சிறுகதைகள்


கற்பு

கூடல்.காம்

வள்ளி! எங்கே போய்விட்டாள்... என்று கூப்பிட்டபடி மாதச்சம்பளம் நானூற்றி ஐம்பது ரூபாயை வீட்டுத் தலைவி சொர்ணம் வள்ளியிடம் கொடுத்துவிட்டு.

உன் வீட்டுக்காரன் கண்ணில் காட்டாதே.. போகும் போதே அரிசி, உப்பு, மிளகாய் வாங்கிட்டு போ... தெரியரதா... குடிக்கிறானாமே கூலி வேலை செய்பவன் குடிக்கலாமா? என்று அக்கரையுடன் கேட்டபடி சொர்ணம் சென்றுவிட்டாள்.

வள்ளி, பூமியில் விழும் நட்சத்திரம் வானத்தை மறந்து போவது மாதிரி அவள் தன் சொந்த ஊரை மறந்துவிட்டாள். எப்போதாவது தன் தாவணிப் பருவத்தில் கண்ட கனவுகளும், விளையாடிக் கொண்டே பள்ளிக்கூடம் போனதும் அவளால் மறக்க முடியாது. நினைத்து நினைத்து மகிழ்வாள்.

அவள் அப்பா விழுப்புரம் ஒழுங்கு முறைக்கூடத்தில் மூட்டைத் தூக்கித்தான் பிழைத்தான். அவள் அம்மா ஒரு தனியார் மருத்துவமனையில் கூட்டிப்பெருக்கியும், கண்ணாடி சன்னல்களைத் துடைத்தும் வயிற்றைக் கழுவினாள். இவர்களுக்கு ஒரே பெண்தான் வள்ளி.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஒரு கூரை வீடு அந்த வீட்டில் சுடச்சுட சோறும் முழுமிளகாய் சாம்பாரும் அவள் அம்மா அலுமினியத்தட்டில் போட்டு கொடுப்பாளே அந்த சுவையை இன்று நினைத்து சப்பு கொட்டுவாள் வள்ளி.

திடீரென்று ஈளை நோயால் பாதிக்கப்பட்டு, அவள் அப்பாவை தாம்பரம் மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் இறந்து போன தன் அப்பாவை நினைக்கும் போது கண்ணீர் குபுக்கென்று வந்துவிடும். வயதுக்கு வந்த கையோடு தன் சொந்த தம்பிக்கே வள்ளியை கல்யாணம் செய்து வைத்துவிட்டு மூன்றுநாள் விஷக்காய்ச்சலால் மாண்டுபோனாள்.

விழுப்புரத்தில் ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருந்த கந்தசாமி வள்ளியின் கணவன் வெளியூர் சென்று பிழைக்கலாம் என்று முடிவு செய்தான். அட்டோ அதிகமானதால் வருமானம் குறைந்தது. அதனால் ரிக்ஷாவை விற்றுவிட்டு வள்ளியை அழைத்துக்கொண்டு தாம்பரம் வந்து சேர்ந்தான்.

பிழைக்கச் சென்றவர்கள் ஒதுங்கும் குடிசைகளில் ஒரு குடிசையில் கந்தசாமி வள்ளியோடு தங்கினான். அந்தப் பகுதி அரசியல்வாதி ஒருவர் தாம்பரம் போகும் வழியில் குடிசைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். குறைந்த வாடகை என்றாலும் ஒதுங்க கொஞ்ச தூரம் போக வேண்டும். குடிசைகளில் ஆங்காங்கே குறிப்பிட்ட கட்சிக் கொடிகளைக் கட்டி தன்னை அந்தக் காட்சியின் விசுவாசி என்பதைக் காட்டிக்கொள்ளும் அந்த அரசியல்வாதி இவர்களை தேர்தல் சமயங்களில் "பயன்படுத்தி"க் கொள்வார். பார்ப்பவர்களுக்கு குடிசையில் வாழும் மக்கள் அந்தக் கட்சியை சார்ந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றும்.

பல்வேறு இடங்களில் வேலை செய்யும் குடும்பங்கள் இரவு நேரத்தில் மட்டுமே இவர்களைப் பார்க்க முடியும். குழந்தைகள் தவிர அனைவரும் உழைப்பாளிகள். காலை லாரி ஒன்று வந்து நிற்கும் அதில் ஏறிக் கொண்டு போய்விடுவார்கள் மீண்டும் மாலை ஆறுமணிக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

கந்தசாமி தொலைபேசிக்கு பள்ளம் வெட்டும் வேலையில் சேர்ந்தான். வள்ளியும் மண் வாரிக் கொட்டும் வேலை செய்தாள். இரவு வந்தால் இடுப்பும் காலும் வெட்டிப்போட்டது போல வலிக்கும். காலை ஏழு மணிக்குச் சென்றால் ஏழு மணிக்குத்தான் திரும்புவார்கள். வேலை செய்து வீட்டுக்கு வந்தால் உடம்புவலிக்காக முதலில் கொஞ்சம் சாராயம் குடிக்க வள்ளியே அனுமதித்தாள். அதுவே அவனுக்கு பழக்கமாகவும், வழக்கமாகவும் ஆனது. மண்தூக்கும் வேலையை வள்ளியால் செய்ய முடியவில்லை. அதனால் பல நாட்கள் அவள் கந்தசாமியுடன் வேலைக்கு போகமுடியவில்லை.

ஒரு நாள் குடிசைகள் இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் ஊரோடு கோபித்துக் கொண்டு ஒதுங்கி நிற்பது போல் நிற்கும் அந்த ஒற்றை பங்களா வழியாகக் கடைக்குப் போய்விட்டு வரும்போது தான் சொர்ணம் வள்ளியை பார்த்துவிட்டாள். வீட்டு வேலை செய்ய ஆள் வேண்டும் என்று பல பேரிடம் சொல்லி வைத்தாள். அவளுக்கு பிடித்த ஆளாகக் கிடைக்கவில்லை.

வள்ளியை ஒரு நாள் கூப்பிட்டு பேசினாள். தன் ஊர், கணவனும் தானும் வேலை செய்வது, குடிசையில் தங்கி இருப்பது, எல்லாவற்றையும் வள்ளி சொன்னாள். கிராமப்பகுதியில் இருந்து வந்தவள் என்பதாலும், வள்ளியின் கரவற்ற முகமும், தன்பிள்ளைகளை கவனித்துக் கொள்ள இப்படிப்பட்ட பெண் இருந்தால் நல்லது என்று எண்ணி, வீட்டு வேலை செய்ய கூப்பிட்டாள். மாதம் நானூற்றி ஐம்பது ரூபாய் தருவதாகவும், தங்குவதற்கு பங்களா மதில் சுவற்றை ஒட்டி சிறு வீட்டில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை காட்டவே வள்ளி கந்தசாமியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.

குடிசையை காலி செய்துவிட்டு ஓடு போட்ட சிறு வீட்டுக்கு வந்துவிட்டாள். கந்தசாமியும் அங்கிருந்தே வேலைக்குப் போனான்.

ஒற்றை பங்களாவில் கணவன் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். திருவள்ளூர் போகும் சாலையில் "பிளாஸ்டிக்" தொழிற்சாலை, தாம்பரத்தில் இரண்டு வீடுகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். வீட்டுத் தலைவி தாம்பரத்தில் அழகு நிலையம் நடத்துகிறாள். நல்ல வருவாய் ஈட்டும் குடும்பம்.

வீட்டுத்தலைவர் உலகநாதனுக்கும் சொர்ணத்திற்கும் பத்து வயது வித்தியாசம். சொர்ணம் கடைந்தெடுத்தது போல் உடல்வாகு கொண்டவள். உலகநாதன் மெலிந்து காணப்பட்டாலும், அழகாகவே இருப்பார். வீட்டில் கார் உண்டு காலையில் சென்றால் இரவுதான் வீட்டிற்கு வருவார். பெண் குழந்தைகள் தாம்பரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். தனி ஆட்டோ வந்து அழைத்துப்போய் மாலை கொண்டு வந்து விட்டு விடுவான் ஆட்டோக்காரன்.

வள்ளி வேலைக்கு வந்த பிறகு சொர்ணத்திற்கு ஓய்வு கிடைத்தது. ஏழையாக இருந்தாலும், வள்ளி எளிய நூல் சேலையிலும் அழகாக விளங்கினாள். வள்ளிக்கு இருபத்தி மூன்று வயதுதான். கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் கோதுமை நிறமாக இருந்தாள். திருத்தமான அழகு கடைந்து எடுத்ததுபோல் உடல் அமைப்பு. இளமையில் செழிப்பு பூரித்து இருந்தாள்.

கந்தசாமி அவளுக்கு ஏற்றவன் இல்லை என்றாலும், தாய்மாமன் என்பதால் கழுத்தை நீட்டினாள். விழுப்புரத்திலேயே ரிக்ஷா ஓட்டிக் கொண்டு இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது. யார் பேச்சையோ கேட்டு சென்னைக்கு வந்துவிட்டான். வள்ளிக்கு நல்ல இடமாக வேலை கிடைத்துவிட்டது. கந்தசாமி படிப்பறிவில்லாதவன், கைநாட்டுப் பேர்வழி அவனுக்கு ஏதாவது காவற்கார வேலை கிடைத்தால் நல்லது என்று எண்ணியபடி வள்ளி இருந்தாள்.

பங்களாவின் பின்பக்கமும், முன்பக்கமும் தோட்டம் உண்டு. முன்பக்கம் பூச்செடிகளும், பின்பக்கம் காய்கறிகளும் பயிரிட்டு வந்தனர். இதற்குத் தனியே தோட்டக்காரன் உண்டு. பகல் நேரங்களில் வெளி கேட் பூட்டப்பட்டிருக்கும். வெளியே போனாலும், வந்தாலும் தனியே சிறிய கேட்வழியாகத்தான் வரவேண்டும். சொர்ணம் ஸ்கூட்டரில் அழகு நிலையம் செல்வாள். இரண்டு மாடிக்கட்டிடம் அது உலகநாதனும் சொர்ணமும் மாடியில் தான் வாசம். கீழே இரண்டு அறைகளில் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்டவைகள் இருந்தன. மற்ற அறைகள் ஒரு பெரிய ஹால், கீழ்பகுதி முழுவதும் வள்ளி ஆதிக்கம்தான். எப்போதாவது மாடியை சுத்தம் செய்ய வள்ளி போவாள், சொர்ணம் வெளியே போனால் மேல் மாடியை பூட்டிக்கொண்டு போய்விடுவாள்.

ஒருநாள் வள்ளி சமைக்க வேண்டிய நிலை வந்தது. வள்ளி சமைத்த மாமிச உணவும், மிளகு நீரும் சொர்ணத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. வள்ளிக்கு பதவி உயர்வு கிடைத்தது. வீட்டு வேலைகளுடன் சமையலும் அவளே செய்தாள். சொர்ணம் உடன் இருந்து காரம், புளி, அளவு சொல்வாள். மதியம் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வருபவளும் வள்ளியே.

உலகநாதனுக்கும் சொர்ணத்திற்கும் வள்ளி வேலைக்கு வந்தபிறகு நிறைய ஓய்வு கிடைத்தது. சில சமயங்களில் சொர்ணமும் தொழிற்சாலைக்குப் போய்விடுவாள். வள்ளிக்கு உலகநாதன் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க சம்மதித்தான். வள்ளி மிகவும் மகிழ்ந்தாள். ஒரு நாள் அவள் வைத்த மீன்குழம்பு உலகநாதனுக்கும் சொர்ணத்திற்கும் மிகவும் பிடித்துவிட்டது. வள்ளி சொர்ணத்திற்க்கு எப்படி வைப்பதென்று சொல்லிக் கொடுப்பாள்.

தோட்டக்காரன் காலையில் இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் வேலை செய்துவிட்டு போய்விடுவான். யாரிடமும் பேசமாட்டான். வேலை, வேலை, வேலைதான். எதையும் திருத்தமாகச் செய்வான். பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு பின்பக்கத் தோட்டத்திற்கு சென்று காய்கறித் தோட்டத்திற்கு சென்றுவிடுவான். சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கூடையில் பறித்து வைத்து விடுவான். சொர்ணம் ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். காலை எட்டு மணிக்கு வந்து பத்து மணிக்குப் போய்விடுவான். மாலை நான்கு மணிக்கு வந்து ஆறுமணிக்குப் போய்விடுவான்.

ஒருநாள் சொர்ணம் ஒரு இளைஞனுடன் பங்களாவிற்கு வந்தாள். மாடிக்குப் போய்விட்டாள். வள்ளி சமையல் அறையிலிருந்து கவனித்தாள். அவள் உறவினராக இருக்கக்கூடும் என்று நினைத்து தன் வேலையில் மூழ்கினாள். குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்துப்போக நேரம் நெருங்கியதால் வள்ளி சொர்ணத்திடம் சொல்லிவிட்டுப்போக மாடிக்கு வந்தாள். அறைகள் அனைத்துமே மூடி இருந்தது. படுக்கை அறையில் கொலுசின் ஒலி கேட்கவே சாவியின் துவாரம் வழியே வள்ளி பார்த்தாள். அவள் இதயமே நின்றுவிடும்போல் இருந்தது. அந்த இளைஞனும் சொர்ணமும் படுக்கையில்....... வள்ளி உடல் நடுங்கியவாறு கீழே வந்து விட்டாள் அவள் நடுக்கம் குறைய சில நிமிடங்களாயின.

குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்துப் போக வேண்டிய நேரம் நெருங்கியதால் சாப்பாடு எடுத்துக்கொண்டு வெளியே வந்து கதவை மூடியதும் பூட்டிக் கொண்டது உட்பக்கம் திறந்தால் திறந்து கொள்ளும். அதற்கு உரிய அழுத்தும் குமிழ் உட்பக்கம் உள்ளது. அதனால் சிறிய கேட் வழியே பள்ளிக்குச் சென்றாள் வள்ளி.

உலகம் முழுவதும் இருட்டிக் கிடப்பது போல அவளுக்குத் தெரிந்தது. லட்சுமிகரமான முகம்... கண்களில் கனவு... பேச்சில் மனிதநேயம்..... நெஞ்சில் இப்படிப்பட்ட அழுக்கு... குடிசைகளில் இப்படி நடக்குமா? வெட்டிப்போட்டு விடுவார்களே!

சில இடங்களில் கணவன் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதும். காலையில் சென்றால் இரவு வீடு திரும்புவதும், மனைவியை கவனிப்பதில் அக்கரை காட்டாததாலும் சிலர் இப்படிப்பட்ட மன நெருடலுக்கு ஆட்பட்டுவிடுவது என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அதை நேரில் கண்டபோது அவளுக்கு உடம்பே நடுங்கியது... ஒழுக்கத்தை உயிராய் மதிப்பவள் வள்ளி, மனதை பிசைகின்ற வேதனையோடு சாப்பாடு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.

விழிகளுக்குள் வியர்வை வழிந்தது! அலைகள் இல்லாத பசிபிக் சமுத்திரத்தில் ஆழம் அதிகம் என்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டாள். இவ்வளவு வசதியான குடும்பத்தில் இவ்வளவு ஒழுக்கக் கேடா? என்று எண்ணியபடியே குழந்தைகள் இருவருக்கும் உணவு ஊட்டிவிட்டு வந்தாள்.

மூத்தவள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், பெயர் கனிமொழி, இளையவள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள் பெயர் இன்சுவை.

வீட்டிற்கு வந்தபோது மோட்டார் பைக்கைக் காணவில்லை. சொர்ணம் குளித்துவிட்டு தலைமுடி இடுப்பிற்கும் கீழே தவழ, அழைப்பு மணி கேட்டு கவைத் திறந்தாள் சொர்ணம். வள்ளி சொர்ணத்திடம் ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள்.

மனதுக்குள் பிள்ளைப்பூச்சி ஊர்கின்ற மாதிரி திகில் ஏற்பட்டது. மதிய வேளையில் சொர்ணம் எப்போதும் குளித்துப்பார்த்ததில்லை.

"வள்ளி....என்ன ஒழுங்காக சாப்பிட்டாங்களா? இன்சுவை அடம் பிடித்தாளா?" என்று கேட்டாள் சொர்ணம்.

"இல்லைமா... சாப்பிட்டார்கள்". உடலின் கொதிப்பினால் அவள் கண்கள் சிவந்திருந்தன. அவள் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது.

"என்ன ஒரு மாதிரி இருக்கிறே... வள்ளி"

"ஒண்ணுமில்லைமா தலைவலி..." என்று பொய் சொல்லிவிட்டு பாத்திரங்கள் கழுவப் போனாள்.

சொர்ணம் ஏதும் நடக்காதது போல் நடந்து கொண்டாள். ஆனால் வள்ளியால் அப்படி நடக்க முடியவில்லை. அவ்வப்பொழுது படுக்கையறைக் காட்சி வள்ளியின் நெஞ்சில் நிழலாடியது.

தீயில் மழை விழுந்ததைப் போல கோபத்தை அணைத்தாள். பாவங்களை கட்டாயம் மறந்துதானே ஆக வேண்டும். கண்களைக் கசக்கிக் கண்ணீர்த் திரை விலக்கினாள் வள்ளி.

இரவு வந்தது, அவரைக்காய் சாம்பார், மிளகு நீர் சேப்பங்கிழங்கு வறுவல். சொர்ணத்திற்குப் பிடித்த உணவு. உலகநாதனுக்கு சப்பாத்தியும் கத்திரிக்காய் துவையலும் செய்துவைத்திருந்தாள். குழந்தைகளுக்கு இட்லி, சாம்பார், இப்படி அவரவர்களுக்கு பிடித்தமானதை வள்ளி செய்து முடித்தாள்.

வள்ளி பழைய நிலைக்கு வந்தாள். தான் வருத்தப்பட்டு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இப்படியே பட்டும் படாமல் இருந்தால் வேலை போனாலும் போய்விடும். மறுபடியும் சாக்கடையில் உழவவேண்டும். மணலும் கல்லும் தூக்கவேண்டும்.... எண்ணிக்கொண்டு இருந்த போது கலகலப்பாக அனைவரும் சாப்பிட வந்தார்கள். மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு பரிமாறினாள்.

இரவு வீட்டுக்கு வந்ததும் இடி போன்ற செய்தியை கேள்விப்பட்டு பழைய குடிசைப் பகுதிக்கு ஓடினாள் வள்ளி. அங்கே முன்பு குடியிருந்த குடிசைக்கு அடுத்த குடிசையில் கந்தசாமியை படுக்கவைக்கப்பட்டிருந்தது. சாராய நெடி குடலைப் புரட்டி எடுத்தது.

கந்தசாமி அளவுக்கு மீறி குடித்துவிட்டு வழியில் விழுந்து கிடந்ததாகவும், வேலை செய்துவிட்டு திரும்பிய லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்ததாக அறிந்து மிகவும் கோபமும் வேதனையும் கொண்டாள். விழுப்புரத்தை சேர்ந்த பாண்டியன் குடிசை அது. அவன் மனைவி பிரசவத்துக்கு அவள் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டதால்... குடித்துவிட்டு வரும் நாளில் பங்களா வீட்டிற்கு கந்தசாமி வரமாட்டான்.

"அண்ணே... நீங்களாவது புத்தி சொல்லக்கூடாதா... இப்படி குடிச்சிட்டு விழுந்து கிடந்தா... ஏதாவது வண்டியோ, லாரியோ நசுக்கிட்டு போயிட்டா என் கதி என்ன அண்ணே!"

"வள்ளி... நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்... பட்டை சாராயத்தை சாப்பிடாதே... வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போய் உடல் வலிக்காக கடையில் பிராந்தியோ, விஸ்கியோ வாங்கி சாப்பிட்டு விட்டு படுத்துக்கோன்னு சொன்னேன். கேட்டாதானே..."

"அண்ணே சாராயத்தை விட்டுட்டு பிராந்தி, விஸ்கி சாப்பிடச் சொல்றீங்களே நியாயமா? அண்ணே".

"திடீர்னு குடிக்காதேன்னு சொன்னா அவனால் முடியாது வள்ளி அதான் அப்படி சொன்னேன். கோச்சுக்காதே வள்ளி".

கந்தசாமி புரண்டுபடுத்தான்... குபுக்கென்று வாந்தி... எடுத்தான் வள்ளி அருகில் சென்று அவன் மேல் துண்டை எடுத்து வாயைத் துடைத்துவிட்டு வெளியே சென்று முறத்தில் மணல் வாரி வந்து வாந்தி எடுத்ததில் கொட்டி வாரிக்கொண்டு வெளியே கொண்டு போய் கொட்டினாள். நாற்றம் குடலைப் புரட்டியது.

"வள்ளி நீ பங்களாவுக்கு போ.... போதை காலையில்தான் தெளியும்.. நான் பார்த்துக்கிறேன். இன்னிக்கு வாங்கிய சம்பளத்தில் ஐம்பது ரூபாய் குடிச்சிட்டு வந்துட்டார்னு நினைக்கிறேன். சட்டைப் பையில் ஐம்பது ரூபாய்தான் இருந்தது..." இந்தாங்க வள்ளின்னு பாண்டியன் நீட்டினான்.

அவள் அதை வாங்கவில்லை..."அண்ணே இதுமாதிரி குடிச்சா அந்த பங்களாவில் நான் வேலை செய்ய முடியுமா? சொல்லுங்க.. என் அப்பா, அம்மா செய்த தருமம் எனக்கு அங்கு வேலை கெடச்சுது... இவர் வேலைக்குப் போகாவிட்டால் கூட பரவாயில்லை... என்னால் இவரைக் காப்பாத்த முடியும். ஆனா இது போல் குடிச்சா நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க...."

"நேத்தே அவன் ஏங்கிட்ட விழுப்புரமே போயிடப் போறதா சொன்னான். ஏன்னு கேட்டேன்.. டெலிபோன் பள்ளம் வெட்டறவேலை செய்ய முடியலையாம். பழையபடி ரிக்ஷா ஓட்டப் போரானாம்... ரிக்ஷாவில் மோட்டார் பூட்டிட்டா... நல்ல வருவாய் வரும்னு சொன்னான். உன்கிட்டே சொல்லச் சொன்னான்". என்றான் பாண்டியன்.

திடுக்கிட்டாள் வள்ளி, "நான் இருக்கும் போதே இப்படி குடிக்கிறாரு... விழுப்புரம் போயிட்டா கேட்கவே வேண்டாம்..." என்றாள் வள்ளி.

"சரி வள்ளி நேரமாவது.... நீ போ... காலையில் வா பேசிக்கலாம்.... நாளைக்கு வேலை இல்லை.. லாரி வராது".

"சரி அண்ணே... காலையில் வர்றேன்... உங்களுக்குத்தான் தொந்தரவு..."

"நீ போயிட்டு வாம்மா... நான் பார்த்துக்கிறேன்... இரு வள்ளி... உன்னை கொஞ்சதூரம் கொண்டு வந்து விட்டுட்டு வரேன்".

வள்ளி மறுக்காததால்... அவளுடன் பாண்டியன் புறப்பட்டான். போகும்போது பாண்டியன் வள்ளியிடம்.

"வள்ளி... நீ எப்படி தடுத்தாலும் இனிமேல் இங்கே அவன் வேலை செய்யமாட்டான்... சைக்கிள் ரிக்ஷா உன் வீட்டிற்குள் தான் விட்டுட்டு வந்தானாம்... நீயே போய் மோட்டார் பிட் பண்ணிக் குடுத்துட்டு வந்துடு.... மாசத்திலே இரண்டு நாள் லீவு வாங்கிட்டு நீ விழுப்புரம் வந்துட்டு போ வள்ளி... எல்லாம் சரியா போயிடும்".

வள்ளி பதில் ஏதும் பேசவில்லை... பங்களா அருகில் விட்டுவிட்டு பாண்டியன் திரும்பினான். உள்ளே வந்த வள்ளியை சொர்ணம் கூப்பிட்டு கேட்டாள். நடந்ததைச் சொன்னாள், சொல்லும் போதே வள்ளி அழுதாள்.

"வள்ளி அழாதே... நான் வேணும்னா நம் தொழிற்சாலையிலே ஒரு வேலை போட்டு குடுக்கச் சொல்றேன்... ஐயா வந்ததும் நான் சொல்றேன்... நீ போய் தூங்கு...." என்றாள் சொர்ணம்.

வள்ளி ஏதும் பேசாமல் சென்றாள்... பங்களாவில் எடுத்து வந்த சப்பாத்தி, இட்லி, சாதம் அப்படியே இருந்தது. கதவைத்தாளிட்டு விட்டு அழுதாள் வள்ளி... அம்மா ஒரு நல்லவனுக்குத் தன்னை திருமணம் செய்து கொடுத்திருக்கக்கூடாதா? இப்படி குடிகாரனுக்கு என்னைக் கொடுத்து, என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாளே... என்று அழுதான் எப்போது தூங்கினாள் என்பது அவளுக்கே தெரியாது.

சொர்ணம் வந்து கதவைத் தட்டிக் கூப்பிட்டாள் எப்பொழுதும் இப்படி நேர்ந்ததில்லை. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் வள்ளி. கதவை திறந்த போது சொர்ணத்துடன் பாண்டியன் நின்றிருந்தான்.

"வள்ளி கந்தசாமி அண்ணன் நம்மை எல்லாம் விட்டுட்டு போயிட்டார்மா" என்று கதறினான் பாண்டியன். எரிமலை வெடித்து தன் மேல் அனல் குழம்பு வீசுவதைப் போல் அலறினாள்.

"வள்ளி இருவரேன்...." என்று சொல்லிவிட்டு சொர்ணம் பங்களாவுக்குள் சென்றாள். உடனே வந்தாள். வள்ளியிடம் ஆயிரம் ரூபாயை சொர்ணம் கொடுத்துவிட்டு,

"வள்ளி நீ அழாதே.... உன்னைப் பிடிச்ச சனியன் இன்றோடு ஒழிந்ததுன்னு நினைச்சிக்க..... போய் மேற்கொண்டு வேலையைப் பாரு... பணம் இன்னும் வேணும்னா, இந்த தம்பியை அனுப்பிவை... போ... வள்ளி... அழாதே..." என்றாள் சொர்ணம்.

வள்ளி அங்கிருந்து பாண்டியனுடன் சென்றாள்.

"விழப்புரத்துக்கு ஆள் அனுப்பனுமா... வள்ளி".

வள்ளி அழுதபடி... "அங்கு யார் இருக்காங்க... எல்லாந்தான் போய் சேர்ந்துட்டாங்களே.... அண்ணே இதை வச்சிக்கிங்க மளமளன்னு காரியத்தைப் பாருங்க... அண்ணே... என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்குது..." என்று தேம்பி அழுதபடி பணத்தை அவனிடம் கொடுத்தாள்.

கந்தசாமி பிணமாகக் கிடப்பதைக் கண்டு, வள்ளி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினாள்.. முட்டி மோதினாள். அங்கிருந்த பெண்கள் ஆறுதல் கூறினார்கள். ஏழைக்கு ஏழைகள் தானே துணை. குடிசை வாசிகள் அத்தனைபேரும் அங்கு குழுமி இருந்தனர். யார் வீட்டிலும் புகையவில்லை... தோட்டக்காரன் முத்துக்குமரன் அங்கு வந்து வள்ளிக்கு ஆறுதல் கூறினான்.

வயதில் மூத்த ஒருவர் சொல்ல பாண்டியன் எழுதினான். போன அரை மணியில் திரும்பினான். அதற்குள் கைபாடை கட்டி தயாராக இருந்தது. வயதான இரண்டு பெண்கள் வள்ளியை கந்தசாமியுடன் உட்கார வைத்து சில சடங்குகள் செய்தனர். வள்ளிக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. எல்லாம் முடிந்தது. கந்தசாமியை மண்ணுக்குள் வைத்த பிறகுதான் எல்லோரும் தலை முழுகிவிட்டு சமைக்கத் தொடங்கினார்கள்.

வள்ளி பாண்டியன் வீட்டில் கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்தாள். வயதான பெரியவர் ஒருவரும் பாண்டியனும் வந்தார்கள் வள்ளி கொடுத்த ஆயிரம் ரூபாயில் அறுநூற்றி எழுபத்தி மூன்று ரூபாய் செலவானது போக மீதி இந்தாம்மா என்று பெரியவர் கொடுத்தார்.

வள்ளி வாங்கவில்லை. "ஐயா நீங்க யாரோ தெரியலே. என் தகப்பன் மாதிரி. ஏழாம் நாளோ.. ஒன்பதாம் நாளோ... அந்த சடங்கையும் முடிச்சிடுங்க ஐயா... ஏங்கிட்ட ஐநூறு ரூபாய் இருக்குது தர்றேன்!" என்று அழுதாள்.

அந்த சடங்கும் முடிந்தது. குடிசைவாசிகள் அன்று யாரும் வேலைக்குப் போகவில்லை. எல்லோருக்கும் சாப்பாடு போடச் சொன்னாள் வள்ளி. அமங்கலமானாள் வள்ளி.

எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டு பங்களாவுக்குக் கிளம்பினாள். பாண்டியன் சிறிது தூரம் சென்றான்.

"அண்ணே.... அண்ணிக்கு குழந்தை பிறந்ததும் நீங்க ஊருக்குப்போகும்போது என் வீட்டு சாவி தர்றேன்... அந்த ரிக்ஷாவை யாரிடமாவது வித்துடுங்க... இனிமேல் என் காலம் அந்த பங்களாவோடத்தான். வீடு மட்டும் இருக்கட்டும் அங்கே வேலை இல்லைன்னு ஆனா குந்த குடிசை வேணுமே அண்ணா" அழுதாள் வள்ளி.

"வள்ளி எனக்கு இங்கு இருக்க இஷ்டமில்லை. நானும் ஊரோட போயிடலாம்னு இருக்கேன். நானே ரிக்ஷாவை எடுத்துக்கிறேன். நியாயமா என்ன விலை போகுதோ அந்த விலை கொடுத்துடறேன்". என்றான் பாண்டியன்.

"அண்ணே... உங்களுக்கு அங்கு வீடு இல்லை.... எனக்குத் தெரியும் நீங்க என் வீட்டிலேயே இருங்க... வாடகை ஏதும் வேணாம். வீட்டிலே விளக்கேத்தி வச்சா போதும்... ரிக்ஷாவை கூட நீங்கள் எடுத்துகுங்க... பணம் ஏதும் வேணாம்... வீடு கூரை பிஞ்சு போய் இருந்தது, அதை சீர் செய்து கொடுங்க... கெட்டு நொந்து நான் அங்கு அண்ணன் வீடுண்ணு வரேன்... அழுதாள் வள்ளி..." பாண்டியனும் கண்கலங்கினான்.

வள்ளி கூடவே பாண்டியன் போனான்... வீட்டி சாவியை வள்ளி கொடுத்தாள்... அண்ணே... நான் மாத்தி பேசறவ இல்லை... இனிமே அது உன் வீடு.... நான் சொன்ன மாதிரி செய்யுங்க... அன்னிக்கு குழந்தை பொறந்தா லெட்டர் போடு நான் அங்கு வந்து பார்த்துட்டு வரேன். என்றாள் வள்ளி விலாசத்தை அவள் சொல்ல அவன் எழுதிக்கொண்டு, பாண்டியன் வள்ளியிடம் விடை பெற்று சென்றான்.

பழைய கலகலப்பு வள்ளியிடமிருந்து தொலைந்தே போனது... கணவன் இல்லா வெறுமை அவளை இரவு நேரத்தில் வாட்டியது. இருபத்தி ஆறு வயது வள்ளிக்கு. சொர்ணத்தின் வற்புறுத்தலால் நெற்றியில் சாந்து பொட்டு வைத்துக் கொண்டாள். பார்ப்பவர்கள் அவளை திருமணமாகாதவள் என்றே நினைக்கத் தோன்றியது.

சொர்ணம் அவளை, இனிமேல் தனியாகப் போய் அந்த வீட்டில் இருக்க வேண்டாம்... இங்கேயே இருந்திடு வள்ளி என்றாள் சொர்ணம். ஆனால் வள்ளி, அந்த வீட்டில் இருந்தால்தான் எனக்கு நல்லது... காலையிலேயே எழுந்து வந்து விடுவேன் இங்கு படுத்தால் தூங்கிவிடுவேன் அம்மா என்றாள்.

ஓராண்டு கழிந்தது. இடையில் சொந்த ஊருக்குச் சென்று வந்தாள். வீட்டை பழுது பார்த்து சுத்தமாக வைத்திருப்பதைக் கண்டு வள்ளி மகிழ்ந்தாள். பாண்டியன் ரிக்ஷாவுக்கு ஒரு விலை போட்டு பழுது பார்த்த செலவு போக மீதி நானூற்றி அறுபது ரூபாயை வள்ளியிடம் கொடுத்தான். வள்ளி வாங்க மறுத்துவிட்டாள்.

"அன்னிக்கு எங்க வூட்டுக்காரரை நி தூக்கிக்கினு உன் வூட்டலை படுக்கவைக்கலைன்னா காணா பிணமா போயிருப்பாரு அண்ணே... உன்னை காசா கேட்டேன். வச்சிக்க அண்ணே..." என்று கூறிவிட்டு குழந்தை கையில் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு தாம்பரம் வந்து சேர்ந்தாள்.

கனிமொழியும், இன்சுவையும் வள்ளியிடம் ஒட்டிக் கொண்டார்கள்... உலகநாதன் வழக்கம்போல் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார். அதுவரை வள்ளி அங்கேயே இருப்பாள். ஐயா வந்த பிறகுதான் தன் இருப்பிடம் செல்வாள்.

பகலில் அந்த இளைஞன் வருவான். இருவரும் கும்மாளம் போட்டுக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. இதுதான் உலகம் என்று நியாயப்படுத்தியது மனம். மனைவியையும், குடும்பத்தையும் கவனிக்காமல் சம்பாதிப்பதில் மட்டுமே வெறியாக உள்ள கணவன் உலகநாதன்... மனைவியின் உணர்வை புரிந்து கொள்ளாதவர். எப்படியோ அந்த இளைஞனுடன் உறவு ஏற்பட்டு அது நீடித்தது.

கணவன் இல்லா வெறுமை அவளை இரவு நேரத்தில் வாட்டியது. ஒரு நாள் சொர்ணம் இவள் இருக்கும் வீட்டிற்கு வந்தாள். ஆச்சரியப்பட்ட வள்ளி உட்கார பாயை விரித்து போட்டாள். சொர்ணம் உட்கார்ந்தாள்.

"வள்ளி... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே... உன் வீட்டுக்காரன் போய் பதினெட்டு மாதங்கள் போய்விட்டன உனக்கு இருபத்தி எட்டு வயசுதான் ஆவுது... நீ மறு கல்யாணம் பண்ணிக்ணும்"

"அம்மா என்னம்மா சொல்றீங்க... எங்க ஊரிலே அறுத்தா அறுத்ததுதான்... அப்புறம் தாலியே கழுத்தில் ஏறாது... எங்க ஊர் பக்கம் போனா வெட்டிப் போட்டுடுவாங்கம்மா... எனக்கு அந்த ஆசையெல்லாம் கெடையாதும்மா.. என் ஆயுள் பூறா உங்களுக்கு உழைச்சிட்டு போறேம்மா.... செத்தா பள்ளந்தோண்டி மண்ணிலே புதைச்சுடுங்கம்மா...." என்று சொல்லிக்கொண்டே அழுதாள் வள்ளி.

"வள்ளி நீ உணர்ச்சி வசப்படறே... நீ நான் சொன்னதை நல்லா யோசிச்சி பாரு.... நான் நல்லதுக்குத்தான் சொல்வேன். என்னதான் நாங்க பாலும் சோறும், பணமும் கொடுத்தாலும் உன் மடியில் சாய ஒரு ஆள் அவசியம் வேணும் வள்ளி.... உன் கண்ணீரைத் துடைக்க ஒரு ஆள் அவசியம் வேணும் வள்ளி..." என்று சொல்லிவிட்டு சென்றாள் சொர்ணம்.

வள்ளியின் எண்ணங்கள் அலைபாய்ந்தன. தெளிந்த நீரோடையாக இருந்த அவள் மனதில் கல் எறிந்து குழப்பிவிட்டுவிட்டு சொர்ணம் போய்விட்டாள்.

இரவெல்லாம் மனப்போராட்டம்.... வள்ளி எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. விடிய இரண்டு மணித்துளிகள் இருக்கும்போதுதான் வள்ளி கண்ணயர்ந்தாள்.

வழக்கம் போல் தன் கடமைகளை குறைவின்றி செய்து வந்தாள் வள்ளி. அன்று கேட்டதற்குப்பிறகு சொர்ணம் வள்ளியை மறுமணம் பற்றி கேட்கவில்லை.

ஒரு நாள் பெரம்பூரில் நடைபெறும் ஒரு உறவின் திருமணத்திற்கு உலகநாதனும், சொர்ணமும் முதல்நாள் மாலையே சென்று விட்டார்கள். குழந்தைகள் இருவரும் வள்ளியிடமே விட்டுவிட்டுச் சென்றனர். அன்றிரவு வள்ளி பங்களாவில் கனிமொழி, இன்சுவையுடன் படுத்து உறங்கிவிட்டாள்.

காலையில் எழுந்து நேரத்தோடு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு சமையல் அறைக்கு வெளியே உட்கார்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வள்ளி.

தோட்டக்காரன் முத்து வந்தான். ஒரு கூடையில் அவரைக்காய்களுடன் எடுத்து வந்து வள்ளியிடம் கொடுத்தான் திடீரென்று அவன் வரவே அவளுக்கு வியர்த்து கொட்டியது.

இவன் இவளோடு தனிமையில் பேசியதே இல்லை. அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவனும் இல்லை. அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். ஏதாவது பேச வேண்டுமே என்று எண்ணி

"சாப்பிடுகிறாயா? இட்லி இருக்கிறது" என்றாள் வள்ளி.

"இல்லை... சாப்பிட்டுவிட்டேன்... உன்... உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் கோபித்துக் கொள்ள மாட்டாயே" என்றான் முத்து.

கண்விரித்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள் வள்ளி.

"அன்னைக்கு வீட்டுக்காரம்மா கேட்டாங்களே... நீங்க என்ன முடிவு பண்ணி வச்சிருக்கீங்க".

திடுக்கிட்டாள் வள்ளி. முகத்தில் வேதனை மண்டிக்கிடந்தது. இனம் புரியாத பயத்தில் கண்ணீர் முட்டி நின்றது. மனம் அறுபட்ட அரணையின் வால் போல் துடித்தது.

ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. மௌனமாக குனிந்திருந்தாள் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

மீண்டும் முத்துவே பேசினான்

"வீட்டுக்கார அம்மா என்னை ஒரு நாள் கூப்பிட்டு பேசினாங்க. அப்புறம்தான் உங்ககிட்டே கேட்டாங்க. உனக்கு இஷ்டமில்லைன்னா வேணாம். நேத்து மறுபடியும் கூப்பிட்டு நீயே கேள்னு சொல்லிட்டு போனாங்க. உன் குணமும், அமைதியும் எனக்கு பிடிச்சிருக்கு. நான் பட்டப்படிப்பு படித்தவன். இன்டர்வியூவுக்கு போய் வந்து கொண்டுதான் இருக்கேன். நான் காலேஜ் வரை படித்தவன் என்பது ஐயாவுக்கோ அம்மாவுக்கோ தெரியாது. நான் சொல்லலே. உன்னைக் கண்கலங்காம வைச்சிருப்பேன். எனக்கு யாருமில்லை.. உனக்கும் யாருமில்லை..." என்று அவன் மழையில் நனைந்த தாவரங்கள் சொட்டு சொட்டாய்ச் சொட்டுவது மாதிரி விட்டு விட்டு பேசினான். அவள் வாய் திறந்து பதில் ஏதும் சொல்லவில்லை ஆனால் கண்களில் கருவிழியே தெரியாத மாதிரி நீர் மறைத்துக் கொண்டது. எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள். முத்து போய் விட்டான் வள்ளிக்கு சில்லென்று நதியின் நீர் தேகமெங்கும் பரவுவது போல் இருந்தது.

ஒரு வாரம் கழிந்தது. முத்து வள்ளியை வந்து பார்க்கவில்லை. அவன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். ஒருநாள் வள்ளி குழந்தைகள் கனிமொழிக்கும் இன்சுவைக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு பங்களாவிற்கு வந்தாள். அப்போது வழக்கத்திற்கு மாறாக முத்து பங்களாவிற்கு வந்து இருந்தான். அவன் முகத்தில் மத்தாப்பு சிரிப்பு தெரிந்தது.

கையில் ஒரு கவருடன் நின்றிருந்தான்.

அவனிடம் பேச வள்ளிக்கு வெட்கமாக இருந்தது. உள்ளே சென்றாள். அவனும் பின்னால் சென்றான். வீட்டில் யாரும் இல்லை... சொர்ணம் முத்துவிடம் சொல்லிவிட்டு தொழிற்சாலை சென்று விட்டாள்.

"வள்ளி... உன் முடிவை... இன்னும் சொல்லவில்லையே...." என்றான்.

"கையில் என்ன கவர்... அம்மாவிடம் கொடுக்கணுமா!"

"இல்லை உன்னிடம் தான் கொடுக்கணும்".

"என்னிடமா"

"ஆமாம் வள்ளி... எனக்கு வேலை கிடைத்துவிட்டது, மாம்பலம் ஸ்டேட் பேங்கில்தான்..... நாளைக்கே வேலையில் சேர வேண்டும்.... இதுதான் அந்த உத்தரவு..." என்று முத்து கூறியபடி அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை பூஜை அறையில் சுவாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டாள். பிறகு அங்கிருந்த குங்குமச் சிமிழை எடுத்து அவனிடத்தில் கொடுத்தாள். அவன் மகழ்ச்சியுடன் அவள் நெற்றியில் குங்குமத்தை இட்டான். அவள் தடுக்கவில்லை.

நல்லது நடைபெறுவதற்கு நேரம் காலம் ஏது?

கடைவீதி வரை போய் உடனே வந்துவிடலாம் என்று முத்து கூறினான். அவனுடனேயே சென்றாள். ஆட்டோவில் கடைவீதி வந்தனர். இரண்டு மாலைகள் வாங்கினான். நகைக் கடைக்குச் சென்றான். அரை பவுனில் தாலி ஒன்று வாங்கினான். அங்கேயே மஞ்சள் கயறும் கேட்டு வாங்கினான். துணிக்கடைக்குப் போனான் இருவருக்கும் புதிய துணி வாங்கினான். ஆட்டோவில் வீடு திரும்பினார்கள். எல்லாவற்றையும் பூஜை அறையில் வைத்தார்கள்.

இவையாவும் கனவு போல் தென்பட்டது வள்ளிக்கு. "வள்ளி இன்னும் வாயைத்திறந்து பதில் சொல்லலியே?" என்றான் முத்து.

கண்ணிறைந்த நீரோடு அழுகை கலந்து பேசினாள் வள்ளி.

"என் முதல் கல்யாணம் ஒரு விபத்து போல் நடந்து முடிந்து போச்சி. நான் விதவைன்னு தெரிஞ்சும் உங்களுக்கு நல்ல வேலை கெடச்ச பின்னாலையும் என்னையே மனைவியா ஏத்துக்க நீங்க முடிவு செய்த பிறகு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே". என்று சொல்லியபடி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள். அவளைத் தொட்டு தூக்கினான். அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான் முத்து.

சொர்ணம் கூறிச்சென்றபடி தொலைபேசியில் முத்து தொழிற்சாலையிலிருந்த சொர்ணத்திடம் வள்ளியின் முடிவைக் கூறினான். மகிழ்ச்சியுடன் இருவரும் உடனே புறப்பட்டு வருவதாகக் கூறினாள். அவர்கள் வருவதற்குள் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தனர். வள்ளி பட்டு சேலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.

உலகநாதனும் சொர்ணமும் காரில் மகிழ்ச்சியுடன் இறங்கி வந்தார்கள். இந்த நேரத்தில் இருவரையும் ஒரு சேரக் கண்ட வள்ளி இப்படி அன்பைப் பொழியும் கணவனுக்குத் துரோகம் செய்கிறாளே என்று எண்ணினாள்.

கைகால்கள் கழுவிக்கொண்டு பூஜை அறைக்குள் அவர்கள் இருவரும் வந்தனர். மாலைகளை எடுத்து அவரவர்கள் கையில் உலகநாதன் கொடுத்தார்.

"உம் முத்து நீ வள்ளி கழுத்தில் போடு" என்றாள் சொர்ணம்

"அவ்வாறே செய்தான் முத்து".

"உம் வள்ளி நீ கழுத்தில் போடு என்றாள்" சொர்ணம் அவ்வாறே செய்தாள் வள்ளி

மாங்கல்யத்தில் பொட்டிட்டு உலகநாதனும் சொர்ணமும் முத்துவிடம் கொடுத்தார்கள். அவன் வள்ளி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சி போட்டான். இருவரும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் வாழ்த்தினார்கள்.

சொர்ணம் இருவருக்கும் இனிப்பு வழங்கினாள். கனிமொழியும், இன்சுவையும் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். வள்ளி அருகில் வந்து நின்றுகொண்டார்கள்.

"ஐயா.... ஒரு மகிழ்ச்சியான செய்தி..." என்றான் முத்து.

"முத்து... இதைவிடவா மகிழ்ச்சியான செய்தி... என்ன?" என்றார்.

"இதைவிட இல்லைங்க. இதுவும் ஒரு மகிழ்ச்சியான செய்தி"

"என்ன முத்து புதிர் போடுகிறாய்? என்றாள் சொர்ணம்."

"எனக்கு மாம்பலம் ஸ்டேட் பேங்கில வேலை கிடைத்துள்ளது என்று நியமன உத்திரவை அவரிடம் கொடுத்தான்."

"நீ எம்.எஸ்.சி. அக்ரி படிச்சவனா... எங்களிடம் சொல்லாமல் தோட்டக்காரனாக மூன்று வருஷம் இருந்தியே.... உன்னைப் பாராட்டுகிறேன்" என்றார் உலகநாதன்.

சொர்ணம் வியப்புடன் "முத்து... வள்ளி வந்த வேளை உனக்கு வேலை கிடைத்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு" என்றாள் சொர்ணம்.

"ஐயா.... அம்மா... எனக்கு வேலை கிடைச்சாலும் எங்களை நீங்கள் தான் ஆதரிச்சீங்க. நான் தோட்டக்காரனாக காலையிலும் மாலையிலும் தொடர்ந்து வேலை செய்வேன். அதே போல் வள்ளியும் எப்பவும்போல் உங்களுக்குத் துணையாக இருப்பாள். நாங்கள் அந்த அவுட் ஹவுசில் குடி இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூற" உலகநாதனும் சொர்ணமும் மகிழ்ந்தார்கள்.

"எங்கே நீங்க போய் விடுவீர்களோ என்று சொர்ணம் பயந்தாள். இனிமேல் நீங்கள் இருவரும் இங்கே இருக்கலாம் என்று உலகநாதன் சொல்லிவிட்டு உங்களுக்கு ஏதாவது பரிசு தரவேண்டுமே... நீயும் வருகிறாயா சொர்ணம் என்றார். நீங்கள் போய் சீக்கிரம் வாங்க என்றாள் சொர்ணம்".

நாங்கள் வருகிறோம் என்று கனிமொழியும், இன்சுவையும் உலகநாதனுடன் காரில் கடைக்குச் சென்றனர். முத்துவையும் அவர் அழைத்துச் சென்றார். அவர்கள் காரில் சென்ற பிறகு,

"என்ன வள்ளி, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னே. வெட்டி பிடுவாங்கன்னு சொன்னே... அந்த ஆசையெல்லாம் கெடையாதுன்னு சொன்னே... கடைசியிலே முத்துக்குமாரனையே கல்யாணம் பண்ணிகிட்டே... கற்பு அது இதுன்னு என்னமோ சொன்னியே என்றாள் சொர்ணம்".

"அம்மா, என்னிடம் அவரை கேட்கச் சொன்னதே நீங்கதான்னு தெரிஞ்சப்புறம்தான்.... என் உறுதி குலைஞ்சி போச்சி.... எனக்கும் எதிர்காலத்தை நினைக்கும்போது பயமா இருந்துச்சிம்மா என்றாள் வள்ளி".

"உம்.... பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசமா பண்ணிட்டே வள்ளி..."

இதை சொர்ணம் சொல்லியதும் வள்ளியின் மனதில் ஒரு வேகம் உண்டாயிற்று.... சொர்ணத்தை எப்படியாவது சிந்திக்க வைத்து திருத்த வேண்டும்.... இது ஒரு முயற்சியே... என்று எண்ணியபடி...

"அம்மா... கணவன் உயிரோடு இருக்கும்போது இன்னொருத்தன் மேல் ஆசைப்படறதுதான் துரோகம். என் கணவர் செத்துப்போய் இரண்டு வருஷமாயிட்டுது... ஆனா இன்னொருத்தரை கட்டிகிட்டு அவருக்கு துரோகம் பண்ணாம வாழறதுதான்மா உண்மையான கற்பு" என்று சொல்லிக்கொண்டே சொர்ணத்தை ஊடுருவியபடி வள்ளி பார்த்தாள். வள்ளியை நேருக்கு நேர் அவளால் பார்க்க முடியவில்லை.

சொர்ணத்தின் முகம் மாறிவிட்டது. அவளிடமிருந்த கலகலப்பு காணாமற்போனது. அவள் மனச்சான்று அவளைச் சுட்டது. ஒரு சாதாரண கிராமத்து பெண், கல்வி அறிவு இல்லாதவள் கற்பு என்பதற்கு எவ்வளவு உயர்வான விளக்கத்தைக் கொடுத்துவிட்டாளே! என்று சொர்ணம் எண்ணினாள்.

கடைவீதிக்கு சென்ற உலகநாதனும் மற்றவர்களும் வந்தனர்.

இருவருக்கு புத்தாடை வழங்கினார் உலகநாதன். சொர்ணம் செயற்கையாக மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு இருவரையும் வாழ்த்தினாள். உடனே தொழிற்சாலைக்கு உலகநாதன் கிளம்பிவிட்டார். வள்ளியும் முத்துவும் மீண்டும் வணங்கி நின்றார்கள்.

மறுநாள் முத்து பணியில் சேர மகிழ்ச்சியுடன் சென்றான். உலகநாதனும் சென்றுவிட்டார். எப்போதும் போல் வள்ளி தன் கடமையைச் செய்து கொண்டிருந்தாள். சொர்ணம் தொலைபேசி மூலமாக பேசியது வள்ளிக்குத் தெளிவாகக் கேட்டது. யார் பேசறது.... ஆனந்த்.... இனிமேல் நாம எங்கேயும் சந்திக்கக் கூடாது. என் புத்தி பேதலித்து அவருக்கு துரோகம் பண்ணிட்டேன்.. (அழுகிறாள்)... ப்ளீஸ் இனிமே, என் வீட்டு பக்கமே வரக்கூடாது. கனவாய் நினைத்து மறந்துவிடுவோம்.... முடியாது ஆனந்த் முடியாது.... அழகு நிலையம் வரவே கூடாது... எங்கேயாகிலும் தற்செயலாய் பார்த்தாலும் என்னிடம் பேசவே கூடாது... ஆமாம்.... ஆனந்த்..... காரணம் கேட்க வேண்டாம்... குட்பை (சொர்ணம் அழுதாள்)

வள்ளி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link