சிறுகதைகள்


மாற்றம்

கூடல்.காம்

தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை.

பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள்.

ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான்.

இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது.

எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக...

பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது.

இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள்.

வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள்.

ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு.

வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும்.

ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள்.

ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை.

"பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை.

ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள்.

இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள்.

வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள்.

இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க...

"அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள்.

"நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள்.

இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?"

"யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா.

இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள்.

இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள்.

இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர்.

அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?"

இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது.

ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது.

ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது!

நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா?

நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன...

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link