சிறுகதைகள்


வடிவின் முடிவு

கூடல்.காம்

அலுவலகத்துக்கு வந்த வடிவுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது. இதுவரை தலைமை எழுத்தராக இருந்த வடிவுக்கு மேலாளராக பதவி உயர்வு அளித்து ஆணை வந்திருந்தது. சக எழுத்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஆணையாளர் வடிவைக் கூப்பிட்டு வாழ்த்தினார். வடிவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அன்றே பிரிவு உபச்சார நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.

வடிவு புதுவையில் பிறந்தவள். அவர் அப்பா பிரான்சு அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிசமான ஓய்வூதியம் பெறுபவர். அம்மா சட்டமன்றத்தில் நிதித்துறையில் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். வடிவின் கணவர் ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்களின் ஒரே மகள் இன்சுவை புதுவை தாத்தா வீட்டிலேயே சிறுவயது முதல் படித்துக் கொண்டிருக்கிறாள். வடிவின் அண்ணனும் அண்ணியும் பிரான்சில் பணியாற்றுகின்றார்கள்.

கண்டமங்கலத்திலிருந்து சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மேலாளராக நியமித்ததை வீட்டில் சொல்லி மகிழ்ச்சியடைய விரைந்து வந்தாள் வடிவு. மாமியார் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தாள்.

"மாமி எனக்கு பிரமோஷன் வந்திருக்குது" என்றாள் வடிவு.

"பிரமோஷன்னா சம்பளம் கூடவா வடிவு".

"ஆமாம் மாமி... கண்டமங்கலத்திலிருந்து சின்னசேலத்திற்கு மேனேஜராகப் போட்டிருக்கிறார்கள்".

"சின்னசேலமா.... ரொம்ப தூரமாச்சே வடிவு இங்கேயே கொடுக்கமாட்டார்களா".

"இங்கு மேனேஜர் பதவியில் ஒருவர் இருக்கிறார். அதனால் போட மாட்டார்கள்".

"உன் வீட்டுக்காரன் என்ன சொல்லுவானோ.." என்றாள் மாமி.

"ஒன்றும் சொல்லமாட்டார் மாமி". என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையில் நுழைந்து காபி கலந்து எடுத்துவந்து மாமிக்குக் கொடுத்தாள். அவளும் குடித்தாள். கணவருக்கு பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தாள்.

தொலைபேசியில் தன் அப்பா, அம்மாவிடம் தன் பதவி உயர்வை பற்றிக் கூறினாள் வடிவு. மகிழ்ந்தார்கள், வாழ்த்தினார்கள். மேலாளர் பதவி என்பது மிகவும் பொறுப்பான பதவி... அதிகாரம் செய்வதைவிட கண்ணியத்தோடு விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும் என்று வடிவின் அம்மா அறிவுரை கூறினாள். வடிவு மிகவும் மகிழ்ந்தாள்.

கணவனின் வருகைக்காக வடிவு காத்திருந்தாள், மனதைப் பிசைகின்ற வேதனையோடும் தவிப்போடும் இருந்தாள். என்ன சொல்வாரோ! என்ற நினைப்போடு சமையலில் மூழ்கினாள்.

கணவன் மகாதேவன் எட்டு மணிக்கு வந்தான், குடித்துவிட்டு வந்திருப்பது தெரிந்தது. வடிவின் உடல் மெலிதாக நடுங்கியது. தூணைப்பிடித்தபடி பயத்துடன் நின்றிருந்தாள் வடிவு. காபி கொண்டுவந்து கொடுத்தாள்.

கணவன் முகத்தில் லேசான புன்னகை படறவே....

"ஒரு சந்தோஷமான செய்திங்க".

"என்ன வடிவு... சம்பள உயர்வா..."

"இல்லைங்க... பதவி உயர்வு வந்துள்ளது. இங்கிருந்து சின்ன சேலம் யூனியன் ஆபிசில் மேனேஜராக போட்டுள்ளார்கள்".

"சின்ன சேலத்திற்கா.... வேண்டாம், வேண்டாம்..."

"வேண்டாம்னு சொல்ல முடியாதுங்க.... ஏன்னா என் இடத்தில் கோலியனூரிலிருந்து மாறுதல் செய்யப்பட்ட தலைமை எழுத்தர் இன்றே விடுவித்துக் கொண்டு வந்து பணியில் சேர்ந்துவிட்டார். நான் போய்த்தான் ஆக வேண்டும்".

"பதவி உயர்வு வேண்டாம்னு எழுதிக் கொடுத்திடு".

"எப்படிங்க எழுதிக் கொடுக்கமுடியும். சீனியாரிட்டி படிதாங்க எனக்கு இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது".

"என்னடி பெரிய சீனியாரிட்டி.... வேணாம்னு எழுதிக் கொடுத்திட்டு இங்கேயே வேலை செய்..." என்றான் கோபமாக.

"இனிமேல் எழுதி கொடுக்க முடியாதுங்க... கோலியனூரில் இருந்து தலைமை எழுத்தர் வந்து பணியில் சேர்ந்தவுடன் நான் ரிலீவ் ஆயிட்டேன்".

"யாரைக்கேட்டு ரிலீவ் ஆன... என்னைக்கேட்டியா?"

"எந்த கம்பெனியிலே என்ன வேலை செய்யரீங்கன்னு யாருக்குத் தெரியும்?"

"என்னடி? திமிரா பேசறே.... இப்பவே மேனேஜர் என்ற திமிர் வந்துவிட்டதா? நீ சின்னசேலம் போகக்கூடாது.... கோலியனூரில் இருந்து இங்க வந்தவன் யாரு... அவன் பேரு என்ன? அவனை அங்கு போகச் சொல்லிடறேன்".

"இது ஒண்ணும் தனியார் கம்பெனி இல்லை. நம்ம இஷ்டத்துக்கு போவதும் வர்றதும். இது அரசாங்க வேலை. அரசாங்கம் என்ன உத்திரவு போடுதோ அதன்படிதான் நடக்க முடியும்".

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... சின்ன சேலம் போகக்கூடாது".

அவன் குரலில் ஒரு இராணுவத்தனம் இருந்தது.

"வடிவு... அவன்தான் சொல்றானே, கோலியனூரில் இருந்து வந்த ஆளை போகச்சொல்லிட்டு நீ இங்கேயே வேலைசெய்... பதவி உயர்வு வேண்டாம்னு எழுதிக்கொடுத்துடு".

"அம்மா நீங்க ஏன் அவகிட்ட கேட்கறீங்க... அவ பெரிய மேனேஜர்... அந்தத் திமிர் அவளுக்கு.... இதோ பார் பதவி உயர்வு அது இதுன்னு சொல்லிட்டு நீ சின்னசேலம் போனே... நான் மனுஷனா இருக்க மாட்டேன்..." என்று சொல்லிவிட்டு கதவை படார் என்று அடித்து சாத்திவிட்டு வெளியே போய் விட்டான்.

வகுப்பு ஆசிரியை முன்னால் மதிப்பெண் குறைத்து வாங்கிய ஒரு மாணவி போலவே வடிவு மௌனமாக நின்றிருந்தாள். கண்களில் நீர் கட்டி இருந்தது.

இரவு சிற்றுண்டி செய்வதற்கு சமையல் அறைக்குச் சென்று சப்பாத்தி செய்வதில் முனைந்தாள். வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போதும் மாமியார் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தாள். மாமியாரை சாப்பிடக் கூப்பிட்டாள். வந்து சாப்பிட்டாள். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

மகாதேவன் வந்த பிறகு சாப்பிடலாம் என்று வடிவு காத்திருந்தாள். ஒன்பதரை மணிக்கு மகாதேவன் வந்தான்.

மனதுக்குள் பூரான் ஊர்கின்ற மாதிரி... மெல்லிய திகில் ஏற்பட்டது. சாப்பிட தட்டு எடுத்து வைத்தாள். ஏதும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு உள்ளே போனான்.

வீடு இனந்தெரியாத அமைதியாக இருந்தது. வடிவு சாப்பிட்டுவிட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு உள்ளே போனாள். மகாதேவன் கைலிக்கு மாறி கட்டிலில் படுத்திருந்தான். தொலைபேசி ஒலித்தது. வடிவு போய் பேசினாள் புதுவையிலிருந்து வடிவு அப்பாதான் பேசினார்.

"உன் பதவி உயர்வு மகாதேவனுக்கு பிடிக்கவில்லையாம். நான் எவ்வளவோ எடுத்துச்சொன்னேன். அவர் கேட்கவில்லை நாகரிகம் இல்லாமல் பேசினார். நான் தொலை பேசியை வைத்துவிட்டேன்மா..." என்றார்.

மனதைப் பிசைகின்ற வேதனையோடு கண்களில் நீர் தளும்பியது. வெட்டுண்ட பல்லி வாலாகத் துடித்தது அவளது இமைகள். பதில் சொல்ல எத்தனித்தாள். தொண்டை வரை வந்த வார்த்தைகள் வெளியே வரவில்லை தொலைபேசியை வைத்தாள்.

தொலைபேசி மூலம் அப்பாவிடம் மகாதேவன் பேசியது அவளுக்கு வேதனையை உண்டாக்கியது. அவளுடைய எண்ணச் சிறகுகள் பின்னோக்கிச் சென்றன.

மானாக மருண்டிருந்த பருவம் அது. அவளுடைய அப்பாவும் அம்மாவும் பிரான்சில் வேலை செய்து கொண்டிருந்ததால் வடிவு விழுப்புரத்தில் அவள் அத்தை வீட்டில் தான் படித்தாள். விழுப்புரத்தில் உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்து முதல் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கே பெருமை தேடித்தந்தாள். அவள் மேல்நிலைப்பள்ளி முடித்த உடனேயே... அவள் அத்தை வேலை தேடித்தரும் அலுவலகத்தில் பதிவு செய்தாள்.

அவளைக் கல்லூரியில் சேர்க்கச் சொல்லி அப்பாவும், அம்மாவும் கடிதம் போட்டனர். பிரெஞ்சு நாட்டில் வடிவைப்படிக்க வைக்காததிற்குக் காரணமே அந்த கலாச்சாரத்தால் மகள் கெட்டுவிடுவாளோ என்ற பயத்தால் விழுப்புரத்திலேயே படித்துக் கொண்டிருந்தாள். அத்தைக்கு இரண்டும் பெண் குழந்தைகளே. அவர்கள் இருவரும் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் ஸ்கூட்டரில் வடிவு போகும் போது விழுந்துவிட்டாள். அப்போது மகாதேவன் அவளை மருத்துவ நிலையத்தில் சேர்த்துவிட்டு ஸ்கூட்டரை முகவரி கேட்டு அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தான். இலேசான சீராய்ப்புதான் இருப்பினும் இவ்வளவு பொறுப்பாக நடந்து கொண்ட மகாதேவனை வடிவு மாமாவும், அத்தையும் மிகவும் பாராட்டினார்கள். இதனால் அவன் அடிக்கடி வீட்டிற்குவரத் தலைப்பட்டான். மகாதேவன் அப்போது முண்டியம்பாக்கம் ஆலையில் வாரச்சம்பளத்தில் வேலை செய்து வந்தான்.

அதன்பிறகு அதை விட்டுவிட்டு மின்சார இலாகாவில் ஆள் எடுக்கிறார்கள் என்று அங்கு சென்றான். அங்கு வேலை கிடைத்தது. அதில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் நிலையான பணியில் அவன் இருந்திருக்கலாம். குழி தோண்டுவதிலும், கம்பம் தூக்குவதிலும் அவனுக்கு ஆர்வம் இல்லை. அதனால் அதில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டான்.

இந்த சமயத்தில்தான் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் பணி கிடைத்தது. அடிக்கடி இவர்கள் சந்திப்பு காதலாக மாறியது. இது அவர்கள் அத்தை வீட்டிற்குத் தெரியாது.

வடிவு எழுத்தர் பணியில் இருந்து கொண்டே அஞ்சல் வழியில் தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தாள். அப்போது மகாதேவன் மதகடிப்பட்டு வேளாண்மை பண்ணையில் வேலை செய்தான். ஆனால் இவன் தொடர்ந்து மின்சார இலாகாவில் பணிபுரிவதாகவே பொய் சொல்லி வந்தான். அதை உலக அனுபவம் சிறிதும் இல்லாத வடிவு நம்பினாள்.

எழுத்தர் பணிக்கு மகள் தேர்வு செய்த செய்தி அறிந்து வடிவின் பெற்றோர் அவள் அண்ணன் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அவளது பெற்றோர்கள் விடுமுறையில் வந்தபோது அவள் அண்ணணுக்குத் திருமணமானது. அவள் பிரஞ்சு மொழி தெரிந்து இருந்தாலும் அவளது அப்பாவும் பிரான்சில் இருந்ததாலும் அவனுக்கும் பிரான்சிலேயே வேலை கிடைத்தது. அவள் அண்ணன் பொறியாளராக வேலை கிடைத்ததால் அவன் அங்கேயே தங்கவேண்டி வந்தது. அவள் அண்ணிக்கும் அங்கேயே வேலை கிடைத்தது.

அடுத்து விடுமுறைக்கு வரும்போது வடிவுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்காக நண்பர் ஒருவர் இடம் மாப்பிள்ளை பார்க்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றனர். மடியில் நெருப்பைக்கட்டிக்கொண்டு இனிமேல் என்னால் இருக்க முடியாது. வடிவுக்குத் திருமணம் செய்து விடவேண்டும் என்று அத்தை தன் அண்ணியான வடிவின் தாயிடம் கூறி இருந்தார்.

மடியில் நெருப்பு என்பது கல்யாண வயதில் மகள் என்பதின் பொருள். அந்த நெருப்பை எவன் தலையிலாவது வைத்து அவன் திரு திரு வென்று எரிவதைப் பார்த்தால் தான் அம்மாவுக்கும் நிம்மதி. அத்தைக்கும் நிம்மதி என்று வடிவு நினைத்தாள்.

பெண் விளக்கின் தீபமாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய தீயாக இருக்கக்கூடாது என்று அவளது அத்தை வடிவுக்கு அறிவுரை கூறி இருந்தாள். ஆனால் அவர்களது காதல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது.

மகாதேவனின் உண்மையான குடும்பச்சூழலையோ, அவன் பணியாற்றும் வேலையையோ அறிந்து கொள்ள முயலவில்லை. அமைதியான முகமும், கூர்மையான பார்வையும், வாலிபனுக்குரிய மிடுக்கும் கொண்ட மகாதேவன் வடிவை அடிக்கடி சந்தித்து அவளுக்குள் ஆசைத்தீயை தூண்டி விட்டான்.

வடிவு அலுவலகம் முடிந்து வெளியே வரும்போது மகாதேவன் அவளை வாயிற்படியிலேயே வரவேற்று நிற்பான் "எப்படி இதற்குள் வந்துவிட்டீர்கள்" என்று வடிவு கேட்டாள் "எனக்கு மேற்பார்வை இடும் பணிதானே இந்த பக்கம் வந்தேன்" என்று பொய் சொல்வான்.

அலுவலகம் போவதாக சொல்லிவிட்டு விடுப்பு விண்ணப்பித்து விட்டு மகாதேவனுடன் புதுவை திரையரங்கம் ஒன்றில் படம் பார்த்தாள் வடிவு. அப்பொழுது மகாதேவன் தன் திருமண ஆசையை வெளியிட்டான். அவளும் மகிழ்ந்தாள். குடும்பம் பற்றிக் கேட்டாள். அப்பா இல்லை அம்மா மட்டும் உண்டு. தன் சொந்த ஊரே முண்டியம்பாக்கம் தான் என்று சொன்னான்.

மற்றொரு நாள் கடலூர் அழைத்துச் சென்று அவளுக்கு ஒரு மோதிரம் வாங்கி அவள் விரலிலேயே அணிவித்தான். மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு பிறகு கழற்றி அவனிடமே கொடுத்து விட்டு,

மோதிரம் என்பது திருமணமான பிறகுதான் அணியவேண்டும் என்று அவள் அம்மா கூறியதை அவனுக்கு நினைவுபடுத்திவிட்டு அன்று வீட்டுக்கு வருவதற்கு சற்று காலதாமதம் ஆனது. நெருங்கிப் பழகினார்களே ஒழிய உடல் ரீதியாக அவள் களங்கப்படவில்லை. ஒரு சில சமயம் அவன் அறை எடுத்துத் தங்கலாம் என்று கூறும்போதெல்லாம் அவள் மறுத்துவிடுவாள். திருமணமான பிறகுதான் இவ்விதம் தங்க வேண்டும். அதற்கு முன்பு உடன்பட மறுத்துவிட்டதால் மகாதேவன் அவளை உயர்வாகக் கருதினான்.

மகளின் திருமண ஏற்பாடு பற்றி அவரது நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினதால் வடிவுக்கு கடலூரில் ஒரு பொறியாளரின் ஜாதகத்தை வாங்கி பிரான்சுக்கு அனுப்பி இருந்தார். அவரது நிழற்படமும் அனுப்பி இருந்தார் முடித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு வடிவின் பெற்றோர்கள் வந்தனர்.

இதுபற்றி மகளின் கருத்தை கேட்க மாப்பிள்ளை நிழற்படத்தையும் குடும்பச் சிறப்பையும் எழுதி கடிதம் எழுதினார். கடிதத்தையும் நிழற்படத்தையும் பார்த்த வடிவு மனம் ஊசலாடியது. மனம் குழப்பம் அடைந்தாள்.

ஒரு வாரம் கழித்து மகாதேவன் நிழற்படத்தை வாங்கி தான் மணந்து கொண்டால் மகாதேவனைத்தான் மணந்து கொள்வேன் இல்லையேல் மரணதேவன் தான் என்று விரிவாகக் கடிதம் எழுதினாள். பொறியாளரை விட மகாதேவன் நிழற்படத்தில் மிகவும் அழகாகவே விளங்கினான்.

வடிவின் கடிதத்தைக் கண்ட பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர். பெண் குழந்தையை எவ்வளவு நெருக்கமான உறவினர் வீடாக இருந்தாலும் வளர்வதற்கு விடக்கூடாது என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை வடிவின் கடிதம் அவர்களுக்கு உணர்த்தியது.

வடிவு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதவில்லை. வடிவின் அப்பாவும் அம்மாவும் ஒரு மாத விடுப்பில் வந்தனர். வந்தவர்கள் வடிவின் திருமண ஏற்பாட்டையோ மகாதேவனைப் பற்றியோ வடிவிடம் விசாரிக்கவில்லை. வடிவின் அம்மாவுக்கு புதுவையில் அரசுப் பணி பெற முயற்சி மேற்கொண்டு வெற்றியும் பெற்றனர். நிதித்துறை செயலாளராக அவருக்கு வேலை கிடைத்ததால் புதுவையில் தன் தாயுடன் தங்க வேண்டியதாயிற்று

ஊருக்குக் கிளம்ப ஒரு வாரத்திற்கு சற்று முன்பாக வடிவிடம் இது பற்றி அவள் அப்பா கேட்டார். அப்பாவிடம் மிகவும் பயப்படும் வடிவு அம்மாவிடம் தனியே தன்னை மகாதேவன் விபத்தில் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தது முதல் பழகிய எல்லாமே மனந்திறந்து சொல்லிவிட்டாள். அன்றே தன் மைத்துனரை வரவழைத்து மகாதேவன் பற்றிய விபரத்தை அறிந்து வரச் செய்தார்.

மறுநாள் வடிவின் அத்தையுடன் மாமாவும் புதுவை வந்தனர். மகாதேவனுக்கு ஒரே ஒரு வீடு மட்டுமே உண்டு. நிலபுலன் ஏதும் இல்லை. தாய் மட்டிலும் உண்டு. தந்தை இல்லை... சேதாரப்பட்டில் ஒரு பேப்பர் மில்லில் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர் என்ற உண்மையை தெரிந்து வந்தனர்.

மாலை வீட்டிற்கு வந்த வடிவிடம் அவள் மாமாவே எடுத்துக்கூறினார். முதலில் அதிர்ச்சி அடைந்த வடிவு. மகாதேவனைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து இருந்தால் வடிவை பிரான்சிலேயே படிக்க வைத்திருக்கலாமே என்று வடிவின் தாய் வேதனைப்பட்டாள். மகாதேவனைப் பார்த்து நேரில் பேச வடிவின் மாமா சேதாரப்பட்டு பேப்பர் மில்லுக்குச் சென்றார். மகாதேவன் படித்த பட்டதாரிதான். ஆனால் வேலை பார்ப்பது இரண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஆள் அழகாக இருந்தான். இந்தத் தகவலை வந்து அவர் சொன்னார்.

வடிவு மிகவும் உறுதியாக இருந்ததால் வேறு ஏற்பாடு செய்ய வடிவின் பெற்றோர் விரும்பவில்லை. ஒரே பெண் திருமணமான பிறகு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம் என்று இருவரும் பேசி முடிவு செய்தனர்.

மகாதேவனுக்கு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி காலாப்பட்டு பகுதியில் இருந்து ஒரு தொழிற்சாலையில் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். வடிவு மிகவும் மகிழ்ந்தாள்.

அவர் பிரான்ஸ் சென்று ஆறுமாதங்களில் மீண்டும் திரும்புவதாகக் கூறிச் சென்றார். விடுமுறையில் வந்தவுடன் திருமணம் செய்துவிடுவதாக கூறிவிட்டுச் சென்றார். தனியே மகாதேவனை சந்தித்து வடிவு இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினாள்.

வடிவு தன் தாயுடன் புதுவையிலிருந்து கண்டமங்கலத்திற்கு வந்து பணியாற்றி வந்தாள். மகாதேவன் புதுவையில் ஒரு வாடகை வீட்டில் தன் தாயை அழைத்து வந்து தங்கினான். மகாதேவன் அடிக்கடி புதுவையில் வடிவு வீட்டுக்கு வருவான். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வான். இரகசிய சந்திப்பை வடிவு ரத்து செய்தாள்.

விடுமுறையில் வடிவின் அப்பா வந்தார். மாப்பிள்ளையைப் பற்றி வடிவின் தாயே மிகவும் பெருமையாகப் பேசினாள். திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. மகாதேவன் - வடிவு தம்பதிகளாயினர்.

கண்டமங்கலத்தில் மகளுக்கு ஒரு வீடு வாங்க நினைத்தார். அவருக்குப் பிடித்தமான அமைப்பில் வீடு கிடைக்கவில்லை. புதுவையில் ஒரு வீடு வாங்கி வடிவு பெயரில் பதிவு செய்து கொடுத்தார். அந்த வீட்டிற்கு மகாதேவனும் - வடிவும் குடிபோனார்கள். மகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்தார். அவரும் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு நிரந்தரமாக புதுவையிலேயே தங்கினார்.

மகாதேவனும் வடிவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். திருமணமான மறு ஆண்டே இன்சுவை பிறந்தாள். இன்சுவை பிறந்தது முதல் தன் பாட்டியிடமே வளர்ந்தாள். புதுவையிலிருந்து கண்டமங்கலம் வந்துபோனாள் வடிவு. காலாப்பட்டில் வேலை செய்த மகாதேவன் ஏதோ தகராறில் எம்.டியை நேருக்கு நேர் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு அவரைத் தாக்கவும் முயன்றதாக பணிநீக்கம் செய்யப்பட்டான்.

பணியில் இல்லாமல் இருந்ததால் கெட்ட நண்பர்களுடன் கூடி குடிக்கவும், புகைப் பிடிக்கவும் கற்றுக்கொண்டான். நாளுக்கு நாள் குடித்துவிட்டு பொது இடங்களிலும், வீட்டிலும் தரக்குரைவாக நடந்து கொண்டு வருவதை வடிவின் பெற்றோர் கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டனர்.

மகளின் மணவாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதை நினைத்து நினைத்து வேதனைப்பட்டனர். அரசுப் பணியில் வடிவின் தாய் நிதித்துறை செயலாளராக இருக்கும்போது அவள் மருமகன் இப்படி பொது இடங்களில் கீழ்த்தரமாக நடந்து கொள்வது கேள்விப்பட்டு கண்டமங்கலத்திற்கே குடிபெயர்ந்து போகும்படி மகளுக்கு யோசனை கூறினாள். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த மகாதேவன் வடிவு இதில் மிகவும் உறுதியாக இருந்ததால் கண்டமங்கலத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்கள். புதுவை வீடு இரண்டாயிரம் ரூபாய் வாடகை விடப்பட்டது. அந்த வாடகை பணத்தை தன் மகள் இன்சுவை பெயரில் சேமிக்குமாறு தன் அப்பாவிடம் வடிவு கூறிவிட்டாள்.

மகாதேவனை ஏதாவது ஒரு வேலை தேடும்படி வடிவு கட்டாயப்படுத்தினாள். வில்லியனூர் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. தினமும் வேலைக்குப் போய் வந்தான். இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம். மகாதேவன் குடிப்பதை நிறுத்துவதில்லை. அவன் சம்பளத்தை அவள் கேட்பதும் இல்லை.

ஐந்து ஆண்டுகளில் பல தொழிற்சாலை மாறிவிட்டான். வீட்டில் உட்கார்ந்திருக்காமல் எங்காவது வேலை செய்யட்டும் என்று வடிவு அவன் சம்பளத்தை கேட்பதே இல்லை. அவன் சம்பளம் அவனுக்கே செலவானது. ஒரு கம்பெனியின் வேலை நிறுத்தத்திற்கு மகாதேவனே காரணம் என்று தெரியவந்து பணி நீக்கம் செய்தனர். தொழிற்சங்கம் இவனுக்கு ஆதரவு தராததினால் ஓராண்டுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தான்.

தன் மணவாழ்க்கை சரியில்லாமல் வடிவு முதன் முதலாக கண்ணீர்விடத்தலைப்பட்டாள். தினமும் குடிகாரனுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டாள். எழுத்தரில் இருந்த வடிவு தலைமை எழுத்தர் பதவி கிடைத்த போது அவனிடம் ஆசையாய், ஆவலாய் சொல்ல வந்த போது வீட்டில் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தான் மகாதேவன்.

தான் செய்த தவறுக்கு யாரிடம் போய் ஆறுதல் பெற முடியும்? மகாதேவனை இனி நம்பிப் பயனில்லை என்று இடையில் நின்றுபோன தன் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாள். அலுவலகத் தேர்வுகளை எழுதித் தேறினாள். கடைசியில் மேலாளர் பதவி உயர்வும் அவளுக்குக் கிடைத்துவிட்டது.

கடைசியில் ஏதோ ஒரு கம்பெனியில் மகாதேவன் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தான். குடிக்கப் பணம் வேண்டுமே அதற்காகவே அவன் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்தான்.

வடிவு பணியில் சேர ஒரு வாரம் அவளுக்கு சலுகை உண்டு என்பதால் இது பற்றி பேசாமல் வடிவு அமைதியாகவே இருந்தாள். மகாதேவனும் இது பற்றி அவளிடம் ஏதும் கேட்கவில்லை. மறுநாள் புதுவைக்கு போய் வருவதாக தன் மாமியரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பேருந்து சென்று கொண்டிருந்தபோது வில்லியனூர் கடைவீதியில் சாலை ஓரத்தில் மயங்கி அலங்கோலமாகப் படுத்துக்கிடப்பதைக் கண்டாள். பேருந்தில் இருந்த ஒருவர்,

"யாரோ குடிகாரன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு சாக்கடை ஓரம் கிடக்கிறான் பார்த்து போங்க டிரைவர்.." என்று கூறியது அவள் காதில் தீயாகச் சுட்டது.

திருமணமான பன்னிரண்டு ஆண்டுகளில் ஒரு தடவை கூட தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று தன் பெற்றோரிடம் வந்து அழுததில்லை. ஆனால் இன்று தாயின் மடியில் தலை வைத்து கதறினாள்.

"அம்மா நான் மோசம் போய்விட்டேன் அம்மா... என் தலையில் நானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டேன்.... இனிமேல் நான் அவனோடு வாழ எனக்கு விருப்பமில்லை அம்மா. வில்லியனூர் கடைவீதியில் சாக்கடை ஓரத்தில் கிடக்கிறான். அவனை எப்படியம்மா என் கணவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்" என்று கதறினாள்.

வடிவின் அப்பா பதில் ஏதும் பேசாமல் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து காரை எடுத்துக்கொண்டு வில்லியனூர் சென்றார். வடிவு சொன்ன இடத்தில் பார்த்தார். மகாதேவன் போதை தெளிந்து உட்கார்ந்திருந்தான். பார்க்காதது போல் காரை வேறு வழியாகத்திருப்பி வீடு வந்து சேர்ந்தார். மகளை பணியில் சேரும்படி கூறினார். வடிவு கண்டமங்கலம் திரும்பினாள்.

அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் கட்டிலில் மகாதேவன் படுத்திருப்பதை பார்த்தாள். மாமியார் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள். அழுகையாய் வந்தது. குளித்தாள் வேற்றுடை அணிந்து கொண்டாள். சமையல் அறை சென்றாள். சாதமும் காரக்குழம்பும் அப்பளமும் பொரித்து வைக்கப்பட்டிருந்தது. தெருக் கதவைத் தாளிடாமல் கூட அம்மாவிம் மகனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரசம் கூட்டி வைத்தாள். எதையோ எடுக்க குனிந்தபோது மகாதேவன் அவளை எட்டி உதைத்தான். வடிவு கீழே ஐயோ என்று கதறியபடி விழுந்தாள். இடுப்பின் நடு எலும்பில் உதைத்த இடம் பிராணன் போவது போல் அவளுக்கு வலித்தது.

"எங்கடி போனே... யாரைக் கேட்டு வீட்டை விட்டுப் போனே.. தேவடியா மகளே..."

சத்தம் கேட்டு எழுந்தாள் அவன் தாய்.

"டேய்... ஏண்டா அவளை அடிக்கிறே ஏங்கிட்ட சொல்லிட்டுத் தாண்டா அவ அப்பா வீட்டுக்குப் போனாள்... உனக்கென்னடா வந்தது? இப்படி குடித்துவிட்டு கலாட்டா செய்யிற" என்றாள் பெற்றவள்.

பெற்றவளையே கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

இடுப்பில் அவன் காலால் உதைத்தது அவளுக்கு உடனே எழுந்திருக்க முடியவில்லை. இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். தலை பாரமாக வலித்தது.

நெஞ்சிக்குள் அடைத்துக் கிடந்த பாரத்தை கண்ணுக்குள் கொண்டுவர முயன்றாள். முடியவில்லை கண்ணில் நீர் வரவில்லை. வறண்டு போன மாதிரி இருந்தது.

மகாதேவன் ஏதேதோ பேசினான். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்னடி முறைக்கிறாய்... எங்கே போய் எவன் கூட சுத்திட்டு வந்தே... உன் இஷ்டத்துக்கு வர்றதும் போறதும் இது என்ன சத்திரமாடி..." என்று சொல்லிக்கொண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டினான் மகாதேவன்.

வடிவுக்கு கண் சிவந்து முகம் முழுக்க ஈரம் படர்ந்திருந்தது. நெஞ்சில் ஆவேச அலை அடித்தது. ஆனால் வடிவு அடக்கிக் கொண்டாள். நாக்கு பிறழவில்லை. அவமானம் அவளை கூனிக் குறுகச் செய்தது. கழுகிடம் அகப்பட்ட கோழிக் குஞ்சானாள்.

வடிவு வாய் திறக்கவில்லை. கண்களில் நீர்த்திரை மறைக்க துடைத்துக்கெண்டு மெல்ல எழுந்தாள். தோட்டத்துப் பக்கம் சென்று வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அடிவயிற்றில் பகீர்னு ஒரு கலக்கம்.

தட்டை எடுத்து அவனே போட்டு சாப்பிட்டான். வெளியே போய்விடடான். உள்ளே வந்து வெந்நீர் சுடவைத்தாள். மீண்டும் குளித்தாள். அடிபட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

மாமியாருக்கு சாப்பாடு போட்டு கொண்டு போய் அவள் படுத்திருந்த இடத்தில் வைத்தாள். எழுந்து சாப்பிடச் சொன்னாள்.

வடிவு சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் குடித்தாள்.

அறையினுள் சென்றாள். கதவைத் தாழிட்டாள். ஒரு பெரிய சூட்கேஸ் அவள் அப்பா பிரான்சில் இருந்து வாங்கித் தந்தது. தன் சான்றிதழ்களை எடுத்து வைத்தாள். தன்னுடைய துணிகளை மடித்து வைத்தாள். தன்னுடைய நகைகளையும், பாஸ்புத்தகங்களையும் எடுத்து வைத்தாள். நாளைக்குக் கட்டிக் கொண்டு போக மட்டும் துணிகளை தனியே எடுத்துவைத்தாள். சூட்கேசை பூட்டி கட்டிலுக்கு கீழே தள்ளி வைத்தாள்.

ஒரு சிறிய தோல்பையில் மாறுதல் ஆணை விடுகைச் சான்றிதழ் பேனா மற்றும் பெட்டி சாவி இவைகளை வைத்து கட்டிலின் கீழ் வைத்தாள். வெளியே வந்து சமையல் அறையை சுத்தம் செய்தாள். அவளுக்குப் பசியே இல்லை. தண்ணீர் மட்டும் குடித்தாள்.

சமையல் அறையிலேயே படுத்தாள். உடம்பெல்லாம் வலித்தது. உறக்கம் வருவதுபோன்ற உணர்வு. கதவை தடால் என திறக்கும் ஒலி.... மீண்டும் குடித்துவிட்டு வந்திருப்பான் என்று நினைத்து அமைதியாகப் படுத்திருந்தாள்.

வந்து கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

"ஏண்டா அழிஞ்சு போற... வாயை முடிக்கினு வேலைக்கு போடா.... உன்னை நினைக்கும் போது பெத்த வயிறு பத்தி எரியுதுடா" என்றாள் அவன் தாய்.

"சே வீடா இது... ஏய்... வடிவு அந்த கோலியனூரில் இருந்து வந்த பையனை பார்த்தேன்... நல்லா நாலு டோஸ் குடுத்துட்டு வந்தேன். நீ புரமோஷன் அது இதுன்னு கிளம்பினே... காலை ஒடிச்சி அடுப்பிலே போடுவேன்... மரியாதையா இங்கேயே இரு... என்னடி நான் தாலி கட்டின புருஷன் கேக்கறேன்... பதிலே பேச மாட்டியா? என்ன? வார்த்தைக்கு வார்ததை பேசுவியே...ஓ.. பேசாம நைசா போய் வேலையிலே சேர்ந்துடலாம்னு பார்க்கிறியா?"

அவள் படத்திருந்த இடத்திற்கு வந்தான்.

"ஏய்... என்னடி... பத்தினி வேஷம் போடறியா? நான் தாலி கட்டின புருஷன்டி... குடிப்பேன்.. கூத்தியா கிட்டே போவேன்.. அதை கேட்க நீ யார்டி... நீ யார்? நீ அடிமைடீ... நாய்குட்டி... நான் யார் தெரியுமா? தாலி கட்டின புருஷண்டி..."

வடிவு அமைதியாகப் படுத்திருந்தாள். வடிவின் நெஞ்சு நடுங்கியது.

வடிவு படுக்கை அறையை பூட்டிவிட்டதால் அங்கு சென்று கதவைத் தட்டியபடி இருந்தான். தட்டுத் தடுமாறி கீழே விழுந்தான்.

கெட்ட வார்த்தைகளால் வடிவைத் திட்டிக் கொண்டிருந்தான்.

வடிவு அமைதியாகப் படுத்திருந்தாள்.

மீண்டும் கெட்ட கெட்ட வார்த்தையாய் திட்டினான்.. எழுந்தாள் வடிவு

"நானும் பார்த்துகினே இருக்கிறேன். உன் இஷ்டத்துக்கு பேசிட்ட இருக்கிற... உன்னை யார் என்ன சொன்னாங்க... குடிப்பது உன் இஷ்டம்... குடி... அன்னிக்கு வில்லியனூர் ரோடு ஓரம் அலங்கோலமா கெடந்ததை நானும்தான் பார்த்தேன். நீ என்ன மனுஷனா... உனக்கெல்லாம் ஒரு குடும்பம்... ஒரு பொண்டாட்டி.."

"ஏய்.... நான் உனக்கு தாலி கட்டின புருஷண்டி... நான் சொல்ற மாதிரிதான் நீ கேட்கணும்.... அப்படின்னா இரு. இல்லை போடி வெளியே... நீ போனா வேற ஒருத்தி இங்கே வர தயாரா இருக்காடி..."

"மிஸ்டர் மகாதேவன்... வாயை மூடு..."

"என்னடி சொன்னே... நான் உன் தாலி கட்டின புருஷன்டீ... என்னைப் பார்த்து பேர் சொல்லிக் கூப்பிடற." என்று கத்திக் கொண்டே வடிவின் கன்னத்தில் அறைந்தான் மகாதேவன்.

"மறுபடியும் சொல்றேன் கேட்டுக்க. இனிமேல் உனக்கும் எனக்கும் சரிவராது.... நீ உன் பாதையை பார்த்துக்கோ நான் என் பாதையை பார்த்துக்கறேன்.... மிஸ்டர் மகாதேவன் நீ கட்டிய தாலி தானே... இதோ எடுத்துக்கொள்..." என்று சொல்லிக்கொண்டே தாலியை கழுத்தில் இருந்து எடுத்து கயிற்றோடு அவன் மேல் வீசினாள். அது அவன் காதில் போய் தொங்கியது. அறையைத் திறந்தாள். கட்டிலுக்கு அடியில் இருந்த சூட்கேசை எடுத்தாள். வேறொரு பையில் புடவையை எடுத்து வைத்தாள். தோல்பையையும் எடுத்துக்கொண்டாள். வீட்டைவிட்டு வெளியே வந்தாள். கண்களில் கண்ணீர் மறைக்க போய்க் கொண்டிருந்தாள்.

மகாதேவன் அப்படியே கற்சிலையாய் நின்றான்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link