சிறுகதைகள்


மனமாற்றம்

கூடல்.காம்
வரதனும் மீனாட்சியும் கட்டிடத் தொழிலாளர்கள். சித்தாளாக வேலைக்குச் சேர்ந்த மீனாட்சி அங்கு வேலை செய்த வரதனுடன் சிநேகம் ஏற்பட்டு ஊர் அறிய மைலம் கோயிலில் திருமணம் நடந்தது. மாதத்தின் முதல்தேதி தவிர மற்ற எல்லா நாட்களிலும் இருவருக்கும் வேலை கிடைத்தது.

விழுப்புரம் கன்னியாகுளம் சாலையில் விடிவதற்குள் கூட்டம் கூடிவிடும். அங்கு நிற்பவர்கள் அனைவருமே கட்டிடத் தொழிலாளர்கள்தான். ஒப்பந்தக்காரர்களும், தனியாகக் கட்டிடம் எடுத்து செய்பவர்களும் தங்களுக்குத் தேவையான ஆட்களை இங்கிருந்துதான் அழைத்துச் செல்வார்கள். வரதனும், மீனாட்சியும் அப்படி அங்கு போய் நின்றதில்லை. ஒரு மேஸ்திரியிடம் அடைந்து வேலை செய்து வந்தார்கள்.

பெண்ணுக்கு வாழ்க்கை என்பது ஆடை போன்றது. சாப்பாடு மட்டுமல்ல வாழ்க்கை. நெஞ்சுக்கும் உடம்புக்கும் நிம்மதி வேண்டும். அந்த நிம்மதி மீனாட்சிக்கும் கிடைத்தது. வரதன் கடுமையான உழைப்பாளி. அவன் திருத்தமான வேலையைப் பார்த்து சுந்தரமூர்த்தி மேஸ்திரி அவனுக்கு தவறாமல் வேலை கொடுத்தார். வரதனும் மீனாட்சியும் அவர் ஒப்பந்தம் செய்து வரும் கட்டிடத்தில் வேலை செய்துவந்தனர். வரதனுக்கு கொலுத்து வேலை மட்டுமல்ல, இரும்பு வளைத்து, சென்டிரிங் வேலையையும் அற்புதமாய் செய்வான். அதனால் சுந்தரமூர்த்தி அவனைக் பயன்படுத்திக்கொண்டார். வரதனால் மீனாட்சிக்கும் வேலை கிடைத்தது. இருவரும் வாராவாரம் சம்பளம் பெற்றுக்கொள்வார்கள்.

தனியே கட்டிடம் எடுத்து வேலை செய்ய வேண்டும் என்று வரதனுக்கு ஆசை துளிர்த்தது. தன்னை வளர்த்து ஆளாக்கிய கொலுத்து வேலையின் பிதா சுந்தரமூர்த்தி அவர்களின் ஆசியோடு ஒரு கட்டிடம் மொத்த ஒப்பந்தமாக ஐந்து லட்சம் பேசி வரதன் வேலையைத் தொடங்கினான். அவ்வப்பொழுது அவரிடம் வந்து ஆலோசனை கேட்பான்.

வரதனின் கீழ் ஒன்பது பேர்கள் வேலை செய்தனர். அதில் தியாகு என்பவனும் ஒருவன். அவன் வரதனின் வலது கரம் போல் தொழிலுக்குத் துணையாக இருந்தான். கட்டுமானப் பொருட்களை வீணாக்காமல் வேலை செய்வதில் நிபுணன். இவனும் சுந்தரமூர்த்தி கம்பெனியில் வேலை செய்தவன்தான். வரதன் ஐந்தே மாதத்தில் கட்டிடத்தை முடித்துவிட்டு தன் குருவை அழைத்து வந்து காட்டினான். அவர் மிகவும் பாராட்டினார். தன்னால் உருவாக்கப்பட்ட ஒருவன் உயர்வதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். வாழ்த்தினார்.

அடுத்து ஒரு கட்டிடம் வேலை செய்தான். இரண்டு அடுக்கு மாடி வீடு. இதுவும் மொத்தமாகப் பேசி ஒப்பந்தம் செய்தான். கட்டிடம் துரிதமாகவே நடந்தது. இக்கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் போது உடன் வேலை செய்த தியாகுவின் மனைவி பிரசவத்தில் இறந்து போனாள். அதனால் தியாகு ஒரு மாதம் வேலைக்கு வரவில்லை. குறித்த மாதத்தைவிட ஓரிரு மோதங்கள் கழித்து கட்டிடத்தை முடித்துக் கொடுத்தான்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் முழுமையும் அவ்வப்பொழுது கொடுத்துவிடுவான் வரதன். இது அவன் சுந்தரமூர்த்தியிடம் கற்றது. அவர் கம்பெனியில் மாதச் சம்பளம், வாரச்சம்பளம், தினக்கூலி என்று மூன்று அடுக்குகள் உண்டு. அதைப் போலவே நடந்து கொண்டான். நல்ல வருவாய் கிடைத்தது.

நன்னாட்டில் சொந்தமாக வீடு கட்டினான். மகன் பிரபுவை உள்ளுர் பள்ளிக்கூடத்திலேயே சேர்த்தான். மனைவி மீனாட்சியை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிப்பார்த்தான். அவள் அதைக் கேட்காமல் அவளும் கூட வந்து ஏதாவது வேலை செய்வாள். அவர்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத் திகழ்ந்தது. இரண்டு கட்டிடங்கள் எடுத்து செய்த அனுபவத்தில் இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றை எடுத்து செய்தான். ஒரு மாடி கட்டிடம் முடிந்து இரண்டாவது மாடி கட்டிக் கொண்டிருந்த போது ஜல்லி, சிமெண்ட், செங்கல், கம்பி எல்லாமே திடீரென்று உயர்ந்தது. ஆட்களும் கூலி அதிகம் கேட்டனர். தொழிலில் போட்டி ஏற்பட்டது. கட்டிடம் முடிக்கும் போது தான் பேசிய தொகையை விட அதிகம் செலவானது. இதனால் நன்னாட்டிலிருந்த நிலத்தை விற்க வேண்டியதாயிற்று.

விலை உயர்வால் ஏற்பட்ட இழப்பில் ஒரு பகுதியைக் கட்டிட உரிமையாளரிடம் கேட்டு நிலமையை புள்ளி விவரத்தோடு கூறினான். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வரதன் மனமுடைந்தான். வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி நின்றது. தன் மகனுக்காக வாங்கி வைத்திருந்த சங்கிலியும், காப்பும், மீனாட்சியின் வளையல்களும் மார்வாடிக் கடைக்குப் போய் நிரந்தரமாகத் தங்கிவிட்டன. நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு இருந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை முழுமையாக கொடுத்தான்.

வரதன் மீண்டும் கட்டிடம் எடுத்து வேலை செய்ய விரும்பவில்லை. அதனால் மீண்டும் சுந்தரமூர்த்தி கம்பெனியில் வரதனும் மீனாட்சியும் வேலை செய்ய வந்தார்கள். அவர் அரவணைத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளாக மற்றவர்களை வேலை வாங்கி வந்த வரதன் வேலை செய்த போது மிகவும் துன்பமாக இருந்தது. மகன் பிரபு இரண்டாம் வகுப்பு படித்து முடித்தான்.

மன உளைச்சலால் அடிக்கடி வேலையில் ஊக்கமில்லாமல் இருந்ததை சுந்தரமூர்த்தி கவனித்தார். நீண்ட நாட்கள் தன் கம்பெனியில் வேலை செய்து வந்த வரதனை கண்டித்து வேலை வாங்க முடியாமல் இருந்தார். ஒரு நாள் இரண்டாம் மாடிக் கட்டிடம் சாரம் கட்டிக் கொண்டிருந்தான் வரதன். கால் வழுக்கி அங்கிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்தான். அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆனால் வரதனுக்கு நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது.,

மீனாட்சி மின்சாரத்தால் தாக்குண்டவள் போல் அதிர்ந்து போனாள். சவ அடக்கத்திற்கான செலவுகளை சுந்தரமூர்த்தியே கொடுத்தார். அரசு ஏற்படுத்திய திட்டத்தில் வரதன் சேரலாம் சேரலாம் என்று இருந்து விட்டான். அரசு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்க வழி இல்லாமல் போனது. மீனாட்சிக்கு இரண்டாயிரம் ரூபாய் கருணை அடிப்படையில் சுந்தரமூர்த்தி கொடுத்தார்.

மீனாட்சி இருபத்தி ஆறு வயதிலேயே கைம்பெண்ணானாள். மகன் பிரபு மட்டுமே அவளுக்குத் துணை. வரதன் அவனுக்கு விட்டுச்சென்றது நன்னாட்டில் உள்ள வீடு மட்டுமே. தன் வாழ்வு இப்படி ஆனதே என்று கரைந்து உருகினாள். அதைவிட மற்றவர்கள் காட்டும் அனுதாபம் அவளுக்கு வேதனையாக இருந்தது. புயலில் சுழலும் இலையாய் துவண்டு போனாள்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி கம்பெனியிலேயே வேலை செய்து வந்தாள். மகன் பிரபு நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். வரதனிடம் வேலை செய்த பலரும் சுந்தரமூர்த்தி கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தார்கள். மீனாட்சிக்கு வாரச் சம்பளமே கொடுத்தார். வேலை இல்லாத நாட்களில் மார்பிள், டைல்ஸ், மொசைக் தரைகளை சுத்தம் செய்யும் வேலைக்குப் போவாள். வருவாய் இரண்டுபேர் வயிற்றையும் கழுவியது.

முதல் தேதி வந்தால் பிரபுவுக்கு கொண்டாட்டம். மீனாட்சிக்கு விடுமுறை அன்று மகனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவாள். பள்ளிக்கூட சத்துணவுக்கு அனுப்பாமல் வகையாகச் சமைத்து மகனோடு மகிழ்ச்சியாய் சாப்பிடுவாள். மீனாட்சி மற்ற நாட்களில் காலையில் சென்றால் மாலை தான் வருவாள். கொலுத்து வேலையை விட டைல்ஸ் பதிக்கும்வேலை எளிதாகவும் வருவாய் அதிகமாகவும் இருந்ததால் மீனாட்சி மார்பிள், மொசைக் போடும் வேலை செய்யத் தொடங்கினாள். அதை தியாகு என்பவன் நடத்திவந்தான். இவன் சுந்தரமூர்த்தியிடமும், வரதனிடமும் வேலை செய்தவன் தான்.

தியாகுவும் மீனாட்சியும் இணைந்து வேலை செய்து வந்தனர். இருவர் மனதிலும் சலனம் ஏற்பட்டது. ஒருநாள் வேலை செய்தவர்கள் போய்விட்டார்கள். தியாகுவும் மீனாட்சியும் மாடியில் "டைல்ஸ்" சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மனப் போராட்டத்தில் இருவருமே தவித்தனர். தியாகு தன் எண்ணத்தை வெளியிட்டான்.

"எனக்கு தாரம் இல்லை. அவள் செத்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. குழந்தை ஏதும் இல்லை. உன் மகன் பிரபுவை என் பிள்ளையாகவே ஏற்றுக் கொள்கிறேன். என்னை நீ திருமணம் செய்துகொண்டால் என் உயிர் உள்ளவரை உங்களைக் காப்பாற்றுவேன்..." என்றான் தியாகு

மீனாட்சியும் தேம்பித் தேம்பி அழுதாள். அவளை அவனால் தேற்ற முடியவில்லை. தியாகுவுக்கு சங்கடமாகிவிட்டது. அவளே அழுது அடங்கினாள்.

பத்து ஆண்டுகளாக கற்புடன் வாழ்ந்த மீனாட்சிக்கு சோதனை ஏற்பட்டது. தற்காப்பு இல்லாதத் தனிமையும், வறுமையும் அவளை மிரட்டியது.

மற்றொரு நாள் வேலை செய்யும்போது, தியாகு மீனாட்சியிடம் "எனக்கு எவளாவது கிடைப்பாள்... ஆனால் உன்னைப் போல் ஆகுமா? உன் அடக்கமும்... உழைப்பும் எனக்கு பிடித்துள்ளது. பிரபுவை நன்றாகப் படிக்க வைப்பேன்... அண்ணன் சுந்தரமூர்த்திகிட்டேயும் சொன்னேன். மீனாட்சியும் நீயும் இணையலாம் தப்பு இல்லைன்னு சொன்னார்" என்றான் தியாகு.

என் பையன் பிரபு உங்களை ஏற்றுக்கொள்வானா? அதான் எனக்கு பயமா இருக்குது. தினமும் வீட்டில் தனியா பயந்து பயந்து வாழ்வதைவிட உங்களோடு இருப்பதில் எனக்கு நிம்மதி ஏற்படும். ஆனால் நன்னாடு கிராமம்.. யாருக்காவது தெரிஞ்சா என்ன சொல்லுவார்கள். ஆம்படையான் இருக்கும்போதே தொடுப்பு இருந்திருக்கும். அவன் செத்ததும் ஒண்ணு கூடிட்டாங்கன்னு சொல்லுவாங்க" என்று கண்ணிறைந்த நீரோடு அழுகை கலந்து பேசினாள் மீனாட்சி.

இளமை வேட்கை இருவரையும் ஈர்த்தது. உள்ளங்களில் போராட்டம்... ஆதரவு இன்றிக் காற்றில் அலைந்த கொடிக்கு பற்றுதலாக ஒரு கொம்பு கிடைத்ததுபோல் தியாகுவின் நட்புக்கு பச்சைக் கொடி காட்டினாள் மீனாட்சி. நன்னாட்டைவிட்டு விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் குடிபெயர்ந்தாள் மீனாட்சி. பிரபுவை பூந்தோட்டப் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு சேர்த்தாள். எல்லாமே தியாகுவின் ஏற்பாடுதான்.

காய்ந்த ஓலையில் தீப்பற்றிக்கொண்டது போல் ஆனது.

ஏதாவது செய்தி சொல்லுவதுபோல் அடிக்கடி மீனாட்சி வீட்டுக்கு தியாகு வந்தான். அக்கம் பக்கத்தில் யார்? என்று கேட்டார்கள். மாமன் மகன் என்று கூசாமல் பொய் சொன்னாள். அவன் வீட்டினுள் வந்தால் பிரபு அச்சத்துடன் மிரண்டுபோவான். அவனிடம் நன்றாகப் படிக்கிறாயா? வீட்டுப்பாடம் எழுதிட்டியா? என்று கேட்பான். அவன் பதில் வார்த்தை வெளிவராமல் வாய்க்குள்ளேயே அடங்கிவிடும். ஒரு நாள் பிரபுவிடம்.

"பிரபு இவர் ரொம்ப நல்லவர். இவர் மொசைக் கம்பெனியிலதான் நான் வேலை செய்யிறேன். அப்பாவுக்குப் பிறகு இவர்தான் நமக்கு எல்லாம். இன்னும் ஒரு மாசத்திலே உன்னை திண்டிவனம் ஆஸ்டலில் சேர்த்துடுவாரு... நீ அங்கேயே பன்னிரண்டாவது வரைக்கும் படிக்கலாம். மாசா மாசம் உனக்கு பணம் அனுப்புவேன். முதல் தேதி வந்தா டாண்ணு திண்டிவனம் வந்துடுவேன். லீவு விட்டா விழுப்புரம் வந்துடலாம்" என்று மெல்ல சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. தியாகுவைப் பார்த்தாலேயே பிரபுவுக்குப் பிடிப்பதில்லை. அவன் வீட்டுக்குள் வந்தால் வெளியே ஓடிவிடுவான். அவன் அம்மா அவனோடு பேசுவது, பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால்,

மீனாட்சி அவனைப் பற்றியும் அவன் படிப்பு பற்றியும் கூறியதற்கு அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை...

ஒரு நாள் ஒரு கட்டிடத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியாகு மொசைக் மிஷின் இயக்கிக் கொண்டிருந்தான். மீனாட்சி தண்ணீர்விட்டு கழுவிக் கொண்டிருந்தாள். திடீரென்று வரதன் நினைவு வந்தது. "இதுபோல ஒரு மொசைக் மிஷின் வாங்கி நாம கட்டற கட்டிடத்துக்கு நாமே மொசைக் போடலாம் என்ன மீனாட்சி" என்று வரதன் கூறியது காதில் ஒலிக்கச் செய்தது. அடுத்த அறைக்குச் சென்று அழுதாள். வரதன் இருந்தவரை எதிலும் அவளுக்குக் குறை வைத்ததில்லை. மீனாட்சி வரதனுக்கு துரோகம் செய்ய மனம் இடந்தராமல் தத்தளித்தது. ஆனால் தியாகுவின் அன்பு, பரிவு அவளை மயங்க வைத்தது.

மீனாட்சியை காணாமல் அடுத்த அறைக்கு வந்த தியாகு சன்னல் ஓரம் மீனாட்சி நின்றிருப்பதைக் கண்டு அருகில் சென்றான். "என்ன மீனாட்சி... இங்கே வந்து நிற்கிறே... உம்.. இன்னிக்கு வேலையை முடிச்சிட்டு நாளைக்கு கண்ணம்மாள் லேஅவுட்டில் வேலை..."

"ஒண்ணுமில்லைங்க... நாம கல்யாணம் பண்ணிக்காமல் பழகனா என்னங்க?"

"தப்பு மீனாட்சி... தப்பு... பார்க்கிறவங்க இப்பவே யார் அவர்? என்ன உறவுன்னு கேட்கறாங்க... கணவன் - மனைவியாயிட்டா நமக்கு பயமில்லை... நான் சொல்றது புரியுதா. நீ என்னைக்கு சரீன்னு சொல்றையோ அன்னிக்கே திருவாமாத்தூர் கோயில்லே மாலை மாத்திட்டு தாலியும் கட்டிடறேன்."

இருதலை கொள்ளியாக வேதனைப்பட்டாள் மீனாட்சி. ஆனால் இவர்கள் உறவு இலை மறைவு காய் மறைவாக நீடித்தது.

ஒருநாள் கோடைகால இரவு. திண்ணையில் பிரபு தூங்கிக்கொண்டிருந்தான். மீனாட்சி ஒரு பக்கக் கதவைத் திறந்த நிலையில்... வாயிற்படியில் தலையை வைத்து படுத்திருந்தாள். தியாகு வந்தான். குனிந்து "மீனாட்சி" என்று கூப்பிட்டான். எழுந்தாள். திண்ணையை எட்டிப் பார்த்தாள்... பிரபு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கதவு சாத்தப்பட்டது.

விடியற்காலை. பிரபுவின் தூக்கம் கலைந்தது. வீட்டினுள் பேச்சரவம் கேட்டது. பிரபு எழுந்தான். கதவு துவாரம் வழியே பார்த்தான். அங்கே மீனாட்சியும், தியாகுவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இரத்தம் கொதித்தது.

"மீனாட்சி வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்னிக்கே கோயிலுக்குப் போயி கல்யாணம் செய்திட்டு வந்திடுவோம். எத்தனை நாளைக்கு இப்படி பயந்து பயந்து வந்து போவது..." என்றான் தியாகு. இந்த பேச்சு பிரபு காதில் கொதிக்கும் ஈயமாக விழுந்தது. வீட்டைவிட்டு வெளியே போனான்.

சாணம் தெளிக்க வெளியே வந்த மீனாட்சி மகனை திண்ணையில் காணாமல் திடுக்கிட்டாள். அருகில் இருந்த மாரியம்மன் கோயிலில் பார்த்தாள். இல்லை.. கால்வாள் பக்கம் பார்த்தாள்.. இல்லை.. எப்போதாவது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போவான்.. அங்கு ஓடினாள். பிரபு உட்கார்ந்திருந்தான். ஓடிப்போய். "பிரபு" என்று விளித்து அணைத்துக் கொண்டாள்.

பிரபு... ஏண்டா இங்கு வந்து உட்கார்ந்திருக்கிற. எங்கெல்லாம் தேடுவது? உம் பிரபு... ஏண்டா அழறே... இருட்டில் வரலாமா? உம்... அழாதே பிரபு... அழாதே... பிரபு ஏன் அழறே... சொல்லுடா...

"அப்பாவை நினைத்துக் கொண்டேன்மா... என்று வாய்விட்டு அழுதான்... அவன் அருகில் உட்கார்ந்தாள்... பிரபு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அம்மா... நான் பெரியவனாகி உன்னை நான் காப்பத்தறேன் அம்மா... அந்த ஆளை நம் வீட்டில் சேர்க்காதே... எனக்கு பிடிக்கலே... நீங்க பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டேன்மா... அம்மா அது மாதிரியெல்லாம் வேண்டாம்மா... அப்பா மேல சத்தியமா சொல்றேன். நான் நம்ம ஊருக்கே போயி நம்ம கிணத்திலே விழுந்து செத்துப் போயிடுவேன்மா" என்று கோவென கதறினான் பிரபு.

தாயின் உள்ளம் ஓலமிட்டது. தாய் கெட்டுப்போவதை மகன் விரும்பவில்லை. ஒரு நிமிட சந்தோஷத்திற்காக பெற்ற மகனை இழக்க மீனாட்சி விரும்பவில்லை. கடைசி வரை வரதன் மனைவியாகவே இருக்க முடிவு செய்தாள். மகனுக்காக இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

"பிரபு... இனிமே அந்த ஆள் வரமாட்டார். நாமும் நன்னாட்டுக்கே போய்விடலாம்." என்று மீனாட்சி அழவே.

"அம்மா நான் படிக்கிறதை நிறுத்திட்டு சித்தாள் வேலைக்கு நானும் வரேம்மா. நான் வேலை செய்து உன்னைக் காப்பாத்தறேன்."

"ஐயோ பிரபு... நீ என் பிள்ளை இல்லேடா என் தகப்பன்... நீ வேலைக்குப் போக வேண்டாம்டா... நல்ல படிக்கணும்... நாம இன்னிக்கே வீட்டை காலி செய்துவிட்டு நன்னாட்டுக்குப் போயிடலாம்... வா... வா வீட்டுக்குப் போகலாம்."

மகன் கரம் பற்றி வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

வீட்டை நெருங்கிய போது தியாகு திண்ணையில் உட்கார்ந்திருந்தான். இவர்களைப் பார்த்து "எங்கடா பிரபு போயிட்டே... அம்மாவை அலைய வச்சிட்டியா? இவ்வளவு காலையிலே எங்கே போனான் மீனாட்சி.."

பிரபுவும் மீனாட்சியும் பதில் பேசவில்லை...

உள்ளே சென்ற மீனாட்சி பிரபுவை பல்விளக்கச் சொல்லிவிட்டு, தியாகுவின் பையை எடுத்துவந்து அவனிடம் கொடுத்துவிட்டு வாங்க... என்று கூறிவிட்டு தெருவில் நடந்தாள். ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் அவன் பின்னாள் நடந்தான்.

மாரியம்மன் கோயில் திறந்திருந்தது. உள்ளே சென்றாள் மீனாட்சி. தியாகு அவள் அருகில் நின்றான்.

"தியாகு... ஏதோ நமக்கு புத்தி மழுங்கிப்போய் ஒருவர் மேல் ஒருவர் ஆசைப்பட்டோம். ஆனா என் மவன் பிரபுவுக்கு பிடிக்கலே. வாயைத் திறந்து சொல்லிட்டான். இனிமே எனக்கம் உனக்கும் எந்த சிநேகமும் வேண்டாம். காலையிலேயே நாம பேசிட்டு இருந்ததை கேட்டிருக்கான்."

"மீனாட்சி... போகப்போக சரியாயிடும்... நாமதான் அவனை ஆஸ்டல்லே சேர்க்கப்போறோமே."

"இல்லைங்க... நீங்க வேற எந்த பொண்ணையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க. இனிமே இங்கே வராதீங்க. இன்னிக்கே வீட்டை காலி செய்திட்டு நன்னாட்டுக்கு போறோம். இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. என்னைப் பார்த்தாலும் பேசக்கூடாது. உங்க உறவு நீடிச்சா அவன் நன்னாட்டு கிணத்திலே விழுந்து செத்துப்போவேன்னு அழுகிறான்... அதனால... இனிமே வேலைக்கு வரமாட்டேன். நான் பழைய இடத்துக்கே வேலைக்குப் போகப்போறேன். என்னை மறந்துடுங்க தியாகு... என்னை மறந்துடுங்க..." என்று சொல்லிவிட்டு வாடகை வண்டியைத் தேடி வண்டி மேட்டுக்குச் சென்றாள் மீனாட்சி.

சரீர உறவு ரொம்ப சாதாரணம். அது ஆண் பெண் இடையே ஏற்படும் ஒரு வடிகால். கற்பு என்பது உடல் தொடர்பானது அன்று. அது உள்ளம் தொடர்பானது. அதை வெளிப்படுத்தியது ஒரு பிஞ்சி உள்ளம்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link