சிறுகதைகள்


கடைசி பொய்

கூடல்.காம்
எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. அந்த டூ-இன்-ஒன்னை அப்படியே போட்டு உடைத்து விடலாம் போல இருந்தது. பின்னே, எரிச்சல்வராதா, என்ன?

இன்று எழுதிய எக்ஸாம் வேறு படுமோசம். நன்றாகத்தான் படித்து விட்டுச் சென்றிருந்தேன். ஆனால் நான் படித்ததில் இருந்துதான் கேள்வியே வரவில்லை. இந்த வள்ளலில் நாளைய தேர்வை நினைத்தால் அடிவயிற்றை அப்படியே ஒரு கலக்கு கலக்குகிறது.

கொஞ்சம் படிப்பையும், பரிட்சையையும் மறந்து பாட்டுக் கேட்கலாம் என்று டேப்ரெகார்டரைப் போட்டால் வெறும் கொரகொரச் சத்தம் மட்டும் தான் வருகிறது. நேற்று வரை நன்றாகத்தானே இருப்பது போல் இருந்தது... இன்றைக்கு என்ன ஆனது? கேஸட் மோசமானதாக இருக்குமோ?

கேஸட் மாற்றி வேறு கேஸட்டைப் போடுகிறேன். மீண்டும் கொர கொர....

டேப் ரெக்காடரில்தான் ஏதோ கோளாறு. இப்போது என்ன செய்வது? மாமா கேட்டால் என்ன பதில் சொல்வது?

கொடுக்கும்போதே படித்துப் படித்துச் சொன்னார். "இது புது டூ-இன்-ஒன். பத்திரமா திருப்பிக் கொண்டு வா. ஹாஸ்டல்ல ஃபிரண்ட்ஸ் கேட்டாங்கனு குடுத்து ரிப்பேர் ஆக்கிட்டு வந்த.. அப்பறம்.."

அப்பறம்... எனக்கு வேண்டும். சும்மா இருக்காமல் நான்தானே வினையை விலைக்கு வாங்கினேன்...!

"ஹாஸ்டல்ல என்னா பண்றதுனே தெரியல.. ரொம்ப போர் அடிக்குது. எப்பப் பார்த்தாலும் டெஸ்ட், அஸைன்மென்ட், செமினார்னுட்டு பொது அறிவ வளர்த்துக்கவே நேரம் இல்லாமப் போயிடுது. அப்படியே நேரம் இருந்தாலும் ஒரே ஒரு நியூஸ் பேப்பர்தான் ஹாஸ்டலுக்கு வருது... அதுனால ஒரு ரேடியோ இருந்தா நியூஸாவது கேக்கலாம்..."

இது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்களை வரிசையாக அடுக்கி அப்பாவை நச்சரிக்க, எனது நச்சரிப்பைப் பார்த்து மணமிரங்கிய மாமா அவரது புது டூ-இன்-ஒன்னைத் தர, இப்போது....

ஆயிரம் பொய் சொல்லி இதை வாங்கியிருக்க வேண்டாம்... இப்போது அவதிப்படவும் வேண்டாம்...

நான் சொன்னதெல்லாம் பொய்தானே...!

பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் எனக்குள்ள அபார ஆசையினாலா நான் ரேடியோ கேட்டேன்? ஹாஸ்டலில் ஒரே ஒரு செய்தித்தாள் மட்டும் வாங்குவதால்தானா ரேடியோ அவசியமானது?

இல்லை. எல்லாம் வேறு ஒரு காரணம்.

முதன் முறையாக வீட்டை விட்டு வெளியேறி, கிராமத்துச் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த நகரச் சூழலில் உள்ள ஹாஸ்டலில் நான் நுழைந்தபோது ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் உணர்ந்தேன். இருந்தாலும் வகுப்புத் தொடங்கி ஒரு வாரம் முடிவதற்குள் எல்லாம் பழக்கப்படத் தொடங்கிவிட்டது. நகரச் சூழலாவது, கிராமச் சூழலாவது! எல்லாம் ஒரே சூழல்தான். டெஸ்ட், அஸைன்மென்ட், செமினார், எக்ஸாம்!

நான் பிளஸ்-டூ தமிழ் மீடியத்தில் படித்ததால் காலேஜில் எல்லாமே ஆங்கிலத்தில் நடத்துவது தலைகால் புரியாத நிலைமைக்கு என்னை ஆளாக்கியது.

ஹாஸ்டலில் பக்கத்து ரூமில் இருக்கும் எனது கிளாஸ்மேட்டிடம் கேட்டுப் படிக்கலாம் என்றால்... அவன் அறையில் எப்போதும் ஒரே கூட்டம், கும்மாளம், அரட்டை, டேப்ரெகார்டரில் சத்தமாக டப்பாங்குத்துப் பாடல்களை வைத்து விட்டு ஆட்டமும் பாட்டும்... அப்பப்பா!

ஆங்கிலப் பாடல்களைக் கேட்டபடி

ஆங்கிலப் பாடல்களை முணுமுணுத்தபடி

ஆங்கிலத்தில் சரளமாக நுனிநாக்கில் பேசியபடி..

சிரிப்பும் கூத்துமாக அவர்கள் ஜாலியாக இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், என்னிடமும் ஒரு டேப்ரெகார்டர் இல்லையே என்ற ஏக்கம்தான் தலைதூக்கி நிற்கும்.

இந்த ஏக்கம் என்னுள்ளே வளர்ந்து வர வர, என்னைப் பற்றியே எனக்குள் ஒரு தாழ்ந்த அபிப்ராயம் உருவாகி, இதனால் அவனிடம் பேசுவதையே நிறுத்தி, முதல் செமஸ்டர் எக்ஸாமில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்து.. எப்படியோ அந்தலீவில் ஒரு டூ-இன்-ஒன் கிடைத்து விட்டது.

முதலில் ஒரு சின்ன ரேடியோ மட்டும் இருந்தால் கூடப்போதும், சத்தமாக ரேடியோவை வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். மாமா டூ-இன்-ஒன்னை தரவும் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

இரண்டாவது செமஸ்டருக்குக் கல்லூரி துவங்கியதும் ரொம்ப மகிழ்ச்சியோடு சென்றேன்.

ஹாஸ்டலுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனக்கு அடுத்த அறையில் உள்ள கிளாஸ்மேட்டிடம் சென்று எனது புதிய டூ-இன்-ஒன்னைக் காண்பித்தேன். அதில் எனக்கு ஒரு பெருமிதம்!

போன செமஸ்டரில் அவனது ரூமுக்குச் செல்லவே சங்கடப்பட்ட நான் இப்போது ரொம்ப சுதந்திரமாகச் செல்ல ஆரம்பித்தேன். பாடத்தைப் பற்றி மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் அவனோடு டிஸ்கஸ் பண்ண என்னால் முடிந்தது.

அவனைப் போலவே நானும் சத்தமாக மியூசிக் வைத்துக் கொள்வேன். இப்படித்தான் ஒருநாள் ஸைலன்ஸ் நேரத்தில் மியூசிக் வைத்துக் கொண்டு படிக்க, ரோல் கால் வந்த வார்டனிடம் பிடிபட்டு....

மறுநாள் பர்மா பஜார் சென்று ஒரு ஹெட்போன் வாங்கி வந்துவிட்டேன். நான் ஹெட்போன் வாங்கியுள்ளது என் கிளாஸ்மேட்டுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகக் கதவை நன்றாகத் திறந்து வைத்துப் பாட்டுக் கேட்டபடியே படிப்பேன்.

அவன் பார்த்தும் பார்க்காதது போலச் செல்லும் போதெல்லாம் எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம். ஓர் இனம் புரியாத திருப்தி. இந்த ஹெட்போன் வாங்கியதை ஈடுசெய்ய அப்பாவிற்குப் "புத்தகம் வாங்க வேண்டும், பணம் அனுப்புங்கள்" என்று கடிதம் எழுதியது மட்டும் அவ்வப்போது கொஞ்சம் உறுத்தும்.

நல்ல வேளை. அப்பா எதுவுமே திட்டிக் கடிதம் எழுதாமல் நான் கேட்டிருந்த பணத்தை மறுவாரமே மணிஆர்டர் பண்ணிவிட்டார்.

சில சமயங்களில் அடுத்த அறை கிளாஸ்மேட் டிஸ்கஷனுக்காக என் அறைக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் மைக்கேல் ஜாக்சனையோ, மெக்கார்டனியையோ சத்தமாக வைத்து விட்டுத்தான் பேசவே தொடங்குவேன். வால்யூமைக் குறைக்க வேண்டும் என்று அவன் ரெகார்டர் அருகில் சென்றால் அவன் தொடுமுன் நானே குறைத்து விடுவேன்.

என் டூ-இன்-ஒன்னை என்னைத் தவிர வேறு யாரும் தொடுவது எனக்குப் பிடிப்பதில்லை.

காரணம் மாமா தான்.... அவர்கள் தொட, ஏதாவது ரிப்பேர் என்றால் நானல்லவா மாமாவிற்குப் பதில் சொல்ல வேண்டும்?... என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும், காரணம் அதுவல்ல என்பது உள்மனதுக்குத் தெரியும். டேப்ரெகார்டர் எனக்கு மாமா மகள் மாதிரி.. எனக்கு மட்டுந்தான் சொந்தமாக முடியும்...

இதுவரை யாருக்கும் எதற்காகவும் கொடுத்ததில்லை அதை... ஒரு முறை கிளாஸ்மேட் வந்து ஒரு பாட்டை ரெக்கார்டு செய்ய அதைக் கேட்ட போது கூட, நானேதான் அதை ஹேன்டில் பண்ணினேன்.

என்னதான் சத்தமாக வைத்தாலும் எச்சரிக்கையாக இருக்கமட்டும் தவறுவதே இல்லை. தினமும் ஒவ்வொரு இரவிலும் நன்றாகத் துடைத்து, ஸ்விட்ச் எல்லாம் ஆஃப்தானா என்று செக் பண்ணாமல் இருப்பதில்லை.

இவ்வளவு கவனமாக இருந்தும்கூட, இன்று... எனக்கு அதன் உதவி அதிகம் தேவைப்படுகிற சமயத்தில... வேலை செய்ய மறுக்கிறது.

என்னிடம் இருந்த பதினான்கு கேஸட்டுகளையும் போட்டுச் செக் பண்ணினேன். ஊகூம். எல்லாமே கொர கொர.

அடுத்த அறையில் மியூசிக் சத்தம் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை எனக்கு.

உடனே பர்மா பஜாருக்குக் கிளம்பினேன். புதிய கேஸட் வாங்க. டேப்ரெக்கார்டரில்தான் கோளாறு என்பதை ஏனோ என் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

புதிய கேஸட்டைப் போட்டுப் பார்த்தால்....

கொர்... கொர... கொ... கொர்ர்ர்ர்.....

இப்போது நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். கோளாறு நிச்சயம் ரெக்கார்டரில்தான்.

இப்போது என்ன செய்வது? இந்த வாரம் முழுவதும் பரிட்சை. முடிந்ததும் கோடை விடுமுறை. உடனே வீட்டிற்குச் சென்றாக வேண்டும். எப்போது ரிப்பேர் செய்வது? யாரிடம் கொடுத்துச் செய்வது? பணத்திற்கு எங்கே போவது? ஊருக்குப் போகக்கூட கையில் பணமில்லை. அதுதான் அந்தப் பணத்தில் புதிய கேஸட் வாங்கிவிட்டேனே....

ஏதாவது பொய் சொல்லிக் கடிதம் எழுதி அப்பாவைப் பணம் அனுப்பச் சொன்னாலும் அது வந்து சேர ஒரு வாரம் ஆகிவிடும்.

நாளைக்குப் பரிட்சை. கஷ்டமான பாடம். இரவு தூங்குமுன் ஒரு முறையாவது திருப்பிப் பார்த்தால்தான் நாளைக்குக் காலையில் ஏதாவது அரைகுறையாகவாவது எழுதலாம்.

மனம் அலை பாய்ந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கடிதம் ஒன்றை எடுத்து எழுதுகிறேன்.

"அன்புள்ள அப்பாவுக்கு, நீங்கள் அனுப்பிய பணம் டாக்டருக்குச் செலவாகி விட்டது. ஊருக்குத் திரும்பிவர உடனே பணம் அனுப்புங்கள்..."

கடிதத்தை முடித்து மடக்கி வைத்து விட்டு, டூ-இன்-ஒன்னை எடுத்துப் பத்திரமாக சூட்கேஸில் வைத்துமூடுகிறேன்.

வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக நான் செய்யப்போவது....

மாமாவிடம் டூ-இன்-ஒன்னைத் திருப்பிக் கொடுப்பது.

ஏன் ரிப்பேர் என்றால் பஸ்ஸில் வரும்போது அதிர்ச்சியில் சூட்கேஸ் கீழே விழுந்து...

அதுதான் என் கடைசி பொய்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link