சிறுகதைகள்


ரோஜாப்பூக்களும் வியர்வை உப்புக்களும்

கூடல்.காம்
ஏழுமாடிக் கட்டிடமாக வானளாவி நின்று கொண்டிருந்த அந்த நவீன தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்ட மகிழ்ச்சியில் கணேசனின் உள்ளம் பூரித்துக் கிடந்தது. கல்லூரிப் படிப்பை அப்போதுதான் முடித்திருந்த புதுமைத் துடிப்பு! அச்செழுத்துக்களில் படித்திருந்ததையெல்லாம் ஆக்கபூர்வமாகச் செயல்படுத்த வேண்டுமென்ற நிஜமான ஆதங்கம்! இவற்றோடு, சமூக வாழ்க்கையில் மிகவும் பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்த கதிர்மாணிக்கத்தின் பிரிவில்.... அவரது நேர்முக உதவியாளனாகவே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிற மகிழ்ச்சி! பல மடங்காகப் பெருகித் தழைத்திருந்த அவனது எதிர்பார்ப்புகள்... நேரடியான உண்மைகளை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில்... காற்றுப்போன பலூனாய்ச் சூம்பித்தான் போயின!

அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேரிலும் அதிகபட்ச இலக்கங்களை ஊதியமாய்ப் பெற்றுவரும் கதிர்மாணிக்கம்தான்... அந்த நிறுவனத்திற்குத் தன் மிகக் குறைந்த உழைப்பை அளித்துவருபவர் என்ற உண்மையை முதன் முதலாக அறிந்தபோது அவன் அதிர்ந்து போனான். காலை 10 மணிக்குத் தொடங்கும் அலுவலகத்திற்கு மிகத் தாமதமாக வருவதோடு, மாலையிலும் நினைத்த நேரத்தில் கிளம்பிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவர், தான் உதவியாளனாய்ச் சேர்ந்து ஒரு வாரமாகியும் இன்னும் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்ற எண்ணத்தில் ஒரு நாள் அவர்முன் வந்து நின்றான் கணேசன்.

"சார்! நான்தான் கணேசன்! உங்க பி.ஏ.வா அப்பாயிண்ட் ஆகியிருக்கேன்"

மதிய உணவுக்குப் பின்பு, கண்ணைச் சுழற்றிக் கொண்டுவரும் உறக்கம் தந்த இனிய போதையில் மேசையில் தலையைக் கவிழ்க்கப் போன கதிர்மாணிக்கம் கடுகடுப்புடன் தலைநிமிர்ந்தார். அவர் முகத்தில் வியப்புக் குறியோடு ஒரு ஏளனக் குறியும் எட்டிப் பார்த்தது.

அதுக்கென்ன இப்ப புதுசா...? உங்க ஜாயினிங் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போட்டதே நான்தானே?

"இல்லை சார்... நான் இங்கே சேர்ந்து ஒரு வாரமாச்சு...! இன்னும் எனக்குன்னு எந்த வேலையும் தனியாக நீங்க ஒதுக்கித் தரலையேன்னுதான் வந்தேன்!"

அவரது குரல்... சற்றே உயர்ந்தது.

"உங்களுக்கு என்னென்ன வேலை கொடுக்கணும்... எப்ப கொடுக்கணுங்கிறதெல்லாம் எனக்குத் தெரியும்! அதிகப் பிரசங்கித்தனமாக நீங்க அதிலெல்லாம் தலையிட வேண்டாம்!"

உற்சாகச் சுரப்பிகள் ஒட்டுமொத்தமாக வடிந்துபோன மனநிலையில் காண்டீனுக்குள் நுழைந்தவனை, அவனுக்கு அறிமுகமான குரல் ஒன்று ஆர்வமுடன் எதிர்கொண்டது.

"ஹலோ கணேசன்... இங்கேயா வேலை பார்க்கிறே..."

தனது கல்லூரியின் மூத்த சகாவாகப் பழகியிருநத அரட்டைத்திலகம் சங்கரை இந்த மூச்சு முட்டும் சூழ்நிலையில் கண்ட கணேசனின் மனம், சற்றே இலேசாகியது.

"ஆமாம் சங்கர்! இப்ப சமீபத்தில்தான் சேர்ந்தேன்! நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா....?"

"நான் அஞ்சாறு ஆபீஸ் மாறி மாறிக் கடைசியா ஒரு வழியா இதிலே வந்து உட்கார்ந்துட்டேம்ப்பா! ஆமாம்... நீ எந்த செக்ஷன்"

"சி" செக்ஷன்

"அப்ப..... நம்ம கதிர் மாணிக்கத்தோட செக்ஷன்னு சொல்லு! கொடுத்த வச்சவம்பா நீ...! சுகவாசி! வேலையே இருக்காதே?"

"அதுதான் சங்கர் டல்லடிக்குது....! பலதும் தெரிஞ்சுக்கணும்.... வேலை பழகிக்கணும்னு வந்தேன்! இப்ப ஏதோ.. நானும் ஆபீசுக்கு வந்து போறேங்கிற மாதிரி இருக்கு! ஒரு உயிரே இல்லை!"

"அடப் போப்பா நீ ஒண்ணு.... மாசம் பொறந்ததும் சம்பளக் கவரை வாங்கறதுதான் லட்சியம்னு அவனவன் அலையறான்!... நீ புதுசாச் சேர்ந்திருக்கே இல்லை.... அதுதான் இப்படிப் பேசறே... சரி! நம்மைக்கூட விடு... நம்ம கதிர்மாணிக்கம் இருக்காரே.. எம்.டி.க்குப் பக்கமாச் சம்பளம் வாங்கறாரு! ஆனா... அவருக்கு அப்படி ஏதும் உணர்ச்சி இருக்கிறதாத் தெரியலையே....? அதுசரி... ஆபீசிலே வேலை கம்மின்னா வசதியாப் போச்சு...! ஆயிரம் சொந்த வேலை இருக்கே... அதுக்கெல்லாம் நேரம் வேண்டாமா...?" - கண்சிமிட்டியபடி நகர்ந்தான் சங்கர்.

அலுப்போடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாலும்... இத்தனை நாட்களாகப் புரியாத புதிர்களாகவே இருந்து கொண்டிருந்த சில விஷயங்கள்... இன்றைய சம்பவத்திற்குப் பிறகு கொஞ்சம் துலங்குவது போல அவனுக்குப் பட்டது.

இன்று காலையில் வழக்கம் போலக் கதிர்மாணிக்கத்தின் அறைக்குள் நுழைந்த அவன் கண்களில் வரிசையாய்க் கட்டி வைக்கப்பட்டிருந்த ஃபைல்கள் தட்டுப்பட்டதும் இலேசான உற்சாகம்...! கட்டை அவிழ்த்து அவற்றைப் படிக்க ஆரம்பித்தவன் சுற்றுப்புறம் மறந்து அந்த வேலையிலேயே மூழ்கிப் போனான்! குறிப்புக்களை எழுதி முடித்து அவன் நிமிர்ந்தபோது கதிர்மாணிக்கம் எதிரில் வந்து நின்றார். ஒன்றிரண்டு ஃபைல்களை மேலோட்டமாகப் புரட்யவரின் முகம், படிப்படியாக இறுக்கம் கண்டது.

"கணேசன்... இந்த ஃபைல்களையெல்லாம் இங்கே யார் கொண்டு வந்து வச்சது?"

"தெரியலை சார்! உங்க மேஜையிலே இருந்தது! படிச்சுக் குறிப்பெடுத்துட்டா சுலபமா இருக்குமேன்னு..."

அவர், அவன் வார்த்தைகளைக் கண்டு கொள்ளவில்லை. தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்துவிட்ட இறுக்கமான குரலில் ஆணை பிறப்பித்தார்.

"உடனே இந்த ஃபைல்களை எம்.டி.ரூமுக்கு எடுத்துக்கிட்டுப் போங்க... நான் கொடுக்கச் சொன்னதா அவர்கிட்ட கொடுத்திட்டு வந்திடுங்க!"

"ஆனா சார்... இந்த ஃபைல்களிலே நம்ம செக்ஷன் குறிப்புக்கள்..."

"கணேசன்....! நான் சொல்றதைச் செய்யத்தான் நீங்க இங்கே இருக்கீங்கன்னு நெனக்கிறேன்!"

அதற்கு மேல் அவனுக்கு வார்த்தைகள் இல்லை. எம்.டி.யின் அறைக்குள் நுழைந்து விஷயத்தை விளக்க அவன் முற்படுகையில்.... அவர் அதற்கெல்லாம் அவசியமே இல்லையென்ற பாவனையில் "சார் இப்பத்தான் "இண்டர்காம்"லே சொன்னார்.... அப்படி ஓரமா வச்சிட்டுப் போங்க" என்றார். அவன்.... வியப்பில் உறைந்தான். ஃபைல்கள்... அவற்றிலுள்ள குறிப்புகள்.. அவன் சார்ந்த பிரிவுக்குரியவை! அதற்குப் பொறுப்பான தலைவர்..... அந்த வேலையை நிராகரிப்பதும், தட்டிக்கேட்டு வேலை வாங்க வேண்டிய எம்.டி. மறுபேச்சே இல்லாமல் அதை ஏற்பதும்... இதெல்லாம் என்ன நாடகம்?

குழப்பத்துடன் தன் பிரிவுக்குத் திரும்பிய கணேசனைக் கதிர்மாணிக்கத்தின் சூடான வார்த்தைகள் வரவேற்றன.

"என்ன மிஸ்டர் கணேசன்... இந்தக் கம்பெனியோட தூணே நீங்கதான்னு நினைப்பு வந்திடுச்சா... இல்லே.... ஓவரா வேலை பார்க்கிற மாதிரி வேஷம் போட்டு நிர்வாகத்தை வளைச்சுப் போடத் திட்டமா? உங்களுக்கு மேலே நான் ஒருத்தன் இருக்கேங்கிற நினைப்பு எப்பவும் இருக்கணும் உங்களுக்கு..."

"இல்லை சார்... அது வந்து..."

"சரி சரி! அதை விடுங்க... இன்னிக்குக் கம்பெனி விஷயமா நான் ஒரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு... நோட்ஸ் எடுத்துக்க நீங்களும் வரணும்! தயாரா இருங்க!"

எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த கம்பெனி காரின் பின்சீட்டில் கண்மூடிச் சாய்ந்திருந்தார் கதிர்மாணிக்கம். அலுவலகச் சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம்பார்க்க வந்துவிட்டுப் பத்து ஏக்கர் பரப்பிலமைந்த தன் பண்ணையைச் சுற்றிப் பார்க்க அவர் செலவிட்ட நேரமே அதிகமென்ற நினைப்பிலும் - தானும் அதற்குச் சாட்சியாகிவிட்ட கசப்பிலும் கணேசன் மனம் சோர்ந்து அலுத்திருந்தான்.

"டிரைவர்... காரை நிறுத்தப்பா...."

அவர் போட்ட சத்தத்தில் கார் ஒரு குலுக்கலுடன் நின்றது. சாலையோரத்தில் ஜீப் ஒன்று பழுதாகியிருக்க, அதனருகே நின்று கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கைதட்டி அழைத்தார் கதிர்மாணிக்கம்.

"முருகேசா... என்ன இப்படி நடுக்காட்டிலே...."

"யாரு... அட... நம்ம கதிரா.....! நல்லதாய்ப் போச்சு கதிர்! ஏழு மணிக்கு நான் அவசரமா ஒரு இடத்துக்குப் போயே ஆகணும்...! சமயத்திலே இந்த ஜீப் ரிப்பேராகித் தொலைஞ்சிடுச்சு! அரைமணி நேரமாய்த் தவிச்சுக்கிட்டிருக்கேன்"

"அதுக்கென்னப்பா.... டிரைவர் வண்டியைச் சரி பார்த்து எடுத்துக்கிட்டு வரட்டும்! நீ நம்ம காரிலே ஏறு!"

காரில் நடந்த நண்பர்களின் பேச்சு வார்த்தைகளில் முதலில் ஆர்வம் காட்டாமலிருந்த கணேசனைக் குறிப்பிட்ட ஒரு கட்டத்துக்குப் பிறகு நடந்த உரையாடல் கட்டிப் போட்டது.

"உன்னை நெனச்சா.... எனக்குப் பொறாமையா இருக்கு கதிர்!"

"என்ன திடீர்னு இப்படிச் சொல்றே முருகேசு.."

"பின்னே என்ன... உலகத்திலே வேலை பார்க்கிற ஒவ்வொருத்தனும் ஆயிரம் "சைட் பிசினஸ்" வச்சிருக்கான்! ஆனா.. என் பொழப்பு நாய்ப்பொழுப்பா இருக்கு! உத்தியோகத்தைத் தவிர வேறே எதிலேயும் கால் வைக்க முடியலை! நீ என்னடான்னா... சக்கையாய்ப் பிழிஞ்சு கசக்கி வேலை வாங்குற ஒரு தனியார் நிறுவனத்திலே வேலை பார்த்துக்கிட்டுத் துணிக்கடை என்ன... வீடியோ ஷாப் என்ன... பண்ணை வேலை என்னன்னு சக்கை போடு போடறே!"

"ஏய்.... நிறுத்து நிறுத்து! எங்கே கொஞ்சம் விட்டா நீயே எங்க நிர்வாகத்துக்கிட்டே என்னைப் பத்தி ஒரு புகார்ப் பட்டியலைக் கொடுத்திடுவே போலிருக்கு"

செல்லமாய்ப் போலியாய்க் கோபித்துக் கொண்ட கதிர் மாணிக்கம், ஒரு பெருமிதப் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

"அதுக்கெல்லாம் தனி சாமர்த்தியம் வேணும் முருகேசு! நானெல்லாம் கம்பெனிக்குக் கோட்டிலே செருகியிருக்கிற ரோஜாப்பூ மாதிரி! பூவைச் செருக்கிறது எதுக்கு..? மானத்தை மறைக்கிறதுக்கா...? ஒரு பெருமைக்கு.... மதிப்புக்கு! அந்த மாதிரிதான் நானும்! கதிர் மாணிக்கம் ஒரு ஆபீசிலே வேலை பார்க்கிறார்னா... அது... அந்த நிர்வாகத்துக்கு ஒரு மதிப்பு.... கௌரவம்... அவ்வளவுதான்! அதுக்கு மேலே என்கிட்ட உழைப்பை எதிர்பார்க்க அவங்களும் முட்டாள் இல்லை! செக்குமாடு மாதிரி வேலை பார்க்க நானும் ஆளில்லை...! மீறி... மேலே பாய்ஞ்சாலும்... இருக்கவே இருக்கு ஸ்டிரைக்குங்கிற ஆயுதம்!"

இருவரும் ரொம்ப நேரம் ரசித்துச் சிரித்தது... கணேசனின் காதில் அபசுரமாய் ஒலித்தது.

அன்றைய தபாலில் அனுப்ப வேண்டிய கடிதங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கணேசனை அவசரமாய்க் கூப்பிட்டார் கதிர்மாணிக்கம்.

"தம்பி!.... வெறுமே ஃபைலை உழுதுக்கிட்டிருக்கிறது மட்டுமே வேலையாயிடாது! மனுஷங்களோட பிரச்சினையை சாமர்த்தியமா "டீல்" பண்றது கூட ஒரு சவால்தான்! இப்ப... நம்ம கந்தசாமி விஷயத்தை நான் எப்படிக் கையாளப் போறேன்னு கொஞ்சம் கூட இருந்து பாருங்க...!

கணேசனுக்குத் துணுக்கென்றது. அந்த அலுவலகத்துடன் இணைந்தபடி இயங்கிவரும் சிறியதொரு தொழிற்சாலையின் நேர்மையான ஊழியன் கந்தசாமி! மன வளர்ச்சியில்லாத மகனையும், நோயாளி மனைவியையும் கொண்டிருக்கும் அவன் குடும்பம்... அவன் கொண்டு வரும் ஊதியத்தின் ஆதாரத்திலேயே இயங்கி வருவதும் எல்லோருக்கும் தெரியும்! அயல் நாட்டிலிருந்து அசுர இயந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டு... ஆட்குறைப்பு என்ற பேச்சும் அடிபடும் சூழலில்....

கதவைத் திறந்து கொண்டு கந்தசாமி உள்ளே வந்து நின்றான்.

"வாப்பா! உன் மூத்த மகன் எப்படி இருக்கான்?" - கரிசனத்தோடு பேச்சைத் தொடங்கினார் கதிர்மாணிக்கம்.

"அவன் பேச்சை விடுங்கய்யா... அவன் விதிதான் வேறே மாதிரி ஆயிடிச்சே! என் ரெண்டாவது பையன் எட்டாவது படிக்கிறான்! அவன் தலையெடுத்தாத்தான எங்க குடும்பத்துக்கே விமோசனம்னு காத்துக்கிட்டிருக்கோம்"

"வருத்தப்படாதே கந்தசாமி! எல்லாம் வேளை வந்தா தானா நடக்கும்.... சரி! இப்ப உன்னை இங்கே எதுக்காக வரச் சொன்னேன் தெரியுமா!"

"தெரியாதுங்களே.... முதலாளி ஐயா உங்களை உடனே போய்ப் பார்க்கச் சொன்னாரு.... அதுதான்...."

"கந்தசாமி நம்ம தொழிற்சாலைக்குப் புதுசா மெஷின்கள் வாங்கிப் போட்டிருக்கிறது உனக்கே தெரியும்! அதெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம்னா... இப்ப நம்ம ஃபாக்டரியிலே உள்ள அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது!"

அவர் பேசப்பேசக் கந்தசாமியின் முகம் ஒளியிழந்து கொண்டு வந்தது.

"... அதனாலே நிர்வாகம் சில முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கு!... சமீபத்திலே சேர்ந்திருக்கிற தொழிலாளிகளுக்கு ஈட்டுப் பணம்னு கையிலே மொத்தமா ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பப் போறோம்! சில பேரைப் புதுசா சில வேலைகளிலே பழக்கப் போறோம்!"

"ஐயா... அப்ப என் கதி!"

"அவசரப்படாதே கந்தசாமி! நீ... ஆரம்ப நாளிலே இருந்து வேலை பார்த்துக்கிட்டு வர்ற நம்பிக்கையான ஆளு! மத்தவங்களுக்கு எடுத்த முடிவை நிர்வாகம் உன் விஷயத்திலேயும் எடுத்திடுமா என்ன?

நிர்வாகத்திற்கும், அவருக்கும் இடையிலான உறவின் சூட்சமம்.. கணேசனுக்கு மெல்லியதொரு வெளிச்ச ரேகையாகப் புலப்படத் தொடங்கியது. பெருமிதத்துடன் தலையை நிமிர்த்தியபடி அவர் தொடர்ந்தார்.

"கந்தசாமி! உனக்கு வயசாச்சு! புதுசா வந்திருக்கிற மிஷின் வேலையை இனிமே உன்னாலே கத்துக்க முடியுமா...? நீ ரிட்டையர் ஆகறதுக்கோ இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு! அதனாலே அந்த ஒரு வருஷத்துக்கு... மாசாமாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்குக் கொடுக்கிறதுன்னு நிர்வாகம் முடிவு பண்ணியிருக்கு!"

"அப்ப வேலையே பார்க்காம மாசாமாசம் சம்பளத்தை மட்டும் நான் வாங்கிக்கணும்னு சொல்றீங்க"

"அதிலென்ன தப்பு இருக்குப்பா...? இத்தனை நாள் நீ உயிரைக் கொடுத்து உழைச்சதுக்கு நிர்வாகம் கொடுத்திருக்கிற பரிசு இது!... இதோ பாரு... இந்த மாதிரி இதுவரைக்கும் யாருக்குமே செஞ்சதில்லை! ஏதோ... உன் குடும்ப நிலைமையை நான் எடுத்துச் சொன்னதாலே இரக்கப்பட்டு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சிருக்காங்க! உனக்கென்ன...? நல்லா ரெஸ்ட் எடுத்துக்க! சம்பள நாளன்னிக்கு இங்கே வந்து ஹாய்யா பணத்தை வாங்கிட்டுப் போ!"

"ஐயா... போதும்யா! இதுக்கு மேலே எதுவும் சொல்லாதீங்க! என்னாலே நிதம் மூணு வேளை வசதியாச் சாப்பிட முடியாம இருக்கலாம்! ஆனா.... மானம், மரியாதையெல்லாம் இன்னும் இந்த உடம்பிலே ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு! அன்னன்னிக்கு உழைச்சுச் சிந்தற வேர்வையோட உப்புப்பட்டாத்தான்யா குடிக்கிற கஞ்சியே எனக்கு செரிமானம் ஆகும்! இங்கே நம்ம கம்பெனியிலே ஒரு வாட்ச்மேன் வேலை போட்டுக் கொடுத்தாக் கூடச் சந்தோசமாய்ச் செய்வேன்! ஆனா... மாசச் சம்பளம்னு பேரை வச்சுக்கிட்டு தருமப்பிச்சை போடறதா இருந்தா..... அதை விட வெளியிலே மூட்டை தூக்கிப் பிழைச்சாக்கூட எனக்குக் கௌரவமா இருக்குமுங்க!"

ஆவேசத்துடன் பேசிவிட்டு வெளியேறிய கந்தசாமியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த கதிர்மாணிக்கத்தின் முகம் இருண்டிருந்தது. "பிழைக்கத் தெரியாத ஆளு!" என்று அவரது உதடுகள் முணுமுணுத்தாலும் - உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த உழைப்பாளியின் சொற்கள் விநாடி நேரத்திற்காவது ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் தாக்கத்தின் விளைவாகவே அந்த இருட்டும், இறுக்கமும் நேர்ந்திருக்கிறது என்பதைக் கணேசனால் மட்டும் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது.

நன்றி: தடை ஓட்டங்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link