சிறுகதைகள்


எழுதி வைக்காதவை

கூடல்.காம்

கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை எங்கே கூப்பிட்டுக்கொண்டு போவேன் என்றும் அவளுக்குத் தெரியும். "வரும்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாமா" என்ற கேட்பாள். சட்டைப் பையைத் துளாவிக்கொண்டு பணம் இருக்கிறதா என்று பார்ப்பேன். "பர்ஸ் எடுத்துக்கிட்டேன்" என்று சிரிப்பாள்.

எத்தனை வருஷமாகச் சிகா இப்படியே சிரித்துக் கொண்டிருக்கிறாள். ஓரு கீரைத் தண்டைப் போலக் கணுக்கணுவாக முற்றி, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் அப்படியே இருப்பது இவளாகத்தான் இருக்கும். கனகராஜ் நல்ல குண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்பலவாணபுரத்திலிருந்து அம்பை ஆர்.எஸ் வரமிஞ்சிப் போனால், பஸ்ஸில் பதினைந்து நிமிஷம் ஆகும். அகஸ்தியர்பட்டி தாண்டி கோடரம்குளம்விலக்கு வருகிறவரை, ஒவ்வொரு தடவையும் எப்படிச் சொல்ல முடியாத ஒரு அமைதி வந்து நம்மிடம் சேர்கிறது என்று தெரியவில்லை. சிகாவும் இதை எத்தனையோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி எல்லாம் தோன்றச் செய்தது எது. தூரத்தில் தெரிகிற மலைகளா, எங்கோ ஓடிக்கொண்டிருக்கிற ஆறா. இரண்டு பக்கமும் திறப்பாகக் கிடக்கிற வெளியா. "அழக் கூடாது மணி, பச்சை பிள்ளையா நீ " என்று பின் சீட்டில் இருந்து சிகாமணியின் அம்மா சொல்லிக் கொண்டே வந்தார்கள். சிகாவின் தங்கை பொன்னுக்குட்டியும் அழுது கொண்டிருந்தாள். இத்தனையிக்கும் பஸ் ஏறுகிற வரை அத்தானைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தவள் தான் அவள்.

கனகராஜ் இது எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதுபோலக் கைக்குட்டையால், முகத்தைக் துடைத்துக்கொண்டு, "ரவி அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமல்லவா" என்று கேட்டார். ஆமாம் என்ற சூட்கேஸ்களை எல்லாம் நகர்த்திக் கொண்டே சிகாவைப் பார்த்தேன். முன் பக்கத்துக் கம்பியில் குப்புறச் சாய்ந்து ரிஸ்ட்வாட்ச் கட்டின இடதுகையில் முகத்தை அழுத்தி சிகா அழுதுகொண்டிருந்தாள். பிச்சிப்பூ ஒரு ஒருமாகச் சரிந்து கிடந்தது. கனகராஜ் வீட்டில் எடுத்திருந்த கல்யாணச் சேலையைத்தான் கட்டியிருந்தாள். எனக்கு அந்தக் கலர் என்னவோ பிடிக்கவில்லை. சிகாவுக்குப் பிடித்ததோ என்னவோ, ஒரு பேச்சுப் பேசாமல் கட்டிக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தாள். சந்தோஷமில்லாமலா நலுங்கில உருட்டின தேங்காயை கனகராஜ் பிடுங்க முடியாமல் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்படி ஒரு சிரிப்புச் சிரிக்க முடியும், ஈறு தெரியச் சிரித்தால், சிகா மனதாரச் சந்தோஷமாக இருக்கிறதாகத்தானே அர்த்தம்.

ஆலமரத்தடியில் இருந்து அம்பாசமுத்திரம் ஸ்டேஷன் வரை சொல்லிவைத்தது போல சருகுகளாக உதிர்ந்து கிடந்தது. கனகராஜ் பூட்ஸ் சரக்சரக்கென்று மிதித்து நடக்க, சிகா ஒரு ஒல்லிப் பாச்சா போலக் கூடவே போய்க்கொண்டிருந்தாள். சிவப்புக் கலர் வெல்வெட் செருப்பு பளிச்பளிச்சென்ற மாறிக் கொண்டிருந்தது. பொன்னுக்குட்டி சேலைகட்டி அக்காவையிடப் பெரிய மனுஷி மாதிரி இருந்தாள். "ஏ" இந்தப் பையை வாங்கு" என்று பொன்னுக்குட்டியை சிகாவின் அம்மா தன்பக்கம் கூப்பிட்டுக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்குள்ளேயே தனத்துச்சித்தி, "பேசாமல் பொன்னுக்குட்டியை கட்டி வச்சிருங்க. அவதான் பொருத்தமா இருக்கா வளர்த்தியும் சதையுமா" என்று, சொல்லிவிட்டாள். கைக்கு ஏழெட்டுத் தங்க வளையல் போட்டிருக்கிறவள். சொன்னால் எல்லோரும் சும்மா இருப்பார்களா? நிசந்தான் என்று சொன்னார்கள். சிகா கனகராஜைவிட ரொம்ப மெலிவுதான். ஆனால் சிகாவின் அழகு வேறுயாருக்கும் வராது. கீற்றுப்போல ஒரு தடவையும் ஈறு எல்லாம் தெரிகிறதுபோல இன்னொரு தடவையிம் சிரிக்கிறது. எல்லாவற்றையும் விட, சிகாவின் முகத்தில் இருக்கும் ஈரம் முக்கியமானது. அது லேசில் அமையாது. சிலேட்டைத் தொடுகிற மாதிரி ஒரு குளிர்ச்சி, சதா அவளுடைய பார்வையில் இருக்கும். ரயில் இதையெல்லாம் சொல்வது மாதிரி "கூ" என்று ஊதியது. தண்டவாளங்கள் தாண்டி பிரம்மதேசம் அம்மை முத்து முதலியார் ஜவுளிப் பொட்டலத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தார். கார்டு பச்சைக்கொடி அவருக்காகவே காத்திருந்தது. ரெயில்வே ரெஸ்டாரண்ட் நாயனா ஏதோ கிண்டலாகத் சொன்னார். சிகா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரயில் புறப்படும்போது நானும் ஏறினேன். "என்ன ரவி" என்றுக் கேட்டுக் கொண்டே "வண்டி நகர்ந்துட்டுது, இறங்கு என்றாள். பொன்னுக்குட்டியைப் போல எனக்கு அழ முடியவில்லை. "ஜங்ஷன் வரைக்கும் வாரேன்" என்று சொன்ன என்னைப் பார்த்த கனகராஜ் "உட்காருங்க ரவி" என்றார். ஆற்றப் பாலத்தைத் தாண்டும் போது சிகாமணியைப் பார்த்தேன். சிகா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு சற்று உள் ஒடுங்கி பாறைகள் முளைக்க ஓடிக் கொண்டிருந்தது.

அந்த ஓட்டம் எங்கே நின்றது. நிற்கிற ஓட்டமா அது. அப்படி எல்லாம் இருந்தால், கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு சிகா இருக்கிற இடம் பார்க்க ஓடிவரத் தோன்றுமா?

"ஏன் ரவி வேலையை விட்டே? மில்லூல பெர்மனண்ட் ஆச்சுண்ணா நல்ல சம்பளம்லா" சிகா ரொம்ப அக்கறையோடுதான் கேட்டாள். பாலிடெக்னிக் படித்துவிட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தபின், ஒர்க்கராகச் சேர்ந்து சைக்கிளும் தூக்குச்சட்டியுமாக வந்து கொண்டிருக்கும்போது, சிகா, சிகாவின் அம்மா, லீவுக்கு வந்திருந்த அக்கா பிள்ளைகள் எல்லாம் தாய்சீனிஸில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வருகிறார்கள். சிகாவிடம் என்ன மாயமிருந்தது. அக்காவுடைய இரண்டு பையன்களும் சிகாவின் கையைப் பிடித்து என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறார்கள். அவள் பக்கத்தில் போனாலே இப்படி ஆகிவிடும். இத்தனைக்கும் சில பேரைப் போல, கையைப் பிடித்துக் கொண்டோ, தோளைத் தொட்டுக் கொண்டோ எல்லாம் பேசுவதே இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பொன்னக்குட்டியைப் பார்த்து சிகா சத்தம் கூடப் போடுவாள். "அதென்ன பழக்கம். எப்ப பார்த்தாலும் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டு" என்று. பின் எப்படி சூரிய வெளிச்சம் மாதிரி ஒவ்வொருத்தரையும் அவளால் பளிச்சென்று ஆக்கிவிட முடிகிறது.

"உன்னை மாதிரிக் கிறுக்கன் உண்டா, உள்ளூர்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு, மெட்ராஸ்லே வேலை கிடைக்குமென்று ஓடிவார புத்திசாலி நீதான்" - சிகா தட்டில் சாதத்தைப் போட்டுக்கொண்டே சொன்னாள். சிகாவின் கைகள் எந்த மாறுதலும் இன்றி அப்படியே மெலிவாக இருந்தன. இரண்டு வெள்ளைக் கல்லும் ஒரு நீலக்கல்லும் வைத்த மோதிரம் எண்ணெய் இறங்காமல் அதே மினுமினுப்புடன் இருந்தது. குனிந்து பரிமாறும்போது காரை எலும்பு இன்னும் தென்னிக்கொண்டுதான் இருந்தது.

"ட்ரை பண்ணும்வோம் ரவி" என்று கனகராஜ் சொன்னார், ஒரு டர்க்கி டவலை உடம்பு முழுவதும் மறைக்கிற மாதிரி அவர் போட்டிருந்ததை எடுத்து, "துடைச்சுக்கோ" என்று, கைகழுவிவிட்டு வந்த எனக்குச் சிகா கொடுத்தாள். கையைத் துடைத்த பிறகு அந்தக் துண்டை இன்னும் முகர்ந்து பார்க்கத் தோன்றியது. ஒருவித கிளர்ச்சியுடன் அதைச் சிகா தோளில் போட்டேன். சிகாமணியின் தோளில் அந்தத் துண்டுக் கனம் இறங்கும்போது பளிச்சென்று ஒரு விநாடி பார்த்துவிட்டு, கனகராஜ் பிசைந்து கொண்டிருக்கிற தட்டில் மோர் ஊற்றினாள். அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து மறுபடி அவள்மேல் வீச வேண்டும்போல இருந்தது. சிகா அவ்வளவு அழகாக இருந்தாள்.

"நம்ம ஊர் துரைப்பாண்டி ஸார்வா இங்கேதான் இருக்காங்க" சிகா என்னிடம் சொன்னாள்.

"யாரு நம்ம கணக்கு ஸார்வாளா" - எனக்கு நம்ப முடியவில்லை. சிகா தலையை அசைத்தாள்.

"டிரில் வாத்தியாரா இருந்தானே அவரு பையன், அவரு கூட இருக்கிறதாக அல்லவா சொன்னாங்க"

"ஆமா மயில்சாமி கூடத்தான். இங்கே தானே, இருக்கான் அவன்"

"மயில்சாமி எனக்கு ஒரு வருஷம் சீனியர். நான் எட்டுப் படிக்கும் போது அவன் ஒன்பது படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல வருஷா வருஷம் ப்ரைஸ் வாங்குவான் அப்பவே"

"தெரியும் தெரியும்" சிகா ஒரு மாதிரியாகச் சிரித்தாள். சிகாமணி போகிற இடமெல்லாம் மயில்சாமி கொஞ்சநாள் அலைந்து கொண்டு இருந்தான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போகிற நேரம் பார்த்துச் சரியாக மூணுலாம்பிற்கு நேர் எதிரே ஒரு லாலாக்கடை இருக்குமே அதற்குப் பக்கத்தில் நிற்பான். தினசரி விடியற்காலம் ஆறுமணிக்கு என்ன அல்வாவா சாப்பிடமுடியும். அது எல்லாம் காய்ச்சல் அடித்துக் குணமாகிற மாதிரி தன்னாற் போல சரியாகிவிட்டது.

காரைக்குடிக்குப் போய் டிரில் வாத்தியார் வேலைக்குப் படித்து விட்டு வந்து சமயம் ஆளே மாறிப் போய்விட்டான். வெள்ளை அரைக்கால் சட்டையும் கான்வாஸ் காலணியுமாக சைக்கிளில் பந்து விளையாட போகும்போது சிகா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தால். வீட்டுச் சுவரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மயில்சாமி பேசுவான் என்றுதான் சிகாமணி நினைத்தாள். கிணிங் என்று அவள் பக்கத்தில் வரும்போது ஒரு பெல் கூட அடிக்கவில்லை. சிலபேர் எப்படி இப்படி மாறிவிடுகிறார்கள். பாபநாசம் ரோட்டு மருதமரம், அதில் ஒட்டப்படுகிற கலைக்கோவில் சினிமா போஸ்டரும் பொந்தில் இருக்கிற கிளிகளும் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன.

இவ்வளவு தெரிந்தபிறகு துரைப்பாண்டி ஸாரை பார்க்காமல் இருக்கமுடியுமா. மயில்சாமி வீட்டை சிகாவும் நானும்தான் நடந்து போய்க் கண்டுபிடித்தோம். கொஞ்சம் தூரம்தான். போகவரவே அரைமணிநேரம் கிட்டதட்ட ஆகிவிடும். மயில்சாமி சம்சாரம் அருமையான மனுஷி. பேச ஆரம்பித்தால் மடியில் தூக்கிவைத்துக் கொள்கிறமாதிரித்தான் இருந்தது. முதல் தடவையாக மயில்சாமி வீட்டிற்குப் போயிருக்கும்போது மயில்சாமியும் இல்லை. துரைப்பாண்டி ஸாரும் இல்லை.

"இவ்வோ இன்னும் வரலை. மாமா ட்யூஷன் எடுக்காஹ. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்காஹ. பொழுது போகணும்லா, எம்புட்டு நேரம் சும்மாவே ஈஸிசேரிலே பேப்பர் படிச்சுட்டுக் கெடக்கிறதுங்காஹ, இதை சொல்லும்போது ஒரு தட்டில் கொழுக்கட்டையும் தண்ணீரும் வந்தது.

"நமக்கே குத்த வச்சு ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியலே. இதிலே அந்தக் காலத்து ஆட்கள் எப்படி இருப்பாஹ? - மயில்சாமி சம்சாரம் பேச்சை நிறுத்துகிறதாக இல்லை. ஆவுடையானூர்க்காரி என்பது சரியாகத்தான் இருந்தது. என்ன பிரியம். என்ன திருத்தம் ஒவ்வொண்ணிலும்.

என்றைக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றினாலும் எனக்கும் சிகாவுக்கும் துரைப்பாண்டி ஸார் வீட்டிற்குத்தான் போகத் தோன்றும். இப்போதாவது என்னென்னவோ பேச்சு வந்துவிட்டது. ரேஷன் கடையில் கூட நான் கனகராஜ் இல்லை என்று தெரிந்து கொண்டே, "கனகராஜ் ஸாருக்கு கோதுமைக்கு பில் போட்டாச்சா" என்று கேட்டபடி என்பையில் கோதுமையை அளந்து போட்டிருக்கிறார்கள்.

"மண்ணெண்ணெய் கேன் டீச்சர்கிட்டே இருக்கா ஸார் என்று தள்ளி நிற்கிற சிகாமணியை காட்டிக் கேட்டிருக்கிறார்கள். சிகா டீச்சர் இல்லை. வேலைக்கு போகவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்ததைத் தெரியாது போலப் பேசுகிற கெட்டிக்காரத்தனம்தானே இப்போது செல்லுபடி ஆகிறது

இதற்கு எல்லாம் முந்தி நாங்கள் மூன்று பேருமே நடந்து, பெருமாள் கோவில் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் பக்கமாய்ப் போய், ஏரிக்கரையில் நடந்து, நடுவில் பட்டம் விடுகிறவர்களைச் சற்றுப் பார்த்து, சர்வ சாதாரணமாக நடக்கிற சாராய வியாபாரத்தைக் கண்டுகொள்ளாமல் விலகி, ஒரு நீண்ட விசில் சத்தத்தின் கேலி ஒலிக்க - ( இப்போது நான் சற்றுக் கோபமாக நின்று திரும்பிப் பார்க்க, "போவோம்" என்று கனகராஜ் தோளில் கைவைப்பார். சிகா மடங்கிக் கீழே குனிந்து ஒரு நத்தைக் கூட்டைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பாள்) வேலிக்காத்தான் செடிகளுக்கு அப்புறமாகப் போய் ஸார் வீட்டை அடைந்தபோது, அன்றைக்கு கணக்கு ஸார் வீட்டில் இருந்தார்கள்.

கணக்கு ஸார் எவ்வளவு அருமையான மனிதர். எங்கள் பள்ளிக் கூடத்தின் சொத்தே அவர் அல்லவா. உலகம் என்ன என்ன முடிச்சை எல்லாம் எங்கெங்கு போடுகிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் எஸ்டேட்டில் ஸ்டோர் கீப்பராக இருந்தார்களாம். ஏதோ ஒரு முக்கியமான சிறு உதவியை எங்கள் தாத்தா செய்திருப்பார் போல. " அவர் பொருத்திவச்ச விளக்கு அல்லவா எங்க வீட்டில் இன்றைக்கும் எரியுது" என்று என்னுடைய அப்பாவிடம் ஸார் சொலலிக் கொண்டிருந்தார்.

பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா போனபிறகு அன்றைக்கு ஸார் எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள் பற்றியும் அட்டைக்கடி பற்றியும், பள்ளிக்கூடம் போகிற வழியில் வேல்கம்பால் குத்தித் தூக்கி மரத்தில் உயிரோடு இருப்பதுபோல் கட்டி வைத்திருந்த சிறுத்தைப் புலி பற்றியும் சொன்னார். அந்தப் பக்கத்தில் இருந்த சர்ச்சின் மணி சப்தம் எப்படி இருக்கும் என்று ஸா‘ சொல்லும்போது மனி சப்தம் கேட்டது. குளிர்ந்த ஓடைகளும் பெரணிச் செடிகளுமாக இருக்கிற அவருக்குப் பிடித்த ஒரு பாறையைப் பற்றிச் சொல்கையில், நான் அந்த ஓடையில் இருந்து கூழாங்கற்கள் பொறுக்கினதுண்டு.

ஒரு சமயம் இங்கிலீஷ் பீரியட் ஸார்வா வராதபோது துரைப்பாண்டி ஸார் வந்து "இங்கிலீஷ் பொயட்ரி" எடுத்தார். ஒரு படுகை பூராவும் மலர்ந்திருக்கிற ஒரு மலரைப் பற்றிய அந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பது அவர் பேசின மற்றப் பேச்சிலிருந்தே எனக்குதெரிந்தது. எனக்கும் கூட சமபங்கு கணிதமும் வேண்டியிருந்தது. இதுபோல சொல்லிக் கொடுக்கப்படுகிற கவிதையும் வேண்டியிருந்தது. நான் பாலிடெக்னிக்கில் சேருவதற்குப் போதுமான கணக்கையும், சிகாமணியைக் கண்டடைவதற்கான மெல்லுணர்வையும் அவரிடமிருந்துதானே பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் மூன்று பேரும் போன தினத்தில் சிகாவிடமும், என்னிடமும், ஊருக்குப் போனீர்களா, சமீபத்தில் மழை உண்டா, பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் எப்படி, மில்லில் ஆள் எடுக்கிறார்களா, எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஹைஸ்கூலில் போனவருஷம் எத்தனை சதம் தேறினார்கள். கணக்கில் சென்ட்டம் எத்தனைபேர், சொரி முத்தையன் கோவிலுக்கு இப்போது ஆடி அமாவாசைக்கு முன்னைப் போலக் கூட்டம் வருகிறதா. காணிக்குடியிருப்பில் ஸ்கூல் ஒண்ணு உண்டே. அது நல்ல பெருசா வளர்ந்துட்டுதா, இப்போ ஸ்ட்ரெங்த் எவ்வளவு இருக்கும் என்று எல்லாம் சற்று நேரம் கேட்டவர், ஒரு கேவலைப்போல நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, இதுவரை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கனகராஜைப் பார்த்து.

"உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டேன்" என்று அவருடனான தன் முதல் உரையாடலைத் துவக்கினார். அவர்கள் பியானோ இசையைப் பற்றி அப்புறம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கனகராஜ் ஒரு கட்டத்தில் பியானோ வாசிப்பதையே போன்று தன் பத்து விரல்களையும் ஒரு இசைவுடன் அசைத்துக் கொண்டு, காற்றில் சில நிமிடங்கள் அந்தரத்தில் கைகளை நிறுத்திக் கண்களை, மூடிக்கொண்டபோது, துரைப்பாண்டி ஸார் தன் பக்கத்தில் இருந்த சிகாமணியின் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டார். சிகாவின் மெலிந்த கையின் மேல், வழுவழுப்பு நிறைந்த சேலை நினைத்து நினைத்துச் சரிந்து இறங்கியது.

அப்புறம் நாங்கள் எத்தனையோ தடவை போயிருப்போம். ஒரு சில நெகிழ்வில் உள்ளங்கைக்குள் புரண்டு கொடுக்கிற கற்பனையான வைரக்கற்களைப் போல, மனிதர்களுக்குள்ளும் நிகழ்ந்து விடத்தானே செய்கின்றன. எல்லாம் காதுக்கு வந்த பிறகு மயில்சாமியின் மனைவி ஒரு சிறு வித்யாசம் கூடப் பாராட்டாதது எப்படி என்று இன்னும் புரியவில்லை. நானும் சிகாவும் போயிருக்கும் போது, இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு மயில்சாமி ஒரு தடவை சொன்னான்.

"உங்க ரெண்டு பேரையும் கண்டிச்சுக் சொல்லணும் போலவும் இருக்கு. சொல்லவும் முடியலை". இதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி அவனால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அவன் வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம். "சிகா, உனக்குக் கார்ட்டுன்ஸ் பிடிக்கும் என்று சொன்னாயே" என்று சொல்லி காஸெட்டைப் போடுகிறான்.

"ரவி மீன் சாப்பிடுவியா நீ" என்று அவன் மனைவி வந்து கேட்டுவிட்டுப் போன சிறிது நேரத்தில் அம்மி தட்டுகிற சத்தம் கேட்டது.

"அம்மி தட்டுகிற சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு" சிகாமணி உட்பக்கம் எழுந்து போகிறாள். திரையில் பூனை எலியிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க மயில்சாமி அப்படிச் சிரிக்கிறான். சின்னப்பிள்ளை மாதிரி. சொல்ல முடியாத ஒரு கணத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டும் எங்கேயாவது போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது.

"மயில் அப்ப நான் வர்ரேன்"

"ச்சூ. இருந்து சாப்பிட்டுப் போகலாம் ரவி"

இல்லை போறேன்" - எனக்கு என்னைத் தூக்கி யாராவது எறிந்து நொறுக்கிவிட மாட்டார்களா, சுக்கல் சுக்கலாகி, யார் காலிலும் குத்தாமல், மண்ணோடு மண்ணாகிவிட மாட்டேனா என்று இருக்கிறது. கனகராஜ் எதிரே வந்து விடக்கூடாது. துரைப்பாண்டி ஸார் வந்துவிடக்கூடாது. வெயிலின் கீற்றில் கரைந்து அரூபமாகி, ஏரிக்குள் பறக்க விடுகிற பட்டம் மாதிரி உச்சிக்கு எவ்வி எவ்வி உயிர் அறுந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும்.

"சிகா சாப்பிட்டுட்டு வரட்டும். நான் போறேன்" எழுந்திருந்தேன்.

"இந்த பாரும்மா. ரவி போறானாம்" - அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் வெளியே வந்தேன். ஹிண்டு பேப்பர் தரையில் சருகியது. நாய் கட்டிப் போட்டிருந்த இடத்தில் சூட்டு வாடை அடித்தது. தபால் பெட்டில் யாரோ டூத் பிரஷ் காலி டப்பாவைச் செருகியிருந்தார்கள். கருநீலமாகப் பூக்கள் அசைந்தன. மரக்கதவில் கனத்து விழுகிற இரும்புப்பட்டை நாதாங்கி. சிந்திக்கொண்டே போகிற தண்ணீர் லாரி. சைக்கிள் ரிக்ஷாவின் ஓரத்தில் இருந்த நீல பீக் ஷாப்பர் பையில் பசேல் என்று காராமணிக் கொத்து.

"என்ன ஆச்சு ரவி" - சிகா வந்து கையைப் பிடித்தாள். மேலும் பிடித்தபடியே என்னுடனே நடக்க ஆரம்பித்தாள். மெலிந்த அவளுடைய கைகள் எனக்கு நிரம்பவும் வேண்டியிருந்தது. சேலையின் விசிறல் பக்கவாட்டில் நகர்ந்தபடி வந்தது. சிகாமணி சேலைத்தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நல்ல வெயில்" என்றாள்.

எதிரே துரைப்பாண்டி ஸார் வந்து கொண்டிருந்தார். முழுக்கைச் சட்டையுடன் ஒரு கை உயர்ந்து குடையைப் பிடித்திருந்தது. தோளில் சாய்ந்த குடையில் அவருக்குப் பின்னால் உள்ள பாதை மறைந்து மறைந்து விலகியது. முக்கியமாக, ஒரு வீட்டுக்குள்ளிருந்து தெருப்பக்கம் சரிந்திருந்த செவ்வரளிப் பூக்கள் பார்வையிலிருந்து விலகுவதும் தெரிவதுமாக இருந்தது. தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

துரைப்பாண்டி ஸாருக்கு எல்லாம் தெரியும்.

"என்ன இந்த வேனா வெயிலில?"

"நம்ம வீட்டுக்குத்தான் ஸார்" - சிகா சொன்னாள்

"சாப்பிட்டீங்களா" - மரத்தடிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவர் ஒரு மரத்தடிக்கு நகர்வது மூலம் எங்களையும் நிழலுக்கு உட்படுத்திக் கொண்டார். வெயிலை விட்டு எப்படி எல்லாம் நகர்த்திக் கொள்ள முடிகிறது.

மணி ஒண்ணரைதானே ஆகுது"

"ஒண்ணரை மணிக்குச் சாப்பிடக் கூடாதுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு?" -ஸார் எங்களைப் பார்த்தார்.

நாங்கள் நின்றிருந்த வேலிக்கருவை மரம் நிறையக் காய்த்திருந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூத்திருந்தது. ஊதினால் மகரந்தம் பறக்கும்போல. ஏற்கெனவே ஒடிந்த கிளை காய்ந்து முட்கள் துருத்திக் கொண்டு இருந்தன. நிழல் இருந்தது போதுமான அளவு. சிகாவும் நானும் பேசாமல் ஸாருடன் நின்றோம். ஸார் குடையை வலது தோளிலிருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டார்.

மறுபடியும் கேட்டார் - "எழுதியா வச்சிருக்கு"

சிகா தலையை ஆட்டினாள்

"எழுதி வைக்கலையில்லா?" - இப்போது என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.

"பின்னே?" - இதைச் சொல்லிவிட்டு துரைப்பாண்டி ஸார் முன்னால் நடந்தார். நாங்கள் பின்னால் வருவோம் என்று அவருக்குத் தெரியும்போல.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link