திவாரமே தோல்விகள்தான்... அஸ்திவாரங்கள் கண்ணுக்குத் தெரியாது.. கோட்டைதான் கம்பீரமா நிற்கும்! நீ என் புள்ள... சிங்கக்குட்டி... நீ பொறக்க பத்துமாசம் காத்த’ருந்தோமே.... நீ ஜெயிக்க ஒரு மூணுமாசம் காத்திருக்கமாட்டோமா? இதோ.... செப்டம்பர் வந்திரும்... எழுதி பாஸ் பண்ணிட்டா போச்சு! வா போகலாம்... பாலுவின் தோள்மீது தட்டிக்கொடுத்துவிட்டு கீழே இறங்கிய அப்பாவை காரணம் புரியாமல், பெருமை பொங்க பார்த்துக்கொண்டிருந்தான் பாலு!
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link