சிறுகதைகள்


விருந்து

கூடல்.காம்

ஏதேதோ ஊர்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி, கவிதைபாட, உரை நிகழ்த்த என்று இவன் சென்றாலும், நண்பன் இருக்கிற ஊரில் நிகழ்ச்சி இறுதியாகியிருப்பதால் இவன் பெரிதும் மிகுந்த பெரு மகிழ்ச்சியடைந்தான். நண்பனும் கேள்விப்பட்டு உவகையுடன் "எங்கள் ஊருக்கு வருகிறாய். மதியம் நம் வீட்டில் தான் சாப்பாடு" என்று அன்புக் கட்டளை விதித்திருந்ததுடன், நிகழ்ச்சியன்று இவனை அழைத்துவர மாநாட்டு அரங்கிற்கே ஒரு பணியாளரையும் அனுப்பி வைத்திருந்தான்.

அழைப்பு தனக்கும் மட்டும்தான் என்றாலும், நிகழ்ச்சிக்குத் தன்னுடன் வந்திருந்த இரு சக கவி நண்பர்களையும் விட்டுவிட்டு தான் மட்டும் போவது நாகரீகமாக இருக்காது என்று நண்பனின் அனுமதியுடன், சக கவிகளையும் உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

நண்பனது இல்லம் ஏகி, கையைக் காலைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்காரும் வரை, நட்பு ரீதியான எத்தனையோ அழைப்புகளில் இதுவும் ஒன்று என்று சாதாரணமாகக் கருதிக் கொண்டிருந்தவனுக்கு இலையைப் பார்க்க மலைப்பாயிருந்தது. ஏற்பாடெல்லாம் இந்த அளவுக்கு தடபுடலாயிருக்கும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை.

தாம்பாளம் மாதிரி அகல விரித்த வாழை இலையில் இவனுக்குப் பெயர் தெரிந்ததும், தெரியாததுமான பல்வேறு அயிட்டங்களைச் சுற்றிலும் பரப்பி வைத்திருந்தார்கள். நடுவில் நெய் ஜீராவில் செவசெவ என மினுமினுக்கும் ஜாங்கிரியுடன், பக்குவமாய்க்கனிந்த மாம்பழம், ரஸ்தாளி, சில பலாச்சுளைகள் என முக்கனியும் எல்லாம் ஏதோ விளம்பரத்துக்காக வைக்கப்பட்ட காட்சிப் படம் போல் தோன்ற, பசுமையான இலைப்பரப்பில் பல வண்ணமாய்க் கொலு வீற்றிருந்த அயிட்டங்களையே பிரமிப்புடன் பார்த்தபடி, எதிரே மடித்துப் போட்டிருந்த விரிப்பில் கவி நண்பர்களை அமர வைத்துத் தானும் அமர்ந்தான்.

வெள்ளை வெளேரேன்று ஆவி பறக்க மல்லிப் பூவாய் இலையில் தள்ளப்படும் சோற்றை இவன் பொறுக்கப் பொறுக்கக் கைகளை ஊதி எதுக்கு முதல் அயிட்டத்துக்குத் தயாரானான் பல்லவியாக முதலில் பருப்பு பொடியும் நெய்யும் போட்டார்கள். அதைப் பிசைந்து உருட்டி உள்ளே இறக்குவதற்குள் அனுபல்லவியாக முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார். அப்புறம் சுண்டை வத்தல் குழம்பு, எல்லாவற்றிற்கும் நெய். அப்புறம் சரணமாக மோர்க்குழம்பு, ரசம், பாயாசம், அனுசரணமாக தயிர் என்று அது அதற்கும் உடனுக்குடன் சோற்றை இறக்கி எதையும் வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல், சொன்னாலும் அவர்கள் கேட்பதாயில்லாமல் நண்பனின் வீட்டார் இவனையும் இருகவி நண்பர்களையும் போட்டு திணற அடித்துக் கொண்டிருந்தார்கள்.

இலையில் வைத்த எதுவும் வீணாகி விடக்கூடாதே என்கிற அச்சத்தில் இவன் "போதும், போதும் இருங்க சாப்பிட்டு வச்சுக்கிறேன்" என்று சொல்ல "என்னா சாப்பிட்டுட்டீங்க அதுக்குள்ள போதும்ன்றீங்க. கூச்சப்படாம நல்லா சாப்பிடுங்க. தெனமா இங்க சாப்டப் போறீங்க" என்று நண்பனின் மனைவியும், ஓரகத்திகளும் போட்டி போட்டுக் கொண்டு அது அதையும் இலையிலே தள்ள, நண்பனின் தந்தையார் வேறு பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு இலையில் எது குறைகிறதோ அதை வைக்கச் சொல்லி அவ்வப்போது "தம்பிக்கு அவியல் வை" தம்பிக்கு சிப்ஸ் போடு. தம்பிக்கு பாயாசம் ஊத்து. தம்பிக்கு பலாச்சொள வை" என்று ஆணைபிறப்பித்துக் கொண்டிருந்ததுடன் அப்பளத்தை பாயாசத்துல நொறுக்கிப் போட்டு பெசஞ்சு சாப்பிடுங்க தம்பி" "தயிர் சாதத்துக்கு வத்தக்குழம்பு ஊத்திக்கோங்க தம்பி என்று சாப்பிடும் முறைகள் பற்றியும் வேறு பரிந்துரைத்துக்கு கொண்டிருந்தார்.

மேலே சுழலும் மின்விசிறியையும் மீறி, முகத்திலும் கழுத்திலும் வழியும் வியர்வையை அவ்வப்போது துடைத்து, அடிக்கடி மூக்கையும் உறிஞ்சியபடியே இவையோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாலும். எல்லாம் தன் கவி நண்பர்கள் முன்னிலையில் நடப்பதில் பெருமிதமும் பூரிப்பும் அடைந்தான். மற்றவர்கள் மாதிரி சும்மா பஞ்சத்துக்குப் பாட்டெழுதுகிற பரதேசிக் கவிஞன் இல்லை தான். தனக்கும் இந்த மாதிரி இடங்களில் தொடர்பு உண்டு, தன்னையும் இதுபோன்று பெருமையோடு கவனிக்க, விருந்தோம்ப ஆட்கள் உண்டு என்று காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதாகவும் நினைத்துக் கொண்டான்.

இதே ஒரு மூணு நாலு வருடம் முந்தியானால் இவனை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி யாரும் விழுந்து விழுந்து கவனிக்கப் போவதுமில்லை. அப்போது இவனுக்கு இருந்த அறிமுகம் பெயரெல்லாம், பிறந்த போது பெற்றோர்கள் பிரியத்தோடு வைத்த கண்ணாயிரம் என்கிற பெயருக்கும் அப்பால் நடைமுறையில் அழைக்கும் "தண்டச்சோறு" தெருக்காரர்களுக்கு "வெட்டிப்பயல்" நண்பர்களுக்கு "கடன்காரன்" என, இவ்வாறான திருநாமங்கள்தான். இப்படிப்பட்ட கீர்த்திகளோடு திரிந்து கொண்டிருந்தவன், திடீரென்று காலப்போக்கில் "கவிஞர் கனல் முகிலன்" என்னும் புனைப் பெயரால் அறியப்பட நேர்ந்த போதுதான் இவனுக்கென்று ஒரு பிராபல்யம் கிடைத்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை என்கிற பெயரில் ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருந்தவன், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி நாட்களிலும் அதையே தொடர, படித்து முடித்தும் எல்லா பட்டதாரி இளைஞர்களையும் போலவே வேலை வெட்டியில்லாமல் திரிந்து கொண்டிருந்தான். வீட்டில் புடுங்கல் தாங்காமல் வெளியேறி பட்டணத்துக்குப் பயணப்பட்டவன் ஒரு சில நாட்களிலேயே கையில் கொண்டு வந்திருந்த காசும் கரைந்து வயிறு காய கவிதை உரம் பெற்றது. பரிசில் வாழ்க்கைபோல பத்திரிகை அலுவலகங்களின் படியேறி இறங்க ஒரு இதழ் இவனுக்கு மறுவாழ்வி அளித்தது. யாருமே சீண்ட அஞ்சி தீண்டாமை பாராட்டிய இவன் கவிதைகளையும் ஒரு சிலதை வெளியிட ஓரளவு அறிமுகமும் கிடைத்தது. கூடவே, இவன் போல சென்னை வந்து தட்டுக் கெட்டுத் தடுமாறி கோடம்பாக்கத்தால் அற்றுப்படுத்தப்பட்டு அடைக்கலமான சில நண்பர்கள் மூலம் திரைத்துறைக்கும் வாய்ப்பு கிட்டியது. இவனது பாடல்கள் சில நல்ல காட்சியமைப்புடன், இசையும் பொறுத்தமாக அமைந்து "ஹிட்" ஆக இவனுக்கும் துறையில் ஒரு பேர் கிடைத்தது. படத்தின் பாடலாசிரியர்கள் பெயர் போடும் போது தொடக்கத்தில் இவன் பெயரை கடைசியில் சின்னதாகப் போட்டு வந்தவர்கள், காலப்போக்கில் மற்ற பாடலாசிரியர்களுக்கு இணையாக சமமாகப் பெயர் போடத் தொடங்கினார்கள். முதலில் விபரம் அறியாது இவன் பெயரைப் பொருட்படுத்திக் கொள்ளாமலிருந்த நண்பர்கள் பிறகு "கடன்கார கண்ணாயிரம்" தான் "கவிஞர் கனல் முகிலனாக" அவதரித்திருக்கிறார் என்கிற மர்மத்தை அறிந்து அளவிலா மகிழ்ச்சியடைய கவிஞர் தங்கள் நண்பர்தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைந்தார்கள். ஊர்க்காரர்களும் திரையில் பெயர் ஓடும்போது "டேய் நம்ம கண்ணாயிரம் டா டோய்... கவிஞராயிட்டாண்டா டோய்.." என்று வியந்து மகிழ்ச்சித் தாண்டவமாடினார்கள்.

இவ்வாறாக கடன்கார கண்ணாயிரம், வெள்ளித் திரையில் கனல் முகில காட்சி கொடுக்கத் தொடங்க ஆங்காங்கேயுள்ள இலக்கிய மன்றங்கள், பொதுநல அமைப்புகள், கலை இலக்கிய நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்கள், மாநாடுகள் நடத்தும் போது நிகழ்ச்சிகளில் இவனை பங்குகொள்ள, அதாவது மூத்த கவிஞர்கள் தலைமையில் கவிபாடவோ, அல்லது இளம் கவிஞர்கள் அரங்கிற்குத் தலைமையேற்கவோ அல்லது தனியாக உரையாற்றவோ அழைத்தார்கள். அதோடு இதற்கான அறிவிப்புகள் சுவரெழுத்துக்கள் விளம்பரத் தட்டிகளிலும்; சாதாரணமாகப் பெயரை மட்டும் போட்டால் அதில் ஒரு மகத்துவம், சிறப்பு இருக்காது என்று மக்களை வசீகரிக்கவும், கவர்ந்திருக்கவும் "திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கனல் முகிலன்" என்று பெயர் போட்டார்கள்.

"தம்பிக்கு இன்னொரு வாழப்பழம் வை. பழமெல்லாம் எப்படி இனிக்குது பாத்திங்களா எல்லாம் நம்ம தோட்டத்துல இயற்கையா வெளஞ்சிது பழுத்தது. இப்பதான் எல்லாத்தையும் மருந்து போட்டு பழுக்க வக்யறாங்களே, எத நம்பி சாப்பிடுறது. ஊருக்குப் போகும் போது அது அதுல கொஞ்சம் எடுத்துக்குனு போங்க" என்றார் நண்பனின் தந்தை.

நண்பனின் தந்தை நல்ல வசதி. தோட்ட விவசாயம் வணிகம் என்று இரண்டு வகையிலும் நல்ல காசு பார்ப்பவர். மூன்று பிள்ளைகள், மூவருமே வெளி வேலை எதற்கும் போகாமல் உரக்கடை, மின்பொருள் கடை, மருந்துக்கடை என்று ஆளாளுக்கு ஒரு தொழிலைப் பார்த்துக் கொள்ள, மூவருக்கும் திருமணமாகி மூன்று மருமகள்களுமே வீட்டோடு இருந்தார்கள். இந்த மூவருக்கும் இருந்த ஒற்றுமையும் விருந்தேம்பலும், உபசரிப்பும் நேரில் பார்க்க வியப்பாயிருந்தது. எல்லாம் ஒரு நிறமாய் கொலுசு அணிந்த சிவந்த பாதங்கள் மேயும் புறாக்கள் போல் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட பரிமாறுவதில் எவரும் எவருக்கும் சளைத்தவர் இல்லைபோல் கவனிப்புக் காட்டினர். தொடக்கத்தில் இந்தக் கவனிப்பில் மகிழ்ந்து அவ்வப்போது இவன் பக்கமாகவும் திரும்பி லேசாய்ப் புன்னகைத்தபடி பூரிப்போடு சாப்பிட்டுக் கொண்டிருந்த கவி நண்பர்கள், போகப் போக அதிர்ந்து கண்களில் லேசாய் மிரட்சி மின்ன எப்படியாவது இதிலிருந்து மீண்டால் போதும் என்பதுபோல் திகிலில் முழிக்கத் தொடங்கினர்.

அப்பாடா என்று ஒருவழியாக என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு முடிந்து இவனும் கவி நண்பர்களும் தரையில் கையை ஊன்றியும், அருகிலுள்ள விசுப்பலகையைப் பிடித்தும் மிகுந்த பிராயாசையோடு ஏழ மருமகள்கள் மூவரும் குடுகுடுவென்று முன்னாடி ஓடி ஒரு மருமகள் கை கழுவ தண்ணீர் கொண்டு கொடுக்க ஒரு மருமகள் துடைக்கத் துண்டு எடுத்துக் கொடுக்க, மூத்த மருமகள் கொழுந்து வெற்றிலை, பாக்கு டப்பா, சிகப்பு சுண்ணாம்பு பாக்கெட் அடங்கிய நிலை வெள்ளித்தட்டோடு தாம்பூலம் ஏந்தி வந்தாள். "அறையில் வக்யறேன். வேணுங்கறதை போட்டுக்கோங்க" என்று அறையைக் காட்டி "உள்ள பாய் தலையைணையும் எடுத்து வச்சிருக்கிறேன். படுத்து ஓய்வெடுங்க" என்றாள்.

அறை கச்சிதமான அறை. மெத்தை போட்ட ஒற்றைக் கட்டில். மேசை நாற்காலி, சுவர் ஓரம் இரண்டு பாய் தலையணைகள் சாற்றி வைக்கப்பட்டிருந்தன. கவி நண்பர்களைத் தாம்பூலம் எடுத்துக் கொள்ளச் சொல்லி, தானும் போட்டு முடித்தவன் இங்கிதம் கருதி அவர்களைப் பார்த்து "நீங்க யார்னா ஒருத்தர் கட்டில்ல படுத்துக்கோங்க. ரெண்டு போர் கீழே படுத்துக்கலாம்" என்றான். இரண்டு கவி நண்கர்களும் இவன் தலைமை விருந்தினர் என்ற முறையில், "நீங்க கட்டில்ல படுத்துக்கோங்க நாங்க ரெண்டு பேரும் கீழ படுத்துக்கிறோம்" என்றார்கள். நிறைமாத கர்ப்பிணிபோல் வயிறு நிரம்பியிருந்த நிலையல் இப்போதைக்கு தரையில படுத்தெல்லாம் எழுந்திருக்க வசதிப்படாது. கட்டிலே சுகம் என்று தோன்றிய இவன் அதற்மேல் எதுவும் வாக்குவாதம் செய்யாமல் மேலே ஏறி அப்பாடா என்று கையைக் காலை நீட்டிச் சாய்ந்தான், வாயிற்படியில் கையில் பிடித்த லுங்கிகளுடன் மூத்த மருமகள் தோன்றினாள். "யாரும் கைளிமாத்திக்கலியா..." இப்போதைக்கு படுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய விரும்பாத நிலையில் இவன் வேண்டாம் உடுங்க எல்லாம் படுத்துட்டாங்க, என்றான். "நீங்க" என்றாள் கொஞ்ச நேரம்தான் இருக்கட்டும் உடுங்க என்று அவளை அனுப்பிவிட்டு மணியைப் பார்த்தான். மணி 2.30 ஆகியிருந்தது. கவியரங்கம் மாலை, 4.30 மணி என்று போட்டிருந்தது. தொடங்க எப்படியும் 5.00 ஆகலாம். அதற்காகவே அப்படி போட்டுமிருக்கலாம். பரவாயில்லை நல்ல செமையான சாப்பாடு மெதுமெதுவென சுகமான பஞ்சு மெத்தை. மேலே மின் விசிறி. நிம்மதியாய் ஒரு மணி நேரம் தூங்கி ஓய்வு எடுத்து ஒரு 3.30க்கு விழித்து எழுந்தால் கூட கவிதையில் குறையாய் விட்டிருக்கும் பகுதியை எழுதி நிரப்பி சரிசெய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பொதுவாகவே கவியரங்க நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் தலைப்புகளில் இவன் எவ்வளவுதான் மண்டையைக் குடைந்து யோசித்து யோசித்து வரிகளை அடுக்கினாலும் நிகழ்ச்சி நெருக்கத்தில் கடைசி நேரப் பதட்டத்தில்தான் பல சிறப்பான, கைத்தட்டலுக்குகேற்றவரிகள் வந்து விழுவதாக இவனுக்கு வாடிக்கை. இதனால் இவன் எப்போதும் பாதிக் கவிதையோடே பயணத்தைத் தொடங்கி, மீதிக் கவிதையைத் தங்கவைக்கும் அறையிலிருந்தோ, அல்லது மாநாட்டு மேடையிலமர்ந்தோதான் எழுதுவது வழக்கம்.

இன்றைய அரங்கில் "பெட்டிகள் பேசுகின்றன" என்கிற பொதுத் தலைப்பில் "வாக்குப் பெட்டி", "வானொலிப் பெட்டி", "அஞ்சல்பெட்டி", "ஐந்தறைப் பெட்டி" என பல்வேறு பெட்டிகளைத் தனித் தலைப்பாக்கி, ஆளுக்கொரு தலைப்பைத் தந்து இவன் திரைத் துறையில் இருப்பதால் இவனுக்கு "படப்பெட்டி" யைத் தலைப்பாகத் தந்திருந்தார்கள். ஏதோ அடித்தால் போட்டாள் போன்றதொரு களைப்போடும் ஆயாசத்தோடும் படுத்து இவன் அது சார்ந்த வரிகளை அசை போட்டபடியே லேசாய்க் கண்ணயர "குடாஃப்டர்னூன் அங்கிள்" என்கிற குரல் கேட்டு விழித்தான். ஒரு ஏழெட்டு வயது சிறுவன் கான்வென்ட் சீருடையுடன், முதுகிலிருந்த புத்தக மூட்டையைக் கழற்றிக் கட்டிலில் போட்டு விட்டு கழுத்துப் பட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான்.

பதிலுக்கு வணக்கம் சொன்ன இவன், பையனின் பின்னாலேயே மூத்த மருமகளும் வந்து நிற்பதைப் பார்த்து மரியாதைக்காக எழுந்து உட்கார்ந்தான். "இவன் தான் மூத்தவன். உங்க பாட்டுன்னா ரொம் பிடிக்கும். டி.வியில் உங்க பாட்டு வந்துட்டா ஒரே ஆட்டம்தான். அங்கிள் வந்திருக்காருன்னதும் ஒரே குஷியாயிட்டான். நீங்க இங்க வரப்போறீங்கன்னு சொன்னநாளா
தெனம் உங்களப் பத்திதான் பேச்சி. எப்ப வருவாரு, எப்ப வருவாருன்னு தொணச்சி எடுத்துட்டான். இன்னைக்குக் காலையிலகூட நீங்க வரப்போறீங்கன்னு ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு ஒரே அடம். அங்கிள் மத்தியானம் தான்டா வருவாரு. அதுக்குள்ள நீ வந்துடலாம்னு சமாதானம் பண்ணித்தான் அனுப்பி வச்சோம்" என்றார் மருமகள்.

இவன் களைப்பு மாறாமலே பையனைப் பார்த்து "பேர் என்னப்ப", "எத்தனையாவது படிக்கிற", "நல்லா படிக்கிறியா" என்று சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டு, மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரையுமே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் விழித்தான். மருமகள் பையனின் பல்வேறு பெருமைகளைப் பிரகடனம் செய்து அறிவித்து விட்டு கொஞ்சம் இருங்க. பயனுக்கு சாப்பாடு குடுத்திட்டு வந்துடறேன்" என்று மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

இவன் மீண்டும் படுத்து கண்களை மூடி கவிதை வரிகளில் ஆழ்ந்தான். "பேருந்தில் பாம்பாகச் சுருண்டிருக்கும் படப்பெட்டி... கண்கள் செறுகி தூக்கம் தழுவத் தொடங்கும் தருணம் "வாப்பா எப்ப வந்த" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் நண்பன் "இன்னைக்கிப் பாத்து நம்ப கணக்குப்புள்ள லீவு. மத்தியானம் அவங்க ஊட்ட அவர் பொண்ண பார்க்க யாரோ வராங்கன்னு லீவு கேட்டுக்குனு போயிட்டாரு. நேத்து வர வேண்டிய சரக்கு ரெண்டு லோடு வழில வண்டி ஏதோ ப்ரேக் டவுன்னு அது வேற இன்னைக்கிதான் வந்து எறங்குச்சி. அதக் கணக்கு பண்ணி, எறக்கி வச்சிட்டு வர லேட் ஆயிடுத்து அதுக்குதான் நான் வர்ற வரைக்கும் அவர்களே காக்கவைக்க வேண்டாம். வந்ததும் அவர்கள் சாப்பிட வச்சுருன்னிட்டேன். நீ மட்டும் இருந்தா பரவால்ல. கூட வந்தவங்களையும் எதுக்காக காக்க வைக்கனும்தான்" என்று சட்டையைக் கழட்டி தோளில் போட்டபடி மேசை விளிம்பில் அமர இவன் தூக்கம் கலைந்த சோர்வில் "சொன்னாங்க" என்றான். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த நண்பனை "சாப்பிட்டு வந்து உக்காந்து பேசிக்கன்னு இருங்களேன் என்று மனைவி அழைக்க "இரு தோ வந்துடறேன்" என்று எழுந்தான்.

"மெதுவாவே வா. ஒண்ணும் அவசரமில்ல" என்று நண்பனை வழியனுப்பி வைத்து மீண்டும் படுத்தான். இரண்டு முறை வந்த தூக்கத்தைக் கலைத்துப் போட்டதில் மீண்டும் அந்த செறுகல் கிடைக்காத மாதிரியிருந்தது. இருந்தாலும் கண்களை மூடி கவிதை வரிகளை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர முயற்சித்தான்.

"இப்ப எந்தப் படத்துக்கு எழுதறிங்க" என்று கேட்டு ஈரக்கைகளைமேல் துண்டால் துடைத்தபடியே உள்ளே நுழைந்த நண்பனின் தந்தை குரல் கேட்டு கண்களைத் திறந்தவன் எழுந்து உட்கார்ந்து அவருக்கு பதில் சொல்ல அவர் சாவகமாய் நாற்க்காலியில் சாய்ந்து தற்போது திரைத் துறை வாய்ப்புகள் எப்படி, ஒரு பாடலுக்கு எவ்வளவு கிடைக்கும் திருமணம் எப்போது வருகிற வருவாய் குடும்பம் நடத்த போதுமானதாக இருக்குமா என்பது, போன்ற தகவல்களை விசாரித்துக் கொண்டிருந்து விட்டு "ஊருக்குப் பொறப்படும் போது ஊட்டுக்கு வந்துட்டுப் போங்க" என்று எழுந்தார்.

லேசான அசதியோடு கட்டிலில் அமர்ந்தபடியே அவர் கேட்ட விவரங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தவன், அவர் கிளம்ப அவகாசம் தந்து மீண்டும் படுக்கையில் சரிந்தான். கண்களை மூட யத்தனிக்கையில், நண்பன், மனைவி, மகன் மூவரும் ஏதோ மேட்னிக்குப் போவது போல் பளிச்சென்று உடுத்தி முகத்தில் பவுடர் எல்லாம் பூசிக் கொண்டு வந்து நின்றார்கள். "ஏதோ வெளியில் புறப்படுகிறார்கள். சொல்லிக் கொண்டு போக வருகிறார்கள் போலிருக்கிறது" என்று நினைத்தவன் மனத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் எழுந்து அமர்ந்து வெளில பொறப்பட்டீங்களா" என்றான்.

"எங்கேயுமில்ல இங்கதான் என்றவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். பின்னால் கடைசி மருமகளும் அதே போலவே உடுத்திக் கொண்டு கையில் கேமிராவோடு வந்து நிற்க இவன் புரியாமல் விசித்திரமாகப் பார்த்த என் நண்பன் "ஒண்ணுமில்ல உன் கூட ஒரு ஃபோட்டா எடுத்துக்கலாம்னு" என்று சொல்லி விட்டு "முகம் கழுவிக்கிறியா" என்றான். எதிர்பாராத இந்தத் திருப்பத்தில் இவன் இருக்கட்டும் பரவால்ல என்று கைக் குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்றான். நண்பன், மனைவி, மகன் மூவரும் இவன் அருகில் வந்து நிற்க, இளைய மருமகள் ஒரு கிளிக். பின் இளைய மருமகள் சேர்ந்து நிற்க நண்பன் ஒரு கிளிக்.

இப்படி மாற்றி மாற்றி சில கிளிக்குகள். ஏறக்குறைய எல்லாம் முடிந்தது போல என்று இவன் கருதியிருந்த தருணத்தில் நடு மருமகள் பளிச்சென்று உடுத்திக் கொண்டு வந்து நின்று "எல்லாம் இங்கியே எடுத்தீட்டீங்களா. லைட்டிங் போதுமா" என்றாள். "ப்ளாஷ் இருக்குதுல்ல" இருந்தா கூடம் சன்லைட் மாதிரி வருமா. அப்படியே இருந்தா கூடம் எல்லாத்தையும் அறையிலியேவா எடுத்துகிறது. ஒரு சேஞ்ச் வேணா" என்று கேட்டுவிட்டு "மொட்ட மாடிக்குப் போவலாம் வாங்க. அங்கதான் நேச்சுரலா இருக்கும்" என்று எல்லோரையும் மாடிக்கு அழைத்தாள்.

நண்பன் அதுவும் சரிதான் என்று எல்லோரையும் அழைத்க் கொண்டு மாடிக்குச் செல்ல பின்னால் இவனும் விதியே என்று நடந்தான். மாடிச் சுற்றுச்சுவருக்குப் பின்னால் கையால் எட்டிப்பறிக்கலாம் போல இளநீர்க் குலைகளுடன் தென்னை மரங்கள். மட்டைகள் காற்றில் சலசலக்க தூரத்தில் ஊரின் பிரசித்தியான கோயில் கோபுரம். தெற்குப்புறம் ஒரு குன்று. எல்லோரும் ஏறிவந்து இவனை மையமாக வைத்து நிற்க இவற்றின் பின்னணியில் மாற்றி மாற்றி சில புகைப்படங்கள். நடு, இளைய மருமகள்களும் தங்கள் கணவன்மார்கள் மாலையில் தான் வருவார்கள். வந்தால் அவர்களோடும் சேர்ந்து மாநாட்டு அரங்கிலேயே சிலது எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தங்கள் பங்குக்கு சில படங்களை நிறைவேற்றி முடித்தார்கள். "ரோல் பூரா இதுலியே தீத்துடுவிடுவீங்க போல் இருக்குது" என்ற மூத்த மருமகள் கணவனைப் பார்த்து உங்க அப்பாவையும் கூப்பிடுங்க அவரையும் வச்சி ஒண்ணு எடுத்துடுவோம் என்று அவரையும் அழைத்து ஒருவாறாக புகைப்படப் படம் முடிந்து அவ்வளவுதான் என்று எல்லோரும் இறங்க கீழ்க் கூடத்தில் சில சிறுவர் சிறுமிகள் புடை சூழ நாலைந்து பெண்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்து வாங்க வாங்க என்ற மூத்த மருமகள் "நம்ப பையனோட ஃப்ரண்ட்ஸ். பக்கத்துல குடியிருக்கிறாங்க. நீங்க வந்திருக்கிங்கன்னு இவங்க கிட்டல்லாம் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டிருக்கிறேன் லோல் அதான் உங்களப் பார்க்க வந்திருக்காங்க". என்று சொல்லி சிரிக்க இவன் அவர்களைப் பார்த்து "வணக்கம்" சொன்னான்.

அவர்களும் இவன் பாடலையெல்லாம் அடிக்கடி கேட்பதாகவும், எல்லா பாடல்களுமே நன்றாக இருப்பதாகவும், சொல்லி, இப்படி ஒரு பாடலாசிரியர் இவ்வளவு அருகில் காணக் கிடைத்தது தங்கள் பாக்கியம் என்றும் எனவே தாங்களும் இவனோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதுமான தங்கள் கோரிக்கையைத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட மருமகள்கள் லேசாய் முகம் மாற "படமா... ரோல்ல எடம் இருக்காதே" என்று இழுக்க அதுல வேணாம் நாங்க தனியா கேமரா கொண்ணாந்து இருக்கோம்" என்றார்கள் வந்தவர்கள். "சரி அப்பன்னா இப்படியே நின்னு எடுத்துக்கோங்க" என்று நடுமருமகள் கோணம் காட்ட" வேண்டாம். ஒரே நெருக்கமா இருக்கும். மாடிக்கே போயிடுவும்" என்றார்கள் வந்தவர்கள்.

மருமகள்கள் மூவருக்கும் இது உடன்பாடில்லை என்று தெரிந்தும், தானாகவும் எதுவும் மறுக்க முடியாமல் இவன் குழம்பி நிற்க, நண்பன் தான் சரி. போயிட்டு வந்துடு என்றான்.

மறுபடியும் மாடி. சாப்பாட்டுக் களைப்பும் மாறாமல், தூக்க அசதியிலிருந்தும் மீளாமல், ஏதோ இடம் தெரியாது வந்து மாட்டிக் கொண்டது போன்ற அதாவது தனக்கென்று சுயமாய் எதுவுமில்லாமல் அவர்களின் கைக்கருவாக வந்து சிக்கிக் கொண்டது போன்ற மன நிலையில் இவன் விருப்பமின்றியே மிண்டும் படியேறினான். மறுபடியும் பல்வேறு க்ளிக்குகளுக்குப் பிறகு மூன்றாம் கட்டப்படலமும் முடிந்து கீழே இறங்க, அக்கம் பக்கத்து வீட்டார் தங்கள் கோரிக்கை நிறைவேறிய அளவில் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார்கள். நண்பன் வீட்டாருக்கு "சரி நீங்க போய் ஓய்வெடுத்துக்குங்க" என்று உட்புறம் சென்றனர்.

எல்லாரையும் அனுப்பிவிட்டு பெருத்த நிம்மதியோடு மீண்டும் வந்து கட்டிலில் சாய்ந்தான். ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. பெரும்பாலும் இனிமேல் எந்த தொந்தரவும் இருக்காது என்கிற தீர்மானத்தில் இன்னும் எஞ்சி எழுத வேண்டியிருந்த கவிதை வரிகளைப் பற்றிய சிந்தனையுடன் மீண்டும் கண்களை மூடினான்.

"அங்கிள்" என்கிற குரல் விழிப்பூட்ட கண்களைத் திறந்து பார்த்தான். நண்பனின் மகன், பக்கத்தில் கையில் நோட்டுப் புத்தகத்தோடு வந்திருக்கும் ஒரு இளைஞன் சகிதம் எதிரே நின்றிருந்தான். இளைஞன் இவனுக்கு வணக்கம் சொல்லித் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, படிக்கிற காலத்திலிருந்தே தனக்கு கவிதை ஆர்வம் அதிகம் என்றும், நிறைய கவிதைகள் எழுதியிருப்பதாகவும், எல்லாம் இந்த நோட்டில் இருப்பதாகவும், இவன் ஒரு முறை எல்லாவற்றையும் படித்து பார்த்து தேறுவதைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அல்லது இசையமைப்பாளர்களிடம் தந்து பரிந்துரைத்து தனக்கும் ஒரு வாய்ப்பு வாங்கித் தந்தால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பதாகவும் சொன்னான்.

அவனது முகத்தோற்றமும் பாவமும் தொடக்க காலத் தன்னை அவனில் காண வைக்க, அவனை நாற்காலியில் அமரச் சொல்லி விட்டு - அவ்வளவு சீக்கிரம் அவன் அமரவில்லை மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகே நுனியில் உட்கார்ந்தான். நோட்டை வாங்கிப் புரட்டினான். சிலதை மட்டும் நிறுத்தி வாசித்தவன் உங்க முகவரியக் குடுங்க. ஊருக்குப் போய் வாய்ப்பிருந்தால் கடிதம் போடுகிறேன். என்று சொல்லி எதையும் முழுமையாக நம்பியிருக்க வேண்டாம் என்றும், அதே வேளை எக்காரணம் கொண்டும் எழுதும் முயற்சியைக் கைவிட்டுவிடக்கூடாது தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றும் சொல்லி, தற்போதுள்ள திரைச்சூழல், போட்டி இசையமைப்பாளர்களின் விருப்பத்தேர்வு, இத்யாதி சூழல்கள்கலையும் விளக்கி, முடிந்தால் மாலை மாநாட்டின் போது இதில் சில கவிதைகளை புகை நகல் எடுத்துத் தரும்படியும், முதலில் இவற்றைச் சில இதழ்களில் வெளிவரச் செய்து பெயரை அறிமுகம் செய்ய முயல்வதாகவும் அதன் பிறகு திரையுலக வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகவும் சொல்லி அவனை வழியனுப்பி வைத்தான். தன் அனுபவங்களையெல்லாம் மனசைக் கிளர, ஏதேதோ யோசனைகளில் ஆழ்ந்தவன் மணியைப் பார்த்தான். மணி 3.45 ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் ஓடிவிட்டது போல் உணர்ந்தான். சரி ஒரு பதினைந்து நிமிடமாவது இடையூறு இல்லாமல் கண்ணயர்ந்து எழுந்தால் போதும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். கவிதை வரிகளையும் சரிசெய்து விடலாம் என்று நினைத்தான்.

தூக்கமெல்லாம் கலைந்து போனதில் கவிதை வரிகளுக்கான கற்பனையும் சிதைந்து விட்டதுபோலிருந்தது. ஏற்கெனவே திரட்டி வைத்திருந்தவரிகள் கூட மறந்துபோய் தற்போது வார்த்தைகள் கூட முன்பின்னாய் ஒரு ஒழுங்குக்கு வராமல் முரணுவது போல் தோன்றியது.

பேசாமல் மாநாட்டு அரங்கிலேயே தங்கியிருந்தால் மத்தியானம் எல்லோரும் சாப்பிட்டு அறைக்கு வந்து நிம்மதியாக ஓய்வெடுத்து கவிதை வரிகளையும் ஒழுங்காகச் செப்பனிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். மத்தியானம் புலால் உணவு போட்டிருந்தாலும் இருப்பார்கள். எதுவுமில்லாமல் ரெண்டுங்கெட்டானாய் வந்து மாட்டிக் கொண்டு நிம்மதியாய் ஓய்வெடுக்கவும் முடியாமல், கவிதையையும் முழுசாய் முடிக்க முடியாமல் சோதனையாகிவிட்டதே என்று கவலைப்பட்டான்.

மத்தியானம் சாப்பாட்டுக்கு வர நேர்ந்ததும், சாப்பிட்டது, சாப்பாட்டில் பல்வேறு அயிட்டங்கள் அமர்க்களப்பட்டது எல்லாம் ஒரு அலுப்பில் சாப்பிட்டதுபோதும், அதற்காகப்படுகிற பாடும் போதும் என்று நினைத்துக் கொண்டான். சாப்பிட்ட அயிட்டங்களையும் ஒவ்வொரு அயிட்டத்துக்குமாக நடந்துள்ள வேலைகளையும் மெல்ல நினைவு கூர்ந்தான். சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஏறக்குறைய எல்லாமும் செரிமானம் ஆகிவிட்டதைப் போன்றதொரு பிரமை இவனுக்குள் எழுந்தது.

பருப்புப்பொடி நெய் சாதத்திற்கு ரெண்டு புகைப்படம், சாம்பார் நெய்க்கு ரெண்டு புகைப்படம், வத்தக் குழம்பு மோர்க் குழம்புக்கு ரெண்டு புகைப்படம் அவ்வப்போதான எழுப்பில் ரெண்டு முறை மாடி ஏறி இறங்கியதற்கு நிகழ்ந்த உரையாடலுக்கு கூட்டு பொரியல், அவியல் இதயாதிகள், பக்கத்துவீட்டு புகைப்படத்துக்கு ரசம், அப்பளம், என்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சில அயிட்டங்களைக் கழித்துக் கொண்டு வந்தான். பிறகு அதைக் குடும்ப வாரியாகப் பிரித்தான். இதில் நண்பனின் பையன், நண்பன், நண்பனின் தந்தை ஆகிய மூன்று தலைமுறைகளும் உரையாடியதற்கும் தன் தூக்கத்தைக் கெடுத்ததற்கும் சிலவற்றைக் கழித்தவன், ஏறக்குறைய ரசம் சாதம் அப்பளம் வரை கணக்குசரியாகவே வந்துள்ளதா நண்பர்கள்தான். இன்னும் என்னென்ன நேரும் என்று நிச்சயமில்லாததால் சிலது இருப்பில் இருக்க வேண்டியது அவசியமாகலாம் என்றும் கருதினான்.

இல்லத்தாரும் இந்த யோசனையில், இவனே ஓர் இலையில் படுத்துக் கிடப்பதாகவும், நண்பனும் இல்லத்தாரும் அக்கம் பக்கத்து குடும்பத்தாரும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைக் கவிதையே யோசிக்க விடாமல் கெடுத்ததற்கு எதுவுமே ஈடாகாது என்றாலும் அக்கம் பக்கத்து இல்லத்தாரும் சுற்றியமர்ந்து ஆளாளுக்கு இவனைப் பிடித்து உண்பதாகவும் தோன்றியது. இவனுக்குப் பசி எடுத்து சாப்பிட்டதெல்லாம் எங்கோ ஓடி மறைந்தது "இன்று கவியரங்கம் அவ்வளவுதானா என்கிற கவலையுடன் யோசனையில் ஆழ்ந்தான். மற்றவர்கள் எல்லாம் அவரவர் கவிதைகளை செவ்வனே தயாரித்துக் கொண்டு வந்திருக்க தான் மட்டுமே நிர்க்கதியாய்த் திணறப் போகிறோம் என்கிற அச்சத்துடனே சக கவிகளைப் பார்த்தான்.

சுகமான மெல்லிய இளம் குறட்டையுடன், சுற்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் எந்த பாதிப்பும் இல்லாமல், ஆழ்ந்த நித்திரையில் துயில் கொண்டிருக்கும் வாக்குப் பெட்டியையும் பணப் பெட்டியையும் பார்த்தான். அவர்களைப் பார்க்க இவனுக்குப் பொறாமையாயிருந்தது கொடுத்து வைத்தவர்கள், நல்ல வேளை இவர்கள் யாரும் திரைப்படத்துக்குப் பாடல் எழுதவில்லை என்று நினைத்துக் கொண்டான். திரைப்படத்துக்குப் பாடல் எழுதாமலிருப்பதில் இப்படியும் சில சுகங்கள் இருக்கின்றன என்பது முதன் முதலாக இவனுக்குத் தோன்றியது. பேசாமல் தானும் இவ்வாறே இருந்திருக்கலாம் என்று நினைத்தான். இப்போது நினைத்து என்ன செய்வது என்றும் கேள்வியாயிருந்தது. தூக்கம் போனாலும் பரவாயில்லை, கவிதையையாவது ஒப்பேற்றுவோம் என்று கவிதை வரிகளை வடிக்க அதற்கான யோசனையில் மூழ்கினான்.

அறைக்கு வெளியே நண்பன் "வாங்க வாங்க" என்று யாரையோ அழைக்கும் குரல் கேட்டது. அதை தொடர்ந்து நடுத்தரவயதைத் தாண்டிய யாரோ ஒருவர் பின் தொடர நண்பன் உள்ளே நுழைந்தான். வந்தவரை நாற்காலியில் அமர வைத்து அவரை அறிமுகம் செய்த நண்பன் "நீ வரப்போறன்றதை சொல்லியிருந்தேன். வந்தா சொல்லுங்க பாக்கனும்னாறு அதான் ஃபோன் பண்ணி வரவழைச்சேன்" என்றான். மாநிறத் தோற்றத்துடன் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்து, லேசாய் முன் வழுக்கை விழுந்த நெற்றியில் பட்டையாய் விபூதியுடன் காட்சியளித்த அவர் இருகரங்களையும் கூப்பி வணக்கம் வைத்து, கைப்பையிலிருந்து ஒளியச்சு செய்த தாள்களை எடுத்தார். நீண்ட காலமாய் தான் இந்தக் கவிதைகள் எழுதி வருவதாகவும், ஒரு பதிப்பாக அதை வெளியிட முன்வராததால் தாமே சொந்தமாக அதை வெளியிடுவது என்று முடிவு செய்து ஒளியச்சு எல்லாம் செய்து வைத்திருப்பதாகவும், அதற்கு முக்கியமான ஒரு சிலரிடம் முன்னுரை அணிந்துரை வாழ்த்துரை எல்லாம் வாங்கி வைத்திருப்பதாகவும் இவனும் ஏதாவது ஒரு உரை தந்தால் நலமாயிருக்கும் மென்றும் கேட்டு தாள்களை அவனிடம் நீட்டினார்.

குழப்பத்தோடு அதை வாங்கியவன்., அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்குமுன்பாகவே நல்லவேளை பூரா அயிட்டங்களையும் காலிசெய்யாது மிச்சம் வைத்தது நல்லதாயிற்று. இது தயிர் சாதம் ஊறுகாய்க்கு போலும் என்று நினைத்துக் கொண்டான். கூடவே ஏறக்குறைய எல்லாம் செரிமானம் எல்லாம் ஆகிவிட்டது. இனிமேல் செரிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அடுத்த தாக்குதல் வருவதற்குள் இடத்தை காலி செய்து விடுவது உசிதம் என்று தோன்றியது.

நன்றி: தமிழர் கண்ணோட்டம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link