சிறுகதைகள்


தெய்வம் நின்று கொல்லும்

கூடல்.காம்
திருக்குறள் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையனை வலுக்கட்டாயமாக வகுப்பறைக்குள் இழுத்துக்கொண்டு வந்தார்.

"வாத்தியார் ஐயா... இவன் பள்ளிக்கூடம் வராமல் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தான்... அடித்து இழுத்து வந்தேன்".

"இவன் உங்கள் மகனா..."

"ஆமாம் ஐயா... இவனை எப்படியாவது படிக்க வைக்கணும்னு ஆசைப்படறேன்... இவன் எலி பிடிக்கவும். மீன் பிடிக்கவும் ஓடிடறான்".

பையன் தேம்பி அழுதபடி இருந்தான்.

"நான் கவனித்துக்கொள்கிறேன்... நீங்கள் போயிட்டு வாங்க.... இனிமேல் அவன் என் பையன் மாதிரி..."

லாலாபேட்டை காவிரிக்கரையில் வளமான ஊர். வாழையும் தென்னையும் அங்கு கண்கொள்ளாக் காட்சி. ஆற்றுப்படுகையைத் தாண்டினால் ஊர். பல ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரில் பள்ளிக்கூடமே இல்லை. சாமிநாதன் அவ்வூருக்கு வந்து பள்ளிக்கூடம் தொடங்கினார். அப்பள்ளியை ஊராட்சி மன்றமே நடத்திவந்தது. சம்பளம் ஊராட்சி மன்றத் தலைவரே கொடுத்தார். பள்ளியின் பெயரே பஞ்சாயத்து தொடக்கப்பள்ளிதான். ஓராசிரியராக இருந்த பள்ளி இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தது.

அங்கு பத்து வயது நிரம்பியவர்கள் கூட முதல் வகுப்பு படித்தார்கள். பள்ளி குருகுலம் மாதிரி நடந்தது. தந்தையால் இழுத்து வரப்பட்ட பையன் பெயர் பலராமன். ஆசிரியரிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டான். சிலநேரம் ஆசிரியர் வீட்டிலேயே சாப்பிடுவான். அங்கேயே படுத்துத் தூங்கி விடுவான். பலராமன் படிப்பில் ஊக்கத்தை ஏற்படுத்தினார் ஆசிரியர்.

எப்பொழுதும் பத்து, பதினைந்து மாணவர்கள் அசிரியர் சாமிநாதனுடனேயே இருப்பார்கள். காவிரியில் குளிக்கப் போனாலும் அவருடனேயே போவார்கள். சில நேரம் காவிரிக் கரையிலேயே பாடங்கள் சொல்லித் தருவார். ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட பாடங்களைக் கவனித்தனர்.

பலராமன் மிகவும் ஊக்கமாக படிக்கத் தொடங்கியதும் ஆசிரியருக்கு அவன்மேல் ஒரு தனி ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவர்கள் பலராமன் மேல் பொறாமை கொள்வார்கள்.

ஆசிரியர் சாமிநாதன் ஒரு தனிப்பிறவி. எல்லோருடைய அன்பையும் பெற்றவர். யாருக்கும் அவர் விரோதி இல்லை. துன்பப்படுபவர்களைப் பார்த்து மனித நேயத்தோடு உதவி செய்வார். ஊரில் ஏதாவது தகராறு என்றால், அந்த தகராரை நடுநிலைமையாக இருந்து தீர்த்து வைப்பார். அவருடைய தீர்ப்பு இரண்டு பக்கமும் மன வருத்தம் இல்லாமல் சமாதானமாகவே போவார்கள். தற்செயலாக சாமிநாதன் வெளியூர் சென்றிருந்தால், அவர் வந்த பிறகுதான் அதை விசாரிப்பார்கள். பஞ்சாயத்து தலைவர், சாமிநாதன் மேல் அளவு கடந்த அன்பை வளர்த்துக் கொண்டவர். இருவரும் நல்ல நண்பர்கள்.

பலராமனை ஆசிரியரே ஆறாம் வகுப்பில் குளித்தலை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். சனி ஞாயிறில் ஆசிரியர் வீட்டிற்கு வந்து விடுவான். ஒருவாரம் படித்த படிப்பைப் பற்றி கேட்பார். தெரியாததை சொல்லித் தருவார். ஊரில் பலராமனை ஆசிரியர் சாமிநாதனின் செல்லப்பிள்ளை என்று கூறினார்கள். சில சமயங்களில் நோட்டுகள், புத்தகங்கள் ஆசிரியரே வாங்கித் தருவார். தன் வீட்டுக்கு துணி எடுக்கும்போது அவனுக்கும் எடுத்துத் தருவார். பலராமன் ஊக்கமாகப் படித்து பள்ளி இறுதி வகுப்பு தேறினான். அந்தப் பள்ளி எட்டாம் வகுப்பு வரையில்தான் இருந்தது. பள்ளி இறுதி வகுப்பு எட்டாம் வகுப்புதான்.

அந்த காலத்தில் எட்டாம் வகுப்பே பெரிய படிப்பு

மணியம் டெஸ்ட்டுக்கு விளம்பரம் வந்தது. ஆசிரியர் பலராமனை மணியம் டெஸ்ட் எழுத விண்ணப்பம் அனுப்பினார். அனுமதி கிடைத்தது. அதற்கான புத்தகங்களை ஆசிரியரே வாங்கிக் கொடுத்தார். அவரே கற்பித்தார். தேர்வு வந்தது. எழுதினான். தேர்ச்சி பெற்றான். அப்போது உள்ளூரில் மணியம் வேலை பார்த்திருந்தவர் காலமானதால் அந்த வேலைக்கு பலராமனை விண்ணப்பம் அனுப்பச் சொன்னார். மேலும் இருவர் விண்ணப்பித்திருந்தனர்.

பலராமனுக்குக் கிடைக்க முயற்சி மேற்கொண்டார். முயற்சி திருவினையாக்கியது. பலராமன் லாலா பேட்டையின் மணியக்காரராக நியமிக்கப்பட்டான். ஆசிரியர் சாமிநாதன் மிகவும் மகிழ்ந்தார்.

வரிவசூல் செய்வது மட்டுமல்ல. ஊரில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் மணியக்காரரே பொறுப்பாகும். நல்ல மதிப்பு மிகுந்த உத்தியோகமாகக் கருதப்பட்டது. வரிவசூல் கணக்குகளை எப்படி எழுத வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பலராமனுக்கு ஆசிரியர் சாமிநாதனே நல்ல பயிற்சி கொடுத்தார்.

பலராமனுக்கு பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். ஆசிரியர் சாமிநாதனே நல்ல குடும்பமாகப் பார்த்து குளித்தலையில் திருமணம் நடந்தது. ஆசிரியரே முன்னின்று நடத்தி வைத்தார்.

காலங்கள் கடந்தன. பலராமன் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. சம்பாதிக்க வேண்டும் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று வெறி ஏற்பட்டது. அவனுக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடுத்தடுத்து பிறந்தன. ஒன்றிய அலுவலகத்தில் காண்ட்ராக்டராக பதிவு செய்து கொண்டான். சாலை வேலைகளை எடுத்து செய்தான். கால்வாய் வெட்டும் வேலை எடுத்து செய்தான். பள்ளிக்கூட கட்டிடங்கள் கட்டும் வேலையும் எடுத்து செய்தான். குறுகிய காலத்தில் பத்து ஏக்கர் நிலம் வாங்கிவிட்டான். தன் கூரை வீட்டை இடித்துவிட்டு மாடி வீடாகக் கட்டினான்.

அந்த காலத்தில் ரேஷன் கடை தொடங்கப்பட்ட நேரம். அதைத் தன் உறவினர் பெயரில் இவனே நிர்வகித்து வந்தான். உணவுப் பொருட்களை கருப்பு மார்க்கெட்டில் விற்று இலாபம் ஈட்டினான். தன்னை வளர்த்து ஆளாக்கிய ஆசிரியரை மதிப்பதில்லை. ஊர் பஞ்சாயத்து கூடி ஏதேனும் பிரச்சனை என்றாலும் இவனே கூப்பிட்டு விசாரித்தான். ஆசிரியரை ஒதுக்கத் தொடங்கினான். காரணம் அவனை எல்லாவற்றிலும் முதன்மைபடுத்த நினைத்ததுதான். இதனால் அவன்மேல் நம்பிக்கை இழந்து இழித்துப் பேசினார்கள்.

ஆசிரியர் தான் முன்பு வாங்கிய கூரை வீட்டிலேயே அமைதியாக வாழ்ந்து வந்தார். அவரது பிள்ளைகள் வெளியூரில் படித்து வந்தனர். ஒரு மகனுக்கு அரசுப் பணி கிடைத்தது. திருமணமும் செய்து வைத்தார். எந்த உதவியையும் பலராமனிடம் சாமிநாதன் நாடியது இல்லை.

ஊராட்சி மன்றத் தலைவராக தன் உறவினரை தேர்வு செய்ய வைத்து, அதன் நிர்வாகத்தையும் பலராமனே செய்து வந்தான். அதன்பிறகு வட்டிக்கு பணம் கொடுக்கத் தொடங்கினான். அசலும் வட்டியும் சேர்த்து அவன் கூறும் கெடு தவறிவிட்டால் முழுகி விட்டதாகக் கூறி நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வது உண்டு.

அரசியல் செல்வாக்கு பெற்றால் பல வழிகளில் வருமானம் கிடைக்கும் என்று எண்ணி தன்னை ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரன் என்று காட்டிக்கொண்டான். ஊர் பொதுமக்கள் அவனை மீறி எந்த காரியமும் செய்ய முடியாத அளவுக்கு அவனது செல்வாக்கு பெறுகியது.

பலராமன் எளிய குடும்பத்துப் பெண்களை தன் பணவசதியால் வளைத்து ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டான். ஒருவனுக்கு பணம் கட்டாயம் தேவை என்று இவனுக்குத் தெரிய வந்தால் வலிய போய் உதவுவான். அப்படி உதவி பெற்ற வீட்டுப் பெண்ணை எப்படியாவது மயக்கி தன் ஆசைக்கு இணங்க வைப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான்.

ஒரு சமயம் அவனால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று ஆசிரியர் சாமிநாதன் இடம் முறையிட்டது. நியாயத்தை உணர்ந்த ஆசிரியர் அவனை சந்தித்து அது பற்றி கேட்க பல தடவை முயன்றும் முடியவில்லை. கடைசியில் ஒரு நாள் ஆசிரியர் அவனிடம் அவர்கள் நியாயத்தை எடுத்துக்கூறினார்.

"நான் பணம் கொடுக்கும் போது நிலத்தை ஈடு காட்டித்தான் பணம் வாங்கினார்கள். நான் இரண்டு வருஷம் கெடு கொடுத்தேன். மூன்று வருஷம் ஆகிவிட்டது. வட்டியும் தரவில்லை. இப்பொழுது வந்து பணம் தருகிறேன் என்றால் எப்படி முடியும். அதெல்லாம் முடியாது... நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... இதிலெல்லாம் தலையிட வேண்டாம்" என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டான். அதன்பிறகு வழியில் ஆசிரியரைப் பார்த்தால் கூட மரியாதைக்கு நின்று கூட பேசமாட்டான். வேகம்... வேகம்... எதிலும் வேகம்... சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி!

மகன்களுக்குத் திருமணம் செய்தான். ஆசிரியர் சாமிநாதன் எல்லோரையும் போல் கலந்து கொண்டார். அவனுக்குப் புதிய நண்பர்களும், புதிய ஆலோசகர்களும், அரசியல் புள்ளிகளும், அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். சாமிநாதன் தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு மாணவன் உயர்வடைவதில் பெருமைப்பட்டாலும் அவர் மனதில் ஒரு அருவருப்பு தென்பட்டது. நன்மைகளை மறந்து தீமைகளைச் செய்யும் நண்பர்கள் அவர்கள் என்பதை பலராமன் உணரவில்லையே என்று வருந்தினார்.

இன்பத்தின் உச்சியில் அமர்ந்திருப்பவனுக்கு சுகமேலயம். மண்ணில் விளைந்தும் பசிக்கு உதவாத கனியானான். வெறி பிடித்து அலையக் கூடிய இன்பம் மறைத்தன.

கடலில் வாழும் மீன்கள், கடலின் ஆழத்தைப் பற்றி ஏன் கவலைப்படப் போகின்றன. அதைப் போலவே ஆசிரியர் சாமிநாதன் கவலைப்படாமல் தன் கடமையைக் கண்ணும் கருத்துமாய் செய்து வந்தார். மூங்கிலாக வளர்ந்து புல்லாங்குழலாக மற்றவர்களுக்கு இன்பமூட்டினார் ஆசிரியர்.

பல அரசியல் நண்பர்களின் சிநேகம். அதன் விளைவு புகைப்பிடித்தல், மதுக்குடித்தல் பழக்கமானது. அதுவே வழக்கமானது. ஆசிரியர் இடம் நின்று பேசுவதே கௌரவக் குறைவாகக் கருதினான் அவன். சாமிநாதனைப் பார்க்கும் போது அவரது பழைய மாணவர்கள் பலராமன் செய்யும் அநீதிகளையும், சுயநலத்தையும், அவன் செய்யும் பாவங்களையும் எடுத்துச் சொல்வார்கள். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு, "ஒருவன், செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி அவன் ஆயுட்காலத்திலேயே அவனை தண்டித்து விட்டுத்தான் விலகும். இப்பொழுது என் அறிவுரையைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. அதனால் இது பற்றி பேசிப் பயனில்லை" என்றார் சாமிநாதன்.

ஒரு ஏழை விவசாயி. வானம் பொய்த்ததால் கடுமையான பஞ்சத்திற்கு ஆட்பட்டான். வீட்டில் ஒரு பிடி அரிசி கூட இல்லை. அவனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் இளமையிலேயே எங்கோ ஓடிப்போய்விட்டான். அவன் இருந்திருந்தால் கூலி வேலைக்குப் போயாவது தாய் தந்தைக்கு உதவியாக இருந்திருப்பான். மற்றொரு சிறுவன், அவன் பசி தாங்க முடியாமல் அவதிப்பட்டபோது அரைபடி, கால்படி, என்று கடன் வாங்கி வயிற்றைக் கழுவினார்கள்.

பலராமனிடம் அரைகாணி வைத்து கடன் வாங்கி நிலமே முழுகிவிட்டது என்று கூறிவிட்டான். ஊரில் அவனிடம் மட்டுமே பண நடமாட்டம் அதிகம் அதனால் சென்று கேட்டுப் பார்க்கலாமே என்று அந்த விவசாயி தயங்கியபடி பலராமனிடம் சென்று கேட்டான்.

ஏதாவது பொருள் கொடுத்தால் பணம் தருவதாகச் சொன்னான் பலராமன். "மீதி அரைகாணி நிலம் இருக்கிறதே. என்னிடம் அடமானம் வைத்து பணம் வாங்கிக்கொள். மழை பெய்ததும் பயிரிட்டு இரண்டு வெள்ளாமையில் திருப்பி கொடுத்து விடு" என்று பலராமன் ஆசை காட்டினான். ஆனால் அந்த விவசாயி சூடுகண்ட பூனையாயிற்றே! இணங்குவானா?

வீடு வந்தான்... கலங்கினான்.... பட்டினி. மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தான். அவன் மனைவி உள்ளே வருமாறு கூப்பிட்டாள், உள்ளே சென்றான். தன் மாங்கல்யத்தைக் காட்டினாள். அவன் உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. அவள் உள்ளங்கையில் மஞ்சள் கொம்பு இருந்தது. தாலி முடிச்சை அவிழ்த்தாள். அரை பவுன் தாலியை அவன் கையில் கொடுத்தாள். மஞ்சளை முடிந்து கொண்டாள்.

பலராமன் மட்டுமே கேட்டவுடன் பணம் தரக்கூடியவன் அதனால் அவனிடமே போனான். அவனைக் கண்டதும் பலராமன் "என்ன? நிலத்தின் பத்திரம் எடுத்து வந்தாயா?" என்று கேட்டான் பலராமன் ஆர்வமாக.

"இல்லைங்க..." என்று தயங்கினான்.

"சரி... நிலம் வேண்டாம். உன் வீட்டுப் பத்திரம் இருக்குமே. அதை எடுத்துவா ஆயிரம் ரூபாய் தருகிறேன். வெள்ளாமை வெளைஞ்சதும் திருப்பிக் கொடுத்துவிடு... பத்திரத்தை நானும் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். என்ன? எதுவும் இல்லாமல் நான் எப்படி பணம் கொடுக்க முடியும்" என்றான் பலராமன்.

சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் மேல் தண்டில் முடிந்த பொன் தாலியை பலராமனிடம் கொடுத்தான்.

"அடடே என்னப்பா நீ... என்று முதலில் தயங்கியவன்... சரி என்ன செய்வது.... மழை பெய்திருந்தால் நீ ஏன் இதை அடகு வைக்கப்போகிறாய்... உம் எவ்வளவு வேண்டும்" என்றான் பலராமன்.

"ஐநூறா... அவ்வளவு பெறாதே... அரை பவுன்தான். ஆனால் அரக்கு பொடின்னு போனா கால் பவுன்தான் தேறும்... சரி... உனக்காக இருநூற்றி ஐம்பது ரூபாய் தர்றேன்..." என்றான் பலராமன்.

"பையனுக்கு உடம்பு சரியில்லை. அம்பது ரூபாய் சேர்த்து முன்னூறா குடுங்க..." என்றான்.

இதை இவன் எங்கே மீட்கப் போகிறான்... என்று எண்ணித்தான் கால்பவுன் விலையைக் கூறினான். பலராமன் ஒப்புக்கொண்டு உள்ளே சென்றான். முப்பது பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, "இதற்கு மூன்று வட்டிதான். மற்ற இடங்களில் நாலுவட்டி, ஐந்து வட்டி வாங்குகிறார்கள். உனக்கு மூன்று வட்டிதான். கெடுவு 2 வருஷம்தான். ஒருநாள் அதிகமா போனாலும் நகை திரும்ப வராது... என்ன சம்மதமா?" என்றான் பலராமன்.

எச்சிலை விழுங்கியபடி "சரீங்க" என்றான்.

வீட்டிற்குச் சென்ற ஏழை, குளித்தலைக்குச் சென்று அரிசியும், மளிகை சாமான்களும் வாங்கி வந்தான். பையனுக்கு மாத்திரை வாங்கி வந்து கொடுத்தான். அவர்கள் வீட்டில் மீண்டும் அடுப்பு எரிந்தது. வயிறு நிறைந்தது. மூத்த மகன் இருந்திருந்தால் உதவியாக இருந்து இருப்பானே என்று கலங்கினார்கள்.

ஆறு மாதத்திற்குப் பின் மழை பெய்யாததினால் வீட்டைப் பூட்டிக்கொண்டு நகரத்தின் பக்கம் கூலி வேலை செய்ய அந்தக் குடும்பம் திருச்சி பொன்மலை பக்கம் போனார்கள். எங்கேயோ வேலை செய்து சிக்கனம் பிடித்து எழுநூறு ரூபாய் சேமித்துக்கொண்டு லாலாபேட்டைக்கு வந்தனர். தாலி ஈடு வைத்த தேதி வீட்டில் குறித்து வைத்திருந்தான். அதையும் எடுத்துக்கொண்டு பலராமனிடம் சென்றான்.

"அடடே வாப்பா, எங்கேயோ பஞ்சம் பிழைக்கப்போனதா கேள்விப்பட்டேன். எப்ப வந்தே..." என்றான் பலராமன்.

"நேத்துதாங்க வந்தேன்... ஐயா அதை மீட்டுக்கொண்டு போகலாம்னு..." என்றான் ஏழை.

"அதுவா.. என்னப்பா மூணு வருஷம் முடிஞ்சு போச்சி. நான் என்ன சொன்னேன். கெடுவு இரண்டு வருஷம் என்றுதானே சொன்னேன். மூணு வருஷம் நாளையோடு முடியப்போகிறது" என்றான் பலராமன்.

"ஐயா... மூனு வருஷ வட்டி 324 ரூபாயும் அசல் 300 ரூபாயும் சேர்த்து 624 ரூபாய் எடுத்து வந்திருக்கிறேன்..."

"நான் சொல்றதே உனக்கு புரியலையா? 2 வருஷம்தான் கெடுவு... 3 வருஷம் ஆயிடுத்து... நான் மூனு மாசத்துக்கு முன்னாலேயே கெடுவு போன நகையை வட்டிக்குக் கேடா ஏன் வைத்திருக்கணும்னு வித்துட்டேன்..." என்று சொல்லிவிட்டு மோட்டார் பைக்கில் வேகமாக பரலாமன் சென்றுவிட்டான்.

ஏழை திடுக்கிட்டு உடல் நடுங்கினான். கண்கலங்கியபடி ஆசிரியர் சாமிநாதனிடம் சென்றான். நடந்ததைக் கூறினான். ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த ஏழையும் ஆசிரியரிடம் படித்தவன்தான்.

"அவனிடம் நான் போய் கேட்டாலும் இந்த பதில்தான் சொல்வான். தாலியை வாங்கிக்கொண்டு அவன் பணம் கொடுத்ததே தவறு... ஒரு உத்தமியின் தாலி ஒரு குடும்பத்தையே அழித்துவிடும் என்பதை அவன் அறியவில்லை. நீ திருச்சிக்குச் சென்று புது தாலி வாங்கி வந்து கோர்த்து நாளைக்கு அணிவித்துவிடு" என்று சொன்னார் ஆசிரியர் சாமிநாதன்.

ஏழை விவசாயி அப்படியே செய்தான்.

பலராமனின் கடைசி பெண்ணுக்குத் திருமணம். வீட்டு எதிரிலேயே கொட்டகைப் போட்டு சிறப்பான ஏற்பாடு செய்தான். அவனும் அவன் மனைவியும் ஆசிரியர் இல்லம் வந்து அழைப்பிதழ் கொடுத்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் வீட்டில் இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டனர். ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். திருமணத்திற்கு அரசியல்வாதிகளும், காண்ட்ராக்டர்களும், பல பெரிய மனிதர்களும் வந்திருந்தார்கள். தெருவையே அடைத்து பந்தல் போட்டிருந்தான்.

ஆசிரியரும் அவரது துணைவியாரும் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். பெண்கள் பகுதிக்கு அவர் துணைவியார் சென்ற சிறிது நேரத்தில் பலராமன் ஆசிரியரிடம், "சார் வரிசையெல்லாம் நீங்கள் வாங்கி வைக்கவும். பெயர்களை இந்த நோட்டில் எழுதவும்". என்று கொடுத்துவிட்டு உடனே போய்விட்டான். மறுக்க முடியவில்லை.

வரிசை வர வர எழுதினார். உடனே பணத்தை எண்ணிப்பார்த்து பையில் வைத்தார். திருமண பரபரப்பு அடங்கியது. ஆசிரியர் சாப்பிடாமல் இருப்பதை கவனித்த பலராமன் ஆசிரியர் அருகில் வந்து, "நீங்க போய் சாப்பிடுங்க..." என்று சொல்லிவிட்டு பையையும், நோட்டையும் வாங்கிக் கொண்டான். ஆசிரியர் சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

மறுநாள் காலை கூப்பிடுவதாக தலையாரி பள்ளிக்கூடம் வந்த ஆசிரியர் சாமிநாதனிடம் கூறினான். ஆசிரியர் பலராமன் வீட்டிற்கு சென்றார். பந்தலை பிரித்துக்கொண்டிருந்தார்கள்.

"வரிசை பணத்தில் ஐநூறு ரூபாய் குறைகிறது" என்றான் பலராமன்.

"ஆசிரியர் திடுக்கிட்டு ஐநூறு ரூபாய் குறைகிறதா?..." நன்றாக எண்ணிப் பார்த்தாயா? என்றார்.

"எண்ணிப்பார்த்துவிட்டேன்... இதோ பாருங்கள் நோட்டில் ஆறாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்... பையில் 6153 ரூபாய் தான் உள்ளது. நீங்களே எண்ணிப்பாருங்கள்" என்றான்.

ஆசிரியர் உடல் வியர்த்துக் கொட்டியது.

ஆசிரியர் வாங்கி எண்ணிப் பார்த்தார். ஆறாயிரத்து நூற்றி ஐம்பத்தி மூன்று ரூபாய் தான் இருந்தது.

ஆசிரியர் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

"என்ன சார்... என்னைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்... கல்யாணத்தில் இப்படி எடுக்கலாமா? வரிசை பணம்தானே...."

"பலராமா... நான் எடுத்திருப்பேன் என்று நினைக்கிறாயா?"

"பின்னே...! பையும் நோட்டும் உங்கள் கையில். பணம் யார் எடுத்திருக்க முடியும்?"

"பலராமா... வேண்டுமானால் குறைகின்ற பணத்தை சம்பளம் வந்ததும் கொடுத்து விடுகிறேன். என்னை அவமானப்படுத்தாதே".

"இது பணம் எடுக்கும்போதே தெரிந்திருக்க வேண்டும்" என்றார் பலராமனின் புது சம்பந்தி.

"மாமா நீங்க சும்மா இருங்க... யார் யாரை எங்கே வைத்திருக்க வேண்டுமோ அங்கே வைத்திருக்க வேண்டும். என் மேல்தான் தப்பு... இந்த வேலையை உங்ககிட்ட கொடுத்தேன் பாரு.."

"பலராமா... நாவை அடக்கி பேசு... யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டுவிட்டாய்..." என்று கோபமாகக் கேட்டார் பழைய தலைவர்.

"உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது... உங்கள் பணம் போயிருந்தால் உங்களுக்குத் தெரியும்..." என்றான் பலராமன்.

"அங்கே பாருங்கள் அவர் உடல் வியர்த்துக் கொட்டுகிறது. உடம்பே நடுங்குகிறது. பணம் எடுத்தவர்களுக்குத்தான் இப்படி வியர்க்கும்".

"யோ நிறுத்துய்யா... உனக்கு என்ன தெரியும்... ஒத்து ஊதிக்கினு இருக்கிறே... இன்னிக்கு பலராமன் இவ்வளவு வசதியா இருப்பதற்கு காரணம் இவர்தான்யா.... இவர்தான். இன்னிக்கு இவன் வசதியா இருக்கலாம். மாடிவீடு கட்டி இருக்கலாம். பலராமா... உன்னை கைதூக்கி விட்டவரை நீ இப்படி அவமானப்படுத்துவது சரியில்லை" என்றார் தலைவர்.

"அதற்காக ஐநூறு ரூபாயை திருடினது நியாயம்னு சொல்றீங்களா?" என்றான் பலராமன்.

கண்கலங்க அமர்ந்திருந்தார் ஆசிரியர் சுவாமிநாதன். உடனே தலைவர் எழுந்தார். வீட்டிற்கு சென்று ஐநூறு ரூபாயுடன் வந்தார்.

"இந்தாப்பா உன் ஐநூறு ரூபாய்... எழுந்திருங்க சார் போகலாம்..." என்றார் தலைவர்.

ஆசிரியர் உடல் குறுகியபடி கண்களில் கண்ணீர் வழியை மறைக்க தடுமாறியபடி அவர் வீட்டிற்குள் சென்றதும் வாய்விட்டு அழுதார்.

அவர் மனைவி என்னமோ ஏதோ என்று விரைந்து வந்தார். நடந்ததை தலைவர் கூறினார்.

"உங்களுக்கு ஏங்க இந்த வேலையெல்லாம்... அவன் வரிசை எழுத கொடுத்த உடனேயே... என்னால் முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே... என் பிள்ளை மாதிரி என் வீட்டில் வளர்ந்தவன். இப்படி அவர் மேல் பழி சுமத்தி விட்டானே..." என்று கண்கலங்கினார்.

மறுநாள் காலை பலராமன் மூத்த மகள் பொன்னி ஆசிரியர் வீட்டிற்கு வந்தாள். பொன்னி சிறுவயதாக இருந்தபோது ஆசிரியர் வீட்டிலேயே வளர்ந்தவள். இவளுக்கு பொன்னி என்ற பெயரை ஆசிரியர்தான் வைத்தார். ஆசிரியரிடம் அழுதாள் பொன்னி.

"வந்த வரிசைப் பணம் முழுவதும் பையில்தான் வைத்தேன். உன் அப்பா சாப்பிடச் சொல்லி அவசரப்படுத்தியதால் தான் நான் எண்ணி கொடுக்காமல் அப்படியே கொடுத்து விட்டுப்போனேன்... நான் ஏன்மா எடுக்கிறேன்... நான் எடுப்பேனா அம்மா" என்று கலங்கினார்.

"நன்றாக எண்ணிப் பார்த்தீர்களா?" என்றாள் பொன்னி.

"எண்ணிப் பார்த்தேன்மா... ஐநூறு குறைகிறது" என்றார் ஆசிரியர்.

"நோட்டை யார் கூட்டிப் போட்டது" என்றாள் பொன்னி

"உன் அப்பாதான் கூட்டினான்... நோட்டை என்னிடம் காட்டவில்லை. அதிர்ச்சியில் நானும் கேட்கவில்லை."

மின்னல்போல பளிச்சென எழுந்தாள் பொன்னி. ஆசிரியர் இப்படிப்பட்ட செயலை செய்திருக்கவே முடியாது நோட்டில்தான் தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணியபடி பொன்னி விரைந்தாள் வீட்டுக்கு. பலராமன் வீட்டில்தான் இருந்தான்.

"அப்பா நீங்க செய்தது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. அவர் அப்படி எல்லாம் செய்திருக்கவே மாட்டார்... எப்படி அழுகிறார் தெரியுமா? இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது... சரி... அந்த வரிசை நோட்டு எங்கே..."

"மேசை டிராயரில்தான் இருக்கும்" என்றான் பலராமன். மேசையைத் திறந்து நோட்டை எடுத்தாள். அங்கிருந்த பென்சிலை எடுத்துக்கொண்டு வந்து பலராமன் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு பக்கமாகக் கூட்டிப் போட்டாள். ஆறாம் பக்கம் வரை சரியாக இருந்தது. ஆறாம் பக்கத்தில் கூட்டுத்தொகையான 4140 ரூபாயை ஏழாம் பக்கத்தில் 4640 ரூபாய் என்று ஐநூறு ரூபாய் அதிகமாக எழுதப்பட்டிருந்தது.

"அப்பா இதை யார் கூட்டிப் போட்டது".

"ஏன்... நான்தான்... கூட்டிப்போட்டேன்".

"இங்கே பாருங்கள்... நீங்கள் தவறு செய்துவிட்டு அவர் மேல் குற்றம் சொல்கிறீர்கள்... நியாயமா."

"என்ன சொல்கிறாய்?"

"இங்கே ஆறாவது பக்கத்தில் 4140. ஏழாம் பக்கத்தில் எடுத்து எழுதும்போது 4640 என்று எழுதிவிட்டீர்கள்... என்னப்பா நீங்க.."

"நான் அப்பவே சொன்னேன்மா... வாத்தியார் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்னு... உங்கப்பா கேட்டால் தானே..." என்றாள் பொன்னியின் தாய்.

அப்பொழுதும் அவன் நம்பவில்லை. மறுபடியும் நோட்டை வாங்கி கூட்டிப்பார்த்தான். தவறை உணர்ந்தான். எழுந்து சென்று ஐநூறு ரூபாயை எடுத்துவந்து பொன்னியிடம் கொடுத்தான்.

நோட்டையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு ஆசிரியர் வீட்டுக்குச் சென்றாள் பொன்னி.

பொன்னி ஆசிரியர் வீட்டுக்குச் சென்றபோது... பழைய தலைவர், மற்றும் பழைய மாணவர்கள் சிலரும் உட்கார்ந்து ஆசிரியருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். பொன்னி நோட்டுடன் வருவதைப் பார்த்தவர்கள் நகர்ந்து வழிவிட்டனர். நடந்துவிட்ட தவறைக் கூறினாள். தலைவர் மிகவும் கோபப்பட்டார்.

"அவனை என்ன செய்கிறேன் பார்... அவன் செய்த தவறுக்கு இவர் மனம் புண்படப் பேசிவிட்டானே..." என்று சொல்லியடி எழுந்தார். உடனே பொன்னி அவரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, "தாத்தா... எவ்வளவு கேட்க வேண்டுமோ அவ்வளவு கேட்டு விட்டேன்... தலை குனிந்து உட்கார்ந்திருக்கிறார். விடுங்கள் இத்தோடு" என்றாள் பொன்னி.

கேவலம் ஐநூறு ரூபாய்க்கு தன்னை இவ்வளவு இழிவாகப் பேசிவிட்டானே... வளர்த்த கடா நெஞ்சில் பாய்ந்து விட்டதே! நன்றி கொன்றவனாகி விட்டானே! இனி இந்த ஊரில் இருக்கவே கூடாது. அவன் முகத்தில் விழிக்கக் கூடாது... என்று அன்று இரவே மனைவியோடு கலந்துபேசி மாறுதல் விண்ணப்பம் எழுதினார்.

மறுநாள் திருச்சிக்குச் சென்று மேல் அலுவலர்களைப் பார்த்தார். தன் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டத்துக்கு ஒருவர் மாறுதல் கேட்டிருந்ததால் சாமிநாதனுக்கு ஒரே வாரத்தில் மாறுதல் உத்திரவு வந்தது. உடனே பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு மறுநாளே காளையர் கோயில் பள்ளியில் பணியில் சேர்ந்துவிட்டார். இரண்டு நாட்கள் விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு லாலா பேட்டை வந்தார். இதை மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார்.

பலராமன் குடும்பத்துடன் பத்து நாட்கள் மணமக்களுடன் சுற்றுலா சென்றுவிட்டான்.

தலைவரிடம் தனக்கு மாறுதல் வந்து விட்டதாகக் கூறினார். மிகவும் வருத்தப்பட்டார். முப்பது மூன்று வருஷமான அவரிடம் நட்பு கொண்டிருந்தவர். இன்னும் 3 வருஷங்கள்தானே இங்கேயே இருந்துவிட்டு போகலாம் என்று எவ்வளவோ மன்றாடினார். ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்துவிட்ட தகவலைக் கூறினார். மிகவும் வேதனைப்பட்டார் தலைவர்.

ஆசிரியர் குடி இருந்த வீட்டை தலைவரையே வைத்துக் கொள்ளுமாறு ஆசிரியர் கேட்டுக்கொண்டார். தலைவரின் உறவினர் ஒருவருக்கு அன்றே விலைபேசி மறுநாளே பதிவும் செய்யப்பட்டது.

ஆசிரியர் செய்த ஏற்பாட்டின்படி லாரி வந்தது. இதற்குள் காட்டுத் தீ போல் செய்தி பரவியது. ஆசிரியரின் பழைய மாணவர்கள் கண்கலங்கியபடி சாமான்களை லாரியில் ஏற்றினார்கள். ஆசிரியர் வீட்டு முன் பொதுமக்கள் திரளாகத் திரண்டிருந்தார்கள்.

ஒருவன் செய்த தவறுக்காக எங்களையெல்லாம் விட்டுவிட்டு போகலாமா? என்று வாய்விட்டு அழுதனர். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக தாயா பிள்ளையா பழகிய மக்களை விட்டுப் போக மனமின்றி ஆசிரியரும், ஆசிரியர் மனைவியும் கண்ணீர் மல்க கைகூப்பி விடைபெற்றனர்.

ஆசிரியர் ஊரைவிட்டுப் போய் இரண்டு நாட்கள் கழித்து பலராமன் குடும்பத்துடன் ஊருக்கு வந்து சேர்ந்தான். ஆசிரியர் வீட்டை விற்றுவிட்டு சொந்த மாவட்டத்துக்கே மாறுதல் பெற்றுச் சென்றுவிட்ட செய்தி அறிந்து இடிந்துபோனான். மிகவும் வேதனைப்பட்டான். மனதுக்குள் அழுதான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவனது வரட்டு கௌரவம் குறுக்கே நின்றது.

மாதங்கள் கடந்தன. ஆசிரியர் சென்ற ஆறாம் மாதமே பலராமன் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கம் ஒன்று இடிந்து விழுந்து நான்குபேர் இறந்துவிட்டனர். மட்டமான சிமெண்ட்டால் கட்டப்பெற்றதால் இடிந்து விழுந்ததாக பொறியாளர்கள் கூறவே, மீண்டும் அதை பலராமனே கட்டித் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் இறந்து போன நான்கு பேர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையிட்டதால் பலராமன் தன் நிலங்களில் பாதியை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாருடைய தாலியை வாங்கிக்கொண்டு கொடுக்க மறுத்தானோ அந்த ஏழை விவசாயியின் மகன் இளமையிலேயே வெளிநாடு சென்றுவிட்டவன், செல்வச் செழிப்போடு வந்திருந்தான். அந்த ஏழை விவசாயிடமே ஐந்து ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய நிலை பலராமனுக்கு ஏற்பட்டது. அன்றே ஆசிரியர் சொன்னது நடந்துவிட்டது. தாலியை அபகரித்தவன் குடும்பம் அழியும் என்றார். அந்த நெருக்கடியான சமயத்தில் நிலத்தை வாங்கக்கூடிய நிலையில் முன்பு தாலியை அடகு வைத்தவர் இருந்ததால் நிலத்தை அவரிடமே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காலங்கள் மாதங்களாகக் கடந்தன. பலராமனின் ஒரு மகன் தவிர மற்றொருவன் சொத்தை பிரித்துக் கொடுக்கக் கோரி நீதிமன்றம் போவதாக குழப்பம் செய்ததால் சொத்தை பிரிக்க வேண்டியதாயிற்று. அவன் குடித்தே சொத்துக்களை அழித்தான். மேல்நிலை தொட்டி இடிந்து விழுந்ததால் காண்ட்ராக்ட் பணியை பலராமனுக்கு கொடுக்க அரசு மறுத்துவிட்டது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் இளைய மகள் தீக்குளித்து மாண்டு போனாள். மனநோயால் மிகவும் பீடிக்கப்பட்டான். கண்ணில் கண்ட பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு அழைத்த அதிபர் சுகர்ணா போல தான் நடந்து கொண்டதும், பலவீனமாக மனித உடம்பு வெற்றிகளாலேயே திமிரடைந்ததும், உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் தவளைகள் குதிப்பதைப் போல் குதித்ததும் நினைவில் நிழலாடி கண் கலங்கினான்.

மற்றொரு மகளான பொன்னியும் கணவரோடு ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதும் அவனை மிகவும் பாதித்தது. உடல் நலன் கெட்டு மருத்துவ நிலையத்தில் நீண்ட நாள் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காலங்கள் கடிது சென்றன.

ஆசிரியரைக் காண வேண்டும். அவரிடம் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது ஆசிரியர் தன் சொந்த ஊரில் காலமான செய்தி தலைவருக்கு வந்தது. தனி பேருந்து வைத்துக்கொண்டு பொது மக்கள் தங்கள் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தனர். மற்றும் பலர் பேருந்தில் வந்தவண்ணம் இருந்தனர்.

பலராமன் கேள்விப்பட்டு விரைந்து வந்தான். உயிரற்ற ஆசிரியரின் உடலைக் கண்டு கதறினான். தூணில் முட்டி மோதினான்... ஐயா உங்களுக்கு நான் செய்த துரோகத்திற்கு தெய்வம் என்னை நின்று கொன்றுவிட்டது. நான் நடைப்பிணமாகிவிட்டேன். என் இரண்டு பெண்களுமே தற்கொலை செய்து கொண்டார்களே... ஐயா... நான் அழிந்து கொண்டிருக்கிறேன். ஐயா கண் திறந்து பாருங்கள்... என்னை மன்னிக்க மாட்டீர்களா? என்று கதறினான் பலராமன்.

கடைசி வரை அவன் முகத்தில் விழிக்காமலேயே ஆசிரியர் சாமிநாதன் கண்ணை மூடினார். அவனை தெய்வம் நின்று கொன்றது.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link