சிறுகதைகள்


பொன்னுசாமி கங்காணி

கூடல்.காம்

காலண்டரைப் பார்த்தார். கோர்ட்டில் நாளைக்குப் பொன்னுசாமி கங்காணியை விசாரிக்கப் போகிறார்கள். நாளையோடு விசாரணையெல்லாம் முடிந்துவிடும். பிறகு தீர்ப்புச் சொல்லவேண்டியது தான் பாக்கி!

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெருமூச்சை அவிழ்த்து விட்டு, வாசலில் மாட்டியிருந்த காந்தியின் படத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே எழுந்து வெளித் திண்ணைக்குச் சென்றார்.

எல்லா வகையிலும் கச்சிதமாகத் திகழும் ரவாங் நகருக்குச் சமீபத்தில் தாண்டவராயன் போ தோட்டம் இருக்கிறது. அது வெள்ளைக்காரத் துரையின் தோட்டம். அந்த தோட்டத்துக்கு எப்படி தாண்டவராயன் போ என்ற பெயர் வந்தது? வெள்ளைக்காரத் துரைக்குத் தாண்டவராயன் மேல் அப்படி என்ன ஈடுபாடு?

இப்படியெல்லாம் குழப்பமடையவே தேவையில்லை. துரை இதற்கு முதன் முதலில் வைத்த பெயர் "தண்டர் ரெய்ன்போவ்" எஸ்டேட். தண்டர் என்றால் இடி. ரெயின் போவ் என்றால் வானவில்! நம்மவர்களின் வாயில் நுழைந்தால் எதுதான் மாறி, மருவிப் போகாமல் தப்பும்? இடியும் வானவில்லும் தாண்டவராயனாக மாறிவிட்டன! அந்தத் தோட்டத்துக்குப் பெயர் வைத்த துரைக்கேகூட அதன் உண்மைப் பெயர் மறந்துபோகும் அளவுக்குப் பிரசித்தமாகியிருந்தது. "தாண்டவராயன் போ!"

ஆனால், அந்தத் தோட்டத்தையும் மிஞ்சிப் பிரசித்தமாகி இருந்தது பொன்னுசாமி கங்காணியின் பெயர்! தாண்டவராயன் போ தோட்டத்தில் நல்லதோ கெட்டதோ, பொன்னுசாமி கங்காணி இல்லாமல் நடப்பதே கிடையாது. வம்பு தும்பு என்றால் வழி விட்டு ஒதுங்கக்கூடியவர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்னும் தாரகத்தை மனத்தில் பதித்துக் கொண்டும், அகிம்சையே அகிலத்தின் வித்து என்ற காந்தியடிகளின் வாசகத்தை, உயிர் மூச்சாக விட்டுக்கொண்டும் வாழ்பவர். பொன்னுசாமி கங்காணி!

தன்மீது விழுகின்ற வெய்யிலையெல்லாம் தாங்கிக்கொண்டு, தங்கியிருப்பவர்களுக்கு நிழலைக் கொடுக்குமே மரம்; அப்படி ஒரு தன்மை, அப்படி ஒரு குணம் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.

அந்த குணம்தான், குழந்தைச் செல்வமே இல்லாதிருந்த அவருக்கும் அவர் மனைவி தாயம்மாளுக்கும் மேரியைச் சம்பாதித்துக் கொடுத்தது!

ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், வெள்ளைக்காரர்களெல்லாம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில், தாண்டவராயன் போ தோட்டத்துச் சொந்தக்காரரான ஜாக்சன்துரை, தன்னுடைய இரண்டு மாதக் கைக்குழந்தை மேரியை வைத்துக்கொண்டு என்னமாய்த் துடித்துக் கொண்டிருந்தார்.

வேறு எந்த வழியுமே தோன்றாத அந்த நேரத்தில், வாழைக் குருத்தை வழங்குவது போல் அந்தக் குழந்தையைப் பொன்னுசாமி கங்காணியிடம் கொடுத்துவிட்டுச் சென்றாரே ஜாக்சன்துரை! துரையின் மனைவி எலிஸா மட்டும் சாகாமல் உயிரோடிருந்தால் அந்தக் குழந்தையை அவ்வளவு சாதாரணமாகக் கொடுத்துப் போயிருக்க முடியுமா துரையால்?

"வீடுவாசல் தோட்டம் தொரவு" எல்லாவற்றையும் விட்டு விட்டு ஜாக்சன் துரை கிளம்பும்போது பொன்னுசாமி கங்காணியிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள், இன்னும் கூட கங்காணி காதில் அசரீரி போல ஒலித்துக் கொண்டுதான் இருந்தன.

"பொன்னுசாமி, என் டார்லிங் எலிஸாவைப் புதைச்சு வைச்சிருக்கிற இந்த எஸ்டேட்டை விட்டு, என் குழந்தையையும் உன் கையில் கொடுத்திட்டு போறேன். நான் சாகாம பொழைச்சிருந்து, மறுபடியும் இந்த இடத்துக்கு வந்தேன்னா, அப்போ என் குழந்தை மேரியை என்கிட்டே ஒப்படைச்சிடு."

கோட்டையைப் போல எஸ்டேட்டை வைத்துக்கொண்டு, கொடி கட்டி வாழ்ந்துகொண்டிருந்த ஜாக்சன்துரை, சின்னஞ் சிறிய துணிப் பையை மட்டும் தூக்கிக்கொண்டு, லாலாங் புதருக்குள் புகுந்து ஓடிய காட்சி, பொன்னுசாமி கங்காணியின் மனக் கண்ணில் இன்னும் நிழலாக ஆடிக்கொண்டுதான் இருந்தது.

அன்று மட்டும் கங்காணி மனம் வைத்திருந்தால் அந்தத் தாண்டவராயன் போ தோட்டத்துக்கே உரிமையாளராகியிருக்கலாம். ஆனால் சத்தியம், நேர்மை நீதி என்றெல்லாம் காந்தீயக் கொள்கைகளைப் படித்துப் பழுத்துப்போன நெஞ்சுக்கு, அடுத்தவர் சொத்தைத் தன்னுடையதாக்கிக்கொள்ளும் தைரியம் வரவில்லையே!

அதன் பிறகு எத்தனையோ மாறாட்டங்கள்! விதைத்த வயலில் நாற்று எழுந்து, பயிர் முற்றி, அறுவடையாகி, மீண்டும் வயல் சேறும் சகதியுமாகி... இப்படிப் பல மாற்றங்கள்.

ஜாக்சன் துரையிடம் கிராணியாக இருந்த ஒருவர்தான் இப்போது தாண்டவராயன் போ தோட்டத்துக்கு முதலாளி! ஆனால் பொன்னுசாமி கங்காணி, அன்றும், இன்றும் அதே கங்காணிதான்!

மரம் எப்படித்தான் வளர்ந்துவிட்டுப் போகட்டுமே! அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிலம் அப்படியே இருக்கவில்லையா! மாற்றத்தைத் தாங்கிக்கொள்வதில் உள்ள பெருமை போதாதா?

"அப்பா! காப்பி ஆறிப்போவுதே! இன்னும் குடிக்கலியா?" சிந்தனையிலிருந்து விடுபட்ட பொன்னுசாமி கங்காணியின் முன் பதினாறு வயது பருவச் சிலையாக மேரி நின்று கொண்டிருந்தாள்.

"இதோ குடிக்கிறேம்மா!" என்று மேரியை உள்ளே அனுப்பிவைத்தார் கங்காணி.

வெளித் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி அண்ணாந்து பார்த்த அவர் கண்களில், வாசலில் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்த காந்தியடிகளின் படம் தெரிந்தது. அந்தப் படத்துக்குக் கீழே எழுதப்பட்டிருந்த வாசகமும் தெரிந்தது.

"சத்தியமே வெல்லும்!"

முடிவில் சத்தியமே வென்றுவிடுமோ! வெறும் வாயை ஒரு முறை சப்புக் கொட்டி உமிழ் நீரை உள்ளே இறக்கிக் கொண்டார் பொன்னுசாமி கங்காணி!

பதினாறு வருடங்களுக்குப் பிறகு, தான் கொடுத்துச் சென்ற குழந்தைச் செல்வத்தைத் திரும்பப் பெறுவதற்காகச் சீமையிலிருந்து வந்திருக்கிறார் ஜாக்சன் துரை! அவர்தான் ஒரு காலத்தில் தாண்டவராயன் போ தோட்டத்துக்கு முதலாளியாக இருந்தவர். இப்போது அதெல்லாம் பழைய கதை! ஆனால், மேரிக்குத் தந்தை என்பதுகூடவா பழைய கதையாகிவிட முடியும்!

ஆமாம், பொன்னுசாமி கங்காணியையும் தாயம்மாவையும் பொறுத்த வரை அதுவும் அப்படித்தான் ஆகியிருந்தது.

தங்கள் ரத்தத்தோடு ரத்தமாக வளர்ந்துவிட்ட மேரியை இழப்பதற்கு அந்தத் தமிழ்த் தம்பதிக்கு முடியவில்லை. ஒரு வேலை தான் அதற்கு உடன்பட்டு துரையிடம் மேரியைக் கொடுக்க முன்வந்தாலும், தாயம்மாள் முன்வர மாட்டாள்.

மேரியைப் பிரிந்து அவளால் உயிர் தரிக்கவே முடியாது என்பது கங்காணிக்குக் தெரியும். என்ன செய்வது? காந்தியடிகளின் பாதையில் செல்லும் கங்காணிக்கா இப்படி ஒரு சத்திய சோதனை!

மனம் கூசாமல், "மேரியைத் தர முடியாது" என்று இருவரும் துரையிடம் கூறிவிட்டனர்.

நீலமணி விழிகளும் பொன்னிறத்துக் கூந்தலுமாக, உருவத்தால் மட்டும் வெள்ளைக்காரியாக, உள்ளத்தால், ஒழுக்கத்தால் முற்றிலும் தமிழச்சியாகவே வளர்ந்துவிட்ட மேரிக்கு எல்லாமே புதிராக இருந்தது.

உலகத்தைப் பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளாத மேரி, அதிலுள்ள மனிதர்களைப் பற்றி எப்படித்தான் தெரிந்துகொள்வாள். சீமையிலிருந்து தனக்கொரு அப்பா வந்து இப்படித் திடீரென்று குதித்த விசயத்தைக்கூட அவளால் இன்னும் சீரணிக்க முடியவில்லையே!

கங்காணியும் தாயம்மாவும் இல்லை என்று சொன்னதால் மட்டும் துரைக்குப் பிள்ளை இல்லாமல் போய்விடுமா? ஒரு நாயைக் கொல்லுவதானாலும் சட்டப்படிக் கொல்லும் வெள்ளைக்காரத் துரையல்லவா அவர். ஜாக்சன் துரை கோர்ட்டில் வழக்குப் போட்டிருந்தார்.

வழக்கு எத்தனையோ மாதங்களாக நடந்தது. நாடெங்கும் மிகவும் பிரசித்தமாகிப் போயிருந்தது அந்த வழக்கு. தீர்ப்பு கங்காணிக்குச் சாதகமாகத்தான் முடியும் என்று ஊரில் பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ரெண்டு மாசக் குழந்தையா இருந்தப்போ தூக்கிக் கொடுத்துட்டுப் போன மனுசன், பதினாறு வருசமா செத்துச்சா பொழைச்சுச்சான்னு கூட பார்க்காம இருந்துட்டு, இப்போ திடீர்னு வந்து பிள்ளையைக் கொடுன்னா யார்தான் கொடுப்பாங்க".

இப்படிப்பட்ட அனுசரணையான வார்த்தைகளைக் கேட்கும் போது தாயம்மாளின் உள்ளமெல்லாம் குளிர்ந்துபோகும். கங்காணிக்கும்கூடத்தான். ஆனால் அவர் மனத்திற்குள் ஒர் உறுத்தல்; சத்தியத்தைக் கொலை செய்கிறோமே என்ற உளைச்சல் அவரைப் பிய்த்துத் தின்றது.

மனத் திரையில் ஓர் ஒத்திகை!

"ஜாக்சன் துரை கொடுத்த குழந்தைதான் மேரி. அவளைத் துரை அழைத்துக் கொண்டு போவதுதான் நேர்மை என்று பொன்னுசாமி கங்காணி கூறுகிறார். ஜாக்சன் துரை நன்றி சொல்லிவிட்டு மேரியை அழைத்துப் போகிறார். வளர்த்த பாசம் தாங்கமாட்டாமல் அந்த இடத்திலேயே விழுந்து உயிரை விடுகிறாள் தாயம்மா! மேரியுமில்லாமல், தாயம்மாவும் இல்லாமல் தனி மரமாக நிற்கிறார் பொன்னுசாமி கங்காணி."

அதற்கு மேலும் அந்த ஒத்திகையை மனத்தில் நடத்திப் பார்க்க முடியாமல் தலையை உலுக்கிக் கொண்டார் கங்காணி. மேரி வைத்துவிட்டுப் போன காபி ஆறிப் போயிருந்தது.

கோர்ட்டில் எப்படியெப்படிச் சொல்லவேண்டும் என்றெல்லாம் வழக்கறிஞர்கள் சொல்லிக் கொடுத்திருந்ததை ஒருகணம் யோசித்துப் பார்த்துக் கொண்டார்.

மறுநாள் கோர்ட்டில் கங்காணி சொன்ன பதிலைக் கேட்டு அங்கே எழுந்த சலசலப்பு அடங்குவதற்குப் பல நிமிடங்கள் பிடித்தன.

"ஜாக்சன் துரையின் மகள்தான் மேரி. அவளை அவரிடம் சேர விடாமல் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. வளர்த்த பாசத்தை விட பெற்ற பாசம் பெரியது என்றும், சக்திவாய்ந்தது என்றும் உணர்கிறேன். நெருப்புச் சூடு குடிகாரனுக்கு மெதுவாக உறைக்கலாம்; அல்லது உறைக்காமலே போகலாம். ஆனால் கொப்புளம் எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே! இதற்கு மேல் தயவுசெய்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்" என்று அமர்ந்துவிட்டார் கங்காணி.

யாருமே எதிர்பார்க்காத பெரிய திருப்பம் இது. மறுவாரம் தீர்ப்புக் கூறுவதாக கோர்ட் அத்தோடு கலைந்தது.

அந்த ஒரு வாரமும் தாயம்மாவின் அழுகைக்கும் மேரியின் புலம்பலுக்கும் அவரால் பதில் சொல்லவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காந்தியடிகளின் படத்தைப் பார்த்துப் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டிருந்தார் கங்காணி.

மறுவாரம் வந்தது! கோர்ட்டில் கொள்ளாத கூட்டம்! அந்தக் கூட்டமே நிச்சயமாகிவிட்ட ஒரு முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிந்தது.

கோர்ட் கூடியதும் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். "மேரியின் தந்தையான ஜாக்சன், மேரியை அழைத்துப் போகலாம்". நீதிபதி இதை வாசித்து முடித்தபோது ஜாக்சன் துரையின் கண்களில் கண்ணீர் அரும்பு கட்டி நின்றது. அது ஆனந்தக் கண்ணீர்! பொன்னுசாமி கங்காணியின் கண்களிலும்கூட நீர் திரையிட்டுத்தான் இருந்தது. அது தியாகத்தின் கண்ணீரோ!

கோர்ட் கலைந்து கூட்டம் அங்குமிங்கும் இடமாறிக் கொண்டிருந்தபோது ஜாக்சன் துரை ஏதோ கூறுவதற்காகக் கங்காணியின் அருகில் வந்து நின்றார். அப்போது, "அப்பா" என்ற குரல்! உள்ளத்தை ஊடுருவும் பாசக் குரல்! மேரி ஓடிவந்து கொண்டிருந்தாள்! துரை, கங்காணி இருவருமே கை நீட்டினார்கள், கங்காணியின் கைகளில் வந்து விழுந்து கேவிக் கேவி அழுதாள் மேரி.

"அப்பா! என்னை வெறுத்து ஒதுக்கிடாதீங்கப்பா. அம்மாவையும் உங்களையும் விட்டுட்டு என்னால் இருக்க முடியாதுப்பா... என்னை உங்க மகள் இல்லேன்னு சொல்லாதீங்கப்பா... ஒவென்று அழுதாள் மேரி.

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மேரி. இதோ, இந்த துரைதான் உங்கப்பா. பதினாறு வருசத்துக்கப்புறம் பிள்ளைப் பாசத்தாலே ஒடி வந்திருக்கிற துரை மனசு கஷ்டப்படுறாப்புல நடந்துக்கக்கூடாது. நீ சந்தோசமா உங்கப்பா கூட போம்மா. நீ எங்கே இருந்தாலும் எங்களை மறக்காம இருந்தா அதுவே போதும்" என்று மேரியின் கண்களைத் துடைத்துவிட்டார் கங்காணி.

"நான் போகமாட்டேன். போகவே மாட்டேன். இந்த அப்பா வேணும்னா நம்ம கூடவே இருக்கட்டும். ஆனா நான் மட்டும் உங்களை விட்டு போகவே மாட்டேன்". கங்காணியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் மேரி. அவள் கண்களில் அருவியாக நீர் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சோடு நிமிர்ந்தார் ஜாக்சன் துரை. "பொன்னுசாமி பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் பெரிசா இருக்கும்னு இதுவரை நான் தெரிஞ்சிருக்கல... பரவாயில்லே, மேரி! நீ நல்லா இருக்கணும்மா... நான் போய்ட்டு வரேன்" என்று அவர் சொன்னபோது அவர் கண்களில் நீர் அரும்பு கட்டியது... நா குழறியது. அவள் கையை இறுகிப்பிடித்து ஒரு கத்தை பண நோட்டைத் திணித்துவிட்டு ஜாக்சன் துரை பொன்னுசாமி கங்காணி தம்பதியை நிமிர்ந்து பார்த்தார்.

"தொரை!" பொன்னுசாமி கங்காணி எதையோ சொல்ல வாயெடுத்தார்.

"வர்ரேன் பொன்னுச்சாமி! வர்ரேன் தாயம்மா!" என்று விடை சொல்லிவிட்டு வந்த டேக்சியிலேயே ஏறிக்கொண்டார்.

நன்றி: நவமலர்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link