சிறுகதைகள்


தாலி போட்ட வேலி

கூடல்.காம்
"என்னா மாரிமுத்து ஊர் கூட்டம் கூடியாச்சி. நீ மரமாட்டம் நின்னா எப்படி? உம் நடந்ததைச் சொல்லு" என்றார் ஊர் நாட்டாண்மை.

மாரிமுத்து முகத்தில் முத்து முத்தாய் வியர்வை... பேச நாக்கு எழவில்லை...

"நான் எப்படிங்க என் வாயால் சொல்லுவேன்... ஐயா உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே".

அவன் கண்கள் கலங்கின... உடல் கூனிக் குறுகியது.

"இதோ பாரு மாரிமுத்து... ஏங்கிட்டே சொன்னால் போதாது.... எல்லோருக்கும் கேட்கும்படியா சொல்லு".

"ஆமாம் மாரிமுத்து நாட்டாமை சொல்ற மாதிரி எல்லோரும் கேட்கிற மாதிரி சொல்லு..." என்று கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.

எதைச் சொல்வது... எப்படிச் சொல்வது என்று ஒரு கணம் தயங்கினான். குரல் வளையில் இருந்து வெளியே கேட்கவில்லை.

"இருங்கைய்யா யாரும் பேசாதீங்க... சொல்லு மாரிமுத்து"

"என் மகள் பொன்னியை மெத்தை வீட்டு ஐயா மகன் சின்னதுரை ஆசை காட்டி... கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி கெடுத்துட்டாருங்க... போய் நியாயம் கேட்டதற்கு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாருங்க..."

"டேய் நிறுத்துடா.... எம்மவன்தான் கெடுத்தாங்கிறதுக்கு என்னடா ஆதாரம்..." என்று சின்னதுரையின் அப்பா இராமநாதன் கோபமாகக் கேட்டார்.

"என்னய்யா இது.... அக்கிரமமா இருக்குது... இதையே அவர் வீட்டு பெண்ணை யாராவது கெடுத்திருந்தா இந்நேரம் கட்டி வச்சிலே அடிச்சிருப்பாரு.." என்று கூட்டத்தில் யாரோ கேட்க.

"எவண்டா அவன் சட்டம் பேசறவன் நாக்கை துண்டாடி விடுவேன் தூண்டாடி.." என்று எழுந்துநின்று கோபப்பட்டார் இராமநாதன்.

கூட்டத்தில் எல்லோரும் ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஏம்பா ஆளுக்கு ஆள் பேசறீங்க... யாரும் குறுக்கே பேசக்கூடாது... நீங்க உட்காருங்க..." என்று அமைதிபடுத்தினார் நாட்டாண்மைக்காரர்.

"இவன் பெண்ணை ஒழுங்கா வளர்க்காம பஞ்சாயத்துக்கு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு.. இதோ பாரு நாட்டாமை.... எம்மவன் சின்னதுரைக்கும் இவன் பெண்ணுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை."

கூட்டத்தில் மீண்டும் ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர் "இப்படி சொன்னா எப்படிங்க" என்றார்.

"யார்றா பேசினது... எழுந்திருடா... தோ பாரு நாட்டாமை... நான் என் பையனை விசாரிச்சுட்டேன். அந்தப் பொண்ணு கிட்டே பேசினது கூட கிடையாதுன்னு சொல்லிட்டான்.. டேய் மாரிமுத்து... இரும்புதாண்டா துருப்பிடிக்கும் தங்கம் என்னிக்குமே துருப்பிடிக்காதுடா... தங்கம்னு சொல்றது என் மவன் சின்னதுரையை... நா வர்றேன்.... எழுந்திருங்கையா... போகலாம் பெரிய பஞ்சாயத்தாம் பஞ்சாயத்து..." என்று கூறிவிட்டு இராமநாதன் எழுந்திருக்க அவனைச் சார்ந்த இருபது இருபத்தைந்து பேர் எழுந்து நின்றார்கள். கூட்டத்தில் ஆளுக்கு அள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இராமநாதன்.... இராமநாதன்.... நான் சொல்றதைக் கேளுங்க.. உட்காருங்க... ஊர் கூட்டத்தை நீங்களே மதிக்கலேன்னா வேறு யார் மதிப்பாங்க... மாரிமுத்து தகுந்த ஆதாரத்துடன் தான் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கான்" என்றார் தவிப்புடன்.

"யோ உங்களாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க... எழுந்திருங்கையா போவலாம்" என்று சொல்லிவிட்டு இராமநாதன் போக இருபது இருபத்தைந்து பேர் அவருடன் சென்றார்கள்.

கூட்டத்தில் பரபரப்பு தென்பட்டது.

"என்னங்க அவுரு இப்படி பேசிட்டு போராரு.... ஒரு ஏழை இப்படி சொல்லிட்டு போனா விடுவீங்களா? கட்டி வச்சில்ல உதைப்பீங்க.... அரசியல்ல பெரிய செல்வாக்கு. அதான் ஊரையே பகைச்சிட்டு போராரு.. நீங்களும் விட்டுட்டீங்க" என்ற குரலும் ஒலித்தது.

"ஊருடன் பகைத்தால் வேருடன் கெடுவான்னு சொல்வாங்க" என்ற குரலும் கூட்டத்தில் கேட்டது. உடனே நாட்டாண்மை அமைதியா இருக்கும்படி கேட்டுவிட்டு,

"இந்த மாதிரி சில்லரை ஆளுங்களால.... கட்சிக்கே கெட்ட பேர்னு... எங்கே நினைக்கிறாங்க... இதுவரைக்கும் நம்ம ஊர் விவகாரம். போலீஸ், கோர்ட்டுன்னு போகலே... இராமநாதன் போகணும்னு ஆசைப்படராரு.... உம்.... மாரிமுத்து கவலைப்படாதே ஊரே உன் பக்கம்.... அவனை நாங்கள் விடமாட்டோம்" என்று நாட்டாண்மைக்காரர் கூறினார்.

மாரிமுத்து, காமாட்சி இவர்கட்கு ஒரே மகள் பொன்னி. அழகானவள், படித்தவள், அமைதியானவள், கூட்டத்தில் நடந்ததை மாரிமுத்து வந்து சொல்லி சொல்லி கலங்கினார். இதைக்கண்ட பொன்னி தேம்பி தேம்பி அழுதாள்.

"பொன்னி நீ ஏண்டி அழறே... இந்த காமாட்சியை நெருப்புன்னு இந்த ஊரே சொல்லும்.... அப்படிப்பட்டவ வயத்திலே.... இப்படிப்பட்ட பொண்ணா வந்து பிறந்துட்டியே! தாய் அறியாம மகசூல் கொள்ள முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா என்னை பழிக்கு அளாக்கிட்டியே... என் வயிறு பத்தி எரியுதே... ஆசை காட்டி மோசம் செய்துட்டானே" என்று ஆதங்கமாக காமாட்சி பேசினாள்.

"தலை நிமிர்ந்து நடந்த என்னை தலை குனிய வச்சிட்டாளே... காமாட்சி நாம மூணு பேரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.... நெல்லுக்கு அடிக்கிற மருந்து நேத்துதான் வாங்கியாந்தேன்... வா... காமாட்சி" என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் மாரிமுத்து.

"அப்பா... என்னால் அல்லவா நம்ம குடும்பம் இப்படி தலை குனிய நேரிட்டது... நான் செத்து ஒழிஞ்சு போறேன் அப்பா..." என்று கதறினாள் பொன்னி.

"நாம ஏங்க தற்கொலை செய்து கொள்ளணும். ஆசை காட்டி நம்ம பொன்னி தவிக்கவிட்டாங்களே அவுங்கதான் தற்கொலை செய்து கொள்ளணும். செத்துபோன அவன் பாட்டியோட தாலியை இவ கையிலே கொடுத்து சத்தியம் செய்தானே... அது போதுங்க... நீ ஏண்டி அழறே... இந்தத் தாலியை சின்னதுரை இவள் கையிலேதானே கொடுத்தான். நான் இவ கழுத்திலேயே கட்டப்போறேன்". என்றாள் காமாட்சி உறுதியாக.

இடையில் மாரிமுத்து அவளை இழுத்து நிறுத்தி காமாட்சி இது என்ன பைத்தியக்காரத்தனம்.

"நீங்க பேசாம இருங்க... பொன்னி வா இங்கே. இந்தத் தாலியை அந்த வீட்டு மகராசி ஐம்பது வருஷமா சுமந்தாங்க. இனி இந்தத்தாலி உன் கழுத்திலே தொங்கட்டும். ஏன்னா? எம்மவன் கெடுத்ததற்கு யார் சாட்சின்னு அந்த பெரிய மனுஷன் கேட்டானே. இனிமே இந்த தாலி தாண்டி சாட்சி... கையிலே கொடுத்தாலும் ஒண்ணுதான்.... கழுத்திலே கட்டினாலும் ஒண்ணுதான்" என்றாள் காமாட்சி.

பொன்னி கதறி அழுதபடி இருந்தாள்.

"காமாட்சி... இதை திருட்டுத் தாலின்னு சொல்லி காரி துப்புவாங்க..." என்றான் மாரிமுத்து.

"துப்ப மாட்டாங்க... துணை நிற்பாங்க..... தாய் மகளுக்குக் கட்டிய தாலின்னு பெருமையாத்தான் பேசுவாங்க".

"அம்மா..." கதறினாள் பொன்னி

"இவ கழுத்திலே நான் கட்டுகிற தாலி இவளுக்கு வேலியா இருக்குமுங்க.... வேலியா இருக்குமுங்க... அதோ இடி இடிக்குதே... அது தாங்க மங்கல ஒலி... கல்யாணத்திலே அக்னி சாட்சியா தாலி கட்டுவாங்க... இப்போ நான் இவளை பெத்த வயிறு பற்றி எரியுதே அது தாங்க சாட்சி... அது தாங்க சாட்சி.. இவ வயித்திலே வளர்ற குழந்தையை அநாதையாக்க விடமாட்டேங்க... விடமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டே பொன்னி கழுத்திலே அந்தத் தாலியைக் கட்டினாள் காமாட்சி.

"தோ பாருங்க.. இன்று முதல்.. இப்பொழுது முதல்... நீ இராமநாதன் வீட்டு மருமகள்... சின்னதுரை மனைவி... உன் வயிற்றில் வளரும் குழந்தை அவனுடையது... இதை யாரும் மாற்றவோ மறுக்கவோ முடியாது. உன் கழுத்தில் தொங்கும் இந்தத் தாலியை யார் அபகரிக்கமுடியும்? வாழ்வாங்கு வாழ்ந்த அந்த மகராசி கமலாம்மா கழுத்தில் இருந்த தாலி... இந்தத் தாலி அந்தக் குடும்பத்தையே வேரறுக்கப்போவுது... வேரறுக்கப்போவது..." என்று கனல் தெறிக்க பேசிவிட்டு மகள் பொன்னியை அணைத்துக் கொண்டாள் காமாட்சி.

இராமநாதன் ஊரிலேயே பெரிய பணக்காரன். இராமநாதன்னு சொன்னா அந்த தாலுக்காவே பெருமை பேசும். அந்த ஊரிலே பல ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரன். மாடிமேல் மாடி கட்டிய விடு. மாடுகளே நூறு தேறும் அளவுக்கு மாட்டுப்பண்ணை வைத்திருப்பவன். ஊருக்கு அவன்தான் தலைவர். பால் ஸ்டோருக்கும் அவன் தான் தலைவர். முறுக்கு மீசையும் குடுமியும் அவனை பழைய பண்ணையார் என்று சொல்ல வைப்பதாகும்.

அவன் மகன்தான் சின்னதுரை. ஏழை மாரிமுத்து மகள் பொன்னி. எப்படியோ அவளை ஆசைகாட்டி அவளை அன்பாக பேசி கரைத்து சொந்தமாக்கிக்கொண்டு விலகி ஓடிவிட்டான். இவர்கள் கூடிக் குலவியதற்கு சாட்சியாக வயிற்றில் சிசு. இவளை நம்ப வைக்க தன் காலஞ்சென்ற பாட்டி கமலாம்மாவின் தாலிக்கயிரோடு பொன்னியிடம் கொடுத்து சத்தியம் செய்துவிடவே நம்பிவிட்டாள் பொன்னி. நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவிட்டான் சின்னதுரை.

இராமநாதன் செல்வாக்கென்ன... அவனுக்கு படைபலம் என்ன?... தன்னை எவரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற பணத்திமிரில் ஊர் கூட்டத்தையே பகைத்துவிட்டு வந்துவிட்டான். ஊரே கூடிக்கூடி பேசியது. ஊரே திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டது. புகார் மனு கொடுக்கப்பட்டது.

"விஷயம் ஊர் கூட்டத்தோடு போகும்னு நினைச்சேன். ஆனா போலீஸ் வரைக்கும் போயிட்டது... அங்கே நம்ம மானமும் போய்விட்டது பார்வதி" என்றான் இராமநாதன்.

"என்னங்க நடந்தது விபரமா சொல்லுங்களேன்".

"இனி என்னடி நடக்கனும்? உன் மகன் சின்னதுரை பண்ணிய காரியம்... என் மூஞ்சிலே காரி துப்ப வச்சிட்டது... எங்கம்மா தாலியை காணோம்... தாலியோட மூணுபவுன் குண்டு, நாணல், பொன்காசுகள் காணோம்னு தேடிக்கினு கெடந்தையே... அந்தத் தாலி இப்ப அந்த பொன்னி கழுத்திலே தொங்குதடி... திருட்டுத்தாலி கட்டிட்டா... அவளை நான் ஏத்துக்குவேனா" என்றார் இராமநாதன்.

"என்னங்க சொல்றீங்க"

"உண்மைதான் பார்வதி... அந்த நாட்டாமை இதைத்தான் ஆதாரம்னு சொன்னார்னு இப்பதான் புரியுது... எங்கே உன் மகன்... எனக்கு வேலை வச்சிட்டான்... கோர்ட் இருக்குது.... வக்கீல் இருக்காரு... ஒரு கை பார்த்துடறேன்".

"ஏங்க நம்ம வீட்டு விவகாரம் கோர்ட் வரைக்கும் போய் சிரிக்கணுமா? நடந்தது நடந்து போச்சி... பேசாம பொன்னியை நம்ம சின்னதுரைக்கே..." என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே....

"என்னடி சொன்னே... தலை துண்டிச்சி கீழே விழுந்தாலும் அவளை என் வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டேன். வெட்கம் மானம் இல்லாம போலீஸ் ஸ்டேஷன்லே என் மாமனாரு அவருடைய அம்மா கழுத்திலே ஐம்பது வருஷமா தொங்கின தாலிங்க இது. அதைத்தான் சின்னதுரை என் கழுத்திலே கட்டினாருன்னு என் எதிரிலேயே பேசினாள் தெரியுமா? அவளை நான் கோர்ட்டில் நிக்கவைத்து வாங்கு வாங்குன்னு வாங்கிடறேன்னு நம்ம வக்கீல் சீனீவாச ஐயர் சொல்லி இருக்கிறார். கேஸ் கோர்ட்டுக்கு வரட்டும்".

ஆறு மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்றது. வழக்கு நடந்தது. விசாரிக்கப்பட்டார்கள். சின்னதுரை தாலியை நான் அவளிடம் கொடுக்கவே இல்லைன்னு நீதிமன்றத்தில் சத்தியம் செய்தான். பொன்னியும் விசாரிக்கப்பட்டாள். நிறைமாதமாக இருந்த பொன்னி, "என்னை ஆசைக்காட்டி இதோ என் கழுத்தில் உள்ள தாலியை என்னிடம் கொடுத்து நாளைக்கு வெள்ளிக்கிழமை கழுத்தில் போட்டுக்கொள் என்று சொல்லி கொடுத்து விட்டார். இதுதான் உண்மை. அதன் பயனாக அவர் வீட்டு வாரீசை நான் சுமக்கிறேங்க" என்று கதறி அழுதாள்.

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த ஊர் மக்களில் முக்கியமானவர்களை இராமநாதன் விலை கொடுத்து வாங்கிவிட்டான். ஆனால் நாட்டாண்மைக்காரர் நடந்ததை நீதிமன்றத்தில் கூறினார்.

வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கு இடையில் பொன்னி திருக்கோவிலூர் சந்தைப்போட்டை மிஷின் மருத்துவ நிலையத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை அப்படியே சின்னதுரையை உரித்து வைத்திருந்தது. குழந்தை பிறந்ததும் மருத்துவ நிலைய பதிவேட்டில் தந்தை சின்னதுரை தாய் பொன்னி என்று பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் குழந்தையை கொண்டு வந்தனர். சின்னதுரை இரத்தம், குழந்தையின் இரத்தம் பரிசோதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார். இராமநாதன் தன் தாயார் தாலி 2 வருடங்களுக்கு முன்பே திருடு போய்விட்டதாக முன்னதாகவே புகார் கொடுத்தது போல் ஒரு பொய்யான விண்ணப்பத்தை காவல் நிலையத்திலிருந்து பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இரத்தப் பிரிவைக் கொண்டு இவருக்குத்தான் இந்தக் குழந்தை பிறந்தது என்று சொல்ல முடியாது என்றும் தாலியை இவர்களே கட்டிக்கொண்டு இராமநாதன் தாயார் தாலி என்று சொல்வது பொய் என்றும் வாதிக்கப்பட்டது.

சின்னதுரையின் இரத்தப்பிரிவும் O பாசிட்டிவ் குழந்தையின் இரத்தப் பிரிவும் O பாசிட்டிவ் அதனால் சின்னதுரையின் மகன்தான் இந்தக் குழந்தை என்று நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார் கடைசியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி.

"ஆண்கள் தவறு செய்கிறார்கள். எளிதில் தப்பி விடுகிறார்கள். சமுதாயமும், இயற்கையும் அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பெண் அவ்வாறு தப்பித்துக்கொள்ள வழி இல்லை. ஆகவே திருமணமாகாமல் இருக்கும் பெண் விழிப்புடன் இருக்க வேண்டும்..."

"...எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் உடம்பின் உணர்ச்சி உள்ள வரையில் கணவன் மனைவி அல்லாத ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகாமல் இருப்பது நல்லது."

"...சின்னதுரை பொன்னியிடம் தாலி கொடுத்ததற்கு போதுமான சாட்சியமும் இல்லை. சின்னதுரையையும் பொன்னியும் ஒன்றாக இருந்ததை பார்த்ததாக சாட்சியும் இல்லை. இரத்தப்பிரிவை வைத்து இன்னார் குழந்தை என்று துல்லியமாகச் சொல்ல முடியாது என்று அரசாங்க மருத்துவரின் சாட்சியத்தையும் ஏற்று இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்". என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

நீதிமன்றத்தில் பொன்னி அழுது கொண்டே போனது நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

பொன்னி வீட்டில் அழுதபடி இருந்தாள். காமாட்சி தன் மகளைப் பார்த்து,

"ஏண்டி, நீ அழறே... வாழ்வாங்கு வாழ்ந்த அந்த மகராசி கமலாம்மா கழுத்திலே தொங்கின தாலிடி இது. அதையே போலின்னு சொல்லிட்டாங்க... தீர்ப்பு என்னடி தீர்ப்பு. அவன் மனசாட்சியே அவனை அணு அணுவா கொல்லப் போவுதுங்க. இந்தத்தாலி அவனுக்கு வேலி போடத்தான் போவுது. அழாதே பொன்னி அழாதே..." என்று மகளுக்குச் சொல்லிவிட்டு அழுதாள் காமாட்சி.

ஒரு மாதம் ஒரு நாள் போல கழிந்தது.

குழந்தையை ஏணையிலிட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள் பொன்னி. காமாட்சியும் மாரிமுத்துவும் வீட்டுத்தோட்டத்தில் தக்காளிக்கு வேலி கட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மூச்சு வாங்க ஓடிவந்தார்.

"மாரிமுத்து அண்ணே. மெத்தை வீட்டுக்காரர் அந்த சின்னதுரைக்கு பெண் பார்க்க கள்ளக்குறிச்சிக்கு போனாங்களாம்... சங்கராபுரம் தாண்டி மூரார்பாளையத்துக்கு அருகில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்து எல்லோருக்கும் பலத்த அடியாம்... கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியிலே சேர்த்து இருக்காங்களாம்" என்றான் மூச்சுவாங்க.

"ஐயோ கடவுளே அவரைக் காப்பாற்று... என்னை அவர் ஏத்துக்காவிட்டாலும் பரவாயில்லை... அவர் நன்றாக இருக்க வேண்டும்.... கடவுளே... என் பூவும் பொட்டும் அழித்து விடாதே... என் மகனை அனாதையாக்கி விடாதே... தாயே மாரியாயி என் கணவரைக் காப்பாற்று தாயே...." என்று கதறினாள் பொன்னி.

உடனே உள்ளே இருந்து வெளியே வந்த காமாட்சி, "நான் போட்ட சபதம் நிறைவேறிப்போச்சி பார்த்திங்களா.... அந்த மகராசியின் தாலி வேலி போட்டுவிட்டது" என்றாள்.

"அம்மா வாயை மூடு எந்த நேரத்தில் என்ன பேசுகிறாய்? அப்பா வாங்கப்பா போகலாம்.. கடவுளே அவரைக் காப்பாற்று.... அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது கடவுளே..." என்று அழுதபடி ஏணையில் இருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்தும் வந்தது.

பேருந்தில் மாரிமுத்து, காமாட்சி பொன்னி குழந்தையுடன், மற்றும் சிலர் ஏறினார்கள்.

"பொன்னி நம்மை பார்க்க விடுவாங்களாம்மா"

"அப்பா... அவர் என்னையும் என் குழந்தையையும் பார்த்துவிட்டால் போதும். குணமாகி விடுவார் அப்பா..."

"அவர்கள் ஒட்டுமில்லை உறவுமில்லைன்னு கோர்ட் மூலமா கத்தரித்து விட்டு விட்டார்களே பொன்னி... நம்மை பார்க்க விடுவார்களா?" என்றாள் காமாட்சி

"அப்பா என் மகனுக்கு அப்பா வேண்டும்பா. அவர் என்னை ஏத்துக்காவிட்டாலும் பரவாயில்லை. தூர இருந்தாவது பார்த்துவிட்டு வந்து விடலாம்மா... என் பூவும் பொட்டும் நிலைச்சா போதும்மா..." என்று கலங்கினாள் பொன்னி.

இராமநாதனிடம் மாரிமுத்துவின் குடும்பமே வந்திருப்பதை ஆசிரியர் சிங்காரம் கூறினார்.

"அப்படியா அழைச்சிட்டுவாங்க... என் பேரனைப் பார்க்கனும்... அழைச்சிட்டு வாங்க..." என்று கண்கலங்கினார் இராமநாதன்.

ஆசிரியர் சிங்காரம் அனைவரையும் வந்து அழைத்துப் போனார். இராமநாதன் மாரிமுத்துவைப் பார்த்து,

"மாரிமுத்து.... நீ எவ்வளவு நல்லவன்... உன் மகள் பொன்னிக்கு என் மகன் செய்த துரோகம் என் கால் எலும்பு உடைஞ்சி போச்சி.... காமாட்சி நீ உன் மகள் பொன்னிக்கு தாலி கட்டி வேலி போட்டே, அந்தத் தாலி எங்க அம்மா சுமந்த தாலியாச்சே... அது பாசவேலி போட்டு எங்களை பள்ளத்திலே தள்ளிவிட்டது... பொன்னி.... என் மருமகள் பொன்னி... எங்கே... என் பேரன் எங்கே..." என்று அழுதார் இராமநாதன்

"மாமா... மாமா... இதோ இருக்கிறேன்..."

"எங்கேம்மா என் பேரன்... எங்கேம்மா என் பேரன்..."

"இதோ உங்ககிட்டே தாவறான் பாருங்க மாமா.."

பொன்னியிடமிருந்து பேரனை படுத்தபடி வாங்கி அணைத்துக்கொள்கிறார்.

அப்போது தோள்பட்டையில் சிராய்ப்புக்கு மருந்து போட்ட நிலையில் சற்று கால் தாங்கி தாங்கி சின்னதுரை வந்து "பொன்னி.... என்னை மன்னிச்சிடு... நான் உனக்கு செய்த துரோகத்தால்தான் இந்த விபத்து நடந்து எங்கப்பா காலே முறிஞ்சு போச்சு...." என்று கரைந்து கலங்கினான் சின்னதுரை.

பொன்னி கண்களில் கண்ணீர் பெருகியது.

"டேய்... சின்னதுரை இங்கே வாடா உன் பிள்ளைகிட்டே மன்னிப்பு கேள்டா... அம்மா பொன்னி.... என் பேரனுக்கு என்னம்மா பேர் வச்சிருக்கே...."

"உங்க பேர்தான் மாமா...."

"வேணாம்மா... இந்தப்பாவி பேரை என் பேரனுக்கு வைக்க வேண்டாம்மா... என் அப்பா பேரை வையுங்கம்மா... அவர் பேர் ஆறுமுகம்... வாழ்வாங்கு வாழ்ந்தவர்மா அவர்... அடடே என் பேரன் என்மேல் ஈரமாக்கி என் பாவத்தை கழுவிட்டான்மா... என் பேரன் என்னை மன்னிச்சிட்டாம்மா... என்னை மன்னிச்சிட்டாம்மா..." என்று சொல்லிக்கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார் இராமநாதன்.

எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link