சிறுகதைகள்


நெட்டை மரங்கள்

கூடல்.காம்

ராதாவைத் துணைக்கழைத்துக் கொண்டு, இன்று மாலை நடக்கவிருந்த இலக்கியக் கூட்டத்திற்குச் செல்லலாமென்று அவர்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த என்னை, அங்கே நிலவிய சூடான சூழ்நிலை, முகத்தில் அறைந்து வரவேற்றது.

"நீ இத்தனை கடுமையா அவங்களோட பேசியிருக்க வேண்டாம்மா! ஒரே தெருவிலே ஒண்ணா இருக்கப்போறோம்! எதுக்கு இப்படி முகம் முறிச்ச மாதிரி மனஸ்தாபம்?" என்று ராதாவின் தாய் அவளைக் கடிந்து கொண்டிருந்தாள்.

"என்னம்மா... நீ கூட இப்படிச் சுலபமா சொல்லிட்டே? ஏதோ... சக்தி பூஜையாம்! கன்னிப் பெண்களையும், சுமங்கலிகளையும் அழைச்சு சாப்பாடு போடப்போறாங்களாம்! அதுதான் நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டேன்... "யாரை ஏமாத்த இந்த வேஷம்னு..! அது ஒரு தப்பா? கண்ணுக்கு எதிரிலே குரூரமான நிஜங்கள் நிக்கறப்ப அலட்சியப்படுத்தினாங்க! இப்ப... நிழல்களைத் துரத்திக்கிட்டு ஓடறாங்க! இவங்களோட போலித்தனத்துக்கு நானும் ஜால்ரா அடிக்கணும்கிறியா?" என்று ராதாவும் தன் பங்குக்குச் சளைக்காமல் இரைந்து கொண்டிருக்க. அவர்களின் உரையாடலை இடைவெட்டி உள்ளே நுழைந்தேன் நான்.

"வாம்மா செல்வி" என்று என்னை வரவேற்ற ராதாவின் தாய் தொடர்ந்து... "நீயே பாரு... உன் ஃப்ரண்ட் அடிக்கிற கூத்தை! எதுக்கெடுத்தாலும் இப்படிக் கோபம்... ஆவேசம்னு இருந்தா எப்படி? ஒரு சமூகத்துக்கு நடுவே வாழ்ந்துக்கிட்டிருக்கோம்! அண்டை அசலோட அனுசரிச்சுப் போகாட்டியும், சண்டை பூசல்னு போகாமலாவது இருக்கலாமில்லை?" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

ராதாவின் கோபமும், ஆத்திரக் கோலமும் எனக்குப் புதிதானவை அல்ல. "ரௌத்திரம் பழகு" என்ற பாரதியின் வார்த்தையை அதன் உண்மையான அர்த்தத்தில் அட்சரம் பிசகாமல் அனுசரிக்கிறவள் அவள்! அவள் கொள்ளுகிற கோபமெல்லாம், என்றைக்குமே சமூகக் குறைபாடுகளைக் கண்டு பொங்கி எழுகிற சத்திய ஆவேசமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால்... இப்பொழுதும் அப்படி ஏதோ ஒரு சம்பவம்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று என்னால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.

அவளருகே சென்று மெல்ல அவளது தோளைத் தொட்டேன் "இத பாரு ராதா.. கொஞ்சம் அமைதியா இரு! உன் உடமபுதானே கெட்டுப்போகுது.. சரி...! என்னைப்பாரு.... கடூர வெயில்லே கிளம்பி வந்திருக்கேன் இல்லே? போய் ஜில்லுன்னு கொஞ்சம் தண்ணி கொண்டுவா" என்று அவளை உள்ளே அனுப்பி விட்டு "ஏம்மா.... இந்த அளவுக்கு ராதா கோபப்படற மாதிரி என்னதான் நடந்தது" என்று அவள் தாயிடம் விசாரித்தேன்.

"விஷயம் ஒண்ணுமில்லை செல்வி....! இங்கே... நம்ம காலனி பெண்களெல்லாம் சேர்ந்து "தரங்கிணி மாதர் சங்கம்"னு ஒண்ணு வச்சிருக்காங்க இல்லை? அதிலே வர்ற வெள்ளிக்கிழமை, ஏதோ பூஜை வச்சிருக்கோம்னு கூப்பிட வந்தாங்க...! அத விட்டுட்டு... ஏதோ காரணத்தை இழுத்துக் கட்டிச் சண்டை பிடிக்கிறா இவ...." என்று அம்மா முடிப்பதற்குள் கையில் குளிர்பானத்துடன் வந்த ராதா வெடித்தாள்.

"நீ வேற செல்வியைக் குழப்பாதேம்மா...! செல்வி! மாடிக்கு வா... எல்லாம் விவரமாய்ச் சொல்றேன்! என் கோபத்திலே உள்ள நியாயத்தை அம்மாவாலேதான் புரிஞ்சிக்க முடியலை! நீயாவது என்னை ஏத்துக்கிறியான்னு பார்ப்போம்"

மொட்டை மாடியின் தனிமைச் சூழல், இதமாக வருடிச் செல்லும் தென்றலின் குளுமை, மெல்லிதாகச் சலசலத்துக் கொண்டிருந்த தென்னங்கீற்றுக்களின் தலையாட்டல்.... என, இவை ஒவ்வொன்றிலும் வழக்கமாக மனம் பறிகொடுத்துச் சிலிர்த்துப் போகிற ராதாவின் முகம் பாறையாய் இறுகிக் கிடந்தது.

"அன்னிக்கு பார்த்து... எங்க வீட்டிலே யாருமே இல்லாமே ஊருக்குப் போய்ட்டோம் செல்வி... " என்ற பீடிகையுடன் விஷயத்தைச் சொல்லத் தொடங்கினாள் அவள்.

உயர் மத்தியதர வகுப்பினரே பெரும்பான்மையாக வசிக்கிற வீதியிலிருந்து உள்ளடங்கிக் கட்டப்பட்ட சற்றுப் பெரிய வீடுகளைக் கொண்ட அந்தத் தெருவில்... என்றைக்கும் போலவே... சோம்பலாக ஒரு நண்பகல் பொழுது! கீரை, காய்கறி, விற்பவர்களின் நடமாட்டமெல்லாம் ஓய்ந்து போய்.... எப்பொழுதாவது நீண்டதொரு இடைவெளியில் பழைய பேப்பர் வியாபாரியின் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த நேரம்!

அவரவர் வீட்டு காம்பவுண்ட் கதவுகளைப் பிடித்துக் கொண்டு நின்றபடி, முதல்நாள் இரவு பார்த்திருந்த தொலைக்காட்சித் தொடர்களை... அண்மையில் வாங்கியிருந்த பட்டுப்புடவைகளின் "டிசைன்"களை... மாதர் சங்கக் கூட்டத்தில் திரட்டிய தகவல் துணுக்குகளை... செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளை அலசும் சுவாரசியத்துடன்... ஓய்வான மனநிலையில் கதையளந்து கொண்டிருந்த தெருப்பெண்கள்! அவர்கள் எவருமே... சற்றும் எதிர்பார்த்திராத ஒரு கணத்திலேதான் அது நேர்ந்தது.

"மிஸஸ் மாதவன்!... அங்கே பாருங்க...! தூரத்திலே தலைவிரி கோலமா ஓடிவர்றது... ஸ்ரீமதி மாதிரியில்லே..." செய்தியை ஒரு பெண் அஞ்சல் செய்ய... அந்தக் காட்சி அங்குள்ள பிறரையும் ஈர்த்துக் கொண்டது.

"ஆமாம்! அந்தக் கிறுக்கேதான்.... எதுக்கு இப்படி ஈரம் சொட்டச் சொட்ட வீதியிலே ஓடிவருது....?

அதே தெருவின் மறுபுறக்கோடியில் வசித்துவரும் வசதியானதொரு குடும்பத்தைச் சேர்ந்தவள் ஸ்ரீமதி. கண் நிறைந்த கணவனும், கை நிறையச் செல்வமுமாய்க் கொழித்தாலும், மனம் நிறைய ஒரு மழலை இல்லாத குறை, ஸ்ரீமதியின் மனநிலையைப் பாதித்துச் சில வேளைகளில் சமநிலைக்கோட்டுக்கு அப்பாலும் அவளை நிறுத்தி விடுவதால், அண்டை, அயல், அவளை ஒரு பித்தியாக எண்ணி விலக்கியே வைத்திருந்தது. கோயில், திரைப்படம் என்று இயல்பாகக் கணவனுடன் அவளும் சென்று வருகிற காட்சியைத் தெருக்காரர்கள் கண்டிருந்த போதும்.. ஏதேனும் ஒரு நள்ளிரவுப் பொழுதில் அவர்களின் வீட்டிலிருந்து எழும் தீனமான ஓலம்.... எப்பொழுதாவது அவளிடமிருந்து உதிரும் தொடர்பற்ற சொற்கள்... இவையெல்லாம் பைத்தியம் என்ற பட்டத்தையே அவளுக்கு நிரந்தரமாக அளித்துவிட்டிருந்தன.

என்றேனும் ஒருநாள்... அபூர்வமாக நேரும் மனப்பிறழ்ச்சியான ஒரு தருணம்தான், அன்றைய நன்பகலிலும் ஸ்ரீமதிக்கு வாய்த்திருந்தது. கணவன் அலுவலகம் சென்றிருக்க.... அவளை விட்டு அகலாமல் அருகிலேயே இருந்து கண்காணித்து வரும் ஆயாவும், அவள் ஆழ்ந்து உறங்கிவிட்டாளென்ற எண்ணத்தில் மார்க்கெட் வரை சென்றிருந்தாள். உறக்கம் கலைந்து ஹாலுக்கு வந்த ஸ்ரீமதி, அங்கே கிடந்த வார இதழொன்றை இலக்கின்றிப் புரட்டுகையில் தற்செயலாக அவள் கண்ணில் பட்டது, அந்தப் பவுடர் விளம்பரம்! குப்புறக் கிடக்கும் கொழுகொழு குழந்தையைப் பாசத்தோடு ஏந்தியிருக்கும் தாய்! குழந்தையின் வண்ணப் படங்கள், பல்வேறு கோலங்களில் பத்திரிக்கையில் இரட்டைப் பக்கங்களிலுமாய் வியாபித்திருக்க... ஸ்ரீமதியின் எண்ண அலைகள், சமனக் கோட்டை மீறி அதிர ஆரம்பித்தன. இன்னது செய்கிறோமென்ற நிதானம் தவறியவளாய் சமையலறைக்கு ஓடி மண்ணெண்ணெய் டின்னை அப்படியே எடுத்து உடலில் கவிழ்த்துக் கொண்டாள். அவளது பலவகையான மனநிலைகளையும் துல்லியமாய்க் கணித்து வைத்திருந்த ஆயா, நெருப்புப்பெட்டி, "லைட்டர்" வகையறாக்களை ஒளித்து வைத்திருக்க... அவற்றைத் தேடிக் கிடைக்காத ஆத்திரத்தில்.... எரிச்சலோடு அவள் தெருவுக்கு ஓடிவர, அதுவே அங்குள்ளவர்களுக்குக் கண்காட்சி ஆகிப்போனது.

இதுவரையில் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்கள்.... ஸ்ரீமதி அருகே நெருங்குகையில்.... தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீட்டிற்குள்ளே சென்றுவிட எத்தனித்தபோதும்... தங்களைத் தேடித் தானாகவே வந்திருக்கிற ஒரு "வம்பை" அரைகுறையாக விட்டுவிடவும் மனமில்லாதவர்களாய் அங்கேயே நின்றார்கள். அவர்கள் அங்கே நின்றுகொண்டிருப்பதே பிரக்ஞையில் உறைக்காதவளாய்..... மெதுவான ஓட்டத்தில் ஸ்ரீமதி அவர்களைத் தாண்டிச் செல்ல.. ஒருத்தி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

"என்ன இது.... மண்ணெண்ணெய் நாத்தமில்லே அடிக்குது...? அதையா மேலே ஊத்திக்கிட்டு வந்திருக்கா...?"

"ஒரு வேளை... இந்தப் பைத்தியத்தோட பிடுங்கல் தாங்க முடியாம.... அவ புருஷனே ஊத்திக் கொலை பண்ணப் பார்த்தாரோ என்னவோ..."

அவசரமாய் அதை மறுத்தாள் மற்றொருத்தி.

"சேச்சே. அப்படியெல்லாம் இருக்காது! இன்னிக்குக் காலையிலே கூட அவரு ஆபீசுக்குக் கிளம்பிப் போனதை என் கண்ணாலே பார்த்தேனே?"

இதற்குள் தெருக்கோடி வரையில் போய்விட்டுத் திரும்பியிருந்த ஸ்ரீமதி, அவர்களை நெருங்கிக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

"யாராவது ஒரு தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்! ப்ளீஸ்...! அடுப்பைப் பத்த வச்சுப் பாப்பாவுக்குப் பால் கரைச்சுத் தரணும்! தீப்பெட்டி கொடுங்களேன்... ப்ளீஸ்!... பாப்பா பசியோட இருக்குமில்லே...?"

இலக்கற்ற வெறித்த நோக்குடன்... மூடிய வீடுகளின் முன்னால் நின்றும் கூடக் கெஞ்சியபடி ஸ்ரீமதி தெருவில் முன்னேறிச் செல்ல... திடுக்கிட்டுப்போன அந்தப் பெண்கள், தீப்பெட்டியைத் தர வேண்டாமென ஒருவருக்கொருவர் சைகை செய்து கொண்டனர். தத்தம் வீடுகளுக்குள் அவர்கள் நுழைய முற்பட்ட நேரத்தில்.... மனித நேயத்தின் ஈரம் இன்னும் முற்றாய்க் காய்ந்து விடாத ஒரே ஓரு இளம்பெண் மட்டும் தலைமை தாங்கும் பாவனையில் வீதியின் நடுவில் வந்து அவர்களை ஒருங்கிணைக்க முற்பட்டாள்.

"இதோ பாருங்க....! இப்ப... நாம தீப்பெட்டி கொடுக்காம இருந்துட்டாலும்.... இவங்களுக்கு வேற எப்படியாவது அது கிடைச்சு... ஏதாவது ஆச்சுன்னா பாவமில்லையா? அதனாலே.... ஒண்ணு செய்வோம்! நாம எல்லாருமாய்ச் சேர்ந்து இவங்களைப் பிடிச்சு ஒரு ரூமுக்குள்ளே பூட்டி வச்சிட்டு. இவங்க வீட்டுக்காரருக்குத் தகவல் தந்திடுவோம்! அதுக்கப்புறம் அவர்பாடு!"

அவளது யோசனையை முகஞ்சுளித்துக் கேட்டுக் கொண்டிருந்த பெண்கள், மௌனமாய் நிற்க, வயதில் மூத்தவளாய்த் தென்பட்ட ஒரு பெண் மாத்திரம் தன் எதிர்ப்பை உடனடியாக வெளியிட்டாள்.

"நல்லாயிருக்குடிம்மா நீ சொல்றது! இளங்கன்று பயமறியாதுன்னு சொல்றது நிஜந்தான் போல இருக்கு! இந்தக் கிறுக்கை நாம அடைகாத்து வைக்கிறோம்னே வச்சுக்க! அப்பவும்... எசகு பிசகா ஏதாவது ஆயிடிச்சுன்னா... போலீஸ், கேஸ், கோர்ட்டுன்னு அலைய எந்த வேலையத்தவளுக்கு நேரமிருக்கு? நீ வேணும்னா... அந்தக் காரியத்தைத் தனியாகச் செஞ்சுக்கோ!.... எதுக்கும் உன் வீட்டுக்காரர் என்ன சொல்வாருன்னும் ஒரு நிமிஷம் யோசிச்சுக்கோ!"

இதற்கு மேலும் அந்த விவகாரத்தில் பட்டுக் கொள்ள விரும்பாதவர்களாய், அவரவர் தத்தம் வீடுகளில் விரைவாக நுழைந்து கதவுகளைத் தாளிட்டுக் கொள்ள... சற்றே துணிச்சல் காட்டிய அந்த இளம்பெண்ணும் கூடப் பின் விளைவை எண்ணிப் பயந்தவளாய்... அந்த ஆட்டு மந்தையில் ஒருத்தியாய்ச் சங்கமித்தாள்.

மூடிய கதவுகளை ஏக்கமுடன் பார்த்த வண்ணம் ஸ்ரீமதி நகர்ந்து செல்ல.... அப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சை உதிர்த்தாலும், அடுத்த பத்து நிமிடங்களில் எங்கிருந்தோ கிடைத்துவிட்ட தீப்பெட்டியின் துணையால் அவள் நெருப்புக் கோளமாய் எரிந்துவிட்ட செய்தி, அவர்களுக்கு அஞ்சலாக... மேற்கொண்டு தகவல் சேகரிப்புக்காகத் தெருக்கதவுகள் அனைத்தும் உடனடியாக விரியத் திறந்துகொண்டன.

"நல்ல வேளை... அந்தப் பைத்தியம் நெருப்புப்பெட்டி கேட்டப்ப நாம கொடுக்கலை... இல்லேன்னனா... செத்தும் கெடுத்தாள்னு... நம்ம எல்லாரையுமில்லே வம்பிலே மாட்டி வச்சிருக்கும்...."

அவள் சாவுக்குத் தாங்கள் காரணமாகவில்லையென்ற அற்பத்தனமான திருப்தியோடு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தபடி கூட்டம் கலைந்தது.

"இப்ப சொல்லு செல்வி! சுத்தியுள்ள மனுஷங்க மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாம... கண்ணுக்கெதிரிலே நடந்துக்கிட்டிருந்த சாவைத் தடுக்கணும்கிற உணர்ச்சி கூட இல்லாம... மரம் மாதிரி நின்னு நடந்ததையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு.... ஊரைக் கூப்பிட்டுப் பூஜை வைக்க என்ன யோக்கியதை இருக்குன்னு நான் கேட்டது தப்பா செல்வி"

ராதாவிடம் விடைபெற்று வீதியில் இறங்கினேன். காலனியின் சுவர்களில் அடைசலாக நிரம்பியிருந்த சக்தி வழிபாட்டுப் பலகலர் போஸ்டர்கள், கண்களை உறுத்த... அவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்தவளாய்... விரைவாய் நடந்தேன்

நன்றி: தடை ஓட்டங்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link