சிறுகதைகள்


அதிகாரி

கூடல்.காம்
ஆட்டுக்கம்பை ஊன்றிக்கொண்டு வேப்ப மரத்து நிழலில் வெக்கைக்காக நின்றான். சில்லாண்டி மனசுக்கிடந்து கொதித்தது. பொங்கிப் பொங்கி வந்த அழுகையை ரோஷத்துடன் அடக்கிக் கொண்டான்.

"இந்தப்பய சொன்னதுக்கெல்லாம் அழுகணுமோ...? நா என்ன சின்னப் பப்பாவா? சிடுசிடுப்பான முணு முணுப்பு. சீறிச்சினந்த ஆங்காரத்தில் கோவிந்தனைத் திட்டினான். அனல் பறக்கும் திட்டுகள். நாற வசவுகள் கேட்டால்... நாண்டுக்கிட்டுத்தான் சாகணும்.

இவனுக்கு எதிரே விரிந்து பரந்த கரிசல் தரிசு. அருங்கோடை, ஒரு பச்சையோ, பசப்போ கண்ணில் தட்டவில்லை. உலர்ந்து காய்ந்து சருகாகிப்போன கோரைப்புல், கருட்டுப்புல்லை நக்கித் திரிந்தன வெள்ளாடுகள் வெக்கரித்த வெயில், ஏக்கமும் நப்பாசையுமாய் நிமிர்ந்து நிமிர்ந்து கள்ளப்பார்வை பார்த்துக் கத்துகிற ஆடுகள், பச்சைக்கு ஏங்குகிற ஆடுகள்.

இவனது ஆங்காரத்தில் அதன் ஏக்கமான கதறல்கள் கூட எரிச்சல்படுத்துகிறது. குனிந்து கல்லை எடுத்து எறிகிறான். எறிகிற கற்கள் "விர்ர்ர்... விர்ர்ர்ங்" என்ற விசை இரைச்சலோடு பாய்கின்றன. குறிப்பாக கோவிந்தனின் ஆடுகளை நோக்கியே பாய்கிறது அவனது மனக்கற்கள்.

நீல டவுஷர் சாயம் போய்... நூல் நூலாய்த் தொங்கியது. அழுக்கான சீசன் துண்டு தலையில் வட்டக்கட்டாகக் கட்டப்பட்டிருந்தது. இன்னும் புனை ரோமம் அரும்பாத பிஞ்சுப் பருவம்.

இவனது முதுகுக்குப் பின்னால் -

கோலாகலச் சத்தம், பொங்கல் வைத்து மொட்டை எடுத்து, காது குத்த சாதிசனத்தோடு வந்தவர்களின் மகிழ்ச்சியான ஆரவாரக் கூச்சல்.

"அடுப்பை மூட்டுங்கடா..."

"அரிசியை அரிச்சுப் போடுங்க"

"பொங்கப்பானையிலே சந்தனம் பூசி... குங்குமம் வை"

ஏகமாய் மனிதக் கூச்சல் உத்தரவிடுகிற - கிண்டலடிக்கிற - வெறுமனே கெக்கலிக்கிற சத்தங்கள்.

இவன் அந்தப்பக்கம் திரும்பவேயில்லை. மனசெல்லாம் கிடந்து கசக்கிறது. சத்தமுகங்களோடு மனசுக்குள் தெரிகிற அந்தக் கோவில் கோலாகலம், இவனுள் வெறுப்பனலை அலையாக எழுப்புகிறது.

காட்டுக்கோயில், பெரிய கோயில், மூன்றாள் உயரத்துக்கு கல்கோட்டைச்சுவர். அதற்கும் மேலே நெஞ்சையும், தலையையும் பயங்கரக் கண்ணையும், மீசையையும் காட்டிக்கொண்டு சாட்டையேந்திய உ...சத்தியான வீரபாண்டிச்சாமி. வாசல்படியில் நாலுபேர் படுக்கலாம். அத்தனை நீள அகலம்.

சில்லாண்டிக்குள் குதறப்பட்ட அவமான ரணம். ஒரு பிடிவாதத்தில் கழுத்தை அந்தப் பக்கம் திருப்பாமலிருந்தான். ஆனால் மனசின் ஆழத்தில் ஆசை.

அந்தக் கோலாகல ஆரவாரக் கூச்சலில் தனது குரலும் கலந்து நிற்க வேண்டும் என்ற ஆசை. பொங்கல் வைப்பதை.... மொட்டை போடுவதை... சந்தனம் தடவிய சின்னத் தலையைப் பார்க்க ஆசை. அந்த மகிழ்ச்சியான மனிதக் களோபரத்தில் தானும் சமதையாகக் கலந்து மகிழ்ந்து குலாவிக் கிடக்கணுமென்னும் ஆசை. வெள்ளையும் சொள்ளையுமாகக் கிராமத்து ஆண்கள் - பூப்போட்ட சேலைகளில் கிராமத்துப் பெண்கள். சந்தோசமாய்ப் பேசிச் சிரித்து... மனக் கொண்டாட்டமாய்க் குதூகலிக்கிற அழகைப் பார்க்க ஆசை...

என்ன செய்ய?

இவன் எப்ப.. எதுக்கு... என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேறாது. அதோடு மட்டும் வெறுமனே போகாது. மனசின் ஆழம் வரைக்கும் ஓர் அரிவாள் வெட்டு விழும். காயமாக்கும். அவமான ரணம், சாகும் வரைக்கும் மாறாத தழும்பாகிப் போகும்.

இப்பவும்... அப்படித்தான்...

நின்ற நிலையில் நிற்பது கஷ்டமாக இருக்கிறது. கால் கடுக்கிறது. தொடைச் சதையெல்லாம் உளைச்சல் எடுக்கிறது. சற்று விலகி, விலகி கள்ளத்தனமாய் நழுவ தருணம் பார்க்கும் ஆடுகளை கல்லால் எறிகிறான்.

"ஹைய்க்... ஹைய்க்... ஏய் மூஞ்சி, வெள்ளை, எங்க பாயப் பாக்கே?" என்று ஆடுகளின் பேர் சொல்லி அதட்டுகிறான்.

வேப்பமரத்து நிழலிலேயே ரெண்டு சுற்று சுற்றுகிறான். காலார நடக்கிறான். அப்புறம் ஆட்டுக்கம்பை சாய்வாக ஊன்றி அதன் மேல் இடது கட்கத்தைப் போட்டு... விறைத்த இடது கால் பாதத்தில், வலது காலைத் தளரச் செய்து ஊன்றிக்கொண்டு... உடம்பின் பாரம் முழுவதையும் கம்பின் மேல் போட்டு...

பசுக்களை மேய்க்கும் கோகலகிருஷ்ணனைப் போல நின்றான் சில்லாண்டி.

தூரத்தில் ஊருக்குள் பள்ளி மணியோசை ஒலிப்பின் மங்கலான இரைச்சல். இவனுக்குள் இனம்புரியாத ஏக்கம் இழப்புச் சோகம்.

கோவிந்தன்கூடச் சுத்தித் திரியலாம்கிற விருப்பத்துக்காக - ஏழாப்பு அரைப்பரீட்சை முடிந்த கையோடு அய்யாவிடம் சண்டை போட்டு அடம்பிடித்து ஆட்டுக்கம்பைப் பிடித்த அந்த நாள்.

ரெண்டு வருஷமாயிற்று.

இப்போது படித்தால்... ஒன்பதாம் வகுப்பில் இருப்பான். காக்கி டவுசரும், வெள்ளைச் சட்டையுமாக இருந்திருப்பான். வகுப்பில் நாலாவது... ஐந்தாவது ரேங்க்கில் இருப்பான்.

எல்லாம் போச்சு. இந்தக் கோவிந்தன் பயலோட நட்பை பெரிசா நெனச்சு வந்தது தப்பாப் போச்சு... ஆயுசுக்கும் தீராத மானக்கேடாகிப்போச்சு.

ஒண்ணாப்பிலிருந்து கூட்டாளி கோவிந்தன். பக்கத்திலேயே ஒட்டியிருப்பான். சிலேட்டில் இவன் எழுதியதைப் பார்த்துப் பார்த்துத்தான் கோவிந்தன் எழுதுவான். படிப்பில் ரொம்ப மக்கு.

கோவிந்தன் ஏழாப்பு வரைக்கும் வந்தான். கால் பரீட்சை எழுதி முடித்தவுடன் படிப்புக்கும் "கோவிந்தா" போட்டு விட்டான். ஆட்டுக்கம்பை எடுத்து அவனது அய்யா கொடுத்து விட்டார். அவனும் ஆனந்தக் கூத்தாட்டம் போட்டுக் கொண்டே ஆடுகளைப் பத்திக் கொண்டே காடுகரைக்குப் போய்விட்டான். கூண்டுவிட்டுப் பறந்த குருவி. ஆகாயம் முழுக்க ரெக்கையடித்த சுதந்திரக்குருவி.

ரெக்கையொடிந்த மாதிரியிருந்தது சில்லாண்டிக்கு. ஏழு வருஷ சிநேகிதன். இல்லாமற்போன இழப்புச் சூன்யம். பழகுவதும் சிரிப்பதும்... கேலி கிண்டல் பண்ணுவதும்... நையாண்டி பண்ணி கூத்தடிப்பதும்.... கோவிந்தன் கூட இருந்தாலே கும்மாளம்தான். குதூகலம் தான். குறுப்பும் குசும்புமாய் மனசே பொங்கி வழியும் சந்தோஷமாயிருக்கும் உயிர் சிநேகிதத்தை உணராமலேயே அனுபவித்தான்.

இதெல்லாம்... கோவிந்தன் இல்லாமற்போன பிறகுதான். சில்லாண்டிக்கே புரிந்தது. பிரிவின் வேதனை தாளாமல் ஏங்கி படிப்பிலிருந்த ருசியே போயிற்று. வகுப்பே சப்பென்று ஆகிவிட்டது. "அறுத்துக்கொண்டு ஓடிவிடலாமா" என்று அவன் மனசுக்குள் துடிப்பு, தவிப்பு. ரெக்கையடிக்க ஆசைப்படுகிற மனசு. கோவிந்தனுக்குள் போய் விழுந்துவிட ஆசை.

அய்யாவிடம் சண்டை போட்டான். அடம்பிடித்தான் ஆடு மேய்க்கப்போவதாக ஆலாய்ப் பறந்தான். பாவம், அய்யா!

நாயக்கர் வீட்டில் சாணி, சகதி, அள்ளி, பழைய கஞ்சியை மாட்டுத்தொழுவத்தில் வைத்துக் குடிக்கிற அய்யா. "ஆடு மேய்க்கப் போகணுன்"னு ஆலாய்ப் பறக்கிற மகனின் அக்கறையில் குளிர்ந்துபோன அய்யா, பூரித்து மகிழ்ந்த அய்யா.

அரைப்பரீட்சை முடிந்த கையோடு ஆட்டுக் கம்பைத் தூக்கிவிட்டான் சில்லாண்டியும்.

கோவிந்தன் கூட்டுக்காக படிப்பையே தூக்கியெறிந்தான் சில்லாண்டி. ஆனால் கோவிந்தன்? கோவிந்தன்?

சில்லாண்டிக்குள் தீக்கோலைச் சொருகின மாதிரியிருந்ததது. "அடப்பாவி... காறித் துப்பிட்டியேடா... நம்பி வந்த ஜீவனோட நரம்பை அறுத்துட்டீயேடா..."

மனசின் கனல் வார்த்தையாகாமல்... முகமற்ற உணர்வுத் தகிப்பாக உள் ஜவ்வையே சுட்டுப் பொசுக்க....

.... ரெண்டு மாசத்துக்கு முந்தி ஆடுகள் ஊருக்குள் நுழைகிற சமயம், ஆடுகளை இனம் பிரித்தனர். அவரவர் ஆடுகளை தனியாக்கிப் பத்திக்கொண்டு வந்தனர். கோவிந்தன் ஊருக்குள் போனான்.

சில்லாண்டி ஊரைத் தாண்டியிருக்கிற சேரிக்குப் போயாகணும்.

"போய்ட்டு வாரீயா.. டா கோவிந்தா?"

"ம்"

"நீ வாரீயா... டா? நா வரட்டா? கொழை ஒடிக்கப் போவணும்லே?"

"ம் நானே வாரேன்"

சிரிப்பின் வெளிச்சம் சில்லாண்டி முகத்தில் மின்னியது. மனசின் சிரிப்பு. மனநட்பின் நெகிழ்வு. பூரிப்பின் மலர்ச்சி.

ஆனால்... கோவிந்தன் முகம் சிரித்தது. அது முகச்சிரிப்புதான். மனச்சிரிப்பாகத் தெரியவில்லை. ஏதோ தர்மசங்கடமான தவிப்பை வேப்பெண்ணையை மாதிரி விழுங்கிக்கொண்டு சிரிக்கிறான்.

ஆடுகளைக் கொண்டுபோய், வேலிப்படலுக்குள் அடைத்தான், வேலிப்படலின் மூலையில் ஆட்டுச்சாணிக்குப்பை. அதன் கொச்சை வாடை குப்பென்று நாசியை தாக்குகிற சாணியின் நெடி. அந்தக் குப்பை குமியிலிருந்து "கத கத" வென்று வெக்கையான ஆவி வந்துகொண்டிருந்தது வேலிப்படலின் கதவை இழுத்து மாட்டிவிட்டு,

வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் வந்தான். மனம் முழுவதும் ஓர் இனம்புரியாத பரபரப்பு அவன் ரத்த அணுக்களில் பரவியிருந்த ஒரு மனத்துரிதம். "கோவிந்தன் எப்பவருவான்?" என்று அலைபாய்கிற மனசு.

"எம்மா... எம்மா..."

கத்திக்கொண்டே ஓடிவருகிற சில்லாண்டி.

"எம்மா... சோறு வை...வவுறு பசிக்கும்மா.."

"ஏண்டா சனியனே. வந்து நிக்குறதுக்குள்ளே வவுத்தைக் காட்டுதே? கால்லே வெண்ணியை ஊத்திக்கிட்டு நின்னா... என்ன செய்ய?"

"இப்ப, சோறு வைக்கப் போறீயா, இல்லியா....?"

"இருடா.. எடுபட்ட பயலே"

உச்சஸ்தாயியில் கத்தி வெடிக்கிற அம்மா.

அள்ளிப்போட்ட மாதிரி "அவுக், தொவக்" கென்று உண்டு முடித்தான். ஈரக்கையை டவுசரில் துடைத்துக் கொண்டே வந்தான். தெருவிளக்கின் வெளிச்சம், நுனி சுருண்ட வாலோடு சோம்பலான அசமந்தமாய் அலைகிற பன்றிகள்.

எட்டிப்பார்வையை எறிந்தான். கோவிந்தன் தட்டுப்படவில்லை. ஆவல்பறப்பில் ரெக்கையடிக்கிற மனசின் துள்ளல் பரபரப்பு நிலைகொண்டு நிற்க முடியவில்லை.

"இந்தக் கணமே கோவிந்தனைப் பார்த்தாகணும்" என்று துடிக்கிற மனசு.

பொறுமையில்லாதவனாக சில்லாண்டி ஊர்த்தெருவை நோக்கிப் புறப்பட்டான். இல்லை, பாய்ந்தான்.

ரெண்டு பேரும் ஊர் மைதானத்தில் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேசினர். கொழை களவுக்குப்போகணும். "ஊர் அடங்குகிற வரைக்கும் பம்மிப் பதுங்கணும் ராத்திரி பூராவும் ஆடுகள் கடிக்க பசுங்கொழை வேண்டுமே.

நேரம் ஊர்ந்தது.

"கோவிந்தா... போவமாடா?"

"ம் நேரம் எம்புட்டு இருக்கும்?"

"பத்துக்கு மேலே இருக்கும்டா... சரி. கொழைக்கு எங்க போறம்?"

"ராம்மையா நாடாரு புஞ்சைக்குடா" என்று கோவிந்தன் குசகுசுத்தான் ரகசியமாக.

ரெண்டுபேரும் போய்க்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவருக்கு கரிக்கட்டையான வடிவமாகத்தான் தோன்றினர். கனத்த இருட்டு கிள்ளிவிட்டு ஓடுகிறவனைக் கூட காணவிடாத இருட்டு.

அப்போதுதான்

கோவிந்தன் "டேய் சில்லாண்டி" என்று ரொம்பக் கனிவாகக் கூப்பிட்டான். "பேசவா வேண்டாமா" என்று பலநாள் மனத்தயக்கத்திற்குப்பிறகு பேசப்போகிறான். இன்றைக்கு குரலில் அந்தத் தயக்கம், தடுமாற்றம், குழைவு வெட்டுவதற்கு முன் ஆட்டின் கழுத்தில் போடுகிற மாலை மாதிரியான ஒரு குழைவு.

"என்னடா... கோவிந்தா?"

"நாம் ரெண்ட பேரும் ஒண்ணாப்புலேயிருந்து கூட்டாளிக. உசுருக்கு உசுரா பழகுறோம்... போடா, வாடான்ன சர்வ சாதாரணமாக பேசிக்கிறோம் இல்லியா?"

"ஆமா.... அதுக்கென்ன?

"எங்க தெருக்காரங்க என்னை வைதாக. தாறுமாறா இழிவாப் பேசுதாக"

"என்னன்னு?"

"என்னதான் கூடப் படிச்சாலும், சாதி இல்லேன்னு போயிருமா? எளிய சாதிக்காரன் வந்து " ஏலேய்... ஓலேய்"னு ஒன்னைக் கூப்புடுதான். நீயும் பல்லைக் காட்டிக்கிட்டு "ஈ,ஈ" எனு இளிக்கீயே.. ஒனக்கு மானாபிமானமில்லியா? சாதி ரத்தம் ஓடலியா" ன்னு ரொம்ப மானக்கேடாப் பேசுதாக அதட்டுதாக..."

உயிரில்லாமல் "ம்" கொட்டுகிற சில்லாண்டி. அவனைச்சுற்றி நின்ற இருட்டு. இப்போது மனசுக்குள் பய இருட்டாக... பீதி இருட்டாக... கிலி இருட்டாக..

மனசுக்குள் அரிவாள் வெட்டு விழுந்த மாதிரியோர் அதிர்வு. உலர்ந்து போன உயிரற்ற உதடுகள். "அதுக்கு நா என்ன செய்யணும்?" என்ற ஹீனமாய்க் கேட்டான். மனச்சாட்சியின் குற்ற உணர்ச்சியின் உறுத்தலில் தடுமாறுகிற கோவிந்தனின் குரலை திகிலுடன் எதிர்பார்த்தான் சில்லாண்டி.

"அவுக சொல்றதுலேயும் ஞாயும் இருக்குல்லே?"

சம்பந்தமற்ற - தொடர்பற்ற கோவிந்தனின் பதில். சில்லாண்டிக்குள் ஏதோ ஒன்று நொறுங்கி உதிர்கிற உணர்வு, அடி வயிற்றில் பகீரென்கிற திகில். மௌனம் சில்லாண்டிக்குள் கனத்த மௌனம்.

மத்த எடங்கள்ளே நீ "வாடா, போடா"ன்னு கூப்புட்டுக்க. ஊருத் தெருவுக்குள்ளே மட்டும்..."

"ம்? மட்டும்? வாங்க சாமி, போங்க சாமிங்கணுமா?"

"வேண்டாம் வாங்க... போங்க"ன்னு கூப்பிட்டாப் போதும்."

அப்போது அவர்கள் மயானத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். இறந்தவர்களைப் புதைக்கிற, எரிக்கிற இடம்.

இவர்களது ஏழு வருஷ நட்பைப் புதைக்கவா, எரிக்கவா?

சில்லாண்டியின் வெள்ளை மனதில் - கள்ளமற்ற பாலகமனசில் - பதிகிற சமூகத்தின் கூர் நகங்கள் குத்திக் கிழிக்கிற குரூர நகங்கள் மனித நீதிக்குப் பொருந்தாத கொடிய நகங்கள்.

"தடுமாற்றமும் தயக்கமுமாய் தர்மசங்கடப்பட்டாலும், கோவிந்தனும் சாதி பார்த்துவிட்டானே... நம்பைவிடச் சாதி பெரிசு என்று நினைத்துவிட்டானே" என்ற உணர்வுதான். நினைக்க நினைக்க அவனுள் ஒரு குண்டுபோல் வெடித்தது.

இப்பவும் அப்படித்தான் ரெண்டுபேரும் ஆடுகளைப் பத்திக் கொண்டு கரிசல் தரிசில் விட்டனர். பக்கத்தில் எந்த வெள்ளாமையுமில்லை. ஆடுகளைத் தன்போக்கில் விட்டுப்புட்டு சற்று சுதந்திரமாக இருக்கலாம்.

கோவிலுக்குள் நடந்த கோலாகலம். எப்போதும் வெறிச்சென்று கிடக்கிற கோயிலுக்குள் இன்றைக்கு நடந்த கோலாகலம். மனித நடமாட்டம், சந்தோசக் கூவல்கள், ஆரவார இரைச்சல் சில்லாண்டி தான் ஆர்வமும், குதூகலப் பரபரப்புமாய்க் கேட்டான்.

"ஆடுக மேயட்டும் நாம வேணும்னா கோயிலுக்குள்ளே போவமா?

"எதுக்கு?"

"பொங்க வைப்பாக. மொட்டை எடுப்பாக.. கொலவை போடுவாக நாமளும் பொங்கச் சோறு வாங்கித் திங்கலாம்."

"அப்ப நா மட்டும் போறேன் நீ ஆட்டைப் பாத்துக்க"

"ஏன்? நா வரக்கூடாதா?"

"நீ உள்ளே வர முடியாது. நா வேணும்னா ஒனக்கும் சேத்து பொங்கச்சோறு வாங்கிட்டு வாரேன்...."

"ஏன்... நா வந்தா என்ன? எனக்குச் சாமியில்லியா?"

"அது என்னமோ... எனக்குத் தெரியாது... இந்தக் கோயிலுக்குள்ளே நீ காலெடுத்து வைக்கமுடியாது. சொன்னாப் புரிஞ்சுக்க..."

அலட்சியமாகச் சொல்லிவிட்டு ஒரே ஒட்டமாய் ஓடிப்போய் விட்டான் கோவிந்தன். வெட்டுப்பட்ட வெள்ளாடாய்த் துடித்த இவன் முகத்தை - கண்களை - மனசை - பார்க்கவேயில்லை கோவிந்தன்.

எந்தவித மன உளைச்சலுமில்லாமல், ஆர்வமும் ஆசையுமாய்ப் பரபரத்த இவனை - இவனது உணர்ச்சிகளை வெட்டிவிட்டுப் போய்விட்டான். அலட்சியமான புறக்கணிப்பு அவமானகரமான நிராகரிப்பு.

காயம்பட்ட மனசில் உப்பையள்ளிப்போட்ட மாதிரி காந்தலெடுத்தது. வேப்பமரத்து நிழலில் வெக்கையாக நின்றான் சில்லாண்டி.

முதுகுக்குப் பின்னால் இருக்கும் கோயிலைப் பார்க்காமல் விசனப்பட்டுப்போய், கோபித்துக் கொண்டு... விகாரங்களால் குதறப்பட்ட மானாபிமான ரணத்தோடு ஆட்டுக் கம்பை ஊன்றிக் கொண்டு...

நீண்ட யோசனையில் நேரம் போவது தெரியாமல் மூழ்கிக் கிடந்த சில்லாண்டி... கால் எரிச்சல் பற்றியதால்.. காலை மாற்றி ஊன்றினான். தற்செயலாக கரிசல் தரிசைப் பார்த்தான். தரிசு, தரிசாகவே கிடந்தது. வெள்ளாடுகளைக் காணோம். ஓர் ஆட்டைக் கூடக்காணோம். தீக்கென்றது.

விரிந்து பரந்த கரிசல் தரிசு முழுவதும் பார்வையை எறிந்தான்.. ஏங்குமே சூன்யம் ஆடுகளற்ற சூன்யம்.

ஐயய்யோ... பணம் பெத்த ஆடாச்சே... எங்க போச்சு..? ஏதாச்சும் வெள்ளாமை வெளச்சல்லே... பச்சைப்பசப்புலே போய் விழுந்து மேய்ஞ்சிட்டா...? ஐயய்யோ... ஊர்க்கூட்டம்... வசவுகள்... அபராதம்.

சில்லாண்டி பதறிப் பதைத்தான். உள்ளங்கால்வரை பரவிப் பாய்ந்த மன அதிர்ச்சி, பயச்சிலிர்ப்பு. கையும் காலும் ஓடவில்லை.

"முதலில் கோவிந்தனிடம் தாக்கல் சொல்லணுமே... கோயிலுக்குள்ளேயிருக்கிற கூட்டத்துக்குள்ளே இருக்கானே... எப்படிச் சொல்ல?" மனசுக்குள் வியர்த்துக் கொட்டியது.

ஒரே ஓட்டமாய்க் கோயிலைப் பார்த்து ஓடினான். வெறிபிடித்த ஓட்டம் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு ஓடிய ஓட்டம்.

நாலு ஆள் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம். வாசல்படி அத்தனை நீள அகலம். ஒடிய ஓட்டத்தில் அதில் ஏறி மிதிக்கப்போன-

"ஏலேய்!"

வாசலில் ராட்சஸத் தாட்டியமாய் ஓர் ஆள். வெள்ளை வேட்டியும் மஞ்சள் துண்டும் போட்டு, மீசையும் வைத்திருந்தார். பார்த்தாலே மனசு பதறும் அப்படியொரு தோற்றம்.

திகைத்துப்போய் நின்ற சில்லாண்டி முகத்தில் வெலவெலப்பு கண்ணில் அப்பிக்கிடந்த பீதி.

"எங்கலே போற?"

கர்ண கடூரமான குரலில் இயல்பான அதிகாரத்தோனி.

ஓடி வந்த வேகத்தில் வேர்வைக்காடு, மூச்சிரைப்பு.

"கோயிலுக்குள்ளே... கோவிந்தனை பார்க்க..."

"யாருலே... நீ"

"சில்லாண்டி.... ஆடு மேய்க்கேன்"

"சில்லாண்டியா? சேரிப் பயலா?"

"ம்"

"போடா அங்குட்டு" என்று கோபமாய் வெடித்துக் கத்துகிறார்.

பிடிபட்ட குருவிக்குஞ்சாக "விலுக், விலுக்" கென்று விழித்தான் சில்லாண்டி.

"ஆடு மேய்க்கிற எளிய சாதிப்பயலுக்கு எம்புட்டுத் திமிரு இருந்தா... கோயிலுக்குள்ளே வருவே? ராஸ்கல். போடா நாயே... வாசப்படியிலே காலை வச்சே... மண்டையை ஒடைச்சிப் போடுவேன்... படுவா... போடா... அங்குட்டு..."

கண் மூக்கு தெரியாத வெறியில் கத்துகிற அவர், அதட்டலும், மிரட்டலுமாய் காட்டுக்கத்தலாய் கூச்சலிடுகிற அவர்.

சில்லாண்டி அரண்டு போனான். பயத்தில் டிரவுசரே நனைந்து போயிற்று. உயிரே அறுந்துபோன மாதிரியிருந்தது.

அவனுக்குள் "என்னன்னவோ" நிகழ... ஆட்டுக்கம்பை எறிந்துவிட்டு நடந்தான். கோயில் வாசப்படியை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அரை உயிராக நகர்ந்தான்.

மனசெல்லாம் கிடந்து கசந்தது.

அடுத்த வருஷம் ஜூன் மாதத்தில் ஏழாப்பில் சேர்ந்தான். சில்லாண்டி மட்டும்.

கோயில் முன்னால் -

தர்மகர்த்தா உட்பட வெள்ளையும், சொள்ளையுமாய் பிரமுகர்கள் நின்றார்கள். அரசு ஊழியர்களும் நின்றனர். அவர்கள் பார்வைகள் முழுவதுமே ஊரிலிருந்து வரும்மெட்டல் ரோட்டின் மீது நங்கூரமிட்டிருந்தது. ஆவலான நங்கூரம், பரவசக்கூத்தாட்டமான நங்கூரம்.

ஊரிலிருந்து கோயில்வரை ரோடு போட்டு ஏழெட்டு வருஷமாயிற்று.

ரோட்டில் பால்நிறக்கார் புழுதியை கிளப்பிக்கொண்டு பாய்ந்து வந்து நின்றது. ஊழியர்கள் பதற்றமும் பரபரப்புமாய்க் கதவைத் திறக்க "வாங்க சார்... வாங்க சார்..." என்று பவ்யமாக வணங்கி வரவேற்க... பிரமுகர்கள் முகமெல்லாம் சிரிப்பாக வணங்கி வரவேற்றார்கள்

காரிலிருந்து இறங்கிவந்த அறநிலையத்துறை அதிகாரி. கோயிலுக்குள் மரியாதையான உபசரிப்போடு மாலையணிவித்து வரவேற்கப்பட்ட அதிகாரி. கோயிலுக்குள் நுழைகிற நேரம் அதிகாரி ஷூவைக் கழற்றிக் கொண்டே வாசல்படியைப் பார்த்தார்.

அதே வாசல் படி... நாளு ஆள் படுக்கலாம். அத்தனை நீள அகலம்.

அவரைச் சுற்றிலும் வரவேற்புச் சத்தம். "வாங்க, வாங்க" என்று மரியாதையான உபசரிப்புகள்.

வெறும் உள்ளங்காலை வாசல்படியில் வைக்கிறபோது - குப்பென்று பழைய அக்னி ஜ்வாலைகள் சில்லாண்டி மனசில்.

நன்றி: மானாவாரிப் பூ.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link