சிறுகதைகள்


நிலவில்லாத இரவு

கூடல்.காம்
சந்துரு புது வீட்டுக்கு வரும்போது எதிர்வீட்டைப் பார்த்து, எவ்வளவு அழகாக இருக்கு என்று எண்ணிக் கொண்டான். சந்துருவின் வீடு பழைய காலத்து ஓட்டுவீடு. அந்த வீட்டின் முன்னால் ஒரு செண்பக மரம், சில ரோசாச் செடிகள், ஒரு நந்தியாவட்டச் செடி, ஒரு மூலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தண்ணீர்த் தொட்டி. பெங்களூரைப் போன்ற ஊரில் ஓட்டுவீடானாலும் பரவாயில்லை. இவ்வளவு பெரிய வீடு, முன்னும் பின்னும் இவ்வளவு வெற்றிடம் இருக்கிறதே என்று திருப்தியோடுயிருந்தாலும், எதிர்வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் தான் ஒரு நாளைக்கு அதைப் போன்ற வீட்டை கட்ட வேண்டுமென்று எண்ணிக் கொள்வான். எதிர்வீட்டைக் கட்டினவன் ஒரு நவீன சிற்பியாகத்தான் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன்னால் அகலமான தோட்டம், அதற்குப் பிறகு போர்டிகோ, அங்கு இரண்டு கார்கள். வீட்டில் சுமார் பதினைந்து அறைகளாவது இருக்க வேண்டும். மாடிமீது எவ்வளவு உள்ளதோ என்னவோ! மாடியில் ஒரு வெராண்டா. வெராண்டாவுக்கு வருவதற்கு கண்ணாடிக் கதவு. வெராண்டாவிலும் வகைவகையான செடிகள்.

புதுவீட்டுக்கு வந்து ஐந்து நாட்களாகியிருந்தது. ஆறாவது நாள் மதியம், சந்துரு தண்ணீர் தொட்டியின் ஓரத்தில் உட்கார்ந்து எதிர்வீட்டைப் பார்த்தான். செண்பக மரத்தின் நிழல், குளுமையாக வீசிக் கொண்டிருந்த காற்றில் வெயில்கால பகற்பொழுதுக்கு இதமாக இருந்தது. எதிர்வீட்டு மாடியின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு பெண்ணொருத்தி வெளியே வந்து, மாடி வெராண்டாவிலிருந்த ரோசாப்பூவொன்றைப் பறித்து தலையில் வைத்துக் கொண்டாள். அவளது மெல்லிய சேலை, அவளது உடல் வண்ணத்துக்கு பொருந்தி ஒட்டிக் கொண்டிருந்தது. ரோசாப் பூவினால், அவள் முகத்தின் நிறம் மேலும் அழகாகத் தெரிந்தது. அவள் இவனை இன்னும் பார்க்கவில்லை. ஸ்லீவ்லெஸ் பிளவ்ஸ். இடுப்புக்கு சற்று மேலாகவே இருந்தது. ஆஹா யாரிந்த அழகி என்று எண்ணிக் கொண்டான். அவளது மெல்லிய சேலையில் உள்ளிருந்த பாவாடையும் கூட செல்வச் செழிப்பை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இவள் என்ன ஜாதி? எந்த தேசத்தவள்? இவள் இசுலாமியப் பெண்ணா? கிருஸ்தவளோ? பிராமணப் பெண்ணா? பிராமணப் பெண்ணாக இருக்க முடியாது. பிராமணர்களுக்கு எவ்வளவுதான் செல்வமிருந்தாலும் மேல்வர்க்கத்து இஸ்லாமியர்களைப் போல ஒரு வகையான ராஜ குடும்பத்து கம்பீரம் உள்ளது என்று எண்ணிக் கொண்டான். இவ்வளவு நாட்கள் எப்படி கண்ணில் படாமலிருந்தாள்? இவள் படித்துக் கொண்டிருக்கின்றாளா? இவளுக்கு திருமணம் ஆகிவிட்டிருக்குமா? "சாதாரணப் பெண்ணும் நீயில்லை, உன்னைப் போல பெண்ணும் வேறில்லை!" அந்தப் பெண் இவன் பக்கம் ஒருமுறை பார்த்ததைப் போல் தெரிந்தாலும் தன்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் உள்ளே போய்விட்டாள். சந்துரு பெருமூச்சு விட்டான். அதற்குள்ளாகவே அவன் அவளைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான்.

அவளோடு எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படி என்பதுதான் கேள்வி. அவளை முதல்முறை பார்த்ததிலிருந்து உடல்நலம் கெட்டுப் போனது. அவளது வீட்டை காவல் காக்கும் கூர்காவைத் தாண்டி, அவர்கள் வீட்டின் இரண்டு நாய்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு போனாலும், வீட்டில் அவள் தந்தை, சித்தப்பா, தம்பி, அண்ணன், அவள் அந்தஸ்த்திற்கேற்ற நண்பரின் முன்னால் தான் எந்த மூலைக்கு? அவளைப் பார்த்ததிலிருந்து காலேஜுக்குப் போவதற்கும் பாடம் எடுப்பதற்கும் மனம் வரவில்லை. தாய், "என்னப்பா ஒரு மாதிரியா இருக்கிறே?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறாள். சொன்னால்தான் அவர்களால் என்ன பண்ணமுடியும்? ஒரு கார் இருந்திருந்தால், அவள் காரில் வெளியே புறப்படும் போது பின்னால் சென்று. அவள் தனியாக கமர்சியல் ஸ்ட்ரீட்டின் ஏதாவதொரு கடைக்குப் போகும்போது, அவளருகில் போய் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம். மாயமந்திரம் கற்றிருந்தாலும் அவளைச் சுலபமாக வசியப்படுத்திக் கொள்ளலாம்! உத்திரபிரதேசத்தின் பதினேழு லட்சம் லாட்டிரி கிடைத்தால்.....

சந்துரு இப்போதெல்லாம் வீட்டிலேயே காலம் கழித்துக் கொண்டிருந்தான். இரண்டு பீரியட்களுக்கு இடையில் ஒன்றிரண்டுமணி நேரம் கிடைத்தாலும் வீட்டுக்கு வந்து போவான். முன்னாலிருக்கும் அறையில் டேபிள் போட்டுக்கொண்டு, நாற்காலி மீது இரண்டு தலையணைகளை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதிக் கொண்டு அல்லது படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவனது நாற்காலியிலிருந்து எதிர்வீட்டு மாடி தெரியும். கண்ணாடிக் கதவுக்குப் பின்னால் அவள் நடமாடிக் கொண்டிருப்பதைப் போல. இப்போது கதவைத் திறந்துகொண்டு வந்து ரோஜாப்பூவைப் பறித்து சூடிக்கொள்கிறாள் என்பதைப் போல அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. மாலையில் நண்பர்களுடன் உலாவப் போவதையும் நிறுத்திவிட்டான். எவ்வளவு நாட்களுக்கு வீட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியும், சோர்வு தட்டியது. சோர்வைப் போக்க என்ன செய்யலாம்? சினிமா பிடிப்பதில்லை, லால்பாக்கிற்குப் போனால், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டுக்குப் போனால், ஏதாவது நைட்கிளப்பிற்கு போனால், ரேஸூக்குப் போனால், அவளை சந்தித்தாலும் சந்திக்கலாம்.

அப்படி எண்ணிக் கொண்டு லால்பாக்கிற்குப் போனான். அங்கு வெறுமே சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? மரங்களின் பெயர்களையெல்லாம் படித்துக் கொண்டே போனான். இது ஆஸ்திரேலியாவுடையது. இது பிஜியிலிருந்து, இது ஆப்ரிக்காவிலிருந்து, இது பிரேஸிலிருந்து, என்பதெல்லாம் தெரிந்ததே தவிர, அந்தப் பெயர்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. லால்பாக் ஏரிக்கரையில் உட்கார்ந்து ஜயநகரின் விளக்குகளைப் பார்ப்பது, தொலைவில் எதிர்வீட்டுப் பெண்ணைப் போலவே யாராவது தெரிந்தால் அந்தப் பக்கம் சென்று பார்த்துத் திரும்புவது. மறுபடியும் மரங்களின் பெயர்களைப் படிப்பது இவை அவனுடைய பொழுதுபோக்காயிற்று.

ஒரு நாள் அந்தப்பெண் கல்பெஞ்சின் மீது உட்கார்ந்திருப்பதைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தான். இவன் ஏரிக்கரையின் மீது உட்கார்ந்திருந்தான். அவள் சரிவில் மூங்கில் புதரின் பக்கத்திலிருந்த கல்பெஞ்சின்மேல் உட்கார்ந்திருந்தாள். அவளுடன் யாரும் இல்லாதிருப்பதைப் பார்த்து சந்துருவுக்கு மிகவும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளைப் பார்த்தவுடனே விசித்திரமான மகிழ்ச்சி தோன்றியது. கூடவே ஒருவகையான பயமும் இருந்தது. இருந்தாலும் சந்துரு படிகளில் இறங்கி அவளருகில் சென்று "ஹலோ" என்றான். அவளும் "ஹலோ" என்றாள். "உங்க பேர் என்ன?" என்று சந்துரு கேட்டான். "இரவு" என்றாள். "இப்படிப்பட்ட பேரைக் கேட்டதேயில்லையே" என்று சந்துரு சொன்னதும் அவள் சிரித்துவிட்டாள். "நீங்க உண்மையிலேயே இரவா?" என்று ஆச்சரியத்தோடும் சந்தேகத்தோடும் கேட்டான். "ஏன்? இரவுன்றவங்க கறுப்பாயிருக்கணுமா?" என்று அவள் எதிர்கேள்வி போட்டாள்.

"அப்படியில்ல, பேரு எதுவேண்ணா இருக்கலாம். ஆனா சிலது ஒத்துப் போகும். சிலது ஒத்துப் போகாது".

"அப்படின்னா எனக்கு எந்தப் பேரு பொருத்தமாயிருக்கும்?"

"உஷான்னு இருந்திருக்கலாம். இல்லேன்னா சந்தியான்னு இருந்திருக்கலாம். ஆனா அதெல்லாம் ரொம்ப சாதாரணமா போயிடுச்சி. உங்களுக்கு எந்த பேரு பிடிக்கும் சொல்லுங்க?"

"இரவு!"

"ஏன்?"

"அது என் பேர். அதனாலதான்."

"என் பேர் சந்திரசேகர். சந்துருன்னு கூப்பிடலாம்"

"சந்திரான்னு கூப்பிட்டா?...."

"அப்படியும் கூப்பிடலாம். இரவு இருந்தா சந்திரனுக்கு தண்ணொளி இருக்கும். பகலிருந்தா சந்திரன் பொணம் மாதிரித் தெரிவான்."

"சந்திரனில்லாத இரவும் இருக்கே..."

அப்படின்னா நீங்க அமாவாசைன்னு பேர் வச்சிட்டிருந்திருக்கணும்.

"அப்போ நான் வர்றேன்" என்று அவள் எழ முயற்சித்தாள்.

"அப்புறம் எப்போ கெடைப்பீங்க?"

"என்னை அமாவாசைன்னு சொன்னீங்க. அப்படின்னா சந்திரனுக்கு நான் கிடைக்கமாட்டேன்" என்று அவள் எழுந்தாள்.

நட்சத்திரங்களால் நிரம்பிய இரவின் வானத்தை பார்த்ததைப் போல சந்துரு தன்னை மறந்திருந்தான். அந்த நொடியில் தன்னெதிரில் புறப்படத் தயாராகயிருந்த இரவைப் பார்த்து, "இல்ல. நீங்க இரவாவே இருங்க. எல்லா இரவுகள்லயும் சந்திரன் இல்லாம இருக்கிறதில்ல. ஒரு இரவு மட்டும் சந்திரன் தெரியமாட்டான். அதுவும் சிரமந்தான். ஆனா, அவ்வளவாவது கிடைக்கிறதே அதுவும் என் பாக்கியம்" என்று கூறி சந்துரு அவளையே பார்த்தபடி நின்றான்.

"அப்போ நான் வரட்டுமா?"

"நான் உங்க வீட்டு எதிர்வீட்டிலதான் இருக்கேன்...."

"தெரியும்" என்று அவன் பேச்சைப் பாதியிலேயே தடுத்து "நான் உங்களை சந்திக்கணும்னா சில நிபந்தனைகள் இருக்கு. முதல் நிபந்தனை: நீங்க என்னைக்கும் என் வீட்டுக்கு வரக்கூடாது. அதுக்கு காரணமும் கேட்கக்கூடாது. ரெண்டாவது நிபந்தனை: நான் சொல்றதைத் தவிர, என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது. அப்படி இருந்தா மட்டும்தான் நாம இதே இடத்துல அப்பப்போ சந்திக்கலாம்" என்றாள்.

"நாளைக்கு வருவியா?" என்ற சந்திரசேகர் "ம்... நாளைக்கு வருவீங்களா?" என்று கேட்டான்.

"என்னை ஒருமையிலேயே அழைக்கலாம். நான் எப்போ வருவேன்னு சொல்ல முடியாது".

"ஏன்?" என்று கேட்க எண்ணியவன், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். அவள் சொல்வதைத் தவிர வேறு எதையும் கேட்டறியும் அதிகாரம் தனக்கில்லை என்பது அவனுக்கு நினைவுவந்தது.

"நான் வர்றேன்" என்று கூறி அவள் புறப்பட்டாள். அவள், கண்ணுக்கு மறையும் வரையிலும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். தான் சற்று தொலைவுவரை துணைக்கு சென்றிருக்கலாமென்று பிறகு அவனுக்குத் தோன்றியது.

சந்துரு லால்பாகிற்கு ஒவ்வொரு நாள் மாலையிலும் தவறாமல் வந்துகொண்டிருந்தான். அங்கு காத்து காத்து இரவான பிறகு வீட்டுக்கு திரும்புவான். வீட்டிலிருக்கும்போது எப்போதாவது அபூர்வமாக அவள் மாடியில் வந்து வெராண்டாவிலிருக்கும் பூவைப் பறிக்கும்போது மட்டும் மின்னி மறைந்து போவாள். ஒவ்வொருநாள் இரவும் அவள் மறுநாள் வருவாள் என்று எண்ணிக் கொள்வான்.

வழக்கம்போல் ஒரு மாலைநேரம் லால்பாகில் அதே இடத்தில் காத்திருக்கும்போது, மறுபடியும் அதே மூங்கில் புதரின் பக்கத்திலிருந்த கல்பெஞ்சின் மேல் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் எப்போது வந்தாள் என்று யோசிப்பதற்கும் நேரமில்லாமல் சந்துரு கீழிறங்கி ஓடினான். அவளோடு கைகுலுக்க கை நீட்டினான். அவளும் கையை முன்னே நீட்டினாள். கைகுலுக்கிய பிறகு பிடித்த கையை விடவேண்டுமா என்று தோன்றியது. அவளது நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்கும்போது தம்மிருவர்க்கிடையில் பேச்சில்லாமலேயே உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்றெண்ணிக் கொண்டான்.

"இரவு..." என்று சந்துரு மெதுவாக அழைத்தான்.

"என்ன சந்துரு?"

"மாலையாவதற்கு முன்பே இரவு வருவதனால் காலையிலேயே ஏன் வரக்கூடாது?"

"விரும்புவதெல்லாம் நிறைவேறுவதில்லை".

"எனக்கு நட்சத்திரங்களையெல்லாம் அடிச்சுத் தொரத்திடணும் போலத் தோணுது".

"சூரியனும் ஒரு நட்சத்திரம்தானே. எல்லா நட்சத்திரங்களையும் தொரத்துறதுன்னா, சூரியனையும் தொரத்த வேண்டியதாயிருக்கும். அப்போ எப்பவுமே இருட்டாத்தான் இருக்கும். சந்திரனுக்கு ஒளியிருக்காது. சந்திரனும் தெரியாது".

"தெரியாதுன்னா வேணாம். சந்திரனும் இரவும் ஒண்ணாயிடலாம்".

"அப்போ இரவே இருக்காது. இரவின் இருப்பை இருட்டு விழுங்கிடும்".

"அப்படின்னா வேற வழி இல்லையா?"

"எதுக்கு? உங்க வீட்டுக்கா?" என்று கேட்டு அவள் குறும்பாக கலகலவென்று சிரித்தாள்.

"இல்ல, நம்ம வீட்டுக்கு!" என்று சந்துரு மிகவும் கம்பீரமாகக் கூறினான்.

"அப்படியாகணும்னா நாம் கல்யாணம் பண்ணிக்கணும்".

"நாளைக்கே பண்ணிக்கலாம்".

"அது அவ்வளவு சுலபமில்லை".

"அதுல என்ன கஷ்டம்?"

"இன்னொரு முறை சந்திக்கும்போது சொல்றேன். இப்போ நான் வர்றேன்" எனறு இரவு புறப்பட்டாள்.

சந்துரு "கொஞ்சம் பொறு" என்று பின்னாலேயே புறப்பட்டான்.

"தயவுசெய்து என் பின்னால வரவேணாம். ப்ளீஸ்" என்று அவள் அவசர அவசரமாக ஓடினாள்.

சந்துரு அவள் உட்கார்ந்திருந்த கல் பெஞ்சின்மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழ்ந்து போனான். "தான் நட்சத்திரங்களையெல்லாம் தொரத்தணும்னு சொன்னது எதுக்காக?" தினமும் அவள்வீட்டு மாடிமேல் இரவுவேளைகளில் தெரிந்த காட்சிகள் அவன் கண்முன்பு நிழலாடின. அவளது வீட்டு மாடியின் கண்ணாடிக் கதவுக்கப்பால் நிறைய ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். பளபளவென்று விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. தான் கூறியது அதைத்தானே? அது அவளுக்குப் புரிந்ததா? அதற்குள் இன்னொரு கேள்வி அவனை வாட்டியது. அவ்வளவு செல்வமிருந்தும் அவள் எதற்காக என்னைப் பார்ப்பதற்கு வருகிறாள்? என்னை சாகவும் விடாமல் வாழவும் விடாமல் துடிதுடிக்க வைப்பதே இந்த பூவையின் நோக்கமா? இந்த சிந்தனை அவ்வளவு நிம்மதி தருவதாக இல்லை. கடிகாரத்தைப் பார்த்து வீட்டைநோக்கிப் புறப்பட்டான்.

வீட்டையடைந்ததும் அம்மா கேட்டார்கள். "என்னடா இது, தனியாவா வாகிங் போயிட்டு வர்றே? உன் நண்பர்கலெல்லாம் தினமும் சாய்ங்காலம் உன்னை தேடிகிட்டு வராங்க. எங்க போயிட்டான்னு கேக்கறாங்க. எங்க போறேன்னு சொல்லிட்டுப் போகக் கூடாதா?"

"எங்கெயும் போகலேம்மா. சாயங்காலம் ஒரு சினேகிதனோட போயிருந்தேன். தினமும் எல்லார் கூடவும் போகிறதுக்காகுமா? சரி சாப்பாடு பேடும்மா" என்றான். சாப்பிட்டு முடிந்ததும் சந்துரு கட்டிலின் மீது படுத்துக்கொண்டு, ஏதோ ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டான். புத்தகம் கையிலிருந்தது. விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவனுக்கு எப்போது உறக்கம் வந்ததோ தெரியவில்லை. நட்சத்திரம் ஒன்று அவனை துரத்திக்கொண்டு வந்து அவன் உடல்மீது விழுந்ததும், அதன் அளவிட முடியாத உருவத்தின்கீழ் தான் மாட்டிக்கொண்டு செத்தே போனோம் என்று பயந்து கண் திறந்து பார்த்தால், அறையின் விளக்கு இன்னும் எரிந்து கொண்டேயிருந்தது. விளக்கை அணைத்துவிட்டு, இனிமேல் மல்லாந்து படுக்கக்கூடாது என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு திரும்பிப்படுத்தான்.

வழக்கப்படி சந்துரு லால்பாக் ஏரிக்கரையின் மேலிருக்கும் பெஞ்சின் மீது உட்கார்ந்திருந்தாலும், மாலை அழகின் பக்கமே அவன் கவனமிருந்தது. இரவு வருவது தெரிந்தவுடனே எழுந்து நின்றான். அவள் பெஞ்சின் அருகில் வருவதற்குள்ளாகவே படியிறங்கி அவளருகில் விரைந்து சென்றான். அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவள் மெதுவாக கையை விடுவித்துக் கொண்டாள். சந்துருவின் முகத்தில் காதல் தோன்றிய வேகத்தில் அவன் முகம் இரவின் முகத்தின் பக்கம் குனிந்தது. உதட்டில் தீ பட்டதும் சந்துரு விட்டில் பூச்சியானான். அவள் விட்டில் பூச்சியை மறுபடியும் சந்துருவாக மாற்றினாள்.

"என்னை உனக்குப் பிடிக்கலையா?" என்று சந்துரு கேட்டான்.

"பிடிக்கலைன்னா நான் இங்க வந்திருப்பனா?" என்று அவள் எதிர்கேள்வி போட்டாள்.

சந்துருவின் பார்வை அவள் சூடியிருந்த ரோஜாப்பூவின் பக்கம் சென்றது. "ஒரு நாளைக்கு எத்தன ரோஜாப்பூக்கள சூடிக்குவே?" என்று கேட்டான்.

"அரைமணிக்கொண்ணு"

"எத்தனை சேலைங்க மாத்துவே?"

"அரைமணிக்கொண்ணு".

"என்னமோ பயமாயிருக்கு" என்று சந்துரு பெஞ்சின்மேல் உட்கார்ந்தான். அவளும் உட்கார்ந்து "பயப்பட வேண்டாம்" என்று அவன் நெற்றியின் மீது கை வைத்தாள். சந்துரு கழுத்தை இடப்பக்கம் சாய்த்து அவள் கையில் முத்தமிட்டான்.

"நீ என்னுடையவளாவது எப்போது?" அவள் கண்களையே பார்த்தான். அவளது கண்களின் ஆழத்தில் தான் முழுகிப் போவதாக அவனுக்குத் தோன்றியது.

"இப்போது உன்னுடையவள்தானே!" என்று அவள் சொல்லும்போது அவள் கண்களில் ஏதாவது குறும்புத்தனம் இருந்ததோ என்று சந்தேகம் தோன்றியது.

"இப்போ மட்டும் போதாது"

"அப்படீன்னா நான் சொல்றதைப் போல செய்வியா?"

"நீ என்ன சொன்னாலும் தயார்"

"இந்த ஏரியில முழுகுன்னு சொன்னா?"

"நீ அப்படி சொல்லமாட்டேன்னு தெரியும்".

"நீ ரொம்ப ரொமாண்டிக்குன்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா, நீ ரொம்ப பிராக்டிகலாயிருக்கிறே. அப்படின்னா பிராக்டிகலாவே ஒண்ணு பண்ணிடு. இப்போ மணி ஆறேகால். ஆறரைக்கு மெஜெஸ்டிக்ல ஏதாவது சினிமாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துடு".

சந்துரு முன்பின் யோசிக்கவில்லை. ஓடத் துவங்கிவிட்டான். லால்பாக் கேட்டைத் தாண்டினான். ஒரு ஆட்டோவை நிற்க வைக்க முயற்சித்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. லால்பாக் ஃபோர்ட் ரோடில் மினர்வா சர்கிள் பக்கம் ஓடினான். ஜனங்களெல்லாம் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் ஓடினான். ஆட்டோகாரன் ஒருவன் இவன் மேல் மோதியிருக்க வேண்டியவன். வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். இவன் காதில் விழவில்லை. ஏதோவொரு ஆட்டோ மினர்வா சர்கிள் பக்கம் யாரையோ இறக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதனருகில் ஓடினான். அதற்குள்ளாகவே யாரோ ஏறி உட்கார்ந்துவிட்டனர். இதற்குள் ஐந்து நிமிடம் கழிந்து விட்டிருந்தது. மினர்வா டாகீசுக்குள் போனான். அவசரமாக போன் செய்ய வேண்டுமென்றான். மேனேஜர் சந்துருவின் முகத்தை ஒருமுறை பார்த்து இது உண்மையாகவே அர்ஜெண்டான விஷயமாகவே இருக்கவேண்டுமென்று எண்ணி, போனை சந்துருவின் கையில் கொடுத்தான். சந்துரு அலங்கார் தியேட்டருக்குப் போன் செய்தான். டிக்கெட் இல்லையென்று அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்தவுடனே "யாருப்பா அது பேசறது. மேனேஜர் இல்லையா அங்கே?" என்று உரக்கக் கேட்டான். அந்த பக்கத்துக்குரல் மென்மையாகிவிட்டது. அந்தக் குரல் "என்ன சார்" என்று கெஞ்சியது. "டி.ஐ.ஜி மகனும் மருமகளும் வர்றாங்க, பால்கனியில ரெண்டு சீட் வையிங்க" என்றான். "ஆகட்டும்சார்" என்று இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சந்துரு லால்பாக் நோக்கி ஓடினான். மேல்மூச்சுவாங்க, எதிர்ப்பட்டவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு ஆட்டோகாரர்களிடம் திட்டுவாங்கிக் கொண்டு, கார்காரர்கள் முறைத்துப் பார்க்க ஓடினான். சந்துருவின் கால்கள் முறிந்து விழுவதைப் போல வலித்துக்கொண்டிருந்தன. ஆறு இருபத்தைந்துக்கு "டிக்கெட் கெடைச்சது" என்று இரவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். இரவு அவன் தலையை வருடிக் கொடுத்தாள். "ராஜான்னா அது நீதான்" என்றாள்.

"எழு சினிமாவுக்குப் போகலாம்" என்றான் சந்துரு.

"இல்ல. நான் சினிமாவுக்கு வரல. நீ என்னை எந்தளவுக்கு காதலிக்கிறேன்னு டெஸ்ட் பண்ணினேன் அவ்வளவுதான்" என்று மென்மையாக அவன் காதைத் திருகினாள்.

"நீ ரொம்பக் குரூரமானவ".

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ராஜா. காதல்ன்னா என்ன? இதெல்லாம் விளையாட்டு இல்லையா? கொழந்தைங்க விளையாட்டுயில்ல. பெரியவங்க விளையாட்டு. அப்போ நான் வரட்டுமா? என்று ஒய்யாரமாகக் கேட்டாள்.

"நீ மோசக்காரி" என்று சந்துரு கத்தினான்

"இல்ல சந்துரு. என்மேல சத்தியமா சொல்றேன். உனக்கு மோசம் பண்ணல. எனக்கு நீ கட்டாயம் வேணும் இல்லேன்னா நான் ஏன் இங்க வர்றேன் சொல்லு"

"எனக்கு எல்லாம் தெரியும். நான் ஒண்ணும் இப்படி முதல் தடவையா மோசம் போயிடலே. உங்களைப் போன்றவங்களுக்கு என்னைப் போல முட்டாள்களுடைய தேவையிருக்குன்னு தெரியும். உங்க போலி கனவுமயமான உணர்வுகளை பூர்த்தி செய்யிறதுக்கு என்னைப் போன்றவங்க தேவைப்படறாங்க. என்னைப் போல ஆளுங்க பலிகடாக்களைப்போல கிடைக்கிறோம்ன்றதும் கூட உங்களுக்குத் தெரியும். நாங்க எங்கயிருந்தாலும் எங்க வாசனைய மோப்பம் பிடிச்சுகிட்டு வருவீங்கன்றதும் எனக்குத் தெரியும்"

"சந்துரு, ப்ளீஸ் ப்ளீஸ் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதே எனக்கு இப்போ நேரமாயிடுச்சி" என்று இரவு புறப்பட்டாள். அவள் முகத்தில் கழிவிரக்கமும் பயமும் நிறைந்திருந்தன.

"போ. இன்னொருமுறை திரும்பி வராதே" என்று சந்துரு உரக்கக் கத்தினான். அவன் கோபத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவள் மிகவும் சோர்ந்து தளர்ந்து போயிருந்தாள். அவள் எதுவும் செய்யமுடியாதவளாக ஆறுதல் கூற துணையேதும் இல்லாதவளாக, தோற்றுப் போனவளாக அடியெடுத்து வைத்து நடந்து போனாள். அவள் அழுது கொண்டிருந்ததை சந்துருவினால் காண முடியவில்லை. நாலடி எடுத்து வைத்தவள். ஓடத்துவங்கினாள்.

சந்துருவுக்கு தலையெல்லாம் சூடேறிப் போனதைப் போல் தோன்றியது. வெஸ்ட் கேட் பக்கமாக நிதானமாக அடியெடுத்து வைத்தான். பத்துப் பதினைந்து அடியெடுத்து வைப்பதற்குள்ளாகவே அவன் நடையில் ஒரு வேகம் பிறக்கத் துவங்கியது. தனக்குத்தானே பேசிக்கொள்ளத் துவங்கினான். நட்சத்திரங்களை அடித்துத் துரத்தப் போகிறானாம், ஏமாளி பயித்தியக்காரன். சந்திரன் காதலிப்பது கடலைத்தான்! செடிகொடி தாவர செல்வத்தைத்தான்! அரைமணிக்கொரு சேலை மாற்றுகின்றவளுக்கு எவ்வளவு சேலைதான் கொடுக்க முடியும்? அரைமணிக்கொரு ரோஜாப்பூ தேவைப்படுகிறவளுக்கு எவ்வளவு ரோஜா மலர்த்தோட்டம் தேவைப்படும்? எனக்கு ஏன் இப்படிப்பட்டவர்களே கிடைக்கிறார்கள்? இப்போதிருக்கும் வீட்டை நான் உடனடியாக மாற்றியே ஆக வேண்டும். வீட்டை எதுக்குடா மாத்தறே? மாற வேண்டியது மாத்த வேண்டியது வீடு இல்ல, மனசை நீ... நீ சந்துரு இல்ல கண்ணு; சந்திரசேகரன். நான் சந்துரு இல்லை, சந்திரி இல்லை, சந்திரன் இல்லை, சந்திரசேகர்! சந்திரசேகர். வயது இருபத்தேழு, நூற்றைம்பது பவுண்டு, ஐந்தடி ஆறங்குலம், காவிக்கலர் கண்கள், நான் சந்திரசேகர். நெருங்கியிருப்பவளென்றால் அது தாய் மட்டும்தான். என் நண்பர்கள், விஸ்வம், மஹேஷ், பஷீர், சிவப்பிரகாஷ், பிரபாகர், நான் சந்திரனில்லை, சந்திரசேகர்!

நன்றி: நிலவில்லாத இரவு

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link