சிறுகதைகள்


ஊனம்

கூடல்.காம்
அவனுக்கு இப்போது எழுபது வயது ஆகியிருக்கலாம். அவன் எனக்கு அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருந்தான். எத்தனை வருஷங்கள் அவனோடு எனக்குப் பழக்கமிருந்தது என்பது மறந்துவிட்டது. அவனும் நானும் ஒன்றாகப் படித்தோம். ஒரு வகுப்பிலா; இரண்டு வகுப்பிலா அல்லது அதற்கும் மேலா என்பதெல்லாம் ஒன்றும் எனக்குத் தெளிவாக ஞாபகம் இல்லை. நான் எங்கள் அக்ரஹாரத்து மனையில் பெரிய இலுப்பை மரத்துடன் இருந்த பள்ளிக்கூடத்திலும் கொஞ்சம் படித்திருக்கிறேன். அதில் அவன் படிக்கவில்லை.

அந்த இலுப்பை மரம் பூக்கும் பருவத்தில் இலுப்பைப் பூவின் இனிக்கும் மணத்தை தெருவெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும். காய்த்துப் பழுத்து தித்திக்கும் வாசனையையும் பரப்பிக் கொண்டிருக்கும். வெளவால்கள் இரவில் அங்கு இழுக்கப்பட்டு இலுப்பைப் பழத்தை அடித்துக் கொட்டைகளை எல்லார் வீட்டுக் கொல்லைகளிலும் போட்டு வைக்கும். அவற்றை நாங்கள் பொறுக்கிச் சேமித்துக் கடைகளில் கொடுத்து வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டு மேலும் பணமும் வாங்கி வைத்துக்கொண்டு மிகுந்த உற்சாகத்தில் இருப்போம். இதெல்லாம் நினைவில் இருக்கிறது. இலுப்பைக் கொட்டைகளைச் சேமித்து பத்தாயத்துக்கு அடியில் மரக்காலில் வைத்திருந்ததுகூட நினைவில் இருக்கிறது. இந்த அற்புதங்களில் அவன் இருந்ததில்லை. அவன் கிடாரங்கொண்டான் அக்ரஹாரத்தில் இருந்தான். அங்கு எப்படியிருந்தான் என்பதெல்லாம் எனக்கு அறிமுகமாகியிருக்கும்படி அவனோடு எனக்குப் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் அவன் என் நினைவில் இருப்பதைப்போல புஞ்சை பள்ளிக்கூடம் கூட என் நினைவைத் தேடி வருவதில்லை. இன்னும் அதிகமாக வடுவத் தெரு பள்ளிக்கூடத்திலும் படித்திருக்கிறேன். சத்திரத்தார் வீட்டுத் திருப்பத்தைத் தாண்டி செம்பனார் கோயிலிருந்து வரும் சாலை இந்தப் பள்ளிக் கூடத்து முனையில்தான் திரும்புகிறது. திரும்பி மேலத் தெருவைக் கடந்து வடுவத் தெரு மாரியம்மன் கோயிலையும் ஐயனார் கோயிலையும் சந்தித்து கிழக்கே திரும்பிப் போகிறது. அதன் வண்டிச் சோடைகளில் நாங்கள் நடந்தும் ஓடியும் உழுதும் புழுதியைக் கிளப்பி அதற்குப் பெரிய சிறப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இதை உண்டாக்கியதில் அவன் பங்கு கொண்டதில்லை. இன்றும், கிடாரங்கொண்டான் பள்ளிக்கூடத்தில் எங்களோடு யார் யார் படித்தார்கள் என்பதும் என் நினைவில் இல்லை. அவன் மட்டுமே என் நினைவில் இருக்கிறான்.

ஒரு மனநல மருத்துவன் காரணமாகவே அவன் என் நினைவுக்குக் கொண்டுவரப்பட்டான். என்னுடைய பிரச்சனைக்கு அவனும் ஒரு காரணமாக இருந்திருப்பானோ என்னவோ என்றுதான் அவனை என் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

மனிதன் மிருகங்களைப்போல அல்ல, அல்லது பறவைகளைப் போலவும் அல்ல. வேண்டியபோது இருக்கும் இடத்தில் சாணிபோட்டு விடுகின்றன மாடுகள். கிளைகளில் உட்கார்ந்து கொண்டு எச்சமிட்டு விடுகின்றன பறவைகள். இப்படிப்பட்ட வசதியில்லாமல் இருக்கிறான் மனிதன் என்ற கவலை எனக்கு எப்போது வந்ததென்று தெரியவில்லை. அதற்கு அவன் காரணமாகியிருப்பானோ என்று இப்போது சந்தேகப்படுகிறேன். வெளியில் கிளம்பு முன் வயிற்றைக் காலி பண்ணிக் கொண்டுதான் கிளம்ப வேண்டும் என்ற பயத்தோடேயே எப்போதும் இருக்கத் தலைப்பட்டு விட்டேன். வெளிக்கிருப்பதற்கு எங்கும் வெளிகளைக் கொண்ட கிராமத்திலிருந்து பிடுங்கி நகரத்தில் எறியப்பட்ட பயம் கொண்ட ஒரு தாவரவகை, இங்கு வேறூன்றி நிலைப்பதற்கு இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறது என்பது போலக் கற்பனை பண்ணிக்கொள்ளலாம். பேதிக்குக் குடித்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை போவதுதான் நினைவுக்கு வருகிறது. கிளம்புவதற்கு முன் ஒருமுறை போய்விட்டு வந்தாலும் வருவதைப் போன்ற உணர்ச்சி மட்டும் இருந்து கொண்டிருக்கிறது. கிளம்பும்போதும் உடைகளைக் களைந்துவிட்டு மீண்டும் ஒருமுறை போய்விட்டு வந்துதான் கிளம்புவேன். மீண்டும் ஒருமுறை போய்விட்டு வரவேண்டியிருக்கலாம் என்ற பயத்தோடேயே மீண்டும் இருக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளாக எங்கள் எல்லோர் முன்னும் அவமானப்பட்ட அவனைப்போல, என்னையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றிக் கொண்டிருக்கிறது. போன பின்னரும் போய்க் கொண்டிருக்கும் போதும் இப்போது இப்போது இப்போது என்ற பயத்தோடேயே, பலருக்கும் இடையில் தனியனாக உள்ளுக்குள் பயம் சூழ்ந்து, திடீர் திடீரென்று பயம் வெடித்து இப்படித்தான் அமீபியாஸிஸிக்காக ஒருமுறை காப்ஷ்யூல்கள் சாப்பிட்டபோது, அவை இரைப்பையில் வெடித்தன. அதிர்ச்சி அலைகள் உடலெங்கும் ஓடிப் பின் தணிகிறது. அப்படியொன்றும் எங்கும் அவமானப்பட்டுப் போய்விடவில்லை. கிளம்பும் நேரத்திலிருந்து வீடு திரும்பும் வரை அதே பீதியோடு, அவமானப்பட எப்போதும் காத்திருத்தல்.

தகப்பன் இல்லாத பிள்ளையென்று மிகக் கவனமாக என்னை வளர்த்தார்கள். அதேபோல் அவனையும் வளத்திருக்கக் கூடும். அவனுடைய அப்பாவின் இரண்டு கைகளும் முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரை பட்டையாக இருந்தன. பொம்மையின் கைகள் அசைவது போல அவை அசைந்தன. இதனால் அவர் முகத் தோற்றம் கூட ஒரு பொம்மையின் முகத்தைப்போல பாவம் ஒன்றாகவே இருந்தபோதிலும் அதில் இதர பாவங்களைப் பார்ப்பவர்களே கற்பித்துக் கொள்வார்கள் போலும் இருந்தது. கற்பித்துக் கொள்வது என்று உண்டான பிறகு அதீதாமாகக் கற்பித்துக் கற்பித்து அவர் மிகவும் வேறுபட்டவராக விநோதமான முகபாவங்களைக் கொண்டவராகத் தோன்றத் தொடங்கிவிட்டார் போலும் இருந்தார். அவருடைய நடைகூட ஒரு பொம்மையின் நடையைப் போலவே கற்பித்துக் கொள்ளத் தோன்றிவிட்டது. உண்மையில் அவர் சாதாரணமாகவே நடந்தார் என்றாலும், அது சாதாரணமாகத் தோன்றுவதிலிருந்து மாறிப்போய் விட்டது. இதன் காரணமாகத்தான் பீதியில் பலர்முன் கழிய நேர்ந்திருக்கிறது அவனுக்கு. எனக்கு மாதத்திற்கு ஒருமுறை பேதிக்குக் கொடுத்து விடுவார்கள். வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணை தேய்த்துக் குளியல். காலையில் வெறும் வயிற்றில் விளக்கெண்ணையை காபியில் கலந்தோ, இல்லை கடுக்காய் கஷாயத்தில் கலந்தோ கொடுப்பார்கள். ஆறுமுறை போனபிறகே குடிக்கக் காபி கொடுப்பார்கள். அதுவும் மேலும் மலத்தை இளக்கும் என்பதால் கொடுப்பார்கள். வீட்டுக்கும் கொல்லைக்கும் ஓடிக் கொண்டிருப்பேன். வீட்டுக்குள்ளிருந்து ஓடி கொல்லையில் போய் உட்காருவதற்கு முன் ஆடையில் இழுக்கிவிடும். அப்படி இழுக்கி விடும் என்ற எண்ணத்தோடேயே முழு ஆளுமை பெற்று மனிதனாக ஆனபின்னரும் இருப்பதென்பது என்ன கேவலம்? விளக்கெண்ணெய் கொடுத்துக் கொடுத்து குடல் இளகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இளகியகுடல், கல்குடல் என்றெல்லாம் பேச்சு வழக்கில் இருக்கிறதில்லையா?

எத்தனை முறை மருத்துவரிடம் போவது? குணப்படுத்தும் அளவுக்கு உண்மையைச் சொல்லத் தெரியாத அபத்தமும் இதில் இருந்திருக்கிறது. மேலும், நம் நோயை மருத்துவரே கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதில்லையா? அந்த அச்சமும் என்னிடம் இருந்திருக்கிறது. நாடியைப் பிடித்துப் பார்த்து நோயைச் சொல்ல வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் என்னென்னவென்று சொல்லி அது இன்னதுதான் என்று கண்டுபிடிக்க மருத்துவருக்கு என்னால் உதவத் தெரியவில்லை. அவனைப் பற்றிய நினைப்பு ஒன்றும் அப்போது என்னிடம் இல்லை. இது மனப்பிரச்சனையாக இருக்கக்கூடும் என்பதே எனக்குத் தோன்றவில்லை. அது உடற்கூறு சம்பந்தப்பட்ட ஒரு நோயாகவே எனக்குத் தோன்றிற்று. ஆசனவாய்த் தசைகள் சுருங்கி மலத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிட்டன என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் பொதுமருத்துவரே குணப்படுத்திவிடுவார் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லையல்லவா? அமீபியாஸிஸ் என்று மருந்து சாப்பிட்டு அதற்காகவும் உள்ளுக்கும் கொல்லைக்கும் உள்ளுக்கும் கொல்லைக்கும் பலமுறை ஓடிக்கொண்டிருந்திருக்கிறேன். உள்ளுக்கும் கொல்லைக்கும் உள்ளுக்கும் கொல்லைக்கும் என்று சொல்லக்கூடாது. அப்போது நான் மாடியில் குடியிருந்தேன். கழிப்பிடம் கீழே இருந்தது. மாடிக்கும் கீழுக்கும் மாடிக்கும் கீழுக்கும் என்று சொல்ல வேண்டும். கீழே வேறு ஆட்கள் குடியிருந்தபடியால் கழிப்பிடம் உபயோகத்தில் இருந்து ஆடையில் இழுக்கிக் கொண்ட பழைய அனுபவம் மீண்டும் தொடர்ந்திருக்கிறது. பலவிதமான முறைகளில் அமீபியாஸிஸை ஒழிப்பதற்கு மருத்துவம் பார்க்கப்பட்டிருக்கிறது. மலப் பரிசோதனையின் மூலம் அமீபியாஸிஸைக் கண்டுபிடிப்பது கஷ்டமென்று சொல்லியிருக்கிறார்கள். அது என் மனப்பிரச்சனையாக இருக்கும்போது அதை எப்படிக் கண்டுபிடிப்பது? மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஆசனவாய் வழியாக உபகரணங்களை உள்ளே செலுத்தி குடலின் உட்பகுதியை பார்த்தபோது அமீபியாஸிஸால் உண்டான வடுக்கள் இருப்பதாகத் தெரிய வந்தது. அதுவும் இடையில் சேர்ந்து கொண்டிருந்தது போலும், இது ஒரு மனநலப் பிரச்சனை எனில் அது மனம் உண்டாக்கிய வடுக்களாகவும் அல்லது உடற்கூறு பிரச்சனையாக அமீபியாஸிஸ் உண்டாக்கிய வடுக்களாகவும் இருந்திருக்கக்கூடும். அப்போது பொது மருத்துவர் அதிக சக்திவாய்ந்ததல்லாத டிராங்குலைஸரைக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆண்டுக்கணக்கில் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஊனத்துடன் வாழும் மனிதனைப் போன்று அதோடு வாழத் தலைப்பட்டு விட்டேன். எந்தப் புதிய இடத்துக்கும் போவதற்கு பயம் உண்டாயிற்று. திடீர் திடீர் என்று அதிர்ச்சிகளால் தாக்கப்பட்டேன். இப்படி ஒரு பிரச்சனை எனக்கு இருக்கிறது என்று சொல்வதற்கு வெட்கப்பட்டு எழுந்து நடமாட முடியாத இடுப்பு வலியால் தாக்கப்பட்டு விட்டேன் என்று காட்டிக் கொள்ள முனைந்து போலும் ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையானேன். அப்போதெல்லாம் அவன் நினைவுகள் இல்லை. ஆனால் இடுப்பு வலிக்கு உண்மையான உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தது. அது அடிக்கடி வெளிக்கிப்போகும் என் பிரச்சனையை மறைப்பதற்காகக் கற்பித்துக் கொண்ட ஒரு சிக்கல் அல்ல. அப்படித்தான் அது அப்போது எலும்பியல் மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டது. அப்படித்தான் இதுதான் என்று குறிப்பிட்டு நோயைக் குணப்படுத்திக் கொள்ளாமல் ஒத்திப்போட்டுக் கொண்டு போகப் போக அர்த்தமற்ற பெரிய கவலைகளால் மனம் பீடிக்கப் பட்டது.

மனநல மருத்துவரிடம் நான் போனபோது, அவன் தந்தையை ஒத்த ஒரு தோற்றத்திற்கு மாறி விட்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். இடுப்பு வலியுடன் எழுந்து முழு மனிதனாக நடமாடுவதற்கு எனக்கு வெளி உதவி தேவையாக இருந்தது. இடுப்பிலிருந்து தொடங்கி முழு முதுகெலும்பையும் தாங்கிக் கொண்டு தோள்ப்பட்டைகளில் சென்று முடியும் ஒரு முழு கவசத்தை சட்டைக்கு உள்ளே அணிந்து கொண்டு ஒரு பொம்மையைப் போல முழு உடம்பையும் திருப்பித்தான் பார்க்க முடியும் என்ற ஒரு தோற்றத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன். மனநல மருத்துவர் என் முதுகுப் பட்டையைக் கழட்டச் சொல்லவில்லை. இடுப்பு எலும்புகள் பலவீனப்பட்டு அவற்றுக்கு பலம் கொடுக்க இந்த முதுகுப்பட்டை வேண்டியதுதான் என்பதை அவரும் ஒத்துக்கொண்டார்.

உடல்பலப்படும்போது மனமும் பலப்படும் என்று, அவர் எண்ணினாரோ என்னவோ? அப்போது உண்டான சிகிச்சை முறைகளால் தான் மனதில் பயத்தைத் தோற்றுவிக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றை நிவர்த்திக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போதுதான் இவனுடைய அந்த நிகழ்ச்சி என்னை பாதித்திருக்குமோ என்று அதையும் ஒன்றாக தியானத்தை ஒத்த என் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து அவன் என் நினைவுக்கு வந்துவிட்டான். அப்படி ஒருவன் என் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறான் என்ற நினைப்பே இல்லாத ஒரு நிலையிலிருந்து அவன் என் நினைவுக்கு வந்திருக்கிறான். அவன் என் மனதில் எங்கோ இத்தனை நாட்கள் கிடந்திருக்கிறான்.

மனநல மருத்துவரின் உதவியால் மட்டும் நான் படுக்கையிலிருந்து எழுவதற்கு தெம்பு உண்டாகவில்லை. அதற்கு நரம்பியல் மருத்துவரின் உதவியும் வேண்டியிருந்தது. எந்த அளவு சக்திவாய்ந்த டிராங்குலைஸரைக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு நரம்பியல் நிபுணர்தான் தீர்மானித்தார். அந்த டிராங்குலைஸர்களைச் சாப்பிட்டுக் கொண்டு ஒரு தோற்றப் பொலிவை வெளி உலகத்திற்கு காண்பித்துக் கொண்டு இருந்தேன்.

அவன் எனக்குப் பிற மாணவர்களைப் போல அல்ல. அவன் எனக்கு உறவினன். ஆனால் அந்த உறவு நேரடியான நெருக்கத்தைக் கொடுத்தது எதுவும் என் நினைவில் இல்லை. குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டு அவன் எங்கள் வீட்டுக்கு வந்ததோ நான் அவன் வீட்டுக்குப் போனதோ எதுவும் நினைவில் இல்லை. அவ்வளவு சிறிய வயதில் எல்லாம் நடந்திருக்கிறது. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். ஒரு தங்கை இருந்தாள். அவனுடைய அப்பாவும், அம்மாவும் ஆகிய இவர்கள் என்னைப் பார்த்த குறிப்புகளில் உறவு இருந்தது என்றே தோன்றுகிறது. இந்த உறவினால்தான் அவன் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டானா? இல்லை அவனுடைய அப்பாவினாலா?

அவனுடைய அப்பா எங்கள் அப்பாவைப் பெற்ற பாட்டியின் கடைசித் தம்பி. அதுகூட அவரை நான் அதிகமாகக் கவனித்து அவனுக்குச் சிறப்பிடத்தைக் கொடுத்து விட்டதோ, என்னவோ? எங்கள் பாட்டி மிக வினோதமான ஒரு பேர்வழி. பாட்டியோடு பிறந்தவர்களும் வெகு வினோதமான பேர் வழிகள்தான். அதில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் எனக்குத் தெரியும். அந்த ஒருவர் எனக்குத் தெரிய வருவதற்கு முன்னதாகவே இறந்துபோய்விட்டார். அவருடைய பையன்கள் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். என்னைவிட அவர்கள் பெரியவர்கள் கிடாரங்கொண்டான். அக்ரஹாரத்தின் கீழ்கோடியில் வடக்குப் பார்த்து இருந்த எங்கள் தாத்தாவின் வீட்டுக்கு இரண்டொரு வீடுகள் தள்ளி மேற்கே அதே சாரியில் இருந்தது அவர்கள் வீடு. வெகுநாள் வரையில் அவர்கள் எனக்கு நண்பர்கள். அதாவது குடும்பங்கள் இடம் பெயர்ந்து நகரைத் தேடிப் போகிற காலம் ஆரம்பமாகி விட்ட முந்தைய தலைமுறையில் அது அப்படித் தான் இருந்தது. எங்கள் தலைமுறையில் அக்ரஹாரத்தில் அது முழுமையடைந்து விட்டது. அவனுடைய அப்பாவின் தோற்றத்தினால் தாழ்மையுணர்ச்சிக்கு ஆளாகியிருந்த அவர்களுடைய குடும்பத்தைக் கிளப்பிக்கொண்டு போய்விட அவனுடைய அம்மா வெகு மும்முரமாக இருந்திருப்பாள் என்று இன்று தோன்றுகிறது.

எங்கள் பாட்டிதான் மூத்தவள். எல்லோருமே கிடாரங்கொண்டான் பேர்வழிகள்தான். கிடாரங்கொண்டான் பேர்வழிகள் எல்லோருமே விநோதமான மனிதர்களைப்போல பழக்கமாகாத ஒரு சிறிய இடைவெளியுடன் இருப்பவர்கள் போல எனக்குத் தோன்றினார்கள். அப்படிப்பட்ட நிலையில் பாட்டியின் மூத்த தம்பி எங்கள் அப்பா பெரியப்பாக்களுக்கு மாமாவாகையால் அவர் ஒரு சகுனிமாமாவாகவே அறிமுகமாகியிருந்தார். எங்கள் பெரியப்பாவும் மரணமடைந்து விட அவர் ஒரு திடலை நஞ்சையாக வெட்டுவதற்கு தன்னிடம் கடன் வாங்கியிருந்த தொகையை வசூல் பண்ணுவதற்கு இந்தச் சகுனிமாமா தன் அக்காவான எங்கள் பாட்டியை கிடாரங்கொண்டானுக்கு அழைத்துக் கொண்டு வரச் சொல்லி ஆள் அனுப்பியிருந்த போதுதான் எங்கள் பாட்டி கிடாரங்கொண்டான் போனதை நான் முதல் முறையாகப் பார்த்தேன். அவர் வெகு தொலைவில் சென்று பாலக்காட்டிலிருந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருந்தார் என்று அவர் மனைவியான அந்தப் பாட்டியை நான் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தேன். அப்படித்தான் சின்னக் குழந்தைகளின் மனதில் கற்பனைகள் உருவாகின்றன என்பதற்கு அதை ஒரு உதாரணமாக இன்னும் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாட்டிக்கு அடுத்தபடியாகப் பிறந்தவள் மிகப்பெரிய நிர்வாகத் திறமை படைத்தவள் என்று சுற்று வட்டாரத்தில் பெயர் வாங்கியிருந்தாள். ஓட்டமும் நடையுமாக எவ்வளவு தொலைவானாலும் பெரிய சுமையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் நடக்கும் தோரணை மிகப் பிரசித்தமானது. அது தன் அங்கம் போன்ற சுலபத்தில் அவள் நடந்து கொண்டிருந்தாள் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பாட்டியை மட்டும் என்ன எங்கள் பாட்டியைக்கூட நான் அவனுடைய வீட்டில் பார்த்ததில்லை. என் நண்பர்களான அவனுடைய பெரியப்பாவின் வீட்டிலிருந்தும் யாரையும் நான் அங்கு பார்த்ததில்லை. பாட்டிக்கு இன்னொரு தங்கை மாயூரத்தில் இருந்தாள். அவர்கள் குடும்பத்தினர் அவ்வளவு தொலைவிலிருந்து இங்கு வந்து இவர்களைப் பார்ப்பதற்கு என்ன பிரமேயம் இருக்கிறது. பக்கத்து வீடு தொலைவாகும்போது மாயூரம் வெகுதொலைவாகி வருகிறது. எல்லோரும் அவன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்று நான் எண்ணிக் கொண்டேன். அதனால் அவன் மேல் எனக்குக் கொஞ்சம் இரக்கம் இருந்திருக்கக் கூடும்.

வகுப்பறையில் அந்த மூலையை அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அது உள்ளே சுருங்கிப் போய்த்தான். ஆனால் நான் அதற்கு எதிர் மூலையில்தானே உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அவனையே கவனித்து என்னை நான் மறந்து விட்டேன், போலிருக்கிறது எல்லாவற்றுக்கும் காரணம் அவனுடைய அப்பாவின் கைகள்தான்.

அவர்களுடைய குடும்ப நிலையை எங்கள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் பாட்டி எங்களைக் கண்டு பயந்தவளைப் போல இருப்பாள். நெல்வறுத்தமாவை வெல்லத்தைப் போட்டு பிசைந்து தலைப்பு மறைப்பில் வைத்துக் கொண்டு தின்று கொண்டிருப்பாள். நான் அவளைப் பார்க்கும்போது அடுப்பங்கரையை ஒட்டித் தாழ்வரத்தில் இருக்கும் மண்குதிரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் அவள், அந்தக் குதிருக்குள் ஒளிந்து கொள்ள விரும்பியவளைப் போலக் காணப்படுவாள். கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார் எங்கள் பெரியப்பா. முரண்டு ஊஞ்சலை ஆட்டத்தரையில் ஒரு உதை உதைப்பார். அப்போது எனக்கு வயது ஏழுக்குள்தான் இருக்கும். எங்கள் அப்பா இறந்தபோது எங்கள் வயதுகள் என்னென்ன என்பதைக் கொண்டு இதைக் கணிக்கிறேன். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆன பிறகுதான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவார்கள். அப்போதெல்லாம் அவன் அறிமுகமாகி விட்டானா அல்லது அந்தச் சம்பவம் நடைபெற்று முடிந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

கிடாரங்கொண்டான் அக்ரஹாரத்தில் மம்மலை வாத்தியாரிடம் நான் டியூஷன் படித்தேன். என்னுடன் அவனும் அவரிடம் படித்தான். அவன் அண்ணனும் படித்தான். இன்னும் இரண்டொருவர் படித்தார்கள். அவர்களை எல்லாம் நான் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் எல்லோரும் என் அருகில் இருக்கும் சாயலாகத் தான் என் மனதில் பதிவானார்கள். மம்மலை வாத்தியார் மட்டும் அர்ச்சுனெனின் இலக்கைப்போல வெறியை அடைத்துக் கொண்டிருந்தார். அது பாடத்தில் உள்ள என் கவனத்தால் என்பதைவிட ஆசிரியர்கள் மேல் எனக்குள்ள பயத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். மம்மலை வாத்தியாரை பார்த்துவிட்டு வரும்போது தலையைக் குனிந்து கொண்டு போக வேண்டும் என்ற மரியாதை அளவுக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. அவர் வீட்டுக்குக் கிழக்கே இருந்த எங்கள் தாத்தாவின் வீட்டுப் பகுதி எனக்கு மிக அதிகமாகவே அறிமுகமாகியிருந்தது. அங்கு நான் நிமிர்ந்தே இருந்தேன். என்னுடைய வழி மேற்கே உள்ள ஒரு சந்தின் வழிப் புகுந்து குறுக்கே கிடாரங்கொண்டான் வாய்க்காலை இறங்கிக் கடந்து வீட்டுக்குப் போவதாகத் திரும்பி விட்டது. பள்ளிக்கூடம் மேற்கே இருந்ததால் மம்மலை வாத்தியாரின் வழி மேற்கில் என்று நினைத்துக் கொண்டு இவ்விதம் செய்தேன் போலும். அவன் வீடும் மேற்கேதான் இருந்தது. சகுனிமாமாவின் வீடும் மேற்கே இருந்தது. பெரிய கற்பனையைக் கொண்ட எங்கள் தாத்தாவின் வீட்டுக்கு எங்கள் கொல்லையிலிருந்து புறப்பட்டு கிடாரங்கொண்டான் வாய்க்காலை இறங்கிக் கடந்து தாத்தாவின் கொல்லையை அடைந்து விடலாம். அக்ரஹாரத்தின் உள்ளே நுழைய வேண்டிய அவசியமே இல்லை. பெரும்பாலும் புதர்கள் நிறைந்த கிடாரங்கொண்டான் வாய்க்கால் கரைதான் என் வழி. அது ஒரு காட்டில் புகுந்து போவதைப் போலவும் இருந்தது. நான் அப்படிப் போய் எங்கள் தாத்தாவின் வீட்டுக் கொல்லையை அடைவதையே எப்போதும் விரும்பினேன்.

அவனுடைய பெரியப்பாவான என் நண்பர்களின் வீட்டுக் கொல்லையும் கிடாரங்கொண்டான் வாய்க்காலில்தான் ஒரு துறையுடன் முடிந்தது. அந்தத் துறைகளில் குழந்தைகள் விளையாடி ஏகப்பட்ட கற்பனையைக் கொண்டிருந்தன அவை. எல்லார் வீட்டுக் குழந்தைகளும் அவரவர் வீட்டு வாய்க்கால் துறைக்கு விளையாட வந்துவிடும். பெரியர்களும் ஏதாவது ஒரு காரியம் செய்துகொண்டு அங்கு இருப்பார்கள். அவனுடைய வீட்டுக்குத் துறையில்லாமல் வாய்க்கால் தெற்கே திரும்பிப் போய்விடுகிறது. நான் முன்னே சொன்ன சந்து இந்தத் திருப்பத்தில் வந்து கூடித்தான் சிறிய சந்தாகத் தொடர்ந்து வளைந்து மேற்கே ஆசாரிகள் வாழும் வீடுகளையும் சில புளியந்தோப்புகளையும், தாண்டி வாணிபச் செட்டியார்களின் செக்குகளைத் தாண்டிப்போய் சாலையில் சேர்கிறது. நான் சொன்ன சந்தின் வழியாக வந்து வாய்க்காலைத் தாண்டி நான் வழியாகக் கொண்டிருந்த கரையின் மீது நடந்து எங்கள் வீட்டுக் கொல்லையை அடைந்து விடலாம். அவன் வீட்டுக்கு இந்த அழகிய வாய்க்கால் துறை இல்லாவிட்டாலும் அவன் தன் பெரியப்பாவின் வீட்டுத் துறைக்கு வந்து அந்த அனுபவத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கலாமில்லையா? ஆனால் அவர்கள் அவனை அன்னியப்படுத்தி வைத்து விட்டார்கள் என்று நான் கருதுவதற்கு இடமுண்டாக நான் அவனை இந்த வாய்க்கால் துறையில் பார்த்ததேயில்லை. வாய்க்கால் தெற்கே திரும்புகிற முனையில் ஒரு பெரிய பொதுத்துறை இருந்த போதிலும் அதற்கு மேற்கே அமைந்துவிட்ட அவன் வீட்டிற்கும் இதற்கும் கனவுகள் இல்லாமல் போய்விட்டது.

அவனுடைய கனவுகள் மேற்கே பள்ளிக்கூடத்திற்கு எதிரே சற்றுத் தொலைவுல் இருந்த கிடாரங்கொண்டான் சிவன் கோயிலுக்குப் பின்னே ஓடும் காவிரியில் இருந்திருக்கலாம். சடங்குகளாலும், புராணங்களாலும் ஸ்தல புராணங்களாலும் உள்ளூர் கதைகளாலும் கவிதைகளாலும் பெரிய கற்பனையைக் கொண்டிருக்கும் காவிரியை அவன் நேரடியாகவே தொடர்பு கொண்டு பெரிய சந்தோஷத்தில இருந்து இந்த வாய்க்காலை விட்டுவிட்டிருக்கலாம். என்றாலும் இங்குள்ள குழந்தைகள்? அவன் பங்குக்கு அங்கும் குழந்தைகள் இருந்திருக்கக்கூடும். இல்லையென்றாலும் காவிரியோடு அவன் தனிமையை விரும்பியிருக்கலாம். காவிரிக் கரையில் சிதிலமாகியிருந்த சிவன் கோயில் அதன் இருட்டைப் போல வெகுபூடகமான விஷயங்களை அவனோடு பகிர்ந்து கொண்டிருக்கலாம். அவனைப் பற்றி நான் நினைப்பதைப் போல என்னை பற்றி நினைவின்றியே அவன் சுதந்திரமான ஒரு தனி உலகத்தில் இருந்திருக்கக்கூடும்.

கிடாரங்கொண்டான் பள்ளிக்கூடம் முன்னே. நான் சொன்ன செம்பனார் கோயிலிலிருந்து வந்து காவிரிப்பட்டிணம் போகும்
மேலக் காவிரிச் சாலையில் இணையும் பகுதியில் சற்று தெற்கே தள்ளி கிடாரங்கொண்டான் சாலையில் மேற்குப் பார்த்து இருந்தது. மேலக் காவிரிச் சாலை என்பது கல்லணையிலிருந்து காவிரி பூம்பட்டிணம் போவதற்கு கரிகாலன் போட்ட சாலை.

அது மிகவும் அழகாக இருந்த ஒரு கட்டடம். மிகவும் உயர்வாக இருந்த சாலையில் அதன் நுழைவாயில் ஆரம்பித்து மிகவும் தாழ்வாக இருந்த பகுதியில் அதன் கொல்லை முடிந்திருந்தது அந்தச் சரிவை சமப்படுத்தாமல் கட்டத்தைக் கட்டியிருந்தார்கள். இரண்டொரு படிக்கட்டுகளுடன் உள்ளே நுழைந்தால் ஒரு தாழ்வாரம். அந்தத் தாழ்வாரத்தின் இரண்டுபுறமும் நடுவில் வழிவிட்டு இரண்டு வகுப்புகள் இருந்தன. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தாலும் அவை தன்னளவில் காரியங்களைக் கவனித்துக்கொண்டுபோகும் அமைதியைப் பெற்றிருந்தன. அடுத்த வகுப்புக்கு ஒரு திண்ணையின் மேல் ஏறவேண்டும். அதுவும் ஒரு ஆளோடியைப் போலவே இருந்தது. அதையும் இரண்டாகப் பிரித்து வலப் பகுதியில் வேறு காரியங்களைக் கவனிக்க இரண்டொரு மேஜை நாற்காலிகளையும் கொண்டு தன் காரியத்தை மட்டும் கவனித்துக் கொள்ளும் தன்மையில் இருந்தன. அடுத்து ஒரு நிலைப்படியைத் தாண்டி ஒரு அறைக்குச் செல்ல வேண்டும். அதுவும் கட்டடத்தின் வலப்புறச் சுவருக்கும் இடப்புறச் சுவருக்கும் இடையில் தடுப்பு ஏதும் இல்லாத ஒரே ஓட்டத்தில்தான் இருந்தது. இடப்புறத்தில் இரண்டொரு மேஜைகளும் இரண்டொரு நாற்காலிகளும் கொண்ட அலுவலகம். இதற்குத் தனியே அலுவலர்கள் யாரும் இல்லை. தலைமை ஆசிரியராக இருந்த மம்மலை வாத்தியார்தான் இதன் அலுவலர், தேவையான போது.

மம்மலை வாத்தியாரின் வகுப்புக்கு இன்னொரு நிலைப்படியைத் தாண்டி கீழே இறங்க வேண்டும். அது ஒரு பெரிய வகுப்பாக இருந்தது. கீழ் வகுப்புகளிலிருந்து தேர்வாகி வந்தவர்கள்தான் இதன் மாணவர்கள் என்பதால் சிறிய தொகையைக் கொண்ட வகுப்பு பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு அதிகச் சுதந்திரமாக இருந்தது. இதிலிருந்துதான் கொல்லைத் தோட்டத்திற்குப் போக வேண்டும். இடதுபுறம் இதற்கு வழியிந்தது அது கிழக்கே போய் வடக்கே திரும்பி கொஞ்சம் இடத்தைக் கொண்ட அழகிய தோட்டமாக இருந்தது.

மம்மலை வாத்தியார்தான் தலைமைஆசிரியர் என்பதால் அந்த இறக்கமான பகுதியை அவர் தன்னுடைய வகுப்பறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ என்னவோ? நான்கைந்து படிகளில் இறங்கித்தான் வெளிப்புறத்தின் சமதளத்துக்கு வரவேண்டும் என்ற அமைப்பைக் கொண்டிருந்தது. அது சந்தோஷத்தின் ஆழத்துக்கு இறக்கிக் கொண்டு போவது போல இருந்தது. மேலும், அதை மம்மலை வாத்தியார், தன் செயல்களால் கற்பனை நிரம்பியதாக மாற்றிவிட்டார். ஒரு நாள் அவர் எங்கள் எல்லோரையும் படிகளில் இறங்கி புதிய அனுபவத்துக்கு இட்டுக்கொண்டு போவதைப் போல தன் வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டு போனார். அது எங்களுக்கு அற்புதமாக இருந்தது. அது பெரிய வகுப்பாதலால் அதில் நாங்கள் இஷ்டம்போல் நுழைய முடியாது. அதனாலேயே அது கற்பனைகள் நிரம்பியதாக இருந்தது. அன்று இறக்கிக்கொண்டு போனபோது அது பிரமாதமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அங்குபோய் அமர்ந்து கொண்டோம். மம்மலை வாத்தியார் என்னவோ ஒரு முன்னுரை சொன்னார். அங்கு புதிதாக உட்கார்ந்து கொண்டிருந்தவன் ஒரு ஜாலவித்தைக்காரன் என்பது எங்கள் எல்லோருக்கும் தோன்றிவிட்டது. அதுவரையில் நாங்கள் ஜாலவித்தையைப் பார்த்ததில்லை. மம்மலை வாத்தியார் ஜாலவித்தைக்காரனை அறிமுகப்படுத்தியதும் நாங்கள் பெரிய கூச்சலிட்டோம். அவன் உடனே தன் பையிலிருந்து ஒரு வெண்புறாவை எடுத்து வெளியே விட்டான். அது தட்டுத்தடுமாறி எங்கள் மேல் பறந்து கொல்லைக்குப் போகும்போது அது வழியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் என்றும் அதை அழைத்துக் கொண்டு போய் விடுவான் என்றும் அடுத்த நிகழ்ச்சியிலும் அது இவ்விதமே பறந்து போகும் என்றும் பெரியவர்கள் சொன்னர்கள் என்றாலும் அதன் ஆச்சரியம் எங்களுக்குக் குறையவில்லை. அதற்குப் பிறகு அவன் என்னென்ன செய்தான் என்பது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அவன் வாயிலிருந்து இழுத்துப் போட்ட மெல்லிய வண்ணக்காகித நாடாக்கள் நினைவில் இருக்கின்றன. முதலில் அவன் ஒரு சிறிய வண்ணக் காகிதத் துண்டை எங்களுக்கெல்லாம் காண்பித்து விட்டு வாயில் போட்டுக் கொண்டான். அது இந்தக் காகித நாடாவிலிருந்து கிள்ளிய சிறிய துண்டு போலத்தான் இருந்தது. பிறகு அவன் வாயிலிருந்து அந்த நாடாவை தொடர்ந்து இழுத்து இழுத்து வெளியில் போட்டான். அது முடிவே இல்லாமல் வாயிலிருந்து வந்து கொண்டே இருந்தது. அந்த வகுப்பறை முழுதிலும் வண்ணக் காகித நாடாக் குவியலால் நிரப்பி விட்டான். இதுபோல ஒரு ஜாலத்தை மம்மலை வாத்தியார் மட்டும்தான் செய்ய முடியும் ஏனெனில் அப்படி ஒரு ஜலத்தைப் பார்ப்பதற்கு அவரும் ஆவலோடு இருந்திருக்க வேண்டும்.

இந்த சந்தோஷத்தில் அவன் எங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான் என்பது என் நினைவில் இல்லை. அப்போது யாரும் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆகாசத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அதில் அவனை மட்டும் தனித்துக் கண்டு எப்படி நான் நினைவுப்படுத்திக் கொள்வது? அதைவிட ஜாலவித்தைகள் ஒன்றும் தெரியாத வாத்தியார்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் இங்கு முக்கியமாகத் தோன்றுகிறது. சில வாத்தியார்கள் இதை மம்மலை வாத்தியாரோடு சேர்ந்து அன்று பள்ளிக்கூடத்தில் சிறப்பாக நடந்த ஒன்றாகப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால் எங்கள் வாத்தியார்? சந்தோஷத்தில் இருக்கும் பையன்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று எண்ணிவிட்டார் என்று தோன்றுகிறது. ஆகாசத்திலிருந்து எங்களை இறக்கி எங்கள் இடம் இது இது என்று எங்களுக்குக் காட்டிவிட வேண்டும் என்று அவர் அவசரப்பட்டிருந்தார் போலிருக்கிறது. மொத்தத்தில் ஐந்து வாத்தியார்கள் தானே! அவர்கள் எண்ணிக்கையில் பெருகி வகுப்பறையில் அங்கும் இங்கும் அலைந்து தடுமாறி இருந்திருப்பார்கள். ஏனெனில் அவர்களால் செய்ய முடியாததை ஒரு அல்ப ஜாலவித்தைக்காரன் செய்து விட்டான்.

அப்போது நாங்கள் எங்கள் வகுப்புக்குத் திரும்பி விட்டோம். வாத்தியார்கள் மேல் ஓடி இடித்துக் கொண்டு போய் எங்கள் இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்திருப்போம். இதெல்லாம் ஒன்றும் நிச்சயமானதில்லை. ஜாலவித்தை நடந்ததும் இந்தச் சம்பவம் நடந்ததும் வேறு வேறு நாட்களில்கூட இருந்திருக்கலாம். ஆனால் அது ஜாலவித்தை முடிந்ததும் நாங்கள் எங்கள் வகுப்புக்கு வந்ததாகவும் அவன் தன் வழக்கமான மூலையில் போய் உட்கார்ந்து கொண்டிருந்ததாகவும் நான் என் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டிருந்ததாகவும் என் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. ஸ்லேட்டுப் பலகையில் நாங்கள் குனிந்து கொண்டு ஜால வித்தையின் காட்சிகளைத் தொடர்ந்து அதில் பார்த்துக் கொண்டிருந்திருப்போம். அவன் "அ"வையும் "ஆ"வன்னாவையும் தலையைச் சாய்ந்து ஸ்லேட்டுப் பலகையில் கட்ட விழ்த்துக் கொண்டிருந்திருக்கலாம். அந்தக் கரும் ஸ்லேட்டுப் பலகையின் மேற்பரப்பும் ஸ்லேட்டுப் குச்சியின் பால் போன்ற முனையும் ஒன்றோடொன்று அன்யோன்யமாகக் குனிந்த தலையைப் போலவே பார்வை முன் எழுத்துக்களின் தோற்றத்தைப் புலப்படுத்தும் போது புதிய புதிய உலகத்தை விரித்துக் கொண்டிருந்திருக்கும். இது ஜாலவித்தையில்லாமல் வேறென்ன? ஸ்லேட்டுப் பலகையைச் சுத்தப்படுத்த உபயோகப்பட்ட கோவை இலைகளும் கோவைக் காய்களும் இதற்கான உபகரணங்கள். இவை சாமான்யமாகப் பெறப்பட்டவைகளா? கள்ளிப் புதரில் படர்ந்த கோவைக் கொடிகளிலிருந்து கள்ளிமுள் குத்தக்குத்த மிக சுவாரஸ்யமாகப் பறிக்கப்பட்டவை அவை. இன்னொரு சிறப்பான உபகரணமும் இருந்தது. கிடாரங்கொண்டான் வாய்க்கால் ஓரத்தில் தண்ணீரைப் பருகிச் செழித்துக் கொண்டிருக்கும் ஒரு நீர்ப்பூண்டின் அடிப்பகுதி மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. அவை வாய்க்காலில் நீந்திப் பறிக்கப்பட்டவை அப்போது என்னோடு அவன் நீந்தியதில்லை. வகுப்பே இந்த மூலிகையின் மனத்தால் நிரம்பியிருக்கும். அது கற்பனையின் நினைவுகளை மணம் வீசச் செய்து கொண்டிருக்கிறது. கவனமும் கற்பனையும் இந்த உலகத்தைத் தாண்டி எங்கோ வெகுதொலைவில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது அந்த வாத்தியார் அவன் முன் ஒரு பூச்சாண்டியைப் போல மேல் இமைகளை மேலே மடக்கிக் கொண்டு தோன்றியிருக்கிறார். அவன் முன் தோன்றி என்ன கேட்டார் அவன் என்ன சொன்னான் என்பதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. அநேக குழந்தைகள் அநேக வெளி உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எல்லோரும் தூங்குவதாகவும் யாருக்கும் பாடத்தில் கவனமில்லை என்றும் விழித்து அங்கு தோன்றியிருக்கலாம். அவனை மட்டும் தனித்துக் கண்டு பிடித்து எழுந்திருக்கச் சொல்லியிருக்கலாம். கனவு கலைந்து அவன், உட்காரும் எல்லோருக்குமான அந்த நீண்ட பலகையிலிருந்து எழுந்திருந்திருக்கலாம். அவன் கையை நீட்டச் சொல்லி தன் பிரம்பினார் ஒரு போடு போட்டிருப்பார். அவன் உள்ளங்கையில் "கெலேர்" என்று பெரிய கூச்சலாக எல்லாக் குழந்தைகளும் தூக்கத்திலிருந்து இடையில் விழித்துக் கொண்டு கத்துவது போல அலறின. அவன் கால் சட்டையில் கழிந்துவிட்டான். இன்னொரு அடி விழுந்தது. பீச்சி அடித்து கால்சட்டையிலும் இருக்கையிலும் கழிந்து விட்டான். "ஓடு ஓடு அவன் கால்சட்டையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வெளியில் ஓடினான். போகும் வழியெல்லாம் கழிந்து கொண்டே ஓடினான், ஓடி எங்கே போனான் என்பது தெரியவில்லை.

நான் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். அப்படித்தான் ஆகியிருக்க வேண்டும். எல்லோரும் ஒடுங்கிப் போய் விட்டிருந்திருக்க வேண்டும் அதோடு கலைந்து போய்விட்டது. அதற்குப் பிறகு அவனுக்கு என்ன ஆயிற்று என்பதெல்லாம் என் நினைவில் இல்லை. அதன் பிறகு பெரிய மறதிக்கு ஆளாகிவிட்டேன். அதன்பிறகு அவர்கள் பெரியவன் படிப்பிற்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் போலிருக்கிறது. பெரிய இருள் வந்து மூடிக் கொண்டு விட்டது போலிருக்கிறது. அதற்குப் பிறகு அந்த இடத்தை எல்லாம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னதும் மம்மலை வாத்தியார் வகுப்பைத் தவிர பள்ளிக்கூடம் முழுதும் கழுவி விட்டதும் மட்டும் நினைவிருக்கிறது.

நன்றி: தீராநதி.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link