சிறுகதைகள்


கடைசி ஞாயிறு

கூடல்.காம்
நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவனுக்கு அப்போதும் அந்தத் தினசரிக் காலண்டரைப் பார்க்க முடிந்தது. எழுந்து சென்று மூன்று ஏடுகளை ஒன்றாகக் கிழித்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை. அது மாதத்தின் கடைசி ஞாயிறு. வாரத்தின் ஆறு நாட்களிலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வடித்த ரத்த வியர்வையில் நன்கு ஊறிப்போனதற்கு அடையாளமாக அந்த ஞாயிறுக்கிழமை சிவப்பாக இருந்தது.

ஆனால், வாரத்தில் ஒரு நாள், இருபத்துநான்கு மணிநேரம் தொழிலாளரிடமிருந்து உழைப்பைப் பெற முடியாமல் இப்படி வீணாகப் போகிறதே என்ற தவிப்பில் முதலாளிகளின் கண்களும் நெஞ்சும் சிவந்துபோவதையே அவனுக்கு அந்த ஞாயிற்றுக் கிழமையின் நிறம் நினைவுப்படுத்தியதோ! அதனால் ஓர் அச்ச உணர்வும் படர்ந்ததோ!

மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தவன் தலையை வளைத்து எட்டிப்பார்த்தான். கண்ணம்மா ஓர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தாள். ஊசியும் நூலும் அப்போது அவளுக்கு ஒத்துழைப்பு செய்துகொண்டிருந்தன. அவனுடைய கால் சட்டையின் கிழிசல் பகுதியைக் கண்ணம்மா கவனமாகப் பிணைத்துக் கொண்டிருந்தாள்.

கடந்த சில நாட்களாக அவன் எங்கே சென்று உட்கார்ந்தாலும் அங்கெல்லாம் அவனுடைய உள்சிலுவாரின் வண்ணத்தைப் பிறருக்குப் பளிச்சென்று பறைசாற்றிக்கொண்டிருந்த பயங்கரமான கிழிசல் அது. கீசிங்கரும் கூட சுலபத்தில் செய்ய முடியாத ஓர் ஒட்டுதலை அவன் மனைவி கண்ணம்மா லாவகமாகச் செய்துகொண்டிருந்தாள்.

அவனுடைய மற்ற கால்சட்டைகளைப் பற்றிய கதைகள் கொஞ்ச நாட்களாக வெளியே வராமல் இருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அவை இந்தக் கிழிசலை விட மகாபயங்கரமானவை! அந்த ரகசியம் அவனுக்கும் கண்ணம்மாவுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. அதனால்தான் இப்போதெல்லாம் அதையும் வெளியே எடுப்பதில்லை. அதைப் பற்றிய கதையும் வெளியே வருவதில்லை.

அவன் நாற்காலியில் உடலை முறுக்கிக்கொண்டு வாயைச் சப்புக்கொட்டினான். நேற்று இரவிலிருந்து இன்னும் சிகரெட் பற்றவைக்கவில்லை. அதனால் வாய் என்னமோ செய்தது. பக்கத்தில் கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து, மறந்து மீண்டும் ஒரு முறை திறந்துபார்த்தான். அது என்ன அமுதசுரபியா? எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு?

வேலை தேடிச் செல்லும் இளைஞனுக்கு "காலி இல்லை" என்று சொல்லும் அலுவலகத்தைப் போல சிகரெட் பாக்கெட் அவனுக்கு வெறுமையைக் காட்டியது.

அவன் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் ஒரு மளிகைக் கடை உண்டு. அதற்கு இணையாக எதையாவது சொல்லவேண்டுமானால் கற்பகத் தருவைச் சொல்லலாம். அங்கு வட்டாரத்து மக்களெல்லாம் அதை நாடிச்சென்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதும் சம்பளம் எடுத்ததும் அவரவரும் ஓடிவந்து கற்பகத் தருவின் தேவையைப் பூர்த்தி செய்வதும் தேவலோகத்துத் தினசரி நிகழ்ச்சிகளாக நடக்கும்.

அவனும் அங்குதான் அடிக்கடி நாடுவது வழக்கம். ஆனால் அந்தக் கடைக்காரர் மகனுக்குக் கல்யாணம் வந்தாலும் வந்தது கடந்த மூன்று நாட்களாக ஒரேடியாகக் கடையை அடைத்து விட்டு, கடைக்காரர் கல்யாணக் கோலத்தில் மூழ்கிவிட்டார்.

மாதக் கடைசி என்ற வருத்தம் அவருக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அது வாடிக்கையாளர்கள் சாமான் வாங்க முடியாமல் சிரமப்படுவார்களே என்பதற்காக அல்ல; சம்பளம் போடாத நாளாயிற்றே! கல்யாணத்துக்கு வருபவர்களும், மொய் எழுத வருபவர்களும் சும்மா ஒண்ணு ரெண்டு என்று கவரை ஒட்டிக் கொடுத்துப் போய்விடுவார்களே என்றுதான் தயங்கினார். ஆனால் ஐயருக்கு வேறு நல்ல நாள் அண்மையில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே அவர் தெரிந்து சொன்னாலும் பையன் அதுவரை பொறுப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் இந்த மூன்று நாட்களாகக் கடை அடைபட்டுக் கிடக்கிறது.

நான்கைந்து வீடுகள் தள்ளி ஒரு காப்பிக்கடைகூட உண்டு. ஆனால் அங்கே அவனுக்குக் கடன் வாங்கிப் பழக்கமில்லை. பழக முடியவில்லை என்றுகூடச் சொல்லலாம். காரணம் அந்த ஆள் ஒருமாதிரி.

இருப்புக்கொள்ளாமல் எழுந்தவன் நேராகச் சமையலறைக்குச் சென்றான். அங்கே கழுவி அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிளாஸ் பீங்கான் கோப்பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. அவற்றைக் கவிழ்த்து வைப்பதற்காக விரிக்கப்ட்டிருந்த பழைய பத்திரிகைத் தாள்களையும் நீக்கி நீக்கிப் பார்த்தான்.... ஊஹூம்.

கோப்பைகள் உராயும் சத்தம் கேட்டதும் உள் அறையிலிருந்து கண்ணம்மா குரல் கொடுத்தாள்.

"என்னத்த உருட்றீங்க......?"

"ஏதாவது அஞ்சுபத்து காசு கோப்பைகள்ளே போட்டு வைப்பியே! இன்னிக்கு அதுகூட இல்லையா?" என்று அங்கிருந்தே பதில் கொடுத்தான். ஏதாவது ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்வாள் என்ற ஆசை அவனுக்கு.

"அமயஞ்சமயத்துக்கு உதவும்னுதான் அங்கே-இங்கே வைக்கிறேன். ஆனா நீங்க எங்கே அதை இருக்க விடுறீங்க......? இப்படித் தடவித்தடவித்தான் எல்லாத்தையும் எடுத்திடுறீங்களே! அப்புறம் அங்கே என்ன வாழும்?" பதில் சுடச்சுட வந்தது.

உள் அறையில் அவள் தைத்துக்கொண்டிருந்த ஊசி எப்படி அவன் இதயத்தில் வந்து பாய்ந்தது. எதுவும் பேசாமல் மீண்டும் நாற்காலியிலேயே வந்து அமர்ந்தான்.

சிகரெட் பற்றவைக்க வேண்டும் என்ற நினைவு அவனுக்கு மேலும் கிறுகிறுப்பை உண்டாக்கியது.

உள் அறையை எட்டிப் பார்த்தான். கண்ணம்மா இன்னும் தைத்து முடிக்கவில்லை. சிகரெட் சாம்பல் தட்டும் குப்பி அருகில் இருந்தது. அதை எடுத்து அவசர அவசரமாகத் திறந்தான்.

வயதாகியும், சக்தியிழந்தும் கிடக்கும் தோட்டப் பாட்டாளிகளைப் போல் சிகரெட் துண்டுகள் நிறையக் கிடந்தன. அத்தனையும் கடைசிவரை உறிஞ்சிப்போட்ட துண்டுகள். அவற்றை உற்றுப் பார்த்தான் அவன். இருந்ததிலே கொஞ்சம் நீளமாகத் தெரிந்த ஒரு துண்டை எடுத்து வாய் வைக்கும் அடிப்பாகத்தை பூ....பூ.... என்று ஊதிச் சாம்பலைப் போக்கிவிட்டு அதையே வாயில் வைத்துப் பற்றினான்.

ஆள் இல்லாத குறைக்கு முடியாதவனை வேலை வாங்கும் செய்கையைப் போல் இருந்தது அது.

குப்பியில் கிடந்ததால் உண்டான சகிக்க முடியாத ஒரு நெடியையும் பொறுத்துக்கொண்டு நிம்மதியை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவனுடைய நண்பர்கள் கோபாலும், வாசுவும் அரட்டைச் சத்தத்தோடு உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் கையிலிருந்த சிகரெட் துண்டின் கடைசி இழுப்பை வேகமாக இழுத்து துண்டு எச்சத்தைக் குப்பியில் போட்டு மூடினான்.

புதிதாக மழை பெய்து நிறைந்த தெப்பக் குளத்தைப்போல் அவர்கள் மூவரின் உரையாடலும் சுழித்துச் சுழித்து அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது.

இடையே அவன் ஒரு முறை உள் அறையை எட்டிப் பார்த்தான். அங்கே கண்ணம்மாவைக் காணவில்லை. அப்படியானால் சமையலறையில் காப்பி தயாராகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அவர்கள் பேச்சு மேலும் தொடர்ந்துகொண்டிருந்தது. நண்பன் கோபால் கையோடு கொண்டுவந்திருந்த சிகரெட் அப்போது அவனுக்குப் பேருதவியாக இயங்கிக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் நண்பர்களையும் குறிப்பறிந்து உபசரிப்பதில் கண்ணம்மா மிகவும் கெட்டிக்காரி. ஆனால் இன்னும் காப்பி வரவில்லை.

மீண்டும் அவன் சமையலறைப் பக்கம் திரும்பிய சமயம் நண்பர்கள் இருவரும் புறப்பட எழுந்தார்கள். ஆனால் காப்பி சாப்பிட்டுப் போகலாம் என்று சொல்லி அவர்களை இருக்க வைத்தவன் நேரே சமையலறைக்குச் சென்றான்.

"கண்ணம்மா........!"

சமையலறை வெறிச்சென்று கிடந்தது. குளியலறைப் பக்கம் எட்டிப்பார்த்தான். அங்கும் அவளைக் காணவில்லை. உடனே அவன் கண்கள் கொல்லைப்புற வாசலை நோக்கின. அது லேசாகத் திறந்து கிடந்தது. அவனுக்குப் புரிந்துவிட்டது. கண்ணம்மா பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டாள்.

பற்றிக்கொண்டு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மீண்டும் நண்பர்களோடு வந்து அமர்ந்தான் அவன். நண்பர்கள் காப்பியை எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணம் அவன் முகத்தில் அசடு வழியச் செய்தது.

மேலும் பத்து நிமிடங்கள் ஓடின. பணக்கார வீட்டுப் பங்களா வாசலில் பிச்சைக்குப் போன ஒருவன் துணிந்து உள்ளேயும் போகமுடியாமல், அந்த இடத்தை விட்டுப் போகவும் மனமில்லாமல் தவிப்பதைப் போன்று அவன் மனமும் அவர்கள் பேச்சில் ஒட்டமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. ஒருவழியாக நண்பர்கள் இருவரும் எழுந்தார்கள்.

"பரவாயில்லைப்பா! இன்னொரு நாளைக்கு வந்து காப்பி சாப்பிட்டுக்கிறோம். இப்போ நேரமாச்சு" என்று அவர்கள் புறப்பட்டார்கள். இப்போது அவனால் எதுவும் வற்புறுத்த முடியவில்லை.

நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது. "தண்ணி கலக்கி வருவாள் என்று காத்திருக்க இவள் ஊரைச் சுற்றப் போய்விட்டாளே... வரட்டும்! ஒரே அறை.... பதினாறு பற்களையும் கழட்டிவிடுகிறேன்!" அவன் கைகள் பரபரத்தன..........

சில கணங்கள் ஓடியிருக்கும். சமையலறைப் பக்கம் கண்ணம்மாள் வரும் அரவம் கேட்டதுதான் தாமதம். ஆவேசமாகச் சமையலறை நோக்கிப் பாய்ந்தான். கண்ணம்மாவோ கையிலிருந்த கோப்பையில் சீனியோடு நுழைந்தவள், "கொஞ்சம் இருந்த சீனி, தூளையெல்லாம் சுரண்டித்தான் காலையிலே உங்களுக்கும் எனக்கும் தண்ணி கலக்கினேன். வீட்டில ஒன்னுமே இல்லாத நேரத்திலே உங்க கூட்டாளிங்க வந்திருக்காங்க. நீங்க என்னைக் கூப்பிட்டு தண்ணி கலக்கச் சொல்லி, நான் ஒன்னுமே இல்லேன்னு சொன்னா உங்களுக்கு அவமானமா இருக்காதா? அதான் பக்கத்து வீட்டிலே போய் ஏதாவது வாங்கிட்டு வரலாம்னு போனேன். வேற நான் என்ன செய்யுறது?" ஏழ்மையின் துயரத்தையெல்லாம் எங்கோ அடக்கி வைத்துக்கொண்டு இவ்வளவையும் கூறிவிட்டாள் கண்ணம்மா.

ஆவேசம் அடங்கிப்போய் அடுப்பையே பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். சிவப்பு வண்ணத்தில் அந்த மாதத்தின் கடைசி ஞாயிறு அவனைப் பார்த்துச் சிரித்தது.

நன்றி: நவமலர்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link