சிறுகதைகள்


அமைதி

கூடல்.காம்

நான் ஓஸாவா இருக்குற பக்கமா திரும்பி, அவன் எப்பவாவது ஒரு வாக்குவாதம் நடக்கும்போது தன்னோட எதிராளிக்கு ஒரு குத்து விட்டிருந்திருக்கானான்னு கேட்டேன். ஓஸாவா, கண்களைச் சுருக்கிக்கிட்டு என்னைப் பார்த்து "எது உன்னை இப்படி ஒரு கேள்வியைக் கேட்கும்படி செஞ்சுது?" ன்னு கேட்டான்.

நான் அவன்கிட்ட, "நிஜமான காரணமுன்னு எதுவுமில்லை. சும்மா தோணின ஒரு எண்ணம்தான்"னேன். அதுக்கு அர்த்தம் எதுவுமில்லை. வெறுமனே தெரிஞ்சுக்கலாமேங்கற ஆர்வத்தினால நான் கேட்டேன். ஒருவேளை அது முழுக்க முழுக்க அநாவசியமானதாகவும் இருக்கலாம். நான் பேச்சை மாத்த ஆரம்பிச்சேன். ஆனா, ஓஸாவா அதிலே ஆர்வம் காட்டலை. அவன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான். நைய்கட்டா போற விமானத்துக்காகக் காத்திருந்த நாங்க விமான நிலையத்திலே இருந்த ஒரு உணவு விடுதியிலே காபி குடிச்சுக்கிட்டிருந்தோம். இப்ப நவம்பர் மாசத்தோட ஆரம்ப காலம். வானம் மேகங்களாலே கனத்திருந்திச்சி. நைய்கட்டாவில் பனி பொழிஞ்சிகிட்டிருந்ததாலே விமானங்கள் தாமதமாக பொறப்பட்டுச்சி.

நீண்ட மௌனத்துக்குப் பின் ஓஸாவா திடீர்னு பேசினான். "நான் மல்யுத்தம் செய்ய ஆரம்பிச்ச காலத்திலேயிருந்து நான் யாரையும் எப்பவும் அடிச்சது கிடையாது. பொதுவா அப்படி எதும் இல்லை. ஒருத்தன் மல்யுத்தம் கத்துக்கத் தொடங்கறப்பவே அவங்க அந்த எண்ணத்தை அவன் மனசுக்குள்ளே புகுந்திடுவாங்க. "மல்யுத்தம் செய்யற யாரும் கையுறை போட்டுக்காம மல்யுத்தக் களத்துக்கு வெளியே யாரையும் அடிக்கக்கூடாது". சாதாரணமான ஆள் ஒருத்தன் யாரையாவது அடிச்சு அது படாத இடத்துல பட்டா அது அவனைச் சிக்கலுக்கு ஆளாக்கிடும். ஆனா, மல்யுத்தக்காரன் அப்படிச் செஞ்சா அது அபாயகரமான ஆயுதங்களால திட்டமிட்டு அடுத்தவனைத் தாக்கினதாக ஆயிடும்" என்றான்.

நான் தலையை ஆட்டினேன்.

"உள்ளபடிக்கு நேர்மையாச் சொல்றதுன்னா, நான் ஒரே ஒருத்தனை அடிச்சிருக்கேன்.... ஒரே ஒரு தடவை" என்றான் ஓஸாவா. "நான் அப்ப எட்டாம் வகுப்புல படிச்சிக்கிட்டிருந்தேன். அதே சமயத்திலேதான் நான் எப்படி குத்துச்சண்டை போடறதுங்கறதைப் பத்தி கத்துக்கத் தொடங்கியிருந்தேன். அது ஒரு காரணமில்லை. ஆனா, இந்தச் சம்பவம் நான் ஒத்தையர் குத்துச் சண்டை முறைங்களைக் கத்துக்கறதுக்கு முன்னாலே நடந்துச்சி. நான் அப்ப உடற்கட்டு மேம்பாட்டுக்கான அடிப்படைப் பயிற்சிகளைச் செஞ்சிக் கிட்டிருந்தேன். விஷயம் என்னன்னா அப்படி அவனை ஒரு குத்து விடணும்னுகூட நான் நெனைக்கலை. ஆனா, என்னாலே அதைத் தவிர்க்க முடியலை. எனக்கே தெரியாம நான் அவனைக் கீழே தள்ளிட்டேன். நான் அவனை அடிச்சுட்டேன். என்னோட உடம்பு முழுக்க கோபத்தினாலே உதறிக் கிட்டிருந்துச்சி".

அவனுடைய மாமா ஒரு குத்துச்சண்டைப் பயிற்சி நிலையம் வைச்சிருந்ததுனால ஓஸாவா குத்துச் சண்டை பழகிக்கிட்டிருந்தான். அது ஒண்ணும் சர்வ சாதாரணமான சாமான்ய உடற்பயிற்சி நிலையமில்ல. ரெண்டு தடவைங்க கிழக்கு ஆசிய ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டிங்கள்ல ஜெயிச்சுப் பரிசு வாங்கினவங்களை களத்திலிறக்கிய பெரிய நிறுவனம். உண்மையிலேயே, ஓஸாவா குத்துச் சண்டைப் பயிற்சி நிலையத்துக்குப் போகணுங்கற நெனைப்பை முதல்ல ஏற்படுத்தினவங்க ஓஸாவாவோட அப்பாவும் அம்மாவுந்தான். எப்பவும் தன்னோட அறையிலேயே தங்கியிருந்த புத்தகப் புழுவான தங்களுடைய மகனைப் பத்தி அவங்களுக்குக் கவலை.

முதல் சில மாதங்களுக்கு அப்புறமா குத்துச்சண்டையிலேயே அவனுக்கு ஏற்பட்ட ஆர்வம் ஓஸாவையையே வியப்படையச் செஞ்சுது. சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை தினங்களையும் குத்துச் சண்டைப் பயிற்சி நிலையத்தில்தான் கழித்தான்.

"குத்துச்சண்டையில எனக்குப் பிடிச்சது ஒண்ணு அதனுடைய ஆழமான தன்மை. அத்தோட ஒப்பிடறப்ப அடிக்கறதோ அடிவாங்கறதோ ஒரு பெரிய விஷயமே இல்ல. அது போற போக்குல நடக்கற ஒரு சம்பவம் மட்டும்தான். ஜெயிக்கறதும் தோக்கறதும் கூட அது மாதிரிதான். அந்த ஆழ்ந்த தன்மையின் உச்சகட்டம் வரை போக முடிஞ்சா தோல்விங்கறது ஒரு பொருட்டாவே இருக்காது. - அதுவும் ஒருத்தரைக் காயப்படுத்தாது. எப்படியிருந்தாலும் யாராலும் எப்பவும் ஜெயிச்சுக்கிட்டே இருக்க முடியாது. யாராவது ஒருத்தர் தோத்தாவணும். அதுக்குள்ளே ஆழ்ந்துப் போகணும்ங்கறதுதான் முக்கியமான விஷயம். அது - குறைந்தபட்சம் எனக்கு குத்துச் சண்டையா இருந்துச்சு. போட்டிக்களத்தில் இருக்கறப்ப நான் ரொம்ப ரொம்ப ஆழமான ஒருவளையோட ஆழத்துல இருக்கற மாதிரி உணருவேன். ஆழத்திலேயிருக்கற அந்த இருட்டில நான் தன்னந்தனியா, போரிட்டுக்கிட்டிருப்பேன். ஆனா, அது துயரம் சார்ந்த தனிமை இல்ல"ன்னான்.

ஒஸாவா ஒரு கணம் இடைவெளி விட்டான்.

"உண்மையிலே, நான் சம்பவம் நடந்த புதுசுலே அதைப்பத்திப் பேசியேயிருக்க மாட்டேன்" என்றான். அவன். "அந்தக் கதையை முழுசா எம்மனசிலிருந்தே அழிச்சுடணும்னு கூட நான் நெனைச்சேன். ஆனா, அது முடியவே முடியாது. நிஜமா மறக்கணுமுன்னு நெனைக்கறதை மறக்கவே முடியாம போயிடுதே அது எதனால?" ஒஸாவா புன்னகை செய்தான்.

அவன் தாக்கிய பையன் அவனோட வகுப்பு மாணவன். அவன் பேரு அயோகி. ஆரம்பத்துலிருந்தே ஒஸாவா அந்தப் பையனை வெறுத்தான். ஏன்னு அவனாலே சொல்ல முடியலை. அவன் தன் வாழ்க்கையிலே ஒருத்தனை அப்போ தான் முதல்முறையாக வெறுத்தான்.

"அந்தப் பையன் அயோகி ஒரு முன்மாதிரியான மாணவன், நல்ல மார்க்குங்க வாங்குவான், வகுப்பறையிலே முன் வரிசையில உக்காருவான். வாத்தியாருங்களுக்குப் பிடிச்ச பையன். இப்படியெல்லாம் ரொம்பப் பிரபலமானவனா வேற இருந்தான். நாங்க பையன்களுக்கான பள்ளியில் இருந்தோமுன்னாலும் எல்லோருக்கும் அவனைச் சகிச்சுக்கவே முடியல. அவனுடைய தந்திரமான, சூழ்ச்சிக் கணக்கு வழிமுறைங்களை என்னால தாங்கவே முடியல. அவனுடைய கர்வம், தானுங்கற அகம்பாவம்ங்கறதை அவன் காட்டிக்கிட்ட முறை - இதைத்தான் என்னால தாங்க முடியல. யாரோ ஒருத்தருடைய உடம்பு வாடை நம்மைத் தள்ளி வைக்குமே அதுபோல. இது முழுக்க முழுக்க உளவியல் பூர்வமானது. ஆனா அயோகி புத்திசாலி. அந்த வாடையை எப்படி மறைக்கிறதுன்னு அவனுக்குத் தெரிஞ்சிருந்துச்சு. அதனால வகுப்பில இருந்த பையன்களிலே அதிகம் பேர் அவன் தூய்மையானவன், அன்பானவன், இரக்க சுபாவமுடையவன்னு நெனைச்சாங்க. அது எனக்கு ரொம்ப எரிச்சல் ஊட்டிச்சு".

"கிட்டத்தட்ட எல்லா விதத்துலயும் நானும் அயோகியும் நேர் எதிர் துருவங்களாயிருந்தோம். நான் அமைதியான பையன். வகுப்பிலே, பளிச்சுன்னு தெரியாதவன், நான் யார்கிட்டேயும் குத்துச்சண்டைப் பயிற்சி நிலையத்தைப் பத்தியோ, புத்தகங்களையோ அல்லது இசைத்தட்டுகளை பத்தியோ எதுவும் சொல்லலை."

"அயோகியைப் பொறுத்த அளவுல அவன் என்ன செஞ்சாலும் அவன் சேத்துக்கடலில இருக்கிற வெள்ளை வர்ண அன்னப்பறவையாக இருந்தான். அடுத்தவங்க மனசுக்குள்ளே என்ன நினைச்சிக்கிட்டிருக்கிறாங்கங்கிறதை அவனாலே தெரிஞ்சுக்க முடிஞ்சது."

அப்புறம் ஒரு தடவை பருவ இறுதித் தேர்வு நான் ஆங்கிலத்திலே வகுப்பிலேயே அதிகமான மார்க்குங்க வாங்கிட்டேன். அப்படி நான் முதல் மார்க்கு வாங்கறது அதுதான் முதல் தடவை. ஆனா, அது தற்செயலான விபத்து இல்லை. அதுல உண்மையிலே நான் விரும்பின எதோ ஒண்ணு காரணமா இருந்திச்சு - அது என்னன்னு எனக்கு ஞாபகமில்ல - வகுப்பில முதல் மார்க்கு வாங்குனா அதை வாங்கித் தரணும்னு வீட்டுல ஒப்பந்தம் செஞ்சுகிட்டிருந்தேன். அதனால பைத்தியம் பிடிச்சது மாதிரிப் படிச்சேன். அயோகி அதிர்ச்சி அடைஞ்சிட்டான்.

கொஞ்ச நாளைக்கு அப்புறம் அயோகி என்னைப் பத்தி வதந்திங்களைப் பரப்பிக்கிட்டிருக்கிறான்னு யாரோ எனக்குச் சொன்னாங்க. நான் காப்பியடிச்சு ஏமாத்தி பரீட்சை எழுதினேனாம். இல்லேன்னா என்னால அவ்வளவு மார்க்கு வாங்கியிருக்க முடியாதாம்? அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு உண்மையிலேயே பயங்கரமான கோபம் வந்திச்சு. நான் சிரிச்சுட்டுப் பேசாம அதை அப்படியே விட்டுட்டிருக்கணும். ஆனா, சின்ன வகுப்புல படிச்சுக்கிட்டிருந்த ஒரு சிறுவனுக்கு அந்த அளவு மன உறுதி இருக்கலை.

ஒருநாள் பகல்நேர இடைவேளையில் நான் அயோகியோட மோதினேன். நான் அவனோடு யாருமில்லாத தனிமையில, பேசணும்னு அவன்கிட்ட சொன்னேன். நான் கேள்விப்பட்டிருந்த அந்த வதந்தியைச் சொல்லி, அதுக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டேன்? அயோகியினாலே அவனோட வெறுப்பை மட்டும்தான் காட்ட முடிஞ்சது. அதுக்கு அப்புறம், அவன் என்னைத் தள்ளிவிடறதுக்கு முயற்சி செஞ்சான். அவன் பார்க்கறதுக்கு என்னைவிட திடகாத்திரமானவனாகவும் உயரமாகவும் இருந்ததனாலே என்னைவிடத் தான் பலசாலின்னு அவன் நெனச்சிருந்திருக்கலாம். அப்பத் தான் நான் அந்தக் கிறுக்குப் பயலை இழுத்து வச்சி அவன் மூஞ்சி மேலேயே குத்து விட்டேன். என்ன நடந்ததுங்கறதே தெரியாம அவன் அங்கே மயக்கத்தோட விழுந்துகெடந்தான்."

"என்னோட முட்டி அவன் கன்ன எலும்பைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனைத் தாக்கியதுக்காக நான் வருத்தப்பட்டேன். நான் அப்படிச் செஞ்சிருக்கவே கூடாது. எனக்கு ரெம்பக் கஷ்டமாப்போச்சு"

"அயோகிகிட்டே மன்னிப்பு கேக்கலாமான்னு நான் யோசனை செஞ்சி பார்த்தேன். ஆனா கேக்கலை."

"அடுத்த தினத்திலயிருந்து அயோகி என்னைப் புறக்கணிக்க ஆரம்பிச்சான். நான் ஒருத்தன் அங்கே இல்லங்கறதுமாதிரி நடந்துகிட்டான். அவனே தேர்வுங்கள்ல அதிகமான மார்க்குங்க வாங்கிக்கிட்டிருந்தான். நான் அதுக்கப்புறம் என்னுடைய மனசு முழுசையும் செலுத்தி எந்தப் பரிட்சைக்கும் படிக்கலை. அது என்ன வேறுபாட்டை ஏற்படுத்தும்னு என்னால கற்பனை செய்ய முடியலை. யாரோடயாவது கடுமையாகப் போட்டி போடறதுங்கறது எனக்கு சலிப்பை ஏற்படுத்திச்சி. பிரச்சினை ஏற்படாத அளவுக்கு என்னுடைய வீட்டுப் பாடங்களை போதுமான அளவு நான் செஞ்சிட்டு மிச்ச நேரத்துல எனக்குப் பிடிச்ச வேற எதையாவது செஞ்சேன். என்னுடைய மாமாவோட உடற்பயிற்சி நிலையத்துக்குத் தொடர்ந்து போய்க்கிட்டிருந்தேன்.

"பழிக்குப்ழி வாங்க அயோகி காத்துக்கிட்டேயிருக்கற மாதிரி இருந்துச்சு. சரியான தருணத்துக்காக அவன் காத்துக்கிட்டே இருந்தான். அவனுக்கு எம்மேல நிறைய வெறுப்பு இருந்துச்சு.

"அயோகியும் நானும் ஒவ்வொரு வகுப்பா முன்னேறிக்கிட்டே வந்தோம். அதே இளநிலை உயர்பள்ளி. அப்புறம் முதுநிலை. ஆனா, ஒவ்வொரு வருஷமும் நாங்க வேறவேற வகுப்புகளிலே இருந்தோம். கடைசி வருஷம் வரை. அந்த வருஷம் வகுப்பில நேருக்கு நேர் பார்த்துகிட்டது ரொம்ப அருவறுப்பா இருந்துச்சு. அவன் என்னைப் பார்த்த விதம் என் குடலைக் கிழிக்கறாப்பல இருந்திச்சு. மறுபடியும் அதே வெறுப்பு சகதியாகக் கசிஞ்சு வழியறதை என்னால உணர முடிஞ்சது"-

"கோடை விடுமுறை நெருங்கிக்கிட்டிருந்திச்சி. ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவனா அது என்னோட கடைசி கோடை விடுமுறை. என்னுடைய மார்க்குங்க சுமாரா ஒரு சராசரியான கல்லூரியில் சேர்வதற்கு போதுமானதா இருந்திச்சி. அதனால நான் நுழைவுத்தேர்வுங்களுக்காகக் கடுமையா உழைக்கலை. எங்க வீட்லயும் கண்டுக்கலை. அதனால நான் எப்பவும் படிக்கற மாதிரியே படிச்சேன். சனி, ஞாயிறுகளிலே நான் என் மாமாவோட உடற்பயிற்சி நிலையத்துக்குப் போவேன். மிச்ச நேரத்துல படிச்சேன். இசைத் தட்டுக்களைப் போட்டுக் கேட்டேன்."

"அதே சமயத்துல, மத்தவங்க எல்லாரும் படிப்பில வெறிபிடிச்சுப்போயிருந்தாங்க. எங்க பள்ளிக்கூடம் இளநிலை வகுப்புங்களிலேயிருந்து முதுநிலை வகுப்புங்க வரை கடஉருவடிக்கற தொழிற்சாலையா ஆயிட்டிருந்துச்சி. யாரு எந்தப் பல்கலைக்கழகத்துல சேர்ந்தாங்க... பள்ளியிறுதி வகுப்புல இருந்தவங்க எந்த தகுதி வரிசையில எங்கெங்கேன்னு - எங்க வாத்தியாருங்களால வேறு எதையுமே பேச முடியல. மாணவருங்களும் அதேமாதிரிதான்".

"கோடை விடுமுறையில ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துச்சி. என்னுடைய வகுப்பு மாணவன், மட்சுமோட்டோ என்ற பையன், தற்கொலை செஞ்சிகிட்டான். அவன் ரொம்பக் கெட்டிக்கார மாணவன்லாம் இல்ல. வெளிப்படையாகச் சொன்னா அவன் இருக்கிற இடம் தெரியாம இருக்கறவன். அவன் இறந்து போயிட்டாங்கற செய்தியைக் கேள்விப்பட்டதும் என்னால அவன் உருவத்தை ஞாபகப்படுத்திக்கவே முடியல. அவன் என்னோட வகுப்லேயே இருந்தான்னாலும் நாங்க ரெண்டு இல்லேன்னா மூணு தடவைக்கு மேல பேசிக்கிட்டிருப்பமாங்கறதே எனக்குச் சந்தேகம்தான். அவன் தன் தற்கொலையைப் பத்தி ஒரு குறிப்பை எழுதி வச்சிருந்தான். "நான் இனிமேலும் பள்ளி செல்ல விரும்பலங்கறது" மட்டுமே அதிலே தெரிவிக்கப்பட்டிருந்திச்சு. அதில வேறே தவறுங்க எதுவும் இல்லை. கொறஞ்ச பட்சம் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க.

"இறந்துபோயிட்ட என்னுடைய வகுப்பு மாணவனுக்காக நான் வருந்தினேன். ஆனா எனக்கு இது ரொம்ப அபத்தமாகத் தோணிச்சி. அதாவது... ஒருத்தன் இப்படிக் குதிக்கணுமா... உனக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகப் பிடிக்கலைன்னா போகாதே. எப்படியும் ஒரு அரை வருடத்துக்கு அப்புறம் அந்தப் பாழாய்ப்போன பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியதே இருக்காது. இதுக்குப் போயி எதுக்குத் தற்கொலை செஞ்சுக்கணும்? அர்த்தமேயில்லை. நுழைவுத் தேர்வுக்காக ராவும் பகலும் கடஉரு அடிக்கிறதிலே மனநலமின்மையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு அவனுக்கு அநேகமாக மூளைக்கோளாறாகி விட்டிருக்கக்கூடம்னு நான் நினைச்சேன்."

"கோடை விடுமுறை முடிஞ்சு மறுபடியும் பள்ளிக்கூடம் தொடங்கினதும், அங்க ஒரு விநோதமான சூழல் நிலவியதைப் பார்த்தேன். என்னுடைய வகுப்பு மாணவங்க என்னிடமிருந்து விலகி இருந்தாங்க. நான் யாருகிட்டயாவது எதையாவது கேட்டா நறுக்குன்னு விரோத பாவனையோட பதில் வரும். எல்லாருமே பதட்டத்தல இருந்ததால வந்த கோளாறுன்னு நான் முதல்ல நினைச்சுக்கிட்டேன். சரிதானே? நான் அதைப் பத்தி அதிகம் யோசிக்கலை. ஆனா, ஐந்து நாளுங்களுக்குப் பிறகு திடீர்னு தலைமை ஆசிரியர் முன்னாலே என்னை ஆஜராகச் சொன்னாங்க. குத்துச்சண்டைப் பயிற்சிப் பள்ளியில பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கறது உண்மையான்னு அவரு என்னக் கேட்டாரு. ஆமாம். நான் பயிற்சி எடுத்துக்கிட்டு தானிருந்தேன். ஆனா, அதுக்காக நான் பள்ளியின் எந்த விதிகளையும் மீறலை. நான் எவ்வளவு காலமா அங்கே போய்க்கிட்டிருந்தேன்? எட்டாம் வகுப்பிலயிருந்து. தலைமையாசிரியர் அதைக் கேட்டுக்கலை. ரொம்ப நல்லது. அவர் தொண்டையைக் கனைச்சிகிட்டுக் கேட்ட கேள்வி, நான் எப்பவாவது மட்சுமோட்டோவை அடிச்சிருந்தேனா? நான் ஸ்தம்பிச்சுட்டேன். நான் ஏன் அவனை அடிக்கணும்? நான் ஹெட்மாஸ்டர்கிட்டே இதைத்தான் சொன்னேன்."

"மட்சுமோடோ எப்பவும் பள்ளிக்கூடத்துல அடிவாங்கிக்கிட்டே இருந்தான்னு ஹெட்மாஸ்டர் என்கிட்ட சொன்னாரு. அவன் உடம்பு பூரா காயங்களோடவும் கீறல்களோடவும் பல தடவை வீட்டுக்குப் போயிருந்தான். அவனோட கைச்செலவுக்கான பணத்தைப் பறிக்கறதுக்கு இந்தப் பள்ளிக்கூடத்திலேயே யாரோ அவனைப் பெரட்டி எடுத்திருக்கறாங்கன்னு அவங்க அம்மா புகார் பண்ணியிருக்காங்க. ஆனா மட்சுமோட்டோ அவனோட அம்மாகிட்ட யாருடைய பேரையும் குறிப்பிட்டுச் சொல்லலை. அதை வெளிப்படுத்தினா, தான் இன்னும் மோசமா அடிபட வேண்டியிருக்குமோன்னு அவன் நெனைச்சிருக்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் அந்தப் பையன் தற்கொலை பண்ணிட்டிருக்கிறான். பரிதாபம். யாரையும் அணுக முடியாத நிலையிலே அவன் இருந்திருந்தான்னு நெனைச்சேன். அவன் ரொம்ப மோசமா குழம்பிப் போயிருந்தான். அதனால பள்ளி நிர்வாகம் நிலைமையை ஆராய்ந்துக்கிட்டிருந்தது. என் மனசுல ஏதாவது இருந்திச்சின்னா நானே முன் வந்து அதைச் சொல்லணும். அப்படிச் செஞ்சுட்டா எல்லாம் அமைதியான முறையில முடிவு செய்யப்பட்டும். இல்லேன்னா விசாரணை காவல்துறை செய்யவேண்டிவரும். எனக்குப் புரியுதா?"

"இதுக்குப் பின்னணிக் காரணம் அயோகிதாங்கிறது எனக்கு உடனே புரிஞ்சது. மட்சுமோட்டோவின் மரணத்தைப் போன்ற ஒண்ணைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கறதுங்கறது அவனுடைய கைவேலதான்.

"தலைமையாசிரியர் குத்தஞ்சாட்டப்பட்ட குத்தவாளியைப் பார்க்கிற மாதிரி என்னை உத்துப்பார்த்தார். மூணு நாள் கழிச்சு என்னை விசாரிக்கணும்முன்னு போலீஸ்காரங்க கூப்பிட்டு விட்டாங்க. நான் பயங்கரமான அதிர்ச்சிக்கு ஆளானேன்னு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

"அவங்க என்னை எளிய முறையிலான போலீஸ் விசாரணைக்கு உள்ளாக்கினாங்க. எப்படி ரொம்ப அபூர்வமாத்தான் மட்சுமோட்டோ கிட்டே பேசினேன் நான் சொன்னேன். அயோகி எனும் சகமாணவனை நான் மூணு வருஷத்துக்கு முன்னாலே அடிச்சது நிஜம்தான். ஆனா, அது முழுக்க முழுக்க முட்டாள்தனமான அர்த்தமில்லாத வாதம். அதுக்குப் பின்னாலே நான் அவனைத் எந்தத் தொல்லைக்கும் ஆளாக்கியதில்லை. அவ்வளவு தான். பணியிலிருந்த அதிகாரி, நீ இந்த மட்சுமோட்டோவை அடிச்சதா ஒரு வதந்தி இருக்குதேன்னார். அது வெறும் வதந்தி.... அவ்வளவுதான்னு நான் அவர்கட்ட சொன்னேன். வேணுமின்னே எனக்கெதிரானவங்க இதை வெளியே பரப்பிக்கிட்டிருக்கிறாங்க. அதுல உண்மையில்லை. சாட்சியமும் இல்லை. வழக்கும் இல்லை.

"போலீஸ் என்னை விசாரிச்சதுங்கற விஷயம் வெளியில பள்ளிக்கூடத்துல பரவுச்சு. வகுப்பறையோட சூழல் மேலும் இறுகிச்சு. நான் மட்சுமோட்டோவை அடிச்சேன்னு எல்லோரும் நம்பினாங்க. அயோகி மடத்தனமா எதைப் பரப்பிக்கிட்டிருந்தான்னு எனக்குத் தெரியாது. ஆனா, எல்லாரும் அதை நம்பினாங்க. அது என்ன கதைன்னுகூட நான் தெரிஞ்சுக்க விரும்பல. அதுவெறும் குப்பைங்கறது எனக்குத் தெரியும். பள்ளிக்கூடத்திலே இருந்தவர்களிலே ஒருத்தர் கூட என்கிட்டே பேசலை. ஏதோ பேசி வச்சுகிட்ட ஒப்பந்தம் மாதிரி எனக்கு இந்த மவுன வைத்தியம் நடந்தது. என்னோட அவசரமான வேண்டுகோளுங்களுக்குக்கூட யாரும் காது கொடுக்கலை.

"வாத்தியாருங்க கூட நான் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்காம இருக்கறதுக்கு தங்களால முடிஞ்ச அளவு முயற்சி செஞ்சாங்க. வருகைப்பட்டியலைப் பார்க்கும் போது மட்டுமே அவங்க என் பெயரைச் சொன்னங்க. மற்றபடி வகுப்புலே என்னை அவங்க அழைக்கவேயில்லை - உடற்பயிற்சி ஆசிரியர்தான் ரொம்ப மோசம். வகுப்பை ரெண்டு அணியா பிரச்சப்ப நான் எந்ந அணியிலேயும் இருக்கமாட்டேன். யாரும் என்னோட ஜோடி சேரமாட்டாங்க. உடற்பயிற்சி வாத்தியார், அப்படி எதுவுமே நடக்கலைங்கறது மாதிரி இருப்பார். நான் அமைதியாக பள்ளிக்கூடத்துக்குப் போய், அமைதியாகவே வகுப்புகளிலே இருந்துட்டு, அமைதியாகவே வீட்டுக்குத் திரும்பினேன். நாளுக்கு நாள் வெறுமை. இதேமாதிரியான இரண்டு மூன்று வாரங்களுக்குப் பின்னாடி எனக்கு சாப்பாடு செல்லலை. எடை குறைஞ்சிடுச்சு. என்னால இராத்திரி வேளையில தூங்க முடியல, நொந்து போனவனா நான் படுக்கையிலேயே விழுந்து கெடப்பேன். மனசிலே முடிவேயில்லாம அருவறுப்பான காட்சிங்க வரிசையா நெறைஞ்சிருக்கும். எழுந்தா மூலையிலே பனி மூட்டம் போட்டது மாதிரி இருக்கும். முழிச்சுக்கிட்டிருக்கிறேனோ இல்ல தூங்கறேனான்னே எனக்குத் தெரியாது.

"நான் குத்துச் சண்டைப் பயிற்சியைக் கூட விட்டுட்டேன். என்னோட வீட்டு ஜனங்க கவலையோட ஏதாவது பிரச்னையான்னு கேட்டாங்க. நான் என்ன சொல்றது? ஒண்ணுமில்லை. எனக்கு களைப்பாயிருக்குதுன்னேன். தனியா இருக்கும்போது அயோகியப் பிடிச்சு நல்லா குத்து குத்துன்னு குத்தணும் போலத் தோணும். நான் அவனைப் பத்தி என்ன நெனைச்சேங்கறதை... அவன் ஒரு குப்பைங்கறதை... நான் அவனுக்குச் சொல்லணும். கொடுக்கற அடியில, அவன் திமிர் நொறுங்கணும். அவன் அலறிக் கூவி அவன் ஆசைப்படற அளவு அழுதாலும், "என்னை மன்னிச்சிடு, மன்னிச்சுடு"ன்னு கதறினாலும் அவன் முகம் கூழகிப் போறாப்பல நான அவனை அடிச்சுக்கிட்டேதான் இருப்பேன். இப்படிலாம் கற்பனை செய்வேன்.

"எல்லார் முன்னாலயும் எழுந்து நின்று நேருக்கு நேரா நான் குற்றமில்லாதவன், நான் ஒண்ணும் செய்யலைன்னு அறிவிக்கலாமாங்கறதைப் பத்தி நான் நெனைச்சேன். ஆனா, என்னை யாரு நம்பப் போறாங்க? அயோகி எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஜீரணம் பண்ணிக் கிட்ட இந்த முட்டாள் கூட்டத்துகிட்டே போய் நான் ஏன் மன்னிப்புக் கேக்கணும்?

"நான் பொறியிலே சிக்கிக்கிட்டேன். அயோகிக்கு அவன் செய்கைக்கு ஏத்த பொருத்தமான அடியையும் நான் கொடுக்கலை. எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கவும் முடியலை. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு வாயை மூடிக்கிட்டிருந்தேன். இன்னும் ஒரு அரை வருஷம் மட்டுந்தான். இந்தக் கல்விப் பருவகாலம் முடிஞ்சிடுச்சுன்னா நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்காது. ஒரு அரை வருஷகாலம் இவனுங்க மௌனத்தோட நான் மல்யுத்தம் செஞ்சுக்கிட்டிருக்கணும், ஆனா என்னால அவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியுமா? என்னால இதே மாதிரி இன்னும் ஒரே ஒரு மாசத்தைக்கூட கழிக்க முடியுமான்னே நான் சந்தேகப்பட்டேன்.

தண்டனையை ஒத்திப்போடறதுக்கான முதல் குறிப்பு ஒரு மாசம் கழிச்சு எனக்குக் கெடைச்சது. ஒருநாள், நான் பள்ளிக்கூடம் போற வழியிலே புகைவண்டியிலே தற்செயலா அயோகியை நேருக்கு நேர் பார்த்தேன். வழக்கம்போல கூட்டம் நெரிப்பட்டதனால யாரும் அசையக்கூட முடியலை. இரண்டு மூணு பேருக்கு அந்தப் பக்கம் யாரோ ஒருத்தரோட தோளுக்குப் பக்கத்திலே என்னைப் பார்த்த மாதிரி அயோகி நின்னுக்கிட்டிருந்தான். தூக்கம் கெட்டு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவனாக நான் பார்க்கவே பயங்கரமாக இருந்திருக்கணும். மொதல்லே, "ம், எல்லாம் எப்படி நடந்துகிட்டிருக்குதுன்னு விசாரிக்கறாப்பல". அவன் ஒரு இளி இளித்தான். எல்லாத்துக்கும் அவன்தான் பின்னணிங்கறதை நான் தெரிஞ்சுக்கிட்டேங்கறதை அவன் தெரிஞ்சுக் கிட்டாகணும்... எங்களுடைய பார்வைங்க பின்னிக்கிச்சு. நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் எங்க பார்வைங்களை வீசினோம். நான் அவன் கண்களை உற்று முறைத்த படி இருந்தபோது ஒரு விநோதமான உணர்வு என்னை ஆட்கொண்டது. நான் அயோகியின் மீது அளவற்ற ஆத்திரம் கொண்டிருந்தது உண்மைதான். நான் அவனை வெறுத்தேன். அவனைக் கொல்லணும்னு விரும்பினேன். அதே சமயத்திலே அந்தப் புகைவண்டியிலே திடீருன்னு எனக்கு அவன் மேல இரக்கமும் ஏற்பட்டுச்சி. அதாவது இந்தக் கோமாளியால் அதிகபட்சமா செய்ய முடிஞ்சது இதுதானா? மேம்பட்டவங்கற கர்வத்தை அவனுக்கு ஏற்படுத்தத் தேவையாயிருந்ததெல்லாம் இதுதானா? இந்த முட்டாளுக்கு உண்மையான மகிழ்ச்சி, உண்மையான பெருமைங்கறதைப் பத்தியெல்லாம் எந்தக் காலத்திலேயும் தெரிஞ்சுக்கவே முடியாதுங்கறதை நெனைக்கறப்ப... மானுடத்தின் உள்ளார்ந்த தன்மையில தூரத்துக்கு குறைப்பட்டுப் போனவங்களாயும் சிலர் இருக்கறாங்களேன்னு நெனைக்கறப்ப எனக்கு உண்மையிலேயே துக்கமா இருந்திச்சு. நான் ஒண்ணும் மானுடத்தின் சிகரத்திலே இல்லை தான். ஆனா, குறைஞ்ச பட்சம் உண்மையான ஒரு மனுஷனைப் பார்க்கறப்ப என்னால அதைப் புரிஞ்சுக்கவாவது முடியும். ஆனா, இவனை மாதிரிப்பட்டவங்களால அது முடியாது. அவனுடைய வாழ்க்கை ஒரு எழுதுபலகையைப் போலத் தட்டையானது. அவன் என்ன செஞ்சாலும் அதெல்லாம் நுனிப்புல் சமாசாரம்தான். அவன் ஒரு போலி மனுசன்.

"அப்புறம் நான் வீட்டிலே நிம்மதியாயிருந்தேன். நிம்மதியாத் தூங்கினேன். நல்லாச் சாப்பிட்டேன். உடற்பயிற்சி நிலையத்துக்குப் போனேன். நான் தோக்கடிக்கப்பட்டுவிடப் போறது போலவுமில்லை. அயோகியை நான் வெற்றி கொண்டிருந்தேங்கறது போலவுமில்லை. அதனால நான் மேலும் ஐந்து மாசங்க தாக்குப்பிடிச்சேன். யாரும் என்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசலை. எம்மேலே தப்பு இல்ல. மத்தவங்க மேலேதான்னு நான் எனக்குள் சொல்லிக்கிட்டே இருந்தேன். பள்ளிக்குப்போன ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சை நிமித்திக்கிட்டே போனேன். பட்டம் வாங்கின பின்னால கியுஷூவிலே இருந்த ஒரு பல்கலைக்கழகத்துக்குப் போனேன். அது, அந்த உயர்நிலைப் பள்ளியில் படிச்சவங்க கூட்டத்துலயிருந்து ரொம்பத் தள்ளியிருந்த இடம்."

ஒஸாவா ஒரு பெரிய பெருமூச்சுவிட்டான். அப்புறம் அவன் என்கிட்ட எனக்கு இன்னொரு கோப்பை காப்பி வேணுமான்னு கேட்டான். "வேண்டாம் நன்றி நான் ஏற்கனவே மூணுகாப்பி குடிச்சுட்டேன்"னு சொன்னேன்.

"உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ, இந்த மாதிரி கசப்பான அனுபவத்தை சந்திச்சவங்க மாற்றத்துக்கு ஆளாயிடுவாங்க"ன்னான். அவங்க முன்னைவிடச் சிறப்பானவங்களாவோ அல்லது மோசமானவங்களாகவோ மாறிடுவாங்க. நல்ல விதத்துல சொல்லணுமுன்னா அவங்க அசைக்க முடியாதவங்களாயிடுவாங்க. அந்த அரை வருஷத்தோட ஒப்பிடறப்ப நான் அனுபவிச்ச மத்த கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமேயில்லை. கிட்டத்தட்ட எல்லாத்தையும் என்னால சமாளிக்க முடியும். மேலும் என்னைச் சுத்தியிருக்கறவங்களோட வேதனைகளை என்னால முன்னைவிடக் கூர்மையா உணர முடிஞ்சது. இந்த நல்லதுங்களைக் கணக்கிலே எடுத்துக்கறப்ப, இது என்னை உண்மையான சில நண்பர்களைத் தேடிக்கற திறமையுடையவனாக ஆக்கிச்சு. ஆனா, இதுல கெட்ட விஷயங்களும் நிறைய இருந்துச்சி. என் மனசைப் பொறுத்த அளவிலேயே கூட ஜனங்களை வெறுக்கலை. எனக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கறாங்க. நாங்க ஒரு குடும்பமா ஒருத்தருக்கொருத்தர் பாதுகாப்பா இருக்கறோம். நம்பிக்கையில்லாம நான் இதையெல்லாம் செய்ய முடியாது. நாங்க இப்போதைக்கு நல்லபடியா வாழ்ந்துகிட்டிருக்கோம்".

அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியா மேகங்களைப் பார்த்தான். அதெல்லாம் கொஞ்சுமும் அசையலை.

"அயோகியைப் போல ஆளுங்க என்னைப் பயமுறுத்தறதில்லை அந்தமாதிரி ஆளுங்க எல்லா இடங்களிலேயும் இருக்கிறாங்க. என்னை எது பயமுறுத்துன்னா, எவ்வளவு சுலபமா, எவ்வளவு தூரம் விசாரணை எதுவுமில்லாம, அயோகி மாதிரி கேடு கெட்டவனுங்க பரப்பற கதைங்களை ஜனங்க நம்பறாங்கங்கறதுதான். அயோகி மாதிரியானவங்க, எப்படி அவங்களே எதையும் உருப்படியா செய்யாம, உலகத்தைப் பத்தியும் எதையும் தெரிஞ்சுக்காதவங்களா, சுலபமா எதையும் நம்பிடற ஜனங்களை - இந்தக் கேடுகெட்டவங்க எப்படி ஒரு அபிப்பிராயத்தை ஏற்கும்படியாகப் பண்ணி, இவங்க ஒரு சைகை கொடுத்ததும் அவங்க ஒரு குழுவாகச் செயல்படற மாதிரி ஆக்கி வச்சிடறானுங்க! அறிவில்லாம அடுத்தவங்களை நிரந்தரமா காயப்படுத்தறதைப் பத்தி அவங்க நெனைச்சுக்கூடப் பார்க்கறதில்லை. அவங்க தங்களுடைய செயல்களுக்கு எந்த விதமான பொறுப்பையும் எடுத்துக்கறதில்லை. அவங்க தான் உண்மையான ராட்சசனுங்க. அந்த மாதிரிப் பட்டவங்களை நெனைச்சாதான் எனக்கு அதிபயங்கரக் கனவு கண்டது மாதிரி பயம். அந்த மாதிரி கனவுங்களிலே மௌனம் மட்டும்தான் இருக்கும். அப்புறம் முகமில்லாத இந்த மனுசங்க. அவங்களோட மௌனம் ஐஸ் தண்ணி மாதிரி எல்லாத்திலேயும் ஊறிப்போயிடுது. அப்புறம் அதெல்லாம் சேறாயிடுது. நான் உருகிக்கரைஞ்சு போறேன். கூக்குரல் எழுப்பி அலறுறேன். ஆனா, யாருக்கும் அது கேக்கலை".

ஒஸாவா தன் தலையை சும்மா அசைத்தான்.

அவன் தொடரட்டும்னு நான் காத்துக்கிட்டிருந்தேன். ஆனா, அவன் அமைதியாகவே இருந்தான். அவன் தன் கைகளைக் குவிச்சு மேசையின் மேலே வச்சான். கொஞ்சநேரம் கழிச்சு, "நமக்கு இன்னும் நேரம் இருக்குது. கொஞ்சம் பீர் சாப்பிடலாமா"ன்னான். "சரி. சாப்பிடலாம்.... ஒண்ணு வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம்" அப்படின்னேன் நான்.

நன்றி: புதிய பார்வை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link