சிறுகதைகள்


தீவட்டி

கூடல்.காம்
ஐந்தாம் திருவிழாவும் ஏழாம் திருவிழாவும் அங்கு விமரிசை. காளை வாகனத்தில் - கைலாச பர்வதத்தில் - சாமி பவனி வருவதும் விமரிசை. இதில் விசேடம் என்னவென்றால், அது பொருமாள் கோவில். ஆழ்வார்களால் பாடப்பெற்றது. தலைமையான ஆழ்வார் அங்கேதான் பிறந்தார் என்ற விசேடமும் உண்டு. இருந்தாலும் சிவன்தான் அங்கு கோலோச்சினார் - அந்தப் பிரதேசம் முழுவதிலும்.

மேலே சொன்ன இரண்டு உற்சவ நாள்களும் திருவிழாவில் முக்கிய தினங்களாகும். வாகனங்கள் நாலு தெருவையும் சுற்றி இறங்குவதற்குள் விடிந்து விடும். பிரபல வித்வான்கள் வரவழைக்கப்படுவர். குண்டலக் கம்பர், சுடலையாண்டிக் கம்பர் போன்றோரெல்லாம் அந்த வட்டார வாசிகளாதலால் வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை உண்டு. ராசரத்தினம் பிள்ளை வரும் அளவிற்கு இன்னும் பிரபலமாக வில்லையே என்ற குறையும் ஊர்வாசிகட்கு இருந்தது.

முதல் மூன்று நாள் விழாவும் சாதாரணமாக நடந்த பின்னர் சிறு கடைகள் தோன்ற ஆரம்பிக்கும். ரிப்பன் - பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் வந்து போவார்கள். உள்ளூர்வாசிகள் இரண்டொரு பேர் "வை - ராசா - வை" போட்டியைத் துவக்குவார்கள். கம்பராமயணச் சொற்பொழிவு, திருவிழா முடிந்த பின்னருங்கூட கோவில் அருகே தொடர்ந்து நடக்கும் ஏழாம் திருவிழாவின் போது சர்க்கஸ். எட்டாம் நாள் நடராசர் தில்லையம்பல வாகனத்தில் வருகை. அன்று ஊர் முழுவதும் எலுமிச்ச பழமும் வெல்லமும் கலந்த பானகத்தில் மிதக்கும் அடுத்த நாள் தேரோட்டம்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த சமயமெல்லாம் "பெட்ரோ மாக்ஸ்" விளக்கு அந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் வாகனம் நாலு தெருக்களிலும் ஊர்வலம் வரும்போது பெரும் பாலும் தீவட்டிதான். இந்தத் தீவட்டி விஷயத்தில் ஒரு சிறு சங்கடம் உண்டு. வாகனம் தூக்குவதற்கு ஆட்கள் உள்ளூரிலேயே கிடைப்பார்கள். அதில் கஷ்டமில்லை. இந்தத் தீவட்டி அப்படியல்ல. நாலு தெருக்களிலும் சுற்றி வருகிற வாகனத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய தீவட்டிகளைத் தூக்கிப் பிடிக்க உள்ளூர் ஆட்கள் கிடைப்பதரிது. காரணம் வெளிப்படை. இரவெல்லாம் தீவட்டி தூக்கிவிட்டு, காலையில் பல் தேய்க்க குளத்திற்கு சென்றால் தெருவில் விளையாடும் குழந்தைகள் "ஏய் - தீவட்டி " என்று கூப்பிடும். ஒன்னும் சொல்லாவிட்டாலும் பெண்களும் சிரிப்பதுண்டு. எனவே உள்ளூர் பையன்கள் தீவட்டி உத்யோகத்திற்கு முழுக்குப் போட்டு விட பெரும்பாலும் வெளியூர் பையன்கள் அந்த வேலையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் அப்படித்தானிருந்தது.

பொன்னையா பிள்ளை உள்ளூர்வாசி. கோவில் வேலை, வாகனங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு. திருவிழா காலத்தில் தீவட்டி. எண்ணெய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் யாவும் அவர் கையில் தான். தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். அத்துடன் வாகனம் புறப்பட்டு விட்டால் கூடவே சென்று அவற்றை எண்ணெயுடன் கண் காணிக்கவும் வேண்டும். தேவைப்படும் போதெல்லம் ஊற்றிக் கொண்டிருப்பது அவசியம். அவருக்கு வயிற்று வலி நிரந்தரமாக உண்டு. வைத்தியர் தருகிற லேகியத்தை எப்போதும் மடியிலேயே வைத்திருப்பார். மருத்துவத்திற்கு காசு செலவழிக்கிற அளவு சம்பளம் கிடையாது. பிள்ளைகள் ஆறு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டிச் சோறு கோவிலில் தருவார்கள். பெரும்பாலும் அதைச் சாப்பிட்டுத்தான் குடும்பம் நடந்தது. இந்த நிலையில் மருத்துவச் செலவுக்கு ஒரு வகையில் தீவட்டி உதவிற்று.

அது விசேடமான கதை. கீழ்த் தெரு குளத்தங்கரைப் பக்கம். தெரு பரந்து கிடக்கும். ஐந்து, ஏழு திருவிழா வாகனங்கள் வந்து நின்றால், கிட்டதட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடும். நாதசுர வித்வான்களின் திறமை வெளிப்பட வேண்டிய இடம். ஊரின் இளைஞர் சிலர் நேரடியாகவே சொல்லி விடுவார்கள். "அண்ணன் வாசிப்பை இந்தத் தெருவில் தான் பாக்கணும்." அப்படின்னு. பொன்னையா பிள்ளையின் திறமையையும் அந்த நிமிடத்தில்தான் பார்க்க வேண்டும்.

கீழத் தெருவில் முடுக்குகள் அதிகம். பொன்னையா பிள்ளையின் வீடும், நடுமுடுக்கில் தான் இருக்கிறது. அங்குள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் சாமி தரிசனத்திற்காக கீழத்தெரு சந்திக்கும் இடத்தில் கூட நிற்பார்கள். அந்த இடத்தில் தீவட்டி அவசியம் என்று ஒருவனை எப்போதும் நிறுத்தி வைப்பர். புதிய ராக ஆலாபனை ஒன்றை நாதசுரக்காரர் ஆரம்பிக்க, வாகனம் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால், நிறைய தடவை தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டியது அவசியம். அப்படி ஊற்றும் போது, தீவட்டிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் பெண்மணிகளை "பேத்தி" என்றோ, "மருமகளே" என்றோ, "அக்கா" என்றோ அழைத்து அவர்கள் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தில், இரண்டு மூன்று கரண்டி "தேவஸ்தான எண்ணெயை ஊற்றுவார் அப்போதே அந்தப் பெண்களில் சிலர் சில்லறையை அவர் கையில் தந்து விடுவதுண்டு. இல்லை யென்றால் அடுத்த நாள் காலை முதல் வேலையாக அவர்கள் வீடு சென்று அதைப் பெற்று, ஒரு செம்பு கருப்பட்டிக் காபியையும் பருகி வருவார். இதை யெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ளும் மனோபவத்தில் ஊர் மக்கள் எல்லாரும் இருக்கவில்லை.

அந்த ஆண்டு திருவிழாவிலும் கீழத் தெருவில் கைலாச பர்வத வாகனம் வந்து நிற்கிறது. நாதசுரக்காரர்கள் திறமையைக் காட்ட முனைகின்றனர். நடு முடுக்கின் பகுதிக்கு பெண்கள் வரத் தொடங்கவே, பிள்ளைவாள் அந்தப்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கிற தீவட்டி யாரெனப் பார்க்கிறார்.

அடையாளம் தெரியாத பையனாக அவன் இருந்தான். அருகில் சென்று பார்த்தால் புதுப்பையன்.

"யார்லே நீ?"

எனக்கு வெள்ள மடம் அண்ணாச்சி - பேரு முத்துக் கறுப்பன்.

"எங்கலே அந்தப் பய வேலப்பன்"

"சீக்கிரமா சோத்தைத் திண்ணுகிட்டு வந்துருதேன் அப்படின்னு போயிருக்கான் அண்ணாச்சி. வாகனம் இன்றைக்கு இறங்க நேரமாகும். தீவட்டியைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ வந்துருதேன் அப்படின்னு இப்பத்தான் போனான்" தெளிவாகப் பதில் சொன்னான் அந்த பையன்.

"அதுதானே பார்த்தேன். சரி, இறக்கிப் பிடி" என்று எண்ணெய் ஊற்றத் தயாரானார் பிள்ளை.

"இல்லை அண்ணாச்சி - இப்பத்தான் அவரு வந்து எண்ணெய் ஊத்திப் போனாரு"

பிள்ளைவாளின் உதவியாளன் ஏற்கெனவே ஒரு சுற்று வந்து எண்ணெய் ஊற்றி விட்டு போய் விட்டதைக் கூறினான் பையன்.

நாதசுர ராக ஆலாபனை ஒரு நிசப்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பையனுடன் சப்தமிட்டுப் பேசினால், அது நல்லதல்ல. அவர் பேசாது வேறொரு பக்கம் சென்றார். நடுமுடுக்கு வாசிகளும் அன்று நாதசுர இசையை மட்டுமே கேட்டுச் சென்றனர், காலிப்பாத்திரங்களோடு.

பொன்னையா பிள்ளை ஓய்வு பெற்றபோது, கீழூருக்கு மின்சாரம் வந்து விட்டது. இப்போது எதிலும் ஓர் அசிரத்தை, வீட்டு விஷயங்கள் எப்படியெல்லாமோ ஆகி விட்டது. முத்தமகள் அறுத்துக் கொண்டு அப்பா வீட்டிற்கு வந்து விட்டாள். அடுத்த இரண்டு பெண்களும் உள்ளூரிலேயே கட்டிக் கொடுக்கப் பட்டாலும், கிட்டத்தட்ட அப்பா வீட்டிலேயே இருந்தனர். அதில் ஒருத்திக்கு புருஷன் முகமே மறந்து விட்டது. பையன்களில் ஒருவனுக்கு சுசியந்திரம் கோவிலில் வேலை. இன்னொருவன் உழவுக்குப் போய் வருகிறான். கடைசிப் பையன் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகிறேன் என்று சோறு கட்டிக் கொண்டு அதை ஆற்றங்கரையில் சாப்பிட்டு, மாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். விஷயம் வெளியாகி அப்பாவிடம் வாங்கிய அடியில் ஊரை விட்டுப் போனவன்தான். மனைவிக்கு இடைவிடாத இருமல்; சற்றேறக் குறைய எல்லா நோய்களும் உண்டு. மனிதர் மிகவும் நொந்து போயிருந்தார்.

"யத்தான்" என்று அழைத்தபடி வந்தார் மாடசாமி-எதிர் வீட்டுக்காரர்.

"யாரோ வெள்ளைக்கார தொரை அத்தான் - ஒங்களைப் பாக்கணுமாம்"

"என்னைப் பாக்கணுமா! மாடசாமி கொஞ்சம் விவரமா சொல்லுடே எனக்கு ஒடம்பெல்லாம் படபடக்குது பாத்துக்கோ."

"கூட வந்திருக்கறது தேரூர் மூத்த பிள்ளை மகளைக் கட்டியிருக்கறவன். அவனும் வெளிநாட்டிலே வேலையிலே இருக்கிறானாம். திருவிழாப் பத்தி ஏதோ கேக்கணுமாம்.

பொன்னையா பிள்ளையின் மனைவி இருமலுடன் "ஏட்டி இந்தப் பிள்ளையைக் கொஞ்சம் உள்ளே எடுத்துக்கிட்டு போ மூக்கைச் சிந்து" என்று மகளைக் கூப்பிட்டாள்.

வந்தவரில் வெளிநாட்டுக்காரர் உயரமாக இருந்தார். போலந்து நாட்டுக்காரர். தெளிவான உச்சரிப்புடன் வணக்கம் சொன்னார். உடன் வந்த உள்நாட்டுக்காரர் அறிமுகம் செய்து வைத்தார்.

"அண்ணாச்சி, இருபத்தஞ்சு வருசம் முன்னே இங்கு வந்திருக்கேன். அடிக்கடி கோவிலுக்கும் வருவேன்.

"அப்படியா இருங்கோ. ஏட்டி, ஒரு பாய் எடுத்து இப்படி போடு."

வெளிநாட்டுக்காரர் தூய தமிழில் பேச, உள்நாட்டு அதை நாஞ்சில் நாட்டு வழக்கில் மொழி பெயர்த்தது.

"அண்ணாச்சி, இவாள் வந்து நம்ம தமிழ்நாட்டுத் திருவிழா பத்தி புத்தகம் எழுதறாரு. அதுக்கு சில விவரமெல்லாம் வேணும். நான் இப்ப இவாள் கூட அங்க காலேஜ்லேதான் வேலை பாக்கறேன். மாடசாமி மாமாகிட்டே கேட்டேன்; ஒங்களைப் பத்திச் சொன்னாரு திருவிழா சம்பந்தமா நிறைய விஷயம் கேட்டுத் தெரிஞ்சாச்சு. அதுலே இந்த தீவட்டி இருக்குது பாருங்க, அது சம்பந்தமா ஒங்ககிட்ட கேக்கணுமாம்."

பொன்னையா பிள்ளை முதலில் வெலவலத்துப் போனார். அப்போது போலந்தின் குரல் ஒலித்தது.

"ஐயா தாங்கள் தீவர்த்தியைப் பயன்படுத்தும் முன்னர், அவற்றிற்கு பூசனை செய்வதுண்டா? தீவர்த்தி திரிசூல அடையாளம், தீபம் சிவலிங்கம் அல்லவா?"

பொன்னையாய் பிள்ளை சமாதானமடைந்தார். தீவட்டியில் இவ்வளவு விஷயம் உள்ளதா என்று ஒரு பெருமிதமும் கொண்டார். பிறகு தைரியமாகப் பேசினார்.

"ஆமாமா. கும்பிடு போட்டு விட்டுத்தான் வேலையை ஆரம்பிப்போம். ஒரு வாரத்துக்கு முன்னமேயே பழந்துணி எல்லாத்தையும் வாங்கி வைச்சுடுவோம். அது நாலு தெரு வீடுகள்லேயே கிடைக்கும். போதாதுன்னா காசு குடுத்து வாங்குவோம். மீதி வந்தா, அப்படியே கட்டி வைச்சுடுவோம். அடுத்த வருசம் உதவும் வீணாக்கப்படாது."

மொழிபெயர்ப்பு எதுவும் தேவைப்படவில்லை.

"எண்ணெய்" என்று ஆரம்பித்தார் போலந்து. "அது நிறைய வீணாகும் அல்லவா?" என்றும் கேட்டார்.

"சேச்சே பேசப்படாது. ஒரு சொட்டுக்கூட வீணாப் போகாது. தீவட்டிக்கு எண்ணெய் ஊத்தற சமயம் நீங்க பாருங்களேன்.

சட்டியைக் கீழே கவனமா வைச்சு ஊத்துவோம். தரையிலே ஒரு சொட்டுக் கூட சிந்தாம கவனிக்கணும். கோவில்லே எந்தப் பொருளும் வீணாகாது; வீணாக்கக் கூடாது."

"நன்றாகச் சொன்னீர்கள். "சிவன் சொத்து குல நாசம்" என்று பழமொழியே இருக்கிறதல்லவா."

"ஆமாம்" என்றார் பொன்னையா பிள்ளை. உள்நாட்டுக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

"தேரூர் மூத்தபிள்ளை மருமகனா நீ... நீங்க" என்று கேட்டார். "எந்த ஊரு" என்றும் விசாரித்தார்.

"எனக்கு வெள்ளமடம் அண்ணாச்சி. ஒரு தடவை இங்க தீவட்டிக் கூட பிடிச்சிருக்கேன்."

போலந்துக்காரர் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

நன்றி - தீராநதி.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link