சிறுகதைகள்


விட்டு விடுதலையாகி

கூடல்.காம்
"அந்த "ஷட்ட"ரைப் போட்டுக்கிறதுதானே...!" பின் இருக்கையிலிருந்து எழுந்த குரல், உள்ளத்தில் பதிவாகியிருக்கவில்லை. பதிவானாலும்... அதைப்பொருட்படுத்தாத.... பொருட்படுத்தத் தோன்றாத மனநிலை! அடர்த்தியாய்ப் பரவும் குளிரில், பேருந்தின் விரைந்த ஓட்டம்.... உடம்பு முழுக்கப் பனி ஊசிகளைக் குத்தி உள்ளே இறக்கிக் கொண்டிருக்க... அந்தச் சிலிர்ப்பும் ஓர் அனுபவமாகிறது. "குள்ளக்குளிரக் குடைந்து" நீராடிய ஆண்டாளாய்... விட்டதையெல்லாம் பிடிக்கும் தாகத் தவிப்போடு, வெளி மண்டலக் காற்றை ஆழ உள்வாங்கி, அதன் ரசனையில் கரைந்து அமிழ்ந்து போகிறது மனம்.

இந்தக் காற்றின் நுகர்வுக்காகக் காத்திருந்த காலங்கள்....! குளிர்பனியின் மெய்தீண்டலைக் கூட ஆற அமர உள்வாங்கிக் கொள்ள முடியாமல்..... பரபரத்த வெம்மையுடன் தொலைந்துவிட்ட நாட்கள்!

"சாமி உண்டியல் எல்லாம் எடுத்து வச்சாச்சா?" திரும்பவும் பின்னாலிருந்து குரல்!

வேறு எதற்காக இல்லாவிட்டாலும்.... இந்தமாதிரிப் பயணங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாவது, இந்த சாமி.... பூசை..... படையல், எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது.

எட்டாம் வகுப்புப் படிக்கிறபோது, எவரோ எழுதிக் கொடுத்து உருப்போட்டிருந்த "எனது இன்பப் பயணம்" கட்டுரையின் சில வார்த்தைகள்... இன்னும் கூட உள்ளுக்குள்ளே உருண்டுகொண்டுதான் இருக்கின்றன. கட்டுரையின் சூடு ஆறியிராத உடனடித் தாக்கத்தோடு, அடுத்து வந்த பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டு, அழுது அடம்பிடித்து.... அதற்காகவே அறைக்குள் அடைக்கவும்பட்டு, அன்று மாலையே, பயத்தாலோ..., பருவம் குதிர்ந்ததாலோ...., தான் "பெண்" என்பதை உடம்பு கட்டியம் கூறிவிடப் பள்ளிப் பயணத்தின் பாதையும் கூட நிரந்தரமாய் மூடிப் போனது.

அந்த வேளையில், சீற்றச் சடவுடன் அம்மா சொன்ன அந்த வார்த்தைகள்...!

"கால்லே சக்கரத்தோடயே எப்பவும் அலையணும்னு ஒரு பொம்பளை நினைக்கக்கூடாதுடீ! ஸ்திரமா ஒரு இடத்திலே நின்னு நிலைக்கத்தான் இந்தப் பெறப்பு! அதைப் பொட்டிலே அடிச்சுப் புரியவைக்கத்தான்..... சரியான சமயத்திலே உன்னை இப்படி முடக்கிப் போட்டிருக்கு... அதைத் தெரிஞ்சுக்கோ முதல்லே..."

அம்மா....., வெறும் பழக்கதோஷத்தில்..., ஒரு சம்பிரதாயத்திற்காக இப்படிச் சொல்லிவிட்டாளே தவிர, அவளுடைய ஆழ்மன ஓட்டம், அதற்கு முற்றிலும் மாறான வேறொரு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தது என்பது சீக்கிரமே உணர்வாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக குடும்பத்தோடு புகைவண்டி ஏறிப் பெரியம்மா பெண் உமாவின் கல்யாணத்திற்காகப் பயணித்த அந்தப் பொழுதில்....., பிறந்ததிலிருந்து இத்தனை வருஷம் பார்த்துப் பழகியே அம்மாவே காணாமல் போய்.... தனக்குள்ளே புதைந்து கிடந்த வேறொரு புதிய மனுஷியாக அல்லவா அவள் காட்சியளித்தாள்....?

"ஜன்னலோரம் நின்னு அங்கே என்ன வேடிக்கை...? முதல்லே ஜன்னல் கதவைச் சாத்து!"

"காக்கா குருவியெல்லாம் ஒரு அதிசயம்னு அதை வெறிச்சுக்கிட்டு நிக்கிறா பாரு! இந்தாடீ! உள்ளே வந்து பாத்திரத்தை ஒழிச்சுப் போட்டுட்டு மாவை வழிச்சு எடு"

"ஏங்க.... வீட்டிலே ஆக்கிக் கொட்டறது போதாதா? இதுங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கிப் போட்டே வருமானத்திலே பாதியைத் தொலைச்சிடுவீங்க போலிருக்கே...?"

சிடுசிடுப்பின் நிழல் படியாத, சலிப்பின் தொனி கலவாத எந்தச் சொல்லையும், எவரிடமும் இதுவரை உச்சரித்து அறிந்திடாத அம்மாவிடம்... அந்த நேரத்தில் மட்டும் நேர்ந்திருந்த ரசவாதம்! நாரையும், கொக்கும், நகர்ந்து போகிற தந்திக் கம்பியும், விலகி இணைகிற தண்டவாளத் தடங்களும்... எல்லாமே அதிசயமாய்....., அவற்றை விரித்த விழி விலகாமல் பார்க்க வேண்டுமென்பதற்காகவே..., ஜன்னலோர இருக்கையை யாருக்கும் விட்டுத் தராத.... குழந்தைத்தனமான அந்தப் பிடிவாதம்! ரயில் பெட்டிக்குள் விற்பனையாகிற மக்கல் நாற்றமெடுக்கும் மலிவான பண்டங்களையும் கூட ரசித்துச் சுவைத்து... அவள் களித்திருந்த அந்தத் தருணம்...!

"ஹய்...! அம்மா கூடச் சிரிக்கிறாங்க பாருடா!" - குழந்தைகளின் கேலியும், கிண்டலும் உதட்டோரம் ஒரு நாணச் சுழிப்பைக் கவிதையாக்கி வடிக்க, அந்த அற்புதக் கணம்..., நித்தியத்துவம் பெற்ற ஒரு புகைப்படமாய்.... இன்னமும் கூட உள்ள அடுக்கிலே உறைந்துதான் கிடக்கிறது.

எண்ண ஓட்டத்தின் இனிய லயத்தை இடைவெட்டுகிறது..., கரிசனம் கலந்த பின் இருக்கைக் குரல்.

"என்ன அலமு.... தூங்கவே இல்லையா? கொஞ்சமாவது தூங்கிக்கம்மா! எத்தனை நாள் கனவு....? எத்தனை வருஷத்து வேண்டுதல் பூர்த்தியாகப் போகுது...! மனசு... கொஞ்சம் பரபரக்கத்தான் செய்யும்...! ஆனாலும் இடையிடையிலே தூங்கிக்க....! அங்கே கோயிலுக்குப் போய் இறங்கினதிலேயிருந்து மூச்சு விடக்கூட நேரமிருக்காது! வரிசை வேற எவ்வளவு பெரிசா இருக்குமோ...! சில சமயம்... மணிக்கணக்கு..., நாள் கணக்கிலே கூட நிக்கணும்ங்கிறாங்க!"

கல்யாணம் செய்து வந்த புதிதில்.... இந்தக் கரிசனத்தில் பாதியையேனும் காட்ட முடிந்திருக்கிறதா?

மாடமாளிகை மாதிரி வீடுகளையெல்லாம் வந்த விலைக்குப் பிரித்து விற்றுவிட்டு, அண்ணன் ஒரு பக்கமும், தம்பி இன்னொரு பக்கமுமாய்க் கொழுத்த பட்டணங்களப் பார்க்கத் தொடங்கி விட்ட காலத்திலும் கூட...... மாற்றங்களைக் கொஞ்சமும் அண்டவிட்டிருக்காத புகுந்த வீடு! அங்கே... எட்டு வரை படித்திருப்பதெல்லாம் எதற்காகவுமே உபயோகப்படாத ஒரு கூட்டுக் குடும்ப அடுக்களைக்குள்.

"இந்தாடீ கடைசி இவளே...." என்ற மாமியாரின் செல்ல விளியுடன்... "அஞ்"சாவது மருமகளாய்... ஒரு பெண்ணாய்க் கூட இல்லாமல், வெறும் எண்ணாய் மட்டுமே ஒடுங்கி... எத்தனை யுகங்கள்....!

அங்கே... பிறந்த வீட்டில், மார்கழி பஜனை, விளக்கு பூஜை என்று சாமியைச் சாக்கு வைத்தாவது பெண்கள், வெளிக் காற்றை சுவாசிக்க வாய்ப்பைத் தேடிக் கொண்டு விடுவார்கள். இங்கோ... வீடு கொள்ளாமல் புத்திர பாக்கியம் ததும்பி வழிய... அதற்காகக் கூட அரசமரம் சுற்றவும், அங்கப் பிரதட்சணம் செய்யவும் தேவை ஏற்படாததால்..... கூடிய வரை வீட்டுப்படியையே அதிகமாகத் தாண்டியிராத பத்தினித் தெய்வங்கள்.... இந்தக் குடும்பத்துப் பெண்கள்!

எப்போதாவது சுற்று வட்டாரத்தில்.... அதுவும் ஐந்தாறு மைல் தொலைவில், நெருங்கிய.... தூரத்து உறவுகளில் நேரும் விசேஷங்களுக்கு அபூர்வமாக அனைவரும் செல்ல நேரும் சந்தர்ப்பங்களிலும் வீட்டுக்காவல்...., கடைப்பிள்ளையின் தலையில்தான் வந்து விடியும்.

"இத பாருடா! நீ சின்னவன்... உனக்கு இன்னும் வயசு இருக்கு! இப்ப நீ வரலைன்னா யாரும் தப்புச் சொல்லப் போறதில்லை! நாங்க பெரியவங்க போகலைன்னாதான் குடும்பத்துக்கே பழியாப் போகும்! வீட்டைப் பத்திரமாய்ப் பார்த்துக்க! அதிலெல்லாம் உன் வீட்டுக்காரி அலமு படுசமர்த்தி... நாங்க சொல்லணுமா என்ன?"

உலகம் சுற்றிய விநாயகரின் திருப்தி, அந்த ஒற்றைச் சொல்லிலேயே சித்தித்துவிட..., நாலுகைத் தாழ்வாரத்திற்கு நடுவே தெரியும் முற்ற வெளியே... பிரபஞ்சப் பெருவெளியாய்..., அதுவே சிலவேளைகளில் பாழ்வெளியுமாய்... ஆகிப்போன காலங்கள்!

என்றோ ஒரு நாள்! குடும்ப நபர்கள் எல்லோரும் போயே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை வாய்த்த அரிதான ஒரு நேரம்! கடிவாளம் இல்லாத குதிரையாய்.... மனசு தறிகெட்டுப் பறந்த வேளை! சித்தமும், புத்தியும் உல்லாசமானதொரு ராக சஞ்சாரத்தில் இழைந்து தன்னையே இழந்த அந்த வேளையில் ஓர் அபசுரம்!

"நல்லாய்த்தான் காரியத்தைக் கெடுத்தே போ! நல்ல விஷயத்துக்குன்னு கிளம்பறப்ப.... இப்படிப்போய் மூலையிலே உட்கார்ந்திட்டியே....! இனிமே.... உனக்குத் துணையா இருக்க நாங்க ஆளைத் தேடியாகணும்" - சலித்துக் கொண்டபடி, பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தியைத் துணைக்கு வைத்துவிட்டு அனைவருமாய்க் கிளம்பிப் போகிறார்கள்.

வேண்டியது.... வேண்டாதது என்று எல்லா விஷயங்களையும் திறந்த வாய் மூடாமல் சளசளத்த அந்தப் பெண்...., ஒரு செய்தியை மட்டும் ரொம்பவும் ஆதங்கத்தோடு பகிர்ந்து கொள்கிறது.

"அக்கா.... உங்க வீட்டிலேயாச்சும் பரவாயில்லைக்கா! நீங்க போக முடியாதபடி சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு....! அங்கே.... அந்த அய்யர் வீட்லே பாருங்க! ஏதோ மடத்து சாமியைக் கூப்பிட்டுப் பாதபூசை செய்யறாங்களாம்! அதுக்காக அவங்க பெத்த பொண்ணை....., அதுதாங்க்கா.... போனவருசம் கூட அதோட புருசன் செத்துப் போனானே....! அதைக் கொண்டு போய் ஊர்க் கோடியிலே இருக்கிற சொந்தக்காரங்க வீட்டிலே விட்டுட்டுப் பாதபூசை செஞ்சிருக்காங்க! ஏங்க்கா.... புருசன் செத்தப்புறம் முடியை எடுக்கலைன்னா... மடத்துசாமி மூஞ்சியிலேயே முளிக்கக் கூடாதாமே.... அப்படியாக்கா...!"

"இத பாரு.... ஊர் வம்பெல்லாம நமக்கெதுக்கு?" - அப்போதைக்கு அவளை அடக்கி வைத்தாலும்...., இந்த இரண்டு சூழல்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை என்பதும்..... இதற்கு இடையிலே ஊடாடிக் கொண்டிருக்கிற ஏதோ ஒரு ஒற்றுமை இழைதான் அவளை இப்படிப் பேசுமாறு தூண்டியிருக்கிறது என்பதும் நன்றாகவே புரிந்தது.

"காப்பி ஏதாச்சும் குடிக்கிறியா?" - பேருந்து, ஏதோ ஒரு தெருவோரக் கடையருகே நின்று கொண்டிருப்பது... அப்போதுதான் உறைக்கிறது.

நள்ளிரவின் செறிவான இருட்டினூடே... விழிகள் மட்டும் உயிர்ப்போடு ஒளிர்ந்தபடி, பாரவண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் அசைந்து நகர்கின்றன.

பிஞ்சுப் பருவத்தின் ஞாபக எச்சங்கள்.... இந்த வண்டி மாடுகள்! உள்ளடங்கி, ஒதுங்கிப் போய்க் கிடக்கிற கிராமங்களிலிருந்தெல்லாம்...., அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்காக வண்டி கட்டிக் கொண்டு வந்து வைகைக் கரையில் குவியும் ஜனக் கூட்டம்! மேம்பாலத்திற்குக் கீழே உள்ள கல்பாலத்தின் கோடியில், வண்டி மாடுகளை சாவதானமாக அவிழ்த்துப் போட்டுவிட்டு, அங்கேயே அடுப்பு வைத்துச் சோறு பொங்கிப் பசியாறும் மனிதத் திரள்! அதில் தானும் ஓர் அங்கமாய்த் தாத்தா, பாட்டியின் கை பிடித்து நடந்தபடி - நகரமே அதிசயமாய்....., நான்கு மாடிக் கட்டிடமெல்லாம் அற்புதமாய் வெறித்திருந்த கணங்கள்! அந்த உணர்வெல்லாம், இன்றைக்குப் படிக்கவும், வேலைக்குப் போகவுமாய்ப் பாதிநேரத்தைப் பயணத்திலேயே செலவழித்தாக வேண்டியிருக்கிற பட்டணத்துத் தலைமுறைக்குப் புரிந்து விடுமா என்ன?

எண்ணங்களை அசை போட்டுப் போட்டுக் களைத்த மனசுக்கு இசைவாக இமைகளும் மூடிவிட.... உறக்கம் கலைந்தபோது...., பொழுது புலர்ந்து கொண்டிருக்க..., மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில், பேருந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறது. உச்சத்தை எட்டப்போகும் உற்சாகம்... உள்ளுக்குள் குமிழியிட்டு வெடிக்கிறது.

"இத பாரு அலமு! கல்யாணம் ஆனதிலேயிருந்து நான் உன்னை வெளியிலே, வாசல்லே எங்கேயுமே கூட்டிக்கிட்டுப் போகலைங்கறது... உனக்குள்ளே பெரிய குறையாவ நின்னு போச்சுங்கறது எனக்குத் தெரியாத விஷயமில்லை! என்ன செய்யறது? சம்சாரி குடும்பத்தோட ஓட்டம் அப்படி...! இப்பப் பாரு! பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை! நம்ம மூத்த பையனுக்குக் கல்யாணம் கூட ஆகிப்போச்சு.... ஆனா அவன் குழந்தையா இருந்தப்ப நாம வேண்டிக்கிட்ட நேர்த்திக் கடனைச் செலுத்த இன்னும் கூட வேளை வராம இத்தனை நாள் இருந்திருக்கோம்! இப்பக் கிளம்பு....! நாம ரெண்டு பேருமா... மலைக்கோயிலுக்குப் போய் அதை முடிச்சுக்கிட்டு வருவோம்!"

பிச்சைக்காரனுக்கு முன்பு இறைக்கப்பட தங்கக்காசுகளாய் மலைப்பயணம் முடிவாகி விட... அதன் இறுதிக்கட்டமும் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.

திகைப்பையும், பிரமிப்பையும், சற்றே பயத்தையும் ஊட்டுகிற மலைத்தொடர்கள்! ஆழ்ந்த அமைதியை உள்வாங்கியபடி.... எதற்காகவோ.... யார் வருகைக்காகவோ ஆண்டுக்கணக்காய் காத்திருக்கும் பச்சைப் பள்ளத்தாக்குகள்! சிள்வண்டின் ஓசையே மொத்த உலகின் நாதரீங்காரமாய்ப் பிற ஓசைகளெல்லாம் அடங்கியும், அவிந்தும் போய் மோனத் தவமியற்றும் சிகரங்கள்! மூலமும், முடிவும், நடுவும் கூட மறைத்தபடி.... கண் மறைவாய்ச் சலசலக்கும் சிற்றோடைகள்!

அருவி...! அது எங்கே போனது....? ஏதோ.... வயிரத்தைத் தொங்க விட்டமாதிரி இருக்குமாமே....? மகன், தமிழ்ப்பாடத்தைச் சத்தமாய்ப் படித்தபோது, காதிலே விழுந்து, மனசிலே பதிந்து போன விஷயம்! மலையரசி சூடிக் கொண்டிருக்கிற அந்த வயிரத் தொங்கட்டானைத் தேடித் தவிக்கிறது உள்ளம்.

"இந்த வேண்டுதலுக்கே.... அருவிக் குளியல்தான் ரொம்ப முக்கியம் அலமு! அருவியே ஒரு அம்மன்தான்னு இந்தப் பக்கம் நினைக்கிறாங்க! வெள்ளமாய்க் கொட்டற தண்ணியிலே தலை நனைச்சாலே நம்ம பாவமெல்லாம் பஞ்சாய்ப் போய்விடும்! குளிச்ச ஈரத்தோட..... தண்ணி சொட்டச் சொட்டக் கோயில் வரிசையிலே போய்ச் சேர்ந்துக்கிட்டோம்னா...., நாம சாமியைக் கும்பிடறதுக்குள்ளே துணியெல்லாம் "வெட்"டுன்னு காய்ஞ்சு போகும்!"

தான் சென்று வந்த புதுமை மாறாத கிளர்ச்சியோடு ஓரகத்தி சொல்லியிருந்த வார்த்தைகள்!

பெரியதொரு குலுக்கலோடு பேருந்து நிறுத்தப்படுகிறது.

"ம்...ம்.. அருவிக் கரையெல்லாம் இறங்குங்க....! இனிமே அடுத்தாப்பிலே பஸ் ஸ்டாண்டுதான்....!"

வானுக்கும், மண்ணுக்குமாய் விசுவ ரூபமெடுத்திருக்கும் அந்த வெள்ளை அற்புதத்தில் வசமிழந்து.... உச்சி ரோமம் முதல் உள்ளங்கால் நரம்பு வரை கூச்செறிகிறது. அருவிக்குச் சற்றே மேல்மட்டத்தில் அமைந்திருந்த கோயிலின் வாசல் நோக்கி.... எறும்புச் சாரியாய், மனித மந்தை!

சுளீரென்று.... அடிவயிற்றில்.... சூட்டுக் கோலால் சூடிழுத்த மாதிரி..... ஒரு வலிக்கீற்று...! சுதாரித்துக் கொண்டு எழுந்து கொள்ள முயலும்போது.... தொடையிடுக்கில் பிசுபிசுப்புத் தட்ட.... மூச்சடைத்துப் போய்.... மூளையில் அறைகிறது யதார்த்தம்! ஆறுமாத காலமாக, "அது" அண்டவே இல்லையென்பதால், விட்டு விடுதலையாகி விட்டதாக எண்ணியதெல்லாம் வெறும் கானலா?

தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும் வந்து நின்று விட்டதைப் போன்றதோர் ஆயாச உணர்வு தலையெடுக்கத் தொடங்குகிறது. பரமபத ஆட்டத்தில், சறுக்கியும்.... ஏறியும்.... ஒருவழியாகத் தொண்ணூற்றெட்டாவது கட்டத்தை எட்டுகையில்.... விழுங்கக் காத்திருக்கும்.... நீண்டு பருத்த மலைப்பாம்பு! விஷ நாக்குகளின் கோர வீச்சுக்களோடு... அதன் பிரளய தாண்டவம்...! இந்த முறையும் அதற்கு இரையாகவா...?

"என்ன அலமு அசந்துபோய் உட்கார்ந்திட்டே.... தலையைச் சுத்துதா என்ன....?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க....! அருவியைப் பார்த்ததிலே கொஞ்சம் அசந்துபோய் உட்கார்ந்திட்டேன் அவ்வளவுதான்...! நீங்க சாமானை இறக்குங்க!"

பயணிகளை உதிர்த்துவிட்டுப் பேருந்து கிளம்பிப் போகிறது.

"என்னங்க....! நாம இங்கே ரெண்டு நாள் தங்கப் போறோம் இல்லையா....? அந்த ரெண்டு நாளும்.... ஆசை தீர அருவியிலே குளிச்சிட்டுக் கோயிலுக்கும் போகணும்ங்க!"

நன்றி: தடை ஓட்டங்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link