சிறுகதைகள்


கடைசி மனுசன்

கூடல்.காம்

சீமான் முதலாளி வீட்டு வேலைக்காரன் வந்து சொன்னதும், தலையில் இரும்புத்தடி விழுந்தது மாதிரி இருந்தது, அம்மாசிக்கிழவனுக்கு.

விஷயத்தைத் தெரிந்ததுமே விழுந்தடித்து ஓடக் கூடியவன் தான்; ஆனால் முடியவில்லை.

வாழ்க்கையில் முக்காலேயே மும்மாகாணிக் காலத்தை ஓட்டி விட்ட அந்தப் பழுத்த பழத்துக்கு இப்போ மேலுக்கு நல்ல சுகமில்லை. முகம் சுரைக்குடுக்கை மாதிரி வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள தோல் எல்லாம் காய்ந்த வாழை மட்டையாகத் தொங்குகின்றன. மார்பு எலும்புகள் கூடுபாய்ந்து மூங்கில் கூடை மாதிரி வரிவரியாகத் தெரிகின்றன. அடிவயிறு முட்டிக் கலயம் போல உருண்டு மினுமினுப்பாயிருக்கிறது.

அன்னம், தண்ணி, ஆகாரம் என்று உள்ளேயிறக்கிப் பத்து நாட்களுக்கு மேலாச்சு.

வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள பிரத்தியேகமாக யாரும் கிடையாது. அவன் தனிக் கட்டையாகி ரொம்பக் காலமாச்சு. பக்கத்துக் குடிசைகளிலிருக்கும் அண்ணன் மக்கள், தம்பி மக்கள் தான் தற்போது அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

முன்பு அவன் கெதியும் மதியுமாய் இருந்தபோது, ஊருக்குள்ளே போய் முதலாளிமார்கள் வீடுகளில் ஏதாவது அத்தம் தொத்தம், எடுபிடி வேலைகள் செய்து கஞ்சி வாங்கி வந்து குடிப்பான். இப்போ அதிகமாக அந்தப் பக்கம் நடமாட்டமில்லாததால் சீமான் முதலாளி வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது. ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தக் குடியிருப்புக்கு மெனக்கிட்டு யார் வந்து சொல்லப் போகிறார்கள்?

சீமான் முதலாளி செத்துப் போனாராம்! அம்மாசிக்கிழவனின் ஆட்கள் உடனடியாக அங்கு போய் நிற்கணுமாம்! - பழைய கிராம முன்சீப் ஐயா தாக்கல் சொல்லிவிட்டிருக்கிறார். பெரிய வீட்டுத் துட்டி. எள் மூட்டை வந்ததும் எண்ணெய் டின்களாகப் போய் நிற்க முடியவில்லையே என்று கிழவனுக்கு ஒரே மன உளைச்சல், விசாரம்.

காலை நேரம், பொழுது கிளம்பி மேலே ஒரு பாகம் உயரம் வந்திருக்கும்.

சரி. கிழவனால்தான் போக முடியவில்லை. மற்றவர்களையாவது அவன் உடனே அங்கு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் சாமிமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும். பொம்பளைகள் ஊர், ஊருக்குத் துட்டி சொல்லிப் போகணும்; ஆம்பிளைகள் கொட்டடிக்கணும்; தேர்க் கட்டக் கம்பு வெட்டி வரணும்; சுடுகாட்டுக்குப் பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு சேர்க்கணும். மூடை, மூடையாக எருவும், தென்னங் கூந்தலங்களும் வேறு போய்ச் சேர வேண்டியதிருந்தன. இது போக அல்லறை சில்லறை வேலைகளும் அவர்களுக்காகவே இருக்கும். ராத்திரி சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிப்பது ஒரு முக்கியமான சோலி.

அம்மாசிக் கிழவனின் அண்ணன் மகன் சடையனோடு சேர்ந்து அந்த ஆறு வீட்டு ஆணும், பொண்ணும் ராத்திரி செங்கல்லோடு வேலைக்குப் போய்விட்டு அப்போதுதான் அங்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் நின்ற அம்மாசி, விஷயத்தைச் சொல்லி அப்படியே துட்டி வீட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் சங்கடம்தான். ராத்திரிப் பூராவும் தூங்காமல் வேலை செய்த அசதி. இருந்தாலும் பெரிய ஆள் சொல்வதை அவர்களால் தட்ட முடியவில்லை.

அடுத்த கொஞ்ச நேரத்தில், ஆம்பிளைகள் அவரவர்கள் வைத்திருக்கும் கொட்டுகள் சகிதமாக வந்து விட்டார்கள். மூணு பெரிய கொட்டு, ஒரு பம்பைக் கொட்டு, ஒரு கிடுகட்டி, ஒரு ஜதை சிங்கி. பொம்பளைகள் அள்ளி முடிந்த கொண்டைகளோடு புறப்படலானார்கள். எப்போதும் அம்மாசிக் கிழவன் தான் சூழல் வாசிப்பது. அவன் தான் நடக்கக் கூட ஜீவனில்லாமல் கிடக்கிறானே! வெறும் கொட்டுகள் மட்டுமே போயின.

துட்டி வீட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கிடந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலுமாக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சீமான் முதலாளியின் மக்கள் மார்கள், வீட்டுக்கு முன்னாலுள்ள பெரிய ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து வந்தவர்களுக்குத் துட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பந்தல் போடும் வேலைகள் முடிந்திருந்தன.

கொட்டுக்காரன் - சடையனின் கூட்டம், துட்டி வீட்டுக்கு முன்னால் போய்ப் பவ்யமாக நின்று அங்கிருந்த எல்லாரையும் பார்த்து கும்பிட்டுக் கொண்டார்கள்.

சாவு ஓலைகள் தயாராக எழுதப் பட்டிருந்தன. பழைய கிராம முன்சீப் ஐயா, அவற்றைச் சடையன் ஏந்தி நின்ற துண்டில் எட்டயிருந்து போட்டு, "இன்னின்ன ஊர்க்கெல்லாம் போகணும்டா" என்றார். சடையன் அதைப் பொம்பளைகள் கையில் கொடுத்து, "இன்னின்னார் இன்னின்ன திசைக்குப் போங்க" என்றான்.

கொஞ் நேரம் யாரும் எதுவும் பேசவில்லை... பொம்பளைகள் சற்று தயங்கியபடி நின்றார்கள். அதைப் புரிந்து கொண்ட சடையன், கி.மு.ஐயாவிடம், " இந்தப் பொம்பளைகளுக்குப் பஸ் சார்ஜ்க்கும், ஒரு நேரம் பசியாறுகிறதுக்கும் ஏதாவது குடுத்து அனுப்புங்க சாமி" என்றான்.

"என்னடா சடையா? இது புதுசா இருக்கு? என்னைக்கு மில்லாத வழக்கமா?" - ஊர் மணியக்காரர் கேட்டார்.

"அதெல்லாம் இங்கு ஒன்னும் நடக்காது; நீங்க ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க!" என்றார், அதே கி.மு.ஐயா.

சிறிது நேரம் வளர்த்த நாய் முகத்தைப் பார்த்தது போல துட்டி வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொம்பளைகள் போகலானார்கள்.

சடையனோடு சேர்ந்த கொட்டுக்காரர்கள், ஒரே கலரில் அமைந்த உடைகளை எடுத்து மாட்டினார்கள். காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டார்கள். கொட்டுக்களை எடுத்து இடுப்பில் வரிந்து கொண்டார்கள். கொட்டைத் தொட்டு கும்பிட்டு விட்டுச் "சட், சட்" என்று தட்டிச் சுதி பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில், "கும்...கும்...கும்...கும்..." என்று வழக்கமாக அடிக்கும் அடியில் ஆரம்பித்துக் போகப் போக அடியை மாற்றிச் சாவு வீட்டிற்கே உரிய வர்ணத்தில், "சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங். "சட்..சட்... சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங்..." என்று முழங்கினார்கள். கூட்டம் அவர்கள் அடிக்கும் அடியைப் பார்த்தும், அவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்த்தும் ரசித்துக் கொண்டிருந்தது.

சீமான் முதலாளியின் மூத்த மகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சல்லிச் செல்லையா, திடீரென்று அந்தப் பெரிய திண்ணை யிலிருந்து குதித்து வந்து, கொட்டுக் காரர்களுக்கு அருகில் போய் நின்று, இடது கையை மேலே தூக்கிப் பிடித்து, "நிறுத்துங்கடா கொட்ட!" என்றார்.

மறுநிமிசம் கொட்டுச் சத்தம் நின்றது.

"என்னடா! சூழல் இல்லாமக் கொட்டடிச்சு ஒப்பேத்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கீளா? எங்கடா அந்த வாசிப்புக்காரன் அம்மாசிக் கிழவன்?" என்று பேயாக இரைந்தார், அந்த இடமே அதிரும்படியாக.

"பெரிசுக்கு ஒடம்புக்குச் சொகமில்ல மொதலாளி" சடையன் சொன்னான்.

"அவனுக்கு என்ன பேதியா எடுத்துருக்கு?"

"சாப்பாடு, தண்ணி செல்லாமக் கெடக்காரு மொதலாளி"

"என்னடா! இதுக்கு முன்னால என்னயச் சாமி, சாமியின்னு சொல்லுவ! இப்போ என்னல புதுசா மொதலாளிப் பட்டம் குடுக்கிற!... அஞ்சு ஏர்க்காட்டையும் அழிச்சுக் குடிச்சுட்டு, இப்ப, கையகல நெலமில்லாம இருக்கிற என்னய நக்கலா பண்ற? செருப்புப் பிஞ்சு போகும்!" என்று ஆவேசமாக எச்சரித்தார் அவர்.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சாமி"

"கெழவன் என்ன சாகவா கெடக்கிறான்? அவனால முடியலையின்னா ஒங்கள்ல ஒருவன் எடுத்துக் குழல் ஊத வேண்டியதுதானடா!" கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.

"அதுக்குக் கொஞ்சமாவது ராகம் தெரியணுமே சாமி!... மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி இருக்கும்"

"வேற ஊருலயிருந்து ஒருவன கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானடா!" - இது இன்னொருவர்.

"அவங்க, முன்னூறு, நானூறுன்னு சம்பளம் கேக்குறாங்களே!"

"குடுத்துக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?... குழல் இல்லாத கொட்டு, தலையில்லாத முண்டம் மாதிரியில்ல இருக்கு? சோறு போட்டா வெஞ்சனத்தோட போடணும்" கீழவீட்டுப் பண்ணை சொன்னார்.

"துட்டி வீட்டுச்சாமிமார்க செலவ ஏத்துக்கிட்டாகன்னா, அஞ்சு நொடியில ஆளக்கொண்டுக்கிட்டு வந்துருவேன்"

"நாங்க ஏண்டா அத ஏத்துக்கிறணும்? அது ஒங்களப் பொறுத்த விசயம் தானே?" சீமான் முதலாளியின் ரெண்டாவது மகன் கேட்டான்.

"சாமி, நாங்க அன்றாடம் கூலி வேலைக்குப் போய்த்தான் கஞ்சி குடிக்கிறோம். இந்த நிலையில் முன்னூறு, நானூறுக்கு எங்க போவோம்?"

"இப்டியே விட்டா கொட்டிக்கிறதுக்கும் கூலி கேப்பாங்க போலிருக்க" கி.மு.வின் மூணாவது மகன் அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான்.

"டேய், ஊருக்குத் தொண்டூழியம் செய்யறதுக்குத் தானடா அந்தக் காலத்துல ஒங்களுக்கு மானியக்காடுக விட்டிருக்காக!" என்றார் பழைய கிராம முன்சீப் ஐயா.

"ஒங்களுக்குத் தெரியாத விசயமில்ல சாமி. அது மூணு தலைமுறைக்கு முன்னாலயே எங்கள விட்டுப் போயிருச்சே!"

"என்னல நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; பேச்சுக்குப் பேச்சுப் பேசி அடைச்சுக்கிட்டேயிருக்க!" - கோபாவேசத்தில் வந்த சல்லிச் செல்லையா, சடையனின் கன்னத்தில் ஒரு போடு போட்டார், காதோடு சேர்த்து.

"என்ன சாமி, அண்ணனப் போட்டு இப்டி அடிக்கிறியே?" கிடுகட்டிக்காரன் கேட்டான்.

"நீ ஞாயம் கேக்குறயாடா, சிரிக்கிபுள்ள!" - அவனுக்கும் ஒரு பூசை விழுந்தது. ரெண்டு பேரும் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டு அங்கேயே நின்றார்கள்.

"சரி, அது போகட்டும். அம்மாசிக் கிழவன் இன்னைக்கு வரல. வழக்கமாக அவன்தான் பிரேதங்கள் சுட்டுச் சாம்பலாக்கிக் குடுப்பான். இன்னைக்கு அவன் வேலய யார் பார்க்கப் போறா? அந்தச் சோலி ஒங்களுக்குத் தெரியுமா?" கி.மு. ஐயாதான் இதையும் கேட்டார்.

"என்னமோ தெரிஞ்ச மட்டும் பாக்குறோம்... ஒங்க திருப்திக்கு வேணும்ன்னா நீங்களும் கூட மாடாயிருந்து கோளாறு சொல்லுங்க" என்றான் சடையன்.

"என்னடா சொன்ன? அந்த ஈனத் தொழில நாங்களும் சேந்து செய்யணுங்கிறயாடா! நீங்க எதுக்குடா இருக்கியே!" சொல்லிக் கொண்டே வந்த ஒரு மீசைக்காரர், வந்த வெறியில் சடையனைக் கொட்டோடு சேர்த்துக் கீழே தள்ளி, "நளுக்கு, நளுக்" கென்று நாலு மிதித்தார்.

"சிரிக்கி புள்ளயக் கொல்லாம விடக்கூடாது" - சல்லிச் செல்லையாவுக்கு வந்த கோபம் இன்ன மட்டுமென்றில்லை. இடையில் நின்ற ஒருவர் அவரைத் தடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

"என்ன சாமிமார்களா? இந்த ஏழக்குடிகள இந்தப் பாடுபடுத்துறீயே" - கேட்ட சிங்கிக்காரனுக்கு விழுந்த பூசையும் காணும்.

கீழே விழுந்து கிடந்த சடையன், மெதுவாக எழுந்து, இடுப்பைப் பிடித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து, "வாங்கடா, போகலாம்" என்றான்.

காலில் கட்டிய சதங்கைகளை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாருமாக வீட்டைப் பார்த்து நடக்கலானார்கள்.

துட்டி வீட்டில் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் எத்தனையோ இருந்தன.

"எங்கடா போறியே?" சல்லிச் செல்லையா கேட்டார்.

அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தார்கள்.

"ஒங்களையெல்லாம் வீட்டோட வச்சுக் கொளுத்தணும்டா!... போங்க! முக்குரோடு சிங்கம் மச்சான் கடைக்குப் போயிட்டு நேரே அங்கவாறேன்" என்றாரவர்.

வீட்டுக்குப் போன அவர்கள், அம்மாசிக் கிழவனுக்கு முன்னால் போய் நின்றார்கள்.

அவன் திடுக்கிட்டுப் போனான்.

கடையன் துட்டி வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னான்.

கிழவனுக்கு இவர்கள் மேல்தான் கோபம்.

"என்னடா வேல பண்ணிட்டு வந்திருக்கியே! சாமிமார்கள எதிர்த்துப் பேசலாமா? அவுக அடிக்க, அடிக்க நாம கையேந்துகிறவங்கதான்... முட்டாத்தனமா நடந்திருக்கேளேடா." பேசுவதற்கு ஜீவன் இல்லாவிட்டாலும் ஒரு வெறியில் ஓங்கிச் சத்தம் போட்டான் கிழவன்.

கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்த சடையன், அப்புறம் கேட்டான்; " இப்போ நாங்க என்ன செய்யணும் சின்னையா?"

"எல்லோரும் அங்க போகணும்; நாம செய்யக் கூடிய சாவுச் சடங்குள எல்லாம சாமிமார்க மனங்குளிரச் செய்யணும்"

சடையனோடு சேர்ந்து அங்கு நின்ற எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

திடீரென்று கிழவனுக்கு எங்கிருந்துதான் அந்தத் தெம்பு வந்ததோ, "விருட்"டென்று வீட்டுக்குள் போய் ஒரு போணி தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு அவன் ஊதுகின்ற குழலோடு வெளியே வந்தான்.

அப்போது சடையன் கிழவனைப் பார்த்து சொன்னான்: "சின்னையா, இது ஒங்க காலத்தோடு சரி.. நாங்க இந்த ஊர்ல இருந்தாலும் சரி; அடியோடு போக்கழிஞ்சு போனாலும் சரி..."

".................."

அந்த ஆறு வீட்டுக்காரன்களின் குழந்தை குட்டிகள் எல்லாம், வெள்ளங்காட்டி (காலை)க் கஞ்சி கூடக் குடிக்காமல் பரட்டைத் தலையோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தன.

நாலா ஊர் ஜனங்களும் வந்து, செய்ய வேண்டிய சாஸ்திரங்கள் யாவும் செய்து முடித்தபின், கொட்டு முழக்கோடும், குழல் சத்தத்தோடும் சீமான் முதலாளி தேர் ஏறிப் போக, ராத்திரி ஊர் ஒடுங்கும் நேரத்திற்கு மேலாகிவிட்டது.

இனி, சுடுகாட்டில் வைத்து நடத்தக் கூடிய காரியங்கள் மட்டுமே பாக்கி.

- முதலாளியைக் கொண்டு கட்டையில் வைத்தார்கள்.

மக்க(ள்)மார்கள் மொட்டையடித்துக் கொண்டார்கள். வாய்க்கரிசி போடப்பட்டன.

பிரேதத்தின் மேல் எருவையும், தென்னங்கூந்தல்களையும் அழகாக அடுக்கினான் அம்மாசிக் கிழவன்.

மூத்தமகன் கொள்ளி வைத்து முடித்ததும், கூட்டம் கலையலாயிற்று. அடுத்து நடக்க இருப்பது அம்மாசிக்கிழவன் வேலைதான்.

யாரையுமே உதவிக்கு அங்கு நிற்கும்படி கிழவன் கேட்டுக் கொள்ளவில்லை, வழக்கம் போல.

காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த சடையன், சின்னையாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு, ஊருக்குத் தெற்கே வெகுதூரத்திலிருக்கும் மயானத்திற்குப் போனான்.

சுடலையில் சீமான் முதலாளி "தகதக" வென்று எரிந்து கொண்டிருந்தார்.

அம்மாசிக் கிழவனைக் காணவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தான் சடையன், பரபரப்புடன்.

... முதலாளியின் கால்மாட்டிற்கு நாலுபாகம் வடக்கே தள்ளி ஒரு பள்ளத்தில் கிழவன் விழுந்து கிடப்பது, அந்தச் சுடலை வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link