சிறுகதைகள்


கண்திறந்திட வேண்டும்

கூடல்.காம்
"செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசி தட்டி ஒழுங்கா அடுக்கி வை. நானும் பப்பியும் கடைத்தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்."

கதவைத் தாளிட்டுவிட்டுப் புத்தக அடுக்குகளைப் பிரித்துத் துடைக்க ஆரம்பிக்கிறாள் செல்லி. அவளுக்குப் புஸ்தகமென்றால் கொள்ளை ஆசை. பளபளப்பான வண்ணங்களில் வழுக்கிக் கொண்டு போகும் அட்டைகளை அணிந்திருக்கும் அந்தப் புத்தகங்களை... ஒவ்வொன்றாக எடுத்து ஆசை தீரத் தழுவி, அவற்றின் வாசனையை முகர்ந்து நெஞ்சு கொள்ளாமல் நிரப்பிக் கொள்கிறாள். இவள் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்த இத்தனை நாள்களில் ஒருபொழுது கூட இந்த வீட்டிலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை. கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கப்பட்டிருக்கிற அலங்கார, அழகுப் பொருள்களைப் போல இந்தப் புத்தகங்களும் பணம் படைத்தவர்களின் அந்தஸ்தைக் கட்டியம் கூறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமே என்ற உண்மை புரியாதவளாய், அவற்றை வெற்றுப் பார்வையோடு வெறிக்கிறாள். அவளுக்கிருக்கிற அரைகுறை ஞானத்தில் அந்தப் புத்தகங்களில் பரவிப் படர்ந்திருக்கிற ஆங்கில எழுத்துக்களை, எழுத்தளவில் இனம் காண முடிகிறதே, ஒழிய எழுத்துக் கூட்டிச் சொல்ல, உச்சரிக்க முடியாத குறை, உள்ளுக்குள்ளிருந்து முட்டிக்கொண்டு வருகிறது. கண்ணைக்கூடச் சரியாக விழித்துப் பார்க்கத் தெரியாத கோழிக் குஞ்சை எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து தூக்கிக்கொண்டு போவதைப் போல விதி அவளை ஒரே தூக்காய்த் தூக்கி இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டது!

"எல்லோரும் ஒரு தடவை சத்தமாய்க் கைதட்டுங்க! இந்த மாசமும் நம்ம செல்லிதான் முதல் ராங்க் வாங்கியிருக்கா. செல்லி! வந்து ராங்க் கார்டை வாங்கிக்கோ..."

கூச்சமும் பெருமிதமும் பின்னலிடும் உணர்ச்சிக் கலவைகளுடன் வகுப்பாசிரியரை நோக்கி வருகிறாள் அவள்.

"இங்கிலிஷ்லே மட்டும் எல்லார் மார்க்குமே மோசம்தான். செல்லி கொஞ்சம் பரவாயில்லாம... ஐம்பது மார்க் வாங்கியிருக்கா... ஆனாலும் இது போதாது."

ஆசிரியர் பேசிக் கொண்டே போகக் கையில் பிடித்திருக்கிற மார்க் அட்டையில் மனசு ஒட்டாமல் செல்லியின் கவனம் ஆத்தாவின் நினைப்பில் வழுக்கிக் கொண்டு போகிறது. படிக்க வேண்டும் என்கிற பொறியை அவளுக்குள் "பதியன்" வைத்து, நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அதை விசிறிவிட்டுக் கொண்டே இருந்த ஆத்தா.

"எங்க பொளப்புதான் இப்படித் தற்குறித்தனமா... நாறப் பொளப்பாப் போயிடுச்சு. நீயாச்சும் இதிலே முங்கி முக்குளிச்சுப் போயிடாமே, எம்பி மேலே வந்திடணும் கண்ணு. இந்தக் கண்ணுக்குள்ளே உசிரை வச்சிக்கிட்டு நானும் ஒரு மனுசின்னு நடமாடிக்கிட்டிருக்கிறதே அதுக்குத்தான்."

அப்படித்தான் இருந்தாள் ஆத்தா. நாலெழுத்துப் படிக்கத் தெரியாத பாவத்துக்காக ஒரு துண்டளவு வயல்காட்டையும் ஒரு ஏக்கர் புன்செய்க் காட்டையும் நீட்டிய இடத்தில் கைநாட்டுப்போட்டு ஏமாந்து விட்டு, அந்தத் துயரத்திலிருந்து மீளமுடியாமலே அப்பன் செத்துப்போன பிறகு, அந்தத் தாய் ஜீவித்ததற்கான அர்த்தமே அவள் தான்.

ஐந்து மைல் தொலைவு நடந்துபோய்க் களையெடுக்க வேண்டுமா? கருவேல முள் சுள்ளிகளைக் கட்டுக்கட்டாய்ச் சுமந்து வர வேண்டுமா? எந்த வேலையுமே கிடைக்காத நாள்களில் பெரிய வீட்டுக்காரர்களுக்குப் பீப்பாய் பீப்பாயாகத் தண்ணீர் இறைத்து ஊற்ற வேண்டுமா? எதற்குமே.... எப்போதுமே அலுத்துக் கொண்டதே இல்லை அவள். ஆனால் எது எப்படிப் போனாலும் மணி ஆறடித்துவிட்டால் ஆத்து மேட்டில் உட்கார்ந்து, மூன்று கல் தாண்டியுள்ள பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கிற செல்லியை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவாள். அவள் வந்த பிறகு சுடுநீர் வைத்து மகளைக் குளிக்க வைத்துவிட்டு, சத்துணவு சாப்பிட்டு மரத்துப்போன அந்த நாக்குக்கு ருசியான காரத் துவையலின் துணையோடு கூழோ, கஞ்சியோ ஆக்கிப் போடுவாள். எப்படி எப்படியெல்லாமோ காசை மிச்சம் பிடித்து வாங்கி வந்திருக்கிற சவுக்காரக் கட்டியில் செல்லியின் சீருடைகளைத் துவைத்துப் போட்டுவிட்டுத்தான் படுக்கையில் சாய்வாள். அப்படியும் சும்மா இருக்கமாட்டாள்!

"செல்லி... அந்தப் புஸ்தகத்தைப் பிரிச்சு வச்சு ரெண்டு பாடத்தைப் படி கேப்போம். காதிலே நல்ல வார்த்தையாவது வந்து விழட்டும். அதென்னவோ நீ சத்தமாப் படிக்கிறதைக் கேக்கிறப்ப எங்க வயக்காட்டுப் பக்கத்திலே பாட்டுப் படிக்கிறதைக் கேக்கிற மாதிரி சொகமா இருக்கு."

திருநீறு போட்டு அவள் துலக்கி வைத்த அரிக்கேன் விளக்கின் ஒளியில் செல்லி படிக்க, அதைக் கேட்டுக் கொண்டே கண்கிறங்கி அசதியாய் உறங்கிப் போவாள்.

சிறகுக்குள்ளே மகளைப் பொத்திப் பொத்திக் காத்த அந்தத் தாயையும் அவள் பசி மயக்கத்தோடு பாதையில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒரு பொழுதில் பாழும் லாரிக்காரன் ஒருவன் அடித்துவிட்டுப் போய்விட.... நாதியற்றுப் போனாள் செல்லி. இரக்கம் கொஞ்சம் மிச்சமிருந்த தூரத்து உறவுக்காரர் ஒருவர் அனாதை விடுதியில் அவளைக் கொண்டு வந்து சேர்க்க, நொண்டி நொண்டிக் கொண்டு அவள் படிப்பும் ஏதோ தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆத்தாவின் நினைப்பு கண்களில் ஆறாய்ப் பெருகி வர... தாயைத் தடவித் தரும் பாவனையில் கைகள் அனிச்சையாய் மார்க் அட்டையை வருட... மனசு ஊமையாய் அரற்றுகிறது.

"இந்தச் சீரையெல்லாம் பார்க்காம நீ போயிட்டியே ஆத்தா....."

"எப்படியாவது.... எதைச் செய்தாவது.... படித்தே ஆகவேண்டும். நீ ஏத்தி வச்ச விளக்கை அவியவிட்டுறக் கூடாது. "படித்த படிப்புக்கு ஏற்றபடி சின்னதாய் ஒரு டீச்சர் உத்தியோகம். பிறர் கையை எதிர் பார்க்காமல் அதிலிருந்து கொண்டே மேலே மேலே இன்னும் மேலே."

"என்னடி செல்லி? கையிலே கார்டை வச்சிகிட்டுக் கனாக் காண்றியா? அங்கே அரைமணி நேரமா வார்டன் டீச்சர் உன்னைக் கூப்பிட்டு ஆளு மேலே ஆளு விட்டுக்கிட்டிருக்காங்க. போய் என்னன்னு கேளு." கூடப் படிக்கும் சரோஜா அவளைப் பிடித்து உலுக்குகிறாள்.

"என்ன... ஏதாச்சும் வேலை வச்சிருப்பாங்களாயிருக்கும்."

விடுதிப் பெண்கள் ஒருவகையில் அந்த வார்டனுக்குக் கொத்தடிமைகள் போலத்தான். ஹாஸ்டலை ஒட்டியிருக்கும் அவளுடைய வீட்டில் வெங்காயம் உரிப்பதிலிருந்து குழாய்த் தண்ணீர் பிடித்து வைப்பது வரை... சகலத்துக்கும் உழைப்புச் சுரண்டல் அந்த குழந்தைகளிடமிருந்துதான்.

இன்றென்னவோ வார்டனின் சிடுசிடுத்த முகத்திலும்கூடச் சின்னதாய் ஒரு பூரிப்பு.

"செல்லி.... உனக்கொரு நல்ல சேதி வச்சிருக்கேன். அடுத்த வாரம் நீ மெட்ராஸ் போகப் போறே."

"....."

"என்னடி இது? மூஞ்சியிலே ஒரு இழவையும் காணோம். இதோ பாரு செல்லி. எனக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பம். ரொம்ப செல்வாக்கானவங்க. காசு பணத்துக்கும் எந்தக் குறைச்சலுமில்லை. ஏவின வேலையைச் செஞ்சுக்கிட்டு அடக்க ஒடுக்கமாக் கூடவே இருக்கறதுக்கு உன் வயசிலே ஒரு பொண்ணு வேணுமின்னு ரொம்ப நாளாகவே என்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. சுத்தபத்தமா, நறுவிசா, நாசூக்கா நடந்துக்க, உன்னவிட்டா இந்த ஹாஸ்டலிலே வேற எந்தக் கழுதை இருக்கு? அதுதான் உன்னை அனுப்பலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்."

எதிர்பாராத நேரத்தில் தாக்கிய மின் அதிர்வின் பாதிப்பு செல்லியிடம் சொல்லாக வெடிக்கிறது. "டீச்சர்... அப்ப என்னோட படிப்பு...? நான் படிக்கணும்..."

"ஆமாம்..... நீ படிச்சுப் பெரிய கலெக்டர் வேலை பார்த்துக் கிழிக்கப்போறியாக்கும்? நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்க. தொடர்ந்து நீ இங்கேயே தங்கியிருந்தாலும் எட்டாவதுக்கு மேலே படிக்க வழியில்லை. அப்புறம் நீ கைத்தொழிலோ, வேற ஏதாவது தொழிலோ, வேற ஏதாவது வேலையோ தேடிக்கிட்டுத்தான் பிழைச்சாகணும். இந்தக் காலத்திலே வேலைன்னு ஒண்ணு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஏதோ இந்த மட்டுக்கும் கிடைச்சிருக்கிற பிடிமானத்தை வச்சிக்கிட்டு மேலே போவியா? அதை விட்டுட்டு...."

"இல்ல டீச்சர்... நான் படிக்கணும்." அவள் குரலில் உறுதி கூடுவது கண்ட வார்டன் கடுமையாகிறாள்.

"இதோ பாரு, உன்கிட்ட கெஞ்சிக்கிட்டிருக்க எனக்கு நேரமில்லை. உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாரே உங்க சித்தப்பாவா...? மாமாவா...? அவர் கிட்டேயும் பேசி இதுக்குச் சம்மதம்னு எழுதிவாங்கிட்டேன். மூக்குப் பிடிக்க மூணு வேளை சாப்பாடு, வருஷத்துக்கு இரண்டு புது உடுப்பு, கசக்குதாக்கும் உங்களுக்கு? போ போ... போய் உருப்படற வழியைப் பாரு..."

வாழ்க்கை இங்கென்னவோ வளப்பமாகத்தான் இருக்கிறது. புத்தகத்தைத் தூசி தட்டுவது மாதிரியான சுலபமான வேலைகள், முன்பின் கேள்விப்பட்டே இருக்காத ருசியான உணவுப் பண்டங்கள் தரும் ஊட்டம். பழசானவை என்று ஒதுக்கப்பட்டு வந்து சேர்ந்திருந்தாலும் அவள் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத சொகுசான ஆடைகள். வேலைக்காரி என்பதையும் மறந்து விடாமல், அதே வேளையில் வார்டனைப் போலச் சிடுமூஞ்சித்தனமும் காட்டாமல், தேன் தடவிய வார்த்தை பேசியே விரும்பிய வேலைகளைக் கறந்து கொள்ளும் லாவகம். 24 மணி நேரமும் சானலுக்குச் சானல் தாவிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி. நெல்லுக்கு இறைத்த நீரில் புல்லுக்கும் கொஞ்சம் ஆவதைப்போலத் தன் உடம்பிலும் சற்றே பளபளப்பும், மெருகும் ஏறத் தொடங்கியிருப்பதைச் செல்லி உணர்கிறாள். ஆனால், சகலமும் இருந்தபோதும் எதையோ தொலைத்துவிட்ட ஆற்றாமையின் சுமையைத் தாங்கமுடியாமல், வீட்டுத் தலைவி ஓய்வாக உட்கார்ந்திருந்த ஒரு பிற்பகல் வேளையில் தயங்கித் தயங்கி மெல்லப் பேச்செடுக்கிறாள்.

"அம்மா... அக்காவும் அண்ணணும் காலேசுக்குக் கிளம்பிப் போன பிறகு நான் சும்மாத்தானே இருக்கேன். அடுத்தாப்பிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே சேர்த்து விட்டீங்கன்னா ஏதோ கொஞ்சம் படிச்சுக்குவேன். மதியம்கூட ஒரு தரம் வீட்டுக்கு வந்து ஏதாச்சும் வேலை இருந்தா செஞ்சு குடுத்திட்டுப் போறேன். என் சம்பளத்திலே கொஞ்சத்தை வேணும்னாலும் பிடிச்சுக்கங்க..."

வீட்டம்மாவின் முகம் இறுக்கமடைகிறது.

"ஏண்டி... உனக்கென்ன எதுவும் கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? உன்னை என்ன ஸ்கூலிலே சேர்க்கிறதுக்காகவா ஹாஸ்டலிலிருந்து கூட்டிக்கிட்டு வந்தோம். எனக்கு பிரஷர், சுகர்ன்னு ஏகப்பட்ட வியாதி இருக்கு. ஒரு அவசரம், ஆத்திரம்னா ஏவின வேலையைச் செய்யறது யாரு? வாசலிலே பெல் அடிக்கிறவனுக்கு யார் பதில் சொல்றது? வர்ற ஃபோன் காலையெல்லாம் யார் அட்டெண்ட் பண்றது? போடி..... போ... ஏதாச்சும் வேலை இருந்தாப் பாரு...."

வாயிலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் ஓடிப்போய்க் கதவைத் திறக்கிறாள் அந்த வீட்டின் செல்ல மகன் சுரேஷ், நான்கைந்து நண்பர்களோடு உள்ளே வர, அம்மா ஆச்சரியப்படுகிறாள்.

"என்னடா இது? இந்த நேரத்திலே?"

"போம்மா.... மத்தியானம் செம அறுவையா இரண்டு கிளாஸ் இருக்கு... கட் அடிச்சிட்டு ஜாலியா வந்திட்டோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தப்புறம் எல்லாரும் ஒரு ரவுண்ட் வெளியே போகப் போறோம்."

"ஏண்டா.... அப்பாவுக்குத் தெரிஞ்சா?"

"இதையெல்லாம் போய் அப்பாகிட்டே ஏம்மா சொல்றே நீ? சரி சரி.... செல்லி, எங்களுக்கெல்லாம் காபி ரெடி பண்ணு. அப்படியே என் கான்வாஸ் ஷூஸ் இருக்கு பாரு, அதைக் கொஞ்சம் துடைச்சு வச்சிடு". ஆணையிட்டபடியே நண்பர்களோடு மாடிக்குப் போகிறான்.

அன்று இரவு உணவுக்காகச் சாப்பாட்டு மேசையைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்தபோது செல்லி படிப்பிற்காக வைத்த கோரிக்கை அவர்களின் பேசு பொருளாக, ஒரு கேலிப் பொருளாக ஆகிப்போகிறது.

"நாங்களெல்லாம் என்னடான்னா... எப்படா இந்தப் படிப்புக்குக் குட்பை சொல்லுவோம்னு காத்துக்கிட்டிருக்கோம். உனக்கென்ன செல்லி.... ஜாலியா லைஃபை அனுபவிக்கறதை விட்டுட்டு இப்படி ஒரு அப்பாவியா இருக்கியே!"

"பப்பி... நான் கூடப் பார்த்திருக்கேன். கொஞ்ச நேரம் கிடைச்சா போறும் இவ பரணிலேர்ந்து தன்னோட தகரப் பெட்டியை இறக்கி வச்சிக்கிட்டுப் புஸ்தகங்களைக் குடைய ஆரம்பிச்சுடுவா. அப்படி என்னதான் இருக்கோ அதிலே...."

பிள்ளைகள் மாறி மாறிப் பேச.... அப்பா ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார்.

"சரிசரி... எதுக்கு வீணா வளவளன்னு பேசிக்கிட்டு? செல்லிக்கு இங்கே என்ன குறைச்சல்? இன்னும் கொஞ்சம் வருஷம் போனா நம்மகிட்ட வேலை பார்க்கிறவங்களிலேயே ஒருத்தனைப் பார்த்துக் கல்யாணமும் பண்ணி வச்சிடப்போறோம். அப்புறமா அவங்க பிள்ளை-குட்டிகள் வேணுமின்னா படிச்சிட்டுப் போகட்டுமே...."

"அவங்களைக்கூட இவங்க...., படிக்க விட்டுடப் போறாங்களாக்கும். அப்ப மட்டும் இவங்களோட பேரம் பேத்திகளைத் தூக்க, எடுக்க ஆளு தேவைப்படாதா என்ன?" மனசு விரக்தியின் உச்சத்தில் முனக, எச்சில் பாத்திரங்களைப் பொறுக்கிக் கொண்டு அங்கிருந்து போகிறாள் செல்லி.

என்ன காரணமோ தெரியவில்லை.... ஒரு வாரமாக அந்த வீடே பரபரப்பாக இருக்கிறது. விசா, பாஸ்போர்ட், அமெரிக்கா என்று அவளுக்கு எதுவுமே புரிபடாமல் ஏதேதோ பேச்சுகள். நடுவில் அவளையும் ஒருமுறை வெளியே கூட்டிக்கொண்டு போய் நிழற்படம் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். வாசகம் விளங்காத சில ஆங்கிலக் கடிதங்களில் அவளிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள்.

"என்ன இருந்தாலும் செல்லியோட கையெழுத்து சூப்பரா இருக்கும்மா, படிச்சிருந்தான்னா, நம்மளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருப்பா."

"அக்கா... இதெல்லாம் எதுக்குங்கக்கா?" செல்லி கேட்க, பப்பி வியப்பின் விளிம்புக்குப் போகிறாள்.

"அட... உனக்கு இன்னும் விஷயம் தெரியாதா? அம்மா ஒண்ணும் சொல்லலியா? அடுத்த மாசம் நீ அமெரிக்கா போகப் போற செல்லி..."

"போங்கக்கா... தமாஷ் பண்ணிக்கிட்டு..."

"சீ, தமாஷ் இல்லடி... நிஜம்தான். அமெரிக்காவிலே இருக்கிற எங்க அண்ணாவேட குழந்தைகளைப் பார்த்துக்க அளு தேவைப்படுது. அண்ணா, அண்ணி ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. நம்ம ஊரு மாதிரி முழு நேரமும் வீட்டிலேயே இருந்து விசுவாசமாப் பிள்ளைங்களைக் கவனிச்சுக்க அங்கே ஆள் கிடைக்குமா என்ன? அதுதான் உன்னை அனுப்பலாம்னு அப்பா - அம்மா முடிவு பண்ணியிருக்காங்க.. ஆனாலும் உனக்கு ரொம்ப "லக்"தான் செல்லி. நாங்களே இன்னும் அங்கேயெல்லாம் போனதில்லை. ம்... கொடுத்து வச்சவ." பப்பி பெருமூச்செறிகிறாள்.

"ஆமாமாம்.... இப்ப செல்லிக்குப் பதிலா உன்னை அனுப்பி வச்சா, அவ செய்யற வேலையெல்லாம் நீ செஞ்சு கிழிக்கப் போறியாக்கும்."

இடையில் குறுக்கிட்ட அவள் தாய், இப்போது செல்லியிடம் பேசுகிறாள்.

"நீ என்ன மாட்டேன்னு மறுத்திடவா போறேன்னுதான் நாங்களே முடிவெடுத்து, எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டோம். இந்த ஜென்மத்துலே இப்படி ஒரு சான்ஸ் உனக்குக் கிடைக்கப் போகிறதா என்ன? நாளைக்குக் கடைக்குப் போய் உனக்குப் புதுசாக் கொஞ்சம் துணிமணி, செருப்பு எல்லாம் எடுத்துத் தரேன். காலையிலே இவங்கள்ளாம் கிளம்பிப் போனப்புறம் ரெடியா இரு."

"அம்மா" ஏதோ பேச வாயெடுக்கிறாள் செல்லி.

"ஓ... தனியாப் போறமேன்னு பயப்படறியா? இதோ பாரு. இங்கே நாங்க வந்து பிளேன்ல ஏத்தி விட்டுடுவோம். இறங்கற இடத்திலே அவங்க வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க... சரிதானே."

"ஹூம்..... ராஜயோகம்தான், பேசாம வேலைக்காரங்களா ஆயிடலாம்போல, டிரெயின்லே கூடச் சரியா ஏறியிருக்காதவளுக்குப் பிளேன்லே யு.எஸ்.டிரிப்" அவளைப் பார்த்து விசிலடிக்கிறான் சுரேஷ்.

தொடர்ந்து அவர்கள் அடுக்கிக் கொண்டு போகிற அந்த அந்நிய மண்ணின் அற்புதங்களும் "வாராது போல் வந்த மாமணியாய்" அவளுக்கு வாய்த்திருக்கிற அதிர்ஷ்டம் பற்றிய அவர்களின் அங்கலாய்ப்புகளும் காதில் வந்து விழுந்தாலும் மனசை எட்டிப் பிடிக்க முடியாதபடி செல்லி உறைந்து போயிருக்கிறாள். ஆத்தாவின் கனவு, தன்னுடைய ஆசை இதற்கெல்லாம் அர்த்தமே இல்லாதபடி எல்லாவற்றிலும் அந்நியப்பட்டவளாய் எங்கோ தூரப்போய்விடப்போகிறாள் அவள். கழுத்தில் கிடந்த சுருக்கு இறுகி இறுகி மூச்சு முட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத கழுகுப் பிடிகள் அவளைக் கவ்விக் கொண்டு போய்க் குதறிச் சிதைக்க...... அவளுக்குத் தலை சுற்றுகிறது.

வீட்டிலிருப்பவர்கள் எல்லாரும் உறங்குவதற்குப் போனபிறனு வாய்த்த தனிமையில்.... தான் பொக்கிஷமாய்ப் பதுக்கி வைத்திருக்கும் பாடப் புத்தகங்களுக்கு இடையே இருந்து, எப்போதோ தன் ஸ்கூலிலிருந்து மாற்றலாகிச் சென்ற தன் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்த தமிழ் டீச்சரின் முகவரியைத் தேடி எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்கிறாள். தன் பயணத்தைத் தீர்மானித்துவிட்ட திருப்தியுடன் அமைதியாகத் தூங்கிப் போகிறாள்.

அடுத்தநாள் காலையில்.... அந்த வீட்டிலே இருந்தவர்கள் கண்விழித்து, பெட்காப்பிக்காகச் செல்லியைத் தேடியபோது.... அவள் அங்கே இல்லை.

நன்றி: தடைஓட்டங்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link