சிறுகதைகள்


உப்பு நீர்ப் புன்னகை

கூடல்.காம்

மகள் அஞ்சலை சமைஞ்சுட்டாள்னு கேள்விப்பட்டதும் அவனுக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. தாய் மங்களம் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். அஞசலை ஐந்து வயது சிறுமியாக இருந்த போதே காலரா நோயால் மண்ணோடு மண்ணானாள். தாய்மாமன் வீட்டுக்கு ஓடினான் வரதன் - அஞ்சலையின் அப்பா.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி தண்ணீர்விட்டு அஞ்சலையை வீட்டுக்கு அழைத்துக் கொண்டார்கள். தாய்மாமன் வரிசை வைத்த பாவை‘டை, தாவணியை அஞ்சலை அணிந்து கொண்டாள். அஞ்சலை அத்தை கண்ணேறு கழித்தாள். அன்றிரவு தங்கிவிட்டு காலையில் கிளம்பினார்கள். போகும்போது, "அண்ணே, அஞ்சலையை என் பையன் சின்னதுரைக்கு பெண் கேட்க வருவோம். மறந்துடாதீங்க. மறு சடங்கானதும் கடுதாசி போடுங்க" என்று சொல்லிவிட்டு சென்றாள் அத்தை.

மாமா... நம்ம உறவு விட்டுப் போய்விடக் கூடாது. சின்னதுரை ஐ.டி.ஐ. முடிச்சுட்டான். சீக்கிரம் வேலையும் கிடைச்சுடும். அஞ்சலையை எங்க வீட்டு மருமகளா அனுப்பி வையுங்க மாமா என்றார் அஞ்சலையின் தாய்மாமன்.

வரதனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அஞ்சலையை ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டா நிம்மதியா கண்ணை மூடி நீட்டிபடுக்கலாம் என்று எண்ணினார்.

சொந்த மாமன் வீட்டுக்குப் போய்விட்டால் அஞ்சலையை அவர்கள் மருமகளாக நடத்தமாட்டார்கள். மகள் போல் காப்பாற்றுவார்கள். பெண் இல்லாத வீட்டில் கண்ணாக விளங்குவாள்.

இப்பொழுதே திருமணம் நடந்து விட்டது போலவும் சின்னதுரையும், அஞ்சலையும் மாலையும் கழுத்துமாய் வீட்டிற்குள் வருவது போல வரதன் கனவு கண்டு வாய்வெருவினான்.

அஞ்சலை அழகானவள். ஆனால் அடுப்புக்கரியாட்டம் நிறம். முத்துப் பல் வரிசை. கடைந்தெடுத்த உடல். பருவம் பூத்ததால் இளமை செழிப்புடன் விளங்கினாள். வளர்ந்த மொட்டு மலர்ந்த பூரிப்பு அவள் படிப்பு எட்டாம் வகுப்போடு நின்றது.

வரதன் விவசாயக் கூலி வேலை செய்பவன். சொந்த நிலம் ஏதும் இல்லை. சொந்த வீடு மட்டும் உண்டு. மங்களம் போய் சேர்ந்த பிறகு மைத்துணியை கல்யாணம் பண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால் தன் மகள் அஞ்சலைக்காகத் திருமணமே செய்து கொள்ளவில்லை.

முகம்மது இஸ்மாயில் வட்டு வேலை முழுவதும் வரதனே கவனித்துக்கொள்வான். கூலி வேலை செய்வதும் அவர் பண்ணையில்தான். வரதன் மேல் இஸ்மாயிலுக்குத் தனி பிரியம் உண்டு. எந்த வேலை செய்தாலும் வரதன் திருத்தமாகச் செய்வான். சில நேரங்களில் அஞ்சலையும் இஸ்மாயில் வீட்டில் வேலை செய்வாள்.

இஸ்மாயில் பெரிய வணிகர். அவர் நிர்வாகத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும் நடைபெறுகிறது. எழுநூறு மாணவ - மாணவிகள் படிக்கும் பெரிய பள்ளி. பள்ளிக்கூட ஆயா இறந்து விட்டதால் அஞ்சலையை அந்த வேலைக்கு இஸ்மாயில் நியமித்தார். அத்துடன் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் வேலையையும் செய்தாள். இரண்டுக்கும் சேர்த்து ஐநூறு ரூபாய் சம்பளம் கிடைத்தது. வரதன் மகிழ்ந்தான்.

மறு சடங்கானதும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போன தாய்மாமன் இரண்டு ஆண்டுகள் கடந்தும் வரவில்லை. வரதன் கவலைப்பட்டான். பெண்ணைப் பெற்றவனாயிற்றே. மைத்துனர் இல்லம் சென்றான். திருமணம் பற்றி யாரும் ஒன்றும் பேசவில்லை. வரதனே பேசினான்.

"அஞ்சலை சடங்காகி இரண்டாண்டு ஓடிவிட்டது. நீங்க வருவீங்கன்னு பார்த்தேன். வரலே... அதான் நானே வந்துட்டேன்" என்றான் வரதன்.

"அண்ணே, கோச்சிக்காதீங்க. சின்னதுரை வேலைக்குப் போறான். கல்யாணம்னு பேச்செடுத்தா... சொந்தத்திலே வேண்டாம். சிவப்பா அழகான பொண்ணுதான் வேணுமாம்... அதனால் வேற இடத்திலே பெண் பார்த்து நிச்சயமும் முடிச்சிட்டேன்... அஞ்சலை வேற கருப்பா பிறந்துட்டா... என்ன செய்யிறது" என்றாள் அஞ்சலையின் அத்தை.

"ஆமாம் மாமா... அதான் உங்ககிட்டே கூட சொல்லாம வேற இடத்திலே... பெண் பார்த்து முடிச்சிட்டேன்... பெண் சிவப்பா லட்சணமா இருக்கிறா... அதான்..." என்றான் தாய்மாமன்.

"என்ன மச்சான் உங்க அக்காளுக்குப் பொறந்தவ கருப்பா இல்லாம சிவப்பா எப்படி பொறப்பா. நானும் கருப்பு அவளும் கருப்பு. அஞ்சலை எப்படி சிவப்பா பிறப்பா... நீங்க சொல்லிட்டு வந்தீங்கன்னுதான் வந்தேன். அவளுக்குன்னு எவனாவது பிறந்திருப்பான்... நான் வரேன் மச்சான்... வரேன் தங்கச்சி..."

ஏமாற்றத்துடன் திரும்பினான் வரதன்.

"என்னப்பா... முகம் ஒரு மாதிரியா இருக்குது... மாமா அத்தை ஏதாவது சொன்னாங்களா?.."

"ஆமாம்மா... நீ கருப்பா இருக்கியாம்... சின்னதுரை சிவப்பா, அழகா இருக்கிற பொண்ணுதான் வேணுமின்னு சொல்லிட்டானாம். உறவிலே பொண்ணே கட்டக்கூடாதுன்னு சொல்லிட்டானாம். பொண்ணும் பார்த்துட்டாங்களாம்... நிச்சயமும் பண்ணிட்டாங்களாம்."

"விடுங்கப்பா... இதுக்கு போய் இப்படி கவலைப்படறீங்க... நான் கருப்பா இருந்துட்டு போறேன். எனக்குன்னு ஒரு கருப்பன் பிறந்திருப்பான்... வாங்கப்பா... இஸ்மாயில் ஐயா.. நமக்கு உறவா... அவர் எவ்வளவு உதவி செய்யிராறு... இப்படி யாராவது நமக்கு உதவுவாங்க... வாங்கப்பா மீன் குழம்பு வச்சிருக்கேன். சாப்பிடலாம்... என்றாள்" அஞ்சலை.

சின்னதுரை கல்யாண பத்திரிக்கை தபாலில் வந்தது. நேரில் வர முகம் இல்லை. பரவாயில்லை என்று வரதன் போய் வந்தான்.. "அஞ்சலையை அழைத்து வரவில்லையா? என்று தாய்மாமன் கேட்டார். மௌனமாக இருந்துவிட்டு வரதன் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

பள்ளியின் நிர்வாகியும், வணிகருமான முகம்மது இஸ்மாயில் முஸ்லீம்கள் மதச்சட்டப்படி தன் வருமானத்தில் இரண்டரை சதவீதம் "ஜக்காத்" என்ற தானம் செய்வதை உண்மையாகக் கடை பிடித்து வருபவர். ஆண்டுக்கு ஒரு தரம் தானம் செய்வதை விட்டு இப்போது ஐந்தாண்டுக்கு ஒரு தடவை ஏதாவது நல்ல காரியத்திற்கு அந்த தொகையை செலவிடுவது அவரது வழக்கம். நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ஓராண்டு காழிந்ததும் "ஜக்காத்" பணத்தை ஏதாவது ஒரு மனிதநேயமுள்ள காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

அஞ்சலையும் வரதனும் பழைய குடிசையில்தான் இருந்தார்கள். மகள் வேலைக்குப் போன பிறகு கூரையைப் பிரித்து விட்டு சீமை ஓடு போட்டான் வரதன். பின்பக்கம் சமையல் செய்ய கூரை போட்ட கொட்டகை ஒன்று போட்டான்.

அஞ்சலையை யார் கையிலாவது பிடித்து கொடுத்து விட முயற்சி எடுத்தான். அவன் முயற்சி பலிக்கவில்லை. வந்து பெண் கேட்பவர்கள்... வரதனை விட ஏழையாக இருந்தார்கள். நகை நட்டு கூடுதலாகக் கேட்கிறார்கள். இதே கவலை வரதனை ஆட்டிப் படைத்தது. வெள்ளையூரிலிருந்து பெண் பார்க்க வந்தார்கள். பெண் கருப்பாக இருக்கிறதுன்னு போயிட்டாங்க. கருப்பு - சிவப்பு பார்க்கிறாங்க. ஆனால் நல்ல குணத்தை பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்று எண்ணியபடி கயிற்றுக்கட்டிலின் மேல் படுத்திருந்தான் வரதன்.

அஞ்சலை ஆயாவாக ஆர்வமாகத் தன் வேலையைச் செய்தாள். பெண் பிள்ளைகள் வருகை அதிகமாகக் கூடியது. பள்ளி நிர்வாகி மகிழ்ச்சியடைந்தார். அஞ்சலைக்கு நூறு ரூபாய் சம்பளம் உயர்த்தினார்.

இரண்டு ஆண்டுகள் கடந்தன.

அஞ்சலையின் தாய் மாமன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வரவே பதட்டத்துடன் ஓடினான் வரதன். அங்கு போனபிறகு சின்னதுரைக்கும் சிவப்பு மருமகளுக்கும் சண்டை வந்து மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டதால் தீ விபத்து ஏற்பட்டதும், அவள் மருத்துவ நிலையத்தில் சேர்க்கப்பட்டு ஜன்னி வந்து இறந்துவிட்டதும் தெரிய வந்தது. துக்கம் விசாரித்துவிட்டு வரதன் சோர்வாக வீடு வந்து சேர்ந்தான். அனைத்தையும் கேள்விப்பட்டு அஞ்சலை வருந்தினாள்.

ஆறு மாதங்கள் கடந்தன. அன்று விடுமுறை. அஞ்சலை சமைத்துக் கொண்டிருந்தாள். வரதன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அப்போது தாய் மாமனும், அத்தையும், குழந்தையுமாக வந்தனர்.

"வா மச்சான்... வாம்மா தங்கச்சி... யாரு சின்னதுரை பொண்ணா... அஞ்சலை... இங்குவந்து பாரு... யாரு வந்திருக்காங்க... வந்து பாரு..."

"இதோ வரேம்பா... வாங்க மாமா... வாங்க அத்தை.. நல்லா இருக்கீங்களா... யாரு மாமா பொண்ணா... அட்டே என்னடி என்னாட்டம் கருப்பா இருக்கிறே..." என்று சொல்லியபடி குழந்தையை வாங்கிக் கொண்டாள். குழந்தை அழுது பாட்டியிடம் தாவியது.

அஞ்சலை காபி போட்டு வந்து உபசரித்தாள்.

"பையன் பேச்சை கேட்டு வேற இடத்திலே பெண் கட்டி... குடும்பத்துக்கே தீ வைச்சுட்டு போய் சேர்ந்துட்டாள். இந்த குழந்தையை என் தலையிலே கட்டிட்டு போயிட்டா... இந்த குழந்தைக்கு ஒரு தாய் வேணும்... நடந்ததை மறந்துட்டு சின்னதுரைக்கு அஞ்சலையை கட்டி வச்சிடலாம்..." என்றான் தாய்மாமன்.

அஞ்சலை உள்ளே சென்று, வந்தவர்களுக்கும் சேர்த்து சமைக்கத் தொடங்கினாள்.

வரதன் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

"என்னண்ணே பேசாம இருக்கறீங்க... சின்னதுரை யாரு... அஞ்சலை யாரு... பெரிய மனசு பண்ணி அஞ்சலையை சின்னதுரைக்குக் கட்டிக் கொடுங்க... உறவும் விட்டுப்போகாது.." என்றாள் அத்தை.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலை "அத்தை... நான் இப்படி செல்றேன்னு வருத்தப்படாதீங்க... நாங்க பஞ்சைகள்... கூலி வேலைதான் பிழைப்பு... அடுப்புக்கரியாட்டம் என்னை பெத்து போட்டுட்டு செத்துப்போனா என் ஆத்தா... அப்போ இருந்த அதே கரிக்கட்டை மூஞ்சிதான் இப்பவும் இருக்குது. இப்ப மட்டும் எப்படி உங்கள் வீட்டு மருமகளா வர முடியும்? உங்கள் மகனுக்கு வேறு நல்ல இடத்திலே.... பெண்பார்த்து கட்டி வையுங்க..." என்றாள் அஞ்சலை.

"அஞ்சலை நீ நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாய்... நீ யார்?... என் அக்காள் மகள். நீ என் மகனுக்கு முறைப் பெண். ஏதோ முதலில் தப்பு நடந்து போச்சு... உன்னை விட எங்களுக்கு வேறு நல்ல இடம் கிடைக்காது.. நடந்ததை மறந்துட்டு சின்னதுரையை நீ திருமணம் செய்து கொள் அஞ்சலை..." என்றார் தாய்மாமன்.

வரதன் அஞ்சலையைப் பார்த்தான்.

"முடியாது மாமா... முடியாது... நீங்க என்னை மன்னிச்சிடுங்க... நான் தான் முறைப் பொண்ணுன்னு இப்பதான் உங்களுக்கு தெரியுது... ஆனால் அன்னிக்கு நான் கருப்பி அழகில்லாதவள்... அப்பா அன்னிக்கு அழுதது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது... இரண்டு மூணு நாளா அப்பா சாப்பிடாம சுருண்டு கிடந்தார். நான் உங்க வீட்டு மருமகளா வந்தால் எனக்கும் உங்க பிள்ளைக்கும் பிரச்சனை அதிகமாகும்... தயவு செய்து அந்த பேச்சை விடுங்க மாமா..." என்றாள் அஞ்சலை.

"அஞ்சலை... இப்படி அவசரப்பட்டு வார்த்தையை கொட்டலாமா? எங்க நிலைமையை கொஞ்சம் எண்ணிப் பார் அஞ்சலை..." என்றாள் அத்தை.

"அத்தை... நீங்க பழசை மறந்துட்டு பேசறீங்க... எனக்கு அவர் தேவையாக இருந்தப்ப அவரு மறுத்துட்டாரு. இப்போ அவருக்கு நான்தேவையா இருக்கச்சே தேடி வரீங்க. சிவப்பு பெண்ணைக் கட்டினாரே ஏன் அவர் கருப்புப் பெண்ணை பெத்தாரு... கருப்பு - சிவப்பு தோலின் நிறம்தான் அத்தை ஆனால் குணத்தைப் பார்க்கவில்லை நீங்க... எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டமில்லை அத்தை..."

"அஞ்சலை என்ன பேச்சி பேசறே நீ... அவுங்க யாரு... உன் தாய்மாமன்... உன் அத்தை... அவுங்களே நம்ம வீடு தேடி வந்திருக்காங்க... பேசாம இரும்மா..."

"அப்பா... நீங்க சும்மா இருங்க... இது என் வாழ்க்கை பிரச்சனை... நான்தான் முடிவு எடுக்க வேண்டும். சிவப்பு உடம்பு கேட்டவரக்கு இந்த கருப்பு உடம்பு அருவருப்பைத் தரும். அதனாலே.... என்னை மன்னிச்சிடுங்க மாமா... கருப்பாய் பிறந்ததால் என் மனசு வெள்ளையாகி விட்டது. வெள்ளையாய் பிறந்ததால் அவர் மனசு கருப்பாகிவிட்டது."

"அஞ்சலை... இதுதான் உன் முடிவா?"

"ஆமாம் அத்தை... எழுந்திருங்க மாமா... கை கழுவிக்கிங்க..." சாப்பிடலாம்.

"நீதான் உறவே வேண்டாம்னு சொல்றே... அப்புறம் என்ன சாப்பாடு... எழுந்திரு போகலாம்..."


வேதனையுடன் தாய்மாமனும், அத்தையும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போனார்கள். இருவர் மனங்களும் நொறுக்கப்பட்ட மண்பாண்டம் போல் ஆனது.

மூன்று மாதங்கள் கழிந்தன.

மெக்காவுக்குப் புனித யாத்திரை சென்றுவிட்டு வந்த பள்ளித்தலைவர் முகம்மது இஸ்மாயில் அவர்கள் வரதனைக் கூப்பிட்டு பேசினார்.

"வரதா... நான் மெக்காவுக்குப் போய் விட்டு சுகமா வந்து சேர்ந்துட்டேன். மெக்காவிலேயே ஒரு முடிவு செஞ்சிட்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா!"

"சொல்லுங்க ஐயா... நீங்க எது செய்தாலும்... நல்லதைத்தான் செய்வீங்க.." என்றான் வரதன்.

"ஜக்காத் பணத்தை வைத்து அஞ்சலைக்கு நிக்கா பண்ணிவைக்கப் போறேன்... மாப்பிள்ளையும் பார்த்துட்டேன். என்ன இருந்தாலும் நீ பெற்றவன் இல்லையா? அதான் உன்னைக் கூப்பிட்டு வரச் சொன்னேன்.."

"ஐயா... நான் உங்க அடிமை... நீங்க எது செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வீங்க..." என்று கலங்கினான் வரதன்.

"சரி... நம்ம பள்ளிக் கூடத்தில் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் இருக்காரே தெரியுமா?"

"ஓ... தெரியுமே... சிவப்பா... இருப்பாரே... அவர்தானே ஐயா".

"ஆமாம் வரதா... அவரேதான்... அவர் அஞ்சலையை நிக்கா பண்ணிக்க ஆசைப்படறார். நல்ல குடும்பம்... நீ சரீன்னு சொன்னா மற்ற வேலையை நான் பாத்துக்கறேன். ஜக்காத் பணம் முழுசையும் அஞ்சலைக்கே செலவு பண்ணப்போறேன். அதுக்காக எங்க மதத் தலைவருங்க கிட்டே அனுமதியும் வாங்கிட்டேன்".

"ஐயா... அஞ்சலை... உங்க பொண்ணுங்க... நீங்க எது செய்தாலும் எனக்கு சம்மதங்க..."

"சரி அஞ்சலையையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா? எங்க மதத்திலே இரண்டு பேருக்கும் சம்மதம் ரொம்ப ரொம்ப முக்கியம்".

அப்போது அஞ்சலை அங்கு வரவே

"வா அஞ்சலை... வா..."

"வணக்கம் ஐயா"

"உனக்கு ஆயுசு நூறு... உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்... நீயே வந்துட்டே... சரி... அஞ்சலை... நேரே விஷயத்துக்கு வர்றேன்... அஞ்சலை உனக்கு கல்யாணம் செய்து வைக்க போறேன்..."

"போங்க ஐயா... நீங்க... தமாஷ் பண்றீங்க..."

"இல்லை அஞ்சலை... உண்மையாத்தான் செல்றேன்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? நம்ம பள்ளிக்கூடத்திலே மூணாம் வகுப்பு ஆசிரியர் தேவமூர்த்தி தான்..."

"ஐயா அவுரு சிவப்பா... அழகா... நான் கருப்பா..."

"அவர் என்ன சொன்னார் தெரியுமா? சிவப்பை விட கருப்புதான் அழகுன்னு சொன்னாரும்மா... உன் குணம் அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. சரி உனக்கு அவரை பிடிச்சிருக்கா... உம்... என்ன அஞ்சலை..."

"உங்களுக்கும் அப்பாவுக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம் ஐயா. நீங்க என் தெய்வம்..."

"அடேடே... அஞ்சலை... என்ன கண்களில் கண்ணீர்... உம் அழாதே... என்ன நீ சின்ன குழந்தை மாதிரி உம் அழாதேம்மா... அடடே உன் கண்ணீர் வாய் வரையில் வழியுதே... என்ன அஞ்சலை இப்படி அழலாமா? என்ன உப்பு கரிக்குதா? உம்.. சிரிப்பைப் பாரு... அட இது புன்னகை... அப்ப இது உப்பு நீர்ப் புன்னகை".

"உப்பு நீர்ப் புன்னகையா...?"

"ஆமாம்.. அஞ்சலை... நீ அழுதையா... அந்த கண்ணீர் உன் வாய் வரையில் போயிட்டதா... உடனே சிரிச்சிட்டியா... அதான் "உப்புநீர்ப் புன்னகைன்"னு சொன்னேன்".

"ஐயா என் நெஞ்சில் இருந்த சுமையெல்லாம் கண்ணீரா, வழிந்துவிட்டது ஐயா... இந்த உலகத்திலே என் மேல் அக்கரை கொண்டவர்கள் இருவர். ஒருவர் நீங்கள்... மற்றொருவர் என் அப்பா... மூணாவதாக ஆசிரியர்..."

"அஞ்சலை... எனக்கு அல்லா பெண் குழந்தையை கொடுக்கலே... நீதான் என் பெண். ஜக்காத் பணம் முழுமையும் உனக்கு செலவு செய்யப்போறேன். உன்னுடைய எளிமை, நல்ல பண்பு, சுறுசுறுப்பு, உழைப்பு ஆசிரியருக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிச்சிருக்கு, அதோ மாப்பிள்ளையும் வந்துட்டார். இங்கேயே பெண் மாப்பிள்ளையைப் பார்க்கலாம். மாப்பிள்ளை பெண்ணைப்பார்க்கலாம்".

"போங்க ஐயா.. எனக்கு வெட்கமா இருக்குது".

"வாங்க தேவமூர்த்தி.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா உப்புநீர்ப் புன்னகையை பார்த்திருக்கலாமே".

"உப்பு நீர்ப் புன்னகையா?" என்று தேவமூர்த்தி வியப்புடன் கேட்க, அஞ்சலை வெட்கப்பட்டு பள்ளித்தலைவர் முகமது இஸ்மாயில் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்..

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link