சிறுகதைகள்


மயக்கமா? கலக்கமா?

கூடல்.காம்
"டேய் மச்சி... சரக்கு வந்துட்டுதா..." என்றான் பத்ரி.

"இதோ வந்திடுவான்... ஏழு மணிக்கெல்லாம் வந்துடறதா போன் பண்ணானே.

"இதோ பார் சக்தி... இப்பெல்லாம் சாதா பவுடர்லே மூன்று சதவீதம் ஹெராயின் கலந்தாலே போதும்... அப்படியே தூக்கும்... தெரியுமா?"

"அட நீவேற... மெத்தாக்குலோன் நாலு சதவீதம் அஞ்சு சதவீதம் கலந்தோமே... கிக் இல்லைன்னு... வியாபாரம் டல்லாயிடுத்தே... நெனப்பிருக்கா..."

"சரி... சரி உங்கிட்டே பேசமுடியுமா? எனக்கு நீதானே பாஸ். பார்ட்டி வந்துடுமேன்னு சொன்னேன்... அதோ அதோ கார் வந்துட்டது..."

ஒரு வெளிநாட்டு நபர் இரண்டு சூட்கேஸ்களுடன் மாடிக்கு ஏறி வந்தான். அவசரமாக உள்ளே சென்ற சக்தி சரியாக இருக்கிறதான்னு பார்த்துவிட்டு சூட்கேஸ்களை காலி செய்துவிட்டு அதில் பணத்தை நிரப்பி உடனே அனுப்பினான்.

பத்ரி நம்பிக்கையான சகா. அதனால் அவனை மட்டும் சக்தி உள்ளே அழைத்து பேசிக் கொண்டிருப்பான். மாடிப்படி அருகே "COACHING FOR IAS" என்ற பெயர்பலகை அவர்களுக்குத் துணை நின்றது. அங்கு வரும் அனைவருமே ஏதாவது புத்தகங்களுடன் தான் போவார்கள், வருவார்கள். அதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு அவர்கள் தொழில் நடந்தது.

சக்தி கட்டிலில் பொட்டலங்களை பரப்பி வைத்து அதன் மேல் இலவன் பஞ்சு மெத்தையை வைத்து வண்ணப் போர்வையால் மூடினான். கதவை இழுத்து மூடினான்.

"சக்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே டீ குடிக்கப் போனோமே... பெரிசு என்னமோ கேட்டுதே... என்ன?"

"அதுவா... நிறைய காலேஜ் புள்ளைங்க வந்துட்டு போராங்களே என்னப்பா செய்யரீங்கன்னு கேட்டது."

"ஐயையோ... உம் அப்புறம் நீ என்ன சொன்னே." என்று சொல்லி விட்டு வெளிநாட்டு சிகரெட்டை பற்றவைத்தான் புகையில் ஒரு வித நறுமணம் வீசியது.

"இது கலைக்டருக்கு படிக்கிறாங்களே ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கோச்சிங் நடக்கிற இடம்னு சொன்னேன்."

"படா ஜேக்குடா இது... சக்தி உன் மூளை கம்ப்யூட்டர்டா உடனே பதில் சொல்லிட்டியே."

"பின்னே ஐ.ஏ.எஸ். கோச்சிங் போர்டு போட்டுட்டு உள்ளே ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வச்சிருக்கேனே... பின்னே என்னன்னு சொல்றது."

"சக்தி அதோ பாரு பார்டி வர்றது.. விலையை ஏற்றி சொல்லு... பணக்கார பசங்க... மஞ்சள் டீ ஷர்ட் போட்டுட்டு வர்றானே அவனுக்கு ஊட்டியில எஸ்டேட்டே இருக்குது."

"சரி நீ உள்ளே போ... நான் பார்த்துக்கிறேன்."

"என்ன சதீஷ்... என்ன ஒருவாரமா கணோம்... உம்."

"தூத்துக்குடி போயிட்டேன்.... ராத்திரிதான் வந்தேன்!"

"இது யாரு புதுசா இருக்குது... பார்ததில்லையே...!"

"இவன் என் பிரண்ட் சத்யா... இவன் எங்கேயோ மட்டமான சரக்கை வாங்கிட்டு தவிச்சி போயிட்டான்... அதான் உங்ககிட்ட அறிமுகப்படுத்த அழைச்சிட்டு வந்தேன். இவர் உனக்கு ரெகுலர் கஸ்டமரா இருப்பாரு... சத்யா இவர் ரொம்ப ரொம்ப நாணயமானவர்... ஒரிஜனல்னா ஒரிஜனல்தான். இவனுக்கு பத்து எனக்கு பத்து கொடு சக்தி."

"தர்றேன்.... இது வெளிநாட்டு சரக்கு... விலை அதிகம்."

"எவ்வளவு என்றான் சதிஷ்... சக்தி சொன்னான்."

"ரொம்ப அதிகம் சக்தி..."

எவ்வளவுன்னு சத்யா சதீஷை கேட்டான். அவன் சொன்னான். சக்தி கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு இருபது பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

"உடனே சதீஷ்னு கூப்பிட்டான் சக்தி."

கீழே இறங்கியவர்கள் மேலே வந்தனர்.

"இங்கே நம்ம கஸ்டமர் வருவதையும் போவதையும் சிலர் கவனிச்சிட்டு சந்தேகமா கேட்கிறாங்க... அதனாலே இடம் மாத்திட்டோம், நாளையில் இருந்து இந்த அட்ரசுக்கு வந்திடுங்க..." என்று ஒரு துண்டு சீட்டை கொடுத்தான்.

"அட... நம்ம வீட்டுகிட்டைதான்... இந்த இடம் என்று ஆச்சரியப்பட்டான் சத்யா..."

போய்விட்டார்கள். பத்ரியும் போய்விட்டான்.

அன்று இரவே இடம் மாற்றப்பட்டது. மாடியின் இரண்டு அறைகள் வெளிப்புற மாடிப்படி தனி... வாயிற்படியில் "கோச்சிங் பார் ஐ.ஏ.எஸ்." என்ற போர்டு மாட்டப்பட்டது. தியாகராயர் நகர் பகுதி... எவராலும் கண்டு பிடிக்க முடியாத இடம்... கஸ்டமருக்கு தொலைபேசி மூலம் சொன்னான். ஒரு தொலைக்காட்சி பொட்டியின் பாகங்களைக் கழற்றிவிட்டு அதில் சரக்குகளை அடுக்கி பின்பக்கம் மூடி வைத்தான் சக்தி.

மோட்டார் பைக்கில் கல்லூரி தொடங்கும் வேளைகளில் சக்தி அங்கேயே போய்விடுவான். பெண்கள் கல்லூரியில் ஏதோ சாக்லேட் வங்குவது போல கிடு கிடுவென்று சரக்கு தீர்ந்துவிடும். அன்று வந்த சரக்கு ஒரே வாரத்தில் தீர்ந்து போனது...

சக்தி முதுகலை படித்த பட்டதாரி. பத்ரி வேன் நண்பன் அவன் சட்டம் படித்துக் கொண்டிருக்கிறான். பத்ரி சக்தியிடம் சரக்கு வாங்கி அவன் பகுதிக்கு விநியோகம் செய்பவன். சக்தியிடம் இரவில் வந்து வாங்கிப் போகிறவர்கள்தான் அதிகம். பெண்கள் கூட தேடி இரவு நேரத்தில் வருவார்கள். யாரிடமும் தவறாக நடக்க மாட்டான்.

ராணி மேரி கல்லூரியில் படிக்கும் சுவேதா மேல் அவனுக்கு ஒரு கண். அழகென்றால் அப்படி ஒரு அழகு. எச்சில் விழுங்கினால் கூட அவள் தொண்டையில் தெரியும் அளவுக்கு சிவப்பு நிறம். சிற்பி செதுக்கியது போல் அளவான உடல் அமைப்பு. பேசும் கண்கள். ஆனால் நெருப்பு.

ஒரு தடவை சக்தி வருவதைப் பார்த்து... "அதோ அந்த சக்தி பொறுக்கி வந்துட்டான்" என்று சுவேதா சொல்லியது அவன் காதில் விழுந்துவிட்டது அதன் பிறகு எத்தனையோ தடவை சுவேதா இவனிடம் ஹெராயின் வாங்கி இருந்தாலும் சக்தி அவளிடம் ஏதும் கேட்கவில்லை.

மற்றொரு நாள் சுவேதா தன் பக்கத்தில் இருந்த வினோதினி இடம் "இப்ப சக்தியை அப்படியே போலீஸ்கிட்டே காட்டி கொடுத்திட்டா எப்படி இருப்பான்... கற்பனை செய்து பார்..." என்று கேலி பேசியதும் சக்தி காதில் விழுந்தது. ஆனால் அவனுக்கு வியாபாரம்தான் முக்கியம்.

சென்னைக்கு இந்த கடத்தல் போதைப் பெருட்களை வெளிநாட்டிலிருந்து உடம்பில் சுற்றிக் கொண்டு வருவார்கள் ஜோ என்கிற ஆப்பிரிக்கா நாட்டு நீக்ரோ, அவனுடன் இத்தாலியைச் சேர்ந்த விக்டர், ரோசி என்ற பிரான்ஸ் பெண், மைக்கேல் என்ற அமெரிக்கன் என்ற நால்வருமே சென்னையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய சக்தியைப் போல் ஐம்பது பேர் சரக்கை எடுத்துக்கொண்டு போய் விநியோகிப்பவர்கள் உள்ளனர்.

வேலை கிடைக்காமல் அலைந்த சக்தி மீனப்பாக்கம் ஏரியாவில் ஒரு செக்யூரிட்டி தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு இவர்களை சந்தித்தான். இவனது ஆங்கில உச்சரிப்பையும், வலுவான உடலையும் பார்த்து நியமித்து விட்டார்கள். சம்பளம் இரண்டாயிரம் ரூபாய். அந்த வீட்டில் ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் மூன்று வெளிநாட்டு ஆட்கள் குடியிருந்தனர். அவர்கள் நடவடிக்கைகளைக் கவனித்தான் சக்தி முதலில் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை, இரவில் சக்திக்கு டிப்சே ஆயிரம் இரண்டாயிரம் கிடைக்கும். அவ்வளவு பெரும்புள்ளிகள் அங்கு வருவார்கள்.

நாளடைவில் சரக்கை வாங்கி கல்லூரியில் விற்று வந்த சக்தி... ஒரு ஏரியாவின் விநியோகஸ்தனாகவே ஆனான். கணிசமான இலாபம் கிடைத்தது. துன்பமான வேலைதான். அகப்பட்டுக் கொண்டால் வாழ்வே பாழாயிடும். இவனது நாணயத்தைப் பாராட்டி ஒரு மோட்டார் பைக்கை ஜோ வாங்கி கொடுத்தான். இப்படித்தான் இவர்கள் வலையில் சக்தி விழுந்தான்.

கடல் வழியாகவும் விமானம் வழியாகவும் எளிதாக இவனுடைய கூட்டாளிகள் சரக்கைக் கடத்திக் கொண்டு வந்து விடுவார்கள்.

ஆங்காங்கே இவர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஆட்கள் உண்டு. இவர்கள் சர்வசாதரணமாக எந்த வித சோதனையும் இன்றி வெளியே வருவதை சக்தியே பல தடவை பார்த்திருக்கிறான். விமான நிலையத்திலும், துறைமுகத்திலும் இவர்களுக்கு தரும் மரியாதையைக் கண்டு சக்தி மிகவும் வியப்பு அடைவதுண்டு.

சக்திக்கு சொந்த ஊர் பரமகுடி. அங்கு அவன் அம்மா, தம்பி இருவர் மட்டுமே உண்டு. சக்தி தன் வருமானத்தை வீணாக்கவில்லை. பரமகுடியில் ஒரு வீட்டை வாங்கினான். ஒரு ஏக்கர் நிலம் வாங்கினான். எல்லாவற்றையும் தம்பியே கவனித்துக்கொள்கிறான். வேலை தேடி சென்னை வந்தவன் ஜோ கண்ணில் படவே அங்கே இரவில் செக்யூரிட்டியாகவும் பகலில் ஹெராயின் விநியோகம் செய்பவனாகவும் கடுமையாக உழைத்தான.

இடத்தை மாற்றியவுடன் சுவேதாவை இவன் சந்திக்க முடியவில்லை. சுவேதா எம்.எஸ்.சி மாணவி. இறுதியாண்டு படிக்கிறவள். சகமாணவிகளால் போதைப் பெருடகளுக்கு அடிமையாகிவிட்டாள். அவள் சக்தியைக் கண்டால் அச்சப்படுவாள். அவனின் அலைபாயும் கண்களும், வலிமையான உடல்வாகும் அவளுக்கு அச்சத்தை ஊட்டுவதால் தன் சகதோழிகள் மூலமாக சரக்கை அவனிடம் வாங்கிக் கொள்வாள்.

ஒரு நாள் தியாகராய நகர்ப்பகுதியில் மது, போதைப் பொருட்கள் ஒழிப்பு வாரம் கொண்டாடினார்கள். மகளிர் கல்லூரி மாணவிகள், ஆண்கள் கல்லூரி மாணவர்கள், ஊர்வலமாகச் சென்றார்கள். அதில் பல பேர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் செல்வதை தன் இருப்பிடத்தில் இருந்து பார்த்தான்.

சில தட்டிகளையும் அதில் எழுதியிருந்த வாசகங்களும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அந்த ஊர்வலத்தில் சுவேதாவும் போனாள். அவள் கையில்

"குடியினால் குடல் புண்ணாகும்"
"குடும்ப மானம் மண்ணாகும்"

என்று எழுதப்பட்ட வாசகம் இருந்தது.

"போதையால் மேதைகள் கூட"
பேதைகள் ஆகி விடுகிறார்கள்"

"மதுக்கிண்ணம்"
"மரணத்தின் சின்னம்"

"ஹெராயின் கொல்லும் நஞ்சு!"
"கனவிலும் தொடவும் அஞ்சு"

போன்ற வாசகங்கள் புதுமையாக இருந்தன. சுவேதா தற்செயலாக சக்தியை பார்த்துவிட்டாள்... மாடிப்படிகளில் கோச்சிங் பார் ஐ.ஏ.எஸ். என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விளம்பரப் பலகையைப்பார்த்து சிரித்தாள்... ஆனால் சக்தியை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.

மாணவர்களின் ஊர்வலத்திலும் பல வாசகங்கள் அடங்கிய தட்டிகளைத் தூக்கி வந்தனர். அதில் பத்ரி தூக்கிக் கொண்டு வந்த தட்டியைப் பார்த்து சக்தி சிரித்தான்.

"இன்று போதைக் கிளர்ச்சி"
"நாளை நரம்புத் தளர்ச்சி"

"போதை ஊசிகள்"
"சாவின் நாக்குகள்"

"முதலில் பறப்பாய் - சரி"
"முடிவில் இறப்பாயே!"

போன்ற வாசகங்களைப் படித்தபடி நின்றிருந்தான்.

அன்று இரவு எட்டுமணி இருக்கும். அழைப்பு ஒலி கேட்டது. வெளியே யார் நிற்கிறார்கள் என்பதை துல்லியமாகக் காட்டும் லென்ஸ் கதவில் இருந்ததால் சக்தி பார்த்தான். ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவள் மாக்சி அணிந்திருந்தாள். கதவைத் திறந்தான். புயலாக உள்ளே நுழைந்தவள் சுவேதா.

என்ன சுவேதா இந்த நேரத்தில்

"ப்ளீஸ் சக்தி இந்தா பணம்... அது வேண்டும்."

சுவேதாவை சிறிது நேரம் சீண்ட வேண்டும் என்று நினைத்தான் சக்தி.

"சரக்கு தீர்ந்து போச்சே"

"ப்ளீஸ் சக்தி...." அவள் மஞ்சள் நிற பனியனும் அதே நிற மாக்சியும் அணிந்திருந்தாள்... தவிப்புடன் காணப்பட்டாள்.

"இல்லை சுவேதா... வெளிநாட்டு சரக்குதான் இருக்குது ஆனால் அது விலை மிகவும் அதிகம்."

"பரவாயில்லை சக்தி... பிளீஸ்..." என்று சொல்லியபடி அவள் பனியன் உள்ளே கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டி, "ப்ளீஸ்... சக்தி...." என்றாள்.

உதடுகள் துடித்தன.... தவிப்புடன் இருந்தாள் சுவேதா.

சக்தி அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் ஏதோ சொன்னான்.

"யு..." ஏதோ சொல்ல வாயெடுத்தவள்

"ப்ளீஸ் சக்தி.... வேணாம் சக்தி.... பணம் எவ்வளவு வேணும்னாலும் தர்றேன்.. அது மட்டும் வேணாம் சக்தி.... ப்ளீஸ்..." என்று கெஞ்சினாள் சுவேதா.

"நான் சொன்னதைச் செய்தால்... உடனே தருகிறேன்."

"ப்ளீஸ் சக்தி.... கெஞ்சினாள்"

"இங்கே யாரும் இல்லை நீயும் நானும்தான்.... உம்..."

சுவேதா தீடீரென்று தன் பனியனைக் கழற்றினாள்.

"ப்ளீஸ் நிறுத்து... சுவேதா... வேண்டாம்"

உள்ளே சென்றான் சக்தி... தொலைக்காட்சி பெட்டியை பின்புறம் கழற்றினான் உள்ளே இருந்து கை நிறைய அள்ளி அப்படியே பொட்டலங்களை எடுத்து வந்தான்...

அதற்குள் ஆடை அணிந்திருந்தாள்.

அவளிடம் மொத்தத்தையும் கொடுத்தான். அவள் ஐநூறு ரூபாய் நோட்டை அவன் மீது வீசிவிட்டு கதவைத் திறந்து படிகளில் இறங்கி மோட்டார் பைக்கில் காற்றாய் பறந்தாள்.

இந்த நிகழ்ச்சி சக்திக்கு பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டது. சுவேதாவை அவமானப்படுத்தி இருக்கக் கூடாது. அவன் மேலேயே அவனுக்குக் கோபம் வந்தது. அவள் வீசிவிட்டுப் போன ஐநூறு ரூபாய் நோட்டு கீழே கிடந்தது.

சுவேதா படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. எப்படியோ இந்தப் பழக்கம் அவளை விடவில்லை. அவள் அப்பா பிரான்சில் பணியாற்றி அங்கு நடந்த சுதந்திரப் போராட்ட போரில் உயிர் நீத்தவர். அவள் அம்மாவுக்கு கணிசமாக ஓய்வூதியம் கிடைக்கிறது. சொந்த ஊர் புதுவை. சுவேதா படிப்பிற்காக திருவல்லிக்கேணியில் வீடு எடுத்து படித்து வருகிறாள். அவள் தாயும் அவளுடன் இருக்கிறாள். அதனால் செல்வத்திற்கு குறைவில்லை.

வண்டியில் சென்ற சுவேதா மனதில் ஒரு தீப்பொறி ஏற்பட்டது... தெருமுனை வரை போனவள் உடனே பைக்கைத் திருப்பினாள். மீண்டும் மாடியில் ஏறினாள். அழைப்பு மணியை அழுத்தினாள். சக்தி குழப்பத்துடன் கதவைத் திறந்தான். அதற்குள் தன் பனியனுள் இருந்த பாக்கெட்டுக்களை எடுத்து அவன் மேல் வீசிவிட்டு வேகமாக இறங்கினாள். மோட்டார் பைக்கில் பறந்தாள்.

அப்படியே விக்கித்துப்போய் நின்றான் சக்தி.

தன்னை நிர்வாணமாக்கத் துணிந்த சக்தி மேல் ஆத்திரம் கொண்டாள். இனி போதைப் பொருளைத் தொடக்கூடாது என்று முடிவு செய்தாள். அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவள் உடல் இது இல்லாமல் நடுக்கம் ஏற்பட்டது... எப்படியோ இரவு சமாளித்தாள்.

போதைப் பொருள் தடுப்பு மைய சிகிச்சைப்பிரிவுக்கு சுவேதா சென்றாள். தனக்கு ஏற்பட்ட அவலத்தை ஒளிவு மறைவு இன்றி சொன்னாள். அவனால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி சக்தியையோ அவன் இருப்பிடத்தையோ சொல்லவில்லை.

சுவேதா சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட பிறகு அவள் அம்மாவிற்கு தகவல் சொல்லப்பட்டது. அவள் தாய்க்கு மகள் போதைப் பொருளுக்கு அடிமையானது தெரிந்திருந்ததால், மகளின் மாற்றத்தைக்கண்டு மகிழ்ந்தாள். சிகிச்சை தொடர்ந்தது. மனோதத்துவ முறையிலும் சுவேதாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சுவேதா மீண்டுவந்து ஹெராயின் பொட்டலங்களை வீசிவிட்டு போன பிறகு மிகவும் பயந்தான் சக்தி. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமில்லை. பத்ரிக்கு போன் செய்தான். அவன் கிடைக்கவில்லை.

ஜோ மற்றும் மூன்று பேரும் வெளிநாடு சென்று 15 நாட்கள் ஆகிறது. மற்றும் ஒரு கூட்டம் சைதாப்பேட்டை பகுதியில் இருந்தது. அவர்களும் வெளிநாடு சென்றுள்ளனர். கிறிஸ்துமஸ் கழித்து புத்தாண்டு நாளும் கழிந்துதான் வருவார்கள். வந்தவுடன் அவர்களுக்கு குட்பை சொல்லிவிட்டு போய்விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த போது தொலைபேசி ஒலித்தது...

லண்டனில் இருந்து ரோசி பேசினாள். நாளை காலை பத்து மணிக்கு சென்னை வரும் போயிங் விமானத்தில் நாங்கள் வருகிறோம். டாக்சி இரண்டு ஏற்பாடு செய்யவும். விமான நிலையத்திற்கு வந்திருக்கவும் என்றாள்.

சக்தி மனதில் போராட்டம் நிகழ்ந்தது. இந்த போதைப் பொருள் விற்பனையை இன்றோடு மறந்து விட வேண்டும். சுவேதாவுக்கு ஏற்பட்ட அவமானம் அவன் மனதை மிகவும் பாதிக்கச் செய்தது. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வெறி ஏற்பட்டால் இப்படி செய்ய மனம் வந்திருக்கும். என்று கண்களில் கண்ணீர் பெருக அவன் நெஞ்சம் இளகியது.

இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. காலை புலர்ந்தது. போன் செய்தான். பத்ரியே பேசினான். உடனே வரச்சொன்னான் சக்தி. பதினைந்து நிமிடங்களில் பத்ரி வந்தான்.

"பத்ரி ராத்திரி ஒரு தப்பு செய்துவிட்டேன். சுவேதா தனியா வந்தாள். அவளை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டேன். என் மனசு கேட்கவில்லை. இந்த தொழிலுக்கே முழுக்கு போட முடிவு செய்துட்டேன். டி.வி. பெட்டியில் நூறு பொட்டலங்கள் ஹெராயின் உள்ளது. எடுத்துக்கொள் நான் போலீசில் சரணடையப் போகிறேன்."

"ஏன் சக்தி அவசரப்பட வேண்டாம்."

"இல்லை பத்ரி... என்னைத் தடுக்க வேண்டாம். நீ பயப்பட வேண்டாம். உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். டி.வி.பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பு... சீக்கிரம்... பத்ரி உன்னைப் போன்ற உண்மையான நண்பனை இழந்து போகும்நேரம் வந்துவிட்டது. பத்ரி மணி ஏழாகிவிட்டது சில கடமைகள் உள்ளது... இந்த வீட்டுக்காரர் போன்பில், மின்சாரபில் போக மீதி பணத்தை உனக்கு அனுப்புவார் நீ வாங்கிக் கொள்."

"பத்ரிக்கு கண்ணீர் பெருகியது."

மோட்டார் பைக்கைப் பூட்டி விட்டு ஆட்டோவில் டி.வி. பெட்டியுடன் கிளம்பினான் பத்ரி.

வீட்டுக்காரருக்கு தொலைபேசியை டையல் செய்தான். அவரே பேசினார். "நான் வீட்டை காலி செய்கிறேன்... தாங்கள் போன்பில், மின்சாரபில், இந்த மாத வாடகையை என் முன்பணத்தில் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள். முகவரி சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள்...." என்று சொல்லிவிட்டு பத்ரியின் முகவரியைச் சொன்னான்.

தொலைபேசி ஒலித்தது. நண்பன் ஒருவன் சுவேதா சிகிச்சை பெறும் மருத்துவ நிலையத்தின் முகவரியைச் சொன்னான். நன்றி சொல்லிவிட்டு மேல் மாடியைப்பூட்டி விட்டு தன்ஒரே உடமையான சூட்கேசை எடுத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் கிளம்பினான்.

சரியாக 7-30 மணியளவில் சுவேதா சிகிச்சை பெறும் மருத்துவ நிலையத்தில் வந்து இறங்கினான். தலைமை மருத்துவரை சந்தித்தான். சுவேதா உடல் நலன் குறித்து விசாரித்தான். முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று தெரிவித்தார். சுவேதா வீட்டு முகவரியை மருத்துவர் இடம் கேட்டு பெற்றான்.

"சுவேதா சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்" என்று கேட்டான் சக்தி.

"சுமார் ஐயாயிரம் ரூபாய் ஆகும்..." என்றார் தலைமை மருத்துவர்.

சக்தி உடனே ஐயாயிரம் ரூபாயை மருத்துவரிடம் கொடுத்தான்.

"மேற்கொண்டு எவ்வளவு செலவானாலும் நானே வந்து தங்களுக்குத் தருகிறேன். தயவு செய்து சுவேதாவை நன்றாக குணமாக்கி வீட்டிற்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டு," உடனே புறப்பட்டான் சக்தி.

சரியாக எட்டுமணிக்கு காவல்துறை, போதை மருந்தின் தடுப்பு முதன்மை அதிகாரி அலுவலகத்திற்கு விரைந்தான்.

"இன்று பத்துமணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து வரும் விமானத்தில் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா நாடுகளில் இருந்து ஹெராயினுடன் வருகிறார்கள். நீங்கள் சென்றால் பிடித்து விடலாம். ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் கடத்திக் கொண்டு வருகிறார்கள்." என்றான் சக்தி.

"உனக்கு எப்படித் தெரியும்... உன் பெயர் என்ன?"

"சார் நான் அவர்கள் வீட்டின் செக்யூரிட்டியாக இருக்கிறேன். எனக்கு காலை மூன்று மணிக்கு போன் வந்தது. அவுங்க பேரு ஜோ, ரோசி, விக்டர், மைக்கேல். ஒவ்வொருவர் கையிலும் 2 சூட்கேஸ்கள். கஸ்டம்சில் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு வடிவமைப்பு கொண்ட பெட்டி அது. இவர்கள் சென்னை கல்லூரிகளுக்கு போதைப் பொருட்கள் விநியோகிப்பவர்கள். என்னை விமானநிலையத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள். நானும் வருகிறேன். விமான நிலையத்தில் அவர்களுக்கு சாதகமான சில புல்லுருவிகள் இருக்கிறார்கள். ஆகவே விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் என்றான் சக்தி.

அலுவலகம் சுறுசுறுப்பானது. தனியாக பூச்சென்டுடன் சக்தியை இருக்கச் சொன்னார்கள். தலைமை அதிகாரி காவல்துறை ஆணையாளரை நேரில் பார்த்து பாதுகாப்பு கேட்டார். விமான நிலையத்தில் பல வித மாறுவேடங்களில் போதைப்பொருள் தடுப்பு அலுவலர்கள் அங்கும் இங்கும் நின்றிருந்தனர். நான்கு பூச்செண்டுகளுடன் நின்ற சக்தியை நோக்கி நால்வரும் வந்தவுடன் சூழ்ந்து கொண்டு கைது செய்வதாக ஏற்பாடு.

விமானம் சரியான நேரத்துக்கு வந்தது. ஜோ, ரோசி, விக்டர், மைக்கேல், நால்வரும் சக்தியை நோக்கி வந்தனர் ஒவ்வொருவருக்கும் பூச்செண்டு கொடுத்தான் சக்தி. உடனே ஐவரையும் சூழ்ந்து கொண்டனர். கைது செய்யப்பட்டனர். சக்தியும் கைது செய்யப்பட்டதால், அவர்களுக்கு சக்தியின் மேல் சந்தேகம் எழவில்லை.

விமானநிலையம் பரபரப்பானது. எட்டு சூட்கேஸ்களில் மட்டும் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினுடன் மெத்தாடுலோன், ஹலீஸ், போன்ற பொருட்கள் இருந்தன, அவர்கள் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மறுநாள் நாளிதழ்களில்

சென்னை விமானநிலையத்தில் பத்துகோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. நான்கு வெளிநாட்டவர் கைது. போதைப் பொருட்கள் பறிமுதல் துப்பு கொடுத்த சக்திக்கு பாராட்டு. என்ற செய்தியும் நால்வரின் புகைப்படமும், துப்பு கொடுத்த சக்திக்கு பாராட்டும் இரண்டு லட்சம் பரிசும் அரசு வழங்கும் என செய்தி வெளியிட்டிருந்தது.

போதைப்பொருட்கள் தலைமை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. நால்வருக்கும் தலா மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சிறிது காலம் மாணவ - மாணவிகளுக்கு ஹெராயின் விற்பனை செய்த சக்திக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் தனித்தனியே அடைக்கப்பட்டனர். சக்தி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். செய்தி அறிந்த பத்ரி வந்து பார்த்தான்.

சிறையிலிருந்த சக்தி சுவேதாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில்,

"திருமணமானவன் தான் ஒரு பெண்ணின் அந்தரங்கங்களை அறிய முடியும், நான் உன்னை அவமானப்படுத்தியதை மன்னிக்கவே முடியாது. நீ சென்ற உடனே என் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன், சென்னைக்கு வர இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய நானே தகவல் கொடுத்தேன். மற்றவை இன்றைய நாளிதழில் நீ பார்த்து தெரிந்துகொள், நான் போதைப்பொருள் விற்றேனே ஒழிய அதைப் பயன்படுத்தியவனில்லை."

"நானும் பட்டதாரிதான், வேலை கிடைக்காததினால் சாக்கடையில் விழுந்தேன். என் செயலுக்கு தண்டனை அனுபவிக்கிறேன். என்னால் ஏற்பட்ட கொடுமையால் நீ திருந்திவிட முனையும் போது நானும் கொடுமையிலிருந்து விடுபடவிரும்பினேன். அதனால் தான் உன் மருத்துவச் செலவை நானே ஏற்றேன். என்னை மன்னிக்கவும். விடுதலை அடைந்து வெளியே வந்ததும் தங்களிடம் நேரில் வந்து மன்னிக்கும்படி கோருவேன். நீங்கள் கொடுக்கும் எந்த தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்."

"இந்தப் பாவியை மன்னிக்கவும்".

அன்புடன்,
"சக்தி."

நாளிதழில் வந்த செய்திகளையும், சிறையிலிருந்து சக்தி எழுதிய கடிதமும் சுவேதா படித்தாள். தான் போதைப்பழக்கத்திலிருந்து விடுபடக் காரணமே சக்தி செய்த அந்த நெருக்கடிதானே! என்று எண்ணி எண்ணிக் கலங்கினாள். அப்போது வானொலியில் "மயக்கமா? கலக்கமா?" என்று பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது. சுவேதா ஒரு முடிவுக்கு வந்தாள்.

சக்தி விடுதலையாக ஒரு வாரமே இருந்தது, சிறைக்குச் சென்று சக்தியைக் காண அனுமதி பெற்றாள். சக்தி பயந்தான் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. தயங்கியபடி சுவேதாவைப் பார்த்தான். "சுவேதா என்னை மன்னித்துவிடு, நான் ஒரு மிருகம்... அதைவிடக் கீழாவேன் என்று கண்கள் கலங்கினான்." கண்ணீர் கன்னத்தில வழிந்தது. சுவேதா அவன் கண்ணீரைத் தன் கரங்களால் துடைத்துவிட்டு, "சக்தி உங்களை நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன், விடுதலை அடைந்ததும் வந்து அழைத்துப் போகிறேன். அம்மா ஆசியோடு நம் திருமணம் நடைபெறும்," என்றாள் சுவேதா. "நான் அவ்வளவு கொடுத்து வைத்தவனா?" என்று சுவேதாவின் கரங்களை அன்புடன் பற்றிக்கொண்டான்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link