சிறுகதைகள்


ஓசை

கூடல்.காம்
மரக்காணம் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது வானம் லேசாக இருண்டிருந்தது. காற்று இறுகி உறைந்துவிட்டது போலிருந்தது. பகல் மூன்று மணிக்குரிய வெயில் இல்லை என்றபோது முழுக்கை சட்டைக்குள் புழுக்கத்தை உணரமுடிந்தது. கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடல் எப்போதுமில்லாத மௌனத்தில் இருந்தது. அதன் அலைகள் சோம்பலாகப் புரண்டுகொண்டிருந்தன.

எதுவோ விரும்பத்தகதாது நடக்கப்போகிறது என்றது உள்மனம். premonition. அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது. ஏதோ மாயக் குரலொன்றுக்குப் பணிந்து அச்சமூட்டும் இருண்ட குகையினுள் நுழைகிறேன். கால்பட்டு உருளும் சிறு கல்லும் சொல்லொண்ணாத பீதியைத் தருகிறது. எதிர்பாராத கணத்தில் குறுக்காகப் பறக்கும் வெளவால் இதயத்தை உலுக்கிவிடுகிறது. இருள் பூசிய குகைச் சுவர்களிலிருந்து அச்சம் வழிந்த படியிருக்கிறது. தைரியமனைத்தையும் திரட்டி சட்டெனத் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிடுகிறேன். எவ்வளவு நிம்மதி. ஒத்திகை கச்சிதம். ஆசுவாசமாகவும் இருக்கிறது. செயல்படுத்த நினைக்கும் தருணத்தில் சுற்றிலுமுள்ள காற்று திண்மமாகிவிடுகிறது. அடிவயிறு குழைந்து கால்கள் தள்ளாட்டம் கொள்கின்றன. கண்களில் நீர் முட்டுகிறது. குகை வழி முடிவற்றுப்போய்க் கொண்டேயிருக்கிறது.

ராஜேஷிடம் சொன்னால் மிகத் தயாராக வைத்திருக்கும் பதிலை, அதைக்காட்டிலும் சரியான பதில் வேறொன்று இருக்கமுடியாது என்பது போன்ற தோரணையில் சொல்வான். எல்லாம் உளவியல் சிக்கல் என்பான். நிச்சயம் ப்ராய்டோ, யுங்கோ அவன் உதவிக்கு வருவார்கள். "தட்ஸ் நத்திங்." முன்கூட்டியே உலகின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் முடிவில்லாத எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு சுவிட்ச்சுகள் போன்ற பொத்தான்களை அழுத்தியதும் தடையில்லாது கொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதென அவன் உறுதியாக நம்புபவனாக இருக்கவேண்டும்; அதுமட்டுமில்லாமல் எந்தச் சிக்கலுக்கு எந்தப்பொத்தானை அழுத்த வேண்டுமென்பதை அறிந்த திறமைசாலியாகவும் அவன் தன்னை எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்.

வெளிர்பச்சை உடம்பில் மங்கிய வெள்ளை எழுத்துகளோடு கிழக்குக் கடற்கரைச் சாலை பேருந்து வந்தது. அதில் ஏறுவதன் மூலம் இந்த மன உளைச்சல் அகன்று போகலாம் என்ற நினைப்பு நிம்மதி தருவதாக இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலைப் போருந்துகள் என்ற ஈ.சி.ஆர். பேருந்துகள் மரக்காணத்திலிருந்து பாண்டிச்சேரி போகும் வழியிலுள்ள கணக்கிட முடியாத நிறுத்தங்களில் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நிற்கும். நின்று நின்று போகும் பஸ்ஸில் பயணிப்பது மாதிரியான அவஸ்தை வேறெதுவுமில்லை. பயணம் என்றாலே வேகம் என்றுதான் மனதில் பதிந்திருக்கிறது. இந்த பஸ் வந்தது அதிர்ஷ்டம் தான்.

அன்று வெள்ளிக்கிழமை. வாரக்கடைசி என்பதால் சென்னையிலிருந்தே மிகுதியான கூட்டத்துடன் வந்துகொண்டிருந்தது பஸ். தோளில் மாட்டிய பையுடன் நிற்பது அசௌகரியமாக இருந்தது. இரு மருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் நகர கருவாழைப் பட்டையென மின்னிய சாலையில் பேருந்து வேகமெடுத்தது ஓட ஆரம்பித்தது. சாலையை நிர்மாணிக்கும் பொறுப்பையேற்றிருந்த "அஃப்கான்ஸ்" நிறுவனம் தனது ரத, கஜ, துருக, பதாதிகளுடன் முகாமிட்டிருந்தது. தற்போது புழுதி மண்டிய பொட்டல் வெளியாக கிடக்கும் மைதானத்தைக் கடக்கும்போது மரக்காணம் எல்லை முடிகிறது.

பேருந்து மண்டவாயைத் தாண்டும்போது மறுபடி அந்த எண்ணம் மனதைக் கவ்விப் பிடித்தது. சாலையோர பென்சில் மரங்களிலும் அவ்வப்போது தென்படும் சிறு தாமரைக்குளங்களிலும் கவனத்தைக் குவித்து இந்த அவஸ்தையினின்றும் விடுபடலாமென்றால் முடியவில்லை.

இப்போது ராஜேஷ் அருகில் இருந்து அவனிடம் இதைச் சொன்னால் கன்னக் கதுப்புகள் அதிரச் சிரித்து " போடா முட்டாள்!" என்பான். "உனக்கு மனப்புழுக்கம் ஜாஸ்தி. சதா கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய். உட்புழுங்கி உட்புழுங்கி மனம் நைந்து போய் விட்டது. எதையெடுத்தாலும் பதற்றம். ஜன்னலைத் திற. கொஞ்சம் காற்றாவது வெளிச்சமாவது உள்ளே வரட்டும். நன்றாக மூச்சை இழுத்து விடு. சோம்பல் முறித்துவிட்டு இப்படியே கொஞ்சதூரம் ஓடிவிட்டு வா. முடிந்தால் என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு. பிறகு உலகமே ஒரு பூந்தோட்டமாகி அதில் நீயொரு பட்டாம்பூச்சியாகி விடுவாய்."

அவனது பேச்சுகளில் "என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு" என்பதை சாமர்த்தியாகப் புகுத்திவிடுவான் ராஜேஷ்.

"கவ்விப் பிடிக்கறா மாதிரி முதுக வலிக்குதுடா" என்று புகழேந்தி சொன்னால் "மெத்தையை விட்டு வெறுந்தரையில் தலைகாணி இல்லாமல் படு. சரியாகப்போகும். இல்லையானால் என்னை நினைத்து ஒரு பீர் சாப்பிடு" என்பான்.

அவன் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சொற்றொடர் அவன் பேச்சுக்கு ஒருவித அமானுஷ்யத் தன்மையையும் கவர்ச்சியையும் அளிப்பதாகத் தோன்றியது. இதை அவன் படித்த புத்தகங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து பிடித்தானா, இல்லை அவனே உருவாக்கினானா தெரிய வில்லை. அவனை நினைத்தபடி சாப்பிடும் பீர் ஒரு சர்வரோக நிவாரணி அல்லது கவலை துக்கம் இவற்றை அகற்றிவிடும் ஓர் அற்புத மருந்து என்ற வகையிலேயே அவன் அந்த சொற்றொடரைப் பயன்படுத்தினான். ஆனால், எங்களை பீர் சாப்பிடச் சொல்லும் ராஜேஷ் ஒருபோதும் பீர் சாப்பிடமாட்டான்.

நான், குமரவேல், புகழேந்தி, தயாளன் எல்லோரும் சேர்ந்து பீர் சாப்பிடுவோம். ஆனால் ராஜேஷை நினைத்தபடி சாப்பிட்டது எத்தனை தடவையிருக்குமென்று தெரியவில்லை. நாங்கள் பீர் சாப்பிடும் போதெல்லாம் எங்கள் எதிரே எதையாவது கொறித்தபடி அவனும்தான் அமர்ந்திருப்பான். என்னை நினைத்தபடி சாப்பிடுகிறீர்களா என அவனும் கேட்டதில்லை.

பஸ் அனுமந்தையில் நின்றபோது ஒரு வயதானவரும் அவர் மகள் போலத் தோன்றிய ஒரு பெண்ணும் இறங்கினார்கள். கொஞ்சமும் லஜ்ஜையின்றி பாய்ந்து சென்று தனக்கும் தன் புது மனைவிக்குமாக காலியான இருக்கைகளைப் பிடித்தான் ஒருவன். மீன் கூடையுடன் ஏற முயன்ற பெண்ணை ஏறக்கூடாதென்று தடுத்து விசிலை ஊதினார் கண்டக்டர். அந்தப் பெண்ணின் முகபாவத்தைப் பார்த்தால் பஸ் கிளம்பியபின் நிச்சயம் மோசமாகத் திட்டித் தீர்ப்பாள் என்று தோன்றியது.

அடித்துப் பிடித்து இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவனும் அவன் புதுமனைவியும் நான் நின்றிருந்த இடத்திலிருந்து பார்வைக்கு நன்றாகத் தெரிந்தனர். பளிச்சென்ற ஆடையும் தங்க ஆபரணங்களும் அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதிகள் என்பதைப் பறைசாற்றின.

சாலையின் இடதுபுறத்தில் சிறு கற்களை வைத்து எல்லை வரைந்து இடத்தை ஆக்ரமித்து தானியம் காய வைத்திருந்த பகுதிக்கும் எதிரே வந்த வேனுக்கும் நடுவே கிடைத்த குறுகிய இடைவெளியில் வேகமாக ஒடித்துத் திருப்பினார் டிரைவர். ஒரு கணம் நிலை குலைந்தாற் போலிருந்தாலும் சுதாரித்து சாமர்த்தியமாகச் செலுத்திவிட்டார். பயணிகளில் சிலர் ஒரு நொடி கலவரமடைந்து பிறகு சகஜ நிலையை அடைந்தனர். எனக்கு தாமஸின் ஞாபகம் வந்தது. இது போன்ற எதிர்பாராத தருணங்களில் அவன் அவனையுமறியாமலே "இயேசுவே ரட்சியும் என்றுவிடுவான். இதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த புதுமணப்பெண் என்னை முறைப்பது போலப் பார்த்தாள். அவளைப் பார்த்து நான் சிரித்ததாக நினைத்திருப்பாளோ? நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

பேருந்திலிருந்த சிலர் எதுவுமே நடவாதது போல் பராக்கு பார்த்தவாறும் புத்தகம் படித்தவாறும் வந்தனர். நின்று கொண்டு வந்தவர்கள் மட்டும் பஸ் குலுங்கியதில் தங்கள் நிலைதடுமாறியவர்களாய் சிறிது பிரயாசையுடன் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கவுண்ட்டரில் நிற்பவன் அலுமினியத் தகடு அடித்த பெரிய ரெப்ரிஜிரேட்டரின் மூடியைத் திறந்து குனிந்து உள்ளேயிருக்கும் பீர் பாட்டிலை எடுக்கிறான். பாட்டில் லேபிள் நனைந்து சொதசொதவென்றிருக்கிறது. கவுண்ட்டரில் வைத்து பாட்டிலைத் திறக்கையில் மெதுவே நுரை பொங்கி பாட்டிலின் கழுத்தைத் தாண்டி ஒரு சின்ன காலிபிளவர் போல வெளியே பிதுங்கி நிற்கிறது. கையில் பாட்டிலைப் பிடிக்கும்போதே அதன் குளிர்ச்சி கிளர்ச்சியூட்டுகிறது.

குமரவேல் சொல்வான் " நல்ல பீர் சிறு கசப்புடன் கரகரவென்று தொண்டையை அறுத்த மாதிரி உள்ளே இறங்க வேண்டும்."

பீர் சாப்பிடும் எண்ணம் வந்ததும் பிற எண்ணங்கள் கலையத் துவங்கின. காலாப்பட்டைத் தாண்டும் போது சாலையின் இடதுபுறமாக நுரைத்துப் பொங்கியபடி தோன்றிய கடலே ஒரு ராட்டச பீர் கோப்பை போலத்தான் தெரிந்தது.

பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே பார். பாரை அடைந்த போது தாகம் கூடிவிட்டிருந்தது. பணத்தைக் கொடுத்து பீர் ஒன்றை வாங்கி கவுண்ட்டருக்கு அருகில் நின்றபடியே குடித்தேன். யதேச்சையாக அப்போது ராஜேஷின் நினைவு வந்தது சிரித்துக்கொண்டேன்.

விழுப்புரம் பேருந்து புறப்பட்டு நகரத்தைக் கடந்து வேகமெடுத்த போது மனம் ஒருவித மோனத்துள் அமிழ ஆரம்பித்தது. எந்தப் பதற்றமும் இல்லை. மனதைப் பிடுங்கிய எண்ணங்கள் காணாத தொலைவு சென்றுவிட்டிருந்தன. சுத்தமாகத் துடைத்துவிட்டது போன்று சலனமற்றிருந்து மனம். இது போன்ற ஒரு அமைதியை இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. மெல்ல சிந்தனைகள் ஆரோகணித்து வந்தன, ஆனாலும் அமைதி குலையவில்லை.

"அமைதியின் சத்தத்தைக் கேட்டிருக்கிறாயா?" ஒரு முறை ராஜேஷ் கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவான வேகம், அழகான அசிங்கம் மாதிரி அமைதியின் சத்தம் என்பது எதாவது பாரடாக்ஸா? "பி.பி.சி.ரேடியோ, அமைதியின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறது. பி.பி.சி ரேடியோ நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையே உள்ள அதாவது வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை மட்டும் கம்ப்யூட்டர் உதவியுடன் எடிட் செய்து இதுதான் அமைதியின் சத்தம் என்று வெளியிட்டிருக்கிறார்கள்." ராஜேஷ் சொல்லும் சில விஷயங்களை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது.

இப்போது என்னால் அமைதியின் சத்தத்தை உணர முடிந்தது. பஸ்ஸின் அதிர்வுகளுக்கேற்ற ஒரு லயத்தில் மனம் புரண்டு கொண்டிருந்த போதும் அமைதி மாறாமலே இருந்தது. பீர் தந்த கிறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த அமைதி பின்னணியில் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓட ஆரம்பித்தன. தெளிவில்லாத நினைவோட்டங்கள். ஸ்தூலமற்ற மனச் சித்திரங்கள். எல்லாம் கலந்த என் எண்ணங்களின் கலைடாஸ்கோப்பை வேறு யாரோ குலுக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பஸ் மாறாத ஒரு தாளகதியில் விரைந்து கொண்டிருந்தது.

திடீரென கலைடாஸ்கோப் ஸ்திரமான ஒரு சித்திரத்தைக் காட்டியது. அச்சித்திரம் அப்படியே நிலையாக நின்றது. எப்படிக் குலுக்கினாலும் மறையவில்லை. மாறவுமில்லை. எல்லா தற்காலிகச் சித்திரங்களும் சேர்ந்து நிலைத்த அந்தச் சித்திரத்தை சிருஷ்டித்திருந்தன. அச்சித்திரம் என்னை நிலைகுலையச் செய்தது. திடுக்கிட்டு விழித்தேன். என் மனம் கொண்ட காட்சி நிஜம்தான் என்று உள்ளுக்குள் எதுவோ அடித்துச் சொன்னது.

அசைவற்று அப்படியே இருந்தேன். என்ன சிந்திப்பதென்ற பிரக்ஞை கூட இல்லை. கண்டமங்கலம் லெவல் கிராஸிங்கில் பஸ் நின்ற போது சாலையோரக் கடை ஒன்றிலிருந்து ஏதோ பதார்த்தம் எண்ணெயில் வறுபடும் ரம்மியமான வாசனை எழுந்தது. ஒவ்வொரு வாசனையும் ஒவ்வொரு விதமான மன உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த வறுபடும் வாசனை எப்போதுமே எனக்குள் ஒரு புத்துணர்வைத் தருவது. இப்போது அந்த வாசனை எனக்குள் ஏனோ சஞ்சலத்தை உண்டாக்கியது. மெல்லப் பதற்றம் ஆரம்பித்தது. மனம் ஒரு வெற்று வெளியாகி அங்கு காற்று ஓலமிட ஆரம்பித்தது.

ஊருக்குப் போகும் டவுன் பஸ்ஸீக்காக விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, நீர்த்திரைக்குப் பின்னால் இயக்கங்கள் மசங்கலாகத் தோன்றின. காற்று வீச்சுக்கு ஏறியும் தாழ்ந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் பாலீதீன் பைகளென நகர்ந்தனர் மனிதர்கள். பீர் தந்த கிறக்கம் மெதுவாக விலகத் தொடங்கியது. பதற்றம் கூட ஆரம்பித்தது.

டவுன் பஸ்ஸிருந்து நான் மட்டுமே இறங்கினேன். கிராமத்தின் இரவு எட்டரை மணி அமானுஷ்யத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்த சோடியம் வேப்பர் விளக்கு மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து யாரோ என்னை நோக்கி வந்தார்கள். தயாளன் அவன் முகத்தில் பதற்றம். நான் என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

"மூணு மணிக்கா உங்க வீட்டுக்குப் போலீஸ்காரங்க வந்திருந்தாங்க" தயாளன் சொன்னான்.

மனம் அதிர்ந்தது. ஆனால் பார்வையில் படாமல் எங்கோ ஒரு மூலையில் இருக்கம் லிவரை அழுத்தியதும் பெரிய இயந்திரம் ஓய்ந்து சகஜநிலைக்கு வருவது போல உடனே அது சமநிலையும் அடைந்தது. உடல் வியர்த்துக் குளிர்ந்துவிட்டிருந்தது. வியர்வை படிந்த என் உள்ளங்கையால் தயாளனின் மணிக்கட்டை அழுந்தப் பற்றினேன். "ஏன்?" என்று நான் கேட்கப்போகும் கேள்விக்கு அவன் சொல்லவிருக்கும் பதிலைத் தாங்கிக் கொள்ள என்னையே தயார்படுத்திக் கொள்ளும் விதமாக எனக்குச் சில வினாடிகள் அவகாசம் தேவைப்பட்டது.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link