சிறுகதைகள்


போத்தல்

கூடல்.காம்

படகு அக்கரையில் இருந்தது.

படகுத் துறையில் கேசவனோடு மொத்தம் பத்துப் பேர் காத்திருந்தார்கள். எல்லோரும் ஆண்கள் கேசவனையும், கையிடுக்கில் கட்டை ஊன்றிய வயதானவன் ஒருவனையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மோட்டர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவற்றையும் படகில் ஏற்றியே அக்கரை போக வேண்டும்.

வண்டிகளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு பக்கத்துக் கடையில் எலுமிச்சை சர்பத் குடித்தபடியோ, அது முடிந்து புகை வலித்துக்கொண்டோ அல்லது சீட்டில் உட்கார்ந்தபடிக்கே நாலாக மடித்த பத்திரிகையை விரித்துப் படித்தபடிக்கோ இருந்த அவர்களில் யாருக்கும் அக்கரை போக அவசரம் உண்டென்று கேசவனுக்குத் தோன்றவில்லை.

அவசரம் வேண்டாம். ஆனால் ஏன் எலுமிச்சை சர்பத்? கேசவன் உத்தியோகம் பார்க்கும் கம்பெனி விற்பனைக்கு இறக்கிய குளிர்பானத்தைக் குடிக்கலாம் தானே? சர்வதேச அளவில் எல்லா வயதினரும் விரும்பி வாங்கி வருடத்தின் பனிரெண்டு மாதமும், நாளின் இருபத்துநாலு மணி நேரமும் ஆஹா.

கேசவன் மனதில் எழுந்த விளம்பர கீதத்தைக் கஷ்டப்பட்டு விழுங்கியபடி கிழவனைப் பார்த்தான்.

கிழவன் பக்கத்தில் வைத்திருந்த சிறிய சணல் மூட்டையை இன்னும் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஐந்து நிமிடத்தில் கடந்துடலாம். படகு வந்தால் தானே?

அவன் கேசவனிடம் முறையிடுவதுபோல் பேசினான். அவனுக்கும் அக்கரை போக அவசரம் உண்டு என்பது கேசவனுக்கு ஆறுதலாக இருந்தது.

ஞாயித்துக்கிழமை என்பதாலோ என்னமோ மெத்தனமா இருக்காங்க எல்லோரும்.

கேசவன் அக்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகைச் சுட்டிக் காட்டியபடி ரகசியம் போல் கிழவனிடம் தெரிவித்தான். மற்றவர்கள் கேட்டுத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும் என்று ஏனோ அவனுக்கு ஒரு தயக்கம். படகு வர இன்னும் சற்று நேரமானால் அவர்களில் ஒருவராவது குளிர்பானம் குடிக்க முற்படலாம். கேசவன் வேலை பார்த்துச் சம்பளம் வாங்க அதுவும் ஏதோ விதத்தில் உதவியாக இருக்கும். அதற்கு அக்கறை போகணும். படகு வர வேணும்.

"உத்தியோகத்திலே இருக்கறவங்களுக்கு வேலைக்கும் ஒழிவுக்கும் கிழமை உண்டு. மத்தவங்களுக்கு எல்லா நாளும் ஒண்ணு போலதானே?"

கிழவன் கேசவனிடம் சொன்னான். படகுத் துறை ஓரமாக நகர்ந்து தண்ணீரில் கால் நனைய உட்கார்ந்த படி, தாங்கு கட்டையைச் சத்தமெழத் தரையில் போட்டான். அந்தக் கட்டை அவனை வெகுவாக இம்சித்திருக்க வேண்டும். அதனோடு சதா இருக்க வேண்டிய கட்டாயம் அலுப்படையச் செய்திருக்கலாம் என்று கேசவன் நினைத்தான்.

அக்கரையில் ஸ்டீம் லாஞ்சின் இஞ்ஜின் அறையிலிருந்து தலையை எக்கிப் பார்த்து ஒருத்தன் ஏதோ உரக்கக் கூவினான். அவன் என்ன சொல்கிறான் என்பது இந்தப் பக்கத்தில் யாருக்கும் அர்த்தமாக வில்லை. ஒரு வினாடி அவனைக் கவனித்து விட்டு எலுமிச்சை ரசத்திலும் பத்திரிகையிலும் சிகரெட்டின் கடைசித் துண்டத்திலும் அவரவர்கள் மூழ்கியிருந்தார்கள்.

"என்ன சொல்றார் அவர்?"

கேசவன் கிழவனைக் கேட்டபடி அவன் பக்கமாக உட்கார்ந்து சட்டைப் பையில் இருந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

கிழவன் அவசரமாகத் தன் தாங்குக் கட்டையைக் கொஞ்சம் எழும்பி வாரியெடுத்து, மடியில் குழந்தை போல் போட்டுக் கொண்டான். அதனிடம் இருந்த வெறுப்போ மற்ற எதுவோ வெகுவாகத் தணிந்து அது திரும்ப விருப்பமுடையதாக மாறி இருக்கும். சணல் மூட்டையும் இன்னும் அருகே நகர்த்தப்பட்டது. அது இன்னும் கொஞ்சம் நகர்ந்தாலும் ஆற்றில் விழுந்துவிடலாம்.

"எஞ்ஜினிலே ஏதோ ரிப்பேர்னு சொல்றான் போல."

கிழவன் கொஞ்சம் சத்தத்தைக் கூட்டிச் சொன்னான். அவன் கூறுவதை மற்றவர்களும் கவனிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். கேசவனைத் தவிர வேறு யாரும் இந்தப் பக்கம்கூடத் திரும்ப வில்லை.

"அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சத்தம் உங்களுக்கு என்னன்னு புரியுதா?"

கேசவன் நம்பியும் நம்பாமலும் கேட்டபடி சிகரெட் பெட்டியைக் கிழவனிடம் நீட்டினான்.

"இல்லே, நான் பீடிதான் குடிக்கறது. வள்ளம் போனதோடு அதுவும் போச்சு. காசு வேணாமா பீடி வாங்க?"

கிழவன் சிரித்தான்.

இவன் படகுக் காரனாக இருந்திருக்கிறான். காலும் கையும் திடமாக இருந்தபோது படகு வலித்துப் போயிருக்கிறான். ஒரு பரிசல் மாத்திரம் இருந்தால் இவன் இப்போதும் தன்னைக் கரை சேர்த்துத் தானும் போய்விட முடியும்.

கேசவன் கிழவனை ஒரு புதிய மரியாதையோடு பார்த்தான். இவனுக்கு நீந்தவும் தெரிந்திருக்கும். கேசவனுக்குக் கைவராத வித்தை அதுவும் கூட.

"எங்கே படகு ஓட்டிட்டு இருந்தீங்க?"

கேசவன் சிகரெட் துண்டைத் தண்ணீரில் எறிந்தபடி கேட்டான். இறுதி சுவாசம் போல் புகைவிட்டு அணைந்த அந்தத் துண்டைப் பார்த்தபடி இருந்தான் கிழவன். அதைத் தண்ணீரில் எறிந்தது அவனுக்குப் பிடிக்காத காரியமாகக் கேசவனுக்குப் படவே தண்ணீரில் கைவிட்டு அதைத் திரும்ப எடுக்க முற்பட்டான். அவன் கைக்குக் கிட்டாமல் அது விலகி மிதந்து போனது.

"விடுங்க. ரொம்பக் குனிஞ்சாத் தண்ணியிலே விழுந்துடப் போறீங்க. அப்புறம் உங்களை யாராவது வந்து தான் கரையேத்தணும்."

தனக்கு நீந்தத் தெரியாததைக் கிழவன் எப்படி அறிந்து கொண்டான் என்று கேசவனுக்கு நிச்சயமாகத் தெரிய வில்லை. ஜாக்கிரதை யாகத் தண்ணீரில் கையை அளைந்ததை வைத்துப் புரிந்து கொண்டவனாக இருக்கும்.

அக்கரையிலிருந்து தொப்பென்று சத்தம் ஸ்டீமரிலிருந்து இடுப்பில் அண்டர்வேர் மட்டும் தரித்த ஒரு வாலிபன் தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்திருந்தான்.

"ஆறு இந்தப் பக்கம் பல இடத்திலேயும் ஆழம் அதிகம். போதாக் குறைக்கு மணல் வேறே. உள்ளே மாட்டினா சிக்க வச்சிடும்."

"அப்ப இங்க ஒரு பாலம் கட்டலாமே? ஏன் இதுவரை அதை யாரும் யோசிக்கலே?"

கேசவன் கேட்டான்.

"ஆரம்பிச்சாங்களே. அதோ அங்கே பாருங்க."

கேசவன் அவன் காட்டிய திசையில் பார்க்க, காலே அரைக்கால் பகுதி பணி தீர்த்த ஒரு கருப்பு மேடை ஆற்றுக்குள் துருத்திக் கொண்டிருந்தது.

"சர்க்கார் மாறிப் போனதும் ஊழல் புகார். விசாரணை. பாலம் அப்படியே நின்னுடுச்சு."

கிழவன் மறுபடி சிரித்தான். புகை வலித்து முடிந்த யாரோ திரும்பப் போக வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்த சத்தத்தில் அது அமுங்கி ஒலித்தது.

"பாலம் வராததும் ஒரு விதத்திலே நல்லதுதான். நானும் இன்னும் ரெண்டு பேரும் எப்பவும் போல இங்கே பரிசல் ஓட்டி ஜனங்களை இக்கரைக்கும், அக்கரைக்கும் கொண்டு விட்டுட்டு இருந்தோம். ஒரு அணாதான் வாங்கறது. மழைக்காலத்திலே கூட ஒரு அணா."

அணாக் கணக்கில் பேசும் கிழவன். கட்ட ஆரம்பித்த பாலமும் அவனைப் போலவே எத்தனை வருடமாக இப்படிக் கிழடு தட்டி நிற்கிறதோ.

"பாலம் பாதியிலே நின்னதும் சர்க்கார் இலவச படகு சர்வீஸ் ஆரம்பிச்சது. அப்போ ஏதோ எலக்ஷன் கூட வந்தது. தெரியுமோ அதெல்லாம் உங்களுக்கு?"

கேசவனுக்கு அதொண்ணும் தெரியாது. அவன் பிறப்பதற்கு முன்பே நடந்த பலதில் அதுவும் ஒண்ணாக இருக்கலாம்.

"அக்கரையில் பிரார்த்தனைக்குப் போறீங்களா?"

"இல்லை" என்றான் கேசவன். அந்தப் பதிலில் கிழவனுக்கு நிராசை என்று அவன் முகத்தில் தெரிந்தது.

அவன் சணல் மூட்டையைச் சற்றே திறந்து கேசவனுக்குக் காட்டினான் உடைந்த கண்ணாடித் துண்டுகள் உள்ளே நிறைந்து கிடந்தன. கேசவனுக்கு வெகுவாகப் பழக்கமானவை அவை.

"அங்கே பிரார்த்தனை செய்தால், இதெல்லாம் திரும்ப முழு போத்தலாகிறது."

கிழவன் கேசவனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தபடி சொன்னான்.

நம்ப முடியாது என்பதாகத் தன்னிச்சையாக மறுத்துத் தலையாட்டினான் கேசவன். தனக்கு விதிக்கப்பட்ட ஏதோ காரியத்தைச் சரியாக நிறைவேற்றாத குற்ற உணர்வோடு அவன் கண்கள் ஆற்று நீர் வீசியெறிந்து போகும் அலைகளில் நிலைத்திருந்தன.

கிழவன் தோளில் தொங்கிய துணி சஞ்சியிலிருந்து எதையோ எடுத்தான். பழைய போத்தல். இங்கே சின்னச் சின்ன சோடா பானத் தயாரிப்பு நிறுவனங்கள் கறுப்பும்; சிவப்பும், ஆரஞ்சு வர்ணமுமாகத் திரவங்களை அடைத்து விற்கும் குடுவை. கேசவனுக்கு மிகவும் பழக்கமானது அந்த போத்தல்.

"இதென்ன நாலைஞ்சு கம்பெனி பாட்டிலை ஒட்டிச் சேர்த்தமாதிரி இருக்கே?"

கேசவன் குரலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை மீறி ஒரு சிறிய நிம்மதி தென்பட்டது.

"ஆனா என்ன? இது விலை போகும். மண்ணெண்ணெயோ, பிரார்த்தனை முடிஞ்சு தர தைலமோ எடுத்துப்போக இதை ஐம்பது காசு கொடுத்து வாங்கறாங்க."

அக்கரையில் சம்பளம் வாங்கியதும் கேசவனும் பிரார்த்திப்பான் நாளைக்கு மோட்டார் சைக்கிளில் இங்கே படகேற வருகிறவர்களுக்கு நேரத்தில் படகு கிடைக்கும். அவனுடைய கம்பெனியின் குளிர்பானம் குடிக்க அவர்களில் சிலருக்காவது விருப்பம் உண்டாகும். தற்காலம் ஆகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதும், சர்வதேச அளவில் எல்லா வயதினரும் விரும்பி வாங்கி வருடத்தின் பனிரெண்டு மாதமும், நாளின் இருபத்துநாலு மணி நேரமும் குடித்துச் சுகப்படுவதுமானது.

"படகு வந்தா இந்த மூட்டையிலிருந்து ஒரு அஞ்சு ரூபாயாவது சம்பாதிக்கலாம். அதுக்குள்ளே பிரார்த்தனை முடியாம இருக்கணும்.

கிழவன் பெருமூச்சு விட்டான்.

"பிரார்த்தனை எங்கே நடக்கறது?"

கேசவன் கேட்டான்.

"ஒரு பழைய கட்டிடத்திலே. முப்பது பேருக்கு மேலே உள்ளே இருக்க முடியாது. நான் போகிற போது வெளியே தான் நிக்க வேண்டி வருது. இப்ப நாலஞ்சு கூட்டிச் சேர்க்காமே ஒரே போத்தலோட துண்டுகள் மட்டும் ஒண்ணாச் சேரத்தான் போறது. சீக்கிரமே. ஒரு தடவை உள்ளே போய் பிரார்த்தனை செய்தாப் போதும். அந்தப் போத்தல் ஒரு ரூபாய்க்குப் போகும். கம்பெனிக்காரனே வாங்குவான்."

அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு ஞாயிற்றுக் கிழமை விடிகாலையில் பிரார்த்தனைக்குப் போகும் போது அவன் திரும்ப நடக்கவும் தொடங்குவான். அப்புறம் இந்தத் தாங்கு கட்டை தேவையிருக்காது. இன்னொரு கோணிப்பையைச் சுமந்து போய் முழு போத்தல்களாக்க அவன் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குள் அக்கரையில் படகு சரியாகி இருக்க வேண்டும்.

கிழவன், தோளில் மாட்டியிருந்த துணிப்பையை மறுபடி திறந்தான். உலர்ந்த இரண்டு பன் துண்டங்கள் அழுக்கு கண்ணாடிக் கடுதாசில் பொதிந்து இருந்த சிறு பொட்டலத்தைப் பிரித்தான்.

"அதோ அந்த உசந்த கட்டிடம் இருக்கே. அதுக்குப் பக்கத்திலே தான் நான் குடியிருந்தது. வெகு நாள் முன்னாடி."

அவன் பன்னைப் பிய்த்துத் தின்றபடி அக்கறையை நோக்கிக் கைகாட்டினான். கேசவன் அந்தக் கட்டிடத்தைப் பார்த்தான். அவன் அங்கேதான் போக வேண்டும். சம்பளம் வாங்க வரச் சொல்லியிருக்கிறார்கள். படகு வராவிட்டால் அவர்கள் கதவு அடைத்துக் கொண்டு போய்விடலாம்.

"அக்கரையிலே வீடு. வீடுன்னா செங்கல் வச்சுக் கட்டினது ஒண்ணும் இல்லை. ஓலைக் குடிசை தான். அங்கே போய்ப் பத்து நிமிசமாவது பார்த்துக்கிட்டே நிப்பேன். அப்புறமாத்தான் பிரார்த்தனைக்குப் போறது."

"இப்ப யாரு இருக்காங்க அங்கே?"

கேசவன் கிழவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்த படி இருந்தான். படகு வராததால் ஏற்படும் படபடப்பைக் குறைக்க யாரோடாவது ஏதாவது வார்த்தை சொல்லிக்கொண்டு நேரம் கடத்த வேண்டியிருக்கிறது."

"யாரும் இல்லே. எதுவும் இல்லை. அப்பப் பரிசல் வச்சிருந்தேன். வீட்டுக்காரி இருந்தா. கால்லேயும் கையிலேயும் வலு இருந்தது. ஒண்ணும் இல்லே இப்போ."

இன்னும் சில அற்புதங்கள் நிகழட்டும். முழு போத்தலோடும் ஊனம் நிவர்த்தியான காலோடும் கூடவே அவனுக்குக் குடிசையும் படகும் திரும்பக் கிட்டலாம், வீட்டுக்காரி?

"ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் என்னோட தான் டவுண்லே குப்பை பொறுக்கினா. அரை வயிறும் கால் வயிறும் கிடைச்சதைத் தின்னா. அடைச்ச கடை வாசல்லே போலீஸ்காரன் விரட்டற வரைக்கும் படுத்துத் தூங்கிட்டுக் கிடந்தா. அப்படியே போய்ச் சேர்ந்தாச்சு."

கேசவனுக்கு இப்போது என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானமாகப் புலப்படவில்லை. மௌனமாக இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அணைந்த தீக்குச்சியை ஜாக்கிரதையாகப் படிக்கல்லில் வைத்தான்.

"குடிசை இருந்த இடத்துப் பக்கத்துலேதான் பழைய பூட்டு சாவி விக்கற கடை. அங்கே போத்தல் மூடியும், கார்க்கும் கூடக் கிடைக்கும். வாங்கித் துணி சஞ்சியிலே வஞ்சுக்கிட்டு பிரார்த்தனை. அப்புறம் போத்தல். போத்தலை மூடி அடைச்சுட்டு அங்கேயே வாசல்லே உக்காரணும். வித்து முடியச் சாயங்கால மாயிடும். படகிலே இக்கரை வந்து திரும்ப டௌண் தெரு முழுக்க குப்பையத் தேடணும். ஆமா, நீங்க என்ன தொழில் பண்றீங்க?"

கேசவன் சும்மா சிரித்தான். அப்புறம் குளிர்பான கம்பெனி பெயரைச் சொன்னான்.

"ஆபீசரா?"

"ஆமா."

எக்சிக்யூடிவ் என்றால் ஆபீசரும்தான். கிராமம் கிராமமாகச் சுற்றி நடந்து அங்கங்கே தங்கி உள்ளூர் சரக்கான குளிர்பானங்களை மொத்தமாக வாங்க வேண்டிய வேலை ஆபீசர் வேலைதான். அந்தப் போத்தலை எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து எறிய வேண்டியதும் அதிகாரிப் பணிதான். உடைந்த போத்தலுக்கும் சேர்த்துக் காசு கொடுத்து அடுத்த கிராமத்தை, சிறு நகரத்தைத் தேடிப் போக வேண்டியதும் அதிகாரிப் பணியில் அடக்கம்தான்.

சின்னச் சின்ன உள்ளூர் கம்பெனி எல்லாம் சக்கரைத் தண்ணி உண்டாக்கி விக்கறதுக்கு ஆதாரமே இந்தப் போத்தல்தான். போத்தலை எல்லாம் உடைச்சு அழிச்சுக் குப்பையிலே வீசினா, அவங்க அடுத்து அடைச்சு விற்க ஏதுமில்லா ஆயிடும். அடைச்சுப் பூட்டிட வேண்டியதுதான். அப்புறம் நம்ம கோலாதான் எங்கேயும்.

கம்பெனியில் சேர்ந்த புதிதில் வகுப்பெடுத்தது நினைவுக்கு வந்தது கேசவனுக்கு. டையைக் கட்டிக் கொண்டு கிளம்புவது கிராமம் கிராமமாக பாட்டிலை வாங்கி உடைக்கத்தான் என்பது கொஞ்சம் அவமானமாக இருந்தாலும் கிடைக்கிற சம்பளத்துக்காக எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. படகு வந்தால், அக்கரைக்குப் போனால், கிழவனின் குடிசை இருந்த இடத்துக்கு அருகே உயர்ந்த கட்டிடத்தில் அலுவலகம் திறந்திருந்தால் அவன் செலவு கணக்கு சமர்ப்பிப்பான். சம்பளமும், படிப்பணமும் இதர செலவினமும் எல்லாம் கிரமமாகக் கிட்டும். போன வாரம் போத்தலை உடைத்த போது கையில் கண்ணாடிச் சில்லு கீறி ஏற்பட்ட சிறு காயத்துக்கு ஊசி குத்திவைத்ததற்கும் சேர்த்து.

நீந்தி வந்த இளைஞன் கரையேறினான்.

"இன்னிக்கு படகு சரியாகாது. நாளைக்கு விடிகாலை வாங்க."

அவன் உரக்க அறிவித்துவிட்டுத் திரும்ப ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தான்.

மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஒவ்வொரு வராகத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இங்கே எலுமிச்சை ரசம் குடித்து, புகை வலித்துப் போக மட்டுமே வந்ததாகவும் அது முடிந்தவுடனே தற்போது திரும்பிப் போவதாகவும் எது குறித்தும் ஏமாற்றமில்லை என்றும் தோன்ற, வண்டிகளில் ஹார்ன் உச்சத்தில் ஒலியெழுப்பியபடி போனார்கள்.

நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவன் மட்டும் இன்னும் திவிரமாகப் படிப்பதில் மூழ்கி இருந்தான். அவன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தைப் படித்து முடித்ததும் கிளம்புவான் என்று கேசவன் கிழவனிடம் சொன்னான். இந்த முறை அவன் சத்தத்தைக் குறைக்க பிரயத்தனப்படவில்லை.

"சரி, போகலாம். இனிமே அடுத்த வாரம்தான். இன்னும் அஞ்சாறு போத்தலுக்காவது கண்ணாடிச் சில்லு கிடைச்சுடும் அதுக்குள்ளெ."

கிழவன் கிளம்பினான். கேசவனும் எழுந்து கொண்டான்.

கிழவன் தலையில் அந்தச் சாக்கு மூட்டை ஏற்ற உதவினான் அவன். ஊன்றுகோலை எடுத்துக் கையில் கொடுத்தான்.

"உங்க கம்பெனியிலே உடைஞ்ச போத்தலை எல்லாம் என்ன பண்றீங்க?"

"கட்டை ஊன்றி இன்னொரு கையால் தலையில் மூட்டையை அணைத்துப் பிடித்தபடி முன்னால் நடந்த கிழவன் திரும்பிப் பார்த்துக் கேசவனைக் கேட்டான்.

"அதெல்லாம் உடையவே உடையாது."

கேசவன் சொன்னபோது அவனுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது.

அக்கரையில் உயர்ந்து நின்ற கட்டிடத்தை இன்னொரு தடவை பார்த்தபடி அவன் மெல்ல நடந்தான்.

நன்றி : உயிர்மை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link