சிறுகதைகள்


பழியும் பாவமும்

கூடல்.காம்
அம்மன் கோயிலுக்குத் தெற்கே கிராம மக்கள் அனைவரும் கூடி இருந்தனர். சீர்பாதநல்லூர் மாரிமுத்து, கோபால், கோவிந்தசாமி, நயினான் ஜமா தெருக்கூத்து ஆடறாங்கன்ன... வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். வெளியே வரக்கூடாத பருவமடைந்த பெண்கள் கூட தலையில் முக்காடிட்டுக் கொண்டு பெண்களோடு பெண்களாக உட்கார்ந்து விடுவார்கள்.

ஜம்பை, திருவரங்கம், கள்ளிப்பாடி ஊர் மக்களும் இந்த ஜமா ஆட்டம்னா வந்துடுவாங்க. அன்று அந்த ஐமா "சனீஸ்வரன்" கூத்து நடந்து கொண்டிருந்தது. கிருபாஞ்சன் என்ற அரசன் சனீஸ்வரனால் துன்பப்படும் கதை. தாளசத்தமும், மேள சத்தமும் தவிர வேறு ஒலியே கேட்காத அளவுக்கு அமைதி நிலவியது.

அப்போது ஒரு பெண் முக்காடிட்டு குனிந்தபடி கூட்டத்திலிருந்து வெளியே போனாள்... அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து அவளைத் தொடர்ந்து ஒரு வாலிபனும் எழுந்து போனான். அவள் பெயர் செங்கமலம். இவன் பெயர் முத்தையன்.

கோயிலுக்கு வடக்கே உள்ள ஆற்று வாய்க்காலைத் தாண்டி புளியமரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. கும்மிருட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத இருள் கப்பி இருந்தது. தயங்கிக் தயங்கி நின்றாள் அணைத்துக் கொண்டான்.... அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் செங்கமலம்....

"எத்தனை நாளைக்கு இந்தத் திருட்டு சந்திப்பு" என்று சினுங்கினாள் செங்கமலம்.

"என் அண்ணன் பார்ப்பதற்குத்தான் முரடன். அண்ணனுக்கு இளகிய மனசு. எங்கப்பா அம்மா போன பொறவு அவர்தான் என்னை வளர்த்தார். என் மேல உயிரையே வைத்திருக்கிறார். நீ வந்து கேளு மச்சான்," என்றாள் செங்கமலம்.

"தோ பாரு புள்ளே... வடிவேலு அப்பா வந்து உன்னை பெண் கேட்டப்போ.... உங்கண்ணன் அவுங்களை வெரட்டிட்டானே... அதை மறக்க முடியுமா?

"ஓ.... அதைச் சொல்றயா?.... வடிவேலு எனக்கு மாமா முறை.... அதான் வந்து கேட்டாங்க... தோ பாரு மச்சான் அன்னிக்கு எங்கண்ணன் குடிச்சிட்டிருந்தது.... அதான் அப்படி பேசிட்டது..."

செங்கமலத்தின் அண்ணன் மாயாண்டி, பலசாலி, அதே சமயம் நல்ல உழைப்பாளி. யாருக்காவது ஒரு தீங்குன்னா முதலில் வந்து நிற்பான். ஊரில் யாராவது செத்துப்போயிட்டாங்கன்னா அங்கு உடனே வந்து நிற்பவனும் மாயாண்டிதான். மணல் மேட்டில் அவனுக்கு வீடு. செங்கமலத்தை வெளியூரில் கட்டிக் கொடுத்துவிட்டு, அவன் ஆசைப்படற காவேரியை கல்யாணம் செய்து கொள்ளனும்னு திட்டம் போட்டிருக்கான்.

"சரி... செங்கமலம்... வருகிற வெள்ளிக்கிழமை எங்க வீட்டிலிருந்து பெண் கேட்க அனுப்பட்டுமா?"

"நெசமாலுமா..."

"ஆமாம் செங்கமலம்... நீ முன்னாடியே சொல்லிவச்சிடு... எல்லா செலவும் நான் பார்த்துக்கிறேன்... இந்த தையிலேயே கல்யாணத்தை முடிச்சிடுறேன்..."

"அப்படின்னா எங்கண்ணன் ஒத்துக்கும்.... வா மாச்சான் அப்படி போகலாம்..."

இரண்டு கற்கள் பக்கத்தில் புத்தபகவான் சிலை ஒன்று இருந்தது. அது மழைசாமி என்பார்கள். மழை இல்லை என்று கவிழ்த்துப்போட்டதால் மழை வந்ததாம். அதனையும் தாண்டிச் சென்று கல்மேல் உட்கார்ந்தார்கள். முத்தையன் பிடியில் அவள் துவண்டாள்.

இப்படித்தாண்டா போனான். என்ற பேச்சுக் குரல் கேட்டு ஆடையை சரி செய்து கொண்டு செங்கமலம் அப்பால் சென்றாள். ஓடிவந்த இருவர் சரமாறியாக முத்தையனைத் தாக்கினார்கள். யார் யாரை அடிக்கிறார்கள் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள், செங்கமலம்.

"டேய் மாயாண்டி... நீயும் ஒரு ஆம்பளையா? ஒத்தைக்கு ஒத்தை வந்து பாருடா... அப்போ தெரியும்... டேய் கத்தியைக் கீழே போடுடா.... டேய்... டேய்.... கத்தியைக் கீழே போடுடா... ஐயோ..." என்று முத்தையனின் அலறலும் கேட்டது.

அதைத் தொடர்ந்து திபு திபுவென ஓடினார்கள்... செங்கமலம் அருகில் ஓடினாள்... அவள் கையில் ஈரப்பசை தட்டுபட்டது... ஐயோ இரத்தம்.. என்று புலம்பியபடி "முத்து... முத்து...." என்று மெல்ல கூப்பிட்டாள். ஆனால் அவன் தலை துவண்டு விழுந்தது. நடுங்கினாள் செங்கமலம். முத்தையன் பிணமாகக் கிடந்தான். எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து விட்டன.

தன் அண்ணன் மாயாண்டிதான் முத்தையனை வெட்டிப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். ஐயோ கடவுளே! என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். இனிமேல் இங்கு இருப்பது சந்தேகத்துக்கு இடமாகும் என்று எண்ணியபடி கால்வாயில் இறங்கி நடந்தாள். கால்வாய் தண்ணீரில் கையில் பிசு பிசுவென்று ஒட்டிய இரத்தத்தைக் கழுவினாள்.

டேய் மாயாண்டி நீயும் ஒரு ஆம்பிளையா? ஒத்தைக்கு ஒத்தை வந்து பாரடா... அப்போ தெரியும்....டேய் கத்தியைக் கீழே போடுடா... டேய்... டேய்... கத்தியை கீழே போடுடா... ஐயோ... என்று கதறியவை அவள் காதில் ஒலித்தபடி இருந்தது.

தெருக்கூத்தின் மத்தள ஒலியும், தாள ஒலியும், பாட்டொலியும் கேட்டுக் கொண்டிருந்தது. முத்தையன் கொலையுண்டதோ செங்கமலம் கால்வாயில் போய்க் கொண்டிருப்பதோ யாரும் அறியவில்லை.

செங்கமலத்தின் மனம் குடத்தில் குதிக்கிற தவளையாய் தவித்தது. ஆற்றாமை பொங்கியது. அவள் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஜல்... ஜல் என்று ஒலித்தது. தாழம் புதரைத் தாண்டும் போது கருகல் வாடை வீசியது. பாம்பு அடைக்காத்திருந்தால் அப்படித்தான் வாடை வீசும். செங்கமலம் அதைப் பொருட்படுத்தாமல் கரைமேல் ஏறி மணல் மேட்டுக்கு விரைந்தாள். அங்குதான் அவள் வீடு இருந்தது.

அவசர அவசரமாக வீட்டைத் திறந்தாள். மாயாண்டி வழக்கமாக செருகி வைத்திருக்கும் இடத்தில் வீச்சறிவாளைக் காணவில்லை. வழக்கமாக படுக்கும் கயிற்றுக் கட்டிலிலும் மாயாண்டியைக் காணவில்லை. ஓவென அழுதாள். அழுது.. அழுது... அப்படியே சாய்ந்து விட்டாள்.

விடிந்தது தெருக்கூத்து முடிந்து மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தெருவில் பேச்சரவம் கேட்டதும் செங்கமலம் எழுந்தாள். முத்தையனுடன் போனது, பேசியது, அவன் கொலையுண்டது எல்லாமே கனவாய் வந்து மனம் பேதலித்தது.

எழுந்து விட்டைவிட்டு வெளியே வரவும், மாயாண்டி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"அண்ணே... இப்படி முத்தையனை வெட்டிப் போட்டுட்டியே... நீயே உன் தங்கச்சி வாழ்க்கையை நாசமாக்கிட்டியே... ஐயோ கடவுளே.. கத்தியை போடுன்னு கெஞ்சினாரே.... ஒரு தப்பும் நடக்கலையே! இப்படி வெட்டிப் போட்டுட்டியே! எம்மேலே அவர் ஆசைப்பட்டது தப்பா? அதுக்காக இப்படி கொலை செய்யுறது? அண்ணே" என்று தலைவிரி கோலமாகக் கதறினாள் செங்கமலம்.

"செங்கமலம்.... நீ என்ன சொல்றே..."

"அடப்பாவி தங்கச்சின்னு கூட பார்க்காம... அவர் என்மேல் ஆசைப்பட்டதற்காக இப்படி வெட்டிப்போட்டுட்டு நீ என்ன சொல்றேன்னு கேக்கறயே..."

செங்கமலம் வாயை மூடு... நான் ஏன் அவனை வெட்டப்போறேன்... எனக்கும் அவனுக்கும் சண்டையா? சாடியா? நான் வெட்டலே செங்கமலம்... நான் சொல்வதைக் கேள்.

செங்கமலம் மீண்டும் கதறி அழுதாள்.

"ஐயோ பாவி சண்டாளா.. என் கூடப் பிறந்தவனா நீ... போதையில் வெட்டிப்போட்டுட்டு... தெளிஞ்சதும் வெட்டலன்னு சொல்றீயா? மாயாண்டி ஒண்டிக்கு ஒண்டி வாடா... கத்தியை எடுக்காதே... கத்தியை எடுக்காதேன்னு கதறினதை என் காதால கேட்டேனே. நீ வெட்டிப்போடும் போது நான் பக்கத்தில்தானே இருந்தேன்.

அதற்குள் கூட்டம் கூடி விட்டது.

மாயாண்டி முத்தையனை வெட்டி போட்டுட்டான்னு ஊர் பூரா பேசிக்கொண்டார்கள். கிராம மணியக்காரர் வந்தார். பிணத்தருகே தலையாரியை காவல் போட்டார். முத்தையன் வீட்டார் கதறி அழுது கொண்டிருந்தனர். மாயாண்டியை தனியே அழைத்து மணியக்காரர் விசாரித்தார். எவருக்கும் அஞ்சாத மாயாண்டி நடுக்கமேற்பட்டு நின்றிருந்தான்.

சகோதரப் பாசத்தை காதல் பாசம் வென்றுவிட்டது!

"ஐயா... நான் கலையில் தான் மயலூர் பேட்டையிலிருந்து ஊருக்கே வந்தேன். மண்வெட்டியும், பொழுவும் சந்தையில் வாங்கிட்டு வர போனேன். வாங்கிட்டு சினிமாவுக்குப் போயிட்டு, துணை இல்லாததால் சத்திரத்தில் படுத்திருந்துவிட்டு காலை 4 மணிக்குப் புறப்பட்டு நம்ம ஊருக்கு வந்தேன். நான் முத்தையனைப் பார்க்கவே இல்லை ஐயா. இந்தப் புள்ள ஒளறுதுங்க ஐயா.... இதோ பாருங்க சினிமா டிக்கட். என்று காட்டினான். அங்கு நின்றிருந்த செங்கமலம்.

"இல்லை ஐயா இல்லை முத்தையனை கதறக் கதற இவர்தான் வெட்டினார். முத்தையன் கத்தினாரே... டேய் மாயாண்டி ஒண்டிக்கு ஒண்டி வந்து பார்றா.. கத்தியை எடுக்காதே... கத்தியை எடுக்காதேன்னு கதற இவர் வெட்டிப் போட்டுட்டாரு... நான் அங்கேயே நின்றிருந்தேனே" என்று அழுதாள்.

போலீஸ் வந்தது. பிரேதத்தை பரிசோதனைக்காக அப்புறப்படுத்தப்பட்டது. மாயாண்டியை விலங்கிட்டு ஜீப்பில் ஏற்றும்போது கொலைகாரப்பாவி என்று நின்றிருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.

முத்தையன் கொலை வழக்கு அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூரில் வழக்கு நடைபெற்றது. முத்தையனை நான் கொலை செய்யவில்லை என்று மாயாண்டி நீதி மன்றத்தில் கதறினான். கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி செங்கமலம்தான்.

மாயாண்டி நீயும் ஒரு ஆம்பளையா? ஒண்டிக்கு ஒண்டி வந்து பாரடா.. டேய் மாயாண்டி கத்தியை எடுக்காதே... டேய் கத்தியை எடுக்காதே.. என்று முத்தையன் கதறியது அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

மாயாண்டிக்கு ஆயுள் தண்டனை என தீர்ப்பு கூறப்பட்டது. காவலர்கள் அவனை அழைத்துச் செல்லும் போது தங்கச்சி முத்தையனை நான் கொலை பண்ணலைம்மா. அத்தையை அழைத்து வந்து துணைக்கு வைத்துக்கொள் செங்கமலம்... நெல் வித்த பணம் பழங்கலப்பானையில்தான் இருக்கிறது. செலவுக்கு எடுத்துக்கொள் என்று கரவற்ற நெஞ்சோடி சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்த காலத்தில் எங்கேயாகிலும் கொலை நடந்தால் தீர்ப்பு வெளியான பிறகு "கொலை சிந்து" என்று அந்தக் கொலையை சிந்து பாடலாகப் புனைந்து புத்தகமாக்கி மனம் உருக பாடி மற்றவர்களையும் கண்ணீர் வடியச் செய்வார்கள். இந்த கொலையும் "கொலை சிந்தாக" வெளிவந்தது.

காலங்கள் கடந்தன. பதின்மூன்று ஆண்டுகள் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக கழித்துவிட்டு வெளிவந்தான் மாயாண்டி. இந்த பதின்மூன்று ஆண்டுகளில் ஒரு தடவை கூட செங்கமலம் சிறைக்குச் சென்று மாயாண்டியை பார்க்கவில்லை.

கட்டுடலாகச் சிறைக்குச் சென்ற மாயாண்டி மன உளைச்சலாலேயே பதின்மூன்று ஆண்டுகளில் தாடி ஒட்டிய எலும்புந் தோலுமாய்ப் போனான். காட்பாடி ரயிலில் திருக்கோவிலூர் வந்து இறங்கினான். அங்கிருந்து மணலூர்பேட்டை பேருந்தில் ஏறி உட்கார்ந்ததும் தன்னை யாராவது அடையாளம் தெரிந்து கொண்டு கொலைகாரன் திரும்பி வந்துட்டானா? என்று நினைப்பார்களா என்று கூச்சத்துடன் தலையில் முக்காடிட்டு அமர்ந்திருந்தான்.

மணலூர் பேட்டையிலிருந்து சீர்பாத நல்லூருக்கு நடந்தே வந்தான். நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து வந்து சேர்ந்தான். மாலை மயங்கும் நேரம்... இவனுக்கு முன்னால் மாடுகளை ஓட்டிக் கொண்டு யாரோ போனார்கள்.

"யார்பா மாடு ஓட்டுகினு போறது?"

"யாரது... இந்த நேரத்தில்..."

சென்றவன் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு மாயாண்டி யார் என்று அடையாளம் தெரியவில்லை. மாயாண்டிக்கு அவன் யார் என்று தெரிந்துவிட்டது. உடனே

"வேடிச்சி.. என்னைத் தெரியலே..."

"அடடே மாயாண்டி அண்ணனா... என்ன அண்னே... இப்பதான் வர்றீங்களா?....

"ஆமாம் வேடிச்சி... எப்படி இருக்கிறே...

"அப்படியேதான் மாடு மேய்ச்சிதான் வயிறு கழுவறேன். என்ன அண்ணே இப்படி எலும்புந் தோலுமாய் இளைச்சிட்டிங்க."

"என்ன செய்வது வேடிச்சி... எல்லாம் விதிப்பயன்... என் தங்கச்சி செங்கமலம்... நல்லா இருக்கா..."

"செங்கமலம் தானே... நீங்க போன ஆறு மாசத்திலேயே வடிவேலைத்தான் கண்ணாலம் கட்டிகிச்சி... இப்ப ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கிறாங்க."

"அப்படியா? நல்ல சேதி சொன்னே... வேடிச்சி.. நான் அந்த முத்தையனை கொலை பண்ணவே இல்லை" (இருமுகிறான்).

"அதை விடுங்க... என்ன அண்ணே உட்கார்ந்துட்டீங்க."

"வயித்துவலிப்பா... தாங்க முடியலே" மூச்சு வாங்க பேசினான் மாயாண்டி.

"சரி அண்ணே! என் கையை பிடிச்சுக்குங்க... மெள்ள வாங்க என்னண்ணே... அழாதீங்க..."

வடிவேல் செங்கமலத்தை பெண் கேட்டு வந்தபோதே கொடுத்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது. செய்யாத குற்றத்துக்கு பதின்மூன்று வருஷம் சிறையில் வாடிக் கிடந்திருக்க வேண்டியதில்லை என்று எண்ணியபடி வந்தான் மாயாண்டி.

பீலி அம்மன் கோயில் பாறை வழியாக மணல்மேட்டுக்குப் போகும் வழியே மாடுகளும் சென்றன. பின்னால் நின்று நின்று இருவரும் நடந்தார்கள்.

"அண்ணே நான் போய் தங்கச்சி கிட்டே சொல்லிவிட்டு வரட்டுமா?"

"வேண்டாம் வேடிச்சி... வேண்டாம் இருட்டிப் போச்சி... இப்பபோய் நான் வந்ததைச் சொன்னா கூட்டம் கூடிடும்.... வேண்டாம் (இருமுகிறான்) காலையிலே வாயேன். நாம இரண்டு பேரும் (இருமுகிறான்) போவலாம்... வேடிச்சி... நான் வந்ததை யார் கிட்டேயும் சொல்லாதே..."

"சரி அண்ணே... நீ சொல்றதும் சரிதான்... நான் ஆகாரம் எதனாச்சும் கொண்டாறேன்."

"வேணாம் வேடிச்சி மள்ளூர் பேட்டையிலேயே சாப்பிட்டுட்டேன். பசியில்லை... (இருமுகிறான்) வேடிச்சி நான் வந்ததை யார் கிட்டேயும் சொல்லாதே... வேடிச்சி..."

"சரீங்க அண்ணே..." வேடிச்சி போயிட்டான்.

வீடு பூட்டிக் கிடந்தது.. எதிரில் இருந்த ஆட்டுப்பட்டி மாட்டுக் கொட்டகை எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை... வீட்டுக் கூரை ஆங்காங்கே சரிஞ்சு கிடந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திண்ணையில் உட்கார்ந்தான்.

திண்ணை ஓரத்தில் படுத்த மாயாண்டிக்குத் தூக்கம் வரலே.. தங்கை வாழ்க்கையாவது சீர்பட்டுப் போனதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.... முத்தையனைக் கொன்றவன் யார்? என் வாழ்க்கையும் அழித்து உயிருக்குயிரான என் தங்கையையும் என்னையும் பிரித்தவன் யார்?... இருமல் நின்று வயிற்றை வலித்தது. எழுந்து வந்தான். வீட்டின் அருகில் இருந்த காட்டு வாழை மரம் பேயாக பயமுறுத்தியது. கண்களில் கண்ணீர் பெருகியது.

மணல்மேட்டை விட்டு சீர்பாதநல்லூர் வந்தான். மணல்மேட்டிலேயே புதுப்புது மெத்தை வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இருபுறமும் சப்பாத்திகள். தலையை முக்காடிட்டுக் கொண்டு போனான். ஏனோ அன்று தெருவிளக்குகள் எரியவில்லை.

மெலிந்தும், தாடியும், மீசையும் உள்ள அவனை யாரும் எளிதில் அடையாளம் காணமுடியாது... குரலைக் கொண்டுதான் மாயாண்டி என்று அறிய முடியும்... வடிவேலு வீடு நெருங்கிவிட்டது. யாரோ ஒரு கிழவி... யார் போறது? என்றாள்... காதில் விழாதது போல் வடிவேலு வீட்டெதிரில் நின்றான்... தங்கை செங்கமலம் குரல் கேட்டது.

"டேய்... சுந்தரம்... எழுதிட்டியா?... புத்தகங்களை எடுத்துவைத்துவிட்டு வா... வந்து சாப்பிடு... வா... வா... கற்பகம் உன்னை தனியே கூப்பிடனுமா? கற்பகம்... வா..."

"இதோ வரேம்மா..." குரல் இனிமையாக மாயாண்டி காதில் விழுந்தது. "சுந்தரம் வாடா அம்மா கூப்பிடுறாங்கடா" "நீ போ... நான் எழுதிட்டு தான் வருவேன்..."

"நீ வாடி கற்பகம்.. அவன் மாமன் மாயாண்டி மாதிரிடி முரட்டுப்பய.. வா.. வா.. நீ வந்து சாப்பிடு..." அதற்குள் வாயிற்படி அருகே நிழலாடுவதைக் கவனித்த செங்கமலம்!...

"யாரது..." என்று கேட்டுவிட்டு தெரு விளக்கைப் போட்டாள். மாயாண்டி அங்கிருந்து வேகமாய் நகர்ந்தான்.

"யாரும்மா" என்ற கற்பகம் குரல் கேட்டது.

"யாரோ பிச்சைக்காரன்... வா... வா சாப்பிடலாம்" என்ற செங்கமலத்தின் குரலும் கேட்டது. அந்தத் தெருவைத் தாண்டி பாட்டைக்கு வந்து சேர்ந்தான். எவருக்கும் அஞ்சாமல் வாழ்ந்த மாயாண்டிக்கு பயம் கவ்வியது. வீட்டுத் திண்ணையில் வந்து படுத்தான். தங்கையும், அவள் பெற்ற குழந்தைகளையும் பார்க்க முடியாவிட்டாலும் குரல்களைக் கேட்டதும் அவன் மனம் துள்ளிக் குதித்தது.

நான் முரடனாம்... தங்கை சொல்கிறாள்... என்று வாய்விட்டு சிரிக்கத் தோன்றியது. அடக்கிக் கொண்டான். அவன் உடல் குளிரால் நடுங்கியது. வயிற்றுவலி அதிகமாகியது. அழுத்திப் பிடித்துக்கொண்டு திண்ணையில் படுத்தான்.

பொழுது புலர்ந்தது. வேடிச்சி வந்தான். மாயாண்டி இன்னும் தூங்குவதைக் கண்டு மற்றொரு திண்ணையில் உட்கார்ந்தான்.

மாயாண்டி எவ்வளவு பலசாலி. வழுக்கு மரப் போட்டியில் வருஷா வருஷம் அவன்தான் ஜெயிப்பான். பொங்கலின்போது தெற்குத் தெருவில் நடக்கும் எருதாட்டத்தின் போது அவன் மாடுதான் முன்னே வந்து பரிசை தட்டிச் சொல்லும். பிள்ளைகள் சாப்பிடவில்லை என்றால் "தோ பாரு.. சாப்பிடல்லே... மாயாண்டியை கூப்பிடுவேன்"னு சொல்லற தாய்மார்கள் இன்னிக்கும் அங்க உண்டு. உருவம் தான் முரடன். அவன் நெஞ்சிலும் அன்பு இருந்தது. பூசாரி வீட்டு காவேரி மேல் அவனுக்கு ஒரு கண். அவளும் ஆசைப்பட்டாள். மாயாண்டி கொலைக்குற்றத்திலே மாட்டிக் கொண்டதால் நடக்காமல் போய்விட்டது. அப்பேர்பட்ட மாயாண்டி இன்று மெலிந்து சுருண்டு கிடக்கிறானே...

என்று மாயாண்டியைப் பற்றி எண்ணியபடி அமர்ந்திருந்த வேடிச்சி "அண்ணே எழுந்திருங்க... விடிஞ்சி போச்சி... எழுந்திருங்க... " பேச்சு மூச்சில்லாமல் படுத்திருப்பதைக் கண்டு, தொட்டுப்பார்த்தான். மாயாண்டி உயிர் பிரிந்திருந்தது. திடுக்கிட்டு ஓடினான்.

வேடிச்சி வந்து சொன்னதைக் கேட்டு செங்கமலம் கதறிக் கொண்டு ஓடிவந்தாள்.. கூட்டம் கூடியது.. மாயாண்டி எலும்புந் தோலுமாய் கிடப்பதைக்கண்டு அவள் குலை பதறியது.

"ஐயோ அண்ணா... என் முகத்தில் விழிக்கக்கூடாதுன்னு உன் சொந்த மண்ணில் உயிரை விட்டுட்டியா? அண்ணா... அண்ணா... " என்று கதறினாள் வடிவேலுவும் வந்தான். செங்கமலம் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

எப்படி இருந்தவன்! இப்படி ஆகிவிட்டானே! என்று ஊர் மக்கள் கண் கலங்கினார்கள். வடிவேலுவின் கண்கள் மாயாண்டியை பார்த்து கலங்கின. கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. மாயாண்டியின் சடலத்தை விசுப்பலகை ஒன்றில் படுக்க வைத்தனர். பந்தல் போட்டனர். செங்கமலம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். திண்ணைச் சுவற்றில் தழையால் "முத்தையனை நான் கொலை செய்யவில்லை" என்று எழுதி இருந்தது. மாயாண்டியின் கையெழுத்து தான் அது... அதை வெறித்து பார்த்தபடி இருந்தான் வடிவேல்.

"அண்ணா சாவதற்காகவா பொறந்து வளர்ந்த ஊருக்கு வந்தீங்க... உங்க செங்கமலம் வந்திருக்கேன் அண்ணா... கண்ணைத் திறந்து பாரு அண்ணா..." என்று கதறினாள்.

எல்லாம் முடிந்தது. அன்று மாலை மாயாண்டி சாம்பலானான்.

முத்தையனைக் கொன்றது செங்கமலத்தின் கணவன் வடிவேலு என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. இனியும் தெரியப்போவதில்லை. சட்டம் இப்படித்தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் நிரபராதிகளைத் தண்டித்துவிடுகிறது. குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். அதற்குக் காரணம் செங்கமலம்தானே! பழி ஒரு இடமும். பாவம் ஒரு இடமும் சங்கமித்தது.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link