சிறுகதைகள்


உயிர்த்தெழல்

கூடல்.காம்

அறைக்கதவை... மிக மெள்ள யாரோ தட்டும்சத்தம் கேட்கிறது. என்னையும் அறியாமல் அழுத்திய அசதியால் உறக்கத்தின் பிடியில் அமிழத் தொடங்கியிருந்த நான், எழுந்து வந்து கதவைத் திறக்கிறேன். சூடான பானம் ஒன்றை ஏந்தியபடி குட்டித்தம்பி அருண் நிற்கிறான்.

"அனுக்கா! இந்தா... பிடி!ம்...! டக்குன்னு கதவைச் சாத்திக்க...!"

மூச்சிறைக்கப் பேசியபடி, பேயைக் கண்டது போல ஓடும் அவன் கண்களில் இந்த மிரட்சி... எப்படித்தான் வந்து புகுந்து கொண்டது? பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், அம்மாவைக் கூடப் புறந்தள்ளிவிட்டு "அக்கா" என்று பாய்ந்து வந்து கட்டிக்கொள்ளும் அருண்! "அக்காதான் தலை சீவணும்" என்று அடம்பிடிக்கிற அருண்! கபடமற்ற அவன் கண்களிலும் கூடக் கள்ளத்தைக் காணுகையில்..... என் உயிர், ஒரு கணம் ஓய்ந்து போகிறது.

ஃபோன்மணி அடிக்கும் ஒலியும், தொடர்ந்து அப்பா உரத்துப் பேசும் சத்தமும் எந்த முயற்சியும் இல்லாமல் காதில் வந்து விழுகிறது.

"இல்லையே...! அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லையே!..... ஆமாம்! என் பெண் அங்கேதான் படிக்கிறா! ஆனா... இப்ப அவ என்னோட மகன் வீட்டுக்கு.... பம்பாய்க்குப் போயிருக்கா! நல்ல வேளை அந்த சமயம் அவ அங்கே இல்லாமப்போனா!... ஆமாமாம்...! ரொம்பக் கொடுமைதான்! இதுக்கெல்லாம்.... நடுத்தெருவில் வச்சு சவுக்கடி தரணும்....! என்ன செய்யறது?...... சரிங்க.... அப்ப வச்சிடவா! தாங்க்யூ".

வயதுக்கும், பதவிக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல்.... இப்படி சரளமாக, அடுக்கடுக்காகப் பொய்களைத் தன்னால் உதிர்க்க முடியுமென்பதை அப்பா ஒரு வாரம் முன்னால் கூட நினைத்திருப்பாரா என்ன....?

அருண் வைத்துவிட்டுப் போன காப்பியில் ஆடை படர்ந்து கொண்டிருக்க... அம்மா மதியத்தில் கொண்டு வந்த சோறு ஒரு புறம் விறைத்துப் போய்க் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் செலுத்துகிறேன். நேசத்திற்குரிய என் தனி அறை! பாரதி, புதுமைப்பித்தனிலிருந்த கண்ணதாசன், சுந்தரராமசாமி வரை.... என்னைச் சூழ இறைந்து கிடக்கும் புத்தகங்கள்! என் மனநிலைக்கேற்ற இசையை எனக்குத் தந்து உதவும் ஒலிப்பெட்டி! தாயின் மடியைப் போலக் கதகதப்பைத் தந்து கொண்டிருந்த இடமே இன்று தனிமைச் சிறையாக மாறிவிட்டிருப்பதை எண்ணியபடி, புத்தகத்தைப் புரட்டுகிறேன். கண்கள் பக்கங்களில் வெறுமையாக ஓட... மனம், எதிலும் லயிக்காத சூனிய நிலையில் சஞ்சாரம் செய்யத்தொடங்குகிறது.

கதவைத் தட்டிவிட்டு அம்மா உள்ளே வருகிறாள்.

"என்ன அனு... இப்படி அடம் பண்றே? காலையிலே இருந்து எதுவும் சாப்பிடாம வயத்தைக் காயப்போட்டா என்ன ஆகும்? சாதம் பிடிக்கலைன்னா விடு! டிஃபன் ஏதாவது கொண்டு வரவா?"

"அது ஒண்ணுதான் குறைச்சல்!" என் குரல் உயர்கிறது அம்மா, வாயில் விரலை வைத்து மெள்ளப் பேசுமாறு கெஞ்சலோடு சமிக்ஞை செய்கிறாள்.

"நான் என்ன தப்புமா செஞ்சேன்? நீ கூடவா என்னைப் புரிஞ்சுக்கலை...?"

"இதோ பாரு அனு! அப்பா எதைச் செஞ்சாலும் உன்னோட நன்மைக்குத்தான் செய்வார்! கொஞ்சம் பொறுமையா இரு!"

"அதுக்காக... இப்படி ஒரு வீட்டுக் காவலா...?"

"சீ..... அசடு மாதிரிப் பேசாதே!" அருகில் வந்து ஆதரவாய்த் தலையைக் கோதிவிடும் அம்மாவின் கண்களில் நீர் முட்டி நிற்கிறது. ஆனாலும்... என்னோடான விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டு, இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற அவசரமும் அவளிடம் தெரிவதை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

"கதவைத் தாள் போட்டுக்கோ!" மறக்காமல்... அதைமட்டும் கவனமாகச் சொல்லிவிட்டுப் போகிறாள்.

"எல்.கே.ஜியிலேயிருந்து... காலேஜ் வரைக்கும், எப்பவும் எல்லாத்திலேயும் எங்க அனுதான் முதலாவதாக வருவா!" என்று வாய்கொள்ளாத பூரிப்புடன் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் அம்மா! தலைமுறை இடைவெளிகளையெல்லாம் தாண்டி.... சராசரி அம்மா - பெண் என்கிற எல்லைக் கோடுகளையெல்லாம் கடந்து, எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளமுடியுமென்ற நெருக்கமான சிநேகிதத்தையே இதுவரைக்கும் கொடுத்து வந்திருக்கிற அம்மா! அட்டவணை போட்டமாதிரி, ஒவ்வொரு நிமிடமும் கல்லூரியில் நடப்பதை அவள் ஒப்பிடுகையில், அலுத்துக் கொள்ளாமல், ஆசையோடு.... இன்னும்.... இன்னும் என்று கேட்கிற அம்மா!

இப்போது கதவைத் தட்டுவது, அப்பாவின் முறை! என் கண்களை மட்டுமின்றி, முகத்தைப் பார்ப்பதையும் தவிர்த்தவராய்... இறுகிய குரலில் பாடம் ஒப்பிப்பதைப் போலப் பேசுகிறார்.

"இதோ பாரு அனு... இப்படிச் சாப்பிடாம சத்தியாக்கிரகம் பண்றதிலே பிரயோஜனமில்லை! இன்னும் நாலுநாள்.... ஒரு வாரம்போனா.... எல்லாம் கொஞ்சம் "நார்ம"லுக்கு வந்திடும்! அதுக்குள்ளே நீ இப்படி அடம் பிடிச்சா..... நான் இன்னும் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கும்!"

மிரட்டிவிட்டு வெளியேறுகிறார்.

"எங்க அனுவை ஆம்பிளை மாதிரி வளர்த்திருக்கேன் தெரியுமா....! "கராத்தே"லே அவதான் "பெஸ்ட் கேடட்" என்று போன வாரம் கூட நண்பரிடம் பெருமை பேசிக் கொண்டிருந்த அன்பான அப்பா தொலைந்துபோன சோகம், என்னுள் அடர்த்தியாகப் பரவுகிறது.

கலகலப்பே நிறைந்து வழிந்து வீட்டில் முணுமுணுப்புகளும், கிசுகிசுப்பான ஓசைகளுமே வியாபித்திருக்க, மயான அமைதி மனசைக் குடைகிறது. கதவை லேசாக ஒருக்களித்துத் திறந்து வைத்துவிட்டு ஹாலில் நடப்பதைக் கவனிக்கிறேன்.

"கனகம்! முதல்லே வாசல் கதவைச் சாத்திட்டு வா! உடனடியா பம்பாய்க்கு எஸ்.டி.டி. போட்டு நம்ம பையன் கிட்டே பக்குவமா விஷயத்தைச் சொல்லி, யாரு விசாரிச்சாலும், அனு அங்கே இருக்கிறதாகவே சொல்லச் சொல்லிடணும்! இந்தக் கழுதைக்கு ஃப்ரண்ட்ஸ் ஏராளம்! நம்ம சொந்தக்காரங்களும் லேசுப்பட்டவங்க இல்லை! அங்கே ஃபோன் பண்ணி இவ அங்கே இல்€ன்னு தெரிஞ்சிடக் கூடாது யாருக்கும்...!

மேலே எதையும் கேட்கப் பிடிக்காமல் அறைக் கதவை இறுக அடைத்துவிட்டு, மனக்கதவுக்கும் தாளிடுகிறேன்.

அரைமணிநேர அச்சுறுத்தும் நிசப்தத்திற்குப் பின் வாசலில் அழைப்புமணி அடிக்கும் ஓசை கேட்கிறது. வாசலைத் திறக்குமுன், எச்சரிக்கை உணர்வோடு என் அறைக் கதவைத் தட்டி உள்ளே தலையை நீட்டுகிறாள் அம்மா.

"அனு...! வாசல்லே யாரோ வந்திருக்காங்க போல இருக்கு! கொஞ்ச நேரம் எந்த சத்தமும் வராமப் பார்த்துக்கோ! நீ உள்ளே இருக்கிறதே தெரியக்கூடாது! ரேடியோ.... டேப் எதையும் போட்டுடாதே.... என்ன?"

கொஞ்சம் போனால்.... மூச்சு விடுவதைக் கூடக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சொல்லி விடுவாள் போலிருக்கிறது. பிற புலன்களெல்லாம் மழுங்கிப் போய் அவிந்த நிலையில், என் செவிகள் மட்டும் கூர்தீட்டப்பட்டு.... ஹாலில் நடக்கும் உரையாடலை உள்வாங்க ஆயத்தம் பெறுகின்றன.

"அனு எங்கே....? கொஞ்சம் கூப்பிடுங்க!" பிரியத்திற்குரிய பேராசிரியையின் வெண்கலக் குரல்!

அப்பாவின் குரல்.... தாழ்கிறது.

"மேடம்! அதுவந்து.... அனுவைக் கொஞ்ச நாளைக்கு அவளோட அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கோம்! கொஞ்சம்... பயந்தாப்பிலே இருக்கா!"

"அனுவுக்கு... பயமா? என்ன சொல்றீங்க நீங்க? ஐம்பது வயசை நெருங்கிக்கிட்டிருக்கிற நானே என்ன பண்றதுன்னு தெரியாமே மலைச்சுப்போய் நின்னப்ப ஒரு சேதாரமும் இல்லாம எல்லாரையும் மீட்டுக்கிட்டு வந்திருக்கா அவ! அதுக்காகவே அடுத்தவாரம் எங்க காலேஜ்ல ஒரு பெரிய பாராட்டுக் கூட்டம் நடத்தறதா இருக்கோம்! அதைச் சொல்லிட்டு, உங்களையும் அதுக்குக் கூப்பிட்டுட்டுப் போகலாம்னு தான் நான் இப்ப வந்தேன்!"

உள்ளச்சலிர்ப்பு, என் கண்களில் பனிநீராய்க் கொட்ட.... அப்பாவின் பேச்சு, அபசுரமாய் இடைவெட்டுகிறது.

"மேடம்! உங்ககிட்ட சொல்றதுக்கென்ன....? அன்னிக்கு நடந்த சம்பவத்தையே நாங்க மறக்க விரும்பறோம்! அதிலே அனுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! அவ, அந்த டூரிலேயே கலந்துக்கலை... அந்த சமயம் அவ ஊரிலேயே இல்லைன்னு எங்க உறவுக்காரங்களை நம்ப வைக்கிறதுக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கோம்! இப்பப்போய் பாராட்டுவிழா... அது... இதுன்னு விஷயத்தை வெளிச்சம் போட்டுட.... வேண்டாம்னு உங்களை தயவாக் கேட்டுக்கறேன்."

"என்ன சார் இப்படிப் பேசறீங்க...? உங்க பெண் என்ன..... செய்யக்கூடாத தப்புக் காரியத்தையா செஞ்சுட்டா...? அன்னிக்கு "டூர்" வந்த அத்தனை பெண்களோட பெற்றோர்களும் அனுவைத் தெய்வமாக் கும்பிட்டிக்கிட்டிருக்காங்க...... தெரியுமா?"

அப்பாவின் குரல் சற்றே உயர்கிறது.

"மேடம்..... எங்க பொண்ணு தெய்வமா ஆகவேண்டாம்! சாதாரணமா... சராசரியாக இருந்தாலே போதும்!"

மேலே நடக்கிற உரையாடல் மனசுக்குள் பதிவாகாமல் புத்தி வழுக்கிக் கொண்டு போகிறது.

வகுப்பிலுள்ள பதினாறு மாணவிகளும், வகுப்பாசிரியருமாய் மினிவேன் ஒன்றில் உற்சாகத்துள்ளலுடன் தொடங்கிய சுற்றுலா...! போட்டி போட்டுக் கொண்டு, குழந்தைகளைப் போல் மலை ஏறுவதும், ஆசை தீர அருவியில் குளிப்பதுமாய் ஆடித் தீர்த்துவிட்டு, அனைவரும் அசந்துபோய் உறங்கிவிட.... முன்னிரவு நேரத்தில் அத்துவானக் காட்டில் வண்டி பழுதாகிறது. டிரைவர், பழுது நீக்கி முடித்துவிட்டு நிமிர்கிற வேளை! கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ வந்த மூன்று முரட்டு வாலிபர்கள், டிரைவரை அடித்துப் போட்டுவிட்டு, வண்டியோடு எங்களைக் கடத்திச் சென்று பாழ் மண்டபமொன்றில் அடைத்து வைத்த கொடூரம்! பேராசிரியை மட்டும் கொஞ்சம் துணிச்சலுடன் முன்னே வந்து பேசுகிறார்.

"இதோ பாருங்கப்பா....! இவங்களுக்கு என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு! வேணும்னா இவங்க போட்டிருக்கிற நகைகளை ஒண்ணுவிடாமக் கழட்டித் தரச் சொல்லிடறேன்! மத்தபடி எந்தத் தொந்தரவும் செய்யாம தயவு செய்து விட்டுடுங்கப்பா....!" பேசி முடிப்பதற்குள் குரல் கரகரத்துக் கம்மிப் போகிறது அவருக்கு.

அவர்கள்..... அட்டகாசமாய்ச் சிரிக்கிறார்கள்.

"பாருங்கப்பா.... டீச்சர் சொல்றதை! இந்தப் பிசாத்து நகைங்களுக்காகவா இத்தனை கஷ்டப்பட்டோம்! இப்படி ஒரு "சான்ஸ்".... இனிமே வாழ்க்கையில் கிடைக்குமா என்ன?"

எல்லோருக்கும் உடம்பு சில்லிட்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள.... நான் மட்டும் சுதாரித்துக் கொண்டு.... முன்னால் வருகிறேன்.

"ஓகே! நீங்க சொல்றபடி நாங்க கேக்கணும்னா முதல்லே எங்களுக்கெல்லாம் பேய்ப்பசி எடுக்குது! அதுக்கு ஒரு வழி பண்ணுங்க...!"

பேராசிரியை அசந்து போனவராய் என்னைப் பார்த்துவிட்டுப் பிறகு என் கண்ணிலிருந்து அஞ்சலான செய்தியை நொடியில் புரிந்து கொள்கிறார்

"அப்படியெல்லாம் "ஈசி" யா ஏமாந்துபோக.... நாங்க என்ன இளிச்சவாயனுகளா....? டேய் சூரி.... இதுக எங்கேயும் அசையாம நீ பார்த்துக்க! நாங்க ரெண்டு பேரும் நம்ம "புல்லட்"டிலே போய் ஏதாச்சும் பரோட்டா கிரோட்டா கிடைக்குதான்னு பார்த்து வாங்கிட்டு வந்திடறோம்!"

கிங்கரன் போல் காவலிருந்த ஒற்றை ஆளை... அவன் எதிர்பார்த்திராத விநாடி ஒன்றில், நான் கற்றிருந்த தற்காப்புக் கலையின் துணையோடு தாக்க, அவன் சுருண்டு விழும் வேளையில், நாங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து கொண்டு அவனைத் தாக்கி வீழ்த்தி விட்டு வேனை நோக்கி ஓடுகிறோம். எங்களுக்குத் தெரிந்த அரைகுறை டிரைவிங் ஞானத்தை வைத்து வண்டி ஓட்டி.... டிரைவர் கட்டிப்போடப்பட்டிருந்த இடத்துக்கு வந்து, அவரைப் பிடித்துப் பிறகு எங்கெல்லாமோ சுற்று வழிகளில் சென்று.... மறுநாள் இருட்டும் வேளையில் வீடு போய்ச் சேர்கிறோம்.

மனம்.... நிகழ்காலத்திற்குத் திரும்ப..... அப்பா, கூடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.

"அதுதான்..... ""பலாத்கார முயற்சி.... தப்பி வந்த கல்லூரி மாணவியர்"னு பேப்பர்காரன் கொட்டை எழுத்திலே போட்டுட்டானே மேடம்? அந்தக் கூட்டத்திலே எங்களோட பொண்ணும் இருந்தான்னு வெளியே தெரிஞ்சா..... நாளைக்கு அவளை யாரு கட்டிக்குவாங்க?"

"பலாத்காரம்னு ஒரு விஷயமே நடக்காம தடுக்கப்பட்டிருக்கிறது உங்க மகளாலேதானே சார்? அதை ஏன் நீங்க பெருமையா எடுத்துக்க மாட்டேங்கறீங்க....?"

"மேடம்! சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! நான் வாழ்க்கையில் அடிபட்டவன்... அனுபவப்பட்டவன்! நீங்களோ கல்யாணமே செஞ்சுக்காதவங்க! உங்களுக்கு இதெல்லாம் புரியாது...! எல்லாத்துக்கும் மேலே இது.... என்னோட பெண் சம்பந்தப்பட்ட விஷயம்! நானே மாற்றல் வாங்கிட்டு வேற ஊருக்குப் போயிடலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்."

சமயம் பார்த்து, அப்பா.... இப்படியொரு கூர்மையான கத்தியைச் செருகிய பிறகும், மேடம் தொடர்ந்து அங்கே உட்கார்ந்திருப்பாரென்று தோன்றவில்லை.

உள்ளுக்குள் என் எதிர்காலம் இருட்டாக விரிய.... மயங்கிச் சாய்கிறேன்.....! நிமிடங்களும்... மணிகளும் உறைந்து போகின்றன....! அம்மா உலுக்கி எழுப்புவது.... கனவின் நிகழ்வாக.... மசமசப்பாய்த தெரிகிறது.

"அனு.... இந்தா.... சூடாக் கஷாயம் கொண்டு வந்திருக்கேன்! உடம்பு வலி எல்லாம் போயிடும்.... உருவிவிட்ட மாதிரி இருக்கும்...."

அவள் பதமாய் ஆற்றித் தந்ததை ஒரு மிடறு விழுங்குகையில் அவள் கேட்கிறாள்.

"ஆமாம்.... இப்ப.... உனக்கு "பீரியட்ஸ்" வர்ற நாளில்லை.... இதை முழுசாக் குடிச்சிடு! உடனே வந்திடும்....!"

கல்லான முகபாவத்துடன் அவள் இதைச் சொன்னாலும் சூட்சமம் விளங்கிப் புதிர் விடுபட்ட உணர்வில் கஷாயக் கிண்ணத்தையும் அவளையும் மாறி மாறி வெறிக்கிறேன்.

"யூ.... யூ....." எனப் பேய்க் கூச்சலிட்டபடி கிண்ணத்தையும், தம்ளரையும் விசிறியடிக்கிறேன்....

"நீ எனக்கு அம்மாவே இல்லை.... என் முகத்திலேயே முழிக்காதே" என்றபடி முரட்டுத்தனமாய் அவளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு ஓசையெழக் கதவைச் சாத்துகிறேன். என் கசக்கலில் தலையணை கிழிந்து..... பஞ்சுப் பொதிகள் தலைநீட்டிப் பார்க்கின்றன.

இனி.... என்ன இருக்கிறது? சுதந்திரச் சிறகுகளைக் கத்தரித்துப் போட்டு விட்டு.... ஒரு ஜீவிதம்தான் எதற்கு....? பொய்யை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு, இவர்கள் அமைத்துத் தரப்போகிற போலியான வாழ்க்கையில்.... ஒரு ஜடமாக... தாவரமாக வாழ்வதைவிட.... என் முடிவை நானே தேடிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன்.

கடந்து போன நூற்றாண்டின் பாவப்பட்ட பெண்ணைப் போலக் கடைசியில்.... எனக்கும் ஒரு முழக்கயிறும்.... உத்தரக் கட்டைக்குப் பதிலாக மின்விசிறியும்தானா எஞ்சப் போகிறது? மாற்றுச் சிந்தனையை அவசரமாக விரட்டியபடி மின்விசிறி மீது புடவையை வேகமாக வீசுகிறேன். இலக்குத் தவறிய வீச்சு... புத்தக அடுக்கொன்றை சரித்துப் போட.... குலைந்து விழுந்த புத்தகம் ஒன்றிலிருந்து பளிச்சென்று எட்டிப் பார்க்கும் புகைப்படம் என்னைக் கட்டிப்போடுகிறது. உற்சாகத் துடிப்போடு நிற்கும் என்னருகே.... கள்ளமற்ற குழந்தைச் சிரிப்போடு... வெள்ளையம்மா....!

கடந்த மாதம் காசநோய்த் தடுப்புப் பிரச்சாரம் செய்தபடி, எங்கள் என்.எஸ்.எஸ் யூனிட்டோடு அந்தச் சேரிக்குள் வலம் வந்து கொண்டிருந்த என்னை, அன்போடு பற்றுகிறது அந்தக் கரம்!

"அக்கா.... என்னைத் தெரியலை...? நான்தான் வெள்ளையம்மா...! பாப்பாக்குடி கிராமத்திலே பார்த்திருக்கோமே "நான் எதுவும் புரியாமல் விழிக்க... அவள் பிரியத்தை மடையாய்க் கொட்டுகிறாள்.

"என் வீடு... இங்கேதான்.... தொட்டாப்பிலே இருக்கு!... ஒரு நிமிசம் ஒரே ஒரு நிமிசம் வந்துட்டுப் போயிடுங்கக்கா!..." கிட்டத்தட்ட என்னைப் பற்றி இழுத்துக் கொண்டே போகிறாள்.

"ஆயிரம் பேருக்கு நடுவிலே உங்களுக்கு என்னை மறந்து போயிருக்கும்! ஆனா... என்னாலே இந்தச் சன்மம் முச்சூடும் உங்களை மறக்க முடியாதுக்கா! எனக்குப் புது உசிரையே தந்திருக்கிற உங்க ஞாபகமா... என் பிள்ளைக்கும் உங்க பேரைத்தான் வச்சிருக்கேன்...."

முடிச்சு இன்னதென்று புரிபடாமல் நான் தவிக்கும்போது அவளே அடியெடுத்துக் கொடுக்கிறாள்.

"அன்னிக்கு ஒரு நாள்... நீங்களும்... உங்க காலேசுப் பொண்ணுங்களும் வந்து... எங்க ஊரிலே... அதுதான் பாப்பாக்குடியிலே "மீட்டிங்" எல்லாம் போட்டு "டிராமா" போட்டீங்களேக்கா...?"

இழை.... பிடிபட்டு விட்டது! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக, நாங்கள் பெரியதொரு ஊர்வலம் சென்று... கலைநிகழ்ச்சிகளை அளித்த அந்த நாள்!

"பலாத்காரத்தாலே பாதிக்கப்படற பெண், தன்னை மாய்ச்சுக்கறதினாலே.... அது, ஆண்களுக்கு இன்னும் சாதகமா வசதியாகத்தான் போயிடுது! இது.... உடம்புக்கு ஏற்பட்ட ஒரு சின்ன விபத்து மட்டும்தான்னு நாம புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டோம்னா.. நமக்குன்னு வேற ஒரு வாழ்க்கையே அமைச்சுக்கிற துணிச்சல் நமக்கு வந்திட்டதுன்னா.. இப்படிப்பட்ட குற்றங்களும் தன்னாலே குறைஞ்சிடும்."

பேசி முடித்துவிட்டு நான் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்த பிறகு... இவள்... இந்த வெள்ளையம்மாள் மட்டும் ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொண்டதும்... மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிட வார்த்தைகளின்றிப் பாமரத்தனமான உள்ளத்தின் குமுறலை.... என்னைக் கெட்டியாகப் பிடித்திருந்த கரங்களாலும்... விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீராலும் மட்டுமே உணர்த்தியதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

"எவனோ ஒரு களவாணிப்பய... கல்யாண ஆசைகாட்டிக் குலைச்சுப் போட்டுட்டுக் கைவிட்டுப் போயிட்டான்கிறதுக்காக என்னையே சாகடிச்சுக்க இருந்தேன்!.... உங்க பேச்சைக் கேட்டப்புறம் உடம்பெல்லாம் ஒரு புதுரத்தம் பாய்ஞ்சாப்பிலே இருந்திச்சு!... இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் அமைஞ்சு நல்லா இருக்கேன்! எல்லாம் நீங்க ஏத்தி வச்ச விளக்குத்தான் தாயீ!"

.... அந்த வெள்ளையம்மா.... இப்போது புகைப்படத்தில் ஒளிந்து கொண்டு... என் ஏட்டுச் சுரைக்காயை எள்ளிச் சிரிக்க.... கையில் எடுத்த புடவைமுறுக்கு... நழுவித் துவண்டு விழுகிறது. இரண்டு நாட்களாக.... என்னுள் உறங்கிப் போயிருந்த போராளியை..... முன்னிலும் வீரியத்தோடு உசுப்பேற்றி, உயிர்தெழச் செய்தபடி, என் அம்பறாத் தூணியிலுள்ள அஸ்திரங்கள் இன்னும் தீர்ந்து போய் விடவில்லையென்ற நம்பிக்கையோடு.... அறைக் கதவைத் திறந்து கொண்டு.... ஹாலுக்குள் தெம்பாய்ப் பிரவேசிக்கிறேன்.

நன்றி: தடை ஓட்டங்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link