சிறுகதைகள்


உழைப்பே உயர்வு

கூடல்.காம்
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான் வீரப்பன். பகலில் கடுமையாக உழைத்த அலுப்பால் உடம்பு வலி எடுத்தது. பக்கத்தில் செல்லாயி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். பாயைவிட்டு ஒதுங்கிப் போய் சுவர் ஓரம் அவர்களின் ஏழுவயது மகள் கற்பகம் உறங்கினாள்.

வீரப்பன், செல்லாயி, மகள் கற்பகம் - அன்பான குடும்பம் இரண்டு காணி நிலமும் மோட்டாரும் உண்டு. அந்தநிலத்தை திருத்தவே வீரப்பன் மிகவும் செலவு செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுது நெல்லும், மணிலாவும் பயிரிட்டுள்ளான்.

விடியற்காலை இருவருக்குமே விழிப்பு வந்தது.

"நாள் பூரா உழைச்சு ஓடா தேயறோம். என்னத்தை வச்சிருக்கோம்.... பஞ்சம் பொழைக்க வந்த தானப்பன் உங்ககிட்டே எடுபிடி வேலை செய்தவன் நிலமும் வாங்கிட்டான், திருக்கோவிலூரில் மெத்தை மேல் மெத்தை கட்டிக் கொண்டிருக்கிறான்". அங்கலாய்த்துக் கொண்டாள் செல்லாயி.

"தோபாரு செல்லாயி... உண்மையான உழைப்பு என்னைக்கும் வீண் போயிடாது. இப்ப நாம பட்டினி, பசி இல்லாம கெடக்கிறோமே அது பெரிசில்லையா...." என்றான் வீரப்பன்.

"ஆமாம்... சம்பாதிச்சி... உரையிலே கொட்டி வச்சிருக்கே ஏதோ வாயைக் கட்டி வயித்தைக் கட்டி கறவல் மாடு வாங்கினேன் அது இல்லைன்னா தெரியும்...."

"கோச்சுக்காதே செல்லாயி.... மானம் பாத்த பூமி பழிவாங்கிடுச்சி. மழையும் பேயலே. மரவள்ளி விலையும் குறைஞ்சு போச்சு... நமக்கு மட்டுமா... ஊரிலே எல்லார்க்கும்தான்".

கண்ணாலம் கட்டிக்கினு வந்து பதினைஞ்சு வருசத்திலே ஒரு மூக்குத்தி வாங்கி கொடுத்திருப்பியா? நல்லதா ஒரு சேலை உண்டா? நான் ஏதோ பால்வித்து. மோர்வித்து. பூவித்து நாலு காசு சேர்த்து வைச்சா அதையும் வாங்கி உரம் வாங்கணும், உப்பு வாங்கணும்னு வாங்கிக்கிறே.... கையிலே காசு இருந்தால்தான் இந்த மணம்பூண்டியில மனுஷாளா மதிப்பாங்க தெரிஞ்சுக்க...

"நீ சொல்றது சரிதான் செல்லாயி, ஜாண் ஏறினா முழம் சருக்குது. நான் என்ன வீண் செலவா பண்ணிட்டேன். நிலத்தை சீராக்கவே சரியா போச்சு. இந்த மள்ளாட்டை வெள்ளாமையில உனக்கு ஒரு பட்டு சேலை எடுத்துக்க.."

"நெசமாவா"

"உம்"

சங்கு சேகண்டி ஒலி கேட்டது. அதைத்தொடர்ந்து திருப்பாவை பாடலும் ஒலித்தது. இந்த பண்டாரக்கிழவனுக்குப் பிறகு இதுபோல் யார் பாடுவார்கள் என்று எண்ணியபடி இருந்தாள். வீரப்பனை விடியற்காலை தூக்கம் தழுவியது.

வீரப்பன் கனவில் தானப்பன் வந்தான்.

தானப்பன் பத்து வயது பையனாக அவனிடம் வந்து சேர்ந்தான். அப்போது வீரப்பன் வீட்டில் பத்து பன்னிரண்டு மாடுகள் இருந்தன. அவைகளை அவன்தான் மேய்த்து வந்தான். மூணுவேளையும் சாப்பாடு. பண்டிகை நாளில் புதுத்துணி. அவ்வளவுதான் சம்பளம் ஏதும் கிடையாது. தானப்பன் பதினேழு வயது வரை வீரப்பனிடம் தான் வேலை செய்தான். அதன் பிறகு அவனைப் பார்க்க முடியவில்லை. ஆந்திரா பக்கம் கரும்பு வெட்டப்போன ஆட்களோடு போய்விட்டான் என்று வீரப்பன் கேள்விப்பட்டான்.

பல ஆண்டுகள் கடந்தன. தானப்பனும் அவனுடன் ஒரு ஆந்திராக்காரனும் மணம்பூண்டி வந்தார்கள். ஆளே மாறிப்போயிருந்தான். கழுத்தில் சங்கிலியும், இரண்டு கையிலும் மோதிரங்களும், இடது கையில் பொன்னால் ஆன கடிகாரமும் வலது கையில் "குல்" மாத்தும் அவன் செல்வச் செழிப்பை வெளிப்படுத்தியது.

நிலம் வாங்கப் போவதாக தானப்பன் சொன்னான். அவ்வூரில் ஒருவர் நிலத்தை விற்பதாகச் சொன்னது வீரப்பனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவனை அழைத்துச் சென்று மொட்டாரோடு அந்த நிலத்தை வாங்கிக் கொடுத்தான், பதிவு செய்துவிட்டான். தானப்பன் தன்னிடம் வேலை செய்திருந்தாலும் உழைப்பால் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்டான் என்று பெருமைப்பட்டான். ஆனால் செல்லாயி மட்டும் அவன் மேல் சந்தேகம் கொண்டாள். இது நேர்வழியில் சம்பாதித்த பணமாக இருக்காது என்று வீரப்பனிடம் சொன்னாள்.

"போ... உனக்கு எப்போதும் சந்தேகம் தான்..." என்று செல்லாயிடம் கோபித்துக்கொண்டான் வீரப்பன்.

தானப்பன் வாங்கிய நிலம் ஆறு காணியும் பொன் விளையும் பூமி. சரியான முறையில் பயிரிடாமல் கிடந்தது. மறு மாதமே ஒரு பழைய வீட்டை வாங்கி இடித்துவிட்டு ஐந்தே மாதங்களில் புதிய வீடு கட்டினான். தன் நண்பனுக்கு திருக்கோயிலூரில் ஒரு வீட்டையே விலைக்கு வாங்கிக் கொடுத்தான். இருவருமே இணை பிரியாத நண்பர்களாகக் காணப்பட்டார்கள்.

இருவரும் சேர்ந்து திருக்கோவிலூரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கினார்கள். மற்றவர்கள் கொடுப்பதை விட குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்ததால் வியாபாரிகளும், மற்றவர்களும் தானப்பன் நிதி நிறுவனத்திலேயே கடன் வாங்கினார்கள்.

தானப்பன் வாங்கிய நிலத்திற்கு பக்கத்திலேயே ஐந்து காணி நிலம் விலைக்கு வந்தது. அதை நண்பன் ரங்காராவுக்காக வாங்கினான். மணம்பூண்டி வந்த இரண்டே வருஷங்களில் பெரிய புள்ளியாகிவிட்டான். இருவரும் மணம்பூண்டிக்கும் திருக்கோவிலூர்க்கும் மோட்டார் பைக்கில் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

தானப்பன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். பலர் பெண் கொடுக்க முன்வந்தார்கள். ஒரு புரோக்கர் மூலமாக திருவண்ணாமலையில் சன்னதித் தெருவில் ஒரு பணக்காரர் வீட்டுப் பெண்ணை கன்னிகாதானமாகக் கொடுத்தார்கள். ஒரே பெண். பணம் பணத்தோடு சேர்ந்தது.

திருக்கோவிலூரில் மூன்று அடுக்கு "காம்ப்ளக்ஸ்" ஒன்றை இரண்டு ஆண்டுகளாகக் கட்டி முடித்தான். பல நவீன வசதிகள் கொண்ட கட்டிடமாக இருந்ததால் மறுமாதமே 12 குடும்பங்கள் வாடகைக்கு வந்துவிட்டனர். ரங்காராவ் ஒரு நாள் மணம்பூண்டி வந்தான் தானப்பனும் ரங்காராவும் தெலுங்கில் பேசிக் கொண்டதை தானப்பன் மனைவி சகுந்தலை வியப்போடு பார்த்தாள். தன் கணவனுக்குத் தெலுங்கு பேசத் தெரியும் என்பது அன்றுதான் அவளுக்குத் தெரியும். ஏதோ ஒரு தெலுங்கில் வந்த கடிதத்தைக் காட்டி காட்டி ரங்காராவ் பேசிக் கொண்டிருந்தான்.

ரங்காராவும் தானப்பனும் மறுநாளே ஆந்திரா சென்றார்கள். ரங்காராவ் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து சேர்ந்தார்கள். அந்தப் பெண் ரங்காராவை விட மூத்தவளாக தெரிந்தது. முரட்டு சுபாவம் கொண்டவளாகவும் தெரிந்தது. அவள் வந்த ஆறே மாதங்களில் நிதி நிறுவனம் மூடப்பட்டது. மணம்பூண்டியில் ரங்காராவ் பெயரில் வாங்கிய நிலத்தை விற்றுவிடும்படி ரங்காராவ் தானப்பனிடம் கேட்டான். நிலத்தை தானப்பனே தன் பெயருக்கு வாங்கி கொண்டான். பணத்தை கொடுப்பதில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு எழுந்தது.

மன அமைதி இன்றி தானப்பன் இருப்பதை சகுந்தலை கேட்டாள். அவளிடம் ஏதும் சொல்லவில்லை தான் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு திடீரென்று ரங்காராவ் ஆந்திரா சென்றுவிட்டான். இரண்டு மாதங்கள் ஆயின ரங்காராவ் திரும்பவே இல்லை. அவன் சென்றதிலிருந்தே தானப்பன் மன அமைதி இல்லாமல் இருந்தான்.

கழனி வேலையை முடித்துவிட்டு வீரப்பனும் செல்லாயியும் வீட்டிற்கு வந்த போது ஜேம்ஸ் உட்கார்ந்திருந்தான் அவனும் அதே ஊர்தான். வீரப்பன் நிலத்துக்கு பக்கத்து நிலத்துக்காரன்.

மணம்பூண்டியிலிருந்து வேட்டவலம் போகும் சாலை ஓரம் ஜேம்ஸ் நிலம். அதில் அறுபது சென்ட்டை போன வெள்ளாமையில் பாதி ரூபாய் கொடுத்து வீரப்பன் முடித்து பத்திரமும் எழுதப்பட்டது. மீதி ரூபாய் தர வேண்டும்.

"வாப்பா ஜேம்ஸ்.... வந்து ரொம்ப நேரம் ஆயிட்டதா?"

"இல்லைங்க இப்பதான் வந்தேன்"

"என்ன ஜேம்ஸ் தம்பிக்கு கல்யாணம் கூடிட்டதா"

"ஆமாங்கம்மா"

ஜேம்ஸ் வீட்டினுள் சென்று பாயின்மேல் உட்கார்ந்தான்.

"நிலத்தை பதிஞ்சிட்டிங்கன்னா... நான் கல்யாண வேலையைப் பார்ப்பேன்" என்றான் ஜேம்ஸ்.

"மணிலா கொட்டை வெட்ட இன்னும் இரண்டு மாசம் ஆவுமே ஜேம்ஸ்"

"என்னங்க நீங்க உங்ககிட்ட மாடு மேய்ச்ச தானப்பன் கிட்டே பணமா புரளுது... ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா... நாளைக்கே முடிச்சிடலாம்" என்றான் ஜேம்ஸ்.

"அவன் கிட்டே கேட்டா கொடுப்பான்... ஆனால் செல்லாயி வேண்டாம்னு சொல்லிட்டா அதான்.."

"ஆமாம் தம்பி... என்னதான் நமக்கு ஆயிரம் கஷ்டமா இருந்தாலும் நம்ம கிட்டே வேலை செய்தவன் கிட்டே போயி கடன் வாங்கறது எனக்கு பிடிக்கலே தம்பி... சரி நீங்க போங்க பத்துநாளில் பதிஞ்சுடறோம்..." என்றாள் செல்லாயி.

ஜேம்ஸ் எழுந்து சென்றான். அவன் அரகண்டநல்லூர் நெல் மண்டியில் கணக்குப்பிள்ளையாக இருந்தான்.

"செல்லாயி... பத்து நாளில் எப்படி முடியும்?"

"மணிலா கொட்டை பிஞ்சா இருக்குதே!"

"மணிலா கொட்டையை எடுக்க முடியாது... உம் எப்படியாவது முடிச்சிதான் ஆவணும். அவன் கல்யாணம்னு சொல்றானே".

"ஏன் செல்லாயி... நாம் தானப்பன் கிட்டே போய் கேட்கட்டுமா? மணிலா பிடுங்கியதும் கொடுத்துட்டா போவுது..."

"இங்கே பாருய்யா தானப்பன் கேட்டால் கொடுப்பான், ஆனால் எனக்கு இஷ்டமில்லை... இப்படி தீடீர்னு பணக்காரனா வந்தது. இந்த சொத்து வாங்கினது... எல்லாமே ஒழைச்சு சம்பாதிச்ச பணமா தெரியலே.... குறுக்கு வழியிலே வந்த பணமாத்தான் இருக்கும். நம்ப வீட்டிலே மாடு மேய்ச்ச பையன் அவன்... அவங்கிட்டே போயி கை நீட்டப் போறீங்களா?.... வாணாம்.... கற்பகம் தண்ணி...!

"சுட்டுட்டுதும்மா"

போய் குளிங்க... நானும் குளிக்கனும்... அந்த மண்ணிலே லோலுபட்டது உடம்பெல்லாம் கசகசன்னு இருக்குது... எழுந்து போங்க... நா ஒரு இடத்துக்குப் போயிட்டு வற்றேன்...

வீரப்பனுக்குத் தெரியாம சீட்டு ஒண்ணு போட்டிருந்தாள் செல்லாயி. மணம்பூண்டி சம்பூரணம்மான்னா சீட்டு ராணின்னு சொல்லுவாங்க. ஒழுங்கா சீட்டு பிடித்து ஒழுங்காக கொடுப்பவள். யாரையும் நடக்க விடமாட்டாள். செல்லாயி அவளிடம் ஐயாயிரம் ரூபாய் சீட்டு கட்டி வருகிறாள்... எல்லாம் பால், மோர், தயிர், நெய் விற்கிற காசுதான். இன்னும் எத்தனை சீட்டு இருக்கிறது என்பது செல்லாயிக்குத் தெரியாது. ஆனால் நாளைக்கு சீட்டுன்னு தெரியும். சொல்லிவிட்டு வரலாம்னு போனாள் சம்பூரணம்மாள் எதிரிலேயே வந்துவிட்டாள்.

"செல்லாயி உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்"

"என்னம்மா, நானும் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்".

"நாளைக்கு சீட்டு... இந்த சீட்டு உன்னுடையது அடுத்த சீட்டு கம்பெனி சீட்டு... மறந்துட்டியா?!"

"நான் இன்னும் 4, 5 சீட்டு இருக்கும்னு நெனச்சி நாளைக்கு சீட்டு எடுக்கச் சொல்லனும்னு வந்தேன்மா".

"ஏன் எங்கேயாகிலும் போறியா".

"ஆமாம்மா உங்ககிட்டே சொல்றத்துக்கென்ன.. பசுமாட்டையும் கன்னுகுட்டியையும் விற்க சந்தைக்குப் போறேன்".

"என்னடி சொல்றே... பசு மாட்டை விக்கப்போறியா?!"

"போன வெள்ளாமையிலே பாதி ரூபாய் கொடுத்துட்டோம். அவனுக்கு கண்ணாலம் கூடிட்டதாம். வந்து கேட்டான்... பத்து நாளையில் பதிஞ்சுடறேன்னு சொல்லி அனுப்பினேன்".

"செல்லாயி வீட்டு லட்சுமி பசு மாடு, அதைப் போய் விக்கவாணாம். சீட்டு பணம்தான் முழுசா கெடைக்குமே...."

"கிடைக்கும்தான் இன்னும் இரண்டாயிரம் வேணும். அவனுக்கு ஏழயிரம் சேரணுமே...."

"அப்படியா... சரி நான் இரண்டாயிரம் தர்றேன் 2 பைசா வட்டி குடு போதும்... மணிலா கொட்டை வெட்டினதும் கொடுத்துடேன்".

"சரிங்கம்மா.... தெய்வம் மாதிரி வந்து காப்பத்திட்டீங்க பசுமாட்டை வித்துட்டா என்ன செய்யறதுன்னு தவிப்பா இருந்தது".

"ஏழைக்கு ஏழைதாண்டி உதவி.... நீ ஒரு தடவை எனக்கு உதவி செய்தியே... நெனப்பு இருக்கா உனக்கு".

"போங்கம்மா அது ஒரு உதவியா"

"என்ன செல்லாயி அப்படி சொல்லிட்டே... என் பொண்ணை தன் பையனுக்குக் கட்டிக்கினு போய் என் சம்பந்தியம்மா பண்ண அட்டூழியத்தை நீ பார்த்துகிட்டு தானே இருந்தே... எங்க அண்ணன் கூட வாணாம்னுதான் சொல்லிச்சி... நான் தான் மதி கெட்டு கொடுத்துட்டேன். இன்னிக்கு என் மவ படற கஷ்டத்தை சொல்ல முடியாது... அவ ஆம்படையான் சரியில்லை..."

"புறாவை பிடிச்சு பூனைகிட்டே கொடுத்த மாதிரி பண்ணிட்டிங்க அழகு பொண்ணு.... இன்னும் 2 வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணியிருக்கலாம்".

"என்ன பண்றது... விதி.... எங்கண்ணன் மவனுக்குக் கொடுக்கலாம்னு இருந்தேன்... எங்க அண்ணிக்கு இஷ்டமில்லை. அண்ணன் என்ன பண்ணுவார்... அதான் ஒரு வேகம் வந்துட்டுது... பாழும் கிணத்திலே கொண்டு போய் தள்ளிட்டேன்.... எதுக்கெடுத்தாலும் குறை கண்டுபிடிக்கிற வீடு அது. ஆம்படையான் பொண்டாட்டி பேசிக் கொள்வது இல்லையா? மூச்சு விட்டா கூட ஒட்டு கேக்கிற வீடு அது... எம் பொண்ணை எவ்வளவு செல்லமா வளர்த்தேன்... ஒரு பொம்பளை எல்லோரையும் ஆட்டி வைக்கறா..."

"அழாதீங்கம்மா..."

"நீ அன்னிக்கு உன் கழுத்திலே கிடந்த சங்கிலியை கழற்றி என் மவளை அனுப்பி வச்சியே.. அதை மறக்க முடியுமா?!"

"அதான் மூணே மாசத்திலே.... நகை செய்து போட்டுட்டு, என் நகையை கொண்டாந்து கழுத்திலேயே போட்டீங்களே.... அது பெரிய உதவியா."

"ஆமாம் பதியரத்துக்கு பணம் வேணாமா?"

"பத்திரம் வாங்கி முன்னாலேயே எழுதியாச்சிங்கம்மா".

"அப்படியா.... இந்த தானப்பனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா, உன் வீட்டிலே கூழுக்கு நின்னுகினு இருந்தவன்... நேத்து டிராக்டர் வாங்கிட்டு போனானாம். எங்க வீட்டுக்காரர் சொன்னாரு".

"எனக்கென்னமோ... நல்ல வழியிலே வந்த பணமா தெரியலே".

"நல்லா சொன்னே... ஒழைக்கிற பணம் தான் நிலைக்கும்...." இப்படி வர்றதெல்லாம் புஸ்வாணம்தான்.

"சரிங்கம்மா நான் வர்றேன்... பேசிட்டே இருந்திட்டேன். அவர் தேடுவாரு... நேத்து... அந்த ஜேம்ஸ்கிட்ட வாங்கின நிலம் மேடா இருந்தது... அதை நானும் அவருமே சீர் பண்ணோம்".

"வரேன்மா..." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் செல்லாயி.

இரண்டு பெண்கள் சேர்ந்துவிட்டால் போதும்... மடை உடைந்தாற் போல் பேச்சுதான்...ஒருவர் கவலையை ஒருவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்வார்கள். இது தமிழ் நாட்டின் மண்ணோட பண்பாடு.

"எங்கம்மா போயிட்டே... தண்ணி கொதிக்குது".

"எங்க செல்லாயி போயிட்டே.... தானப்பன் டிராக்டர் வாங்கி இருக்கான்... கோயிலுக்கு வந்தான்... வந்து கூப்பிட்டான், போனேன்..."

"இதோ குளிச்சிட்டு வரேங்க..."

"அப்பா அப்பா... போலீஸ் ஜீப்பு தானப்பன் வீட்டாண்ட நிக்குது... அவுங்க வீட்டாண்ட ஒரே கூட்டமாக இருக்குதுப்பா...."

"என்னம்மா சொல்றே..."

"ஆமாம்பா... நீங்க வேணா போய் பாருங்க..."

வீரப்பன் எழுந்து போனான்... தெரு விளக்கு எரியலே... இருட்டா இருந்தது... வீரப்பன் அங்கு போனபோது தானப்பன் கையில் விலங்கு மாட்டப்பட்டு ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தனர். வீரப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. சில போலீஸ்காரங்க தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி இல்லை. வேறு மாதிரி தொப்பி இருந்தது.

வீட்டைப் பூட்டி சீல் வைத்தார்கள்.. டிராக்டர், கார் சாவிகளை எடுத்துக்கொண்டார்கள். இரண்டு போலீஸ், காவலுக்கு நிற்க வைத்தார்கள். சகுந்தலைக்கு பெண் குழந்தை பிறந்து திருவண்ணாமலையில் இருந்தாள். விசாரித்ததில் ஒன்றுமே தெரியலே... வந்தாங்க.... உள்ளே போனாங்க... சோதனைப் போட்டாங்க... யாரையும் உள்ளே விடலே... தானப்பனை விலங்கு மாட்டி இழுத்துகிட்டு போனாங்க. போலீஸ் கூட அவன் கூட்டாளி ரங்காராவும் வந்திருந்தான். அவன் கையிலும் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.... ஒரு பொண்ணு கூட இருந்தாள். அவள் கையிலும் விலங்கு.

வீட்டிற்கு வீரப்பன் வந்தான்... மனைவியிடம் சொன்னான்.

"நான் சொன்னேன் நீதான் நம்பலே... நெத்தி வியர்வை நிலத்திலே விழுந்து பாடுபடறோம்... நமக்கு வயித்துக்கும் வாயிக்கும் எட்டலே. ஆனால் சில பேர் திடீர் பணக்காரனா ஆயிடுறான்... மாட்டிக்கினா பாத்தியா?... நல்லகாலம் நீ போய் கடன்கேக்க இருந்தியே... இங்க பாருங்க குறுக்கு வழியில வர்ற பணம் நிக்காதுங்க".

மறுநாய் கூட்டங் கூட்டமாக ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர். நாளிதழில் தானப்பன் படம். டிராக்டர், கார், மணம்பூண்டி வீடு, மூன்று அடுக்கு வீடு, நிலங்களின் படங்களும் வெளியாகி இருந்தது. ஆந்திராவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் நகரத்தில் ஒரு வைர வியாபாரியைக் கொன்று கடையையே காலி செய்த மூவரை ஏழு ஆண்டுகளுக்குப்பின் கண்டுபிடிப்பு. தமிழ்நாட்டைச் சேர்ந்த தானப்பன் கொள்ளையடித்த நகைகளையும் விற்று நிலங்களும் வீடுகளும் வாங்கியுள்ளது கண்டு பிடித்தார்கள். ஆந்திரப் போலீஸ் தமிழ்நாட்டு போலீசுடன் தொடர்பு கொண்டு கைது செய்தார்கள். இதற்கு உடந்தையாக இருந்த ரங்காராவ் என்பவனையும் பசவம்மா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். தானப்பன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விரிவாக நாளிதழ்கள் வெளியிடப்பட்டிருந்தன. வீட்டுக்கு வந்த வீரப்பன்.

"செல்லாயி.... செல்லாயி.... ஓடிவாயேன்".

"இருங்க புடவை கட்டறேன்".

"நீ சொன்னது சரியா போச்சு. அந்த தானப்பன் ஆந்திராவில் யாரையோ கொலை பண்ணிட்டு கடையையே கொள்ளையடிச்சித்தான் அந்த ரங்காராவும் அவனும் பிரிச்சுக்கிட்டாங்களாம். ரங்காராவ் ஒரு பெண்ணை கட்டிகிட்டு வந்தானே அவ கூட மாட்டிக்கிட்டா.... இதோ பார்த்தியா படம்... எல்லா சொத்துக்களையும் பறிமுதல் பண்ணிட்டாங்களாம். பேப்பர்ல எல்லாம் போட்டிருக்கு..."

எங்கு பார்த்தாலும் இதே பேச்சுதான்...

அன்றிரவு பத்து மணிக்கு மேலும் வீரப்பனும் செல்லாயியும் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link