சிறுகதைகள்


சூரியன் உதிக்காத கிழக்கு

கூடல்.காம்

அன்றைய பொழுது இயல்பாகத்தான் விடிந்தது. பெரும் மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதும் வானத்தில் தென்படவில்லை. முந்தைய மாலைச் செய்திகளிலோ வானிலை அறிக்கைகளிலோ எந்த அதிகப்படி தகவலுமில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை மக்கள் அறியத் துவங்கியபோது பெருத்த ஆச்சரியமடைந்தனர்.

அந்த நாளின் துவக்கத்திலிருந்தே அதுவும் தொடங்கிவிட்டிருந்தது. முதலில் அதை யாரும் உணரவில்லை. அதை அறியத் துவங்கியபோது அது ஏதோ தற்செயலான ஒன்றுதான் என எண்ணினர். ஆனால் அந்த நாள் நீளத் தொடங்கியபோதும் அது தொடர்ந்தது. யாராலும் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

காலைச் செய்தி அறிக்கைகளில்தான் அது வெளிப்படையாகத் தெரிந்தது. அலுவலகம் கிளம்பும் அவசரத்துடன் சிற்றுண்டியை உண்டபடியே டி.வியில் காலைச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் கனகலிங்கம். வானிலை அறிக்கை முடிந்து மீண்டும் தலைப்புச் செய்திகள் துவங்கிய போதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். நாசூக்காக அவர் வாய்க்குள் திணித்த ஆஃப் - பாயிலில் இருந்து ஒரு சொட்டு மஞ்சள் கூழ் அலுவலகத்துக்கென அணிந்திருந்த உடையில் விழுந்ததைக்கூட லட்சியம் செய்ய முடியாத அளவுக்கு அந்த மாற்றம் அவருக்கு பெரு வியப்பைத் தருவதாக இருந்தது.

"மைதிலி பார்த்தாயா இன்றைய டி.வி நியூஸில் ஒரு விளம்பரம் கூட வரவில்லை." அவர் உள்ளறையை நோக்கி ஆச்சரியத்துடன் குரல் கொடுத்தார்.

உள்பாவாடை முடிச்சை அப்போதுதான் முடிந்திருந்த மைதிலி எந்த அவசரமும் காட்டாமல் டர்க்கி துண்டு ஒன்றை மேலே போட்டுக் கொண்டு வரவேற்பரைக்கு வந்தார். செய்தி அறிக்கை முடிந்து தொலைக்காட்சி அறிவிப்பாளர் வியாபார உலகம் நிகழ்ச்சியில் அன்று இடம்பெறப் போகும் பிரிவுகளை முன்னறிவித்துக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் முடித்ததும் ஒரு இன்ஜின் ஆயில் விளம்பரமோ, டயர் கம்பெனி விளம்பரமோ வரும்.

டயர் கம்பெனியின் "உங்கள் கார்களுக்கு சிறகு பொருந்துங்கள்" என்ற படி கிராபிக்ஸில் சிறகாக இருந்து வட்டவடிவ டயராக மாறும் விளம்பரம்கூட அவர்களது மனத்திரையில் அனிச்சையாக ஓடியது. ஆனால் விளம்பரம் ஏதுமின்றி நிகழ்ச்சி தொடர்ந்தது. மைதிலியும் ஆச்சரியமடைந்தாள். கனகலிங்கம் மஞ்சள் கரு கறையுடனே அலுவலகம் கிளம்பினார்.

"என்னவாயிற்று இந்த விளம்பரங்களுக்கு? கார்ப்பரேட்டுகள் இனி வியாபாரத்தைத் தொடரப்போவதில்லை என முடிவெடுத்தாயிற்றா?" மக்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் மிக்கவர்களாகப் பேசிக் கொண்டனர். அன்று எந்தத் தொலைக்காட்சியும் விளம்பரங்களை ஒளிபரப்பவில்லை. நீண்ட விளம்பரங்கள், ஒரு வரி விளம்பரங்கள், மின்னல் நேர விளம்பரங்கள். திரையினடியில் நகரும் சிறு விளம்பர வரிகள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. வழக்கமான ஸ்பான்ஸர்ஷிப் நிகழ்ச்சிகள் கூட விளம்பரங்கள் இல்லாமலே ஒளிபரப்பாயின. "எய்ட்ஸை தடுக்க ஆணுறை உபயோகியுங்கள்," "இன்னின்ன தேதியில் போலியோ சொட்டு மருந்து போடுங்கள்" போன்ற அரசு சார் விளம்பரங்கள் கூட ஒளிபரப்பாகாததுதான் இன்னும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விளம்பரங்கள் இல்லாத காரணத்தால் தொலைக்காட்சிகள் ஒரு வினோத, ஆனால் தவிர்க்க முடியாத பிரச்சினையைச் சந்தித்தன. விளம்பரங்கள் இன்மையால் நிகழ்ச்சிகள் சீக்கிரமே முடிந்தன. அடுத்த நிகழ்ச்சியை முன்னறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே ஒளிபரப்ப வேண்டியிருந்தது. நேரத்தை இட்டு நிரப்ப சில நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. செய்தி அறிக்கைகள் தவிர்த்து ஏனைய நிகழ்ச்சிகள் எல்லாமே நேரப்படி ஒளிபரப்ப இயலாத நிலைக்கு ஆளாயின. விளம்பரங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய சில தொலைக்காட்சிகள் தங்களது முழு ஒளிபரப்பையுமே ரத்து செய்திருந்தன.

சில புகழ்பெற்ற தொடர்களும், நிகழ்ச்சிகளும் விளம்பரங்கள் இன்றி ஒளிபரப்பானபோது அவை எடுத்துக்கொண்ட நேரம் வெகு சொற்பமாக இருந்தது. இப்படியொரு அபத்த நிலையைத் தவிர்க்க ஒரு தொலைக்காட்சி, தான் ஒளிபரப்பும் தொடர்களின் இரண்டிரண்டு பாகங்களை ஒன்றாகச் சேர்த்து ஒளிபரப்பியது. விளம்பரங்கள் இல்லாததால். ரிமோட் கண்ட்ரோல்கள் கிட்டத்தட்ட தேவையற்றனவாகி விட்டிருந்தன..

அன்று மாலையான போது தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் இன்றி ஒளிபரப்பாகும் செய்தி பெரும்பாலான மக்களை எட்டி விட்டிருந்தது. மக்கள் இதை அக்கம்பக்கத்தாரிடம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டனர். சென்னை தீவுத் திடலில் குழுமிய ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் "வெகுஜன ஊடகங்கள் மக்கள் நல நோக்கிற்கு திரும்பிவிட்டமைக்காக" நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினம் நிறைவடையத் துவங்கியபோது உலகெங்கும் எல்லாத் தொலைக்காட்சியிலும் இதே நிலை தான் என்ற செய்தி தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், பேக்ஸ் வழியாகக் கிடைத்தன. ஆனால் தாங்கள் விளம்பரங்களைத் தவிர்ப்பது குறித்த செய்திகளை எல்லாத் தொலைக்காட்சிகளுமே திட்டமிட்டுத் தவிர்த்தன. மறுநாள் பத்திரிகைகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அடுத்த நாள், நல்லவேளை பத்திரிகைகள் விளம்பரங்களைத் தவிர்த்திருக்கவில்லை. அதோடு அவை தொலைக்காட்சிகளின் இந்த விளம்பரத் தவிர்ப்பை தலைப்புச் செய்திகளாக வெளியிட்டிருந்தன.

தில்லியிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த சாஃப்ட்வேர் கம்பெனி விளம்பரத்திற்கு அருகிலேயே இவ்வாறு தலைப்பை அமைத்திருந்தது. "தொலைக்காட்சிகளின் இன்னுமொரு பம்மாத்துதான் இந்த விளம்பரத் தவிர்ப்பு."

"இதே போல இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடர முடியுமா இவர்களால்? என ஒரு இந்திப் பத்திரிக்கை தனது தலையங்கத்தில் கேட்டிருந்தது. அதே பத்திரிக்கை தனது கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கத்தில் ஏழாவது பத்தியில் சிறு அளவில் வெளியிட்டிருந்த செய்தியை மிகக் குறைவானவர்களே வாசித்தனர். அந்தச் செய்தி இதுதான்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் வீட்டிலிருந்தபடி நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க மார்ட்டின் ரூஸ் என்பவர் திடீரென தன் மண்டையால் தொலைக்காட்சிப் பெட்டியை மோதி உடைத்தார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை உளவியல் மருத்துவர் ஒருவர் பரிசோதித்தார். திடீரென விளம்பரங்கள் இல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்ததே அவரது இந்த மனப் பிறழ்ச்சிக்குக் காரணம் என்று பிறகு அவர் தெரிவித்தார்.

தமிழ் தினசரி ஒன்றில் வெளியாகியிருந்த ஒரு செய்தியும் மிகுந்த சுவாரஸ்யமூட்டுவதாக இருந்தது. சேலம் மாவட்டத்தில் சின்னராயன் பட்டி எனும் கிராமத்தில் தாய்மார்களிடையே மாலை ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியைப் பார்த்தபடியே குழந்தைகள் சாப்பிடத் தொடங்கி நிகழ்ச்சி முடியும்போது நன்றாகச் சாப்பிட்டு விடுவார்களென்றும் கூறப்படுகிறது. ஆனால் நேற்று ஒரு குழந்தைகூட சரியாகச் சாப்பிடவில்லை. காரணம் வழக்கமாக அந்நிகழ்ச்சியின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகாததுதான் என்றும் அச்செய்தி தெரிவித்தது.

தொலைக்காட்சி உலகின் பெரும்புள்ளிகள் தொடர்ந்து மௌனம் சாதித்தனர். அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு இதில் எங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்றோ இதுபற்றி கருத்து தெரிவிக்க இயலாது என்றோ கூறியிருந்தனர்.

இரண்டாவது நாளும் தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் இன்றியே ஒளிபரப்பைத் தொடர்ந்தன.

மூன்றாவது நாளும் இது தொடர்ந்தபோது மக்களிடையே ஒருவித அசௌகரிய உணர்வு உண்டாகிவிட்டிருந்ததை கவனிக்க முடிந்தது. சென்னை வடபழனியில் மொட்டைமாடியில் வடாம் காயவைத்த படியே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர்.

"என்ன கண்றாவிடி இது, ஒரு அட்வர்ட்டைஸ்மண்ட் கூட பார்க்க முடியல"

"ஆமான் மாமி. இரண்டு நாளா கோக் விளம்பரத்துல அமீர்கான பார்க்காம எனக்குக் கூட என்னமோ மாதிரி இருக்கு."

அன்றைய பி.பி.சி செய்தி அறிக்கைகள் ஒன்றில் தொலைக்காட்சிகளின் விளம்பரத் தவிர்ப்பு பற்றிய செய்தி ஒன்று இடம் பெற்றது. ஏன், எதற்காக இந்த விளம்பரத் தவிர்ப்பு என காரணங்கள் எதையும் குறிப்பிடாமல் மேலோட்டமாக ஒரு விஷயம் மட்டும் சொல்லப்பட்டது. விளம்பரங்கள் இன்றி தொலைக்காட்சியைப் பார்ப்பது சகிக்க முடியாததாக இருக்கிறது, உடன் விளம்பரங்களை ஒளிபரப்புங்கள் எனத் தங்களது லண்டன் தலைமை அலுவலகத்துக்கு இரண்டாயிரத்து அறுநூற்று இருபது தொலைபேசி அழைப்புகளும், ஆயிரத்துப் பன்னிரண்டு மின்னஞ்சல்களும். பேக்ஸ் செய்திகள் இருநூறும், நூற்றுப் பதினான்கு பேர் நேரில் வந்தும் தெரிவித்தனர் என்பதே அச்செய்தி

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் காட்சித் தொடர்பு ஊடகவியல் பேராசிரியர் ஹர்வீந்தர் சௌராஷ்ரா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் வேறு வேறு அல்ல. இரண்டுமே மற்ற ஒன்றின் பிரிக்க முடியாத பகுதி."

அம்மூன்று நாள் நிலவரப்படி ஒட்டுமொத்த தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறைந்திருந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறின. தரப் பட்டியலில் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகக் குறைந்த பார்வையாளர் வீதத்தைக் கொண்டிருந்தன.

நான்காம் நாள் பத்திரிகைகளில் இந்த விளம்பரத் தவிர்ப்புச் செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வழக்கமான செய்திகள் முக்கிய இடம் பிடித்திருந்தன.

இந்திய மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு தினப் போட்டி கட்டக்கிலிருந்து அன்று நேரடி ஒளிபரப்பானது. சில தனியார் தொலைக்காட்சிகளும் தூர்தர்ஷனும் ஆட்டத்தை ஒளிபரப்பின. எதிர்பார்த்தபடியே ஆட்டத்தினிடையே விளம்பரங்கள் இடம் பெறவில்லை.

ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்குமான இடைவெளிகளில் காமிராக்கள், பேட்ஸ்மேன்கள் கையுறைகளைக் கழற்றுவதையும் மீண்டும் அணிவதையும், மீண்டும் கழற்றி மீண்டும் அணிவதையும், ஹெல்மெட்டை சரி செய்வதையும் ஃபீல்டர்கள் சோம்பலுடன் தொப்பியைக் கழற்றி நடு மண்டையைச் சொறிந்து கொள்வதையும், மென்று கொண்டிருக்கும் பபுள்கம்மை நாக்கு நுனிக்குக் கொண்டுவந்து பார்த்துவிட்டு மறுபடி மெல்லுவதையும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தன..

விக்கெட் விழுந்த மறு வினாடி ரீப்ளே கூட இல்லாமல் உடன் விளம்பரங்களைப் பார்த்துப் பழகிவிட்டிருந்தமையால் விக்கெட் விழுந்த பிறகும் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மேட்ச் பார்க்க வேண்டியிருந்தது.

"நான் பார்த்துக் கொண்டிருப்பது கிரிக்கெட் மேட்ச்தானா என எனக்கே சந்தேகம் வந்து விட்டது" என்றார் மேட்ச் பார்க்கவென்று சிக்லீவ் போட்டிருந்தும் விளம்பரமற்ற மேட்ச்சைப் பார்க்கச் சகியாமல் மதியமே அலுவலகம் திரும்பி விட்டிருந்த கார்ப்பரேஷன் ஆபீஸ் கிளார்க் நாராயணன்.

உலகம் முழுவதும் மூன்றிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளின் நடத்தையில் கடந்து மூன்று நாட்களாக ஒருவித மாற்றம் காணப்படுவதாக "நியூ சயின்டிஸ்ட் பத்திரிகை தான் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தது. உலகமெங்கும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அது தன் கட்டுரையை அமைத்திருந்தது. கட்டுரையின் சாராம்சம் இதுதான்.

"மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் டி.வி விளம்பரங்களால் பெரிதும் ஈர்க்கப்படுபவர்கள். டி.வி.யில் இவர்கள் நிழ்ச்சிகளை விட விளம்பரங்களையே அதிகம் ரசிப்பவர்கள். மூன்று நாட்களாக விளம்பரங்களைப் பார்க்காத காரணத்தால் இவர்களிடையே ஒருவித மனச்சோர்வு உண்டாகியுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அது அவர்களது மனநிலையை தீவிரமாக பாதிக்கக் கூடும்."

விளம்பரங்கள் ஒளிபரப்பாகாததால் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த கட்டாயம் தொலைக்காட்சிகள் விளம்பரங்களை ஒளிபரப்பியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய நாடாளு மன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக முடிவெடுத்தன.

அன்று காலை பாரீஸ் நகர உயர் போலீஸ் அதிகாரிக்க ஒரு அனாமதேயக் கடிதம் வந்திருந்தது. பெயர் அறியாத நபர் ஒருவர் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் விளம்பரங்கள் ஒளிபரப்பாக வில்லையெனில் ஈஃபில் டவரை வெடி வைத்துக் தகர்க்கப் போவதாக மிரட்டியிருந்தார்.

விளம்பரங்களைத் தொலைக்காட்சிகள் தவிர்ப்பதற்கு எதிரான குரல்கள் மெதுவாகத் தொடங்கி உலகின் எல்லாத் திசைகளிலும் இருந்து வலுவாக ஒலிக்கஆரம்பித்தன. வாடிகன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து தேசங்களின் தலைவர்களும், தொலைக்காட்சிகள் உடன் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

"மக்கள் வெகுகாலம் பழகிவிட்ட ஒன்றிடமிருந்து, ஒருவேளை அது மிகுந்த சங்கடம் தரும் ஒன்றாக இருந்தாலும் கூட, அவர்களை முற்றிலுமாகப் பிரிக்க நினைப்பது தாங்கிக் கொள்ள முடியாதது." கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் தலைவர் தனது வேண்டுகோளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த விளம்பரப் பிரச்சினையைத் தொடர்ந்து என்னென்ன விளைவுகள் எழக்கூடும், அதை சமாளிப்பது எப்படி என்பன போன்ற முக்கிய விஷயங்களை விவாதிக்க ஐ.நா சபை தனது அவசரக் கூட்டத்தை மறுநாள் கூட்ட விருப்பதாக அறிவித்தது.

உலகின் அனைத்து முக்கிய தொலைக்காட்சி நிறுவனத் தலைமையிடங்கள் முன்பும் தர்ணாக்களும் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்றதாக மாலைச் செய்திகள் தெரிவித்தன.

நாளை என்ன நடைபெறுமோ என்ற பதற்றத்துடன் நான்காவது நாள் முடிந்தது.

ஐந்தாவது நாள் சூரியன் கிழக்கிலிருந்தே உதித்தது. தொலைக்காட்சிகள் எதுவுமே நடவாதது போல, அலட்டிக் கொள்ளாமல் விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். எந்த அசௌகரியமும் இன்றி டி.வி. பார்த்தனர். ரிமோட் கண்ட்ரோல்கள் மீண்டும் அவர்கள் கைகளில் தவழ ஆரம்பித்தன.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link