சிறுகதைகள்


மனசு

கூடல்.காம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே கதைதான். இந்த நேரம் என்றில்லை, இன்ன பொழுது என்றில்லை. வந்துவிடுகிறான் தினகரன். யார் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்தார்கள் இவனை. ராஜூவுக்கு எரிச்சலான எரிச்சல். அவனுக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்கவில்லை. இவனை யார் வரச்சொன்னது.

போன ஞாயிற்றுக்கிழமை. சித்திரைவெயிலுக்கு பயந்து, கதவை ஒருச்சாத்திவிட்டுப் படுத்திருந்தான் ராஜூ. வீடோ ரொம்ப சின்னது. மத்தியானம், இரண்டு, இரண்டரை மணி இருக்கும். கடுமையான வெக்கை. புழுக்கம். மேஜைக் காற்றாடியை மூன்றில் வைத்திருந்தான். அப்படியிருந்தும் தூங்க முடியவில்லை. பக்கத்தில் அலமேலு ஒருக்களித்துப் படுத்தபடி, அதிசயமாக "குமுதம்" பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகன் ஐயப்பன்தான் வந்து சொன்னான், தினகரன் வந்திருப்பதை.

இவர்கள் வளவில் மூன்று வீடுகள். எதிரே வடக்கு பார்த்த வீடு. தெற்கே பார்த்து இரண்டு வீடுகள். உள்ளபடியே, அது ஒரு வீடுதான். வாடகைக்காக இரண்டாக மறித்து, சுவர்வைத்துப் பிரித்திருந்தார்கள். இந்த வீடு ஒரு முடுக்கு மாதிரி. நீளமாய் இருக்கும். விசாலம் கிடையாது. முன்புறம் சின்ன தார்சா. நடுவில் சரியாக இரண்டு பேர் படுக்கிற மாதிரி பட்டாளை. பின்னால் அடுக்களை. பின்புழக்கம் உண்டு. மேல வீடுதான் உண்மையிலேயே வீடு. அதுவும் இவர்கள் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதாவது, இவன் மாமனார், மாமியார், மருமக்கள் - அலமேலுவின் அண்ணன் பிள்ளைகள். மூத்த தாரத்து மக்கள். பஞ்சபாண்டவர்கள் - மதினி, சகலர் எல்லோரும் இருக்கிறார்கள்.

பெரிய வீடு அது. யாராவது வந்தால் அங்கேதான் இருக்க வைப்பது. சொந்தக்காரர்கள், ரொம்ப வேண்டியவர்களை மட்டும் தாம் இந்த வீட்டில் கூப்பிட்டுவைத்துப் பேசுவது. இருக்கச் சொல்வது. இடவசதி - இல்லை, இட நெருக்கடிதான் காரணம்.

அந்த வீட்டுத் திண்மையில் தான் தினகரனை உட்காரச் சொல்லியிருந்தார்கள். அலமேலு போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அவள் வந்தவுடன் ராஜூ ஆத்திரமாய்க் கேட்டான். "இவனுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ஒரு வீட்டுக்கு வர. பொண்டாட்டி, பிள்ளை இருக்கற மனுஷன் மாதிரியே தெரியலியே இவனப் பாத்தா. இந்த வேனா வெயில்ல ஒரு உடை உடுத்தி நடை நடந்து வந்திருக்கானே முட்டாப்..." ராஜூவுக்கு கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகள்தாம் வரும், தன்னியல்பையும் மீறி. "இல்ல. நாளைக்கிதான் பணம்கட்ட கடைசி நாளாம். அதச் சொல்லத்தான் வந்தாராம்" என்றவள், இவன் முகத்தைப் பார்த்துவிட்டு மேலவீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள்.

அதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. காலையில் பத்து மணி இருக்கும். கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லையென்று, மேற்கே கொஞ்சம் தள்ளி ஊற்று இருக்கிற இடத்துக்குப் போய்க் குளித்து விட்டு வருகிறான். போக வர இரண்டு மைல் நடை. திரும்புகையில், எதிர்வெயில் வேறு. காலையிலே மனுஷன் குளிக்கிறதுக்கு இந்தப் பாடா. பசியும் எரிச்சலுமாய்த் தெரு வாசல்படி ஏறியவன் கண்ணில் முதலில் பட்டது தினகரனின் கட்டம்போட்ட சட்டைதான். பெரியவீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். எதிரே தார்சாவில் ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்த அலமேலு இவனைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து கொண்டாள். "இட்லி எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "குளிச்சிட்டு வர்றீங்களா" என்று கேட்டபடியே புறப்பட்டுப் போய் விட்டான் தினகரன்.

துணிகைக்கூடக் காயப்போடாமல், தலைகூட சீவாமல், சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராஜூ. இட்லி எடுத்துவைத்துக் கொண்டிருந்த அலமேலுவிடம் கோபமாய்க் கேட்டான். "எங்கடி வந்தானாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரப்பிடாது இவனுக்கெல்லம். புறப்பட்டு வந்துர்றான் புடுங்கி மாதிரி. போவேண்டியதுதானே கொழுந்தியா வீட்டுக்கு. அடுத்த தடவ வரட்டும், கேட்டுர்றேன்."

"ஏன் இப்டி வாயில வந்ததல்லாம் பேசுறீங்க. புது ஏ.சி.டி.ஓ. வந்திருக்காராம். "அக்கவுண்டயெல்லாம் சீக்கிரமா முடிச்சிக் கொண்டுட்டு வாங்க"ன்னு சொல்லிட்டுப் போறாரு. அவ் வீட்டுக்காரிக்குத் திரும்பவும் உடம்பு சரியில்லியாம். சொல்லிக்கிட்டிருக்கையிலியே அழுதிட்டாரு. பாவம்" என்ற அலமேலு எச்சில்தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். இவனுக்குத்தான் மனசு சமாதானமாக வில்லை.

போன மாசம். புனித வெள்ளி. அரசு விடுமுறை. சாயங்காலம், அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, அடித்துப்போட்ட மாதிரி, தூங்கிக் கொண்டிருந்தாள் அலமேலு. வாரத்தில் ஆறுநாள் மாடு மாதிரி வேலை பார்க்கிற அசதி. அலைகிற அலைச்சல்.

தினகரன் வந்திருப்பதை வந்து சொன்னான் - இரண்டாவது - மருமகன் - லட்சுமணன். யாராக இருந்தாலும் தூங்கும்போது எழுப்புவது எப்போதுமே இவனுக்கு சம்மதமில்லாத காரியம்.

"அத்த தூங்குறா, நாளக்கி வந்து பாருங்க"ன்னு சொல்லு" என்று லட்சுமணனிடம் சொல்லி அனுப்பிவைத்தான் ராஜூ. ராஜூவுக்குத் தினகரனைப் போய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை. "வாங்க" என்று மரியாதைக்குக் கேட்கக்கூடத் தோன்றவில்லை. "இருங்க" என்று சொல்ல இஷ்டமில்லை. "சனியன், போய்த் தொலைந்தால் சரிதான்" என்றிருந்தான். ஆனால் தினகரன் போகவில்லை. இருந்து கொண்டிருந்தான். லட்சுமணனோடு பேசிக் கொண்டிருந்தான்.

கால்மணி நேரம் கழிந்திருக்கும். இவன், "என்னப்பா" என்று கோபமாய்க் கேட்டான். லட்சுமணன் வந்து பைய, "அவரு இன்னும் போல. இருந்துட்டு இருக்காரு, அதான்" என்றதும், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்த" என்று கடுப்போடு இரைந்தவனின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் அலமேலு. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். பின்வாசல் பக்கம் போய் முகம் கழுவிக்கொண்டு நிற்கிறாள். அதற்குள் அவனே திண்ணையில் வந்து நின்றான். முகம் துடைத்துக் கொண்டிருந்த அலமேலுவை ராஜூ சுட்டெரித்து விடுவது போலப் பார்க்க, அவள் இவனை பாவம் போலப் பார்த்தபடி நின்றாள். "எப்ப வந்தீங்க, எப்டி இருக்கீங்க" என்று இவனை விசாரித்த தினகரனிடம் ஒப்புக்காகப் பேசும்படியாய்த் தொலைந்தது.

"என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க" என்று அலமேலுவைக் கேட்டவன், "சின்னத்தம்பி" படத்துக்கு டிக்கெட் கிடைக்க மாட்டேங்கு"ன்னு சொன்னீங்கல்ல. தியேட்டர் பக்கம் - ஆபீஸ்லர்ந்து போயிருந்தம். நாலு டிக்கெட் கேட்டு வாங்கிட்டு வந்தேன். அதக் கொடுத்திட்டுப் போலாமேன்னுதான்" என்று பர்ஸிலிருந்து சினிமா டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தான். லட்சுமணனைக் கூப்பிட்டு "பூஸ்ட்" வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் அலமேலு. காபி குடிக்க மாட்டானாம், மயிராண்டி.

நாலு நாளைக்கு முன்தான் சொன்னாள் அலமேலு. அலுவலகத்தில் இவள் பொறுப்பில் - ஐயாயிரம் ரூபாய் - சார்ட்டேஜாம். எங்கேயாவது வட்டிக்கு வாங்க முடியுமா என்று அலைந்து பார்த்தாள். யார் யாரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தாள். தினகரனிடமும் சொல்லியிருக்கிறாள். "சங்கிலிய வேணா தர்றேன். அடகுவச்சு எடுத்துக்குங்க" என்றானாம். மைனர் செயின். அஞ்சு பவுன். அலமேலு இவனிடமே வந்து கேட்டாள், என்ன செய்ய என்று. ராஜூ என்ன சொல்வான். "வேண்டாம், அப்டில்லாம் வாங்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டான். தனது கையாலாகத்தனம் நெருட, அன்றைக்கு ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை ராஜூவுக்கு.

அலமேலு நல்ல பெண்தான். அவளை ஒன்றும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், சில பெண்களுக்குப் பிற ஆண்களிடம் சகஜமாகப் பேசும் குணம் உண்டு. அலமேலுவிடமும் இந்த அம்சம் இருக்கிறது. அதுதான் இப்படி. இந்த வினை. இவள் வேலையும் அதற்கேற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வணிக வரி அலுவலகத்திற்குப் போக வேண்டும். எப்படித்தான் நல்லபடியாகக் கணக்கு வைத்திருந்தாலும் கண்டமேனிக்கு வரி தீட்டி விடுவார்கள். விசாரணை, அபராதம் இதெல்லாம் இல்லாமல் தப்பித்துவர வேண்டும். இதற்கெல்லாம் அங்கேயே ஒரு தெரிந்த ஆள் இருந்தால் நல்லது. அலமேலு கணக்குப் புஸ்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். தினகரன் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வான்.

ராஜூவுக்கு நிலையான வேலையில்லை. நிலையான வேலையில்லாதவனுக்கு நிரந்தரமான வருமானம் எப்படி இருக்கும். வீட்டில் சும்மாதான் இருக்கிறான். இரண்டு பையன்கள் படிப்புச் செலவு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அலமேலுதான். இவள் வேலை பார்க்கப் போய்த்தான் குடும்பம் நடக்கிறது.

உண்மையிலேயே, தினகரன் பாவம்தான். மனைவிக்குப் கர்ப்பப்பை ஆப்பரேஷன் ஆகிவிட்டது. அதுதான் இப்படி அலைகிறானோ, ஜொள்ளு கேஸீ. பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்கிற டைப்பு. சீச்சீ. இப்படியெல்லாம் தப்பாக நினைக்கக்கூடாது. அவனென்ன தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்காதவனா. பனிரண்டு வயதில் பையன் இருக்கிறான். அவனுடைய பழைய புஸ்தகங்கள்தாம் ஒவ்வொரு வருஷமும் இவன் பையனுக்கு. மெனக்கெட்டு எடுத்துக்கொண்ட வந்து கொடுத்துவிட்டுப் போவான் தினகரன். தெரிந்தவர்கள் என்று வருகிறான். இல்லையென்றால், வருவானா. ஆனாலும், ஒரு இங்கிதம் வேண்டாம். செத்த மூதி. கடன்காரன் மாதிரி வந்து விடுகிறான். புருஷன்காரன் என்ன நினைப்பான் என்று தோன்றாதா இவனுக்கு.

இரண்டு மூன்று தடவை அலமேலுவிடம் எரிச்சல்பட்டே சொல்லிவிட்டான் ராஜூ. "இவன் இப்டி வீடு தேடி வர்றது எனக்குப் பிடிக்கல அலமேலு. இவன் ஏன் வர்றான். நீ சொல்லிரு. "என் புருஷன் ஒரு முசுடு. எதாவது சொல்லிருவாரு"ன்னு சொல்லிரு அலமேலு".

"இதயெல்லாம் எப்படிங்க சொல்லமுடியும். அவருக்கே தெரியணும்" என்று அலமேலு சொல்வதும் சரிதான்.

முந்தா நாள். சித்திரை விஷூ. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோமே, பிள்ளைகளோடு இவளோடு எதாவது சினிமாவுக்குப் போகலாமே என்று எல்லோருமாகப் போனார்கள். ஆறரை மணிக் காட்சி. படம் முடிந்து வெளியே வந்தார்கள். தியேட்டர் வாசலை விட்டு இறங்குகிறார்கள். கூட்டத்தை எதிர்த்து வந்து கொண்டிருக்கிறான் தினகரன். வீட்டுக்குப் போயிருந்தானாம். சொன்னார்களாம். வந்துவிட்டான். வழக்கமான நாகரிகம், மரியாதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுவிட்டான் ராஜூ. அவனைப் பார்க்காததுபோல, விறுவிறுவென்று சரவணனையும் கோபியையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு முன்னே நடந்து போய்க்கொண்டே இருந்தான்.

சம்பிரதாயத்திற்காக ஒரு நிமிஷம் நின்று விசாரித்துவிட்டு, வேக வேகமாக நடந்து வந்து இவனோடு சேர்ந்து கொண்ட அலமேலு கேட்டாள்; " என்னங்க, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறீங்க ".

"என்னடி இது. தியேட்டருக்கே வந்துட்டான். பொண்டாட்டிய தேடிட்டு வர்ற மாதிரில்ல வர்றான். இவனையெல்லாம் என்னடி செய்றது" என்று வெடித்தான் ராஜூ.

"சத்தம் போடாதீங்க. எல்லோரும் பாக்காங்க. வீட்ல வந்து பேசுங்க" என்று அமைதிப்படுத்தினாள் அவள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைலியை மாற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ராஜூ. பிள்ளைகள் இரண்டு பேரும் ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அலமேலு பழையதை எடுத்து வைத்து மோர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சாதத்தைப் பிசைந்தபடியே ஆங்காரமாகச் சொன்னான் இவன். "ஏய், இந்த பாருடி. அவன் இன்னொரு தடவ இங்க வந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவன்ட்ட சொல்லிரு. இல்ல, அசிங்கமா போயிடும்."

"சரி, சரி. விடுங்க இழவு சனியனை. அவர்தான் மடையன்னா நாமளுமா" என்ற அலமேலு சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள்.

"என்ன மனுஷங்க" என்ற நினைப்பே வேதனையாக இருந்தது. மாடக்குழியில் இருந்த "அவில்" மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அப்போது அலமேலுவின் பாவமான முகமே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே கடைசி ஞாபகமாக இருந்தது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link