சிறுகதைகள்


தவிப்பு

கூடல்.காம்

வானொலியில் நான் எழுதிய "நதியைத் தேடிவந்த ஓடை" என்ற நாடகம் ஒலிபரப்பும் நாள் குறிப்பிட்டு வந்த கடிதம் என்னை மகிழ்வூட்டியது. மனைவியிடம் சொன்னேன் மகிழ்ந்தாள்.

உடனே அஞ்சல் நிலையம் சென்று இருபது அஞ்சல் அட்டைகள் வாங்கி வைத்தேன்.

"என்னங்க இவ்வளவு அஞ்சல் அட்டைகள் ஏதாவது சங்கக் கூட்டமா?" என்றாள் மனைவி.

"இல்லம்மா... நாடகத்தைக் கேட்டு கடிதம் எழுதச் சொல்லி நண்பர்களுக்கு கடிதம் எழுதப்போகிறேன்மா" என்றேன்.

"ஏங்க செக் நாளை வருமாங்க" நாடகத்தை விட அவளுக்கு செக்தான் பெரிதாகத் தெரிந்தது.

"இரண்டு மூன்று நாட்களாகும். இன்று தானே கையெப்பமிட்டு அனுப்பினேன்" என்றேன்.

நாடகத்தை ஆர்வமாகக் கேட்கக் கூடிய நண்பர்களுக்கு மட்டும் கடிதம் எழுதினேன்.

வெயில் கடுமையாக இருந்தும் உடனே அஞ்சல் நிலையம் சென்று, எழுதிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டுவிட்டு வந்தேன்.

உள்ளூர் நண்பர்களுக்கும் சொல்ல வேண்டுமே, ஆறு வெள்ளைத் தாள்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

மனைவி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். படுத்தவுடன் தூங்கிவிடும் இயல்புடையவள். எனக்கு அந்த பாக்கியம் இல்லை. எழுப்பினேன் எழுந்தாள், உடை மாற்றிக்கொண்டு வந்தேன், சாப்பிட தட்டு எடுத்து வைத்தாள், என்றுமில்லாமல் அவள் முகம் செந்தாமரையாக விளங்கியது.

"யார் கொடுப்பாங்க ஆயிரத்தி இருநூறு ரூபாய்.. நிறைய நாடகம் எழுதுங்க..." என்று மனைவி எனக்கு உத்தரவு இட்டாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடித்து கையலம்பிவிட்டு, உடனே நான் வாங்கி வந்த வெள்ளைத் தாள்களை ஒவ்வொரு தாளும் எட்டு துண்டு வரும்படி கிழித்தேன். அதில் வானொலியில் நான் எழுதிய "நதியைத் தேடிவந்த ஓடை" நாடகத்தை தவறாமல் கேட்டு தங்கள் கருத்துக்களை எழுத வேண்டுகிறேன் என்று எழுதி ஒலிபரப்பும் நாளும் நேரமும் குறித்தேன்.

அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் நண்பர்களுக்கும் நேரில் கொடுத்து "ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு தவறாமல் நாடகம் கேளுங்கள்" என்று துண்டுத்தாளையும் கொடுத்தேன்!"

எங்கள் மேலாளரிடம் கொடுத்தேன். "அடடே வானொலியில் உங்கள் நாடகமா? பலே அப்புறம் தொலைக்காட்சிக்கு தாவி விடுவீங்க... உங்ககிட்டே நிறைய திறமை இருக்குது. நிறைய எழுதுங்க.. அவசியம் கேட்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தினமும் நாடகம் பற்றிய நினைவுதான்.

என் இளமை நண்பர் சிங்காரம், கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். பல நண்பர்களுக்கும் சொல்லி இருக்கிறேன். வாழ்த்துக்கள் என்று கடிதம் எழுதி இருந்தார். மகிழ்ந்தேன். வானொலி நிலையத்திலிருந்து காசோலை வந்தது. மனைவியிடம் காட்டினேன். பூரித்துப்போனாள்.

தெரு நண்பர்களிடம் அலுவலகத்தில் இருந்து வந்ததும் நேரில் கொடுத்தேன்.

"நீங்கள் எழுதியதா? கட்டாயம் கேட்கிறோம்" என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

நாடகம் ஒலிபரப்பும் ஞாயிற்றுக்கிழமை காலை, நிகழ்ச்சி நிரல் சொல்லும் போதே நாடகத்தின் பெயரும், என் பெயரும் சொல்லியது காதில் தேனாகப் பாய்ந்தது. சிறிது நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. எழுந்தேன். நண்பர் ஒருவர் "இன்று காலை பத்து மணிக்கு தானே நாடகம்" என்று கேட்டார்.

"ஆமாம்... ஆமாம்.. இன்று காலை பத்து மணிக்குதான். தவறாமல் கேளுங்கள் என்றேன்.

எதிர்வீட்டு நண்பர் எங்கோ மோட்டார் பைக்கில் கிளம்பி கொண்டு இருந்தார். விரைந்து சென்றேன். "சார் மறந்துடாதீங்க இன்னிக்கு காலை பத்து மணிக்கு..."

"நீங்கள் எழுதிய நாடகம்தானே... கட்டாயம் கேட்கிறேன்" என்று சொல்லிவிட்டு எங்கோ விரைந்தார்.

பக்கத்துத் தெரு நண்பர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அழைத்தேன். "மறந்துடாதீங்க இன்று காலை பத்து மணிக்கு.." என்றேன் "நாடகம் தானே கட்டாயம் கேட்கிறேன் சார்".... என்று சொன்னார். மகிழ்ந்தேன்.

விழுப்புரம் நண்பர் ஒருவர் நாடகப் பிரியர், அவருக்கு தொலைபேசி மூலமாக சொன்னேன். "அப்படியா நல்வாழ்த்துக்கள்.. கட்டாயம் கேட்கிறேன்" என்றார்.

நேரம் நத்தையாக நகர்ந்தது.

மகனும் மருமகளும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நாடகம் ஒலிபரப்பாக இன்னும் ஒரு மணி நேரம்தானே உள்ளது. எங்கே கிளம்புகிறார்கள் என்று எண்ணியபடி மனைவியைக் கூப்பிட்டுக் கேட்டேன்.

"சம்பந்தி போன் செய்தார். லீவுதானே வாங்கன்னு கூப்பிட்டார். அதான் இரண்டு பேரும் போராங்க.. சாய்ந்தரம் வந்துடுவாங்க என்றாள் மனைவி.

எழுந்து சென்று "பத்து மணிக்கு நாடகம்... மறக்காம கேளுங்க என்றேன்."

"அரைமணி நேரத்தில் போய்விடுவோம்... கேட்கிறோம்பா" என்றான் மகன்.

காலை ஒன்பதேமுக்கால். பேருந்து வரும் ஒலியும்கேட்டது. மன€வி அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"எங்கே கிளம்பிவிட்டாய்?"

"பஸ் சத்தம்தானே அது.. மறந்தே போச்சிங்க..." பக்கத்து தெரு பாவைக்கு வளைகாப்புங்க... வளவனூர் சத்திரத்தில்தான்... நீங்க கேளுங்க... நான் அப்புறம் வந்து கதையைக் கேட்டுக்கிறேன்... என்று சொல்லியபடி பரபரப்பாகச் சென்றாள்.

ஒன்பது... ஐம்பத்தொன்பது மின்சாரம் திடீரென்று நின்றது. அவசர அவசரமாய் மின்சார அலுவலகத்திற்கு தொலைபேசியை டைல் செய்தேன். தொலைபேசி மணி ஒலித்தது. யாரும் எடுக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா? அலுவலகத்திற்கு யாரும் வந்திருக்க மாட்டார்களே என்று எண்ணிக்கொண்டிருந்த போது மின்சாரம் வந்தது.

புதுவை வானொலி நிலையம்
நாடகம்
"நதியைத் தேடிவந்த ஓடை"

எழுதியவர்... மின்சாரம் நின்றது. உடனே அறைக்குள் ஓடினேன். மகனின் சிறிய ரேடியோவை எடுத்துவந்து இயக்கினேன். மிக மிக மெல்லிய ஒலியே வந்தது. காதின் அருகில் வைத்து கேட்டேன். வர வர ஒலி தேய்ந்து அடங்கியது. ஒன்றும் கேட்கவில்லை.

மின்சாரத்தையே நம்பி இருந்திருக்கக் கூடாது. சிறிய ரேடியோவிற்கு பேட்டரி வாங்கி போட்டிருக்க வேண்டும். மறந்து விட்டோமே என்று எண்ணி வருந்தினேன். தெருவில் போய் பார்த்தேன். மின்சார ஊழியர்கள் யாராவது பழுது பார்க்க வந்திருப்பார்களோ என்று தெருக்கம்பங்களை வீட்டுக்கு வெளியே நின்று பார்த்தேன்.

மீண்டும் உள்ளே வந்து சிறிய ரேடியோவை தட்டித் தட்டி பார்த்தேன். எந்த ஒலியும் கேட்கவில்லை. எதிர் வீட்டில் டிரான்சிஸ்டர் இருக்கிறது. கேட்பார்களா? போய் கேட்கத் தயக்கமாக இருந்தது. ஊரில் யாருமே கேட்டிருக்க முடியாது. கூடத்தில் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது. வானொலியில் திரைப்படப்பாடல் ஒலி பரப்பினார்கள். மனம் நொந்தது. முதன் முதல் என் நாடகம் ஒலிபரப்பியதை கேட்க முடியாமல் போனதே. ஒருவேளை மகனும் மருமகளும் கேட்டிருக்கலாம். வந்தால்தான் தெரியும்.

மனம் பொருமியது. கண்களில் கண்ணீர் திரையிட்டு கலங்கியது. ஒரு தாய் தான் பெற்ற குழந்தையைப் பார்க்க முடியாமல் தவிப்பது போல் தவித்தேன். மன அமைதியின்றி தெருத்திண்ணையில் போய் உட்கார்ந்தேன்.

எதிர்வீட்டு நண்பர் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தவர் என்னை பார்த்துவிட்டு "என்ன சார் இன்னிக்குப் பார்த்து கரண்ட் இல்லாமல் போயிடுத்து..." என்று சொல்லிக் கொண்டே போனார். வீட்டினுள் தொலைபேசி ஒலித்தது. எழுந்து சென்றேன்.

"வணக்கம் தம்பி. புதுவையிலிருந்து அரிமதிதென்னகன் பேசுகிறேன். நீங்கள் எழுதிய "நதியைத் தேடிவந்த ஓடை" நாடகம் கேட்டேன். அற்புதமாக இருந்தது. நன்றாக நடித்தார்கள். வாழ்த்துக்கள்" என்றார். மகிழ்ச்சியில் நன்றி கூறினேன்.

அவருடைய பாராட்டினால் என் காயங்கள் கொதித்துக் கொண்டிருந்த மன உலை கொஞ்சம் அடங்கி உறங்கப்பார்த்தது. ஆனால் மனம் அமைதி அடையவில்லை

மாலை ஆறு மணிக்கு வரும் பேருந்தில் மனைவி வந்தாள். வந்தவளும் நாடகம் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. வளைகாப்பில் என்ன நகை போட்டார்கள். என்னென்ன வரிசைகள் வைத்தார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். இரவு ஏழு மணிக்கு மகனும், மருமகளும் வந்தார்கள். அவர்களிடம் நாடகம் கேட்டீர்களா? என்று கேட்கவில்லை. மனம் சுமையாக அழுத்தியது.

மனைவி அருகில் வந்தாள். "கேட்க மறந்துவிட்டேன். நாடகம் எப்படி இருந்தது." என்றாள் நடந்ததைச் சொன்னேன். அவளும் வருந்தினாள்.

"போகட்டும் விடுங்க. நீங்க எழுதியது தானே... நீங்க முதல் நாளே சின்ன ரேடியோவில் பேட்டரி இருக்குதான்னு பார்த்திருக்கனும். கரண்டையே நம்பி இருந்திட்டீங்க. நானாவது சொல்லி இருக்கனும். நானும் மறந்துட்டேன்." என்று மனைவி ஆறுதல் கூறினாள்.

தொலைபேசி ஒலித்தது. மகன் எடுத்துப் பேசினான். அப்பா உங்களுக்குத்தான் போன் என்றான். பேசியது கள்ளிப்பாடியிலிருந்து தம்பி கோவிந்தசாமி பேசினான்.

அண்ணே, நதியைத் தேடி வந்த ஓடை நாடகம் கேட்டேன். மிகவும் நன்றாக நடித்தார்கள். நாடகத்தின் உச்சக்கட்டத்தில் கண் கலங்கிவிட்டது. குடும்பத்துடன் அனைவரும் கேட்டோம். நண்பர்கள் சில பேர்களுக்கும் சொன்னேன். அவர்களும் கேட்டார்கள் என்று ஆர்வமுடன் பேசினார். நன்றி கூறிவிட்டு தொலைபேசியை வைத்தேன்.

யார் பேசியது என்று கேட்டாள் மனைவி. சொன்னேன் நான் உற்சாகமின்றி இருப்பதைக் பார்த்துவிட்டு.

"நாடகம் கேட்க முடியலையேன்று உங்களுக்கு வருத்தம். போகட்டும் விடுங்க... அதான் செக் வந்துட்டதே.. ஏங்க பணம் என்னைக்குக் கிடைக்கும் என்று கேட்டாள் மனைவி.

நான் அதற்கு பதில் ஏதும் சொல்லாததினால் படுத்துவிட்டாள். உடனே உறங்கிவிட்டாள்.

நான் தூக்கமின்றி படுத்திருந்தேன். ஒரு எழுத்தாளனின் படைப்பு பற்றி அவனுக்குத்தான் தெரியும். அவன் நாடி நரம்புகளின் எண்ணக் குவியலின் வடிகாலே அவனது படைப்பு. நாடகம் கேட்க முடியாமல் போனதே என்று மீண்டும் கண் கலங்கின. விடிவதற்கு சற்று முன்புதான் உறங்கினேன்.

மறுநாள் அலுவலகம் சென்றேன். என் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலாளர் கூப்பிடுவதாக பணியாளர் வந்து சொன்னார். நாடகம் கேட்டிருப்பார். அது பற்றிக் கூறவே கூப்பிடுகிறார் என்று எண்ணி கொண்டு போனேன்.

"சாரி மிஸ்டர். நேற்று ஒரு அவசர வேலையாக திருவண்ணாமலை சென்று விட்டேன். நாடகம் கேட்க முடியலே. அடுத்த தடவை சொல்லுங்க... கட்டாயம் கேட்கிறேன்" என்றார்.

"வீட்டில் இருந்திருந்தால் கேட்டிருப்பீர்கள்... வருகிறேன் ஐயா" என்று ஒப்புக்கு கூறிவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். அலுவலக நண்பர்கள் எவரும் நாடகம் பற்றி மூச்சுவிடவில்லை. நானும் நாடகம் கேட்டீர்களா? என்று கேட்கவில்லை.

அலுவலகம் முடிந்து மாலை வீடு திரும்பினேன். மகளும் மருமகனும் பேரன் பேத்தியும் வந்திருந்தார்கள். மகிழ்ந்தேன். பேத்தி பிரியாவும், பேரன் பாரியும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டார்கள்.

பேரன் பாரி ஒரு கேசட்டை என்னிடம் காட்டி, "தாத்தா ... தாத்தா.... நீங்க எழுதின நாடகத்தை ஒலிப்பதிவு செய்து எடுத்து வந்திருக்கிறேன் தாத்தா..." என்றான்.

"அப்படியா பாரி வா... வா... போட்டுக் கேட்கலாம்" என்று கூறிவிட்டு ஆரவாரமாக என் மனைவியை அழைத்தேன். "நம்ம பாரி நாடகத்தை டேப் செய்து எடுத்து வந்திருக்கிறான். வா... வா... கேட்போம்..." என்றேன்.

"அப்படியா.. பாரின்னா பாரி தான்..." என்று மகிழ்ந்தாள் மனைவி.

"நாங்களும் கேட்கவில்லை" என்று மகனும் மருமகளும் வந்து உட்கார்ந்தார்கள். ஒலிப்பதிவு பெட்டியை இயக்கினான் பாரி. மகளும் மருமகனும் வந்து அமர்ந்தனர்.

நாடகம் கணிரென்று ஒலித்தது. நாடகத்தின் பெயரைச் சொல்லி, எழுதியவர் என் பெயரையும் சொன்னார்கள். நகைச்சுவை காட்சியில் சிரித்து மகிழ்ந்தனர். நாடகத்தின் உச்ச கட்டத்தில் பேத்தி பிரியா கண்களில் கண்ணீர்... அவளை தூக்கி மடியில் உட்கார வைத்துக் கொண்டேன். அனைவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.

நாடகம் முடிந்தது. "நாடகம் சூப்பர் தாத்தா" என்றான் பாரி. நாடகத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்டான். பதில் சொன்னேன்.

"இது மாதிரி நிறைய எழுதுங்க தாத்தா" என்றான் பாரி.

பாரியைக் கட்டி அணைத்து மகிழ்ந்தேன். என் தவிப்பு இருந்த இடம் தெரியாமல் போனாது.

நன்றி: உப்புநீர் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link