சிறுகதைகள்


சின்ன வீடு

கூடல்.காம்

"அப்பா எழுந்திருக்கலையா? நேரமாச்சு" என்றபடி போர்வையை இழுத்தாள் லாவண்யா.

சோம்பல் முறித்தபடி கண்திறந்து போர்வையை நீக்கியவர் மகளை உற்றுப் பார்த்தார்.

"அம்மா எங்கே?"

"அம்மா பிஸி.... இன்னிக்கு பிஸி, இன்னும் கொஞ்ச நாளைக்கு பிஸி, என்றபடியே வாய்விட்டுச் சிரித்தாள்.

"போச்சா.. என்ன விஷயம் இன்னிக்கு?" என்றவாறே எழுந்து பாத்ரூமுக்குள் போக, மகள் போர்வையை மடித்தவாறே பதில் சொன்னாள். "கீழ வாங்க... நீங்களே தெரிஞ்சுக்குவீங்க".

முகம் கழுவி லுங்கி மேலே ஜிப்பா அணிந்து அவர் கீழே வந்த போது மகள் டைனிங் டேபிளில் காபி சகிதம் தயாராக இருந்தாள். ஒரு கப் காபியைக் கலந்து அவரிடம் நீட்டியவாறே, "அந்தப் பக்கம்" என்று வீட்டுப் பின்வாயில் பக்கமாகக் கையை நீட்டி சைகை செய்தாள்.

பின் பக்கமிருந்து மேனகாவின் பேச்சும் கூடவே முத்தம்மாவின் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பாவும் மகளும் எதுவும் பேசாமல் காபியை உறிஞ்ச ஆரம்பித்தார்கள்.

"அப்பா இன்னிக்கு நீங்க பாம்பே கிளம்பறீங்க இல்லை?"

"ஆமாம்மா, உங்கம்மா இருக்குற இருப்பைப் பார்த்தா எனக்கு பாக்கிங் ஒண்ணும் நடக்காது போலிருக்கு. உனக்கு காலேஜ்ல என்ன விசேஷம் இன்னிக்கு?"

"ஒரு விசேஷமும் இல்லை. நீங்க ஆபிஸ் போங்க நான் காலேஜ் முடிச்சு வந்ததும் பாக் பண்ணி ரெடியா வைக்கிறேன்.

மேனகா பேச்சுக்கிடையே உரக்க ஏதோ சொல்லிக் கொண்டே உள்ள வந்தாள். "எழுந்திட்டீங்களா? சாரி. லவி, அப்பாவுக்குக் காபி கொடுத்தியா? இங்க பாருங்க. இந்த அநியாயத்தை... முத்தம்மாவோட புருஷன் என்ன பண்ணியிருக்கான்னு....."

"என்ன பண்ணியிருக்கான்?"

"பொண்டாட்டியும் மூணு குழந்தைகளும் இருக்க, பத்தாததுக்கு முத்தண்ணங்குளப் பக்கம் இன்னொருத்தியை சின்னவீடா வைச்சுகிட்டிருக்கானாமா. சம்பாதிக்கறதைப் பூரா குடிக்கும் அந்த வீட்டிக்கும் கொட்டிக் கொடுத்திடறான். சரி தொலையுதுன்னு பார்த்தா.... இவ பாவம் அங்க இங்க வீட்டு வேலை செய்து சம்பாதிக்கறதையும் மாசக் கடைசியானா வந்து பிடுங்கிட்டுப் போயிடறான்... இவ என்ன பண்ணுவா பாவம்? மூணு குழந்தைகளுக்கும் சாப்பாடு போட வேண்டாமா?"

அப்பாவும் மகளும் அமைதியாய் இருக்க, மேலே தொடர்ந்தாள். "இன்னிக்குக் காலையில வீட்டுக்கு வந்து பணம் கேட்டு ரகளை பண்ணியிருக்கான். இவ இல்லேன்னு சொன்னதும் விறகுக்கட்டையாலேயே அடிச்சிருக்கான். கைகாலெல்லாம் ரத்தக் களறியாயிருக்கு" என்றவள் வெளிப்பக்கம் குரல் கொடுத்து "முத்தம்மா இங்க வா" என்றாள்.

தயங்கித் தயங்கி முத்தம்மா உள்ளே வந்து ஒரு ஓரமாக நின்றாள். வாஸ்தவம்தான், மேனகா சொன்னதில் பொய்யில்லை. அழுது களைத்த முகம். தலைமுடியெல்லாம் கலைந்திருக்கு, வலது கையிலும் கால் பக்கம் சேலை கிழிந்தும் இரத்தத் திட்டு.

மேனகா கொதித்தாள். "என்ன அநியாயம்? இந்த ஆம்பிளைகளுக்கு இருக்கிற திமிருக்கு அளவே இல்லை. இவனுக எத்தனை சின்ன வீடு வேணும்னா வைச்சுக்குவாங்க. தட்டிக் கேட்க ஆளில்லாமதான் இத்தனையும்.... இருங்க இதுக்கு ஒரு வழி பண்றேன்.

இதற்குள் முத்தம்மா சோர்ந்து உட்கார்ந்து விட, மேனகா, "முத்தம்மா கிளம்பு. பக்கத்தில் நம்ப நரசிம்மன் டாக்டர் கிளினிக்கு போய் மருந்து போட்டுட்டு வந்திடலாம்" என்று அவளை எழுப்பி விட்டாள். பிறகு கணவன் பக்கம் திரும்பி, "ஏங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. மத்தியானம் நான் ஆபீசுக்கு சாப்பாடு கொடுத்து விட்டுடறேன். லவி, நீ இன்னிக்கு மட்டும் கான்ட்டீன்ல சாப்பிட்டிரு. அதோட நான் மத்தியானம் வீட்டில இருக்கிறது சந்தேகம்தான். அப்பா இன்னிக்கு பம்பாய் கிளம்பறாரு. நீ கொஞ்சம் காலேஜ்ல இருந்து சீக்கிரம் வந்து ஹெல்ப் பண்ணிக் கொடும்மா, என்ன?" என்றபடி முத்தம்மாவை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.

மனோகர் குளித்து உடுத்தி ப்ரீப்கேசுடன் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரா ஹாலுக்கு வந்த போது மேனகா தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ஆமாமா... இன்னிக்கே முடிவு பண்ணணும். இதை இப்படியே விட்டு வைச்சா, இனிமே அப்படி இருக்கறதுதான் கௌரவம்னு ஆயிடும். நாம தட்டிக் கேட்கலைன்னா யாரு கேட்கறது? முத்தம்மா இன்னிக்குக் காலையில் எங்க வீட்டுக்கு வந்த கோலத்தைப் பார்த்திருக்கணும் நீ. ஆமா... ஏதாவது அதிரடியா செய்து மக்கள், முக்கியமாப் பெண்கள் கவனத்தைத் திருப்பணும். இது கௌரவம் இல்லை, அசிங்கம்னு ஆம்பிளைகளுக்கு புத்தியில் உறைக்கற மாதிரி ஏதாவது செய்யனும். ம்.... இல்லை இல்லை. இப்ப என்கிட்ட ஒரு ஐடியாவும் இல்ல.. மத்தியானம் கூட்டத்தில் முடிவு பண்ணிக்கலாம்....."

அவள் பேசிக் கொண்டிருந்த தொனியை வைத்து அவள் தோழியும் பெண்கள் உரிமை முன்னேற்ற சங்கத்தின் காரியதரிசியுமான அகிலாவிடம் தான் பேசுகிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்பியவள் இவன் தயாராக வருவதைக் கண்டதும், "கிளம்பிட்டீங்களா? ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.... நீங்க ஆபீஸ் போயிட்டு காரைக் கொஞ்சம் அனுப்பி விடுங்க. மாருதி இன்னும் வொர்க்ஷாப்பிலிருந்து வரலை. இன்னிக்கு முக்கியமான வேலை ஒண்ணு எங்க சங்கத்தில இருக்கு. அங்க இங்க அலைய வேண்டியிருக்கும். கார் இல்லைன்னா திண்டாடிப் போயிடுவேன்" என்றாள்.

"சரி" என்றவாறு நகர்ந்தவர் நின்றார். "மேனகா, ஏதாவது போராட்டம் கீராட்டம்னு அலைஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதே. ஏற்கெனவே பிரஷர் உனக்கு என்றார் கவலையோடு.

அவர் சொன்னதில் நியாயம் இருந்தது. என்றைக்கு இந்த சங்கத்தை ஆரம்பித்தாளோ அன்றிலிருந்து இப்படித்தான். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் ஏதாவது பெண்கள் பிரச்சினை என்றாலும் தட்டிக் கேட்கக் கிளம்பி விடுவாள். எதுவும் முடியவில்லையென்றால் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துப் போய் காவல் நிலையத்தில் இவர்கள் சங்கத்தின் பெயரில் ஒரு புகாராவது கொடுத்து விட்டு வருவாள். புகாருக்குப் பலன் இருந்ததோ இல்லையோ, அவளுக்குப் புள்ளி விவரம் கிடைத்துக் கொண்டிருந்தது. தினம் யாராவது பாதிக்கப்பட்ட பெண்கள் வருவதும், இவள் சங்கத்தைக் கூட்டி ஏதாவது செய்ய முயல்வதும்.... வீட்டில் பழகிப் போயிருந்தது. முதலில் பணக்காரத் திருமதிகளின் பட்டுப் புடவைக் கூட்டமாக இருந்தது, தன்னலமற்ற இவளது உழைப்பால் சாதாரணப் பெண்களும் முன்வந்து சமத்துவம் பேசும் சங்கக் கூட்டம் ஆகியிருந்தது.

உண்மையில் மேனகாவுக்கு இப்படியெல்லாம் உடம்பைக் கெடுத்துக் கொண்டு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லைதான். மனோகர் கொடி கட்டிப் பறக்கிற தொழிலதிபர்.
கோவை தவிர, பம்பாய், இந்தூர், அகமதாபாத் மற்றும் கல்கத்தாவில் நான்கு கிளைகள் உண்டு. மாதம் ஒரு முறை எல்லாக் கிளைகளுக்கும் விசிட் அடித்து விட்டு, அனைத்து இயக்குநர்களையும் பம்பாய்க்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி விட்டு வருவார். அவருக்கு அவருடைய தொழிலை கவனிக்கவே நேரம் இருக்காது. இதில் எங்கே மனைவியின் மாதர் சங்க வேலைகளைக் காது கொடுத்துக் கேட்க நேரம்? ஆனால் அவ்வப்போது மேனாகவின் படம் பத்திரிகையில் வரும் போது, "சரி, ஒரு தொழிலதிபருக்கு இப்படியொரு சமூக அந்தஸ்துள்ள மனைவி இருப்பது லாபம் தான்" என்று வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்த்து ஆறுதல் கொள்வார்.

"இல்லைங்க.... இந்தத் தரம் ஏதாவது வித்தியாசமா செய்யப் போறோம். அதென்னது கல்யாணம்னு தாலி கட்டிப் பண்ணிட்டு, இன்னொண்ணை சைடுல வைச்சிக்கறது? இதைத் தடுக்க சட்டம் எதுவும் இல்லை. அதைத்தான் கேட்கப் போறோம்" என்றாள்.

மேனகா நான் ஒண்ணு கேட்கறேன். கோவிச்சுக்க மாட்டியே?" ஏற இறங்கப் பார்த்தாள். "கோவிச்சுக்கற மாதிரி ஏதோ கேட்கப் போறீங்கன்னு தோணுது..... பரவாயில்லை. பொறுத்துக்கறேன்.... கேளுங்க.

"நீ சொல்ற அந்த சின்ன வீடும் ஒரு பொண்ணுதானே? ஆம்பிளைகளை மட்டும் குறை சொல்றது என்ன நியாயம்? சின்ன வீடா இருக்க பெண்கள் முன்வரக் கூடாதில்லை?"

"சபாஷ்.... சரியான கேள்வி! என் அருமைக் கணவரே...! இத்தனை வருஷ வாழ்க்கையில் இன்னிக்குத்தான் புத்திசாலித்தனமா என்கிட்ட ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க" என்று நாடக பாணியில் கைதட்டிப் பாராட்டினாள். அடுத்த நிமிடம் சீரியசாகி, "நீங்க மேலோட்டமாய் பார்த்துவிட்டுப் பேசறீங்க. இது தனியார் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. எந்தப் பொண்ணாவது சந்தோஷமா முன்வந்து சின்ன வீடா இருப்பான்னு நினைக்கறீங்களா? கிடையவே கிடையாது.

இப்படி சின்ன வீடா இருக்கறவங்களைப் பார்த்தீங்கன்னா தெரியும். பெரும்பாலும் கணவனால் கைவிடப்பட்டவங்க ஏமாற்றப் பட்டவங்க அல்லது விதவையா இருப்பாங்க. சமூதாயத்தில் மற்ற பெண்களைவிட இந்தப் பெண்கள் நிலைமை ரொம்ப மோசமா இருக்கறதால, அதை ஆண்கள் "யூஸ்" பண்ணிக்கறாங்க..... என்று மேலே ஏதோ சொன்னப் போனவளைத் தடுத்து நிறுத்தினார் மனோகர்.

"அம்மாடி, தெரியாம கேட்டுட்டுடேன். நீ என்னவோ செய். சாயந்திரம் நான் கிளம்பணும். மத்தியானம் சாப்பாடு அனுப்பிடு. கார் அனுப்பறேன். முடிஞ்சா லவியை நீயே காலேஜ்ல இருந்து கூட்டுட்டு வந்திடு" என்றவாறே அவள் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

மாதர் சங்கக் கூட்டத்திற்கு முத்தம்மாவையும் அழைத்துக் கொண்டு போனாள் மேனகா. அவள் கை, கால், தலையில் போடப்பட்டிருந்த கட்டுகளைப் பார்த்துக் கூட்டம் "த்சொ த்சொ" என்று வருத்தப்பட்டது. ஏதேனும் உடனே செய்ய வேண்டும் என்று ஆத்திரப்பட்டது. சின்னவீட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இன்னும் பல பெண்களில் பெயரைச் சொல்லி ஆவேசப்பட்டது. காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, முத்தம்மாவுக்கு நீதி கேட்டு ஊர்வலம் போவது, முத்தம்மா புருஷன் வேலை செய்யும் மில்லில் சொல்லி நடவடிக்கை எடுப்பது என்று பல யோசனைகள் கொடுத்தது.

மேனகா எழுந்தாள். "பாதிக்கப்பட்ட ஒரு முத்தம்மாவைத்தான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தப் பிரச்சினை முத்தம்மாவோடு முடிந்து விடுவதில்லையே! நாம் இதை முத்தம்மாவுக்கு மேலே ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். மற்ற பெண்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவிக்க வேண்டும். முக்கியமாக ஆண்களுக்கு ஒரு அச்ச உணர்வைத் தர வேண்டும். "கௌரவம்" என்றும் "ஆண்பிள்ளைத்தனம்" என்றும் அவர்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிற இந்த விஷயத்தை "அசிங்கம்" என்று உணரச் செய்யவேண்டும். அதைத்தான் நாம் நம் நோக்காக வைத்துக் கொண்டு, போராட்டத்தை முடிவு செய்ய வேண்டும்" என்று ஆவேசமாகப் பேசியதைக் கூட்டம் கைதட்டி வரவேற்றது.

"சும்மா ஊர்வலம், பெண்களுக்கு சம உரிமைக் கோஷங்கள், எங்கேயாவது மறியல் என்றால் பொது மக்களுக்குப் போய்ச் சேராது. ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்லை என்ற அலட்சியப் போக்குதான் இருக்கும். அதையும் மீறி அவங்களுக்குப் போய்ச் சேருகிற மாதிரி ஏதாவது நூதனப் போராட்டமாக இருக்க வேண்டும்.

தலைக்கு தலை பேசினார்கள். இதுவரை வெளியில் வராத பல சின்னவீட்டு விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கின. நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகப் போவது என்று முடிவானது. ஆனால் எல்லோர் கவனத்தையும் கவருகிற மாதிரி ஒரு கோஷம் - அப்போதைக்கு மட்டுமல்லாது அதற்குப் பிறகும் யோசிக்க வைக்கிற மாதிரி பொட்டில் அறைகிற மாதிரி ஒரு கோரிக்கையோடும் போக வேண்டும். என்ன கோஷம், என்ன கோரிக்கை?

அரை மணி நேரம் யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. மேனகா துணிச்சலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தாள். இந்த சமயத்தில் லாவண்யா கல்லூரியிலிருந்து வந்து விடவே, அறையை விட்டு வெளியே வந்து அவளிடம் "கொஞ்சம் நேரம் வேணும்னா பாட்மின்ட்டன் விளையாடிகிட்டு இரு. நான் விஷயத்தை முடிவு பண்ணிட்டுதான் கிளம்ப முடியும்" என்றாள். அவளோ அப்பாவுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கணும். நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ஆட்டோவில வந்திடுங்க" என்றபடி கிளம்ப, அவளுடைய பாட்மின்ட்டன் தோழி ஷீலா, "நான் வேணா ஆன்ட்டியை என் ஹோண்டாவில டிராப் பண்றேன். இன்னிக்கு விஷயம் சுவாரஸ்யமாக இருக்கு. நான் இருந்து என்னண்ணு பார்த்துட்டு வர்றேன்" என்று கைகொடுத்தாள்.

வந்த யோசனைகளிலேயே தடாலடியாக இருந்தது அகிலாவின் யோசனைதான். அவளுக்கு "அதிரடி அகிலா" என்றே பெயர் உண்டு. பெண்களுக்கு சம உரிமை என்பதில் மகா தீவிரம். ஒரு முறை பத்திரிகை ஒன்றில் அவளை திருமதி சீனிவாசன் என்று குறிப்பிட்டுவிட, அந்தப் பத்திரிகையாசிரியரை ஃபோனிலேயே பிடித்து விளாசி விட்டாள். என் கணவர் பெயரை வைத்து நான் அறியப்பட வேண்டியதில்லை. யாராவது கணவர் தன் பெயரோடு மனைவி பெயரை சேர்த்துச் சொல்கிறாரா? எங்கள் சங்கத்தில் உள்ள பெண்கள் தனியாகத்தான் அறியப்படுவார்கள். இந்த மறுப்பை உடனே வெளியிட வேண்டும் என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

அவள் தான் இப்போது அந்த "அதிரடி" ஐடியாவைத் தந்தது. "எங்களுக்கும் சின்ன வீடு வைத்துக் கொள்ள உரிமை வேண்டும். சின்ன வீடு வைத்துக் கொள்கிற பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை அவள் சொன்ன போது கூட்டத்தில் ஊசி விழுந்தால் சப்தம் கேட்கும் நிலைமை. அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி!

சங்கத்தில் கண்ணுக்குத் தெரியாத இரண்டு பிரிவுகள் இருந்தன. தீவிரவாதிகள், மிதவாதிகள், "சேச்சே... இது ரொம்ப அதிகம்" என்றும், "இது நம்மை நாமே கேவலப்படுத்திக்கற மாதிரி இருக்கு" என்றும் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்க, கூட்டம் இரண்டுபட்டது. ஏனோ மேனாகவுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. "கட்டாயம் இது பேசப்படும். கேள்வி கேட்பார்கள். பதில் சொல்கிற போது விளக்கம் தரலாம், பெண்களின் நிலைமை பற்றிப் பேசலாம். பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும்" என்ற கோணத்தில் பார்த்தாள்.

பல விவாதங்களுக்கும் சமாதானத்துக்கும் பிறகு கொள்கையளவில் விஷயம் ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அப்படியொரு பேனரைக் கையில் பிடித்துக் கொண்டு தெருவில் நடக்க பெரும்பாலும் எல்லோருக்கும் பிரச்சினை. சம்பந்தமே இல்லா விட்டாலும் இதில் அவரவர் கணவன்மாரும் சம்பந்தப்படுத்தப்பட்டு விடுவார்களே! தெருவில் வேடிக்கை பார்க்கிற குறும்புக்காரர்கள் சும்மா இருப்பார்களா? "உனக்கு சின்ன வீடா நான் இருக்கேன்" என்று கலாட்டா செய்ய மாட்டார்களா? மீண்டும் குழப்பம்.

இத்தனை நேரம் அமைதியாய் இருந்து ரசித்த ஷீலா திடீரென்று எழுந்தாள். அவள் சங்க உறுப்பினர் அல்ல. மருத்துவ மாணவி. மாதர் சங்கத் தோட்டத்தில் பாட்மின்ட்டன் விளையாட வருவாள். மேனகா மேல் அபார பக்தி. "இந்தப் படிப்பு மட்டும் இல்லேன்னா உங்ககூட வந்திடுவேன் ஆன்ட்டி" என்பாள். அவள்தான் சொன்னாள். "கோரிக்கையை என் பேரில் வையுங்கள் - இவளுக்கு சின்ன வீடு வைத்துக் கொள்ள உரிமை வேண்டும்னு சொல்லுங்க" என்றாள்.

கூட்டம் மறுபடியும் அதிர்ந்தது. கல்யாணமாகாத பெண் இவள். நாளை இவள் வாழ்க்கை பாதிக்கப்படாதா? அடுத்த நாள் கல்லூரிக்குப் போக வேண்டாமா? மாணவர்கள் சில்மிஷம் செய்ய மாட்டார்களா?

"பாப்" செய்யப்பட்ட தலையை அலட்சியமாக உதறினாள் ஷீலா. அவள் அப்பா ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசர். நாடு நாடாகச் சுற்றி விட்டு இப்போது கோவையில் செட்டிலாகி இருக்கிறார். பெண்ணைப் பையனாக வளர்த்திருந்தார். கல்லூரியில் "டாம்பாய்" என்ற பட்டப்பெயரே உண்டு அவளுக்கு.

"டாமிட்.... அதை அப்ப பார்க்கலாம். காலேஜ்ல ஒருத்தனும் வாலாட்ட மாட்டான் என்கிட்ட. அப்படியே கேலி பண்ணினாலும் நான் பார்த்துக்கறேன்" என்று கை விரல்ளை மடக்கி துப்பாக்கி சுடுவது போல பாவனை செய்தாள். கூட்டம் புரிந்து கொண்டு சிரித்தது. துப்பாக்கி சுடுவதில் மாவட்டத்தில் தங்க மெடல்காரி. மீறிப் போனா என்ன கமென்ட் அடிப்பாங்க? இவளுக்குப் பெரிய வீடு அமையறதே கஷ்டம். சின்ன வீடு வேறயா? என்பார்கள். "ஐ டோன்ட் கேர்" என்றாள்.

ஷீலாவுக்கு சௌகர்யமாக ஒரு வாரம் தள்ளி ஒரு நாள் குறிக்கப்பட்டது. காந்திபுரம் பஸ் நிலையத்தில் கிளம்பி ஜெயில் ரோடு வழியாக மேம்பாலம் ஏறி, என்.எச்.ரோடு வழியாக டவுன் ஹால், இரயில்வே ஸ்டேஷன் கடந்து கலெக்டர் அலுவலகம் போய் ஏன் இந்தப் போராட்டம் என்று விளக்கி ஒரு செய்தி கொடுக்க வேண்டும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. கோயம்புத்தூருக்கு இதெல்லாம் ஒத்து வருமா? அகிலா உற்சாகம் கொடுத்துப் பேச, மேனகா பலம் கொடுக்க மிதவாதிகள் முகத்தில் கலவரம், தீவிரவாதிகள் முகத்தில் எதிர்பார்ப்பு. ஷீலா படு உற்சாகமாக "ஆன்ட்டி, டோன்ட் ஒர்ரி... நான் பின்வாங்க மாட்டேன்" என்று உறுதி கொடுத்தாள்.

வீட்டிற்கு வந்த மேனகா தங்கள் சங்கத்தின் முடிவை மாதாந்திரப் பயணம் கிளம்புகிற அவசரத்தில் இருந்த மனோகரிடம் சொன்ன போது அதிர்ச்சியில் அவர் விழிகள் விரிந்தன. " என்ன பண்றீங்கன்னு யோசிச்சுதான் பண்றீங்களா? மகா கேவலமாயிருக்கு உங்க நூதன போராட்டம்" என்று "நூதன" கேலியாக ஒரு அழுத்தம் கொடுத்தார். முகத்தில் கோபம்.

"எங்களுக்கு என்ன கேவலம்? சின்ன வீடு வைச்சுக்கறவனுங்களுக்கு இல்லாத கேவலமா, எதிர்த்துப் போராடற எங்களுக்கு வந்திரும்? ஒவ்வொரு ஆம்பிளையையும் இது போய் டச் பண்ணும் பாருங்க. தான் எத்தனை மோசமானவனா வேணும்னாலும் இருக்கலாம், தன் பொண்டாட்டி மட்டும் பத்தரை மாத்துத் தங்கமா இருக்கணும்னு நினைக்கிறது ஒவ்வொரு ஆம்பிளைகிட்டயும் ரத்தத்திலேயே இருக்கு. தன் பொண்டாட்டியும் தன்னை மாதிரியே கிளம்பிட்டான்னா என்ன பண்றதுன்னு ஒரு பயம், வேண்டாம் - அட்லீஸ்ட் ஒரு எண்ணமாவது அவனுக்கு வந்தா அதுவே எங்களுக்கு வெற்றிதான். நீங்க வேணும்னா பாருங்களேன். இதுவரை வேற எந்தப் போராட்டத்துக்கும் கிடைக்காத பப்ளிசிட்டி இதுக்குக் கிடைக்கப்போகுது. பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்போறோம். மத்த மாதர் சங்கங்களோட ஒத்துழைப்பைக் கேட்கப் போறோம்.... "ஜஸ்ட் வெய்ட் அன்ஸ“" என்று உற்சாகமாக விவரித்தாள்.

"சரி சரி... போதும்.... கிளம்பறேன், ஏதாவது அவசரம்னா பாம்பே ஆபிசுக்குக் கூப்பிட்டு சொல்லு. எப்பவும் போல தினம் ராத்திரி நானே கூப்பிடறேன். இந்தத் தடவை எப்படியும் பத்து நாளாவது ஆயிடும்" என்றபடி டிரைவரைச் கூப்பிட்டுக் காரை எடுக்கச் சொன்னார்.

பம்பாயில் மட்டும் இவர்கள் நிறுவனத்திற்கு கெஸ்ட் ஹவுஸ் உண்டு. மற்ற ஊர்களில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது வழக்கம். எந்த சமயம் எந்த ஊரில் இருப்பார் என்பது தெரியாது ஆகையால் அவரே தினம் ஒரு முறை இரவு மேனகாவையும் மகளையும் அழைத்து, சில நிமிடங்கள் பேசி விடுவார். இந்த முறை கல்கத்தாவிலிருந்தும், இந்தூரிலிருந்தும் அழைத்த போதெல்லாம், அந்த சில நிமிடங்களிலும் போராட்டத்தைப் பற்றியும் அதன் நிறைகுறைகளைப் பற்றியுமே உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தாள் மேனகா. அகமதாபாத்திலிருந்த போது, போராட்டம் மகத்தான வெற்றி என்றும் அதைத் தொடர்ந்து சில சங்கடங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தாலும் மொத்தத்தில் அவள் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும் சொன்னாள். அவருக்குக் கவலையாக இருந்தது. இதென்ன ஆபாசப் போராட்டம்! என்று எரிச்சலாக வந்தது.

இவர் பம்பாய்க்குத் திரும்பிய பிறகு இடையில் மேனகாவிடமிருந்து அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் முக்கியமான கூட்டத்தில் இருந்ததால் இரவு தானே அழைப்பதாகச் சொல்லி வைத்து விட்டார் மனோகர். இரவு அவர் கூப்பிட்ட போது தொலைபேசிக்கருகிலேயே காத்திருந்த மேனகா உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள்.

போராட்டம் மகத்தான வெற்றியாம். பிரமாதமான விளம்பரமாம். பொதுமக்கள் ஆதரவு, குறிப்பாகப் பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிட்டியிருக்கிறதாம். ஒரு பிரபல வார இதழ் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை அட்டையிலேயே போட்டு, "இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்" என்று கவர்ஸ்டோரியே வெளியிட்டிருக்கிறதாம். குறைந்தது பத்துக் கணவன்மாராவது தங்கள் மனைவியரும் தங்களைப் போலவே கிளம்பி விட்டால் என்னாவது என்கிற உண்மை முகத்தில் அறைகிற மாதிரி இருப்பதால் திருந்தி விட்டதாகக்கடிதம் எழுதியிருக்கிறார்களாம். மிரட்டல் கடிதங்களும் உண்டாம்.

இப்போது கூப்பிடக் காரணம் விளம்பரத்தின் உச்சக்கட்டம். விஷயம் கேள்விப்பட்டு, சங்கத் தலைவி மேனகா உட்படி ஆறு பேரை டி.வி.க்காக பி.பி.சி. பேட்டி காண விரும்புகிறதாம். மேனகாவின் கணவர் என்ற முறையில் அவரையும் பேட்டி எடுக்க அனுமதி கேட்டிருக்கிறது. அதற்குத்தான் அத்தனை பரபரப்பு!

"ஐயோ" என்று தலையில் கை வைத்துக் கொண்டார். "இதோ பார் மேனகா... அந்தப் போராட்டம் அது இது எல்லாம் உனக்குத்தான் சரிப்பட்டு வரும் பி.பி.சி.யில வர்றதுன்னா சும்மாவா? உலகம் பூரா தெரியும். நான் ஒரு பெரிய தொழிலதிபர். இந்த மாதிரி கன்னாபின்னா பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது. என்னை இதில இழுக்காதே. பேசாம படுத்துத் தூங்கு, நாளைக்கு நைட் கிளம்பி வர்றேன். "குட் நைட்" என்றபடி ஃபோனை வைத்தார்.

"பிபிசியிலயிருந்து பேட்டி கேட்டிருக்காங்களாம். சின்ன வீடு வைச்சுக்கலாமா கூடாதான்னு உலகமகா பிரச்சினை... பொழப்பில்லை" என்றபடியே திரும்பினார்.

"அப்படியே என்னையும் டிவியில காட்டுவாங்களான்னு கேளுங்க" என்றபடியே சத்தமாக வாய் விட்டுச் சிரித்தாள் நளினா.

பம்பாய் காட்கோபரில் மனோகர் இவளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் வீடுதான் கடந்த மூன்று வருடங்களாக அவர் இங்கு வரும் போதெல்லாம் தங்கும் வீடு - கோவையில் மேனாகவுடன் குடியிருக்கும் வீட்டைக் காட்டிலும் கொஞ்சம் "சின்ன வீடு"

நன்றி: சந்திரக் கற்கள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link