சிறுகதைகள்


தனக்கென்று வரும்பொழுது..

கூடல்.காம்
பகல் நேரத்து வெய்யிலால் நெற்றியில் வியர்வை பொடிக்க தலை கவிழ்ந்த வண்ணம் சுந்தரம் வாத்தியார் நடந்துகொண்டிருந்தார். உள்ளங்கை அளவுக்கு மேல் ஏறிய நெற்றி, பழத்துக்கு மேல் அதிகமாக நீண்டிருக்கும் முந்திரிக்கொட்டையைப் போல் சற்று அதிகமாகவே நீண்டிருக்கும் மூக்கு இத்தனை வயதாகியும் கண்ணாடி அணியாமல் பளபளவென மின்னிக்கொண்டிருக்கும் கண்கள், நெடுநெடுவென பனைமரம் மாதிரி வளர்ந்திருக்கும் ஒல்லியான உருவம், இவ்வளவுகூட அதிகம் சுந்தரம் வாத்தியாரை அடையாளம் காட்டுவதற்கு.

வாத்தியாரின் குணமே அலாதி. எதை எப்படிச் செய்ய வேண்டுமோ அதை அப்படித்தான் செய்யவேண்டும் என்ற பிடிவாதக்காரர். அதனால்தான் காரோடு வந்த அவர் நண்பர் ஒருவர் வழியில் அவரை மறித்துக் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னபோது கூடக் கட்டாயமாக மறுத்துவிட்டார்.

சாவு வீட்டிற்குக் காரில் போய் இறங்கலாமா? அதுவும் ஆத்ம நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் பொருட்டு இந்தச் சிறிய வேதனையைக் கூட அனுபவிக்காமல் போனால் அப்புறம் என்னய்யா நட்பு வேண்டிக் கிடக்கிறது!

இளமைக் காலத்திலிருந்து பள்ளிக்கூடத்தில் "வாத்தியார்" பட்டம் வாங்கிவிட்ட இந்தநாள் வரையிலும் ஒன்றாகப் பழகி வாழ்ந்த உயிர் நண்பர் ராகவன். ஐம்பத்தெட்டு வயதான சுந்தரம் வாத்தியாருக்குச் சரியான ஜோடியாக ஊர் விவகாரங்களை அலசித் தீர்க்கும் ஆழ்ந்த அறிவாளியாக இருந்தவர் ராகவன். பாவம் மனிதன் மண்டையைப் போட்டுவிட்டார்.

வாழ்க்கை என்னும் பாதையில் அனுபவம் என்ற முத்திரைகளைச் சமமாகப் பதித்துக்கொண்ட வண்டி மாடுகளாக ராகவனும் தானும் இருந்ததை நினைக்கும்போது சுந்தரம் வாத்தியாருக்கு அது ஒரு சுகம் நிறைந்த கனவாகவே பட்டது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு ராகவனைப் போன்ற ஒரு நண்பனைத் தான் இனிமேல் பெறவே முடியாது என்று எண்ணும்போது வாத்தியாருக்குக் கண்கள் குளமாயின.

எங்கோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, எதனாலோ இறந்து போகும் ஒரு மனிதனின் பிரிவு; அவனைச் சார்ந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையாக வருத்துகிறதே! உறவு, பிரிவு என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களே மனிதன் இறக்கும் போதுதான் பிறக்கின்றனவா!

பழகியவருக்கு மட்டுமே புரியும் ஊமையின் வார்த்தைகளைப்போல், தான் மட்டுமே அனுபவிக்க முடிந்த ஒரு வேதனையை மௌனமாக இதயத்தில் அசைபோட்டபடி நடந்துகொண்டிருந்தார்.

சுந்தரம் வாத்தியாரின் மூத்த மகன் பாண்டியன் கோலாலம்பூரில் உயர்ந்த உத்தியயோகத்தில் இருப்பதற்கும், இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி ரயில்வே அதிகாரியாக இருப்பதற்கும் இந்த ராகவன்தானே உதவி செய்தார்! வாத்தியார் மகள் சாரதா கல்யாணத்தின்போது மணப்பெண்ணின் தந்தை சுந்தரம் வாத்தியாரா ராகவனா என்று வந்திருப்பவர்களெல்லாம் கேட்டு அதிசயித்துப்போனார்களே! அப்படி உதவி செய்வதற்கு இனி ஒரு மனிதன் பிறந்துதான்ய்யா வரவேண்டும்.

அந்தக் கடைக்குட்டிப் பயல் ராமு, எவ்வளவு மோசமான காலிப்பயலாகத் திரிந்துகொண்டிருந்தான்! வாத்தியாரின் பேயரையே கெடுத்துக்கொண்டிருந்தானே, அவனையுமல்லவா ஒழுங்கான பாதைக்குக் கொண்டுவந்துவிட்டார் இந்த ராகவன்.

தன்னுடைய குடும்பத்தையே தலைதூக்கவைத்த ராகவன், இப்போது தலைசாய்த்துவிட்டார்! பாவம் இந்த ஆறு மாதமாக படுத்தபடுக்கையாக என்னமாய்ச் சிரமப்பட்டுப்போனார் மனிதன்!

சுந்தரம் வாத்தியார், ராகவன் வீட்டை நெருங்கியபோது, கூட்டம் சற்று அதிகமாகவே கூடியிருந்தது. வாசலில் நின்றிருந்த பிணக் காடிக்கு மலர் வளையங்களைப் போட்டு அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள் சிலர். எல்லாவற்றையுமே துறந்து விட்டு குழிக்குப் போய்க்கொண்டிருக்கும் மனிதனுக்காகவா இத்தனை அலங்காரம்?

கூட்டத்தில் பலர் எழுந்து வாத்தியாருக்கு மரியாதை செலுத்தினார்கள். கும்பலை நெரித்து முண்டிக்கொண்டு வெளியே வந்த ஒருவன், வாத்தியாரை நெருங்கி வந்தான்.

"வணக்கமுங்க"

பாவி, பட்டப்பகலிலேயே மலிவான சரக்கை உள்ளே இறக்கிவிட்டான் போலிருக்கிறது! குப்பென்று ஏறிய நெடி வாத்தியாருக்குத் தலையைச் சுற்றியது. சமாளித்து விலகி, ராகவனைக் கிடத்தியிருந்த இடத்திற்குச் சென்றார்.

பிரேதத்தைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். எட்டிப் பார்த்த வாத்தியாருக்குக் குடலைப் புரட்டிக்கொண்டு வந்தது. ஆறு மாதமாகப் படுத்த படுக்கையில் கிடந்ததால் உடலின் ஒரு பகுதி அப்படியே அழுகிப்போயிருந்தது.

ராகவன் உயிரோடு இருந்தபோது வாத்தியார் பலமுறை அவரைப் பார்க்கப் போயிருக்கிறார். அப்போதெல்லாம் ராகவனின் உடலைச் சுத்தம் செய்து திரும்புவார். ஒருதடவை ராகவன் தன்னுணர்வில்லாமல் படுக்கையிலேயே மலம் கழித்துக் கிடந்தபோது கூட, மனம் கோணாமல் அப்புறப்படுத்தியிருக்கிறார் சுந்தரம் வாத்தியார். அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு குமட்டல் இப்போது இந்த அழுகிய உடலைப் பார்த்ததும் உண்டானது. மனிதனுக்கு இப்படிப்பட்ட சாவே வரக்கூடாது ஆண்டவனே!

கசிந்துருகி வழிந்த கண்ணீரைக் கூடத் துடைக்காமல் கைகளைக் கட்டியவண்ணம் கற்சிலையாக நின்றிருந்தார்.

காமா சோமாவென்று ஆளுக்கொரு வேலையாகப் பார்த்தார்கள். ராகவனின் உடல் பெட்டிக்குப் போனது. பெட்டி வண்டிக்குப் போனது, வண்டி இடுகாட்டுக்குப் போனது. பிறகு பெட்டி குழிக்குள் போனது. வாழ்க்கை என்ற வரலாற்றுப் புத்தகத்தில் ராகவன் என்ற ஏட்டில் குறுக்குக் கோடு கிழிக்கப்பட்டது.

கடைசிவரை இருந்து குழிக்குள் ஒருபிடி மண்ணையும் அள்ளிப் போட்டுவிட்டு உடலும் உள்ளமும் சோர்ந்துபோன நிலையில் வீடு திரும்பினார் சுந்தரம் வாத்தியார்.

மனிதனுக்கு இப்படிப்பட்ட சாவே வரக்கூடாது ஆண்டவனே! அவருடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் அந்த எதிரொலி மாறவே இல்லை. அவருக்கு எந்த வேலையும் ஓடவில்லை.

பிணி, மூப்பு, மரணம், துன்பம் என்ற நான்கையும் கடந்து, எல்லையில்லாப் பேரொளியாய், ஏகாந்தமாய் இருந்து காட்டிய கௌதம புத்தனை நினைத்துக்கொண்டார் வாத்தியார். அந்த சத்தியமூர்த்தியைப் போல் தன்னாலும் மரணத்தை வென்றுவிட முடியாதா?

புத்தன் வாழ்ந்த காலம் வேறு. இந்தச் சுந்தரம் வாத்தியார் வாழும் காலம் வேறு. அணிமணிகளையும் அரச போகத்தையும் துறந்து பண்டாரமாகத் திரிந்த புத்தனைப் போல இன்று நகரத்திலும் யாரேனும் திரிய முடியுமா? கொடுத்தால் பெறுவேன், கெடுத்தால் சிரிப்பேன், தடுத்தால் தொடர்வேன் என்று வாழத்தான் முடியுமா?

"இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொணடுவந்தால் உண்பேன்"

என்று பாடிக்கொண்டிருந்த பட்டினத்தாரை, அன்றிருந்தவர்கள் பரிந்து பரிந்து கவனித்தார்கள். ஆனால் இன்று அப்படியா? என்று அழுத்துக்கொண்டார்.

என்றாலும் மனிதுனுக்கு இப்படிப்பட்ட சாவே வரக்கூடாது ஆண்டவனே!

இந்தக் குழப்பத்திலேயே மண்டையை உருட்டிக்கொண்ட சுந்தரம் வாத்தியார் தொடர்ந்து ஒரு வாரமாகக் கடுமையான காய்ச்சலில் விழுந்தார். கோலாலம்பூருக்கே வந்துவிடும்படி மூத்த மகன் பாண்டியன் எழுதியிருந்த கடிதத்தைக் கூட அவர் கருதியதாகத் தெரியவில்லை.

பிறருக்குத் தொல்லை கொடுக்கும் கருவியாகத் தான் எப்போதுமே இருக்கக்கூடாது. தனக்குள்ள பிரச்சினையைத் தானே முடித்துக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் மேலோங்கி இருந்தது. அந்தப் பிடிவாதத்தோடும் ரோசத்தோடும் ஒரு வாரத்தை ஊதித் தள்ளிவிட்டு, பழையபடி எழுந்து நடமாட ஆரம்பித்தார்.

நடமாட முடியாமல், கிடந்த இடத்திலேயே மலஜலம் கழித்து, வாயில் ஊற்றிய பால் உள்ளே போக முடியாமல் கடை வாயில் வழிந்தோட, கண்கள் மேலே செருகவும் கைகள் வெட்டி வெட்டி இழுக்கவும் வரும் அந்தப் பயங்கர மரணத்தை வென்றுவிட நினைத்தார் வாத்தியார்.

ராகவனுக்கு வந்த சாவை நினைக்கும்போதெல்லாம் தனது உடல் பலமடங்கு பலவீனமாகிப் போவதை அவர் உணர்ந்தார். அந்தப் பயங்கரச் சாவை வென்றுவிட வேண்டும்!

ஆவேசத்தோடு எழுந்தவர், அலமாரியைத் திறந்து அவசர அவசரமாக எதையோ தேடினார். அவர் தேடிய பொருள் கைக்குக் கிட்டியதும் நிம்மதியான பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. அந்தக்கணமே சாவை வென்றுவிட்டதாக எண்ணினார் வாத்தியார்.

ஆம்! அது கடுமையான விஷ மாத்திரை! அதில் ஒரு சிறு துகள் வாயில் பட்டாலும் போதும். உடல், உயிர், உலகம் இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை முற்றாக அறுத்துவிடும். எப்போதோ எதற்காகவோ வாங்கிவைத்த மாத்திரை அப்போது அவரின் லட்சியத்துக்குத் துணையாக இருந்தது.

தனக்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டு இனிமேலும் தன்னால் முடியாது என்ற நிலை வரும்போது பேசாமல் இந்த மாத்திரையை விழுங்கிக் கண்ணை மூட வேண்டும். அடுத்தவருக்குப் பாரமாக இருக்கவே கூடாது என்ற உறுதியோடு மாத்திரையைப் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

உள்ளத்தில் நிம்மதி ஏற்பட்ட அளவுக்கு உடலில் தெம்பு இருக்கவில்லை. இரண்டு நாட்களாகக் குறைந்திருந்த நடுக்கமும் குளிரும் மீண்டும் அவரை ஆட்டத் துவங்கின. ஒருவேளை அவருடைய லட்சியம் நிறைவேறக்கூடிய நாள் மிகவும் சமீபித்து விட்டதோ!

இப்படி ஒரு சந்தேகம் தட்டியபோது பிள்ளகளை எல்லாம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் வாத்தியாரின் மனதில் வித்தாக விழுந்து, விருட்சமாக வளர்ந்து, விழுதாகப் படர்ந்தது.

அன்றே மூத்த மகன் பாண்டியனுக்கு ஒரு தந்தி கொடுத்தார். இரவு குளிரும் நடுக்கமும் அவரைக் கடுமையாக வாட்டியது. ஒரு பெரிய துப்பட்டியின் உதவியோடு மூன்று நாட்களை ஓட்டினார்.

பாண்டியனும் அவன் மனைவியும் இரண்டு குழந்தைகளோடு வந்தபின் வீடு கலகலப்பாக இருந்தது. வாத்தியாருக்கு உடலில் கொஞ்சம் தெம்பு பிறந்தது. என்றாலும் அந்தச் சோர்வும் நடுக்கமும் அவரை விட்டபாடில்லை. பிடிவாதமான உறுதியோடு அந்த விஷ மாத்திரையை எடுத்துத் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டார்.

மேலும் மூன்று நாட்கள் படுப்பதும் எழுவதுமாகவே கழிந்தன வாத்தியாருக்கு. அந்தச் சாதாரண படுக்கையே நரக வேதனையாக இருந்தது அவருக்கு. பலதடவை முயன்று அந்த மாத்திரையை விழுங்கித் தனக்கு விடுதலையைத் தேடிக்கொள்ளத் துடித்தார். அப்போதெல்லாம் பாண்டியனின் இரண்டு பிள்ளைகளும் தாத்தா தாத்தா என்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்ததைக் கண்டு ஏதோ ஒரு சபலம் அவருடைய விடுதலை ஆசைக்குத் தவணை போட்டுக்கொண்டே வந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு வாத்தியாரின் இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி அவனுடைய மனைவியையும் நாலு வயதுப் பையனையும் அழைத்துக்கொண்டு வந்தான். அவர்களைத் தொடர்ந்து மகள் சாரதாவும் கைக் குழந்தையோடு வந்து சேர்ந்தாள். அவன் கணவனுக்கு லீவு கிடைக்கவில்லையாம். பிறகு வருவதாகச் சொல்லி இருக்கிறான்.

எல்லாரும் ஓடிஆடி வாத்தியாருக்குப் பணிவிடை செய்தார்கள். அனைவரையும் ஒன்றாகப் பார்க்கப் பார்க்க, காவலே இல்லாத பெரிய வைரக் கடையில் தான் ஒருவன் மட்டுமே இருந்து அனுபவிப்பது போல் இருந்தது வாத்தியாருக்கு. என்றாலும், யாருக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி அவருக்குத் தலைதூக்கிக்கொண்டுதான் இருந்தது.

எல்லாவற்றையும் முழுமையாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆத்ம வேகத்தோடு அவரின் கண்கள் அந்தப் பெரிய குடும்பத்துக்குள் யாரையோ தேடித் துளாவின.

"சின்னவன் இன்னும் வரலையாப்பா?" கடைக்குட்டி ராமுவைப் பற்றித்தான் பாண்டியனிடம் கேட்டார் வாத்தியார்.

"தம்பிக்குத் தந்தி கொடுத்திருக்கோம், பதில் ஒன்றும் தெரியலையப்பா!" என்று புலம்பினான் பாண்டியன்.

தலையணைக்கடியில் இருந்த விஷ மாத்திரையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். அவனையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கிடந்து அடித்துக்கொண்டது.

"இன்னைக்கோ, நாளைக்கோ வந்திடுவார்னு நினைக்கிறேன் மாமா!" என்று மூத்த மருமகள் பவ்வியமாகக் கூறினாள்.

ராமு நிச்சயம் வந்துவான் என்ற நம்பிக்கை அவருக்கும் ஏற்படத்தான் செய்தது. அதனால்தான் அந்த விஷ மாத்திரையைத் தொட்டுப் பார்ப்பதோடு மட்டுமே நிறுத்திக்கொண்டிருந்தார்.

இன்னும் எத்தனை நாட்களை ஓட்டுவது? உடல் வரவர மிகவும் மோசமாகிக்கொண்டே வந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அன்று ஒரு துயரமான சம்பவமும் நடந்துவிட்டது.

யாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இரவில் தன்னந்தனியாக எழுந்து பீலிக்குச் சென்றபோது தலை கிறுகிறுப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார். காலிலும் தோள்பட்டையிலும் பலமான அடி. அந்நேரத்தில் டாக்டரை வரவழைத்து ஏதேதோ வைத்தியம் பார்த்தார்கள். அவர் மூர்ச்சை தெளிந்து கண்ணைத் திறப்பதற்கு இரண்டு நாட்களாகி விட்டன.

"சின்னவன் இன்னும் வரலையாப்பா?" சிற்றலை ஒலிபரப்பில் வரும் சத்தம் போன்று சன்னமான குரலில் வாத்தியார் மீண்டும் மீண்டும் அதையேதான் கேட்டார்.

"இப்போ வந்திடுவான் அப்பா!" என்று கிருஷ்ணமூர்த்தி அவரை ஆசுவசப்படுத்த முயன்றான்.

சபாவிலிருந்து இந்தப் பயல் ராமு இன்னும் வரவில்லையே என்று அண்ணன் தம்பி இருவருக்கும் பெரிய சங்கடமாக இருந்தது. மறுநாள், அதற்கு மறுநாள், மேலும் ஒரு நாள் இப்படியே நாட்கள் ஓடின. கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்த சுந்தரம் வாத்தியார் படுக்கையை விட்டு எழுந்தே பல நாட்கள் ஆகிவிட்டன. கீழே விழுந்ததிலிருந்து ஒரு பக்கத்துக் காலும் கையும் வாதம் கண்டது போல் உணர்வில்லாமல் ஓய்ந்து கிடந்தன.

தலையணைக்குக் கீழே இருந்த விஷ மாத்திரையை எடுத்து விழுங்க வேண்டும் என்ற ஆசையைக்கூட, கடைசி மகனைப் பார்த்துவிட வேண்டும் என்ற சபலம் விழுங்கிவிட்டதோ!

வாத்தியாரின் மகள் சாரதா சமையற்கட்டில் ஏதோ வேலையாக இருந்தாள். அப்போது கூடத்தில் மூத்த மருமகளும் இளைய மருமகளும் பேசிக்கொண்டிருந்தது, கண்ணை மூடிக் கொண்டிருந்த வாத்தியாருக்கு நன்றாகக் கேட்டது.

"இந்தக் கெழடு முண்டம் கண்ணை மூடித் தொலையாம கெடக்கே, இன்னும் எத்தனை நாளைக்கு இதுக்கு நாம.... அள்ளிப் போடுறது?" இது மூத்தவள்.

"எல்லாம் தலைவிதி. என்ன கருமம் செஞ்சோமோ - என்னமோ வாழ்ந்து கிழிக்கிறது மாதிரிதான் உசிரைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு கிடக்கிறான் மனிசன். இன்னும் வாழ்ந்து என்னத்தை வாரிக்கட்டணுமாம்?" இது இளையவள்.

இன்னும் என்னவெல்லாமோ பேசிக்கொண்டார்கள். காதில் இதையெல்லாம் கேட்டதும் வாத்தியாருக்குச் சப்தநாடியே அற்றுப்போன மாதிரி ஆகிவிட்டது.

"ஐயோ! ஆண்டவனே, என்னை அறியாமல் நானே படுக்கையில் மலஜலம் கழித்துவிட்டேனா? அடுத்தவர்கள் அள்ளிப்போடும் நிலையை நானே உண்டாக்கிவிட்டேனே ஆண்டவனே? ஆண்டவனே, என்னை மன்னித்துவிடு" மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தோடியது வாத்தியாருக்கு.

உடலின் லேசான அசைவால் அவருக்கு ஓர் உணர்வு தட்டியது. அப்போதுகூட வேட்டியின் அடிப்பாகமும், படுத்திருந்த பாயும் நனைந்து; வழவழவென்று....

ஆண்டவனே, என்னை மன்னித்துவிடு. கேவிக்கேவி அழுதார் வாத்தியார். அந்தக் கணமே தலையணைக்கடியிலிருந்த விஷ மாத்திரையை எடுத்து விழுங்க வேண்டும்போலிருந்தது. ஆனால் ஊனமாகி, வலுவிழந்து, எலும்பும் தோலுமாகிவிட்ட கைக்கு அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் சக்திகூட அப்போது இல்லை.

ஸ்டேஷனுக்குப் போயிருந்த பாண்டியனும் கிருஷ்ணமூர்த்தியும் கடைசித் தம்பி ராமுவோடு வீட்டுக்கு வந்தார்கள்.

"அப்பா! இதோ ராமு வந்திட்டான்!" என்று பாண்டியன் அடக்கமாகக் கூறினான்.

மங்கிப்போன கண்களில் மிகவும் மங்களாகத் தெரிந்த உருவத்தைப் பார்த்து, அறைகுறையாகப் புலப்பட்ட அடையாளத்தின் ஆதரவோடு லேசாகச் சிரித்தார் வாத்தியார். சாரதா கையில் வைத்திருந்த பால் கிண்ணத்தை ராமுவிடம் கொடுத்தாள்.

ஒரு கரண்டி பாலை எடுத்துத் தந்தையின் வாயில் கவனமாக ஊற்றினான் ராமு. பால் பூராவும் கடவாய் வழியாகக் கீழே ஓடியது.

மேலே செருகுவதும் கீழே மெல்ல மெல்ல இறங்குவதுமாகக் கண்கள் எதையோ கூறத் தவித்துக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரே கூட்டமாக எல்லாரும் கூடிவிட்டார்கள்.

மகள் சாரதாவையே பார்த்தார். அவளிடம் எதையோ கேட்க முயன்றும் முடியவில்லை. எங்கே என்று கேட்பது போல் தலை மேல்நோக்கி மெதுவாக அசைந்தது.

"உன் புருசன் வரலையான்னு கேட்கிறார்போலிருக்கு சாரதா" என்று மூத்த மருமகள் கோடிட்டுகாட்டினாள்.

"அண்ணன் காலையிலேயே தந்தி கொடுத்திட்டாங்களாம்பா, இப்போ வந்திடுவாரு...." தேம்பித் தேம்பி அழுது கொண்டு கூறினாள் சாரதா.

மருமகனையும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இப்போது உண்டாகிவிட்டதோ!

மூச்சு விட்டுவிட்டு இழுத்துக்கொண்டிருந்தது.

"இப்போதான் சிலேட்டுமம் இழுக்க ஆரம்பிச்சிருக்கு" என்று மூக்கை சிந்திக்கொண்டே சொன்னாள் இளைய மருமகள். பெரியவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்பதைப் பார்த்து, பேரப்பிள்ளைகளும் காரணம் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்கள்.

ஆனால்.... சுந்தரம் வாத்தியாருக்கு இன்னும் சிலேட்டுமம் இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது!

நன்றி: நவமலர்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link