சிறுகதைகள்


ஒரு நகர்வுக்கு....

கூடல்.காம்
வேலை முடிந்து வயக்காட்டை விட்டு வெளியேறும்போதே, பொழுது விழுந்துவிட்டது. மேற்கு மலைத் தொடருக்குள் வெயில் சுருண்டு படுத்துக்கொள்ள, மேகத்து வெளிச்சம் மட்டும் மிச்சமாய் இருந்தது. ஒரு தவிப்போடு முத்தக்கா ஊரை நோக்கி "வேகு வேகு" என்று நடந்தாள். இவள் மனசுக்குள் ஏங்கிவாடிப்போன மகனின் முகம் உறுத்தியது.

தலையில் சின்னதாக ஒரு முள் விறகுக்கட்டு, கட்டைப்பிடித்திருந்த வலது கையில் தூக்குச் சட்டியும் ஆடி ஆடித் தொங்கியது. விடிந்ததிலிருந்து ஓடிஓடி பருத்தி எடுத்ததில் இரண்டு கைப்பெருவிரலும் காயம்பட்டதுபோல வலித்தது. குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் இடுப்பெல்லாம் கடுப்பு. நடக்கிற நடையில் தொடைச்சதையெல்லாம் ரணமெடுக்கிறது. முகத்தில் உலர்ந்துபோன வியர்வையின் உப்பு வரிக்கோடுகள்.

தூரத்தில் மங்கலாய் கிராமம். இன்னும் ஒரு மைல் இருக்கும். போய்ச் சேருவதற்குள் கருகருவென்று இருண்டுவிடும். "பாவம், ராமசாமி" என்று மகனை நினைத்து மருகிய மனசு, அவளை முந்திக் கொண்டு ஓடியது.

பள்ளிக்கூடம் விட்டவுடன்... மற்ற பிள்ளைகளை போல அவனும் வேகமாய் வந்து பார்த்திருப்பான். பூட்டிக் கிடக்கிற கதவை.

வந்தவுடனேயே அம்மா மடியில் விழுந்து, பள்ளிக்கூடத்தில் நடந்ததையெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிற ஆசைத் துடிப்போடு ஓடி வந்திருப்பான். சிட்டாக சிறகடித்து வந்தவன் கதவில் முட்டிய ஏமாற்றத்தில் சுருங்கிப் போய் சிறகொடிந்து நிற்பான்... பாவம்.

பைக்கட்டை வாசலில் போட்டுவிட்டு தண்ணி கூட குடிக்க வழியில்லாம உதட்டை நக்கிக்கொண்டு விளையாட்டு ஆசையில் தெருவுக்குப் போயிருப்பான். தெரு புழுதிகளில் கூட்டாளிச் சிறுவர்களோடு ஓடி விளையாடி, சண்டை போட்டு களைத்துப்போய்....

"அவரவர் வீட்டுக்கு அவரைக் கஞ்சி குடிக்கப் போறோம்" என்ற ராகம் போட்ட பாடலோடு குழந்தைகள் குதூகலமாய்ப் பிரிந்து போயிருக்கும். ராமசாமி அப்போதும் வந்து பூட்டிய கதவில் மோதி மனசு உடைஞ்சிருப்பான். தாய் முகத்தைப் பார்க்க முடியாம தண்ணிகூட குடிக்க முடியாம, "ஏம்மா... மிட்டாய் வாங்க துட்டு" என்று சிணுங்கி அழ ஆளில்லாம தேம்பி நிப்பான்....

நினைக்க நினைக்க முத்தக்காவுக்கு மனசு மருகியது. வாடிச் சோர்ந்த ராமசாமியின் பிஞ்சு முகம் கண்ணுக்குள் நின்றது. மனசெல்லாம் தவித்தது. "இந்த பாதகத்தி மானம் பாத்த பூமியிலே கூலிக்காரியா பொறந்து தொலைச்சுட்டேனே... புள்ளைக்கு நல்லது செஞ்சு பாக்காட்டாலும் "அம்மா"ன்னு ஆவலோட வர்ற புள்ளைய "என்னடா ஏங்கண்ணு" ன்னு ஆசையா தூக்கி குளுர வைக்கிற தாயா இருக்கக்கூட இந்தச் சிறுக்கிக்கு லபிக்கலியே... பாவிப்பய தெய்வம், என்னைச் சீரழிச்சு கூத்துப் பாக்குதே.....

பழசாய்ப்போன தோல் செருப்பு. நடைக்கேற்ப டபக் டபக்கென்று சத்தமிடுகிறது. நடையைத் துரிதப்படுத்தினாள்.

மத்த கூலிக்காரப் பொட்டச்சிகளெல்லம்... வேலைக்குப் போய்ட்டு நாலு மணிக்கெல்லாம் வீடு வந்து சேந்துருவாக... நா மட்டும் தினசரி இந்த தூரந்தொலைவான காட்டுக்குவந்து.... புள்ளை மனசை ஏங்கவைச்சு, இருட்டுன பிறகு வூடு போய்.... அடக்கொடுமையே.....

இந்த வழக்கத்தை முறிக்க முடியலியே....தாலி கட்டுன அந்தப்பாவியால வந்த கதி இது!

நாளையிலிருந்து இங்கே வேலைக்கு வரவே கூடாது என்று தான் முத்தக்கா சாயங்காலம் நினைப்பாள். அது என்ன மாயமோ... மந்திரமோ விடிந்தால். இந்த வேல்சாமியண்ணன் புஞ்சையில்தான் வந்து நிற்பாள். அவளது விருப்பத்தை அவளையே அலட்சியப்படுத்த வைப்பது. என்ன மாயம்?

எதிரில் யாரோ சைக்கிளில் வருவது, நிழலுருவமாகத் தெரிந்தது. ஓதுங்கிக்கிடந்த மாராப்பை இடது கையால் இழுத்துச் சொருகிக்கொண்டாள்.

முந்தியெல்லாம் முத்தக்காவும்... நாலுபேரைப்போல வாழ்ந்தவள்தான். கூப்பிட்ட சம்சாரிகளுக்கு வேலைபார்த்து விட்டு நாலு மணிக்கெல்லாம் வீடு வந்து சேருவாள்.

வெள்ளனத்துலே கஞ்சி காய்ச்சத் துவங்கிவிடுவாள்.

பூனைக்குட்டியைப்போல ராமசாமி காலைக்காலை சுத்தி வருவான்.

"ஏம்மா அஞ்சு பைசாம்மா.... எம்மா.. அஞ்சு பைசாம்மா..."

"ஏங்கிட்டே துட்டு ஏதுடா? அய்யாகிட்டே போய்க்கேளு"

"அவரைத்தான் காணோமில்லே?"

"அதுக்கு நா என்ன செய்ய?"

"ஆ ஆ..... ஆய்... ஆஆ..... ஆங்" என்று வாயைக் கோணிக் கொண்டே கள்ள அழுகையாய் அழுவான். பிஞ்சுக் கையை உதறிக் கொண்டே, கால் மாற்றிக் காலால் தரையை உதைப்பான். மகன் அழுகிற லட்சணதத்தில் இவள் சிரித்துவிடுவாள். மனசெல்லாம் ததும்பி வழிய வாய்விட்டுச் சிரித்துவிடுவாள். அம்மாவின் சிரிப்பைக் கண்டவுடன், அவனுக்கு நம்பிக்கை வந்துவிடும். ஆனாலும் அழுகையை - உதையை - நிறுத்தமாட்டான்.

"போடா.... போ.... போக்கத்த பயலே, போய் அய்யா சொன்னார்னு சொல்லி கடையிலே பத்துப்பைசாவுக்கு என்னமாச்சும் வாங்கிக்கோ..."

"ஹைய்....யா" ஆனந்த கூச்சலாய் குதித்துக் கொண்டு குதூகல நதியாய் ஓடுவான்.

"ஏலேய், ஏதாச்சும் தீம்பண்டம் வாங்கித்தின்னு, உடம்புலே சேரட்டும். வெளையாட்டு சாமான் வாங்குனீன்னு தெரிஞ்சா... தோலை உரிச்சுப் போடுவேன்..." என்று ஓங்கிய அதட்டல் சத்தம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடும்.

உற்சாகப் பெருக்காய் ஓடுகிற மகனைப்பார்த்து அப்படியே பூரித்துப் போவாள். மனசெல்லாம் பூப்பூவாய் பூத்துச் சொரிவதைப் போல ஒரு மென்மையான கிளுகிளுப்பு.

இதெல்லாம்... புருஷன் இருந்த காலத்தோடு முடிந்துவிட்டது. அந்தக்குட்டைக்கால் சிறுக்கியை இழுத்துக்கிட்டு அவன் ஓடிப்போன பிறகு நிலைமையே தலைகீழ்.

ஒருத்தி கூலியிலியே ரெண்டு வயிறு கழுவணும். நல்லது பொல்லது பாக்கணும். நோய் நொடிக்குப் பதில் சொல்லணும். நடக்குமா? இதுபோக கூலி வேலை கிடைக்காத கோடைக்காலம்.... போக முடியாத அடைமழைக்காலம்... அப்போவெல்லாம் எதை வைச்சுத் திங்குறது?

இதெல்லாம் சேர்ந்து புயலாக வீசி... முத்தக்காவை இந்தத் தூரந்தொலைவான வயக்காட்டுக்குள்ளே தூக்கிக்கொண்டு வந்து புதைத்துவிட்டதே.

பூங்கொத்து மாதிரியான இந்தப் மணிப்புள்ளையை விட்டுட்டு ஓடிப்போறதுக்கு அந்தப்பாவி மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ....

முத்தக்காவுக்குள் படர்கிற கசப்பு. வாழ்க்கையின் கைப்பான உணர்வுகள் அவளை கவ்வியது. தனது பெண்மையே உதாசீனப் படுத்தப்பட்ட அவமானமும், நிராதரவாய் விடப்பட்ட அவலமும் மனசின் ஆழத்தைத் தீக்கோலாய் இறங்கிச்சுட்டது.

வெக்கையாக பெருமூச்சு வந்தது. நடையை எட்டிப் போட்டாள். மனசுக்குள் மீண்டும் ராமசாமி. முகம் மறைக்கிற இருட்டு, முகம் காட்டும் போது ஊருக்குள் நுழைந்தாள். தெருவுக்குள் வந்தாள். வாசலைப் பார்த்தவளுக்குப் பகீரென்றது.

வாசல் படியில் ராமசாமி சுருண்டு கிடந்தான். கூதலில் கிடுகிடுப்பவனைப்போல, மடக்கிய காலுக்குள் கைகளைத் திணித்து, முகத்தைத் தன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டு....

பதைத்துப் பதறிப்போன முத்தக்கா அப்படியே முள்ளுக் கட்டைத் தூர எறிந்துவிட்டு, மகனை ஆவித்தூக்கி அணைத்தாள். அந்தப் பிஞ்சு உடம்பு நெருப்பாகத் தகித்தது. உதடெல்லாம் காய்ந்து... கண்ணெல்லாம் சிவந்து.....

மனசை உடைத்துக் கொண்டு அழுகை பீறிட்டது. கலங்கித் தவித்த உணர்ச்சி, காயம்பட்ட பறவையாகத் துடித்தது.

"என்னடா.... இப்படிக் காய்ச்சல்... எள்ளாப் பொறியுதே"

சிவந்த கண்களை ஏறிட்டுப் பார்க்கவே முடியாமல் சிரமப்பட்டான். நெற்றியெல்லாம் தீயாகச் சுடுகிறது.

"பள்ளிக்கோடத்துலே... மத்தியானம் கக்கிட்டேம்மா... டீச்சர்தான் வீட்டுக்குப்போன்னு சொல்லிட்டாங்கம்மா.... வந்துட்டேம்மா... ஒண்ணைக் காணோம்மா... அழுதுக்கிட்டே படுத்துட்டேம்மா..... நாக்கெல்லாம் கசக்குதும்மா..."

தொண்டைக்குள் சத்தமாய் விட்டுவிட்டுக் கிசுகிசுத்த ராமசாமி... அடங்கிக்கிடந்த ஏக்கமெல்லாம் பொங்கிப் பிரவகித்ததைப் போல பலமாய் அழுதுவிட்டான். அம்மாவின் நெஞ்சுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவளுக்குக் குடலைப் பிடுங்கிப் போட்டது போலிருந்தது குலையெல்லாம் பதறியது.

"அய்யய்யோ.. ஏம் பச்சை மண்ணை நாதியத்த புள்ளையாத் தவிக்க விட்டுட்டு. தூரந்தொலைவான காட்டுலே இருந்துட்டேனே இந்தப் பாதகத்தி. இந்த வங்கொடுமையை நா எப்புடித் தாங்கப் போறேன்."

வலது கையால் ஓங்கி ஓங்கி மடேர் மடேரென்று கொதிப்போடு தலையில் அடித்துக் கொண்டாள். மாலை மாலையாய் கண்ணீர் மனசைக் கவ்விப்பிசைகிற தாய்மை உணர்ச்சி.

கதவைத் திறந்தாள். பாயை எடுத்துப்போட்டு தோளில் கிடந்த ராமசாமியை படுக்கவைத்தாள். பழைய சேலையை எடுத்து மூடினாள். பஞ்சு ரோமங்களை பாசத் தவிப்போடு கோதி விட்டாள்.

அவள் பரபரத்தாள். ஒவ்வொரு அணுவிலும் தாய்மைப் பரிதவிப்பு, அவசரமாய் அடுப்பை மூட்டினாள். வெல்லமும், தேயிலையும் போட்டு "காப்பி"யை கொதிக்க வைத்தாள்.

உதைப்பட்ட பந்தாக கடைக்கு ஓடினாள்.

"என்னம்மா வேணும்?"

"காச்ச மாத்திரை குடுங்கய்யா?"

"யாருக்கு காச்சல், நிதானமாச் சொல்லும்மா"

"எம்புள்ளைக்குத்தானய்யா, கொடியா சுருண்டு கிடக்கானய்யா..."

"இந்தா... இதுல பாதி மாத்திரையைக் குடு. வெறும் வவுத்துலே மாத்திரை குடுக்கக்கூடாது. பண்ரொட்டியை குடுத்துட்டு குடு."

"ரெண்டு பண்ரொட்டி குடுங்க"

இறக்கையை கட்டிக் கொண்டு ஓடினாள். கொதித்த கடுங்காப்பியை ஆற்றினாள்.

"ஐயா ராசா, ஏஞ்செல்லம், ஏலே ஏங்கண்ணு... எந்திரிடா"

அவனுக்கு இமைகள் கனத்தன. திறக்க முடியாமல் கண்ணைத் திறந்தான். நெற்றி சுருங்கியது. நாசியிலிருந்து அனல் மூச்சு, மெல்ல எழுந்தான். பிள்ளை அரை உசுராய்ப் போனான்.

"இந்த ரொட்டியைத் தின்னுடா..."

காய்ந்து கனல் பறந்த சின்ன முகத்தைச் சுளித்தான்.

"எனக்கு வேண்டாம்மா..."

"ஏங்கண்ணுல்லே ஏந்தங்கமில்லே... இதைத் தின்னுட்டு மாத்திரையை முழுங்கிடு. காச்ச, மண்டையடி விட வேண்டாமா ராசா."

எரிச்சலுடன் சூள் கொட்டினான். உதடெல்லாம் உலர்ந்த கோடுகள். அவளே ரொட்டியை பிய்த்துக் கறுப்புக் காப்பியில் முக்கிமுக்கி வாயில் ஊட்டினாள். சிணுங்கி சிணுங்கி மறுத்துக் கொண்டே முழுங்கினான். மாத்திரைக்கு ஒரேயடியாய் மறுத்து அடம்பிடித்தான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து அரவணைப்பாய் பேசி விழுங்க வைத்துவிட்டாள்.

"படுத்துக்க ராஜா" என்றாள். சேலையை மூடினாள். தலையை பரிவோடு கோதிவிட்டு நெற்றியில் கை வைத்தாள்.

ஒருக்கழித்துப் படுத்திருந்த ராமசாமி சின்ன விழிகளால் அம்மாவைப் பார்த்தான். அரவணைப்பு கிடைத்துவிட்ட கதகதப்பான நிம்மதியும், சந்தோசமும் கண்களில் ஆறுதலாய் மின்னுகின்றன. அதை மனதால் உணர்ந்த முத்தக்காவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பொங்கிப் பொருமிய அழுகையை அடுப்பங்கரைக்குள் வந்து முழுசாகக் கொட்டித் தீர்த்தாள்.

ஓடிப்போன புருஷனை - பொழுது அடைகிற வரை வேலை வாங்குகிற வேல்ச்சாமி அண்ணனை - கண்ணாமூச்சி காட்டி அழுக வைக்கிற வாழ்க்கையை - துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கிற கூத்துவனை - சகலரையும் ஒரு மூச்சு திட்டித்தீர்த்துப் புலம்பினாள்.

அடுப்பு வேலைகள் வேலைகளாயிருக்க, அவ்வப்போது மகனையும் தொட்டுத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள்.

நெற்றி தலையெல்லாம் வேர்வையின் பிசுபிசுப்பு, மூச்சு திணறலில்லாமல் சீராக வந்தது. அவளுக்கும் மனசு ஒருநிலைப்பட்டது. "காச்ச குறைஞ்சிருக்கு..."

வீட்டைபெருக்கி முடித்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளும் எதையோ வயிற்றில் அள்ளிப்போட்டுக் கொண்டாள். நாளைக்கும் புஞ்சையில் போய் உசுரைக் கொடுக்க உடம்பில் சக்தி வேணுமே....

அப்போதுதான் தெற்குத்தெரு ராமாத்தா வந்து சேர்ந்தாள்.

"என்ன முத்தக்கா... சாப்புடுதீயா?"

ம்... ஆச்சு, அத்தை, என்ன இன்னைக்கு வழி தப்புனாப்போல இந்தப் பக்கம் வந்துருக்கீகளே... என்ன விஷயம் அத்தை?"

"சும்மாதான் வந்தேம்மா..."

"சும்மான்னு ஒன்னு இருக்கவா செய்யுது? சோலி இல்லாம, சுத்திப்பாக்கவா வரப்போறீக?"

"என்ன, பேராண்டி ஒறங்கிட்டானாக்கும்?"

"அதை ஏன் கேக்குறீக கொடுமையை...." என்று ஆரம்பித்தவள். மகனுக்குக் காய்ச்சல் - மகனின் தவிப்பு - என்றெல்லாம் மனசின் ஆற்றாமையையெல்லாம் ஒரு பாட்டம் கொட்டித் தீர்த்தாள். ராமாத்தாவும் தலையைத் தலையை ஆட்டி, உம் கொட்டிக் கொண்டேயிருந்தாள். அவளது காதுகளில் தொங்கிய பாம்படமும் அசைவுக்கேற்ப ஆடின.

ஊர் மாறி வந்துவிட்ட நாயைப்போல, பேச்சு நிகார் கெட்டுப் போய் அதுபாட்டுக்கு எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு, மையத்துக்கு வந்து சேரும்போது... இருவரின் உள் மனசும் ரொம்பக் கூர்மையாக்கிக் கொண்டது.

"பேசிப்பேசி துன்பம் குறையவா போகுது? நா ஒரு கிறுக்கச்சி. நாம் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன்... என்ன சோலியா வந்தீக. அத்தை?"

"தெக்காட்டு புஞ்சையிலே மொளகாயிலே களை வெட்டணும், தண்ணிக்குப் பின்னாலேயே பருத்தி விதை ஊனணும். கொத்துக்கு ஆளு கூப்புடத்தான் வந்தேன். ஒன்னைத்தான் கூப்புட முடியாதே... நீ தான் வேல்ச்சாமி வயக்காட்டுக்கு பதிவா போய்க்கிட்டிருக்கீயே..."

"அப்படிப் போய்ப் போய்த்தானே இம்புட்டுச் சீரழிவு? பெத்த புள்ளைய தாயிருந்தும் நாதியத்த புள்ளையா தவிக்கவிட்ட பாதகத்தியா நிக்கேன்..."

"அப்ப.... நாளைக்கு வேலைக்கு வாரீயா?"

"வாரேன் அத்தை நாலு மணிக்கு வேலை விட்டுடுவீகளா?"

"ஆமா... தாயி"

"அப்ப வாரேன்... அத்தை.... இன்னொரு சங்கதி..."

"சொல்லு தாயி"

சொன்னாள். ராமத்தாவும் உம் கொட்டினாள். யோசனையோடு பதில் சொல்லிவிட்டு போனாள்.

மறுநாள்.

சாயங்காலச் சூரியன் நிறம் மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது.

வீட்டுவாசலில் முத்தக்கா. இப்படி முற்றத்தில் நின்று சாயங்காலச் சூரியனைப் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அவளுக்கே அது அதிசயமாக - மகிழ்ச்சியாக இருந்தது.

ராமசாமிக்கோ... இன்றைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பைக்கட்டை வீசியெறிந்து விட்டு "அம்மா என்று மடியில் வந்து விழுந்தான். பூவாகப் பூத்துச் சிரிக்க முகமெல்லாம் உற்சாக வெள்ளமாக மடியில் கிடக்கிற மகனைப் பார்க்கப் பார்க்க அவளுக்குள் பொங்கி வழிகிற ஓர் இன்ப நதி.

காற்றில் மிதக்குற பஞ்சாக மனசே லேசாகி... தாய்மை உணர்வில் ததும்பி நின்றது.

இறுகிக்கிடந்த சாளரமெல்லாம் திறந்துகொண்டதைப் போல. நாளா திசைகளிலிருந்தும் மனசுக்குள் பாய்கிற இனிய காற்று. வாழ்க்கையையே புதுமுகத்துடன் அறிமுகமாகிற மாதிரி ஒரு மர்ம மயக்கம்.

மடியில் உல்லாச நதியாய் கும்மாளமிடுகிற வாழ்க்கை

மகனுக்கும் பொழுதிருக்க சோறு வைத்துக் கொடுத்தாள். ஆசை ஆசையாய்ப் பேசிக் கொண்டே சாப்பிட்டான். டீச்சர் கொடுத்த பாராட்டுக்களை, சக பிள்ளைகளுடன் விளையாடி ஜெயித்த சமாச்சாரங்களையெல்லாம் பெருமிதம் ததும்ப சொன்னான்.

கேட்க கேட்க இவளுக்குள்.... இழந்து போன இன்பமே மனசுக்குள் இறங்குவதைப் போன்ற சுகம். மனசை மயிலிறகால் நீவுகிற சிலிர்ப்புணர்வு.

வாழ்வின் வெளிவட்ட வறுமை நீங்கிப் போய்விடவில்லை. உள்வட்ட ஜீவிதத்திற்குள் விழுந்திருந்த ஒரு முடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அம்புட்டுத்தான்...அதுலே எம்புட்டு ஆறுதலா இருக்கிறது...!

"வெளை.... யாடப் போறேன்" ராகம் போட்டுக் கத்திக் கொண்டே ராமசாமி தெருவில் பாய்ந்தான். சிட்டுக்குருவியாக கூடு கிடைத்த குருவியாக இவள் மனசு நிம்மதியில் தலை சாய்ந்தது.

வீட்டு முற்றத்தை பெருக்கிவிட்டு, அடுப்பில் சுட வைத்திருந்த வெந்நீரில் குளித்துவிட்டு, வீட்டு வாசலில் நின்று "சிணுக்கலி"யால் தலையை சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். முத்தக்காவுக்கு உடம்பே சிக்கெடுத்தது போல சிலாக்கியமாக இருந்தது. கல்யாணமான புதுசில் போல மனசு ததும்பிக் கிடந்தது.

கருகருவென்று மசங்குகிற நேரம். கதர்த் துண்டை இழுத்து மூடிக் கொண்டு வேல்ச்சாமி வருகிறான். முத்தக்காவுக்குள் திக்கென்றிருந்தது. பிடிபட்டுக்கொண்ட திருடி போல தவித்தாள்.

தப்பித்து ஓட முடியாதே... எதிர்கொண்டாகணுமே.... தண்னைச் சமாளித்துக்கொண்டாள்.

கோபமேயில்லாமல் ரொம்ப அன்பாய், சகஜமாய் கேட்டார்.

"என்னம்மா... இன்னைக்கு ராமாத்தாவுக்கு வேலைக்கு போனீயாக்கும்?"

பதில் சொல்ல நா எழவில்லை. படபடக்கிற மனசோடு மௌனமாய் அவன் முகத்தைப் பார்த்தாள். உடம்பில் பல்லி ஏறுவதைப் போல மனசில் ஒரு கூச்சம்.

வேல்ச்சாமி முகத்தில் அமைதியான சிரிப்பு. கள்ளமில்லாத ஒரு பரிவான பார்வை. தங்கச்சியிடம் உரிமையோடு பேசுகிற தினுசில் அவரது அன்பான வார்த்தைகள்...

"மச்சான் ஓடிப்போன காலத்துலே... நாதியத்துப் போய் நீ ஒத்தையிலே உக்காந்து அழுதுக்கிட்டிருந்தப்ப ஆறுதலும் தைரியமும் சொன்னது இந்த அண்ணன்தாம்மா... வேலையத்த காலத்துலே அடை மழைக்கும் .... கோடைக்கும் சாப்பாட்டுக்கு தான்யம் கொடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா. ஆடு குட்டிப் பிடிக்கணும்னு வந்து வாசல்லே நின்னப்ப. ரூபாயாத் தூக்கிக் குடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா.... ராமாத்தா இல்லே."

அன்புத் திரை போட்ட அடிகள். பரிவோடு குத்துகிற ஊசிகள் அவளுக்குள் நறுக் நறுக்கென்கிற வலி. செய்ததைச் சொல்லிக் காட்டி குத்துகிற வார்த்தைகள் உள்மனசைச் சுண்டியிழுத்தது செருப்பால் அடிப்பதுபோல் இருக்கிறது அவளுக்கு.

நெஞ்சு உதடெல்லாம் சட்டென உலர்ந்து போய்.... பேச முடியவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் இவளை மங்குட்டுக் குத்தி, அங்குட்டு பிடுங்குவதைப் போலிருக்கிறது....

"அண்ணாச்சி .... நீங்க சொல்றது வாஸ்தவம்தான். நானும் அந்த நன்றி விசுவாசத்தை மறக்கலே. நா சோத்துலே உப்பு போட்டுத்தானே சாப்பிடுதேன் அண்ணாச்சி. ஆனா.... நா உசுர் வைச்சுப் பிழைக்கிறதே எம்புள்ளைக்காகத்தானே, அண்ணாச்சி எம்புள்ளையை நாதியத்து தவிக்கவிட்டுவிட்டு.... அந்தக் கொழுந்து மனசை ஏங்க விட்டுட்டு நா எதுக்குப் பாடுபடணும் அண்ணாச்சி? நீங்களே சொல்லுங்க."

"ராமாத்தா புஞ்சைக்கு வேலைக்குப் போனா... ஓம் புள்ளைக்கு நாதி வந்துருமாக்கும்? சரி சரி... எதுக்கு வெட்டிபேச்சு? நீ யாருக்கு வேணுமானாலும் வேலைக்குப் போ. போகாம... ஊஞ்சல்லே மகனோட சேர்ந்து ஆடணும்னாலும் ஆடு. எனக்கென்ன வந்தது? எனக்கு ஏம்பாக்கியை கணக்கு முடிச்சிடம்மா..."

கண்ணுக்குப் புலப்படாத கயிறுகள், அவள் கழுத்தில் சுருக்காக விழுகிறது. இழுத்து இறுக்குகிறது.

"இப்படி... விட்டாத்தியா வெடுக்கென்னு பேசுனா... எப்படி அண்ணாச்சி? நீங்க அப்படி கட்டன்ரைட்டா கேட்டா... நானும் ராமாத்தா அத்தைகிட்டே வாங்கி உங்க கடனை அடைச்சிருவேன். ஆனா, என்னை விசுவாசம் கெட்ட சிறுக்கின்னு ஊர்லே பேசுவாகளே...?

"அதுக்கு நா என்ன செய்ய முடியும்?"

"நாலு பேரைப் போல வெள்ளனத்துலே வேலை விடணும்."

"வெள்ளனத்துலே வேலைவிட்டா... தூரம் தொலைவானா காட்டுலே என்ன வேலை நடக்கும்?"

"தூரந்தொலைவுலே நீங்க காடு வைச்சிருந்தா... அதுக்கு நா என்ன செய்ய முடியும்? அதுக்காக நா எம் புள்ளையைத் தவிக்க விடணுமா?"

அந்தக் கயிறுகளை முடிச்சவிழ்த்து எறிந்துவிட்டாள். வேல்ச்சாமி அவளை ஏறிட்டுப் பார்த்தார். கோபமான பார்வை. ஆத்திர அக்னி. அந்த அக்கினியை அவன்மேல் வீச முடியாத நிர்ப்பந்தம்.

தூரந்தொலைவான காட்டிற்கு யாரும் வேலைக்கு வர மாட்டார்களே. ஒரு ரூபாய் கூலி அதிகமாக கொடுத்தாலும், வீடுவர இருட்டிரும் என்ற பயத்தில் மறுத்துவிடுவார்களே... வருகிற ஓரிருவர்களையும் இழந்துவிடுவதா...

அவரது பார்வை நிலைக்கொள்ளாமல் இடம் மாறி, இடம்மாறி உட்கார்ந்தது. வாய்க்குள் வார்த்தைகளே வரவில்லை. திகைத்து நின்றார்.

"அண்ணாச்சி நானும் விசுவாசத்தை நெனைக்கிறவதான். நீங்க நாலுபேரைப் போல வெள்ளனத்துலே வேலை விடுறதுன்னா... சொல்லுங்க. நாளையிலேயிருந்து வயக்காட்டுக்கு வாறேன்."

"ம்ஹீம்... நீயும் இப்படிப் பேசுற காலம் வந்ததே... இதெல்லாம் எங்க தலையெழுத்து... எப்படியும் வந்து தொலை..."

போய்விட்டார். அவர் முதுகையே வெறித்தாள். அவளுக்குள் நீண்ட அயற்சி. ஒரு போர்க்களத்தில் மல்லுக்கட்டி முடித்த ஆயாசம்.

ஒரு சின்ன நகர்வுக்கு.... இத்தனை முரண்டு பண்ணி சண்டைபோட வேண்டியிருக்கே...

முத்தக்காவுக்கு ஒரு திருப்தி பூவாய் மலர்ந்து விகசித்தது. நன்றி கெட்டவள் என்ற கெட்டப் பெயர் வாங்காமலேயே... ஒரு பிரச்சனை தீர்ந்ததே!

நன்றி: மானாவாரிப்பூ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link