சிறுகதைகள்


காலம் மாறிப் போச்சி

கூடல்.காம்

"நோக்கு பாடத் தெரியுமா?"

"காயத்ரி... வீணை நன்னா வாசிப்பா"

"அப்படியா... எங்கே வாசிக்க சொல்லுங்க"

வீணை வந்தது... காயத்ரி "காற்றினிலே வரும் கீதம்.." இசைத்தாள். அனைவரும் மகிழ்ந்தனர்.

"எங்களுக்கு காயத்ரியை பிடிச்சிருக்கு... மேற்கொண்டு லேளகீக விஷயங்கள் பேசலாமே" என்றார் மாப்பிள்ளையின் அத்திம்பேர்.

"அவா என்ன செய்யிறான்னு கேளேண்டா" என்றார் மாப்பிள்ளையின் சித்தப்பா.

"காயத்ரிக்கு ஐம்பது சவரன் நகையும், வைரத்தோடும் போட்டு கன்னிகாதானம் செய்து தரேன்... வரதட்சணையா ஒரு லட்சம் ரூபாய் தரேன்" என்றான் இரகுராமன் - காயத்ரியின் அண்ணன்.

சமயபுரத்தில் ஆச்சாரமும் அனுஷ்டானமும் உள்ள குடும்பம். இரகுராமனின் அப்பா வங்கி மேலாளராக இருக்கும் போதே மாரடைப்பால் காலமாகிவிட்டார். கருணை அடிப்படையில் மகனுக்கு வேலை கிடைத்தது. இரகுராமனின் தாயார், சிவகாமி, இரகுராமனின் மனைவி பவித்ரா, அவன் தங்கை காயத்ரி என சிறிய குடும்பம், பவித்ராவும் வங்கியில் வேலை செய்பவள். காயத்ரி ஆசிரியர் பயிற்சி முடித்தவள். இன்னும் வேலை கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வங்கியில் வேலை செய்யும் சுந்தரராமனுக்கு காயத்ரியை பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.

மாப்பிள்ளை பேங்க் வேலைன்னா பார்க்கிறான்... நீங்க இரண்டு லட்சம் கொடுத்துடுங்கோ... என்று சுந்தரராமனின் அத்திம்பேர் கேட்டார்.

சுந்தரராமன் எழுந்து தன் அப்பா, அம்மாவை தனியே அழைத்துப் போய், "அவா இஷ்டத்துக்கு விடுங்கோப்பா... அத்திம்பேர் ஏன் இப்படி முந்திரிக்கொட்டையாட்டம் முந்திக்கிறார்..!

"நான்தாண்டா கேக்கச் சொன்னேன். நேத்து சாயரட்சையே சொல்லி வச்சேன்...!

"அப்பா இல்லாத குடும்பம். அவள் அண்ணன் இவ்வளவு செய்வதாக ஒத்துண்டதே நேக்கு பெருமையா இருக்கு. என்னம்மா, நீங்க என்ன சொல்றேள்.."

"அப்பா இல்லாட்டி என்னடா. அவ அண்ணன் உன்னாட்டம் பேங்கில ஆபிசர் ரேங்கிலேதானே இருக்கான். நோக்கு என்னடா தெரியும். நீ சும்மா இருடா" என்றாள் தாய்.

இவர்கள் தனித்தனியே பேசுவதைக் கண்ட இரகுராமன் தன் அம்மாவிடம் சென்று கலந்து பேசினான்.

"அம்மா அவா அதிகமா எதிர்பார்க்கிறா."

"ஒண்ணரை லட்சம் தர்றதா ஒத்துக்கோ ரகு. ஏன்னா மாப்பிள்ளை கண்ணுக்கு லட்சணமா இருக்கான். பேங்க் வேலை நம்மாத்து பொண்ணு அவாத்துக்குப் போனா நன்னா வச்சிருப்பா".

"சரீங்கம்மா" என்று சொல்லிவிட்டு வந்து உட்காந்தான்.

காயத்ரியை உள்ளே அழைத்துச் சென்று மாப்பிள்ளையின் தங்கைகள் விமலாவும் கமலாவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். விமலாவும் கமலாவும் இரட்டையர்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

சுந்தரராமனுடன் அவன் அப்பா, அம்மா இருவரும் வந்து உட்கார்ந்தார்கள். அத்திம்பேர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

"ஒண்ணரை லட்சம் தர்றேன். சந்தோஷமா முடிச்சு வையுங்கோ.. என் தோப்பனார் இருந்தா இன்னும் அதிகமா கூடக் கொடுப்பார். காயத்ரி டீச்சர் டிரையினிங் முடிச்சவ..."

"சரி... எங்களுக்கும் சம்மதம்... தட்டை மாத்திக்கலாமே..." என்றார் கூந்தரராமனின் அப்பா.

இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியான சூழல் உருவானது.

திருச்சி தேவர்மகாலில் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. சுந்தரராமன் - காயத்ரி தம்பதிகளாயினர். சுந்தரராமன் குடும்பத்தார் மிகவும் மகிழும்படி சீர்வரிசைகள் செய்தான்.

காயத்ரி தன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் நாள் வந்தது.

தன் வீட்டுத் தொட்டத்தில் மாதுளமரத்தையும், கொய்யா மரத்தையும், மருதாணி மரத்தையும் தொட்டு தொட்டு பார்த்தாள். அவள் பொத்தி பொத்தி வளர்த்த முல்லைச் செடிகளையும்... பார்த்து கண்கள் பனிக்க நின்றாள். ஒரு புல்லின் இலையைக்கூட மயிலின் தோகை போல மகிழ்ந்து பார்த்தாள். ஒரு கீரைச்செடி சாய்ந்து கிடந்ததை கீழே குனிந்து நிமிர்த்தினாள்.

அப்போது அவள் தாய் சிவகாமி அருகில் வந்து அவள் தோளின் மேல் கையை வைத்து மெல்லிய குரலில், "மனுஷா நன்னா புரிஞ்சண்டு அவா போக்குப்படி நடந்துக்கோ. நோக்கு தோப்பனார் இல்லை. அண்ணா மனசு நோகும்படி நடந்துக்காதே. ஆம்படையான் குணமறிஞ்சி நடந்துக்கோ. உன் மாமியார் தங்கமா தெரியறா. புத்திசாலித்தனமா அவளை உன் கைக்குள்ளே வச்சிக்கோ. தெரியரதா? அக்கம்பக்கம் ஆத்துக்கெல்லாம் போவக்கூடாது". என்று புத்திமதி கூறினாள்.

காயத்ரியை மகிழ்ச்சியுடன் சுந்தரராமனுடன் அனுப்பிவிட்டு இரகுராமன் கண் கலங்கினான். சிவகாமியும் தன் கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பவித்ரா கணவனை உள்ளே அழைத்துப் போய் கேலி செய்து ஒரு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தாள்.

பொள்ளாச்சியின் இயற்கைக் கொஞ்சும் அழகும் புகுந்த வீட்டாரின் அபரிமிதமான அன்பும் காயத்ரியை மெய்மறக்கச் செய்தன. புக்ககம் மாதிரியே துளசி மாடமும் பூந்தோட்டமும், ஊஞ்சலும் புகுந்த வீட்டிலும் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தாள்.

அன்பு உள்ளம்தான் குடும்பப் பாசமாகவும், குடும்பப் பொறுப்புக்களாகவும், சமூக உணர்வாகவும் மலர்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துவது இல்லறம் தானே!

ஆனி போய் ஆடி வந்தது. இரகுராமனும் பவித்ராவும் பொள்ளாச்சி சென்று காயத்ரியை அழைத்து வந்தார்கள், சமயபுரம் வீடு மறுபடியும் களைகட்டியது. காயத்ரியும், பவித்ராவும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேலி பேசி மகிழ்ந்தனர். காயத்ரி தன் மாமியார் வீட்டு பெருமையை மூச்சு விடாமல் பேசினாள். சிவகாமி தன் மகளின் பேச்சை ரசித்தபடி தனக்குள் சிரித்துக்கொண்டாள். தனக்குத் தேவையானவைகளை தன் அண்ணி பவித்ராவிடம் சொல்லி அண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

ஆவணி பிறந்தது. சம்பந்தி வந்து இரண்டு நாட்கள் தங்கி காயத்ரியை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த தடவை காயத்ரி கலங்கவில்லை. கலகலவென்று சிரித்தபடி விடைபெற்றுச் சென்றாள்.

புரட்டாசி பிறந்ததும் ரகுராமனும் பவித்ராவும் பொள்ளாச்சி வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் சமயபுரம் வந்த ஒரு வாரம் கழித்து காயத்ரியின் மாமனார் தொலைபேசியில் அழுதபடி சுந்தரராமன் ஸ்கூட்டர் ஆக்சிடெண்டில் சிக்கி மருத்துவ நிலையத்தில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.

இரகுராமன் உடல் நடுங்கியது. பூமியே இடிந்து விழுவது போல் தென்பட்டது. கதறியபடி மூவரும் காரில் பொள்ளாச்சி விரைந்தனர். இவர்கள் வீட்டினுள் சென்றபோது சுந்தரராமன் பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தான். இதயமே வெடித்து விடுவதுபோல கதறினான். இரகுராமனை காயத்ரி மாமனார் தேற்றிக் கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்தது...

துயரம் ஒரு மனிதனை அழித்து விடுவது போல வேறு எதுவும் அவனுக்கு கேடு செய்யாது என்ற கீதையின் வாக்குபடி இரகுராமன் நடைப்பிணமானான்.

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பெயர் பொருத்தம் பார்த்து தெய்வ சன்னதியில் குறி கேட்டு நடந்த இந்தத் திருமணம் ஏன் இப்படி மூன்று மாதங்களிலேயே முடிவானது?.. ஜாதகம் அது இது எல்லாமே மனிதன் தனக்காக ஏற்படுத்திக்கொண்டது தானே!

அந்த நாள் வந்தது! பதினாறாம் நாள்.

பேசும் சக்தியையே இழந்தது போல் அலங்காரம் செய்யப்பட்டு காயத்ரி அமர்ந்திருந்தாள். நாவிதன் வரவழைக்கப்பட்டிருந்தான். ஒரு தட்டில் உத்ராட்சமும், விபூதியும், வெள்ளைச் சேலையும் வைக்கப்பட்டிருந்தனர். அமங்கலப் பெண்கள் சிலர் சில சடங்குகளை செய்ய முற்பட்டிருந்தனர். வயோதிக புருஷாள் சிலர், அவர்களுக்குத் தோன்றிய சம்பரதாயங்களை செய்யத் தொடஙகினர்.

காயத்ரியின் உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. இரண்டு அமங்கலப் பெண்கள் காயத்ரியை எழுப்பி நிற்க வைத்து பிறகு கைகூப்பச் செய்தபோது.

"நிறுத்துங்கள்!" என்று கதறினான் ரகுராமன்.

எல்லோருடைய பார்வையும் அவன்மேல் நிலைத்திருந்தது. வயோதிக வைதீகர்கள் படபடப்புடன் ரகுராமன் அருகில் வந்தனர்.

"காயத்ரிமேல் எவரும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன். இந்த மூடப் பழக்க வழக்கங்களை நிறுத்துங்கள்..." என்று கூறிக்கொண்டே தன் தங்கை அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவள் அவன் மேல் சாய்ந்து கதறினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரமாய் உதிர்ந்து கொண்டிருந்தன.

"பொம்மனாட்டி வாழ்வில் தாலி, மஞ்சள், குங்குமம், ஆகியவை அவளது புருஷனோடு முடிந்து போன ஒன்று... அதைப் போலவே வண்ணச் சேலைகளும், நீண்ட கேசமும் நீக்கணும்... அது தான் குலதர்மம்... சம்பரதாயம்" என்றாள் ஒரு அமங்கலப் பாட்டி.

"முடியாது!... செய்ய விடமாட்டேன்... அவளை அந்த கோலத்தில் பார்க்க நான் விரும்பவில்லை... பெண் இனத்தை ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும். காலம் மாறிப் போச்சி... இன்னும் பழைய பஞ்சாங்கமாய் இருக்கணுங்கிற அவசியமில்லை..." பச்சை மரத்தில் விழுந்த கோடாலியாக வார்த்தைகள் வெளிப்பட்டன.

சிவகாமி அம்மாளும், சம்பந்திகளும், பவித்ராவும் கண்கலங்க அமைதியாக அமர்ந்திருந்தனர். சில அமங்கலப் பெண்கள் கூடிக்கூடி பேசினர். சிலர் ரகசியமாகப் பேசினர்.

ரகுராமன்... உலக சம்பரதாயத்தை மாத்தலாமோ... சாஸ்த்திரங்கள் தெரிஞ்ச நீயே இப்படி பேசினால்...

போதும் நிறுத்துங்கள்... என் தோப்பனார் காலமான போது என் தாயாரை ஊனப்படுத்தினார்கள். அப்போது எனக்கு விபரம் தெரியாத வயசு. அந்த ரணமே இன்னும் ஆறவில்லை. அழகே உருவான என் அம்மாவை மொட்டையடிச்சு துளசி மாலை போட்டு வெள்ளை புடவையைக் கட்ட வைத்ததை நினைத்து நினைத்து அழுதேன். இந்த நிலை என் தங்கைக்கு வரவேண்டாம்.

"இந்தப் பாவம் ஏழேழு ஜென்மத்திற்கும் விடாது" என்றாள் ஒரு அமங்கலப்பாட்டி.

வாயை மூடு அலமு... புருஷாள் பேசிக் கொண்டிருக்கும்போது பொம்மனாட்டிக்கு என்ன வாய் நிள்கிறது" என்று வார்த்தையால் நறுக்கினார் மற்றொருவர்.

வேதங்கள், பிரம்மம், சம்பரதாயம், மறுபிறவி, பிதுர்லோகம், தேவலோகம், இவையாவும் மனிதன் வகுத்ததுதானே. நடைமுறைக்கு எது ஏற்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள். சுந்தரராமன் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா இருந்த கோலத்தைப்பார்த்து "என்ன மாமிக்கு இந்த கோலம் தேவையில்லை என்று சொன்னார். இது... இப்பொழுது காயத்ரிக்கும் பொருந்தும்" என்றான் ரகுராமன்.

அவரவர்கள் அருகில் இருந்தவர்களுடன் ரகுராமன் கூறுவது பிராமணதோஷம்... இதை இப்படியே விட்டால் பிராமணத்துவமே அழிந்துபோகும் என்று பேசினர். அப்போது காயத்ரியின் மாமனார் பேசினார்.

வேதங்களும், சாஸ்திரங்களும் எழுந்த காலம் வேறு அந்த காலத்திற்குத் தகுந்த மாதிரிதான் விதிமுறைகள் அதில் அமைந்திருந்தன. இப்போதைய விதிமுறைகள் வேறாக உள்ளது. அதை பழைய காலத்தோட ஒப்பிடக்கூடாது... மனிதர்களுக்காகத்தான் மரபுகள் ஏற்பட்டனவே தவிர மரபுகளுக்காக மனிதர்கள் ஏற்படவில்லை. மனிதர்களுக்குப் பயன்படாத மரபுகள் உதறப்பட வேண்டும். என் மாட்டுப் பெண்ணை ஊனமாக்க நான் கூட விரும்பவில்லை. யாரும் அவளைத் தொட வேண்டாம். அவள் புருஷன் கட்டிய மாங்கல்யத்தை அசவளே கழற்றி அந்த பால் கலசத்தில் போட்டுவிட்டால் போதும்... என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

ஜனங்கள் வாயடைத்துப் போயினர்.

குழுமியிருந்த பெண்கள் ஒவ்வொருவராய் எழுந்து போயினர். வைதீகத்தில் ஊறிய சிலர் முனுமுனுத்துக்கொண்டே சென்றனர். ஜடமாய் நின்றிருந்த காயத்ரியை பால் கலசத்தின் அருகில் அமரச் செய்து கலங்கினான் ரகுராமன்.

"அம்மா காயத்ரி... நான் சொன்னதைச் செய்யும்மா... தோஷமில்லை..." என்று மாமனார் கூற அவ்விதமே செய்துவிட்டு கதறி அழுதாள். அவளை பவித்ரா கை தாங்கலாக வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

மறுநாள் காலை காயத்ரியுடன் ரகுராமன் குடும்பம் சமயபுரம் வந்து சேர்ந்தது. புகை படிந்த ஓவியமாய் காயத்ரி ஒரு அறையில் ஒடுங்கிக் கிடந்தாள். மகனின் முற்போக்கு எண்ணத்தைக் கண்டு பூரித்துப்போனாள் சிவகாமி... யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சிவகாமி முதலில் வீட்டிற்கு நாவிதன் வருவதை நிறுத்தினாள். வெள்ளை சேலையைத் துறந்து பழையபடி வண்ணச் சேலையைக் கட்டிக்கொண்டாள். இதைப் பார்த்த மகன் ரகுராமன் மிகவும் மகிழ்ந்தான். இதை முன்பே செய்திருக்கலாம் என்று பவித்ரா தன் கணவனிடம் கூறினாள். ஆச்சாரம் அனுஷ்டானம் கொண்ட ஒரு குடும்பம் மூடநம்பிக்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.

ஒரு மாத காலம் கடந்தது. ஒருநாள் பொள்ளாச்சியில் இருந்து லாரி ஒன்று சமயபுரம் ரகுராமன் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து பொள்ளாச்சியிலிருந்து சுந்தரராமனின் அத்திம்பேர் இறங்கினார்.

"ஏதோ நடந்தது நடந்து போச்சி... வாழ்வே இல்லைன்னு ஆனப்பிறகு வாழ்வதற்காக நீங்கள் கொடுத்து அனுப்பிய சீர்செனத்தை எல்லாம் அவா ஆத்திலேந்து அனுப்பி இருக்கா... இறக்கி வச்சிட்டு போலாம்னு வந்திருக்கேன். நீங்க கொடுத்த ஒண்ணரை லட்ச ரூபாயும் காயத்ரி பேர்லேயே பேங்க்லே போட்டிருக்கு... இதோ அந்தப் பத்திரம்..." என்று சொல்லிக்கொண்டே ரகுராமனிடம் கொடுத்தார்.

ரகுராமன் வெப்பமாய் வேதனையாய் அவன் மனம் பொங்கியது. சிவகாமி வாய்விட்டு அழுதாள். லாரியோடு வந்த ஆட்கள் ஏற்றிவந்த உடமைகளை இறக்கி உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டுப் போனார்கள்.

காயத்ரியின் வாழ்க்கை ஒரு முற்றுப் புள்ளியாய் முடிந்தது. கதையாய், கானலாய், கனவாய், ஒரு மின்னலாய் முடிந்த தன் வாழ்க்கையை எண்ணி எண்ணி கலங்கினாள். கண்ணீர் வற்றிப்போய் கண்கள் பிசுபிசுத்தன.

நல்லவேளை! உடல் ரீதியாக இயற்கை அவளுக்கு எந்த தண்டனையும் வழங்கிடவில்லை. காயத்ரிக்காகத் தெருவே துக்கம் கொண்டாடியது. மூன்று மாதங்கள் கடந்தன.

ஒரு நாள் ரகுராமனை அழைத்துக்கொண்டு சமயபுரம் கோயிலுக்கு சிவகாமி சென்றாள்.

"ரகுராமா... நான் சொல்றேன்னு வருத்தப்படாதே... நேக்கு தோண்றதை சொல்றேன்... காயத்ரி சின்ன வயசு... பவித்ராவும் சின்ன வயசு... அதனாலே நீயும் பவித்ராவும் திருச்சியிலே இருக்கிற நம்மாத்து வீடு இருக்கே அங்கே தனிக்குடித்தனம் போயிடுங்க..." என்றாள்.

"ஆமாண்டா ரகு... எப்ப பார்த்தாலும் பவித்ரா காயத்ரிகிட்டே இருந்துண்டு அவளுக்கு ஆறுதலா இருக்கா... இது நாளடைவில் வெறுப்பா மாறிடும்... அப்புறம் அவள் மனம் புண்பட்டுப் போகும். நன்னா யோசிச்சுதான் சொல்றேன். நம்ம பவித்ராவும் சின்னவள்... நீங்க ரெண்டு பேரும் தனியே இருப்பது தான் நல்லது".

"அந்த வீட்டை வாடகைக்கில்லே விட்டிருக்கோம்... திடுதிப்புன்னு அவாளை எப்படி காலி பண்ணச் சொல்ல முடியும்".

"நேத்தே போன்லே சொல்லிட்டேன்... அவா எனக்குத் தெரிந்த குடும்பம்தான்... இந்த மாசமே காலி பண்ணிடறதா சொல்லிட்டா. நேக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்... என் காலம் முடியறவரைக்கும் அவளுக்குத் துணையா இருக்கேன்... அப்புறம் கடவுள் விட்ட வழி... என்னடா சொல்றே!"

"நீங்க பெரிய மனுஷி... நீங்க சொல்றதும் நல்லதுதான் பவித்ராகிட்டே பேசிபார்க்கிறேன்..."

"நான் நேற்றே பேசிட்டேண்டா... அவ நீ சரின்னு சொன்னா திருச்சி வீட்டுக்கே போயிடறதா சொல்லிட்டா".

பழைய வீட்டை விட்டு போக ரகுராமனுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு நல்ல நாளில் ரகுராமன் - பவித்ரா தனிக்குடித்தனம் போனார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இருவரும் வந்து போனது காயத்ரிக்கு ஆறுதலாக இருந்தது.

தாய்ப்பறவையின் கதகதப்பில் இருக்கும் குஞ்சுபோல காயத்ரி தன் தாயின் அரவணைப்பில் காலத்தைக் கடத்தினாள். அரசாங்கம் நல்ல திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. லஞ்சத்திற்கும், சிபாரிசுக்கும் இடமில்லாமல் போனது. தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணி என்ற இந்தத் திட்டத்தால் காயத்ரிக்கு நேர்காணல் வந்தது. உடனே வேலையும் கிடைத்தது. ஸ்ரீரங்கத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தாள்.

ஓராண்டிற்குப் பின் வெளியுலகை காயத்ரி காண ஆசிரியர் பணி அவளுக்கு உதவியது. காயங்களுக்கு மருந்தாக ஆசிரியர் பணி அமைந்தது. கழிந்து போன வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் கண்களில் மட்டும் நம்பிக்கை சுமந்திருந்தது. நினைவுகளில் தேன் தடவிக் கொண்டிருந்த அந்த நினைவு துடைத்து எறியப்பட்டிருந்தது. வரண்டு போன சுனையில் நீர் சுரந்தன.

பவித்ரா கருவுற்று, திருச்சி பாரி மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த பிறகு வீட்டில் பழைய கலகலப்பு ஏற்பட்டது. மாதத்தில் பாதி நாட்கள் சிவகாமி பகல்நேரத்தில் தன் பேரனுடன் கழித்தாள். காயத்ரியும் ஞாயிற்றுக்கிழமை அண்ணன் வீட்டிலேயே கழித்தாள்.

குழந்தை சீனு தவழ ஆரம்பித்ததும் சமயபுரத்திலேயே வளர்ந்தான். காயத்ரியின் மனதை குழந்தை சீனு கொள்ளை கொண்டான். விடுமுறை நாட்களில் பவித்ராவும், ரகுராமனும் சமயபுரம் வீட்டிலேயே கழித்தனர்.

காயத்ரி இன்றும் நெருப்புதான். சற்று ஊதினாலும் கூடக் குபீரென்று பற்றிக்கொண்டுவிடும் சுடாத நெருப்பு அவள். காயத்ரியைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் அழுதாள் சிவகாமி. காயத்ரி வேலை செய்து வந்த பள்ளியில் அரவிந்தன் என்ற ஆசிரியர் பணியாற்றிவந்தார். சொந்த ஊர் வயலூர். முற்போக்கான எண்ணம் கொண்டவன்.

காயத்ரிக்கு ஏற்பட்ட இழப்பை அவன் கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டு அவளை மணந்துகொள்ள விரும்பினான். இதற்கான முயற்சியை அப்பள்ளியிலேயே வேலை செய்யும் தமிழாசிரியை திலகவதி அம்மையார் மேற்கொண்டார். முதலில் தனியாக காயத்ரியிடம் பேசினாள். அவளின் அழுகை தான் பதிலாக அமைந்தது. சிவகாமியிடம் காயத்ரி இல்லாத நேரம் பார்த்து பேசினாள்.

சிவகாமி நீண்ட நாட்களாக நல்ல இடமாக இருந்தால் சாதி, மதம், பார்க்காமல் காயத்ரியை மறுமணம் செய்து வைத்துவிட எண்ணி இருந்தாள். திலகவதியின் முயற்சிக்கு ஆதரவு அளித்ததோடு அரவிந்தனை சந்தித்து அவன் கருத்தைக் கேட்டறிந்தாள். ஆனால் காயத்ரியின் மனம் மறுமணத்தில் ஊக்கம் பிறக்கவில்லை.

பள்ளியில் சுற்றுலா ஏற்பாடாகியது. கூற்றுலாவுக்கு காயத்ரியும் சென்றாள். திலகவதி கன்னியாகுமரியில் காயத்ரி மனதைக் கரைத்துவிட்டாள். அரவிந்தனுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பையும் ஏற்படுத்தினாள். இந்த ஏற்பாட்டை முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு சிவகாமியும் இந்த சுற்றுலாவில் மகளுடன் வந்திருந்தார்.

கண்களில் நீர்த்திரை மறைக்க... உதடுகளில் சிறு நடுக்கம் ஏற்பட... புல்வெளியில் பூக்கள் விழுவதுபோல் அதிராமல் பேசினாள்...

அண்ணன், அண்ணியைக் கேட்டு செய்யுங்கள் அம்மா என்று தயங்கித் தயங்கி சொன்னாள். சிவகாமி மகிழ்ந்தாள். முற்போக்குவாதியான ரகுராமன் இதற்கு சம்மதிப்பான் என்று சென்றபோது ரகுராமன் குளித்தலையில் தன் நண்பன் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தான். பவித்ராவிடம் சிவகாமி அரவிந்தன் படத்தைக் காட்டி கூறினாள். பவித்ரா மிகவும் மகிழ்ந்தாள். ரகுராமனிடம் பக்குவமாக எடுத்துக்கூறும்படி சொல்லிவிட்டு வந்தாள். ஞாயிற்றுக் கிழமையாதலால் சீனு தாயிடம் ஒட்டிக் கொண்டான்.

கேள்விப்பட்ட ரகுராமன் இரத்தம் கொதித்தது... திங்கள் மாலை புயலாக சமயபுரம் வந்தான்.

"பவித்ரா சொல்வதெல்லாம் உண்மையா?"

காயத்ரி உள்ளே சென்றுவிட்டாள். மகன் குரல்கேட்டு சிவகாமி வந்தாள்.

"அம்மா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?"

"ஏண்டா ரகு எத்தனை நாட்களுக்கு காயத்ரி இப்படியே இருக்க முடியும். சின்ன வயசு...அவள் அங்கு வாழ்ந்தது ஒரு மாசங்கூட இல்லை... லோகத்திலே இதெல்லாம் சகஜம்டா... பையன் நல்லவனா தெரியறான். இவ ஸ்கூலில் வேலை செய்யறான். பெயர் அரவிந்தன்... முற்போக்கானவன்..."

ரகுராமனுக்கு இரத்தம் கொதித்தது.

அம்மா இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெட்கமா இல்லே. நம்ம குலம் என்ன கோத்ரம் என்ன. யாரோ கட்டிக்க ஆசைப்படறான்னா உடனே சம்மதிச்சிடறதா? பவித்ரா வீட்டில் என்ன நினைப்பார்கள்? சீனுவின் எதிர்காலத்தைப் பற்றி உனக்கு அக்கறை கிடையாது. என்மேல் தான் தப்பு. அப்போதே தலையை மழுச்சி, உத்திராட்சம் கொடுத்து வெள்ளைப் புடவை கொடுத்திருக்க வேண்டும். அது சரி.. அவளுக்கு இதில் இஷ்டமா... கூப்பிடு அவளை..

தீப்பொறியில் ஆரம்பித்து விறுவிறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது!... மீண்டும் அவனே பேசினான். காயத்ரி அறையில் அழுது கொண்டிருந்தாள்.

"அவன் முதலியார் சாதியாம்.. கட்டி அறுத்தவளை அவன் கட்டிக்கொள்ள ஆசைப்படுவது முற்போக்கு இல்லைம்மா... அவள் சம்பாதிக்கிற பணத்துக்கு. வேலைக்குப்போற பொண்ணாயிற்றே... அதான் ஆசைப்பட்டுட்டான். எச்சிலாக இருந்தாலும் பரவாயில்லைன்னு உங்ககிட்ட தியாகி வேஷம் போடறான்... அதை நீயும் நம்பிட்டே!... நம்ம வீட்டு கௌரவத்தை குலைக்கும் எந்த காரியத்துக்கும் நான் உடன்பட மாட்டேன்."

"டேய் நிறுத்துடா உன் வியாக்கியானத்தை... நீ நினைக்கிற மாதிரி பணத்துக்காக அவளைக் கட்டிக்க அவன் ஆசைப்படலே... பையன் தங்கமானவன். பணம் என்னடா இன்று வரும் நாளை போகும்.. ஆனால் நம்ம காயத்ரியின் இளம் வயதை நீ நினைத்துப்பார்டா.. சாதியாம் சாதி. சாதி எங்கிருந்துடா வந்துட்டுது... எல்லாமே மனுஷன் வகுத்ததுதாண்டா. நீதான்டா சொன்னே... காலம் மாறிப்போச்சின்னு... பணம் பெரிசில்லைடா மனிதநேயம் தாண்டா முக்கியம்... மனம் பக்குவப்படவேண்டும். அந்தப் பக்குவம் அந்த பிள்ளையாண்டான் கிட்டே இருக்குது... நீ இஷ்டப்பட்டாலும், இஷ்டப்படலைன்னாலும் இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகிறது..."

"ஓகோ... அப்படியா! அப்படின்னா என்னை மறந்திடுங்க... எக்கேடாவது கெட்டுத் தொலையிங்க... நானும் பவித்ராவும் எங்காவது கண்காணாத இடத்துக்கு மாத்திண்டு போய் தொலையிறோம்... நீயும் உன் மகளும் சௌக்கியமா இருங்கோ!"

வேகமாக வெளியேறி மோட்டார்பைக் வேகமாக உதைத்துக் கிளப்பிக் கொண்டு புயலாகப் போனான்.

அறையிலிருந்த காயத்ரி அழுதபடி ஓடிவந்து சிவகாமி மடியில் தலைவைத்து கதறினாள்... சிவகாமியும் அழுதாள்.. ஆனால் அவள் மனதில் உறுதி வெளிப்பட்டது.

கவலைப்படாதேம்மா... நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று சொல்வது போல் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

"அம்மா எனக்கு வேண்டாம்மா இந்த கல்யாணம்" என்று கதறினாள் காயத்ரி.

"அசடே... எதுக்கு அழறே... எனக்குப் பின்னாலே உன் கதி என்ன? உன் அண்ணன் அவன் பொண்டாட்டி பிள்ளைன்னுதான் இருப்பான். உன் வேலை மட்டும் வாழ்க்கைக்குத் துணையா அமையாது. இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் நீ வாழ முடியாதும்மா... நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்.. அவன் கிடக்கிறான்."

திலகவதி அம்மையார் வந்தார்கள். அவர்களுடன் அரவிந்தனின் அப்பா அம்மா வந்தார்கள். பேசினார்கள். பவித்ரா ஒருநாள் ரகுராமனுக்குத் தெரியாமல் வந்து காயத்ரியிடம் பேசினாள். சிவகாமி மகிழ்ந்தாள். மருமகளின் பச்சைக்கொடியைப் பற்றிக் கொண்டாள்.

துணிச்சலின் பெயர்தான் சிவகாமி என்று மெய்ப்பித்தாள். வயலூரில் முருகன் சன்னதியில் எளிமையான திருமணம். முடிந்த கையோடு திருமணம் பதிவு செய்யப்பட்டது... மகனுக்குச் சொல்லாமலேயே அனைத்தும் முடித்தாள். சீர், செனத்தி அனைத்தையும் வயலூர் அனுப்பிவைத்தாள். அரவிந்தன் - காயத்ரி இருவரையும் சிவகாமியின் ஆசியோடு. நல்ல நாளில் வயலூர்க்கு அனுப்பி வைத்தாள். இவர்கள் வயலூர் போவதற்கு முன்பாகவே பவித்ரா வயலூர் சென்று காயத்ரியை அவர்களோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். பவித்ராவின் அன்பான அரவணைப்பைக் கண்டு கண்களில் கண்ணீர் பெருக மன்னியை அணைத்துக் கொண்டாள்.

சென்னைக்கு வங்கி பயிற்சிக்கு சென்றிருந்த ரகுராமன் அனைத்தையும் கேள்விப்பட்டு மிகவும் கோபப்பட்டான். அவன் உள்ளம் துடிதுடித்தது. புயலாக வந்தான் சமயபுரம்.

"எங்கே அந்த ஓடுகாலி... நான் ஒருவன் இருப்பதை எண்ணாமல் உங்களுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு நம்ம குலத்துக்கே அழிவு ஏற்படுத்திட்டே. நீ ஒரு பிராமணச்சியா? அவளை என்ன செய்கிறேன் பார். கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன். எங்கே அவள்? காயத்ரி... காயத்ரி..."

டேய் நிறுத்துடா உன் வியாக்கியானத்தை... அவளை அனுப்பி வச்சிட்டேண்டா... எது பேசினாலும் எங்கிட்டே பேசு. வெளியிலே பேசிண்ட உள்ளுக்குள்ளே உணர்ச்சிகளை அடக்கிண்டு ஜடமா வாழ அவ ஒண்ணும் ஐம்பது வயசு கிழவி இல்லைடா. அவளும் மனுஷிதாண்டா... இவ்வளவு பேசறையே... அப்பொழுதே ஏண்டா அவளுக்கு விதவைக்கோலத்தை நீ தடுத்து நிறுத்தினே... நீ நினைச்சா காலம் மாறிப் போச்சுன்னு பேசுவே! நாங்க செய்தா குலத்துக்கு விரோதம்னு கோபப்படுவே! டேய் ரகு நான் வெள்ளை சேலையிலிருந்து பட்டு சேலைக்கும் நூல் சேலைக்கும் மாறினேனே அன்னிக்கு ஏண்டா நீ தடுத்து நிறுத்தலே!..."

"...போடா...பெரிய சம்பரதாயத்தை கண்டுட்டே. பழம் பஞ்சாங்கம் நீதாண்டா அன்னிக்கு அத்தனை பேர் முன்னாலையும் கேலி பேசினே! இன்னிக்கு மட்டும் என்னடா! அவள் சின்ன வயசு... நடத்தையிலே பிசகு ஏற்பட்டு எவன் கூடவாவது ஓடிப்போனா? நாம என்னடா செய்ய முடியும்? உன்னைக்கேட்காம நான் செய்யலையே... கேட்டேன்... மறுத்துட்டே..."

"...குலம் குலம்னு பேசறையே கட்டின மனைவியை விட்டுட்டு திரிகிறாரே உன் சித்தப்பா அவரால் குலத்துக்கு இழிவு இல்லையா? மத்தவா பொண்டாட்டியை நாடி அலைந்து குடி கெடுக்கிறானே உன் மைத்துனன் அவனால் குலத்துக்கு இழிவு இல்லையா?... உன் தோப்பனார் மட்டும் என்னடா? நம்ம நிலத்திலே வேலை செஞ்ச முனியன் பெண்சாதியை கள்ளத்தனமா வைச்சிண்டு போகத்துக்கு போகம் ஐஞ்சு மூட்டை ஆறு மூட்டைன்னு நெல்லு கொடுத்து அனுப்பியது ஊருக்கே தெரியும்டா... அதனாலே குலத்துக்கு இழிவு ஏற்படலையா? வயித்துலே புள்ளையோட அவ வந்து நின்னப்ப, அவ கிட்டே ஆயிரம் ரூபாய் நான் கொடுத்து அனுப்பிணேன்டா... அதனால் குலத்துக்கு இழிவு இல்லையா?"

"மதம், சாதி, சடங்கு, சாஸ்திரம், சம்பரதாயம், எல்லாமே மனுஷாள் உண்டாக்கினதுதாண்டா? அவள் என்ன பெருசா தப்பு பண்ணிட்டா... ஒரு மாசம் கூட அவள் சேந்தாப்பலே ஆம்படையான்கிட்டே அவ வாழலே.. ஏன் அவளை மூலையில் உட்கார வைக்கணும்..? நீ எப்ப உன்னை மறந்துடுன்னு சொன்னியோ அன்னிக்கே முடிவு பண்ணிட்டேண்டா. அவாளுக்கு ஸ்ரீரங்கத்திலே வீடு இருக்காம். அங்கதான் காயத்ரியும் அரவிந்தனும் வாழப்போறாங்க. உன் தோப்பனார் வீட்டை நீ வித்து பணமாக்கிக்க. நான் என் காலத்தை காயத்ரியோட ஓட்டிடறேன்... வரேண்டா" என்று சொல்லியபடி இரண்டு தோல் பெட்டியை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து போனாள் சிவகாமி...

இரகுராமன் உடல் நடுங்க வாயடைத்துப் போய் நின்றான்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link